மின் நூல்

Monday, April 29, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                   17

ன்று தபாலில் வந்திருந்த  அந்தப் புத்தகம் தான் என் மகிழ்ச்சிக்குக் காரணம்.

அது கதம்பம் என்ற  மாத   இதழ்.  இலங்கை கொழும்புவிலிருந்து அந்நாட்களில் பிரசுரமான  இதழ்.  இன்றைய  குங்குமம் பத்திரிகை சைஸூக்கு இருக்கும்.  அந்த இதழின் ஆசிரியர் பெயர் மோகன்.  வாலிபர்.  கல்கண்டு தமிழ்வாணனின் மேல் அளப்பரிய அன்பு கொண்டவர்.  தமிழ்வாணன் மாதிரியே அதே பாணியில்  குளிர்க் கண்ணாடி அணியும் பழக்கம் கொண்டவர்.  சின்னத் தமிழ்வாணன் என்றே அவரை அழைப்பாரும் உண்டு.

அந்த கதம்பம் பத்திரிகைக்கு சேலம் பகுதிக்கு முகவர் நமது எம்.என்.ஆர். தான். எனக்கு கதம்பம் காரியாலயத்திலிருந்து  அனுப்பி வைத்திருந்த அந்தக் குறிப்பிட்ட இதழ் சேலம் விற்பனைக்காக அவருக்கு வந்து சேரவில்லை.  அதற்குள்  இலங்கையில் போஸ்ட் செய்யப் பட்டு காம்ப்ளிமெண்ட் காப்பியாக என் கைக்கு வந்து சேர்ந்து விட்டது.

அதில் என்ன விசேஷம் என்பதைச் சொல்கிறேன்.  இந்தப் பத்திரிகையில் 'எனக்குப் பிடித்த எழுத்தாளர்'   என்று ஒரு  போட்டியை வைத்திருந்தார்கள்.  அந்தப் போட்டியில்  நானும் கலந்து   கொண்டிருந்தேன்.  பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தால்  அந்தப் போட்டியில் முதல் பரிசு  எனக்குத் தான் என்று தெரிந்தது.  அந்த நல்ல செய்தி தான் அன்றைய என் மகிழ்ச்சிக்குக் காரணம்.

அந்நாளைய  குமுதம் பத்திரிகையின் பரம  ரசிகன் நான்.  அதுவும் ஆசிரியர்  எஸ்.ஏ.பி. அவர்கள் குமுதத்தில் தொடர்கதை  எழுதுகிறார் என்றால் என் எதிர்பார்ப்பு எகிறும்.  அவர் தொடர்கதைப் பகுதியைப்  பத்திரிகையிலிருந்து   பிரித்தெடுத்து  சேர்த்து வைத்து பின் மொத்தமாக பைண்ட் பண்ணி  பாதுகாப்பாக வைத்துக் கொள்வேன்...  இப்படிச் சேர்த்து வைத்துக் கொண்ட குமுதம் பைண்டிங்கள் பல ஆண்டுகள் கழித்தும் என் கைவசம் இன்றும் உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  தோன்றிய பொழுதெல்லாம் அவர் எழுத்தை ஆசையுடன் படிப்பதில் அலாதியான சுகத்தை இன்றும் அனுபவிக்கிறேன்.  நான் என்றும் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வாசகர்களுக்கு சொல்ல வேண்டிய அந்தக் கதை எப்படிச் சொல்லப் பட்டிருக்கிறது என்பதில் அதிகம் கவனம் கொள்வேன்.  இந்த இரகசியம் தெரிந்தால் எந்தக் கதையையும் வாசிக்கறவர்களுக்குப் பிடித்த மாதிரிச் சொல்லி விடலாம் எனபது என் அபிப்ராயம்.  அப்படிச் சொல்லத்  தெரியவில்லை என்றால் எப்படிச் சிறப்பான கதையம்சமும் வாசகர் வாசிக்கையில் அவர்களைக் கவராது போய் விடும்.

