மின் நூல்

Monday, December 30, 2019

மனம் உயிர் உடல்

26.   அன்னை  பாலா சரணம்


ந்தத் தியானத்திற்கு மிக முக்கியமானது இறைவன் ஒருவனே எல்லா சக்திகளையும் கொண்ட ஒரே தலைவன் என்ற உறுதியான எண்ணம் நம்  சிந்தனையில் கெட்டிப்பட்டு இருக்க வேண்டும்.    அடுத்தது நாம் நம்  சொந்த  நன்மைக்காக பிறருக்கு பாதிப்பில்லாத எந்த கோரிக்கை வைத்தாலும் இறைவன் கருணையால் அது நிறைவேறும் என்ற உறுதியான எண்ணம் நமக்கிருக்க வேண்டும்.  அடுத்தது அப்படி வேண்டிப் பெற்ற எந்த வரத்தையும் கிடைத்தற்கரிய விஷயம் அவன்  அருளால் நமக்குக் கிடைத்திருக்கிறது என்ற கிடைத்த வரத்தின் அருமை நம் மனசில் பதிந்திருக்க வேண்டும்.    பெற்ற வரத்தை மீறாமலிக்கிருக்க வேண்டும்.  இதெல்லாம் நாம் நம் நன்மைக்காகக் கொள்ளும்  உறுதிப்பாடுகள்.

அந்நாட்களில்  நீதி மன்றங்களில்  கூண்டேறி சாட்சியம் அளிக்கும் முன்  கையில் பகவத்கீதை நூலைக் கொடுத்து  தான் சொல்வதெல்லாம்  உண்மை என்று சாட்சியிடம் உறுதிமொழி வாங்கிக் கொள்வார்கள்.  அந்நாளைய  சில திரைப்படங்களிலும் இப்படியான  காட்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த அளவுக்கு கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் பெற்ற நூலாக இந்து மக்களுக்கு பகவத்கீதை இருந்தது.   இன்றும் பதவிப் பிரமாணங்கள் ஏற்கும் பொழுது கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்கும் சம்பிரதாயங்கள் நடைமுறையில் இருக்கின்றன.

இந்த தியானத்திலும்  பெறும் வரங்களுக்கான செல்வாக்கு மனத்தில் பதிய வேண்டும்,  அவற்றை மீறாதிருக்கும் படியான கட்டுப்பாட்டு உணர்வு நம்மில் இருக்க வேண்டும் என்பதற்காக  இதையெல்லாம் சொல்ல நேர்ந்தது.

நம்மை பீடிக்கும் சில நோய்களுக்கு நமது பழக்க வழக்கங்களே காரணமாக இருக்கின்றன. அப்படியான பழக்க வழக்கத்திலிருந்து  விலகி மீள வேண்டும் என்பதற்கு இந்த தியானம் மிகச் சிறந்த பயிற்சி.   தானே வரும் சிக்கல்களை தவிர நமக்கு நாமே  வர வழைத்துக் கொள்ளும்  சிக்கல்கள் எளிமையான வாழ்க்கையை இறுகச் செய்கின்றன.   இப்படியான சிக்கல்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள இந்த தியானம் நிச்சயம் உதவும்.

இந்த தியானத்தைக் கைக்கொள்வதற்கு இறை பக்தி அவசியம்.  இறை உருவை மனத்தில் இருத்தி வேண்டி 'இந்த மாதிரியான தீய குணத்திலிருந்து நான் மீள வேண்டும்' என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.  வேண்டுதல் மனசார, கள்ளம் கபடில்லாமல் இருக்கும் பொழுது வேண்டாத சில குணங்கள், அவற்றால் ஏற்படும் சிக்கல்களின் விலகலை நாமே உணர ஆரம்பிப்போம்.
உடல் நலனைப் பாதிக்கும்  குணங்கள்  மறுபடியும் நம்மை பீடிக்காமல் இருப்பது நம் உறுதியின் பாற்பட்டது.   அந்த உறுதிக்குத் தான் இறை வேண்டல் தேவையாக இருக்கிறது.   வேண்டுவோர் வேண்டல்  சாத்தியமாக ஆழ்ந்த இறைபக்தி தேவையாக இருக்கிறது.  அந்த பக்தி தான் வேண்டலை மனசில் வினைபுரிந்து சாத்தியமாக்குகிறது.  இப்படியான  ஒன்றுக்கு  ஒன்றான தொடர்பு பூர்த்தியாகும் பொழுது  நம் வேண்டலுக்கான பலன்  கிடைக்கும் என்பது  உறுதி.

