மின் நூல்

Friday, September 16, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி—23

மதுராபதித் தெய்வம்  கண்ணகியின் மீது கொண்ட அன்பினாலும்,  தான் சொல்வது  அவளுக்கு   நன்றாகப் புரிய வேண்டும் என்கிற எண்ணத்திலும் கண்ணகிக்கு மிக நெருக்கத்தில் வந்து கோவலனுக்கு  முந்தைய பிறவியில் நேரிட்ட ஊழ்வினை என்னவென்று விளக்கிச் சொல்ல முனைந்தது:

“நிரைதொடியோயே!  பொழில்கள் சூழ்ந்த கலிங்க நாட்டில்  புனல்கள்  நிறைந்த சிங்கபுரத்தில்  வசு என்போனும்,  மூங்கில் காடுகள்  மண்டிய  கபிலபுரத்தில் குமரன் என்போனும் அரசாண்டு வந்தனர்.  வசுவும், குமரனும்  தாயத்தாராகிற தம்முள் உறவு கொண்டவர்கள்;  தம்முள் பகையும் பூண்டவர்கள்.  அதனாலேயே  அடிக்கடி பொருதிக் கொண்டிருந்தனர்.

“சங்கமன் என்பவன் கபிலபுரத்து வணிகன்.  இவன் ஒற்றன் போல வேடம் பூண்டு தன் காதலியுடன் சிங்கபுரத்து வணிக வீதியிலே பெரும் மதிப்புள்ள அணிகலன்களை விற்று பொருள் ஈட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.   

“கண்ணகி! முற்பிறவியில்  நின் கணவன் பரதன் என்று பெயர் கொண்டிருந்தான்.   சிங்கபுரத்து   மன்னன் வசுவின்  அரண்மனை சார்ந்து அரசவினை செய்து கொண்டிருந்தான். சங்கமன்  கொல்லா விரதத்திலிருந்து விலகியதால்  வெகுண்டு வேற்று நாட்டு ஒன்றன் இவன் என்று சங்கமன் மேல் பழி சுமத்தி அவனைப் பற்றி இழுத்து வெற்றிவேல் மன்னன் முன்  நிறுத்தி கொலைத்தண்டனை கொள்ளச் செய்தான்.... 

"கொலைக்களப்பட்ட  சங்கமன் மனைவி நீலி அரற்றினாள்;  அழுது புரண்டாள்; பதறித் துடித்தாள்.    ‘அரசர் முறையோ, பரதர்  முறையோ, ஊரிர் முறையோ, உங்கள் மன்னன் செய்தது நீதி முறையோ’ என்று மன்றங்களிலும் தெருக்களிலும் முறையிட்டு நீதி கேட்டுத் திரிந்தாள்...

"இப்படியே பதினான்கு நாட்கள் சென்றபின்,   கணவனைத் தொழுதற்கான நாள் இது என்று தீர்மானித்து,  அவனை வாழ்த்தி, வணங்கி, வானத்தில் ஏறுதலுக்கு ஏற்ற ஏணி போலக் கருதி மிக உயர்ந்த மலையொன்றின் தலை ஏறி நின்று கொலை செய்யப்பட்ட தனது கணவனுடன் சேருவதற்கு ஆயத்தமானாள்.  அந்நிலையில், ‘எமக்கு இந்தத் துயரம் செய்தோர் யாராயினும் எவ்வகையேனும் தாமும் இத்துன்பத்தை அடைவாராக!’ என்று சாபமிட்டு மலை உச்சியிலிருந்து விழுந்து உயிர் துறந்தாள்.  விழுவோள் இட்ட வழுவில் சாபம் உம்மை இப்பிறவியில் தீண்டியது..” என்று மதுராபதித் தெய்வம் கண்ணகிக்குச் சொன்னது. 

