மின் நூல்

Monday, November 2, 2026

என்னையே எனக்குத்......

நான் யார் என்று  அவர்
என்னைக் கேட்டதற்கு
என் பெயரைச் சொன்னேன்
சொன்ன பிறகு தான் உறுத்தியது
பெயர் மட்டும் தானா நான் என்று.

என் பெயர் கொண்டவர் பலர்
இருப்பர் என்பதினால் என் பெயர்
மட்டும் நானில்லை என்று உணர்ந்தேன்.
உணர்ந்ததிலிருந்து 'நான் யார்?'  என்ற
உள் மனசுக் கேள்வியே வண்டாக
ஆலவட்டம் போட்டுக் குடைந்தது.
யோசித்ததில் நான் யார் என்று
தீர்மானமாகச் சொல்ல முடியாதது
சொல்ல முடிவதற்கு முயற்சிக்கத் தூண்டியது.

நான் யார் என்று
நானே அறியாத போது
அவன் யார் என்பதை
அனுமானிப்பது அறியாமையே

தன்னைத் தான் அறிதலே
என்னை நான் அறிதலெனில்

அவனின் அவனை
அவன் தான் அறிதல் கூடும்.

என்னைக் கொண்டு
அவனை அறிதல் சாத்தியமெனில்                                
அவனைக் கொண்டு
என்னையும் அறிதல் கூடுமோ?

தானும் அவனும் ஒன்றேயெனில்          
என்னை அறியும் சித்தியே
அவனையும் அறிதலாகுமோ?
அவனை அவன் அறிந்ததே
என்னை அவன் அறிந்ததாகுமோ?

என் போல் சிலர்
அவன் போல் சிலர் எனும்
வகைப் பிரித்தலில்
அவன் போலான சிலரைத் தெரிந்தது
அவனையே தெரிந்ததாகுமோ?
என் போல் சிலரைத் தெரிந்திருந்தது
அவனாலும் என்னைத் தெரிந்ததாகுமா?

என்னையே எனக்குத் தெரியாத போது
அவனைத் தெரிந்து
ஆகப்போவதென எனும் ஞானம்
முடிவாய் விளைந்தது தான்
வேடிக்கை.




No comments:

Related Posts with Thumbnails