மின் நூல்

Monday, June 3, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                            31



து இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்ற  பெயரில் இந்தி எதிர்ப்புக்கான காரணங்கள் கனன்று  கொண்டிருந்த  காலம்.    அடிக்கடி பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.  நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்த சோஷலிஸ்ட்  கட்சியைச் சார்ந்த மதுலிமயே என்ற தலைவர்   குமாரபாளையத்தில் நடந்த கூட்டம் ஒன்றில்   பேசுவதற்காக வந்திருந்தார்.  அந்நாட்களில்  பெருந்தலைவர் லோகியா அவர்களின் இயக்கமான சோஷலிஸ்ட் கட்சியின் கிளைகள் தமிழகத்திலும் வேரூன்றி இருந்தன.  ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கு சிம்ம சொப்பனமாக நாடாளுமன்றத்தில் திகழ்ந்த கட்சியாகவும் சோஷலிஸ்ட் கட்சி இருந்தது.   இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி, ஜார்ஜ் பெர்ணாண்டஸ் எல்லோரும் இந்தக் கட்சியின்  உறுப்பினராய் தான் நாடாளுமன்றத்தில் செயலாற்றினார்.     இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடுபவர்ககளில் ஒருவராக அந்நாட்களில்   மதுலிமயேயும் அறியப் பட்டிருந்ததால்  அழைத்து  வரப்பட்டதாகத்  தெரிய வந்தது.                                 

மதுலிமயே அவர்கள் தனது பேச்சை இந்தியில் ஆரம்பித்த பொழுது  கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.   எதற்காக சலசலப்பு என்று  அவர் பேச்சை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளரிடமிருந்து  தெரிந்து  கொண்ட அவர்,  உடனே மன்னிப்பு கோரினார்.                                               

தொடர்ந்து இந்தியிலேயே பேசிய   அவரது  பேச்சை மொழிபெயர்த்தவர்  வாயிலாகத் தான் அவர் இந்தியில் பேசுவதற்கான காரணமும் கூட்டத்தினருக்குத் தெரிய வந்தது.

மொழிபெயர்த்தவர்  சொன்னது இது தான்:

"என் தாய்  மொழி மராத்தி.   இந்தக் கூட்டத்தில் எனது மராத்தி பேச்சை மொழிபெயர்ப்பவர் கிடைத்தால் மராத்தி மொழியிலேயே பேசுவேன்.  அது எனக்கு மிகவும் செளகரியமானது;  பெருமை அளிப்பதும் கூட.

அடுத்து  எனக்குத்  தெரிந்த மொழி ஆங்கிலம்.  150  ஆண்டுகள் நம்மை அடிமைபடுத்தி நம் தேசத்தை ஆண்ட அந்நியரின் மொழி அது.  என் தாய்நாட்டு மக்கள் கூடும் பொதுக்கூட்டங்களில் அந்த மொழியில் பேச மாட்டேன் என்று உறுதி  பூண்டுள்ளேன்.   வேறு வழியில்லாத பொழுது தனிப்பட்ட பேச்சு வார்த்தைகளில் அந்த மொழியை நான் உபயோகிக்கிறேன்.  ஆனால் பொதுக் கூட்டங்களில்  அந்த மொழியைப் பேசுவதில்லை  என்று உறுதி பூண்டிருப்பதால் -- மன்னிக்கவும்,  அந்த மொழியை இங்கு உபயோகிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.   நம் நாட்டு ஒரு மொழியின் திணிப்பையே நாம் எதிர்க்கும் பொழுது  அந்நிய  மொழியில் பேசுவதை நீங்களும் விரும்ப மாட்டீர்கள் என்பதை நானும் புரிந்து கொள்கிறேன்.

அடுத்தபடியாக எனக்குத்  தெரிந்த மொழி ஹிந்தி.   ஹிந்தித் திணிப்பைத் தான் நாம் எதிர்க்கிறோம்  என்பதினால் ஹிந்தியில் தொடர்ந்து பேச நீங்கள் என்னை அனுமதிப்பீர்கள் என்று நினைக்கிறேன். ..."  என்று அவர் இந்தியில் பேசியது மொழிபெயர்க்கப் பட்ட பொழுது  மக்கள் கைதட்டி அதை வரவேற்றனர்.

அநேகமாக இந்தித் திணிப்பு எதிர்ப்பு காலத்தில் தமிழகத்தில் இந்தி மொழியில் பேசப்பட்ட கூட்டங்கள் மதுலிமயேயின் கூட்டங்களாகத் தான்  இருக்கும் என்று நினைக்கிறேன்.

