மின் நூல்

Tuesday, December 19, 2017

இது ஒரு தொடர்கதை

                                                அத்தியாயம்--3

"காளியண்ணன் இல்லியா?" என்று கடைக்காரரைப்  பார்த்துக் கேட்டான் பாண்டியன்.

அவர் பதிலே பேசவில்லை.. வியாபாரத்தில் மும்முரமாக இருந்தார்.  கடைக்கு முன் நிற்பவர் கேட்டதை எடுத்துக் கொடுத்து விலை சொல்ல,  அவர் கொடுக்கும் காசை வாங்கிக் கல்லாப் பெட்டியில் போடுவதற்கே அவருக்கு நேரம் சரியாக இருந்தது.

இவனைப் போல நின்றிருந்த நாலைந்து பேர் இரண்டாகக் குறைய, "காளியண்ணன்,  இல்லியா?" என்று அவரை மீண்டும் கேட்டான் பாண்டியன்.

இப்பொழுதும் அவர் எதுவும் சொல்லவில்லை.  அந்த இரண்டு பேர் கேட்டதையும் எடுத்துக் கொடுத்து காசு வாங்கிப் போட்டுக் கொண்டு  இவன் பக்கம் திரும்பினார்.  "உனக்கென்னப்பா, வேணும்?"

"காளியண்ணன் இல்லியா?" என்றான்.                       

"அதான் இல்லேன்னு தெரியுதில்லே.. அதையே ஏன் கேட்டுத் தொணப்பிகிட்டு  இருக்கே..  என்ன வேணும், சொல்லு.." என்று அவசரப்படுத்தினார் அவர்.

"அர்ச்சனைத் தட்டு வேணும்.."

"அதுக்குத்தான் இம்புட்டு நேரம் நின்னியா?.. அப்பவே கேட்டிருந்தா எடுத்துக் கொடுத்திருப்பேன், இல்லியா?" என்று அவர் தன் பின்பக்கம் திரும்பி தேங்காய் ஒன்றை எடுத்து சோதித்துப் பார்த்து முன்னால் இருந்த தட்டில் வைத்தார்.  வெற்றிலை, பாக்கு, பழம், பூ, ஊதுபத்தி, கற்பூர வில்லை பாக்கெட் எல்லாம் ஏற்கனவே அதில் வைக்கப்  பட்டிருந்தது.

"எவ்வளவு தரணும்?.."

"எழுபது ரூபா.."

வில்வ இலை வாங்கிக்கச் சொல்லி மங்கை சொன்னது திடுக்கென்று ஞாபகத்திற்கு வந்தது.  "கொஞ்சம் வில்வமும் வைச்சிடுங்கங்க.."

"வில்வம் பத்து ரூபா.." என்று கொஞ்சம் வில்வ இலைகளை சின்ன பிளாஸ்டிக் பையில் இட்டு அர்ச்சனைத் தட்டில் வைத்தார் கடைக்காரர்.  பிறகு பிரம்புத்  தட்டில் இருந்தவற்றை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு நீட்டினார்.

"அர்ச்சனைத் தட்டிலேயே கொடுங்களேன்.  பழம் நசுங்காமல் செளகரியமாக இருக்கும். தரிசனம் முடிந்து திரும்பும் பொழுது தட்டைத் திருப்பித் தந்து விடுகிறேன்.." என்றான்  பாண்டியன்.

"அப்படித்தான் அல்லாரும் சொல்றாங்க.. ஆனா தட்டைத் திருப்பித் தராம எடுத்திட்டுப் போயிடாறாங்க..  அதனாலே தான் இப்படி.." என்றவர்,  "எண்பது ரூபா ஆச்சு.. ஜல்தியா கொடுப்பா.. கூட்டம் வருகிற நேரம்.." என்று கடைக்காரர் அவசரப்படுத்தினார்.

கடைக்காரரின் காரியார்த்தமான நடவடிக்கைகள் பாண்டியனுக்கு எரிச்சலை ஊட்டியது.  காளியண்ணன் இருந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும்.  பையை வாங்கிக் கொண்டான்.

ஒரு நூறு ரூபா நோட்டை எடுத்துக் கொடுத்தபடியே, "காளியண்ணன் இல்லியா?" என்று கேட்டான் பாண்டியன்.

அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல், "எண்பது  ரூபா. சில்லரையா இல்லியா?" என்றார் கடைக்காரர்.

"இல்லை.."

"எல்லாரும்  இப்படி நூறு, ஐநூறுன்னு கொடுத்தா நா சில்லரைக்கு எங்கணே போவது?.." என்று சலித்தபடி கல்லாபெட்டியிலிருந்து  இருபது ரூபா எடுத்துக் கொடுத்தார்.

"காளியண்ணன் இல்லியா?"

"தம்பி சாமான் வாங்கப் போயிருக்கான்.. இன்னும் திரும்பலே.."

"ஓ.. அப்படியா?" என்றான்பாண்டியன்.

'நீங்க யாரு?'ன்னு கடைக்காரர் கேட்டிருந்தால் சொல்லியிருப்பான். அவர் கேட்காத பட்சத்தில் தான் யார் என்று சொல்வது அனாவசியம் என்று அர்ச்சனைத் தட்டை எடுத்துக் கொண்டு  கிளம்பினான்.

இரண்டு தப்படி நடந்தவுடன் தான் மங்கை ' ஜோட்டை அண்ணன் கடையிலேயே விட்டுடங்க' என்று சொன்னது நினைப்புக்கு வந்தது.  சட்டென்று திரும்பி கடைக்கு பக்கத்து சார்பில் ஓரடி அளவுக்கு இடம் ஒதுக்கி தட்டி வைத்துத் தடுத்திருந்த பகுதியில் செருப்புகளை விட்டான்.

