மின் நூல்

Wednesday, April 24, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                 15

'சிவகெங்கைச் சீமை'  என்றொரு படம்.  மருது சகோதரர்களைப் பற்றிய இந்தப் படத்தை கண்ணாதாசன் தன் சொந்த முயற்சியில் எடுத்திருந்தார்.  படத்திற்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் அத்தனையும் கவியரசரே!  அந்தப் படத்தின்  கடைசி  தூக்குமேடை காட்சியில் நாயகன்  எஸ்.எஸ்.ஆர். பேசுகிற மாதிரி ஒரு நீண்ட வசனம் வரும்.                                               

முரசொலிக்கட்டும்.,  நம் நாடு தழைக்கட்டும், மன்றத்திலே மக்கள் கூட்டம் திரளட்டும்,  மலரட்டும், விடுதலை மலரட்டும்,  தவழட்டும் தென்றல் தவழட்டும்,  திராவிட நாடு வாழட்டும்!

இந்த வரிகளில் வரும்  முரசொலி, நம் நாடு,  மன்றம், விடுதலை, தென்றல், திராவிட நாடு -- இதெல்லாம் அந்தாளைய  திராவிட இயக்கத்தின் பத்திரிகைகளின் பெயர்கள்..

அந்நாளைய  அந்தப் பத்திரிகைகளின் தோற்றமே எடுப்பாக இருக்கும்.  இன்றைய செய்தித்தாட்களின் ஒரு பக்கத்தை இரண்டாக மடித்த மாதிரியான அளவில் (கிட்டத்தட்ட A-4 சைஸில்)   அன்றைய நாட்களுக்கு புது மாதிரியான தோற்றத்துடன்,  கவிதை--இயக்கச் செய்திகள்-- கட்டுரைகள் என்று    எதுவானாலும் நேர்த்தியான  அச்சில் கடையில் தொங்கும் பொழுதே வாங்கி வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிற மாதிரி இருக்கும்.

'மாதவி'  பத்திரிகையும் அந்த மாதிரி தான் இருந்தது. 

புதுப் பத்திரிகை,  ரிடர்ன் காப்பி  கிடையாது  என்று குறிப்பிட்டிருந்தார்கள்.  அதனால்  30 பிரதிகளுக்கு விண்ணப்பித்து  விற்பனையைப் பார்த்து  அதற்கு மேல் பிரதிகளைக் கூட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணியிருந்தேன்.

முந்தின வாரமே மாதவி பத்திரிகைக் காரியாலயத்திலிருந்து எனக்கு ஒரு கடித உறை வந்திருந்தது.  பிரித்துப் பார்த்தால்  ரயில்வே பார்ஸல் பில்.  சேலம் பகுதிக்கு மாதவியின் முகவராக என்னை நியமித்திருப்பதாகவும், பார்ஸலில் மாதவியின் முதல் இதழை அனுப்பி  வைத்திருப்பதாகவும் பில்லைக் காட்டி பார்ஸலை   டெலிவரி எடுத்துக் கொள்ளச்  சொல்லியிருந்தார்கள்.  அத்துடன் முப்பது பிரதிக்கான விற்பனைத் தொகையில் எனக்கான கமிஷன் 20% கழித்து பாக்கித் தொகையை  பதினைந்து நாட்களுக்குள் அனுப்பி வைக்கச் சொல்லியிருந்தார்கள்.

புதுப் பத்திரிகையின் முதல் இதழ்.  அதைப் பார்க்க வேண்டும் என்று மனது அடித்துக் கொண்டது.  உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு சேலம் டவுன் ரயில் நிலையத்திற்குப் பறந்தேன்.  அங்கு  பார்ஸல் பகுதிக்குப்  போய் பில்லைக் காட்டினேன்.  ஏதாவது ஐடி இருக்கிறதா என்று கேட்டார்கள். இல்லை என்று தெரிந்ததும் உங்களை ஏஜெண்ட்டாக நியமித்த கடிதமாவது இருக்கிறதா என்று கேட்டார்கள்.  கொண்டு   வரவில்லை என்று தெரிந்ததும்  உங்கள் ரப்பர் ஸ்டாம்பு சீலாவது கொண்டு   வந்திருக்கிறீர்களா என்று லேசான எரிச்சலுடன் கேள்வி வந்தது.