பெரும்பாலான வாசகர்களுக்கு வேண்டுமானால் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமோ அக்கறையோ இல்லாது இருக்கலாம்.  ஆனால் படைப்பாற்றல்  மிக்க வாசகர்களுக்கு ஒரு பத்திரிகையின் ஆசிரியர் பற்றிய விவரங்கள் அறிவதில் இயல்பான ஈடுபாடு உண்டு.  அது அவர்களின் வாசக  உள்ளத்தின் வெளிப்பாடு.   மாதவி பத்திரிகை பற்றி நான் மேலோட்டமாகச் சொல்லும்  பொழுது அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் யார், அந்தப் பத்திரிகையின் உள்ளடக்கம், யார் யாரெல்லாம் எழுதினார்கள் என்று 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் விசாரித்தார் இல்லையா?.. இது தான் வாசக உள்ளத்தின் நேர்த்தியான வெளிப்பாடு.  அவருக்குக் கூட நான்  மாதவி பத்திரிகையில் பிரசுரித்திருந்த பொறுப்பாசிரியரின் பெயரை மட்டுமே சொன்னேன்..  அதற்குக் காரணம்: 1. ஒரு பத்திரிகையின்  முகவர் சம்பந்தப்பட்ட  பிரச்னைகளுக்கும் அந்தப் பத்திரிகையின்  ஆசிரியருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது.  2. ஸ்ரீராமைப் பொறுத்த மட்டில் சொன்ன தகவலே போதும் என்று நான் நினைத்ததால்.  எழுத்து, பத்திரிகை என்று வந்து விட்டால்,  நாம் கோடு போட்டாலே போதும், ரோடு போடும் திறமை கொண்டவர் அவர்.  அந்த அளவுக்கு   அவருக்கு பத்திரிகை விஷயங்களில் ஈடுபாடு என்று எனக்குத் தெரியும்.

ஒரு பத்திரிகையின்  சாகச விற்பனை,  அதில் எழுதுபவர்களின் எழுத்தாற்றல், உள்ளடக்க விஷயங்கள் என்பதையெல்லாம் கணாக்கில் எடுத்துக் கொண்டு அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், அவர் பற்றிய தகவல்கள், தோற்றம் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்   என்ற ஆவல் இயல்பானதே. இலட்சக்கணக்கான விற்பனை கொண்ட குமுதம்   இதழின் ஆசிரியர் எப்படியிருப்பார்  என்று அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்த ஒரு சிலரைத் தவிர யாருக்கும் தெரியாது.  அந்த அளவுக்கு தனது புகைப்படம் எதுவும் வெளியில் வராது தம்மை மறைத்துக் கொண்டவர் அவர்.   ஒரு தடவை  மிகவும் ஆசையுடன் அவர் புகைப்படம் அனுப்ப  வேண்டி குமுதத்திற்குக் கடிதம் எழுதியிருந்தேன்.  அடுத்த சில நாட்களில்,

அன்புடையீர்,                                                                                                     29-8-60

வணக்கம்.  தங்களுடைய  அன்பான கடிதத்துக்கு ஆசிரியர் தமது நன்றியைத் தெரிவிக்கச் சொன்னார்.  அவரது கைவசம் புகைப்படம் எதுவுமில்லை.  அன்பு கூர்ந்து மன்னிக்கவும்.
                                                                                                                                                                                        ரா.கி. ரங்கராஜன்                                                             
 --- என்று ரா.கி.ர. கையெழுத்திட்டு எனக்கு கடிதம் வந்தது.


அப்பொழுது எனக்கு 17 வயது தான்.  அந்த வயதில் பத்திரிகைகள் மீதும் மனங்கவர்ந்த எழுத்தாளர்கள் மீதும் இப்படி ஒரு ஆசையும், அன்பும்!