மதுலிமயே மாதிரி ஆங்கிலம்   தெரிந்திருந்தும்   சில காரணங்களுக்காக  ஆங்கில மொழியில் பேசாத வட இந்தியத்   தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் எனக்குத்  தெரிய வந்தது..

பொது  நிகழ்வுகளில்  ஆங்கிலத்தை உபயோகிப்பதில்லை என்று மதுலிமயே பூண்ட உறுதியும்,  அதற்காக காரணமும் அந்த வயதில் என்னை வெகுவாகக் கவர்ந்தது..  இந்த காரணத்திற்காகவே அந்தக் கூட்டம் முடிந்ததும்  காத்திருந்து அவர் மேடையிலிருந்து இறங்கி வந்ததும் ஆங்கிலத்தில் அவருடன் அளவளாவி  எனது  ஆட்டோகிராஃபில் அவர் கையெழுத்தைப் பெற்றேன்.

குமாரபாளையம் தபால் அலுவலகத்தில்  எனது  மனதுக்கு இசைவாக  பொழுது போய்க் கொண்டிருந்தது..    மூன்று வேளையும் தவறாமல் ராமாஸ் கேப் தான்.   கல்லா பெட்டியில்  இளம் வயது என்றாலும் கொஞ்சம் குண்டாக
உட்கார்ந்திருக்கும் ஓட்டல் முதலாளி  என்னைப் பார்த்ததும்  சின்னதாக புன்னகைக்காமல்   இருந்ததில்லை.  அப்படி ஆரம்பித்தது தான்;   நாளாவட்டத்தில்  உற்ற தோழனாரானார்.

அந்நாட்களில் கல்கண்டு  பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன் உள்ளங்கை கைரேகைகளைப் பார்த்து  பலன் சொல்லும் சாத்திரம்  பற்றி விரிவாக தனது பத்திரிகையில் ஆராய்ச்சி  கட்டுரைகளை    எழுதிக் கொண்டிருந்தார்.  தொடர்ந்து    அந்தக் கட்டுரைகளை ஆழ்ந்து வாசித்து வந்ததால் எனக்கும் அந்த பித்து பிடித்துக் கொண்டது.

ஒருநாள் ராமாஸ் கேப்  அந்த இளம் வயது எனது நண்பரின் கைரேகையை மேலோட்டமாகப் பார்த்து திடுக்கிட்டுப் போனேன்.  அவர் வலது கை ரேகை ஓட்டத்தில்  குறிப்பிட்ட இடத்தில் தீவுக் குறி இருந்தது.  நண்பரின் மேல் எனக்கு இருந்த அபிமானம்  அந்தக் குறிக்கான நேரடியான பலனைச் சொல்லாமல் எதிர்மறையாக மறைத்துச் சொல்ல வைத்தது.  இருந்தாலும்  தினம் தினம் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்தத் தீவுக்குறி நினைவுக்கு வந்து மனசை வாட்டும்.

பிற்காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்த பொழுது  மாலைப் பொழுது சாய்ந்த முன்னிரவு நேரத்தில் மேற்கு ராஜவீதியின் தலைப்பகுதியிலிருக்கும்  கச்சபேஸ்வரர்   கோயிலுக்குப் போயிருந்தேன்.   கோயிலின்   பிராகாரப்  பகுதியிலிருந்து   பெட்ரோமாக்ஸ்   லைட்டு  ஜொலிப்பில்   ஆண்கள்--பெண்கள் கூட்டமொன்று  கலகலப்பாக வெளிப்பக்கம் வந்து கொண்டிருந்தது.  மாப்பிள்ளை அழைப்பைத் தொடர்ந்து கோயிலில் நிச்சயதார்த்தம் நடந்து வந்து கொண்டிருக்கும் கூட்டம் என்று பார்க்கையிலேயே தெரிந்தது.   கூட்டத்திற்கு வழிவிடும் நோக்கத்தில் கொஞ்சம் ஒதுங்கி நின்ற பொழுது  அவரை அந்த இடத்தில் சந்திப்பேன் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கழித்து....  குமார பாளையம் ராமாஸ் கேப்  முதலாளி தான் அவர்!  அந்த குண்டு உடல்   கொஞ்சம் வற்றி  லேசான   தலை நரையுடன்...    அவர் வீட்டுத் திருமணத்திற்காக    காஞ்சீபுரம் வந்திருந்தவரை அகஸ்மாத்தாக சந்தித்த தருணத்திலேயே பேருவகை கொண்டேன்.   பின்னால் நடந்த இந்த நிகழ்வு விட்டுப் போய் விடப் போகிறதே என்று அவர் பற்றிய நினைவுகளின் தொடர்ச்சியாக இப்பொழுதே சொல்லி விட்டேன்.

