மின் நூல்

Wednesday, December 25, 2019

மனம் உயிர் உடல்


25.   அன்பே சிவம்

திகாலையும்   இரவு தூங்கப் போவதற்கு முந்தைய காலமும் இந்த தியானத்திற்கு உகந்த நேரங்கள். 

அதிகாலை என்றால்  காலைக் கடன்கள் முடித்து பல் விளக்கி முகம் துடைத்து  சுத்தமாக இருக்க வேண்டும்.  குளியலை முடித்து விடுவது என்பது அவரவர் விருப்பம் என்றாலும் அதுவே உத்தமம்.  இறுக்கிப் பிடித்த மாதிரி இல்லாமல் தளர்த்தியான ஆடைகள் அணிவது அவசியம்.   பூஜைக்கு  உட்காருகிற மாதிரியான கெடுபிடிகள் எல்லாம் தேவையில்லை.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனம் இலேசாக இருந்தால் போதும்.   சொல்லப் போனால்  மனம் இலேசாக இருக்கும்  மற்றும் உற்சாகமாக இருக்கும் நேரங்களில் எல்லாம் இந்த தியானத்தை கைக்கொள்ளலாம்.   சந்தனக்  கீற்றோ,  வீபூதியையோ அல்லது அவரவர் வழக்கப்படி எதுவோ அதை நெற்றியில்  தரித்துக் கொள்ளலாம்.  அகவுடல் பயணத்திற்கு வசதியாக இயல்பாக அதிகம் அழுத்தம் கொடுக்காமல் இமைகளை மூடிக் கொள்ளலாம். 
உங்களுக்கு மிகவும் பிடித்த இறை உருவை  மனதில் ஆவாஹனம் (எழுந்தருளச்) செய்து  அதில் லயிப்பதற்கு மனதை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

நீக்கமற நிறைந்திருக்கும் வெட்ட வெளியே இறைவன்.   வெட்ட வெளிக்கு உருவம்  கொடுக்க முடியாமையாலும் உள் மனத்தில் மனப்படமாகத் தான் பதிய முடியும் என்பதினால் நீங்கள் மிகவும் நேசிக்கும் இறைவன் உருவை அல்லது குலதெய்வ உருவை உங்கள் மனசில் ஆசனமிட்டு அமரச் செய்யுங்கள்.

இயல்பான நிலையில் மனம்  இருக்கட்டும். 

ஆரம்பத்தில் தரையில் அமர்ந்து தியானத்தைப் பழகிக் கொண்டால்,  போகப் போக  எதில் உட்கார்ந்து வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.  தரையில் என்றால் வெறும் தரையில் இல்லாமல் ஒரு தடுக்கு அல்லது ரொம்ப உயரமில்லாத பலகையில் அமரலாம்.  எல்லாவிதங்களிலும்  உடல் ஈஸியாக தளர்த்தியாக  அமர்ந்திருப்பதே சிரமம் கொடுக்காதவாறு செளகரியமாக இருப்பதாக இருக்கட்டும்.  தியானத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுது கால் வலி, கை வலி என்று உடல் அசெளகரியங்கள்.  செய்யும் தியானத்திற்கு குறுக்கே வராமல் இருக்க வேண்டும் என்பதற்கு தான் இத்தனை ஏற்பாடுகளும்.  அதிகாலை என்றால் நீர் அருந்தி விடுங்கள்.  இரவு காலம் என்றால் இரவு
உணவை முடித்துக் கொண்டு படுக்கைக்குப் போகும் நேரமாக இருக்கட்டும்.

மூச்சு அதன் இயல்பான போக்கிலேயே இருக்கட்டும்.   இந்தத்  தியானம் மூச்சுப் பயிற்சி இல்லை என்பது தெளிவாக மனசில் படியட்டும்.  நீங்கள் தியானத்தில் ஆழ்வது என்பது வழக்கமாக  ஆழ்ந்த யோசனையில் நீங்கள் எப்படி இருப்பீர்களோ அப்படி இருப்பது தான்.   விசேஷமான எந்த அசெளகரியங்களையும் கைக்கொள்ளாமல் வெகு சுலபமாக மனசையும் உடலையும் வைத்துக் கொள்ளுங்கள்.  இது முக்கியம்.                                         