'இப்படிச் செய்; அப்படிச் செய்' என்று யோசனை சொல்வதற்கு ஆயிரம் பேர் கிடைப்பார்கள்.  யோசனைகள் சொல்வதோடு முடிந்து விடக் கூடாது.  அதன்படி நடப்பது முக்கியம்.  மகாத்மா காந்தியடிகள் தன்னளவில் எந்த அகச்சோதனைகளையும் பரிசீலித்துப்  பார்த்து  விட்டுத் தான் அதை மற்றவர்களுக்கு பரிந்துரைத்தவர் என்பதனை நாம் அறிவோம்.  எந்த சோதனையிலும் ஆட்பட்டு அனுபவித்து மீண்டு பலன்  பெற்று அதை அனுபவிப்பதே அனுபவ பூர்வமான சந்தோஷத்தை அளிக்கும்.

இது ஒரு Process.   தியானத்திற்கு  உட்கார ஆரம்பித்ததிலிருந்து  பலன் கிடைக்கும் வரையான பல கட்ட உள்ளுணர்வுகள் முட்டி மோதி வேண்டிய பலன் கிடைப்பதற்கான படிப்படியான செயலாக்க உந்துதல்கள் நம்மில் நடைபெறும்.  அதைப் பற்றி விவரிப்பதற்கு முன் சென்ற பகுதியில்  எல்லோருக்கும் பொதுவான ஒரு வேண்டுதல் கவிதையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.  பலருக்கு  இந்தக் கவிதை பற்றித் தெரிந்திருந்திருக்கும்.  இந்த தியானத்திற்கு சுலபமாக மனசில் பதிகிற இந்த மாதிரி கவிதைகள் அவசியம் என்பதினால்  அதை இங்குக் குறிப்பிடுகிறேன்.  இந்தக் கவிதையை யாத்தவர் நெமிலி வெங்கட் கிரி என்ற பக்தர்.  உள்ளத்து உணர்வு பீரிடலாய் அன்னை பாலா திரிபுர சுந்தரியிடம் வேண்டிக் கொள்கிற அற்புத பிரவாகமாக ஒரு கவிதை தொகுப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்..  இறைவிக்கு 
தீபாராதனை செய்யும் பொழுது சொல்ல வேண்டிய அருட் கவிதையாக இந்தக் கவிதை அவர் உள்ளத்தில் மலர்ந்திருக்கிறது.  அந்தக் கவிதை  நாம் தியானம் செய்யும் பொழுது மனத்தில் விளக்கேற்றி வைத்து அன்னையின் அருள் வேண்ட துணையாயிருக்கும் என்பதினால் அதை இகு குறிப்பிடுகிறேன்.  கவிஞருக்கு நன்றி.

வழிபடுவதற்கு பலவித  ரூபங்களில் அம்பிகை நமக்கு  அருள்  பாலிக்கிறாள்.  ஒன்பது வயது குழந்தையாக,  பாலாவாக அம்பிகை வழிபாடு வழி வழி வந்த பழக்கம்.   சித்தர்கள் அம்பாளை  'வாலை' என்றே அழைப்பர்.  அகத்தியர், போகர், திருமூலர், கொங்கணார், கருவூரார்  என பல சித்தர்களும் வணங்கிய அன்னை பாலாவை வணங்கினால் உள்ளத்தில் நெடுநாட்களாக உறைந்து போயிருக்கிற வேண்டாத  சிந்தனைகள் பொசுங்கிப் போகும்.   வாழ்வில் வளம்,  குடும்பச் சிறப்பு, கல்வி கேள்விகளில் ஞானம்,  திருமண பாக்யம் போன்ற  வாழ்க்கைக்கான செல்வங்களை வாரி வழங்குபவள் அன்னை பாலா என்ற நம்பிக்கை பலருக்கு  உண்டு.   வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள ஊரான நெமிலியில் சத்திரம் தெருவில் அமைந்துள்ளது நெமிலி பாலா பீடம்.