அந்த எரிச்சலில் நியாயம் இருந்தது என்று எனக்குப் புரிந்தது.  16 வயசு சின்ன பையன்.  அதுவும் டிராயர்-சட்டை. (சிரிக்காதீரக்ள்.  அமெரிக்காவின் இந்நாளைய இன்ஃபார்மல் டிரஸ்ஸே இது  தான்!)  நாலைந்து தடவை வந்து பழக்கமாகியிருந்தாலும் பரவாயில்லை; அதுவும் இல்லை.  நான் தான்  அந்தப் பத்திரிகையின்  முகவர் என்று நம்புவதே அவர்களுக்கு சிரமமாக இருந்தது.

நல்ல வேளை! நம்ம எம்.என்.ஆர்.  அவர்   பத்திரிகை பார்ஸலை எடுத்துப் போக  அந்தப் பக்கம் வந்திருந்தார்.  குருவிடம்  போய் விஷயத்தைச் சொன்னேன்.   "அப்படியா?.. நான் சொல்கிறேன்.." என்று   வந்து பார்ஸல் கிளர்க்கிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.  எம்.என்.ஆர்.   சேலத்தில் கிட்டதட்ட இருபது பத்திரிகைகளுக்கான ஏஜெண்ட்.  தினப்படி இங்கு ஆஜராகிறவர்.  அவர் அறிமுகம் முழு மனத்துடன் ஏற்றுக் கொள்ளப் பட்டது.  "எந்த ஐடியும் வேணாம் சார்.. நீங்கள் வந்தாலே பார்ஸலை எடுத்து கொடுத்து விடுவேன்.." என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அந்த பி.ஸி.

எம்.என்.ஆரிடம்  விடைபெற்றுக் கொண்டு என் ஆஸ்தான இருப்பிடம் வாடகை நூல் நிலையத்திற்கு வந்தேன்.  ஆர்வத்துடன் பார்ஸலைப் பிரித்தேன்.  இது தான் 'மாதவி' என் கைக்கு வந்து சேர்ந்த கதை.

பொதுவாக பத்திரிகை வந்ததும் கடைகளுக்கு விநியோகிப்பது ஒரு அனிச்சை செயலாய் முகவர்களுக்கு இருக்கும்.  ஆனால் நானோ ஒரு வாசகன் போலவான உணர்வில் பக்கம் பக்கமாக புரட்டி  ஆர்வத்துடன் படித்தேன்.  பத்திரிகையின் தோற்றம்,  அதன் பிரசண்டேஷன்  எல்லாம் எனக்குப் பிடித்திருந்தது.  நாம் இந்தப் பத்திரிகையின் வளர்ச்சிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.   பத்திரிகைக் கட்டோடு போஸ்டர்கள் என்று சொல்லப்படும்  தாள்கள் மூன்றை  அனுப்பி வைத்திருந்தார்கள்.  அந்த போஸ்டர்களில் தலைப்புச் செய்திகள் மாதிரி பத்திரிகையின் உள்ளடக்க விஷயங்கள் சிலவற்றை கொட்டை எழுத்தில் அச்சடித்திருந்தார்கள்.

அன்றே நூலகத்தின் ஓய்வு நேரத்தில்  அந்த 30  பிரதிகளையும் சேலம் டவுன்,  அஸ்தம்பட்டி, குகை, செவ்வாய்ப்பேட்டை,   அம்மாபேட்டை பகுதிகளில் கடைக்கு இரண்டே பிரதிகள் கணக்கில் விநியோகித்தேன்.    ஜனசந்தடி  மிகுந்த  இடத்தில்  இருந்த மூன்று பெட்டிக் கடைகளுக்கு அந்த மூன்று  போஸ்டர்களையும்  கொடுத்து கடையில் பார்வையாக மாட்டி வைக்கச் சொன்னேன்.  இரண்டு கடைகளில் "நீயே மாட்டு..." என்று என்னிடம் கொடுத்தார்கள்.  மற்றப்  பத்திரிகை குட்டி போஸ்டர்கள்  மாட்டி வைத்திருக்கிற பாணியைப் பார்த்தேன்.   க்ளிப் கேட்டேன்.  கிளிப்பெல்லாம்  இல்லை என்று என்னிடம் சொல்லிக் கொண்டே வியாபாரத்தைப் பார்த்தார் கடைக்காரர்.   சிகரெட் பற்ற  வைக்க  வந்த யாரோ ஒருவர், "இந்தா.. இங்கணே தீக்குச்சி இருக்கு பாரு.. அதைக் குத்தி வைச்சு மாட்டு.." என்றார்.  "ஆங்!.. இது தெரியாம போச்சே.." என்று புண்யவான்கள் சிகரெட்டுக்கு கொளுத்தி அணைத்துப் போட்டிருந்த இரண்டு தீக்குச்சிகளை எடுத்து  கடை முன்பக்கம்  இருந்த கம்பியில் போஸ்டரை நுழைத்து  இரண்டு பக்கமும் தீக்குச்சிகளை குத்தி மாட்டி  கச்சிதமாக வேலையை முடித்தேன். 