இதே மாதிரி மதுலிமயே அவர்களை இதே காஞ்சீபுரத்தில் பிற்காலத்தில் சந்தித்த நினைவு ஒன்றும்  உண்டு.  அதை அந்தப் பகுதி வரும் போது சொல்கிறேன்.

வெள்ளிக் கிழமை வந்தாலே போதும்.  எங்கள் அறை  நண்பர்கள் உடனான மாலை கலந்துரையாடல் நிகழ்ச்சி நினைவுக்கு வந்து விடும்..   'வருகிற     ஞாயிற்றுக் கிழமை இதைப் பற்றி தவறாமல் உரையாட வேண்டும்' என்று  எதைப் பற்றியாவது நினைத்துக் கொள்வேன்.

அந்த அடுத்த ஞாயிற்றுக் கிழமையும் வந்தது.

அன்று ஆசிரியர் பயிற்சியின் பாடத்திட்டங்கள் பற்றி,  வகுப்புகளில் ஆசிரியர் நடத்தும் பாடங்கள் பற்றி,  மாணவர்களின் புரிதல்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம்.

நானும் கங்காதரன்  சாரிடம் தமிழ்ப் பாடம் கேட்ட எனது அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

ராஜவேலு  என்று ஒரு  ஆசிரியர்.  என்னை விட   சில ஆண்டுகள் பெரியவர்.     "பாரதி வித்தியாலயா பள்ளி கங்காதரனையா சொல்றே?" என்று கேட்டார்.

"அவரே தான்.  உங்களுக்கும் அவரைத்  தெரியுமா?" என்று  ஆவலுடன் கேட்டேன்.

"தெரியுமாவது?..  ஒன்பது, பத்து, பதினொன்று மூன்று வகுப்பிலும் அவர் தான் தமிழாசிரியர்.  நானும் அந்தப் பள்ளியில் தான் படித்தேன்.." என்றார்.

"அடேடே! அப்படியா?.. எந்த வருடம் என்று கேட்டுத்  தெரிந்து எனக்கு மூன்று வருடங்கள் அவர் சீனியர் என்று தெரிந்து  கொண்டேன்.   இன்னொரு பா.வி.பள்ளி  மாணவரை அந்த இடத்தில் பார்த்தது எனக்கு  மகிழ்ச்சியாக இருந்தது..

"அவர் தமிழாசிரியர் மட்டும் தான்.  ஆனால் தமிழர் இல்லையே?" என்றார் ராஜவேலு,  திடுதிப்பென்று.

அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

"அவர் தமிழர் தான்.  எனக்கு நன்றாகத்  தெரியும்..."  என்று அழுத்தமாகச் சொன்னேன்.  "அவர் தமிழர் இல்லையென்றால்  அவ்வளவு ஈடுபாட்டு உணர்வுடன்  தமிழ் வகுப்பு எடுக்க எப்படி அவரால் முடியும்?"  என்று எனது நியாயமான சந்தேகத்தை வெளிப்படுத்தினேன்.

"அவர் மிகச் சிறப்பாக உணர்வுடன்  தமிழ்   வகுப்பு  எடுப்பார் தான்.  அதில் எந்த இரண்டாம் கருத்துக்கும் இடமில்லை...  ஆனால் அவர் தமிழர் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.  அவர் ஐயர் என்று எனக்குத்  தெரியும்.." என்றார் ராஜவேலு.


(வளரும்)

12 comments:

ஸ்ரீராம். said...

முக்கியமான இடத்தில நிறுத்தி இருக்கிறீர்கள்!

தொடர்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மதுலிமாயியின் ஆங்கிலப்பயன்பாட்டுக்கொள்கை வியக்கவைக்கிறது. தமிழகத்தில் தன் தாய்மொழியான மராத்தியில் பேசா நிலைக்கு அவர் கூறிய காரணம் மிகவும் பொருத்தமானது. அவரது கையெழுத்தைப் பெற்றது உண்மையிலேயே உங்கள் வாழ்வின் முக்கியமான தருணமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அந்த முக்கியமான இடத்திலிருந்து அடுத்த அத்தியாயத்தைத் தொடர வேண்டும் என்ற உள்ளுணர்வும் உங்கள் பின்னூட்டத்தில் புதைந்து இருப்பதைப் புரிந்து கொண்டேன்.