“ஆதலின் நான் சொல்வதைக் கேள்..” என்று கண்ணகிக்கு
இன்னும் நெருங்கி வந்து நின்றது  மதுராபதித் தெய்வம். “பிறவிதோறும் தொடர்ந்து வரும் ஆற்றல் கொண்டது தீவினை.  அது செயல்படும் காலம் வரும் பொழுது  அவர் செய்த தவமும் உதவாது விலகிச் செல்லும்.  வாரொலிக் கூந்தலாய்!  நீயும் அந்த சங்கமன் துணைவி போல பதினாங்கு நாட்களுக்குப் பின் உன் கணவனை  வானோர் வடிவில் காண்பாய் அல்லாது மனிதர் வடிவில் காணாய்!” என்று மதுராபதித் தெய்வம் ஊழ்வினையின் ஆற்றலை கண்ணகிக்குச் சொல்லி,  மதுரை மாநகரைப் பற்றிய தீயின் கொடுமையிலிருந்து காத்து மறைந்தது.

என்னுயிர்க் கணவனைக் காணாமல் ஓரிடத்தில் அமரவோ, நிற்கவோ முடியாத நிலையில் வாடுகிறேன்!” என்று  அலமந்து கண்ணகி இங்கேயும் அங்கேயுமாய் அலைந்தாள்.  அடுத்து கொற்றவையின் கோயில் முன்பு சென்று தன் கை வளையல்களை உடைத்தெறிந்தாள்.  அத்தெய்வத்தை உற்றுப் பார்த்தாள். “இந்த நகருக்கு வந்த பொழுது என் கணவனுடன் கீழ்த்திசை வாயிலாக வந்தேன்;  இப்போதோ இந்நகரை விட்டு நீங்கும் பொழுது என் கணவனைப் பறிகொடுத்து மேற்கு திசை வழியாக வெளியேறுகிறேன்..” என்று நெஞ்சத்துத் துயரையெல்லாம் கொட்டி விட்டு மதுரை நகர்  விட்டு நீங்கினாள்.  

இரவெது, பகலெது என்று அறிந்து கொள்ள சக்தியற்ற நிலையில் நீரொலி எழுப்பிப் பாயும் வையை நதிக் கரையோரம் வையை காட்டும் வழியில் போனாள்.  போகும் பாதையில் பள்ளம்  எதுவென்று தெரியாமலும் மேடும் எதுவென்று புரியாத நிலையிலும் கால்போன திசையில் போய்க் கொண்டே இருந்தாள்.

கடல் வயிறு கிழித்து  கிரெளஞ்ச மலை நெஞ்சம் பிளந்து அசுரரை வென்று அழித்த சுடர் நெடுவேல் ஏந்திய நெடுவேள் எழுந்து அருளியிருக்கும் குன்றை போகும் வழியில் அடைந்தாள். (உரையாசிரியர்  அடியார்க்கு நல்லார் இந்தக் குன்றத்தை திருச்செங்குன்று என்பார்.  இதுவே மருவி திருச்செங்கோடு என்று இப்பொழுது நாம் அழைத்துக் கொண்டிருக்கிறோம்)          

மலைப்பாதையில்   குறுக்கிட்ட  ஒரு வேங்கை மரத்தடியில் கண்ணகி கலங்கி நின்றாள்.  அந்த வழியில் வந்த குரவப் பெருமக்கள், “யாரம்மா நீவீர்?”  என்று தொய்ந்து போய்த் துவண்டுத் தனியளாய் நின்ற நங்கையை பரிதாமம் மேலிட்டுக் கேட்டனர்.

“தீவினையுடையேன் யான்..” என்று கைத்துப்போன   ஒற்றை வரியில்  பதில் வருகிறது கண்ணகியிடமிருந்து.

மனிதர்களைக் கண்ணகி பார்த்ததும், கண்ணகியை மனிதர்கள் பார்த்ததும் அதுவே கடைசித் தடவையாயிற்று.

