மின் நூல்

Tuesday, June 4, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                              32



சிரியர்  ராஜவேலு சொன்னது  ரொம்பவும் குரூரமாக என் மனசில் பதிந்தது.    அதுவும்  எனக்குத் தமிழ் போதித்த ஆசான் தமிழாசிரியர் கங்காதரன் பற்றி..    அவர் தமிழர் இல்லையா?  என்ன இது அபத்தம்?....

எனக்கு மனசு ஆறவே இலை.  அந்த எரிச்சலில், ""ஆமாம். எனக்கும் தெரியும்.  என் தமிழாசிரியர் அந்தணர் தான்.  அதற்கும் தமிழருக்கும் என்ன சம்பந்தம்?.." என்று குரலுயர்த்திக் கேட்டேன்.

"ஐயமார்லாம் தமிழர்கள் இல்லை என்று உங்களுக்குத்  தெரியாதா?" என்று  ராஜவேலு ஏதோ ஏற்கனவே முடிவாகிவிட்ட விஷயம் எனக்கு மட்டும் தெரியாத மாதிரி  என்னைக் கேட்டார்.

"என்ன சொல்கிறீர்கள்?" என்று திகைத்தேன்.  "அப்போ.. அப்போ.. உ.வே. சாமிநாதய்யர் தமிழரில்லையா?" என்று வெடித்தேன்.     

"நிச்சயம் தமிழர் தான்.." என்று  இடையில் முகிலன் புகுந்த பொழுது அவர் குரல் தழுதழுத்தது.. "உ.வே.சா.வின் பணி மகத்தானது.  எங்கெங்கோ அலைந்து திரிந்து செல்லரித்த ஏட்டுச் சுவடிகளையெல்லாம் தேடிச் சேகரித்து செப்பனிட்டு அவற்றை  அச்சிட்டு  அரும்பணி  ஆற்றியிருக்கிறார்.   அவர் மட்டும் அப்படிச் செயலாற்றவில்லை என்றால் அருந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் நமக்குக் கிடைத்திருக்குமா, என்ன?..   அவர் தமிழர் இல்லையென்றால் வேறு யார் தான் தமிழர்?" என்று உணர்வுப் பிழம்பாய்க் கேட்டார் முகிலன்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை..  முகிலன் சார்  உவேசா-வைப் பற்றி பெருமைபடச் சொன்னது கேட்டு மனம் நெகிழ கண்களில் நீர் மல்க அவரைப் பார்த்தேன்.

முகிலன் என்னைப் பார்த்து," ராஜவேலு சொன்னதைக் கேட்டு நீங்கள் மனம் வருந்த வேண்டாம்.."என்று தேற்றுகிற மாதிரி சொன்னார். "தனது ஆசிரியர் மேல் -- அதுவும் தமிழாசிரியர் மேல் -- இவ்வளவு அன்பு வைத்திருக்கும் ஒருவரை முதன் முறையாக இப்போது தான் பார்க்கிறேன்.." என்றார். 

"நன்றி, சார்.." என்று அவருக்கு பதிலிறுத்த பொழுது மனசு இலேசாயிற்று.. உணர்ச்சி வசப்பட்டு ரொம்பவும் குழந்தைத்தனமாக நடந்து  கொண்டு விட்டேனோ  என்ற வெட்கத்தில் நெளிந்தேன்.  "இன்னும்  எனக்குப்  புரியவில்லை... ராஜவேலு சார் ஏன் அப்படிச் சொன்னார்?.." என்று அவர் சொன்னதைக் கூட திருப்பிச் சொல்ல முடியாமல் தடுமாறினேன்.