பெட்டிக்கடைகளில் எம்.என்.ஆருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.  அவர் பெயரைச் சொன்ன போது நல்ல ரெஸ்பான்ஸ்  இருந்தது.  அவர் பத்திரிகை போலவே 'சரி' என்று வாங்கிக் கொண்டார்கள்.    சில கடைகளில் "வைச்சிட்டுப் போ..". சிலர்,அலட்சியமாக ஒரு  மூலையில் வீசி விட்டு  கடையின் மற்ற வியாபாரத்தைக் கவனிப்பார்கள்.  அந்த மாதிரி நபர்களிடம்,  "அண்ணே! இது புது பத்திரிகை.. ஜனங்களுக்கு   தெரியாது.  நீங்க தான்  அவங்களுக்கு கண்லே படற மாதிரி மாட்டி  வைக்கணும்.." என்று பணிவாகத் தெரிவிப்பேன்.   சிலர் 'இரண்டே ரெண்டு பேப்பர் கொடுத்திட்டு இந்தப் பையன் என்னவெல்லாம் பேசறான்?' என்கிற மாதிரி ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள்.   சிலர் 'சரி, தம்பி'  என்று அன்போடு சொல்வார்கள்.  வியாபாரம் என்று வந்து விட்டால் எல்லாம் தான் இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.

மாதவி வெள்ளிக் கிழமை வெளிவருகிற ஏடு.  அடுத்த புதன் கிழமையே  தபாலில் அடுத்த வார பத்திரிகை  பார்ஸலை எடுத்துக் கொள்வதற்காக பில் வந்து விட்டது.

(வளரும்)


16 comments:

ஸ்ரீராம். said...

அடுத்த வாரத்துக்கு அவசரமாக ஓடி வந்து விட்டீர்களே... முதல் வாரம் வந்த மாதவிகள் விற்றுப் போனார்களா? ஆசிரியர் யார்? விவரங்கள் சொல்லாமல் போனால் எப்படி?!!

G.M Balasubramaniam said...

உங்கள் பத்திரிகை ஆர்வத்தின் காரணம் புரிகிறது

ஜீவி said...

@ ஸ்ரீராம்

இதான் வாசிப்பின் ரசனை என்பது. வாசிப்பின் தொடர்ச்சியான விவரங்களைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுவது.

ஒரு சின்ன சஸ்பென்ஸுக்காக நீங்கள் கேட்டிருக்கும் விவரங்களைச் சொல்லாமல் வைத்திருக்கிறேன். அடுத்த பகுதி அதைப் பற்றித் தான்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

ஆனாலும் வார்த்தைச் சிக்கனம் உங்களுக்கு அதிகம் தான். இன்னும் நாலு வரி எழுதினால் தான் என்ன?.. உங்கள் ஆழ்ந்த பாரட்டுக்கு நன்றி, சார்.

வே.நடனசபாபதி said...

பதின்ம வயதிலேயே பத்திரிக்கையை சந்தைப்படுத்த முயற்சி எடுத்திருக்கிறீர்கள். அதை செய்ய அந்த வயதில் வந்த தங்கள் துணிவை பாராட்டுகிறேன். நீங்கள் கடைகளில் விநியோகித்த 'மாதவி' இதழ்கள் முழுதும் விற்கப்பட்டனவா என்ற கேள்வியை நான் கேட்கப்போவதில்லை.

