மின் நூல்

Tuesday, April 30, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                       18


வாழ்க்கையில் நிறைய நட்புகள் அந்தந்த  காலகட்டங்களில் குறுக்கிடலாம்.  அந்நியோன்யமாகப் பழகலாம்.  ஆனால் இளம் வயதில் யாராவது ஒருவரிடம் கொள்ளும் நட்பு மட்டும் காலாதிகாலத்திற்கு  வாழும் ஒரே நட்பாக அமையும்.  அந்த நண்பர்களுக்குள் அடிக்கடி பேசிக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை; ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற தேவையுமில்லை.. நீண்ட கால இடைவெளி கூட அந்த நட்பை ஒன்றும் செய்து விட முடியாது...  எப்பொழுது   வேண்டுமானாலும் ஒருத்தரை ஒருத்தர்  பார்த்தாலும், பேசினாலும்  இல்லே இந்த ரெண்டுமே இல்லேனாலும் அந்த நட்பு வாடாமல் வதங்காமல் என்றும் துளிர்த்த நிலையிலேயே பச்சைப் பசுமையாக இருக்கும் ' என்று காண்டேகர் சொல்லுவார். 

வாழ்க்கையில் ஒரே ஒருத்தர் இடத்தில் தான் இப்படியான அந்தப் பரஸ்பர நட்பு ஏற்படுமாம்.  காண்டேகர் சொல்வது சரி தானா?.. உங்கள் அனுபவத்தில் யோசித்துப் பார்த்துச்  சொல்லுங்கள்..

காண்டேகர் சொன்ன மாதிரி எனக்கமைந்த நண்பன்  ரகுராமன்.   பாரதி வித்தியாலயா பள்ளியில் இருவரும் ஒன்றாகப் படித்தோம்.   ஜிப்மரில் பணியாற்றி ஓய்வு பெற்று இப்பொழுது புதுவையில் இருக்கிறான். திடீரென்று ஃபோன் பண்ணி, "எப்படிடா இருக்கே?" என்று எங்களில் யாராவது ஒருவர் கேட்டால் போதும். நேற்று தான் பேசி விட்ட இடத்தில் தொடர்கிற மாதிரி பேச்சுத் தொடரும்;  பாசம் பொங்கும்.  மனைவி, மக்கள், குடும்பம் என்று பின்னால் ஏற்பட்ட பந்தங்களுக்கு முன்னால் ஏற்பட்ட அந்த உறவில் என்றும் பங்கம் ஏற்பட்டதில்லை.

சேலத்தில் ரகுராமன் பீஷர் காம்பவுண்டு பக்கத்திலிருந்த இரத்தினம் பிள்ளை வளாகத்தில் குடியிருந்தான்.  ராஜாஜி பிறந்த ஊரில் பிறந்தவன்.   நாங்கள் இரண்டு பேருமே அந்தக் காலத்தில் எஸ்.ஏ.பி.யின் எழுத்துப் பைத்தியங்கள்.  எனது நிறைய கதைகளில்  ரகுராமன் என்று கதை மாந்தருக்குப் பெயர் வைத்திருக்கிறேன்.   நல்லதோ,  கெட்டதோ நிறைய விஷயங்களை கதைகளில் அவன் தோளில் ஏற்றிச் சொல்லியிருக்கிறேன்.

திடீரென்று ஒரு நாள் போன் பண்ணி, "இன்னுமாடா எழுதிண்டு இருக்கே?" என்று ஆச்சரியத்துடன்  கேட்டான்.    நிறைய வாசிக்கத் தொடங்கி, ஆங்கில நாவல்களில் மனம் புதைந்து.. புதைந்து..  எழுதுவதையே நிறுத்தி விட்டான்.

"ஏண்டா  நிறுத்திட்டே?" என்று இரண்டு வருஷங்களுக்கு முன் ஒரு நாள் கேட்டேன்.

"ப்ச்.. என்னத்தைச் சொல்றது?.. ஏதோ நிறுத்திட்டேன்.." என்று விட்டேர்த்தியாக பதில் சொன்னான்.