ஈரேழு நாட்கள் கடந்து சென்றது கண்ணகி உணர்வில் எப்படிப் பதிந்ததோ தெரியவில்லை,  மதுராபதித் தெய்வம் சொன்னது கண்ணகியின் மன ஆழத்தில்  நன்கு  பதிந்து போயிருந்தது.  அந்த நாள், அவள் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  கணவனைத் தொழுது கண்ணீர் விட்டாள்.   அவனை நெஞ்சார வாழ்த்தினாள்.

அந்த அதிசயம் அப்பொழுது தான் நடந்தது.  அமரர்க்கரசன் இந்திரனைச் சூழ்ந்து நின்ற தேவர்களில் ஒரு தேவனாய் கோவலன் கண்ணகியின் கண்களுக்குக் காணக்கிடைத்தான்.   வானுலகிலிருந்து இறங்கி வந்தவர்கள் வாடா  கற்பக மலரை   அவள் மேல் மழை போலப் பொழிந்தனர்.  கோவலனைப்  பார்த்த கணத்தில் தனது பிறவி பூர்த்தியடைந்த சந்தோஷம் கண்ணகிக்கு.  அந்நிலையில் கோநகரில் கொல்லப்பட்ட  கோவலன் தன்னொடு கண்ணகி வான்வழி ஏகினள்.                                      
                         
                       
                         [ மதுரைக் காண்டம் முற்றிற்று]


(தொடரும்)

படங்கள் உதவிய  நண்பர்களுக்கு  நன்றி.
  


25 comments:

sury siva said...

காட்சிகள் கண்முன்னே நடப்பன போன்றதொரு
வர்ணனை.

மதுரைக்கு காண்டத்துக்குப்பின் ??

சுப்பு தாத்தா.

ஜீவி said...

@ Sury Siva

வாசித்துக் கருத்துச் சொன்னமைக்கு நன்றி, சுதாஜி.

மதுரைக் காண்டத்திற்கு அடுத்து வஞ்சிக் காண்டம். கண்ணகியை தெய்வ மகளாய் வழிபடப்போகும் காண்டம்.

Yaathoramani.blogspot.com said...

மதுரைக்காரன் என்பதாலோ என்னவோ
கூடுதல் நெகிழ்ச்சியுடன்
மனம் கண்ணகி போனத் திசை நோக்கி
மெல்ல பயணித்துத் திரும்பியது
அற்புதமான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

மதுராபதித் தெய்வம் கண்ணகிக்கு ஊழ்வினையைப்பற்றி எடுத்துரைத்ததும் அதுபோலவே 14 நாட்களில் கண்ணகி கோவலனை அடைந்ததும் கேட்க மிகவும் த்ரில்லிங்காக உள்ளது.

தொடரட்டும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பல நூறாண்டுகளுக்கு முன்பாக நீங்கள் எங்களை அழைத்துச்செல்வதற்கு நன்றி கூறுகிறோம். உங்களுடனேயே வருகிறோம். நன்றி
..."கொளைக்களப்பட்ட சங்கமன் மனைவி நீலி அரற்றினாள்; அழுது புரண்டாள்; பதறித் துடித்தாள்....." இச்றொடரில் வரும் சொல் கொலைக்களப்பட்ட என்றுதானே இருக்கவேண்டும்?

ஜீவி said...

@ S. Ramani

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, ரமணி சார்.

வாசிக்கும் பொழுது உங்களுக்கேற்பட்ட நெகிழ்ச்சி எழுதும் போது எனக்கும் இருந்தது.
அதுவும், 'தீவினையுடையேன் யான்' என்று கண்ணகி சொல்லும் பொழுது கலங்கிப் போனேன். அந்தப் பெண் என்ன பாவம் செய்தாள் இப்படித் துயருவதற்கு என்று துயரம் மேலோங்கியது. 'கணவனைச் சார்ந்து எப்படிப் பெண்கள் இருந்தார்களோ அவ்வாறே கணவனின் தீமைகள் பெண்களையும் சார்ந்து விடுகிறது' என்று சுலபமாகச் சொல்லி விடுகிறார்கள். இருந்தாலும் மனம் ஆறவில்லை.

ஜீவி said...