அந்நாட்களில் பொங்கல் திருவிழா வந்தால்  எம்.ஜி.ஆர்.,  சிவாஜி கணேசன் படங்கள் போட்ட வாழ்த்து அட்டைகள்  தாம்  கடைகளில் குவியலாகக் காணக் கிடைக்கும்.  எந்த அட்டையை யார் வாங்குகிறார்கள் என்பதைக் கொண்டு அவர்களின் அரசியல் கட்சிகளின் சார்பு நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவான இயற்கைக் காட்சிகள் கொண்ட வாழ்த்து அட்டைகளை வாங்கி நான் பத்திரிகை ஆசிரியர்களுக்கு அனுப்புவது வழக்கம்.  அந்த அளவுக்கு பத்திரிகைகளும்,  அதன் ஆசிரியர்களும் அந்த வயதில் என்னை ஈர்த்திருந்தார்கள்.                                                                                   

என் ஆர்வத்திற்குத் தீனி போடுகிற நிகழ்வு ஒன்று  நடந்தது.  ஆனந்த விகடன் பொன்விழா  பரிசுப் போட்டிகளின் போது சிறந்த  நாவலைத் தேர்ந்தெடுக்கும்      குழுவில் எஸ்.ஏ.பியும்  இருந்தார்.  அந்தத் தேர்வுக் குழுவின் புகைப் படத்தையும் விகடனில் வெளியிட்டிருந்தார்கள்.   அந்த குரூப் போட்டோவின் கீழே இடமிருந்து வலமாக என்று ஒவ்வொருவரின் பெயரையும் பிரசுரித்திருந்தார்கள்.  அவர்கள் சொல்லியிருந்தபடி இடமிருந்து  வலமாக என்று ஒவ்வொருவராக எண்ணிக் கொண்டு வந்தவன்,  ஆறாவது நபர் வரும் பொழுது அவர் தோற்றம்  மங்கலாக  நிழல் போல தேசலாகத்  தெரிந்து உற்று உற்றுப் பார்த்து சலித்துப் போனேன்.   சென்னைக்கு  வந்த பிறகு ஒரு நாள் எஸ்.ஏ.பி. அவர்களைப்  பார்த்தே விடுவது என்று விடாப்பிடியாகத் தீர்மானித்து  குமுதம் அலுவலகத்துக்கே போனேன்.  அதெல்லாம் பற்றி இன்னொரு சமயம் எழுதுகிறேன்.

எஸ்.ஏ.பி. அவர்கள் அமெரிக்காவில் காலமான பொழுது தான் தொலைக்காட்சியில் அவர் புகைப்படம் பார்த்து 'ஓகோ, நம் எழுத்தாசான் இப்படித் தான் இருப்பாரோ' என்று அவர் தோற்றதை உள் வாங்கிக்  கொண்டேன்.

குமுதத்தில் எஸ்.ஏ.பி.  எழுதிய முதல் தொடர் 'பிரம்மச்சாரி'..  அடுத்து  காதலெனும் தீவினிலே'. அதற்கடுத்து 'நீ'.  இந்த 'நீ'க்கு நிகராக எந்தத் தொடரும் இதுவரை எந்தப்  பத்திரிகையிலும் வரவில்லை என்பது என் சொந்த அபிப்ராயம்.  தொடர்ந்து, 'சொல்லாதே'', 'இன்றே இங்கே இப்பொழுதே',  'கெட்டது யாராலே', 'சின்னம்மா' 'பிறந்த நாள்',  'மலர்கின்ற பருவத்திலே',  நகரங்கள் மூன்று,  சொர்க்கம் ஒன்று-- என்று நிறையத் தொடர்களை எழுதியுள்ளார்.  ஓவியம் என்றொரு தொடர்கதை.  நிகழ்காலத்திலேயே எழுதப் பட்ட தமிழின் முதல் முயற்சி.  

சொல்லப்போனால்  எஸ்.ஏ.பி. அவர்கள் தான்  அந்த இளம் பிராயத்திலேயே மானசீக குருவாய் இருந்து  எனக்கு எழுதக் கற்றுக் கொடுத்தவர்.  ஒரு அத்தியாயத்தை எங்கு தொடங்குகிறார், பின்னால் சொல்ல வேண்டிய விஷயத்தை முன்னால் சொல்லி, அல்லது முன்னால் சொல்ல
வேண்டியதைப் பின்னால் சொல்லி முன்னுக்கும் பின்னுக்கும் எப்படி முடிச்சுப் போடுகிறார் அதையும் எவ்வளவு லாவகமாக சொல்லி விடுகிறார்  என்றெல்லாம் ஏதோ பி.எச்.டி. க்கு  ஆய்வு ஏடுகள் சமர்ப்பணம் பண்ணுகிற மாதிரி அவர் எழுத்தை அணுஅணுவாக ஆராய்ந்திருக்கிறேன்.