இதோ அந்த அருட்  கவிதை:

அருள்மழை  பொழியும்
அன்னை பாலா
திரிபுர சுந்தரி சரணம்  -  உன்
அருமையை உணர்ந்து
பணிந்திடும் பக்தர்
கனவினில் நீயும் வரணும்
அன்னை பாலா சரணம்  -- நின்
அன்பினை எனக்குத் தரணும்            (அன்னை)

ஓரு முக விளக்கை
ஒற்றுமையுடனே
ஏற்றியே வைத்தோம் பாலா  -- உன்
ஒளி சிந்தும் முகத்தில்
ஒரு  சிறு புன்னகை
நீயும் காட்டிடு  பாலா!                       (அன்னை)

இருமுக விளக்கை
இங்குள்ள அனைவரும்
ஏற்றியே வைத்தோம் பாலா  -- எம்
இன்னல்கள் தீர
இன்பங்கள் சேர
அன்புடன் காத்திடு  பாலா!                (அன்னை)

மும்முக விளக்கை
முழு மனத்துடனே
ஏற்றியே வைத்தோம்  பாலா  -- எம்
முதலும்  முடிவும்
நீயே அன்றி
வேறோர் உளரோ பாலா                     (அன்னை)

நான்முக விளக்கை
நாதம் முழங்கிட
ஏற்றியே வைத்தோம்  பாலா  --  எம்                        
நாவினில்  என்றும்
உந்தன் பெயரே
நடமிட வேண்டும்  பாலா!  --  எம்
நாவினில் என்றும்
உந்தன் பெயரே               
நடமிட வேண்டும்  பாலா                  (அன்னை)

ஐம்முக விளக்கை
ஐம்புலனடக்கி
ஏற்றியே  வைத்தோம்  பாலா  --   வீண்
ஐயம் போக்கிடு
விரயத்தை நீக்கிடு
விந்தைகள்  புரிந்திடு  பாலா!            (அன்னை)

இப்புவி ஒளிர
இருபத்தியேழு
விளக்கினை ஏற்றினோம்  பாலா!  --  நீ
இருப்பது சேயாய்
காப்பது  தாயாய்
கவலைகள்  இல்லையே  பாலா      (அன்னை)

ஓரு முறை  இரு முறை
என மொத்தம் ஐம்முறை
துர்கா  தீபங்கள்  பாலா    - எம்
துயரங்கள் போக
துன்பங்கள்  போக
துணையென்றும் நீயே  பாலா!         (அன்னை)

பூரண விளக்கை
பரிபூரணமாய்
நாங்கள் அளித்தோம்   பாலா!   - உன்
பூஜைகள் காண
ஒருவித சிலிர்ப்பு
உள்ளத்தில் தோன்றுதே  பாலா        (அன்னை)

பூஜையின்  நிறைவாய்
பூவையின் நினைவாய்
தீபாராதனை  பாலா  --  இப்
பூவுலகெல்லாம்
அமைதி மலர்ந்திட
அருள் புரிவாயே  பாலா!       
அன்னை பாலா சரணம்  -- நின்
அன்பினை எனக்குத் தரணும்..             


-- நன்றி கவிஞர் நெமிலி வெங்கட்கிரிதர்

9 comments:

ஸ்ரீராம். said...

இந்தக் கவிதை கேள்விப்பட்டதில்லை. 

வே.நடனசபாபதி said...