இறை நம்பிக்கை உள்ளவர்கள்  இறைவன் என்ற தலைவன் பற்றி என்னவெல்லாம் உங்கள் மனசில் பதிந்திருக்கிறது என்பதனை மனசில் ஓட விடுங்கள்.  புரியவில்லையா?..  புரிகிற மாதிரி சொல்கிறேன்.  இறைவன் என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவு  ஆற்றப் போகிற மாதிரி அல்லது இறைவன் பற்றி ஒரு கட்டுரை எழுதப் போகிற மாதிரி நினைத்துக் கொண்டால் என்னவெல்லாம் கருத்துக்கள் உங்கள் மனசில் அலை  மோதுமோ அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

எண்வகை குணங்கள் கொண்டவனாக இறைவனை பக்தியாளர்கள் குறிப்பிடுவார்கள்.   எளிமையாக நாம் எப்படியெல்லாம் இறைவனை உருவகப்படுத்தியிருக்கிறோம் என்று  நினைத்துப் பார்க்கலாம்.

போன வாரம் என் வீட்டிற்கு  தன் மகனுடன் நண்பர் ஒருவர் வந்திருந்தார். அந்தச் சிறுவன் எட்டாம் வகுப்பில் பயில்வதாக என்னிடம் சொன்னான்.  அந்தப் பையனிடம் இறைவனைப் பற்றி உனக்குத்  தெரிந்தவையெல்லாம் சொல்லு என்று நான் கேட்டதற்கு  அந்தச் சிறுவன் சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன்.

இறைவன் எல்லா உயிர்களையும் படைத்தவன்.

அதனால் அவனே எல்லா உயிர்களையும் காப்பவன்.

உயிர்களிடத்து கருணை கொண்டவன்.

இறைவன் தீமை செய்பவர்களைத் தண்டிப்பவன்.

அன்பே சிவம் என்பார்கள்,  அதனால் இறைவன்  சகல உயிர்களிடத்தும் அன்பானவன்.

அவனே நம் துன்பங்களைத் தீர்ப்பவன்.

நல்லது செய்பவர்களுக்கு நல்லது செய்பவன்.  அவர்களை ரட்சிப்பவன்.

--- என்று தனக்குத் தெரிந்தவைகளை அந்தச் சிறுவன் சொன்னதும் நான்
அசந்து  போனேன்.

எட்டாவது படிக்கும் சிறுவன்.  பதினாங்கு வயது  இருக்குமா?..  அந்த சிறு குழந்தையின் மனசில் இறைவன் எவ்வளவு அழகாகப் படிந்திருக்கிறான் என்று நெக்குருகிப் போனேன்.

எந்தக் கோயிலிலாவது சந்திக்கும் எவரையாவது  பார்த்து, "இறைவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று ஒரு கேள்வியைப் போட்டால் இந்தளவுக்குச் சொல்வாரா என்பது சந்தேகமே.. சொல்லப்போனால் இப்படியான ஒரு  கேள்வி  ஆன்மிக குருமார்கள் கூட எதிர்கொள்ளாத  கேள்வியாகத் தான்  இருக்கும்.     'இறைவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்கும் நம்மை 'இவன்  'ஒரு மாதிரி'யான ஆசாமியாக இருப்பானோ என்று நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அந்தச் சிறுவன் சொல்லாதது ஏதாவது பாக்கியிருந்து அது உங்களுக்குத் தெரிந்திருந்தால்  அவற்றையும் இறைவனைப் பற்றிய  உங்கள் எண்ணமாக   சேர்த்துக் கொள்ளுங்கள்.  இந்தப் பதிவைப்   படிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் மற்றவர்களுக்கு  உதவியாக இறைவனைப் பற்றிய உங்கள்  எண்ணங்களையும் சொல்லலாம்.

இப்பொழுது  இறைவனிடம் பொதிந்துள்ளதாக   நீங்கள் நினைக்கும் அவனது இயல்புகள்  உங்களிடமும்  உருப்பெறுவதற்கு  அவன் அருளை நீங்கள் வேண்ட  வேண்டும்.  உதாரணமாக இறைவன் சகல உயிர்களிடத்தும் அன்பானவன் என்றால் 'இறைவா!  சகல உயிர்களையும் நேசிக்கும் குணத்தை எனக்கு அருள்வாயாக' என்ற அர்த்தத்தில் அவரவர்கள் எப்படி இறைஞ்சிக் கேட்பீர்களோ அந்த முறையில் வேண்டிக் கொள்ள வேண்டும்.   வேண்டிக் கொள்ளுதல் மனசுக்குள்ளேயே அமிழ்ந்து போய் விடாமல் நீங்கள் இறைவனிடம் இறைஞ்சுவது உங்களுக்கும் செவி வழி கேட்கிற அளவுக்கு தெளிவாக ஜபிக்கிற மாதிரி இருக்க வேண்டும்.   இப்படி சன்னக் குரலில் சொல்வதால் இரண்டு  நன்மைகள்.  1.   நீங்களே இறைவனிடம் கோரிக்கை வைக்கிறீர்கள்.    2. என்ன கோரிக்கை வைக்கிறீர்களோ அதை நீங்களே செவிமடுத்து தெளிவாக உங்கள் கோரிக்கையை அழுத்தமாகப் புரிந்து கொள்கிறீர்கள்.