"எப்படிடா நிறுத்திட்டே?.." என்று அடுத்த கேள்வியை அடக்க மாட்டாமல் கேட்டேன்.

"இங்கிலீஷ் நாவல் நிறையப் படிச்சேன்டா.  சாப்பிட்டுட்டு ராத்திரி 9 மணிக்கு ஆரம்பிச்சா  ரெண்டு, ரெண்டரை ஆயிடும்.. முடிக்காம தூக்கம் வராது.  படிக்க படிக்க.. என்னத்தைடா சொல்றது?.. நாமல்லாம் என்ன எழுதறோம்ன்னு ஆயிடுச்சு..  சத்தியமா சொல்றேண்டா.  நாமல்லாம் ஜீரோடா..   அந்த உண்மை உறைத்ததும் என்னாலே எழுத முடிலேடா..."

"சாவி இருந்த காலத்திலே நீ குங்குமத்திலே எழுதினதெல்லாம் இன்னும் நெனைப்புலே இருக்குடா.. நீயே ஒன்னைக் குறைச்சு மதிப்பிடற மாதிரி இருக்கு.."

"நோ..." என்று ஆவேசமாக மறுத்தான்.  "நாமெல்லாம் உண்மைக்கு ரொம்ப விலகியிருந்து பாசாங்கா நிறைய எழுதறோம்டா.  பட்டவர்த்தனமா  கதைலே கூட எதையும் யாரையும்  எதுவும் சொல்ல முடியாத நிலைடா இங்கே.  அங்கேலாம் அது இல்லேடா.. எழுத்துன்னா அதுலே சத்தியம் இருக்கணும்.. அது இல்லாத பட்சத்திலே..  ஆல்ரைட்.. விட்டுத் தள்ளு.." என்று சர்வ சாதாரணமா அந்த டாபிக்கையே கத்தரித்து விட்டான். .

ரகுராமனால் முடிந்தது நம்மால் முடியவில்லையே என்ற நினைப்பு தான் இப்பொழுதும் ஓங்கியிருக்கிறது.

சைக்கிள் விடக் கற்றுக் கொண்ட ஆரம்ப காலத்தில்  குரங்கு பெடல் தான்.    சீட்டில் உட்கார்ந்து பழக ஆரம்பித்த போது ரகுராமன்  தான் பின்னாலேயே   பாதுகாப்பாக ஓடி வருவான். ஓரளவு எதிரில் வருபவர் மீது மோதாமல் வளைத்து  ஹேண்டில் பாரை ஒடைக்கத் தெரிந்து பாலன்ஸ் கிடைத்ததும்
ஒரு நாள் திடீரென்று "ஏற்காடு போகலாமா?" ஏன்று என்னைக் கேட்டான்.

"ஏற்காடா? எப்போடா?"

"நாளைக்குத் தாண்டா..  காலம்பற சைக்கிளை   எடுத்திண்டு வந்திடு.   சாயந்தரத்துக்குள்ளே திரும்பிடலாம்.."

"சைக்கிள்லேயா?.. இப்பத்தானேடா விடவே கத்திண்டிருக்கேன்?.. மலை மேலே போக முடியுமாடா?' பயந்தேன்.

"உன்னாலே முடியும்டா.." என்று அபயக்கரம் நீட்டினான் ரகுராமன்.

அடுத்த நாள் அதிகாலைலேயே வீட்டில் ஏதோ சாக்குபோக்கு சொல்லி விட்டுக் கிளம்பி  விட்டேன்.  இன்னொரு சைக்கிளில் ரகுராமன்.  மலைலே கொஞ்ச தூரம் கூட என்னாலே சைக்கிள்லே ஏற முடிலே. அநியாயத்திற்கு ஹேண்டில் பார் ஒரு பக்கம் ஒடிந்தது.   தொடக்கத்தில் பத்தடி பள்ளத்தைப் பார்த்தாலே பயமாக இருந்தது.

"டே.. இது ரிஸ்க்குடா..."
                                                                                                                         

"ஒரு மண்ணும் இல்லே.." என்று மறுத்தான் அவன்.