புதிய இதழுக்கு ஆரம்பத்தில் அவ்வளவு வரவேற்பு இருக்க சாத்தியமில்லை. மிகவும் சிரமப்பட்டு சந்தைப்படுத்தியிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.( என் நண்பர் ஒருவருக்கு இதில் ஏற்பட்ட அனுபவத்தை அறிந்ததால் புதிய இதழை சந்தைப்படுத்துவதின் சவால்களை அறிவேன்.) தங்களின் வாயிலாக அதை அறிய காத்திருக்கிறேன்.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

வாழ்க்கையில் எக்காலத்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன
என்று இன்றும் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.

பத்திரிகை அது தொடர்பான செய்திகள் என்று என் வாழ்க்கையில் எதிர்ப்பட்டவை ஏராளம்.
ஒவ்வொன்றும் அனுபவத்தை படிப்பித்த பாடங்கள் தாம்.

அடுத்த பகுதியில் அவை பற்றிச் சொல்கிறேன். தொடர்ந்து வாசித்து அனுபவபூர்வமான தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி, ஐயா.


கோமதி அரசு said...

//இந்தா.. இங்கணே தீக்குச்சி இருக்கு பாரு.. அதைக் குத்தி வைச்சு மாட்டு.." என்றார். "ஆங்!.. இது தெரியாம போச்சே.." என்று புண்யவான்கள் சிகரெட்டுக்கு கொளுத்தி அணைத்துப் போட்டிருந்த இரண்டு தீக்குச்சிகளை எடுத்து கடை முன்பக்கம் இருந்த கம்பியில் போஸ்டரை நுழைத்து இரண்டு பக்கமும் தீக்குச்சிகளை குத்தி மாட்டி கச்சிதமாக வேலையை முடித்தேன். //

சிகரெட் பற்ற வைக்க வந்த நல்ல மனிதர் சொன்ன யோசனை , அதை கேட்டு நீங்களும் கச்சிதமாக வேலையை முடித்து வாசக பெருமக்கள் படித்து பயன் பெற உழைத்து விட்டீர்கள்.

பத்திரிக்கை விற்குமா விற்காதா என்ற நினைப்பு இல்லாமல் உங்கள் கடமையை செய்து விட்டீர்கள்.

வசந்தகால நினைவுகள் நன்றாக இருக்கிறது.

ஜீவி said...

@ கோமதி அரசு

ஒவ்வொரு விஷயத்திற்கு ஒவ்வொரு கட்ட process இருக்கத் தான் செய்கிறது.

பத்திரிகை பொறுத்த மட்டில் அதன் விற்பனை தான் அதன் உயிர்நிலை.

பொருள் வசதியற்றவர்களும் தங்கள் இலட்சியத்திற்காக இந்த நாட்டில் பத்திரிகை நடத்தியிருக்கிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் அச்சடித்தது, பரவலாக பலர் கைப் போய்ச் சேர்ந்தால் தான் நிம்மதி.
சொல்லப் போனால் அதற்காகத் தான் எல்லாமும்.

எழுத்து பத்திரிகையை நடத்திய எழுத்தாளர் சி.சு. செல்லப்பா (வாடிவாசல் செல்லப்பா)
அவர்கள் எழுதி, அச்சடித்து, தலையில் தூக்கிச் சுமந்து சிரமப்பட்டதெல்லாம் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகின்றன. அவரை நினைக்கும் பொழுது, நாமெல்லாம் ஒன்றுமில்லை என்று தான் தோன்றுகிறது.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, கோமதிம்மா.

Bhanumathy Venkateswaran said...

மிகவும் ஸ்வாரஸ்யமாக செல்கிறது உங்கள் அனுபவங்கள். பத்திரிகை விற்றிருக்க வேண்டுமே என்று மனது அடித்துக் கொள்கிறது.

ஜீவி said...

@ பானுமதி. வி.

நமக்குத் தெரிஞ்சவங்க சம்பந்தப்பட்ட விஷயத்திலே நல்லது நடக்கணும்ங்கற எதிர்பார்ப்பு இது. அடுத்த பகுதியிலும் மாதவி தொடர்பான விஷயங்கள் தான். உங்களுக்கிருக்கும் வேலைகளுக்கு இடுக்கிலேயும் படித்து விடுங்கள். சரியா?..

வல்லிசிம்ஹன் said...