@ வை.கோ.

சிலிர்ப்பைத் 'த்ரில்லிங்காக'க் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.

அந்தக் கால இலக்கியங்களில் அந்தக்கால கோட்ப்படுகளுக்கேற்ப இப்படியான நிகழ்வுகள் நிறைய வருகின்றன. சில காலங்களில் சாத்தியப்படுபவை என்று சொல்வது இன்னொரு காலத்தில் சாத்தியப்படாமையாகவும் போகிறது. சாத்தியப்படாத நேரத்து அவையெல்லாம் புராண கட்டுக்க்தைகளாக தொன்மைச் சரடுகளாகத் தோன்றுகின்றன. ஒரு நிகழ்வு என்பது இல்லாமலா இப்படியெல்லாம் கற்பனை செய்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, கோபு சார்!

ஜீவி said...

@ Dr.B. Jambulingam

எழுத்துப் பயணத்தில் ஒருவருக்கொருவர் துணை. துணையாகக் கூட வருவதற்கு நன்றி, ஐயா!

'ல' டைப் செய்யும் பொழுது shift போட்டுவிட்டதால் நேரிட்ட பிழை. இப்பொழுது திருத்தி விட்டேன். இவ்வளவுக்கும் திரையைப் பெரிது பண்ணித்தான் பிழைகளைத் திருத்துகிறேன். இருந்தும் பார்வைக்குத் தப்பி விட்டது. சுட்டிக்காட்டியமைக்கும் தங்கள் துல்லிய வாசிப்புக்கும் நன்றி, ஐயா!

G.M Balasubramaniam said...

ஐம்பெருங்காப்[பியத்தில் ஒன்றான சிலப்பதிகாரத்தைச் சுவை குன்றாமல் எழுதி வருவது பாராட்டுக்குரியது எங்கள் வீட்டில் இருந்த ஒரு மலையாள மூதாட்டி நாடோடிப்பாடலாக சிலப்பதிகாரத்தைப் பாடி வந்தது சிறு வயதில் கேட்டது நினைவுக்கு வருகிறது கேரளத்தில் கண்ணகியைப் போற்றி வழிபடுகிறார்கள் கண்ணகிதான் பகவதிகளின் முன்னோடி எனலாமோ

KABEER ANBAN said...

அருமையான காவியத்தை சுவைபடக் கூறியதற்கு நன்றி.
ஓரிரண்டு விஷயங்களை தெளிவாக்கிக் கொள்ள விரும்புகிறேன்.
1) ஒன்றன் என்பதும் ஒற்றன் என்பதும் ஒரே பொருளை குறிக்கிறதா? அப்படியானால்
//சங்கமன் என்பவன் கபிலபுரத்து வணிகன். இவன் ஒன்றன் போல வேடம் பூண்டு..//
மாறு வேடம் தரித்து திரிபவர்கள் தானே ஒற்றர்கள். சங்கமன் நிஜத்தில் ஒற்றனா அல்லது வணிகனா?
2) “கொல்லா விரதத்திலிருந்து வழுவி...” ராஜ்ஜியத்தில் புலால் உண்ணல் தடையிருந்து அதை மீறிவிட்ட செயலா ?

3) கண்ணகியின் மனத்துன்பம் ‘பரதனுக்கு’ ஏற்பட்டிருக்க வேண்டும். அப்படியானால் பரதன் தன்னுடைய அடுத்த பிறவியில் பெண்ணாக-கண்ணகியாக- பிறந்து அனுபவிக்க வேண்டி இருந்ததா?

இவைகளுக்கு விடை சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருந்தால் கண்டிப்பாக தாங்களும் அதை கொடுத்திருப்பீர்கள். அப்படி இல்லாத பட்சத்தில் தங்களுக்கும் வாசகர்களுக்கும் என்ன தோன்றுகிறது ?

ஜீவி said...

@ KABEER ANBAN

காவியம் தொடர்கிறது. இன்னும் நிறைவுறவில்லை.