நீங்களே இறை சக்தியிடம் கேட்டுப் பெறும் வரம் இது.   அந்த வரம் இறைவன்
அருளால் உங்களுக்குக் கிடைக்கும் பொழுது  அதை மீறிச் செயல்படுவதற்கு உங்கள் மனம் லேசில் ஒப்பாது.   இதான் இதில் இருக்கும் ஒப்பற்ற  நன்மை. 

1. பொறுமையாக பிறர் சொல்வதைக் கேட்க முடியாமை.

2. எவர் எது  சொன்னாலும் அது தனக்குத்  தப்பாகப் படுவது.

3.  தன் கருத்துக்கு மாற்றுக் கருத்து யார் சொன்னாலும் அதைப்  பரிசீலனை பண்ணவே தயங்குவது.

4. தன்னைப் பற்றி கற்பனையாக பிரமாதமாக நினைத்துக் கொள்வது.

5.  சின்னச் சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சி வயப்படுவது.

6.  உலகமே தனக்கு  எதிராக இருப்பதாக நினைப்பது.

7.  சகிப்புத்தன்மையே இல்லாமல் இருப்பது.


-- இப்படியெல்லாம் ஏகப்பட்ட குறைபாடுகளைக் கொண்டவர்கள் தான் நாம்.
அவையெல்லாம் தன்னிடமிருந்து விலகிப் போக வேண்டுமென்று  நெஞ்சார வேண்டி செவிமடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த பகுதியில்  எல்லோருக்கும் பொருந்தக் கூடிய  ஒரு வேண்டுதல் கவிதையைத்  தருகிறேன்.   அது பயிற்சிக்கு சுலபமாக இருக்கும்.

இறைவன் அருளால் எல்லோருக்கும் நன்மைகள் பயக்கட்டும்.

அன்பே சிவம்.

(வளரும்)


17 comments:

கோமதி அரசு said...

//இறைவா! சகல உயிர்களையும் நேசிக்கும் குணத்தை எனக்கு அருள்வாயாக' //


நல்ல பிரார்த்தனை.

எட்டாவது படிக்கும் பையன் மிக அருமையாக சொன்னான்.
குழந்தையின் பெற்றோர் நன்றாக அவன் கேள்விகளுக்கு விளக்கம் அளித்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன். தெளிவான பதில்கள்.

கருவிலேயே திருவுடையாராக சிலர் பிறப்பார்கள் என்பார்கள் அது போல் அந்த குழந்தை இருக்கிறான் வாழ்த்துக்கள் குழந்தைக்கு.

நல்ல கேள்வி கேட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

கவிதையை படிக்க ஆவல்

ஸ்ரீராம். said...

இரவு தூங்கப் போவதற்கு முன் காலத்தைவிட அதிகாலை உகந்ததாய் இருக்கலாம் என்று தோன்றுகிறது.  

ஸ்ரீராம். said...

அழகான பகுதி இந்த வாரம்.   தியானம் என்றாலே வரும் தயக்கத்தையும், பயத்தையும் படிப்பபடியாக போக்கியிருக்கிறீர்கள்.  இந்த வாரத்தின் வரிகளை சேமித்து வைத்துக்கொள்கிறேன்.  உதவும்.

ஸ்ரீராம். said...

நீங்கள் சொல்லியிருக்கும் ஏழு குறிப்புகளும் எல்லோருக்கும் பொருந்தும் என்றாலும் எந்த அளவு நம்மால் அதிலிருந்து விடுபட முடிகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.   தெரிந்தெடுக்கப்பட்ட சுருக் நறுக் குறிப்புகள்.

ஜீவி said...

@ கோமதி அரசு (1)

கோமதிம்மா, முதல் பிரார்த்தனை என்பதினால் அப்படிப் பொதுவாக இருக்கிறது. தனிப்பட்ட சொந்த குறைபாடுகளுக்கான பிரார்த்தனை இன்னும் கொஞ்சம் வீரியமானது. கோயில் கும்பல்களில் நாம் செய்யும் பிரார்த்தனைகளுக்கும் இந்த மாதிரி சாவகாசமாக தனியாக வீட்டில் கொள்ளும் பிரார்த்தனைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று அனுபவப்பட்ட நீங்கள் சொல்லலாம்.