அதற்கு மேல் மலை ஏற சைக்கிளும் மனமும் ஒத்துழைக்க வில்லை.

"பேசாம தள்ளிண்டு வா.." என்று சொல்லி விட்டு அவனும் என்னோடையே தன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தான்.

பின் பக்கமோ, எதிர்த்தாற்போலவோ வண்டி ஏதாவது வந்தால் ஒதுங்கிக் கொண்டு வண்டி போனதும் சைக்கிளைத் தள்ளிக் கொண்டே... வழியில் பயங்கர தண்ணீர் தாகம்.  வேர்த்து வழிய  ஒரு மதகடியில் உட்கார்ந்து விட்டேன்.

மலையிடுக்குகளில் சுனை நீர் வழிகிறது.  கையைக் குவித்து குடிக்க முடியவில்லை.  கடைசியில் ரகு தான்    அதற்கு ஒரு வழி கண்டு பிடித்தான்.  சைக்கிள் பெல் கப்பைக் கழட்டினான்.   சுனைநீர் வழியற இடத்தில் ஒட்டிப் பிடித்தான். கப் கொஞ்சம் கொஞ்சமாக நிறைந்ததும், "குடிடா.." என்று என்னிடம் கொடுத்தான்.  தானும் அந்த மாதிரியே குடித்தான்.

"போலாமா?.."

"உம்.."

சைக்கிளைத் தள்ளியபடியே ஏற ஏற ஹேர்பின் பெண்டுகள் வளைந்து கொண்டே இருந்தன.  ஈ காக்காய் இல்லை.  ஹோவென்றிருந்தது.   கொஞ்ச தூரம் போனதும், "சைக்கிள்லே ஏறி மிதிடா.." என்றான்.

ஏறினேன். மிதித்தேன். அவனும் கூட வந்தான்.  இப்பொழுது காலுக்கு பெடல் பழக்கப்பட்ட மாதிரி இருந்தது.  ஹேண்டில் பாரை இறுகப் பற்றிக் கொண்டு வண்டி சாய்ந்து விடாமல் பேலன்ஸ் பண்ணி மிதித்தேன்.   மலையின் கீழ்ப் பக்கமோ, மேல் பக்கமோ ஏதாவது வண்டி-- லாரி வர்ற  சத்தம் கேட்டால் டக்கென்று  சைக்கிளிலிருந்து இறங்கி ஓரமாக ஒதுங்கிக் கொள்வோம்.   சில்லென்று காற்று வீசுகிற சூழ்நிலை  உற்சாகமாக இருந்தது.  அதற்கடுத்து பத்தே நிமிடங்களில் மலையின் மேல் பகுதிக்கு வந்து ஏரிக்கு வந்து  விட்டோம்.

ரகுராமன் அவன் வீட்டில் கொடுத்து காசு எடுத்து  வந்திருந்தான்.  ஏரிக் கரையில் ஆரஞ்சுப் பழம் வாங்கினான்.  அப்புறம் கொய்யா. அதற்கப்புறம் மாண்ட் போர்ட் ஸ்கூல் பக்கத்திலே சப்போட்டா.  ஏற்காட்டில் இரண்டு மணி நேரம் இருந்திருப்போம்.

"போலாமாடா?"  எதையும் தீர்மானிப்பது அவன் தான்.

எனக்கும் சீக்கிரம் மலையிறங்கி அடிவாரத்திற்குப் போய் விட்டால் நல்லது என்றிருந்தது.  எப்படிப் இறங்கப் போகிறோமோ என்ற மலைப்பில் விளைந்த எண்ணம் அது.

ஏரி  தாண்டி வந்தோம்.  மலையிலிருந்து இறங்கற வளைவில், "சைக்கிளில் ஏறிக்கோ.." என்றான். "பிரேக்கை இறுக்கமா பிடிச்சிண்டா போதும்.  சைக்கிள் நகர்ற அளவில் வைச்சுக்கோ.  வளைவில் மட்டும் பாத்து குறுக்கமா திரும்பாம அகலமா திரும்பற மாதிரி பாத்துக்கோ.  எதிர்த்தாற் போலேயோ, பின்னாடியோ லாரி வந்தா பிரேக் பிடிச்சு ஒதுங்கிக்கோ.  முடிலேனா இறங்கிக்கோ.  நான் பின்னாடியே வர்றேன்.. பயப்படாதே.." என்று தைரியம் கொடுத்தான்.