1) ஒற்றன் என்பது தான் சரி. அது எழுத்துப் பிழை. திருத்திவிட்டேன்.
கபிலபுரத்து வணிகன் சங்கமன் ஒற்றன் போல மாறுவேடம் பூண்டு விலைமதிப்பில்லாத அணிகலன்களை தன் காதலியுடன் சேர்ந்து சிங்கபுரத்து கடைவீதிகளில் விற்றிருக்கிறான். மாறுவேடம் பூண்டதற்கு காரணம் தெரியவில்லை. ஏதோ illegal சமாச்சாரம் போலிருக்கு.

2) "விரதம் நீங்கிய வெறுப்பின னாதலில்
ஒற்றன் இவன்எனப் பற்றினன் கொண்டு.."

-- என்பது சிலப்பதிகார வரி. பல்வேறு உரையாசிரியர்கள் கொல்லா விரதம் என்று குறிப்பிடுகின்றனர்.

3) பிறவித் தொடர்புகளை நம் கற்பனைக்கேற்ப ரொம்பவும் விரித்துப் பார்த்தால் விடை கிடைக்காது போகலாம். கோவலனின் முந்தைய பிறப்புப் பெயர் பரதன். கண்ணகியின் முந்தைய பிறப்பு என்னவோ?.. சிலப்பதிகாரம் தொடர்பான பிறப்பில் இருவரும் கணவன் மனைவி. அவ்வளவு தான். ஆனால் கண்ணகியின் கணவன் கோவலன் தன் மனைவியைப் பிரிந்து மாதவியுடன் தொடர்பு கொண்டதற்கும், மாதவியின் கோவலன் தொடர்பிற்க்கும் அவரவர் தனிப்பட்ட முற்பிறவி காரணங்கள் ஏதாவது இருக்கலாம் என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

'மணிமேகலை' காவியத்தை இனித்தான் ஆழ்ந்து படிக்க வேண்டும். அதில் ஏதாவது காரணம் தெரியலாம். தெரிந்தவர்கள் சொல்லவும் கூடும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள், கபீரன்ப! தங்கள் அன்பான வருகைக்கும் கருத்திட்டதிற்கும் நன்றி.

ஜீவி said...

@ G.M.B.

வஞ்சிக் காண்டத்தில் தான் கண்ணகி தெய்வமாக போற்றப்படுகிறாள். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுக்க கங்கைக் கரையிலிருந்து கல் எடுத்து கனக விசயரை தலையில் தாங்கிச் சுமந்து வரச் செய்கிறான். அவள் நாட்டார் தெய்வங்கள் போல நாட்டுப்பாடல்களில் கேரளத்தில் பாட்டுத்தலைவியாக பாவிக்கப்படுவர்தில் உண்மையின் சாரம் இருக்கிறது.

பகவதி அம்மன் சரித்திரம் தெரிந்தவர்கள் தாம் அது பற்றிச் சொல்ல முடியும். சிலப்பதிகார காப்பியக்காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று வரலாற்று அறிஞர்கள் வரையறுத்திருக்கிறார்கள்.

தாங்கள் வாசித்து கருத்திட்டதற்கு நன்றி, ஐயா!

KABEER ANBAN said...

மனத்துன்பம் கொடுத்தவர்கள்தான் அதே மனத்துன்பத்திற்கு ஆளாவார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. பத்ராசல ராமதாஸர் பன்னிரண்டு தினங்கள் ஒரு கிளியை கூண்டில் அடைத்து அதற்கு உண்டாக்கிய துன்பம் அடுத்த பிறவியில் பன்னிரண்டு ஆண்டு சிறைவாசமாக அவருக்கு ஏற்பட்டது. அதன் பின்னரே ராமன் வந்து அவரை விடுவிக்கிறான் என்று படித்திருக்கிறேன். அந்த அடிப்படையில் நீலிக்கு ஏற்பட்ட மனத்துன்பம் பரதனால் ஏற்பட்டதால் மேற்கண்ட சந்தேகம் எழுகிறது. ’கோவலன் முற்பிறப்பில் என்னவோ’ என்றிருந்திருந்தால் மாதவி-கோவலன் தொடர்பு வேறு காரணங்களால் தொடர்ந்திருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். தாங்கள் கூறியிருப்பது போல் இவை நம் கற்பனைக்கு எட்டாது.
//கபிலபுரத்து வணிகன் சங்கமன் ஒற்றன் போல மாறுவேடம் பூண்டு //
கபிலபுரத்து ஒற்றன் சங்கமன் வணிகன் போல மாறுவேடம் பூண்டு என்று வந்தால் பொருள் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜீவி said...