ஜீவி said...

@ கோமதி அரசு (2)

அந்தப் பிரார்த்தனைக் கவிதை உங்களுக்குத் தெரிந்து தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

அதிகாலை பிரார்த்தனைக்கு அலுவலக வேலைகளுக்குப் போகிறவர்களுக்கு அமைதியாக நேரம் ஒதுக்க முடிய வேண்டும். புற நகர் ரயில், பஸ்ஸைப் பிடிக்க வேண்டும் என்று பின்னால் செய்ய செயல்பட வேண்டிய நிர்பந்தங்கள் குறுக்கே வந்து தியானத்தை விரட்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இரவு நேரத்தைக் குறிப்பிட்டேன்.

இரவு தியானத்தில் இருக்கும் ஒரு நன்மை, இரவு நன்றாகத் தூங்கம் வரும் என்ற செளகரியமும் உண்டு.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (3)

//எந்த அளவு நம்மால் அதிலிருந்து விடுபட முடிகிறது என்பதைப் பார்க்க வேண்டும். //

உண்மை தான். தீவிர பக்தி உள்ளவர்களுக்கு தனது குறைகளிலிருந்து விடுதலைக்கான கோரிக்கை வைப்பது 'தான் - இறைவன்' என்ற இரண்டு பேர்களுக்கு இடையேயான ஒப்பந்தம் மாதிரி ஆகிவிடும். அது ஒருவகையான மீற முடியாத கமிட்மெண்ட். கூட்டத்திற்கு நடுவேயான கோயில் தரிசனங்கள் பெரும்பாலும் சுற்றுலா மாதிரி அமைந்து விடுவதினாலும், அடுத்தடுத்து வரிசையாக பல தெய்வ உருக்களை கும்பிட்டு வருவது போன்ற சடங்கு மாதிரியும் ஆகி விடுவதால் இப்படியான தனிப்பட்ட தியானங்களில் அதிக பலன் உண்டு.

இந்த தியானம் நமது உடலியக்கத்தில் எப்படி வேலை செய்கிறது என்பதை விளக்கி விட்டேனென்றால் கோரிக்கைகள் செயல்படும் விதம் உங்களுக்குப் புரிந்து போகும்.

வரும் பகுதிகளில் அதைச் சொல்கிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (3)

//தெரிந்தெடுக்கப்பட்ட சுருக் நறுக் குறிப்புகள். //

நன்றி. இன்னும் தீவிரப் பகுதிக்கு வரவில்லை. :))

G.M Balasubramaniam said...

நன் என்மக்களுக்குச்சொல்வது ஈட் லெஸ் ச்யூ மோர் ப்ரீச் லெஸ் ப்ராக்டிஸ் மோர்

ஜீவி said...

@ GMB

நீங்கள் உங்களுக்குச் சொல்லிக் கொள்வது தான் முக்கியம். இந்த தியானம், கடவுள் விஷயங்கள் எல்லாம் சுய கருத்துக்கள், அனுபவங்கள் இவற்றையே முற்றிலும் சார்ந்து
இருக்கின்றன.

வே.நடனசபாபதி said...




இதுவரை தியானம் என்பது மூச்சுப் பயிற்சி என எண்ணிக்கொண்டிருந்தேன். ‘இந்த தியானம் மூச்சுப் பயிற்சி இல்லை என்பதுதெளிவாக மனசில் படியட்டும்.’ என்று தெளிவாக சொல்லிவிட்டீர்கள்.

காலையில் நடைப்பயிற்சி செய்துவிட்டு வந்து தியானம் செய்யலாமா அல்லது அதற்கு முன்பே செய்யவேண்டுமா?

வேண்டுதல் கவிதைக்காக காத்திருக்கிறேன்.

ஜீவி said...

@ நடன சபாபதி

காலையில் நடைப்பயிற்சிக்கு முன் செய்யலாம். நடைப்பயிற்சி என்பது சூரிய வெப்பம் தகிக்காமல் காலை ஏழு மணிக்கு முன்னால் இருப்பது நல்லது. தியானம், நடைபயிற்சி இரண்டுக்கும் சேர்த்து நேரம் இருக்காது என்றால் தியானத்தை இரவு படுக்கைக்கு போகும் முன் வைத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி முக்கியம் என்பதினால் இப்படியான ஏற்பாடு.