இலங்கை கதம்பம் பத்திரிகைக்கு எனக்குப் பிடித்த எழுத்தாளராய் அவரைத் தான் வரித்து எழுதியிருந்தேன்.  எனது கட்டுரை முதல் பரிசு கட்டுரையாகத் தேர்வான செய்தி அந்த இதழில் அறிவிக்கப்பட்டு  பரிசுக் கட்டுரையை பிரசுரம் செய்த இதழைத் தான் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.

இதெல்லாம் விட முக்கியமான விஷயம்  அந்தப் பத்திரிகையின் தார்மீக உண்ர்வு தான்.   அந்த இதழுடன் ஒரு கடிதத்தையும் ஆசிரியர் மோகன் தன் கையொப்பத்துடன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.

'தங்களுடைய கட்டுரை முதல் பரிசுக்குரிய கட்டுரையாகத் தேர்வானதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.  சேலத்தில் எம்.என்.ஆர். என்பவர் எங்கள் முகவராக செயல்படுகிறார்.  உங்கள் முகவரியை அவருக்குத் தெரியப்படுத்தி இருக்கிறோம்.  முதல் பரிசுக்கான தொகையை எங்கள் சார்பில் உங்களுக்கு அவர் வழங்குவார்.  அருள் கூர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம்.  மேலும் தங்கள் படைப்புகளை  'கதம்பம்' பத்திரிகைக்கு அனுப்பி எங்கள் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டுகிறோம்.  நன்றி.'

-- என்று அந்தக் கடிதம் எனக்கு சேதி சொன்னது.

முதல் பரிசு கட்டுரையாகத் தேர்வானது,  அதற்கான பரிசுத் தொகையை எம்.என்.ஆரே எனக்கு வழங்கப் போகிறார் என்று இரட்டை சந்தோஷம் எனக்காயிற்று.

அந்தக் காலத்தில் விஷய தானம் என்று சொல்வார்கள்.  சன்மானமெல்லாம் எதிர்பார்க்காமல் எழுதுவது.   அந்த மாதிரி இலட்சிய வேகத்தில் எழுதிய காலங்களும் உண்டு என்பதையும் சொல்ல வேண்டும்.

ஆனால்  இலங்கை-- இந்திய பணப் பரிமாற்ற  விஷயங்களைக் கருத்தில் கொண்டு தனது  தமிழக முகவர் மூலம்  எனக்கு பரிசை அளிக்க தீர்மானித்து  அதனைச் செயல்படுத்தவும் செய்த கதம்பம் பத்திரிகையின்   தார்மீக உணர்வு தான் இத்தனை காலம் கழித்தும்  நினைவில் வைத்திருந்து அதை இப்பொழுது   பகிர்ந்து கொள்ளவும் செய்திருக்கிறது.


(வளரும்)

21 comments:

Bhanumathy Venkateswaran said...

அருமை!. உங்களின் மனம் கவர்ந்த எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பியதைப் போலவே நானும் சிலரை சந்திக்க விருப்பம் கொண்டு சந்தித்திருக்கிறேன். கடைசி வரை சந்திக்க முடியாமல் போனவர்கள் திரு.லா.ச.ரா.வும், திரு. ரா.கி.ரெங்கராஜனும்.
எஸ்.ஏ.பி. படைப்புகளில் நான் படித்தது மலர்கின்ற பருவத்திலே மட்டும்தான். மற்றவைகளை வாசிக்க வேண்டும் என்னும் ஆர்வம் வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

S.A.P.எஸ். எ.பி பொன்னெழுத்தும், பொன் போன்ற உள்ளமும் கொண்ட நல்லவர்.
பெற்றோருக்குக் குமுதம் பிடிக்கும். அதனால் நீங்கள் சொன்ன
தொடர்கதைகளைப் படிக்க முடிந்தது.