@ KABEER ANBAN

மனத்துன்பம் கொடுத்தவர்கள் அதே மனத்துன்பத்திற்கு ஆளாகி----

நீங்கள் சொன்ன பதராசல இராமதாசர் வரலாறு, எவ்வளவு பொருந்தக்கூடிய நேரடி உதாரணம் என்று அதிசயத்துப் போனேன். படிவர்களுக்கு இனி அப்படி ஏதும் செய்யக் கூடாது என்று மனசில் 'பசக்'கென்று பதிந்து போகும் கதை.. கிளிக்கூண்டையும் சிறையையும் ஒப்புமை ஆக்கிய விஷயம், பிரமாதம்!

ஜீவி said...

@ KABEER ANBAN

//’கோவலன் முற்பிறப்பில் என்னவோ’ //

ஒருவருக்கு பெயர் சூட்டுவது எவ்வளவு முக்கியமாகிப் போகிறது என்பது ரொம்பவும் ஆச்சரியமான விஷயம். குறிப்பிட்ட ஒருவர் உயிருடன் இல்லாத பொழுதும் அவருக்குச் சூட்டிய பெயர் மட்டும் அவருக்காக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இது மஹாளய புண்ணிய காலம் ஆதலின் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணம் நினைவுக்கு வந்தது. தந்தையும் தாயும் உயிரோடு இல்லை எனில், தந்தை வர்க்கம் என்று தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் பெயர்கள். தாய் வர்க்கம் என்று தாய், பாட்டி, பாட்டியின் தாய். அவரவர் அந்தந்த காலத்து வாழ்க்கையில் கொண்டிருந்த பெயர்களைச் சொல்லி எள் நீர் இறைத்துத் தர்ப்பணம்.

அவரவர் பூண்டிருந்த பெயர்கள் மட்டும் தான் தர்ப்பணத்தில் கூட அவர்களுக்கு பிரநிதியாய் இருந்து கொண்டு அவர்களை நினைவில் கொள்வதற்கு வழிவகை செய்கிறது.
ஆக, அந்தந்தப் பிறவியில் கொண்டுள்ள பெயர் தான் சாஸ்வதம்.

பிறவித் தொடர்புகளை நம்புவோருக்குக் கூட (அந்தப் பெயர் கொண்ட தன் தாத்தாவோ தந்தையோ வேறு பெயர்களில் இப்பொழுது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்று தெரிந்தாலும் கூட) தன்னுடன் இரத்த சம்பந்தம் கொண்டிருந்த தாத்தா, கொள்ளுத்தாத்தாவின் வாழ்ந்த காலத்துப் பெயர் தான் அந்த சம்பந்தத்திற்கு அர்த்தம் சொல்லிக் கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது! என்ன விசித்திரம் பாருங்கள்!

ஜீவி said...

@ KABEER ANBAN

//கபிலபுரத்து ஒற்றன் சங்கமன் வணிகன் போல மாறுவேடம் பூண்டு என்று வந்தால் பொருள் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.//

இல்லை, ஒற்றர்கள் மாறுவேடம் பூணுவார்கள் என்பதால், அவன் மாறுவேடம் பூணும் அவன் நடவடிக்கையை சொல்வதற்காக 'ஒற்றன் போல' என்று அந்த வார்த்தை வந்திருக்கிறது.