"விட்டுத் தள்ளுங்கள்.. அவர்   சொன்னதைப் பெரிதாக எடுத்துக்  கொள்ளாதீர்கள்.." என்றார் முகிலன்.. "ராஜவேலு அடிப்படையில் திராவிட கழகத்தவர்.  அதாவது அங்கிருந்து இங்கு--திமுக--வுக்கு வந்தவர்.  அண்ணாவே அழுத்தந்திருத்தமாக பலமுறை சொல்லியிருக்கிறார்.  'என்றைக்கு ஓட்டு அரசியலுக்கு வந்து விட்டோமோ அன்றைக்கே எல்லாப் பகுதியினரையும் அணைத்துப் போகும் பக்குவம் வேண்டும்' என்று..  அவருக்கு அந்த ஆற்றல் இருக்கிறது...  அந்த ஆற்றலை வளர்த்துக் கொள்ளாமை தான் மற்றவர்களிடம் இருக்கிற குறைபாடு.." என்று அவர் சொன்ன போது கேட்டேன்:

"எனக்கும் அந்த பக்குவம் இல்லையோ என்ற ஐயம் இப்போது.. தமிழ் தான் என்னையும் இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.  என் தமிழாசிரியரே தமிழர் இல்லை என்று சொன்னது தான் எனக்கேற்பட்ட குழப்பம்.. தாங்களாவது தமிழர் யார் என்று சொல்லக் கூடாதா?"

"தமிழ் நாட்டில் பிறந்து தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும்
தமிழரே..." என்று பிரகடனம் செய்யும் தொனியில் முகிலன் சொன்ன போது
அந்த சமயத்தில் அங்கிருந்த அனைவரும் கைதட்டி அவர் சொன்னதை வரவேற்றனர்.

மனத்தில் இருந்த குழப்ப மேகங்கள் விலகி முகத்தில் தெளிவு வந்த மாதிரி எனக்கிருந்தது.

"சரி.. பால் சாப்பிடக் கிளம்பலாமா?" என்று யாரோ கேட்ட பொழுது அனைவரும் எழுந்திருந்தோம்..


குமார பாளையம் வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில்   மறுநாள் காலைத் தபாலில் எனக்கு பணி மாற்றல் உத்தரவு ஒன்று சேலம் தபால் துறை அதிகாரி அலுவலகத்திலிருந்து வந்தது.  திருச்செங்கோடு தாலுகாவில் இருந்த  வையப்ப மலை என்ற அந்நாளைய குக்கிராமத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்ற அந்த உத்திரவு என்னைப் பணித்தது.

வையப்பமலை அஞ்சல் நிலையம் ஒருநபர் பணியிடம்.  போஸ்ட் மாஸ்டர் ஒருவர் தான்  எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.  ஒரு மணியாடர், ஒரு பதிவுத் தபால் என்றாலும்,   இல்லை ஒன்றுமே இல்லை என்றாலும்  முழுப்பட்டியல் தயாரித்து பை கட்டி அரக்கு சீல் வைத்து ரன்னர் வரும் பொழுது அவரிடம் ஒப்படைக்கத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.  பத்தோடு பதினொன்றாக குமார பாளையத்தில் வேலை செய்த கூட்டுப் பணி இன்பம் அங்கில்லை.   தனி ஒரு ஆளாய் மல்லாட வேண்டும்.  சோத்துப் பாடு வேறே.  மறுபடியும் தட்டி விலாஸ் ஓட்டலா என்று நினைக்கையிலேயே வயிறு சங்கடம் பண்ணியது.  அந்தளவுக்கு ராமாஸ் கேப்பில் சுகம் கண்ட நாக்கு.

வேலையை ஏற்றுக் கொள்ள ஒரு வார காலம் அவகாசம் இருந்தது.  எனக்கு பயிற்சி காலம் முடிய இரண்டே மாதங்கள் இருந்தன.  அப்படி இருக்கும் இரண்டு மாதங்களும்  குமாரபாளையத்திலேயே குப்பை கொட்டி விட்டால் போதும்,  குமார பாளையத்திலேயே நிரந்தர பணி நியமனம் ஆகிவிடும் என்ற நிலை. 

