மின் நூல்

Sunday, January 12, 2020

மனம் உயிர் உடல்

28.  இந்தியத் தத்துவ  ஞானம்


சென்ற பதிவு பின்னூட்டத்தில்----

 'தியானத்தின் காரணமாய் மனம் ஒருநிலைப்பட்டு அதனால் அமைதியாகச் சிந்திக்கும் பலம்  பெருகும் என்று நினைக்கிறேன்' என்று ஸ்ரீராம் சொல்லியிருந்தார்.

அன்பர் நடனசபாபதி  அவர்களோ  'மனதை ஒருமுகப்படுத்தி நல்ல விஷயங்களை  நினைத்தாலே நல்ல எண்ணங்கள் உருவாகும் என நினைக்கிறேன்.   அது  பற்றித்  தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்'  என்று கேட்டிருந்தார்.
                                                                                                                 
நம் இதிகாச புராணங்கள்  நம் பாரத தேசத்தின் பண்பாட்டுக் களஞ்சியங்கள். கதை போல எத்தனையோ அரிய விஷயங்களை விளக்கிச் சொல்லி நல்ல மனிதனை உருவாக்குவதில் தன் பங்கை செறிவாக ஆழப் பதிக்கின்றன.  அற நெறிகள் என்றால் என்ன என்பதனை இவர் வாழ்க்கையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்ற கோட்பாட்டிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் மகாபாரதத்து தரும புத்திரர்.   இருந்தும்  சூதாட்டம் என்ற பாவச்செயலிலிருந்து அவராலும் தப்ப முடியவில்லை.    மிகச் சிறந்த கிருஷ்ணதாசனாகத் திகழந்த  அக்ரூரர், சியமந்தகம் என்ற மணிக்காக கண்ணனுக்கே துரோகம் இழைக்கும் பாவச் செயலுக்கு ஆளானார்.  இப்படி நிறைய உதாரணங்கள்.

யோசித்துப் பார்த்தால் ஒன்று  நமக்குத் தெரியும்.   நம்மால் நடப்பன என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அத்தனை காரியங்களும் நம்மில் படிந்திருக்கிற நம் குணங்களால் தான் நிகழ்த்தப்படுவது  நமக்குப் புரியும்.
'மனத்திலோ,  வாக்கிலோ, உடலிலோ நிகழுகின்ற எல்லாச் செயல்களும் மனிதனிடத்தில் பதிந்திருக்கிற அவனது  குணத்தால் தான் நடக்கின்றன' என்று அர்ஜூனனுக்கு  பகவான் கிருஷ்ணர் ஞானோபதேசம்  செய்வதாக பகவத்கீதையில் ஒரு  ஸ்லோகம் உண்டு.

சுவைஒளி ஊறுஓசை  நாற்றம் என்றனைந்தின்
வகைதெரிவான்  கட்டே உலகு

-- என்று  சொல்லுவார் பேராசான்.

இந்தியத் தத்துவ கோட்பாடுகளின்படி பார்த்தால் ----

சுவை, ஒளி, ஊறு,  ஓசை, நாற்றம்  இந்த ஐந்தையும் அறிந்து  அனுபவிக்கிறது  மனம்.  இதனைத்  தாண்டியவைகளையும்  சிந்தித்துச் செயல்பட அறிவு  இருக்கிறது.  அந்தந்த நேரத்து உணர்வில் துடிக்க  உணர்ச்சி என்னும் அகங்காரம் இருக்கிறது. 

இவற்றைக் கட்டி ஆள மூலப்பிரகிருதி என்னும்  படைப்பரசன்.

மண், வான், வளி, புனல், அனல்  -- என்னும் ஐம்பெரும் சக்திகள்.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் --  என்னும் அந்த சக்திகளின் குணங்கள்.

மெய், வாய், கண், மூக்கு, செவி  -- என்னும் உணரும்  ஐம்புலன்கள்.

உடலை உள்நின்று இயக்கும் பிராணவாயு, சமான வாயு, உதான வாயு, அபான வாயு, வியான வாயு என்று   ஐந்து வகை பிராண சக்திகள்

--  இவை எல்லாமே அந்த மூலப் பிரகிருதியிலிருந்து தோற்றம் கொண்டவை.

பூதங்கள் ஐந்து,   அந்த பூதங்களின் குணங்களும் ஐந்து,  குணங்களை அறிகின்ற புலன்கள் ஐந்து,  உடலை உள்நின்று இயக்குகிற பிராண சக்தி  ஐந்து --  ஆக இந்த இருபதும்,  அதோடு சேர்ந்த  அகங்காரம், புத்தி, மனம் என்னும் மூன்றும் சேர்ந்து இருபத்து மூன்றும் மூலப்பிரகிருதியினடமிருந்து தோன்றியவை.  மூலப்பிரகிருதியையும்  சேர்த்து 24 தத்துவங்கள் என்று சொல்வது மரபு.

நம்முடைய உயிர் என்ற இயக்கம் இந்தத் தத்துவக் கோட்பாடுகளில் சேராமல் தனித்த இயக்கமாக இருக்கிறது.

மூலப்பிரகிருதியிலிருந்து தான் மேற்சொன்ன இருபத்து மூன்றும் ஆக்கப்பட்டு இருப்பின் மூலப்பிரகிருதி எதனால் ஆக்கப்பட்டது  என்ற கேள்வி எழுகிறது.

சத்துவகுணம்,  இரஜோகுணம், தமோ குணம் என்ற மூன்று குணங்களல் மூலப்பிரகிருதி உருக்கொண்டிருப்பதாக  இந்திய தத்துவயியல்  இயம்பியிருக்கிறது.

சரிவிகித சம உணவு  நமக்குத் தெரியும்.  ஆரம்பக் கல்விக்கால பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறோம்.    அதே மாதிரி சத்துவகுணம்,  இரஜோகுணம், தமோ குணம் என்ற இந்த முப்பெருங்குணங்களும் சமமான அளவில் ஒன்றுபட்டிருப்பது தான்  மூலப்பிரகிருதியாம்.

இந்த முப்பெருங்குணங்கள் என்ன என்றும் அவை சமமான அளவில் ஒன்று பட்டு  மூலப்பிரகிருதி உரு எடுத்தால் என்ன நிலை ஏற்படும் என்பதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(வளரும்)

4 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நம்மால் நடப்பன என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அத்தனை காரியங்களும் நம்மில் படிந்திருக்கிற நம் குணங்களால் தான் நிகழ்த்தப்படுவது நமக்குப் புரியும்.....முழுமையாக இதனை ஏற்கிறேன். பல முறை நான் உணர்ந்துள்ளேன். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள மனம் ஏனோ தயங்குகிறது.

கோமதி அரசு said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்
வாழ்க வளமுடன்.

என் வணக்கங்கள்.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam, A.R. (Retrd)

//நிகழ்த்தப்படுவது நமக்குப் புரியும்.. //

மனதின் ஒத்துழைப்பால் தான் இது நமக்குப் புரியவே செய்கிறது. இன்னும் ஆழ அதன் ஒத்துழைப்பு கிடைக்கக் கிடைக்க ஏற்றுக் கொள்ளவும் செய்யும்
ஐயா. தங்கள் தொடர் வாசிப்பு அனுபவத்திற்கு நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, கோமதிம்மா.

தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் இறை அருள் துணையுடன் வாழ்க வளமுடன்.

Related Posts with Thumbnails