இந்த தியானத்தைக் கைக்கொள்வதற்கு இறை பக்தி அவசியம் என்பதை அழுத்திச் சொல்லியிருக்கிறீர்கள். அப்படியென்றால் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் தியானம் செய்ய இயலாதா? ( இதை இறை மறுப்பாளர்களுக்காக கேட்கிறேன்,)

அன்னை பாலா திரிபுர சுந்தரியிடம் வேண்டிக் கொள்கிற அற்புத கவிதையை இயற்றிய நெமிலி வெங்கட் கிரி அவர்களுக்கு வாழ்த்துகள்! அதை வெளியிட்ட தங்களுக்கு பாராட்டுகள்!

G.M Balasubramaniam said...

விதைப்பதே விளையும் எனும்போது வேண்டுவதால் விளைச்சல் மாறும் என்று நம்பலாமா

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அப்படியா?..

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

இந்த தியானத்தில் இறை பக்தி என்பது ஒரு tool-லாக, கருவியாக செயல்படுகிறது. இறை நம்பிக்கை கொண்டோருக்கெல்லாம் அப்படியான ஒரு கருவி (tool) கிடைத்து விடும் என்றும் இல்லை. அதனால் இறை நம்பிக்கை இல்லாதோரும் இந்த தியானத்தில் தாராளமாக ஈடுபடலாம். இறை பக்தி கொண்டோன் இறைவனுக்கு ஆட்படுகிற மாதிரி இறை நம்பிக்கை இல்லாதோர் ஆட்பட வேறு ஏதாவது ஒரு tool அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அது தான் விஷயம்.

இந்த தியானத்தைக் கைக்கொள்வதற்கு இறை பக்தி அவசியம் என்பதை இந்த அர்த்தத்தில் தான் சொன்னேன். நல்ல சமுதாயம் உருவாவதற்கு இறை பக்தி கொண்டோர், கொள்ளாதோர் என்ற பாகுபாடெல்லாம் இல்லை.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

-- என்றார் பேராசான்.

இறைவனது திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க முடியும். மற்றவர்?..

வரும் அத்தியாயங்களில் இந்த தியானம் நம்முள் எப்படி செயல்படுகிறது என்பதை விளக்கும் பொழுது இந்த 'ஆட்படல்' சமாச்சாரம் வெகு தெளிவாகப் புரியும்.

சிந்திக்கிற தங்கள் வாசிப்பு அனுபவத்திற்கு நன்றி, ஐயா.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

சரியான கேள்வி. ஒரே வரியில் சரியான கொக்கி.

வேண்டுதலும் விதைப்பதில் சேர்ந்த முயற்சி தானே ஐயா?

கோமதி அரசு said...

//நம் சொந்த நன்மைக்காக பிறருக்கு பாதிப்பில்லாத எந்த கோரிக்கை வைத்தாலும் இறைவன் கருணையால் அது நிறைவேறும் என்ற உறுதியான எண்ணம் நமக்கிருக்க வேண்டும். //

பிறருக்கு பாதிப்பில்லாத கோரிக்கை அது தான் அருமை.

கோமதி அரசு said...

அன்னை பாலா திரிபுர சுந்தரியிடம் வேண்டிக் கொள்கிற அற்புத பாடல் படித்தேன்.
அன்னை பாலா திரிபுர சுந்தரி போற்றி போற்றி!

உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்திர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

ஜீவி said...

@ கோமதி அரசு

வாங்க, கோமதிம்மா.

இந்தப் பாடலை தினமும் பூஜையில் விளக்கேற்றி வழிபடும் பொழுது என் மனைவி பாடுவார்கள். அன்னைப் பாலாவின் அன்பை வேண்டிப் பெறும் இந்தப் பாடல் இந்த தியானத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்பதினால் குறிப்பிட்டேன். தங்களுக்கு இந்தப் பாடல் முன்பே தெரிந்ததாக இருக்கும் என்றும் நினைத்திருந்தேன். பாடலைக் குறித்துக் கொள்ளுங்கள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள். தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

Related Posts with Thumbnails