1) அரும்பொருள் வேட்கையில் பெருங்கலன் சுமந்து
கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு
சிங்கா வண்புகழ் சிங்க புறத்தினோர்
அங்காடிப்பட்ட அருங்கலன் பகரும்
சங்கமன் என்னும் வாணிகன் தன்னை....

2) விரதம் நீங்கிய வெருப்பின னாதலின்
ஒற்றன் இவன் என பற்றினன் கொண்டு

-- முதல் பகுதியில் உள்ள 'கரந்துறை' (தன்னை மறைத்துக்கொண்டு) என்ற வார்த்தையைக் கொண்டு 'ஒற்றன் இவன் என' கோவலன் கொண்டான் என்று பொருள் கொள்ள வேண்டும்

கோமதி அரசு said...

நேரில் பார்ப்பது போல் இருந்தது சொல்லி சென்ற காட்சிகள்.
என்ன தான் கடவுளை தொழுதாலும் அனுபவிக்க வேண்டியவைகளை அனுபவித்துதான் ஆக வேண்டும் போல் உள்ளது.
(இது என் அனுபவம்) கஷ்டத்தை தாங்கும், மனபலத்தை கொடுத்தால் போதும் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

மகரிஷி சொல்வது போல் செயல்விளைவு தத்துவம் முன் பிறப்பில் செய்த குற்றத்திற்கு இப் பிறவியில் அனுபவித்து இருக்கிறார் கோவலன்.

ஜீவி said...

@ கோமதி அரசு

நீங்கள் சொல்வது மிகவும் சரி.

பதிவைப் படித்தவுடன் உங்களுக்கு ஏற்பட்ட உணர்வைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, கோமதிம்மா.

'உங்களுக்காவது தெரியுமா?' பதிவு புதன் கிழமை. வாசித்து விடுங்கள்.

Geetha Sambasivam said...

மதுரைக்காண்டத்தின் சில வினாக்களுக்கான விடைகள் வஞ்சிக்காண்டத்தில் கிடைக்குமா பார்ப்போம்!

வே.நடனசபாபதி said...

// இந்நகரை விட்டு நீங்கும் பொழுது என் கணவனைப் பறிகொடுத்து மேற்கு திசை வழியாக வெளியேறுகிறேன்//

கண்ணகி மதுரையிலிருந்து எந்த வழியாக சென்றாள் என்பது குழப்பமாக இருக்கிறதே. திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் உள்ள தகவல்படி, மதுரை பாண்டிய மன்னனிடம் நிரூபணம் செய்து விட்டு மதுரையை “தீ”க் கிரையாக்கினாள் கண்ணகி. பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்தின் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு செல்லும் வழியில் ஆற்றக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள் என்றும், அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. .

எது சரி என்பதை சொல்லுங்களேன்.

ஜீவி said...

@ Geetha Sambasivam

//மதுரைக்காண்டத்தின் சில வினாக்களுக்கான விடைகள் வஞ்சிக்காண்டத்தில் கிடைக்குமா பார்ப்போ //

சென்ற பதிவிலேயே நான்கு பின்னூட்டங்கள் போட்டு ஒரு கை ஓசையாகவே இருப்பானேன் என்று நீக்கி விட்டேன்.

இருந்தும் வஞ்சிக் காண்டத்திர்கு முன்னால் ஒரு பதிவு போட்டு மதுரைக் காண்டத்தை முடித்து வைக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்குண்டு.

அதற்கு முன், அந்த சில வினாக்கள் என்ன என்று வரிசையிட்டு பின்னூட்டமிட்டு விட்டீர்கள் என்றால், எனக்கும் வரப்போகும் அந்தப் பதிவில் பதிலளிக்க செளகரியமாக இருக்கும்.