அந்தக் கதம்பம் பத்திரிகைக்கும்,அதன் ஆசிரியருக்கும் தான் எத்தனை ஈடுபாடு. தெளிவான சிந்தனை.
முதல் பரிசு வாங்கி இருக்கிறீர்கள். மனம் மிக சந்தோஷம் அடைகிறது.

படகு வீடு என்று கூட தொடர் வந்ததோ.
எல்லாமே மனம் கவரும் தலைப்புகள்.
நானும் எஸ்.ஏ.பி அவர்களின் புகைப்படத்தைப் பின்னாட்களில் தான் பார்த்தேன்.

மனம் நிறை நன்றி இந்தப் பதிவுக்கு,சிறு வயது பொற்காலங்களுக்குப் போய்விட்டேன்.
ரா கி ர. புரசவாக்கத்தில் எங்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில் இருந்தார். எட்டிப் பார்த்தபடியே கல்லூரிக்குச் செல்வேன்.

ஸ்ரீராம். said...

//எந்தக் கதையையும் வாசிக்கறவர்களுக்குப் பிடித்த மாதிரிச் சொல்லி விடலாம் எனபது என் அபிப்ராயம்.//

​எனக்கும் அப்படித் தோன்றும்!​

ஸ்ரீராம். said...

சுஜாதா எனக்கு பிடித்த எழுத்தாளர். அவரைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் இருந்தது. அவர் காலமானதும் அவரைப் பார்க்கப் போகலாம் என்று என் நண்பன் சொன்னபோது போக மனம் இல்லை.

ஸ்ரீராம். said...

பல கமெண்ட்டுகள் போட்டு, அதில் ஒன்றே ஒன்று மட்டும் வெளியானால், நாம் சரியாக பப்ளிஷ் கொடுத்தோமா, இல்லை அவசரப்பட்டு விட்டோமா என்று சந்தேகம் வருகிறது! மறுபடியும் அப்போது எழுதியதை முடியுமா?

கௌதமன் said...

மிகவும் இரசித்துப் படித்தேன். சுவாரஸ்யமான பதிவு.

கோமதி அரசு said...

'எனக்குப் பிடித்த எழுத்தாளர்' போட்டியில் முதல்பரிசு பெற்றது மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.

அருமையான மலரும் நினைவுகள்.
நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

வே.நடனசபாபதி said...

‘கதம்பம்’ இதழ் நடத்திய ‘எனக்குப் பிடித்த எழுத்தாளர் ‘ என்ற போட்டியில் கலந்துகொண்டு அனைவருக்கும் பிடித்த திரு எஸ்.ஏ.பி அவர்கள் பற்றி எழுதி முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்! 17 வயதில் தங்களுக்கு கிடைத்த அந்த பரிசு தந்த ஊக்கம் தான் தங்களை மேலும் எழுதத் தூண்டியது என நினைக்கிறேன். திரு எஸ்.ஏ.பி அவர்களின் கதைகளில் எனக்குப்பிடித்தது காதலெனும் தீவினிலே’ என்ற தொடர் நாவல்தான். திரு எஸ்.ஏ.பி அவர்களின் ‘நீ ‘ பற்றி கூட நீங்கள் ஒரு பதிவு எழுதியது நினைவுக்கு வருகிறது.

பல ஆண்டுகள் 25 காசுகளுக்கு இதழைக் கொடுத்தது குமுதம் மட்டும் தான். கல்லூரியில் படிக்கும்போது குமுதம் இதழ் வந்தவுடன் அறைத் தோழர்களான எங்களுக்குள்ளே யார் முதலில் படிப்பது என்ற போட்டியே இருக்கும். தங்களின் ‘வசந்தகால நினைவுகள்’ என்னை அந்த நாட்களுக்கு இட்டுச்சென்றது உண்மை.

தொடர்கிறேன் மேலும் தங்களின் அனுபவம் பற்றி அறிய!

ஜீவி said...