ஜீவி சார், இது நடந்தது எந்த வருடம். இவ்வளவு அனுபவத்தோடு செயல் பட்டிருக்கிறீர்கள் அந்தப் பதினாறு வயதில்.
நாங்கள் திருமணமான முதல் நான்கு வருடங்கள் சேலம் நாலு ரோடு அருகில்
பெரமனூர் பகுதியில் இருந்தோம்.

இவருடைய சித்தப்பா ஹிண்டு ஏஜெண்டாக இருந்தார். சி.ஆர்.சம்பத்
என்று பெயர்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

எல்லாம் சில விஷயங்களில் இருக்கும் தனிப்பட்ட ஆர்வம் தான் காரணம், வல்லிம்மா. 1959 வருடம் மார்ச் மாத எஸ்.எஸ்.எல்.ஸி. பேட்ச் நான். ஜனிந்தது ஜனவரி 1943. ஆக 16-ம் வயதில் பள்ளி இறுதித் தேர்வு முடித்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளலாம். நிரந்தர மத்ய அரசுப் பணி எனது 20-வது வயதில். இடைப்பட்ட 4 வருடங்களில் இப்படியான தொடர்புகள். 1956-லிருந்து 1963- வரை சேலம் வாழ்க்கை. இன்னும் நிறைய இருக்கின்றன. அவற்றை ஞாபகத்தில் இருத்தி எழுதிக் கொண்டு வருகிறேன். சில நிகழ்வுகள் முன்பின் மாறலாமே தவிர அத்தனையும் சுவையான அனுபவங்களாக அமைந்தது மட்டுமல்ல, பின்னால் அமைந்த வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் இருந்திருப்பதில் எனக்கு பரம திருப்தி.

சேலம் நான்கு ரோடு சந்திப்பில் எனது உறவினர் ஒருவர் ஹோட்டல் ஒன்று வைத்திருந்தார். அந்நாளைய பிரமணாள் கபே.

//இவருடைய சித்தப்பா ஹிண்டு ஏஜெண்டாக இருந்தார். சி.ஆர்.சம்பத்
என்று பெயர்.//

அப்படியா?.. சந்தோஷம். தி ஹிந்துவின் சரித்திரமே தனிதான்.

தொடர்ந்து வாசித்து வாருங்கள். நம் பழைய நினைவுகளைத் திரட்டலாம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நீங்கள் கூறும் பத்திரிக்கையின் அளவு கிட்டத்தட்ட ஏ4 என்றுள்ளது. அது டேப்ளாய்ட் வடிவமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். நாம் வழக்கமாக வாசிக்கும்தாள் பிராட்ஷீட் ஆகும். அதனை இரண்டாக மடித்தால் வருவது டேப்ளாய்ட் வடிவம். அதனைப் பற்றி விரிவாக எழுதியுள்ளேன்.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam. A.R. (Retd) Tamil University

ஓகோ. இதான் டேப்ளாய்ட் வடிவமா? தெரிந்து கொண்டேன். நீங்கள் குறிப்பிடுகிற கட்டுரையை நானும் வாசித்தேன். நன்றி, ஐயா.

Thulasidharan V Thillaiakathu said...

மிக மிக ஸ்வாரஸியமாகப் போகிறது உங்கள் அனுபவங்கள். மாதவி பத்திரிகை பற்றி அறிந்து கொள்ளவும் நீங்கள் அதன் பின் என்ன செய்தீர்கள் என்று அறியவும் ஆவல்! உங்கள் வாசிப்பு புத்தக ஆர்வம் எழுத்தின் மீதான ஆர்வம் எல்லாம் எப்படி வந்தது என்று அறிய முடிகிறது. அருமை...மாதவி பத்திரிகை என்ன சைசில் இருக்கும்? நடத்தியவர் யார்? அதில் என்ன கன்டென்ட் இருக்கும் என்றேல்லாம் ஆர்வம் மேலிடுகிறது..தொடர்கிறோம்

கீதா

ஜீவி said...

@ தி. கீதா

அந்நாளைய அரசியல் பத்திரிகைகளின் அமைப்பு, உள்ளடக்கம் எல்லாம் வாசிப்புக்கு பிரமாதமாக இருக்கும்.

மாதவியும் அதற்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை.

Related Posts with Thumbnails