உங்களிடமிருந்து பதில் கிடைக்க வேண்டிய வினாக்களை எதிர்பார்க்கிறேன். சீக்கிரமாக அனுப்பி விட்டீர்கள் என்றால் செளகரியமாக இருக்கும். தொடர்வதற்கு நன்றி.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

கட்டுரைக் காதையில் கண்ணகி சொல்வதாக வரும் வரிகள்:

"கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென
இரவும் பகலும் மயங்கினள் கையற்று
உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு
அவல என்னாள் அவலித்து இழிதலின்
மிசைய என்னாள் மிசைவைத் தேறலின்
கடல் வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு
அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல்
நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறிப்
பூத்த வேங்கை பொங்கர்க் கீழோர்...."

அவ்வளவு தான். மதுரையின் மேற்றிசை வழியாக வெளியேறுகிறாள். வையை கரை வழியே பயணிக்கிறாள். மேடு பள்ளம் எல்லாம் ஏறி இறங்கி நெடுவேள் குன்றம் வரை கடுமையான நடைபயணம்.

நெடுவேள் குன்றம் எதுவென்றால் திருசெங்குன்று என்று உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் சொல்லி விட்டார்.

ஆக கண்ணகி இன்றைய திருச்செங்கோடு வரை தான் வந்திருக்கிறாள். திருச்செங்கோட்டு மலையிலேயே வேங்கைமரத்திடியில் நின்றவள் கணவனுடன் வான்வழிச் சென்று விட்டாள்.

இன்றைய திருச்செங்ககோடு அன்றைய சேலம் மாவட்டத்தில் இருந்தது. சேலம் சேரநாட்டைச் சேர்ந்த பகுதியாய் இருந்திருக்கிறது.

சிலப்பதிகார வரிகளை ஆதாரமாய்க் கொண்டால் நமக்குத் தெரியவருவது இவ்வளவு தான்.

ஆழமான கருத்து கொண்ட உரையாடலுக்கு நன்றி, சார்.

நெல்லைத் தமிழன் said...

ஜிவி சார்... கண்ணகி தேனிமாவட்டம் வழியாகச் சென்றார் என்று படங்களோடு படித்துள்ளேன்.. அதாவது இப்போது உள்ள பத்தினிக்கோட்டத்தில்தான் (கண்ணகி கோவில் இருக்கும் இடம்) அவர் வான்வழிச் சென்றாள். அதனால்தான் அங்கு அவளுக்குக் கோவில் எழுப்பப்பட்டது என்று. அவள் சென்ற பாதையைப் பற்றியும் அந்தப் புத்தகத்தில் படித்த ஞாபகம். நினைவு வரும்போது பகிர்கிறேன்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

சமீபத்தில் ஒரு பதிப்பகத்தார் கூட நீங்கள் சொல்கிற மாதிரி படித்திருப்பதாகச் சொன்னார்.
'தினமணி' பத்திரிகையிலோ இல்லை வேறு எந்த இதழிலோ இப்படி ஒரு தொடர் வந்ததாக நினைவு என்று சொன்னார். கொஞ்சம் நினைவுகளைத் திரட்டிப் பாருங்கள்.

யார் என்ன எழுதியிருந்தாலும் மேற்கண்ட சிலம்பு பாடலுக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய் உரையைப் புறக்கணிது விட்டுத் தான் எழுத வேண்டும். அல்லது திருச்செங்குன்று என்று அவர் குறிப்பிடுவது திருச்செங்கோடு அல்லாது வேறு இடமாக இருக்க வேண்டும்.

நீங்கள் குறிப்பிடும் பகுதியில் திருச்செங்குன்று மாதிரியான உச்சரிப்பில் ஏதாவது குன்று இருப்பினும் அது நமது தேடுதலுக்கு உதவியாக இருக்கும். நானும் பார்க்கிறேன்.

தொடர் வருகைக்கு நன்றி, நெல்லைத் தமிழரே!

தி.தமிழ் இளங்கோ said...

விட்டுப் போன இந்த தொடரின் இந்த பகுதியை இன்றுதான் படிக்க முடிந்தது. தொடர்கின்றேன்.

Related Posts with Thumbnails