என்ன மாயமோ தெரிய வில்லை.  இருபதே நிமிஷத்தில் அடிவாரம் வந்து விட்டோம்.  பாதி  தூரத்தில் வழியில் ஒரே ஒரு லாரி மட்டும் பின்னாடி ஹாரன் அடிச்சு மெதுவாத் தாண்டி எங்களைக் கடந்தது.

கீழே வந்ததும்  மலையை நிமிர்ந்து பார்த்த பொழுது,  நாமா மேலே ஏறி கீழே  அதுவும் சைக்கிளில் இறங்கி வந்தோம் என்றிருந்தது.

"அவ்வளவு தாண்டா..  இதுக்கு போய் என்னவோ யோசிச்சையே?  பூச்சி பூச்சின்னா ஒண்ணும் வேலைக்கு  ஆகாது..  துணியணும்.. துணிஞ்சு இறங்கணும்.  என்னாயிடப் போறது?" என்றான் ரகுராமன்.    "இனிமே டவுன்லே எங்கே வேணா நீ சைக்கிள் ஓட்டலாம்.  அதான் ஏற்காடு மலைலேயே ஏறி இறங்கிட்டியே?" என்றான் அவன் சிரித்துக் கொண்டே.

இன்னொரு தடவை இந்த ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று என் மனம் மட்டும் என்னிடம் லேசா கிசுகிசுத்தது.  நானும் சிரித்துக் கொண்டேன்.

(வளரும்)


                  அனைவருக்கும்  மே தின  வாழ்த்துக்கள்.

19 comments:

கோமதி அரசு said...

//அவ்வளவு தாண்டா.. இதுக்கு போய் என்னவோ யோசிச்சையே? பூச்சி பூச்சின்னா ஒண்ணும் வேலைக்கு ஆகாது.. துணியணும்.. துணிஞ்சு இறங்கணும். என்னாயிடப் போறது?" என்றான் ரகுராமன்.//

தன்னம்பிக்கை, துணிச்சல் தந்த நண்பர் வாழ்க!
நல்ல நண்பர் கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

வே.நடனசபாபதி said...

//வாழ்க்கையில் ஒரே ஒருத்தர் இடத்தில் தான் இப்படியான அந்தப் பரஸ்பர நட்பு ஏற்படுமாம். காண்டேகர் சொல்வது சரி தானா?.. உங்கள் அனுபவத்தில் யோசித்துப் பார்த்துச் சொல்லுங்கள்.//

எனக்கும் தங்களுக்கு திரு ரகுராமன் என்ற நண்பன் இருப்பது போல, என்னோடு 9ஆம் வகுப்பிலிருந்து எஸ்‌எஸ்‌எஸ்‌எல்‌சி வரை படித்த நண்பன் கிருஷ்ணன் உண்டு. (என்ன பெயர் பொருத்தம் பாருங்கள் ராமன் கிருஷ்ணன் என்று) இருவரும் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு அவனுக்கு மட்டும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து படித்து மருத்துவராகி அரசு வேலைக்குப் போகாமல் சொந்த ஊரிலேயே குழந்தைகளுக்கு மருத்துவம் பார்த்து பிரபல மருத்துவராக 50 ஆண்டுகள் பணியாற்றி தற்சமயம்கோவையில் மகன் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கிறான். நாங்களும் எப்போதாவது பேசிக்கொள்வதுண்டு. ஆனாலும் எங்கள் நட்பு அதே நிலையிலேயே இருக்கிறது.

நம்முடைய எழுத்துபற்றி திரு ரகுராமனின் கருத்து ஒத்துக்கொள்ளவேண்டிய ஒன்று. ஆனால் எழுதுவதை நிறுத்த அவரால் முடிந்தது. எல்லோராலும் முடியாது என்பது தான் உண்மை.