அப்படியே தொடர்கிறேன். நீங்களும் தொடர்ந்து வாருங்கள்..

ஜீவி said...

@ Dr. B. Jambulingam, A.R. (Retd)

நன்றி, ஐயா. ஒரே அலை வரிசையில் சிந்தித்திருக்கிறோம்.

நீங்கள் சொல்லியிருக்கிற மாதிரி அவர் கையெழுத்தைப் பெற்றது முக்கியமான தருணம் தான். கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு 1975-ல் இதே மதுலிமயேவிடம் அவர் கையெழுத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டியே காஞ்சீபுரத்தில் அதே ஆட்டோகிராஃப்பில் அடுத்த பக்கத்தில் கையெழுது வாங்கினேன்.
13 வருடங்களுக்கு முன் வாங்கிய பழைய கையெழுத்தைக் காட்டி விஷயத்தைச் சொன்ன போது மனிதர் சிரியோ சிரியென்று சிரித்தார். அற்புதமான மனிதர்!

Thulasidharan V Thillaiakathu said...

மதுலிமாயியின் காரணங்கள் புரிந்தது.

அவரது ஆட்டோகிராஃப் பெற்றது மகிழ்வான விஷயம் இல்லையா.

வாட்சபில் சாலமன் பாப்பையாவின் நேர்முகம் ஒன்று காணொளியாக வந்திருந்தது. அவரிட்ம ஹிந்தி ஒழிப்பில் கலந்து கொண்டதை பற்றி கேள்வி கேட்ட போது. அவர் சொல்லியது...நாங்க ஹிந்தி திணிக்கப்படுவதைத் தான் எதிர்த்தோம் நாமாகக் கற்றுக் கொள்வதை அல்லா இப்போது கற்காமல் விட்டது எத்தனை மடமை என்று தெரிகிறது என்று அவர் சொல்லியிருந்தார்.

இப்போதும் ஒரு கூட்டம் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...ஹிந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம், தனிப்பட்ட முறையில் எந்த மொழி வேண்டுமானாஅலும் கற்றுக் கொள்ளுங்கள் என்று..


அவர் மிகச் சிறப்பாக உணர்வுடன் தமிழ் வகுப்பு எடுப்பார் தான். அதில் எந்த இரண்டாம் கருத்துக்கும் இடமில்லை... ஆனால் அவர் தமிழர் இல்லை என்பது மட்டும் நிச்சயம். அவர் ஐயர் என்று எனக்குத் தெரியும்.." என்றார் ராஜவேலு.//

இதில் ஏதோ அர்த்தம் பொதிந்துள்ளதே. சஸ்பென்சாக முடித்துவிட்டீர்கள்..

தமிழர் இல்லை....அவர் ஐயர் ....//

அப்படினா ஐயர் என்றால் தமிழர் இல்லையா?!

கீதா


ஜீவி said...

@ தி. கீதா

இந்தப் பகுதிகளைப் படிக்கும் பொழுது கிட்டத்தட்ட 57 ஆண்டுகாலத்திற்கு பின்னோக்கிப் போக வேண்டும்.

தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அருமையான நினைவலைகள்.
மது லிமயே எனக்கு மிகவும் பிடிக்கும் . அவர் பார்லிமெண்ட் வாதங்களை அப்பா விடாமல் படிக்கச் சொல்வார்.
நீங்கள் கையெழுத்து வாங்கி இருக்கிறீர்களா. மிக அருமை.

எனக்கும் கைரேகை கற்க ஆசை.
அதுபோல தீவு இருந்தால் என்ன அர்த்தம்.

தமிழாசிரியர் ஐயராக இருந்தால் தமிழர் இல்லையா. வினோதம். அந்த நாட்கள் அப்படித்தான் இருந்தது.