கடைக்காரர் பக்கம் திரும்பி, "அண்ணே.. கால் ஜோடுகளை இங்கணே விட்டிருக்கேன்.." என்று  அறிவிப்பும் கொடுத்து வைத்தான்.

"விடுங்க.. விடுங்க..  அல்லாரும் அங்கணே தான் விடுறாங்க.. நான் இருக்கற பிஸிலே அந்தப் பக்கமே என் கண் போகாது..  திரும்பி வரும் போது ஜோடுகள் இருந்தா இறைவனுக்கு நன்றி சொல்லிட்டுப் போட்டுட்டுப்  போங்க.." என்றார் கடைக்காரர்.

இவ்வளவு விட்டேற்றியாக அவன்  பேசுவது கண்டு பாண்டியனுக்கு எரிச்சல் தான் வந்தது.  இருந்தாலும் வேறே வழியின்றி அடக்கிக் கொண்டு தன் செருப்புகளை தட்டி இடுக்கில் கொஞ்சம் உள்பக்கமாகத் தள்ளி விட்டு விட்டு ரோடுப் பக்கம் வந்தான்.

கோயிலுக்கு வரும் கூட்டம் என்றாலும்  இளசு பெரிசு என்றும் எல்லாம் கலந்து ஜிகுஜிகுவென்று இருந்தது.   இளம் நங்கைகள் சிரித்துக்  குலுங்கி அரட்டை அடித்துக் கொண்டு வந்தார்கள்.  அவர்களைத் தொடர்ந்து பின்னால் கண்காணிப்புடன் வருவது போலப் பெரியவர்கள்.  அந்தக் கூட்டத்தில் பாண்டியனும் சேர்ந்து கொண்டான்.

உள்ளுக்குப் போனதும் துவஜ ஸ்தம்பத்தைத் தாண்டி நீண்ட க்யூ.  அந்த நீண்ட வரிசையில் தன்னையும்  இணைத்துக் கொண்டான் பாண்டியன்.  அவனுக்கு முன்னால் ஒரு பெரியவர்.  அவனுக்குப் பின்னால் ஒரு இளம் பெண் வரிசையில் சேர்ந்து கொண்டாள்.

வரிசை நீண்டிருந்தாலும் வேகமாக நகர்வது போலிருந்தது.   துவஜ ஸ்தம்பத்திற்கு பக்கத்தில் போனதும் முன்னால் நடப்பதை நன்கு பார்க்க முடிந்தது.  கோயில் காவலாளி போன்ற டவாலி அணிந்த ஒரு சேவகன் பத்து பத்து பேராக உள்ளே விடுவது தெரிந்தது.

பாண்டியனுக்கு முன்னால் நின்றிருந்த பெரியவர் "சீட்டை எங்கானும் விட்டுடாதே.  பழத்தின்  கீழே வைச்சுக்க..." என்று தன் முன்னால் நின்றிருந்த ஆளிடம் சொன்ன பொழுது தான் 'உள்ளே போனதும் சீட்டை வாங்கிக்கங்க. சீட்டில்லாம அர்ச்சனை கிடையாது..' என்று மங்கை சொன்னது நினைவுக்கு வந்தது.


(வளரும்)


7 comments:

ஸ்ரீராம். said...

பாண்டியன் மழைக்குக் கூட கோவில் பக்கம் ஒதுங்காதவன் என்று தெரிகிறது!! அதேபோல ஒவ்வொரு துறை / கடையிலும் பொறுமையான நபர் அல்லது பழகிய நபர் இருப்பார். அவர் இல்லாவிட்டால் கஷ்டம்தான்.

Thulasidharan V Thillaiakathu said...

பாண்டியன் எப்படி சீட்டு வாங்காமல் போனான். மங்கை சொல்லும் போதே அதாவது முதல் பகுதியில்...அவனுக்குத் தெரியும் என்பதும் அவளுக்குத் தெரியும் இருந்தாலும் அப்படிஉரையாடுவது அவள் பாணி என்று கதாசிரியர் ஜீவி சொல்லியிருந்தாரே!!! அப்படியும் மறந்து போனானோ? அப்படி என்றால் அது ஏதோ ஒரு சம்பவம் அங்கு நடப்ப இருப்பதைச் சூச்சகமாகச் சொல்லுகிற்தோ...

ஒரு எதிர்பார்ப்பைத் தோன்ற வைத்துள்ளது அந்த வரி பார்ப்போம்..

தொடர்கிறோம் அண்ணா

கீதா

G.M Balasubramaniam said...

தொடர்கிறேன் நன்றி

ஜீவி said...

@ ஸ்ரீராம்


//பாண்டியன் மழைக்குக் கூட கோவில் பக்கம் ஒதுங்காதவன் என்று தெரிகிறது!! //

எப்படித் தெரிகிறது, ஸ்ரீராம்?.. சென்ற அத்தியாயத்தை ஊன்றிப் படித்தீர்கள் என்றால் தெரியாதெல்லாம் தெரியும்.

ஜீவி said...

@ கீதா

//பாண்டியன் எப்படி சீட்டு வாங்காமல் போனான்?
அப்படியும் மறந்து போனானோ?..//

பாண்டியனின் கேரக்டர் வார்ப்பு அது. முதல் அத்தியாயத்தில் லேசாகக் கோடி காட்டியிருக்கிறேன்.

ஜீவி said...

@ GMB

தொடர்வதற்கு நன்றி, சார்.

வே.நடனசபாபதி said...

பாண்டியனைத் தொடர்கிறேன்!

Related Posts with Thumbnails