சைக்கிள் சரியாக ஓட்ட பழகாமல் 20 கொண்டை ஊசி வளைவுகள் (Hairpin Bends) உள்ள ஏற்காடு மலைக்கு சைக்கிளில் சென்ற உங்கள் துணிவைப் பாராட்டவேண்டும். திரு ரகுராமன் ‘உயிர் கொடுப்பான் தோழன்’ என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறார்.

தொடர்கிறேன்.

G.M Balasubramaniam said...

/ "நாமெல்லாம் உண்மைக்கு ரொம்ப விலகியிருந்து பாசாங்கா நிறைய எழுதறோம்டா. பட்டவர்த்தனமா கதைலே கூட எதையும் யாரையும் எதுவும் சொல்ல முடியாத நிலைடா இங்கே. அங்கேலாம் அது இல்லேடா.. எழுத்துன்னா அதுலே சத்தியம் இருக்கணும்.. அது இல்லாத பட்சத்திலே.. ஆல்ரைட்.. விட்டுத் தள்ளு.." என்று சர்வ சாதாரணமா அந்த டாபிக்கையே கத்தரித்து விட்டான். ./படித்ததில் ரசித்தது

Bhanumathy Venkateswaran said...

காண்டேகர் சொன்னதை ஒப்புக்கொள்கிறேன்.

சைக்கிளில் ஏற்காடு மலை ஏற்றமா? வாவ்! இப்போது சைக்ளிங் கிளப் என்று உறுப்பினர்கள் இந்த மாதிரி சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். எங்கள் மாப்பிள்ளை ஒரு முறை அந்த குழுவோடு முன்னார் மலை ஏறினார். அதற்கான சைக்கிள் தனி.

ஜீவி said...

@ கோமதி அரசு

வாங்க, கோமதிம்மா. அங்கங்கே ரகுராமன் வருவார். நீங்கள் ரசிப்பீர்கள்.
தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

ஜீவி said...

@ நடன சபாபதி

உங்கள் நண்பர் திரு. கிருஷ்ணன் அவர்களை உங்கள் வார்த்தைகளில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. காண்டேகருக்கும் நன்றி. இது மிகவும் நுணுக்கமான விஷயம். ஒரே அலைவரிசையில் யோசித்திருக்கிறீர்கள்.

இத்தனை அத்தியாயங்கள் வரை ரகுராமனுக்காகக் காத்திருந்ததே தப்பு. இன்னும் தள்ளிப் போய்விடக்கூடாது என்று தான் நடுவில் சொல்லி விட்டேன். இனி அவர் பாட்டுக்க உள்ளே வருவார்; போவார். எவர் வெல்கம் பர்சன்!

தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.


ஜீவி said...

@ ஜிஎம்பீ

படித்ததில் ரசித்தது.-- மறுபடியும் வார்த்தைச் சிக்கனமா?.. என்னாலெல்லாம் இப்படி சுருக்கமாகப் பின்னூட்டம் போட முடியவில்லையே, ஐயா. வாசித்து வருவதற்கு நன்றி.

நெல்லைத்தமிழன் said...