இரண்டு நாட்கள் யோசனையில்  சேலம் தலைமைத் தபால் அதிகாரியைச் சந்தித்து குமாரபாளையத்திலேயே பணி நீட்டிப்பு கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்து அன்று இரவு ஏதோ பிரச்னைக்கு முடிவு கண்டு விட்ட மாதிரி நிம்மதியான தூக்கத்தில் ஆழ்ந்தேன்.

அடுத்த நாள் நிர்மலமாக பொழுது விடிந்தது.   எட்டு மணிக்கே அலுவலகம் வந்தாச்சு.   அன்றைய தபால் பைகளைச் சுமந்து கொண்டு வேன் வந்து பைகளை இறக்கி வைத்தால் போதும்--- அத்தனைபேரும்  தேன்சிட்டு போல சுழல ஆரம்பித்து விடுவோம்.

அன்றைக்கு என்னவோ கால் மணி நேரம் தபால் வண்டி தாமதம்.  பைகள் அவசர கதியில் இறக்கி வைக்கப்பட்டன.

அனைவரும் கீ கொடுத்த பொம்மைகள் ஆனோம்.   அன்றைக்கு வந்திருந்த பதிவுத் தபால்களை பதிவு செய்து கொண்டு அவற்றை தபால்காரர்களுக்கு அவர்களின் பகுதிகளுக்கேற்ப பிரித்து அவற்றைக் குறித்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டிருந்த பொழுது---

எனக்கு ஒரு தந்தி வந்திருப்பதாக சொல்லி  டெலகிராப்பிஸ்ட் அதை என்னிடம் கொடுத்தார்.  அவர்  முகத்தில் புன்சிரிப்பு தவழவே பதட்டமில்லாமல் பிரித்துப் படித்தேன்.

'தொலைபேசி  இலாகாவில்  பணியேற்றுக்  கொள்ள தேர்வு செய்யப் பட்டிருப்பதாக  கடிதம் வந்திருப்பதாகவும்,  சேலம்  தொலைபேசி இலாகா  தலைமை அதிகாரி அலுவலகத்தில் அடுத்த திங்கட் கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்பதினால் உடனே விடுப்பில் கோவை வரவும்'  என்று என் தமையனார் கோவையிலிருந்து தந்தி அனுப்பியிருந்தார்.

செய்தியை  உள்வாங்கிக் கொண்டதும்  மனசெல்லாம் சந்தோஷம் நிரம்பியது.


(வளரும்)




16 comments:

வல்லிசிம்ஹன் said...

ஆஹா அற்புதமான செய்தி. அப்போது நடந்தததற்கு இப்போது வாழ்த்துகள்.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

இது தான் நான் தொலைபேசி இலாகாவில் நுழைந்த கதை. எனது வாழ்விலும் அரசியல் தொடர்பான சிந்தனைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய இலாகா. மறக்கவே முடியாத எத்தனையோ நினைவுகள். தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன். வாழ்த்துக்களின் இயல்பு எப்பொழுது வாழ்த்தினாலும் புத்தம் புதுசாகத் தான் இருக்கும். நன்றி.

மாதேவி said...

குமாரபாளையம் டாட்டா சொல்ல :) சேலம் அழைக்கிறது.

ஸ்ரீராம். said...

தொலைபேசி இலாகாவுக்குள் வந்த கதை தெரிகிறது. தொடர்கிறேன்.

G.M Balasubramaniam said...

நீங்கள் தொலைபேசி இலாகா சேர்ந்தவர் என்பது தெரியும் இப்போது வந்தபாதை தெரிகிறது

கோமதி அரசு said...

தொலைபேசி இலாகா வேலை அடுத்து அதில் பணியேற்று சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற கால அனுபவங்கள் இனி.

வாழ்த்துக்கள், தொடர்கிறேன்.

”தளிர் சுரேஷ்” said...