@ பானுமதி வெங்கடேஸ்வரன்

ரொம்ப சந்தோஷம். நீங்கள் எழுத்தாலர்களைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டவர் என்பதை அறிய.
எஸ்.ஏ.பி. அவர்களின் நாவலில் காதலெனும் தீவினிலே, நீ -- இரண்டைத் தவிர வேறு எதுவும் புத்தகமாக இல்லை. தமிழ்வாணனின் மணிமேகலைப் பிரசுரம் தான் உரிமை பெற்று அவற்றைப் பிரசுரித்திருக்கிறது. அருமை நண்பர் ரவி தமிழ்வாணனிடம் 'சொல்லாதே' ஒன்றையாவது புத்தக வடிவில் தாருங்கள்.. என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

ஜீவி said...

@ வல்லி சிமஹன்

'பொன்னெழுத்தும் பொன் போல உள்ளமும் என்று நீங்கள் ஆசிரியரைக் குறித்துச் சொன்னது உண்மையான உண்மை. நீங்களும் படித்திருக்கிறீர்கள் என்ற சேதியே சந்தோஷத்தைக் கொடுத்தது.

படகு வீடு உங்கள் புரசைவாக்க எதிர் வீட்டுக்காரரது. ஸ்ரீநகர்க் கதை. ரா.கி.ரா. எழுதினால் கேட்க வேண்டுமா?.. ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், புனிதன் -- அந்த டீமிற்கு ஈடு இணை பத்திரிகை உலகில் இருந்ததில்லை.. இனி இருக்கப் போவதும் இல்லை.

அந்தக் காலம் மீண்டும் வாராதோ?-- என்ற நினைப்பு தான் அடிக்கடி. அவற்றை நினைத்துப் பார்ப்பதிலும் மனம் சந்தோஷிக்கிறது. தொடர்ந்து வாருங்கள். மனத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

கிருஷ்ண மூர்த்தி S said...

ஒரு கதாசிரியராக எஸ் ஏ பி எதையும் சாதித்துவிடவில்லை என்பது என்னுடைய தீர்மானமான அபிப்பிராயம் இதை முந்தின காலங்களிலேயே சொல்லியிருக்கிறேன். ஒரு இலக்கியப் பத்திரிகையாக ஆரம்பித்து, கொஞ்சகாலத்திலேயே ஒரு அச்சுபிச்சு பத்திரிகையாக மாறிக்கொண்டதில் குமுதம் சர்குலேஷன் அதிகரித்தது. அந்த அச்சுபிச்சுத்தனத்திலும் ஒரு வெரைட்டி இருந்தது. செட்டியாருக்கு, சொந்தசரக்கு இல்லாமல் போனாலும் சரக்கு இருந்தவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்ட சாமர்த்தியம் இருந்ததென்னவோ நிஜம்

ஜீவி said...

@ கிருஷ்ண மூர்த்தி

கதை சொல்வதில் எனக்கு மிகவும் பிடித்த நான் எழுதுவதற்கு பாடத்திட்டம் வகுத்து தந்த ஒரு தமிழ் எழுத்தாளரைப் பற்றி நன்றியோடு இங்கு நினைவு கூர்ந்திருக்கிறேன்.. உங்களுக்கு சொந்தச் சரக்கு இல்லாதவராகப் படுகிறவர் எனக்குப் பிரமாதமாகத் தெரிகிறார்.
இருவர் பார்வைகளிலும் வித்தியாசம். அவ்வளவு தானே? அதைச் சொல்வதில் ஏன் இவ்வளவு பதட்டம்?..

மனதை லேசாக வைத்துக் கொள்ளுங்கள், கிருஷ்ணமூர்த்தி சார்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

//எனக்கும் அப்படித் தோன்றும்!​//

ஆமாம். வாசகரை கன்வின்ஸ் பண்ணுகிற மாதிரி எழுதத் தெரிந்திருந்தால் கச்சிதமாக அந்த வேலை முடிந்து விடும். ஜெயகாந்தன் இந்த விஷயத்தில் மன்னன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

சுஜாதாவை 'கரையெல்லாம் செண்பகப்பூ' காலத்திலேயே சந்தித்திருக்கிறேன். டபுள் போனஸாக கூட உஷா சுப்பிரமணியனும் இருந்தார்.