//வாழ்க்கையில் ஒரே ஒருத்தர் இடத்தில் தான் இப்படியான அந்தப் பரஸ்பர நட்பு ஏற்படுமாம்// - அட... நான் எனக்கு மட்டும்தான் அப்படியான 'ஒரு நபர் நட்பு' இருக்குன்னு நினைத்தேன். என் நண்பன் என்ன நினைத்தான் என்பது தெரியலை. அவன் ஒருவனுக்குத்தான் நான் பிறந்த நாள் வாழ்த்தெல்லாம் சொல்லுவேன். கணிணிப் படிப்பு சென்னைல படிக்க ஆரம்பித்ததில் ஏற்பட்ட நட்பு. எங்கள் இருவரையும் இந்தத் துறையில் வளர்த்துவிட்டவர் ஒருவரே.. என் மனைவி பிறந்த நாள் மறந்தாலும் அதே மாதத்தில் அவனை வாழ்த்த மறந்ததில்லை.. இருவரும் சிலவருட இடைவெளியில் வெளிநாடு சென்றோம்... வாழ்ந்தோம்.. நிறைய தடவைகள் சந்தித்தோம்.. அவனுக்கு என் கையால் விருந்து படைத்திருக்கிறேன்... அவனுடைய வருத்தங்கள் எல்லாம் பகிர்ந்துகொண்டிருக்கிறான். அவன் சில வருடங்களுக்கு முன்பு இறந்தவுடன், அவனுடைய கம்பெனியின் டைரக்டர்களுக்கு 'இரங்கல் மெயில்' படங்களுடன் அனுப்பும் அளவு எங்கள் நட்பு ஆழ்ந்திருந்தது.... ஒரே துறை.... கிட்டத்தட்ட ஒரே 'துறைத் தலைவர்' வேலை எங்கள் இருவருக்கும்.... இப்போது இருப்பது ஏராளமான காணொளிகள் புகைப்படங்கள் மட்டும்தான்.

நெல்லைத்தமிழன் said...

இன்றைய உங்கள் இடுகை, என் நண்பனைப் பற்றி நிறைய நினைக்கவைத்துவிட்டது.. என்ன என்னவோ மனம் எழுதத் துடிக்கிறது.... அவன் இப்போ இல்லை.. வாழ்வின் கஷ்டம், செளகரியம், இளமைத் துடிப்பு என எல்லாவற்றையுமே நாங்கள் பகிர்ந்துகொண்டிருந்தோம். அவன் 'தவறுகள்' செய்திருந்தாலும் எப்போதும் என்னைத் தவறுகள் செய்யவிட்டதில்லை.

88ல் வெங்கட்நாராயணா சாலைக்கு அருகில் நாங்கள் இருவரும் 'என்னடா... நம்ம லைஃப் எப்படி இருக்கும்னு தெரியலையே... இப்படியே சாதாரணமாக இருந்துவிடுவோமோ' என்று நான் அவனைக் கேட்டுக்கொண்டு நடந்துவந்தபோது, பின்னாலிருந்து ஒரு பெரியவர் வந்தார்.. 'கவலைப்படாதீங்க... வாழ்க்கைல நல்லாவே இருப்பீங்க' என்று சொல்லிவிட்டுச் சென்றார் (அவர் ரிடையர் ஆன பெரியவர்). அது அன்றைக்கு எனக்கு எவ்வளவு உத்வேகம் கொடுத்தது என்பதை எழுத்தில் சொல்லமுடியாது.

நாங்கள் இருவரும், கனவு காணாத உச்சத்துக்கு (எங்களைப் பொறுத்தவரையில்) சென்றோம்.. சந்தோஷமாக வாழ்ந்தோம்...

G.M Balasubramaniam said...

என் கருத்துகளோடு ஒத்துப்போகிறமாதிரி தோன் றியதால்ரசித்தேன் போலும்

வல்லிசிம்ஹன் said...

ஏற்காடு அனுபவம் நல்ல படிப்பினை. ஆழ்ந்த நட்புக்கு அடையாளம்.

பல தோழமைகள் வந்து போயிருக்கிறார்கள்.இப்போதும் இருக்கிறார்கள்.
என்னை முழுதும் உணர்ந்த சினேகிதர் என்றால் என் கணவரைத்தான் சொல்வேன்.

அடுத்தது என் தம்பிகள்.
உங்கள் நண்பர் ரகுராமன் நன்றாக இருக்க வேண்டும்.
அருமையான அனுபவம் .

ஜீவி said...

@ ஜிஎம்பீ

ஒத்துப் போகாததைக் கூட அதை வெளிப்படுத்திய நேர்த்தியில் லயித்து ரசிக்கலாம், ஜிஎம்பீ சார்! நீங்கள் அனுபவித்ததில்லை, போலிருக்கு. சொல்லப் போனால் அந்த ரசனை தான் அலதியானது! :))

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

காண்டேகரை நினைத்தாலே இலட்சியவாத கதாபாத்திரங்கள் மனத்தில் உலா வருகின்றன.
அவர் வார்ப்பில் யயாதி வாசித்திருக்கிறீர்களா, பானும்மா?..