தமிழாசிரியர்கள் மீது அனைவருக்கும் ஒர் பற்று எப்போதுமே உண்டு. தமிழ் தாய்மொழி என்பதனால் இருக்கலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய தமிழாசிரியர்கள், திரு தசரதன், திரு, ஆறுமுகம்,திரு முருகேசன், அவர்களை இன்றும் நினைவில் வைத்துள்ளேன். தபால் இலாகாவில் இருந்து தபால்னு தொலைபேசி இலாகாவிற்கு மாறிவிட்டீர்கள் போல! வாழ்த்துக்கள்!

ஜீவி said...

@ மாதேவி

குமாரபாளையம் டாட்டா சொல்ல கோவையில் வாழ்க்கை தொடர்கிறது என்பதே சரி;.
தொடர்ந்து வாசித்து வ்ரும் போது தெரியும், மாதேவி அவர்களே!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

வேறு எத்தனையோ விஷயங்கள் உங்கள் பின்னூட்டத்திற்காகக் காத்திருக்க, இந்த உப்புச் சப்பில்லாத பின்னூட்டம் தானா?

ஜீவி said...

@ ஜிஎம்பி

வேறு செய்திகளுக்கு பின்னூட்டம் போடுவீர்கள் என்று நினைத்தேன்.

ஜீவி said...

@ கோமதி அரசு

40 ஆண்டுகாலம் பணிக்காலமாயிற்றே! அவ்வளவு சீக்கிரம் முடித்து விட முடியுமா?..

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

தமிழாசிரியர்கள் மேலான உங்கள் பற்றும் பாராட்டக்குரியது தான். மறக்காமல் அத்தனை பேர் பெயரையும் நினைவில் வைத்திருக்கிறீர்களே!

மாற்றமில்லை. ஏற்கனவே விண்ணப்பித்திருந்தது. பணி நியமனம் இப்போது.

ஆரம்பித்திலிருந்து பார்த்தால் எத்தனை இடங்களில் பணியேற்று, இப்பொழுது இதனை நிரந்தரப்பணியாய் இறைவன் ஏற்க வைத்திருக்கிறான் என்பது வியப்பாகத் தான் இருக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

அட்! தொலைபேசி இலாகாவுக்குள் நுழைந்துவிட்டீர்கள். இனி அந்த அனுபவங்கள் தொடரும் என்று நினைக்கிறோம்.

துளசிதரன், கீதா

ஜீவி said...

@ தி. கீதா

ஆமாம். ஒரு சுற்று பூர்த்தியாகி நிரந்தர வேலைக்கு வந்தாச்சு.

அந்த சுற்றை நினைத்தால் தான் ஒரு பக்கம் ஆச்சரியமாகவும், இன்னொரு பக்கம் சந்தோஷமாகவும் இருக்கிறது.

வே.நடனசபாபதி said...

// "தமிழ் நாட்டில் பிறந்து தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும்
தமிழரே..."//

சரியான விளக்கம்.

தொலைபேசி இலாகாவில் பணியேற்றுக் கொள்ள தங்களை தேர்வு செய்யப் பட்டிருப்பதாக கடிதம் வந்திருப்பதாக தங்கள் தமையனார் அனுப்பியிருந்த தந்தி நிச்சயம் முதல் நாள் ஏற்பட்டிருந்த குழப்பத்தை நிரந்தமாக போக்கியிருக்கும். ஆனால் என்ன. வையப்பமலை மக்களுக்குத்தான் தங்களது சேவை கிட்டாமல் போய்விட்டது. தொடர்கிறேன்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

ஆமாம், தொலைபேசி இலாகா அழைப்பு ஒரு தீர்மானமான வழியைக் காட்டியது.

அந்நாளைய குருசாமிபாளையம் கிராம வாழ்க்கை (பொதுவான் கிராம வாழ்க்கை) ஓரளவு என்னை மிரட்டியது என்றே சொல்லலாம். 1. சைவ சாப்பாடு 2. சரியான டாய்லெட் வசதியின்மை.

Related Posts with Thumbnails