மின் நூல்

Monday, November 2, 2026

குற்றமும் தண்டனையும்

வணக்கம், தாஸ்தவெஸ்கி!
உன் பெயரைச் சொல்லவே
சிரமமாய் இருக்கையில்
எம்மவர் சிலரின் நாவில்
எவ்வளவு சுலபமாக
நீ நுழைந்து வெளிவருகிறாய்!

உன்னை உச்சரிப்பதாலேயே
உச்சரிப்பவருக்கு
தளுக்குப்பெருமை
தாராளமாய் கிடைக்கிறது
உண்மைதான்!

உன்னளவில் எங்களவரில்
ஒரு சிலர் தேறுவர் என்றாலும்
அவர்களையும் தவிர்க்க
நீ வந்து தடுத்தாட்கொள்கிறாய்!

எண்ணங்கள் எழுத்து வாகனமேறி
வண்ணங்களாய் வடிவங்கள் ஏற்று
தன்னைத் தனித்துத் தனியே காட்டி
என்னைப் பார் என்று ஏங்குகையில்
பார்த்தமிடமெலாம் நந்தலாலா
என்று பாரதி பாடிய மாதிரி
உன்னைப் படிக்கப் படிக்க
படிப்பவர்க்கு அவர் படிக்கும்
பிறிதிலெல்லாம் நீயா?..
இல்லை, இப்படி ஒரு 'மேனி'யாவா?

எல்லோரும் தான் உள்ளார்ந்து
உன்னைப் படித்தோம்
எனினும் சிலர்க்கு மட்டும்
உன்னில் பலரையும்
பலரில் உன்னையும் காண்பதில்
எத்தனை சந்தோஷம் பார்த்தாயா?

இந்தப் புவியில் எந்தப் பருந்து
எங்கே பறந்தாலும் அதன் நிழல்
உன் எல்லையில் என்கிற அளவில்
உன் ராஜ்யம் பரந்து விரிந்ததா?..
தவறுகளும் குற்றங்களும் வெவ்வேறு என்றால்
இவை தவறா, குற்றமா தெரியவில்லை.

உன்னோடு மட்டும் முடிந்து விடவில்லை
உன்னைத் தொட்டு போர்ஹெ, அமடோ,
இசபெல் அலண்டே
எத்தனை பேர் அறிமுகம் ஆகிவிட்டனர்?
இவர்களால் அவர்கள் தெரிந்தார்களா?
இல்லை, இவர்களை மறக்க
அவர்கள் வந்தார்களா?

நல்லவேளை எங்கள் வள்ளுவன்
உனக்கு முற்பட்டக் காலத்தவனாய்
ஆகிவிட்டான்; இல்லையென்றால்
அவனும் உன் வழித்தடம் பார்த்து
நடந்தவனே என்கிற
கீர்த்தி உனக்குக் கிடைத்திருக்கும்!




என்னையே எனக்குத்......

நான் யார் என்று  அவர்
என்னைக் கேட்டதற்கு
என் பெயரைச் சொன்னேன்
சொன்ன பிறகு தான் உறுத்தியது
பெயர் மட்டும் தானா நான் என்று.

என் பெயர் கொண்டவர் பலர்
இருப்பர் என்பதினால் என் பெயர்
மட்டும் நானில்லை என்று உணர்ந்தேன்.
உணர்ந்ததிலிருந்து 'நான் யார்?'  என்ற
உள் மனசுக் கேள்வியே வண்டாக
ஆலவட்டம் போட்டுக் குடைந்தது.
யோசித்ததில் நான் யார் என்று
தீர்மானமாகச் சொல்ல முடியாதது
சொல்ல முடிவதற்கு முயற்சிக்கத் தூண்டியது.

நான் யார் என்று
நானே அறியாத போது
அவன் யார் என்பதை
அனுமானிப்பது அறியாமையே

தன்னைத் தான் அறிதலே
என்னை நான் அறிதலெனில்

அவனின் அவனை
அவன் தான் அறிதல் கூடும்.

என்னைக் கொண்டு
அவனை அறிதல் சாத்தியமெனில்                                
அவனைக் கொண்டு
என்னையும் அறிதல் கூடுமோ?

தானும் அவனும் ஒன்றேயெனில்          
என்னை அறியும் சித்தியே
அவனையும் அறிதலாகுமோ?
அவனை அவன் அறிந்ததே
என்னை அவன் அறிந்ததாகுமோ?

என் போல் சிலர்
அவன் போல் சிலர் எனும்
வகைப் பிரித்தலில்
அவன் போலான சிலரைத் தெரிந்தது
அவனையே தெரிந்ததாகுமோ?
என் போல் சிலரைத் தெரிந்திருந்தது
அவனாலும் என்னைத் தெரிந்ததாகுமா?

என்னையே எனக்குத் தெரியாத போது
அவனைத் தெரிந்து
ஆகப்போவதென எனும் ஞானம்
முடிவாய் விளைந்தது தான்
வேடிக்கை.




Related Posts with Thumbnails