உஷா.சு. மிகுந்த எழுத்து ஆளுமை உள்ளவர். அவரது 'மனிதன் தீவல்ல'-- டாப் ரகம்.

இரங்கல் கூட்டங்களில் என்ன பேசுவது என்பதே நம் எழுத்தாளர்கள் பலருக்கு குழறுபடி.
சுஜாதா இ.கூ.-வில் அசோகமித்திரன் அவர் வீட்டுக்குப் போன பொழுது காப்பி சாப்பிட்டதையும் அந்த காப்பியின் அருமை பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (3)

அப்படியே இல்லாவிட்டாலும் அதே கருத்தில் இன்னொரு கமெண்ட் போட முடியும்.
சில நேரங்களில் இரண்டாவதாகப் போடுகின்றா கமெண்டுகள் முன்னால் போட்டதை விட சிறப்பாக அமைந்து விடுவதுண்டு.

காமா சோமான்னு கமெண்டுகளைப் போட எனக்குத் தெரியாது. படித்தது பற்றி விசேஷமாக மாந்த்தில் பட்டது எதையாவது சொல்ல நினைப்பேன். என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாததா?..

ஜீவி said...

@ கெளதமன்

வாங்க, சார்! அத்தி பூத்தது. தங்கள் வருகைக்கு நன்றி. இந்தத் தொடரை முடிந்த பொழுதெல்லம் படித்து வர வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ கோமதி அரசு

வாழ்த்துக்கு நன்றி.

விஷயங்களைத் தெரிவிக்கிற சாக்கில் அவற்றில் இழையோடும் உள்ளார்ந்த பார்வையை வாசிப்பவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதே நோக்கம்.

வரும் அத்தியாயங்கள் அப்படியானவை.

ஜீவி said...

@ நடன சபாபதி

இது இரண்டாவது பத்திரிகைப் பிரசுரம். இதற்கு முன்னாலேயே எனது முதல் சிறுகதை கல்கண்டு இதழில் தமிழ்வாணனின் அங்கீகாரத்தில் பிரசுரமானது. அதைச் சொல்ல விட்டுப் போயிற்று. எங்காவது சமயம் பார்த்து அந்த விஷயத்தை சொருகி விடுகிறேன். :)

அட! காதலெனும் தீவினிலே படித்திருக்கிறீர்களா?.. ராதை, அவள் தங்கை குறும்பு யசோதா, அக்காள் அகிலாண்டம், அகிலாண்டத்தின் கணவர் வெங்கு மாமா,
நாயகன் வஸந்தன், அவன் நண்பன் செல்வந்தன் செல்வம், வஸந்தனின் அண்ணா சத்தியன், நயவஞ்சக நடராஜ், அவன் அண்ணன் ஷேக்பியரின் ஷைலக் போன்ற காசிலிங்கம், ஹபிபுல்லா எல்லோரும் நினவுக்கு வருகிறார்களா?

இந்த நாவலைத் திரைப்படமாக்க வேண்டுமென்று ஏவி.எம். மிகவும் விரும்பினார். எஸ்.ஏ.பி-க்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் அது. அவர் மேல் கொண்ட 'அன்பில் ஒன்றை விட்டுக் கொடுத்தால் இன்னொன்றை மீட்கலாம்' என்ற மனக்குரலில் நெகிழ்ந்து ஏவி.எம்.க்கு அதைச் சொல்ல முடியாமல் தவிக்கிறார் எஸ்.ஏ.பி.
நாவல் திரைப்படமாவதில் அவருக்கு விருப்பமில்லை என்பதைப் புரிந்து கொண்ட ஏவி.எம்.
'ஏதோ செண்டிமெண்ட் சமாச்சாரம்' என்று திரைப்பட எண்ணாத்தைக் கைவிடுகிறார்.

அந்த 'ஒன்றை விட்டுக் கொடுத்தால் இன்னொன்றை மீட்கலாம்' மனக்குரல் அவரது 'நீ' புதினமாக மலர்ந்திருப்பதை ஆழ்ந்து படிக்கும் பொழுது தெரிகிறது.