அடுத்த பதிவுக்குப் போகிறேன்.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

ஆமாம். துடிப்பான இளைஞர் மதுலிமயே.. நாடாளுமன்றத்தில் சண்டமாருதமாக செயல்பட்டவர். அந்த நாட்களையும் இந்த நாட்களையும் நினைத்தால் மனம் குமைந்து தான் போகிறது.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

ஜோதிடம் போலவே கைரேகை அமைப்பைக் கொண்டு வாழ்வு பலன்களைச் சொல்லலாம் என்பார் தமிழ்வாணன். பொதுவாக ஆயுள் ரேகை ஒருவரின் வாழ்ந்நாள், உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. எது ஆயுள் ரேகை?.. ஆள் காட்டி விரலுக்குக் கீழே பெருவிரலுக்கு பக்க வாட்டில் ஆரம்பித்து கீழ் நோக்கிச் சென்று மணிக்கட்டில் முடிவது ஆயுள் ரேகை. சிலருக்கு ரெட்டை ஆயுள் ரேகைகள் கூட இருக்கும். துல்லியமாகப் பார்க்கத் தெரிந்தால் தான் அதற்கான பலன்களை அறுதியிட்டுச் சொல்ல முடியும். அது இல்லாத பட்சத்தில் இந்த ரேகை அமைப்பைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருப்பதே நல்லது. எது எப்படி இருந்தாலும்---

உலகம் பூராவும் இருக்கும் மக்களின் கைரேகையில் ஒருவருக்கு இருக்கும் ரேகை போல இன்னொருவருக்கு இருக்காது என்று அறுதியிட்டு சொல்ல முடிவதே இந்த ரேகைகளுக்கான தனித்தன்மையான விசேஷம். இனி பிறக்கப் போகும் உயிர்களுக்குக் கூட இந்த வித்தியாசம் தீர்மானிக்கப்படும் என்பது தான் அதிசயம். ஒருவர் ரேகையைப் போல இன்னொருவர் ரேகை இருக்காது என்ற தீர்மானமான விஞ்ஞான பூர்வமான உண்மையால் தான் உலக புலனாய்வு அமைப்பில் கூட கைரேகையை அடிப்படை அடையாளமாக அங்கீகரித்திருக்கிறார்கள்.

”தளிர் சுரேஷ்” said...

அந்தக்கால அரசியல், இந்தி திணிப்பு, போன்றவைகளை அறிந்து கொள்ள முடிகிறது. ஆங்கிலம் நன்கு தெரிந்தும் அது அன்னிய மொழி என்பதால் இந்தியில் பேசும் சிலரைப்பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களின் பெயர் நினைவில் இல்லை. சுவாரஸ்யமாக செல்கிறது. தொடர்கிறேன்!

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் இத்தொடரின் விட்ட பதிவுகளையும் வாசித்துவிட்டேன் ஐயா.

நான் அப்போது ராசிங்கபுரத்தில் இருந்தேன். ஹிந்தி எதிர்ப்பு தீவிரமாக இருந்த சமயம். நான் பதின்ம வயதில் இருந்த நேரம். நிறைய புதிய தகவல்கள் அறிய முடிகிறது சார்.

துளசிதரன்

வே.நடனசபாபதி said...

// அநேகமாக இந்தித் திணிப்பு எதிர்ப்பு காலத்தில் தமிழகத்தில் இந்தி மொழியில் பேசப்பட்ட கூட்டங்கள் மதுலிமயேயின் கூட்டங்களாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.//

உண்மைதான். அப்போதிருந்த சூழ்நிலையில் துணிவுடன் தனது கொள்கைப்படி இந்தியில் பேசி மக்களிடம் தன் கருத்தைக் கொண்டு சேர்த்த தெய்உ மதுலி மயே அவர்கள் பாராட்டுக்கு உரியவர்.

// வலது கை ரேகை ஓட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் தீவுக் குறி இருந்தது. நண்பரின் மேல் எனக்கு இருந்த அபிமானம் அந்தக் குறிக்கான நேரடியான பலனைச் சொல்லாமல் எதிர்மறையாக மறைத்துச் சொல்ல வைத்தது//
அதன் பலன் என்னவென்று பின்னர் சொல்வீர்களா?

// அவர் மிகச் சிறப்பாக உணர்வுடன் தமிழ் வகுப்பு எடுப்பார் தான். அதில் எந்த இரண்டாம் கருத்துக்கும் இடமில்லை... ஆனால் அவர் தமிழர் இல்லை என்பது மட்டும் நிச்சயம். அவர் ஐயர் என்று எனக்குத் தெரியும்.." என்றார் ராஜவேலு.//

என்ன அறிவு பூர்வ ஆராய்ச்சி! எப்படி அவரை மடக்கினீர்கள் என அறிய தொடர்கிறேன்.

Related Posts with Thumbnails