தியானம் பழகி விட்ட பிறகு நீங்கள் நினைக்கும் நேரத்திலெல்லாம் உங்களுக்கு செளகரியப்படும் எனில் தியானத்தை மேற்கொள்ளலாம்.
இந்த தியானம் தீர்மானமாக எந்தக் காரியத்திலும் ஈடுபடுவதற்காகவும்
நம்மை சூழும் பிரச்னைகளை எளிமையாக்கி வாழ்க்கையை சுலபமாக்க உதவியாக இருக்கும். உங்களை புது மனிதராக்கும். இறை பக்தி என்றால் உண்மையில் என்னவென்று புரிய வைக்கும்.

Bhanumathy Venkateswaran said...

தியானம் செய்வதைப் பற்றி அழகாக சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். சிலர் ஓயாமல் யோசித்துக் கொண்டே இருக்கும் மனதை ஓய்வெடுக்கச் செய்வதுதான் தியானம் என்றும் கூறுவார்கள். இன்னும் க்ளியராக சொல்ல வேண்டுமென்றால் ஒரு சிந்தனைக்கும், அடுத்த சிந்தனைக்கும் இடையே ஒரு இடைவெளி உண்டு, அதை அதிகப்படுத்துவதுதான் தியானம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அதில் வேண்டுதல் வராது. நீங்கள் பிரார்த்தனையையும் முன்னிலைப் படுத்தியிருக்கிறீர்களே? 

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

தியானம் பற்றி நிறைய மகான்கள் பயிற்சி முறைகளைக் கூறியிருக்கிறார்கள். வழி காட்டியும் இருக்கிறார்கள். அந்த மகான்களின் பட்டியல் மிகப் பெரிது. நம் காலத்து ஜே.கிருஷ்ண மூர்த்தி அவர்களோ தியானம் என்பது நம் உள்ளுக்குள் நடக்கும் ஒரு யுத்தம் என்றே வர்ணித்திருக்கிறார். ஓஷோவோ அதற்கும் மேலே.

கால மாற்றங்களின் சூழ்நிலையில் நாம் வாழும் வாழ்க்கை விஸ்வரூபம் எடுத்து நமக்கான பல பிரச்னைகளை பூதாகாரமாக உருவாக்கியிருக்கிறது.
எந்த பிரச்னையிலிருந்தும் நாம் தப்ப முடியாமல் வளைத்துக் கொண்டிருக்கிறது. நல்லவனாக வாழ்வதே பிரம்ம பிரயத்தனமான வேள்வியாக உருவெடுத்திருக்கும் காலம் இது.

நல்ல வேளை இறை நம்பிக்கை என்பது பொய்க்கவில்லை. அந்த நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு நல்ல சிந்தனைகளை நம்முள் விதைத்துக் கொள்ள முடியுமா என்ற ஒரு யோசனையின் தீவிரம் தான் இந்தத் தியான பயிற்சி. நல்ல மனிதனாக வாழ்வதற்கான ஆரம்ப முயற்சி இறைவனை ஆதாரமாகக் கொண்டு பிர்மாணடமாக எழுந்து விட்டால் எந்த புற தீய சக்தியாலும் அதை வீழ்த்த முடியாது என்ற அடிப்படை நம்பிக்கை இந்த மாதிரியான தியானமாக உருபெற்றிருக்கிறது. இதனால் தான் நீங்கள் காணுகிற இந்த வித்தியாசங்கள். தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.

வாசிப்பவரின் மனத்தில் தோன்றும் இந்த மாதிரி ஐயங்கள் தான் சிறப்பாக இந்தத் தொடரை எழுதி பூர்த்தி செய்வதற்காக எனக்குக் கிடைத்த யானை பலம். யாருக்கு என்ன சந்தேகம் என்று தெரியாத சூழ்நிலையில் அது தெரிந்து விட்டால் தொடருக்கு பலம் சேர்ப்பது சுலபம். தொடர்ந்து வாசித்து வருபவருக்கு வாசிப்பு அனுபவத்தில் பூரண திருப்தி கிடைக்க வேண்டுமென்பது முக்கியம். அதனால் சந்தேகங்கள் களைந்து தொடர்ந்து வாசித்து பயில்வதே மிக முக்கியமாகப் போகிறது.

தொடர்ந்து வாசிப்பின் அனுபவத்தை பின்னூட்டங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன், சகோதரி. மிக்க நன்றி.

Related Posts with Thumbnails