எழுத்தாளன் எப்பொழுதுமே நெகிழ்ச்சி நிறைந்தவன் தான்; அந்த நெகிழ்ச்சி மனப்பாங்கு தான் அவனை எழுத்தாளனாகவும் ஆக்கியிருக்கிறது என்ற நினைப்பு தான் மேலோங்குகிறது.

எஸ்.ஏ.பி.யின் நீ பற்றி வேறொரு சமயம் நான் எழுதியிருந்த குறிப்பு உங்கள் நினைவில் இருப்பதற்கு மகிழ்ச்சி சார்.

குமுதம் பற்றிய உங்கள் நினைவுகள் கிளர்ந்தெழுந்தது சுவாரஸ்யமான விஷயம். தொடர்ந்து வாருங்கள், ஐயா.

”தளிர் சுரேஷ்” said...

எஸ்.ஏ.பி யின் எழுத்துக்களை அவர் இறந்த பிறகு குமுதத்தில் மறுபிரசுரம் ஆனபோது வாசித்து இருக்கிறேன்! காதெலெனும் தீவினிலே, சின்னம்மா போன்றவை 90களில் குமுதத்தில் மறுபிரசுரம் ஆனது. அப்போது நான் பிளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்த காலம். அதனால் மனதில் பதியும் அளவிற்கு வாசிப்பு இல்லை. இந்த நாவல்களை மீண்டும் வாசிக்கவேண்டும். எனக்கும் எஸ்.ஏ.பி எழுத்துக்களில் ஒரு லயிப்பு உண்டு. நன்றி!

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

அப்படியா?.. நீங்கள் குறிப்பிட்டிருக்கிற எஸ்.ஏ.பி-யின் படைப்புகள் மறு பிரசுரம் ஆயிற்றா?
எனக்கு இது புதுச் செயுதி. ரா.கி.ரா, ஜ.ரா.சு., புனிதன் இந்த முக்கூட்டுக் குழுக்கு தலைமை தாங்கி எஸ்.ஏ.பி-- இவர்கள் இல்லாத குமுதம் எனக்கு சுவாரஸ்யப்படவில்லை.
அதனால் அந்தப் பத்திரிகையுடன் தொடர்பு விட்டு பல காலம் ஆயிற்று.

உங்களுக்கும் எஸ்.ஏ.பி.யின் எழுத்துக்களில் லயிப்பு உண்டு என்று அறிவதில் மகிழ்ச்சி, சுரேஷ். தொடர்ந்து வாருங்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

உங்களின் பத்திரிகை அனுபவங்கள் பலவும் வியக்க வைக்கிறது!.

எனக்கும் பத்திரிகைகள் அலுவலகம் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது வீட்டுக்குத் தெரியாமல் கதை, கவிதை எழுதி அனுப்பி சிலது திரும்ப வரும் சிலது திரும்ப வராது ஆனால் அப்படி ஆனந்தவிகடன் அப்போது நிகழ்ந்த சட்டசபை அசிங்கத்தை வைத்துக் கவிதைப் போட்டி ஒன்று வைத்திருந்தது அதற்கு எழுதி அனுப்பிட, நான் எழுதிய கவிதை வேறொருவர் பெயரில் பிரசுரமாகி பரிசும் பெற்றது.அதன் பின் நான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை...ஒரு வேளை அந்த வேறொருவரும் என்னைப் போலவே எழுதி அனுப்பியிருந்திருப்பாராயிருக்கலாம்...ஆனால் அப்போது ஏமாற்றம் பெருமளவில்...

இதெல்லாம் விட்டிற்குத் தெரியாமல் லைப்ரரியில் இதழில் போட்டி பற்றி பார்த்து எழுதியது. லைப்ரரியில் கூட எப்போதும் இதழ்கள் எல்லாம் தொடர்ந்து வாசிக்கவும் முடியாது.

உங்கள் அனுபவங்கள் வாசிக்க வாசிக்க எனக்கு மிகவும் ஸ்வாரசியமாகவும் இருக்கிறது ரசித்து வாசிக்கிறேன் அண்ணா.

உங்கள் கட்டுரைக்குப் பரிசு கிடைத்தது மகிழ்ச்சி.

கீதா

Related Posts with Thumbnails