கா.ஸ்ரீ.ஸ்ரீ. இல்லையேல் தமிழில் காண்டேகர் இல்லை. அண்ணன்--தம்பி போல மனப் பிம்பங்கள். கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும் இன்னொரு காண்டேகராக உலா வந்ததால் தான் இதெல்லாம் சாத்தியமாயிற்று என்று நினைத்துக் கொள்வேன்.

நான் சைக்கிள் விட கற்றுக் கொண்ட நேரத்தில் மலை ஏற்றம் நிகழ்ந்ததால் அந்த உதறல் இருந்தது. ரகுராமன் சொன்ன மாதிரி அந்த நிகழ்வு எந்த சந்து பொந்திலும் சைக்கிள் விடுவதை அப்புறம் சுலபப்படுத்தியது. அந்த சைக்கிள் கேரியரில் தான் மாதவி சேலம் பூராவும் பவனி வந்தாள்!..

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

அந்த 'ஒரு நபர் நட்பு' பரஸ்பரம் இருவர் பக்கமும் இருக்க வேண்டும் என்பது காண்டேகரின் முக்கியமான கண்டிஷன்.

நானும் நிறையப் பேரிடம் இது பற்றி விசாரித்திருக்கிறேன். யோசித்துப் பார்த்து விட்டு
"ஆமாம். சார்! நீங்கள் சொல்றது உண்மை.." என்று சொல்லியிருக்கிறார்கள்.

இன்னொண்ணு. குறிப்பாக இந்த ஒரு நபர் நட்பு நம் இளமையில் வாய்ப்பதாக இருக்கும் என்பது பலர் சொல்லி உறுதியாயிற்று.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

என் ஆருயிர் நண்பனை வாழ்த்தியதற்கு நன்றி, வல்லிம்மா.

நண்பன் என்பதை விட சிநேகிதன் என்ற வார்த்தை இன்னும் நெருக்கத்தைக் கூட்டுவதாக எனக்குப் படுகிறது. சரியா?..

//பல தோழமைகள் வந்து போயிருக்கிறார்கள்..//

பசுமை நிறைந்த நினைவுகளே! பாடித் திரிந்த பறவைகளே!
பழாகிக் களித்த தோழர்களே! பறந்து செல்கின்றோம்...

ஜீவனுள்ள வரிகள். என்றும் உயிர் வாழும்.

ஸ்ரீராம். said...

சைக்கிள் கற்றுக்கொண்ட உடனேயே மலை ஏறி இறங்கியது பெரிய அனுபவம். நண்பன் வாய்க்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

Thulasidharan V Thillaiakathu said...

காண்டேகர் சொன்னது போன்ற நட்புகள் ஒன்று என்றில்லையே! பல.

உங்கள் நண்பர் மெய்யாலுமே ரொம்ப தைரியசாலி! நல்ல நட்பு. இப்படியான நல்ல ஊக்குவிக்கும் நட்பு எல்லாம் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் நண்பரை ரசித்தேன்.

கீதா

ஜீவி said...

@ ஸ்ரீராம்

இந்த நணபனுக்கு அந்த நண்பன், அந்த நண்பனுக்கு இந்த நண்பன் என்று உருவாக வேண்டும். கடைசியில் நண்பன் என்பதே மாயமாகி கூடப் பிறந்த உறவாக நிலைத்து விடும்.

ஜீவி said...

@ தி. கீதா

அப்படி பலவற்றுள் ஒன்று மட்டும் நிலைத்த நட்பாய் நட்சத்திர்மாய் ஒளிவிடும் என்கிறார்
காண்டேகர்.

அப்படி ஒன்றை உணர முடியவில்லை என்றால் அப்படியான நட்பு இன்னும் வாய்க்கவில்லை என்று அர்த்தம்.

Related Posts with Thumbnails