மின் நூல்

Monday, January 6, 2020

மனம் உயிர் உடல்

27.   எண்ணம்  போல  வாழ்க்கை

ரு மனிதனின் பெயர்,  அந்த மனிதன் இல்லை என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் தான்.   அதாவது  ஒருவரின்  பெயர் என்பது அந்த நபரைக் குறிப்பதோடு சரி.  ஒரே பெயர் கொண்டிருக்கும் பலரும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்கிற அளவில் பெயர் அவரவர் அளவில் சுருங்கிப் போய் விடுகிறது.

பின் ஒரு மனிதனைப் பிரநிதித்துவப்படுத்துவது எது என்ற கேள்வி எழுகிறது. மனிதனை மனிதனாக உலாவச் செய்வது அவனது எண்ணங்களும் அதையொட்டிய அவனது நடவடிக்கைகளும் தான்.  ஒவ்வொரு மனிதனும் அவன் குண நலன்களால் தான் நிர்ணயிக்கப் படுகிறான் என்று சொன்னால் அடிக்க வருவீர்களோ?

மாட்டீர்கள்.  ஏனென்றால் சில விஷயங்கள்  சீந்தப்படாதவைகளாக ஆகி விட்டன.  அவற்றில் தனி மனிதனின் குணங்கள் ஒன்று.   நல்ல குணவான் களுக்கு வாழத்தெரியாத ஆசாமி என்று பைத்தியக்கார பட்டம் சூட்ட தயாராக இருக்கும்  புண்ணிய பூமி இது.

தான் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.   A  to  Z  -- எல்லாவற்றையும் உயிர் போவதற்கு முன் அனுபவித்துப் பார்த்து விட வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கும் காலம் இது.    உடல் ஆரோக்கியத்தை ஃபோக்கஸ் பண்ணி எதைச் சொன்னாலும்  பெருவாரியான மக்கள் காது  கொடுத்து கேட்கிறார்கள், விழி பதித்து வாசிக்கிறார்கள் என்று  உலகளாவிய  புள்ளி விவரக் கணக்கொன்று பரிந்துரைக்கிறது.   இதனால் தான் நம்  வார, மாத பத்திரிகைகளில் பெரும் மாற்றங்கள்  ஏற்பட்டிருக்கின்றன. குடும்ப  மாதாந்திர பட்ஜெட்டில் அழகு சாதன செலவுகளுக்காக ஒதுக்கும் தொகை கணிசமான ஒன்றாய் இடம் பிடித்திருக்கும் காலம் இது.

உடல் நலனிலிருந்து  லேசாக கிளை பிரிந்து மன நலம் என்று போனால் கூட கொட்டாவி விடும் கூட்டம் தான் அதிகம்.   ஆண்களுக்கு  பெண்கள் விரும்புகிற மாதிரி என்ற ஒரே ஒரு  ஆப்ஷன் தான்.  பெண்களுக்கு அதே மாதிரி ஒரே ஒரு ஆப்ஷன் சொல்ல வேண்டுமென்றால்  உடல் சதை போட்டுப் பருமன் கொள்ளாமல் இடை சிறுத்து  ஒல்லியாக (லீனாக)  இருக்க வேண்டும் என்பது தான்.   உடுக்கை போலவான இடை என்று பழந்தமிழ்  இலக்கியங்களில் வரும்.   அந்த மாதிரி.

உடல் வெளி அழகு  கவர்ச்சிக்கு.  சரி.  உடல் உள் அழகு?..  அது  மன ஆரோக்கியத்திற்கு.   மன ஆரோக்கியத்திற்கும்  உடல் ஆரோக்கியத்திற்கும் பாலம் போட்டிருப்பது தான் சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சிகள்.   கடவுளை சாட்சியாக வைத்துக் கொண்டு மனப்பயிற்சியின் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பெறுவதற்குத் தான் இந்த தியான  பயிற்சி முறை என்றால் இந்த தியான முறைக்கு இன்னும் கொஞ்சம் ஃபோக்கஸ்  கிடைக்கும் என்பது இன்றைய நிலை. 

வாழ நேர்ந்த வாழ்க்கையில் கீழ்க்கண்ட  உணர்வுகள்  மன ஆரோக்கியத்தை சிதைத்து  உடல் ஆரோக்கியத்தை  குலைக்கும் என்கிறார்கள்.

1.  கோபம்
2.  ஏமாற்றம்
3.   பதட்டம்
4.  பயம்
5.  பாசாங்கு                                                                         
6.  அதீத தயக்கம்
7.  வெறுப்பு
8.  சோம்பல்

--- என்று நிறையச்  சொல்லலாம். 

மேற்சொன்ன மாதிரியான  செயல்களுக்கு நாம் ஆட்படும் பொழுது  மூளைப் பகுதியில்  நடக்கும் நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ள உடல் சாத்திர  அறிவியலில்  நிறைய ஆராய்ந்திருக்கிறார்கள்.   எஃப்.எம்.ஆர் (Functional Magnetic Resonance Imaging)  என்கிற தொழில் நுட்ப  ஆற்றலில் கணினி உதவியுடன்  மூளை இயக்கங்களை  அறிந்து கொள்ள வசதிகள்  கூடியிருக்கின்றன.  இந்தத் துறையில் ஃபங்ஷனல் எம்.ஆர்.ஐ..   PET (Positron Emission Tomography)  என்ற நுண்ணிய கருவிகளின் பங்களிப்பு  அனந்தம்.

நம் உடல் இயக்கம் என்பது வெளிச் செயல்பாடுகளோடு சம்பந்தப்பட்டது.  நம் எண்ணங்கள் தாம் நம் செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன என்பது அடிப்படை உண்மை.   ஆக, நம்  நல்ல எண்ணங்களின் மூலம்  உடலின் உள் இயக்கத்தை நம் இஷ்டப்படி அமைத்துக் கொள்ளலாம் என்ற சூத்திரம் தான் இந்த தியானத்திற்கான ஆதார உண்மை.  கோயிலில் போய்  கடவுளை கும்பிட்டு விட்டு நமக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பது போல  அல்ல இது.  இறை சக்தியை சாட்சியாக வைத்துக் கொண்டு    நம்மில் நல்ல  எண்ணங்களின் உருவாக்கலுக்காக  இந்த தியான முயற்சி என்று கொள்ளுங்கள்.  சாட்சி என்பது  நாம் கொள்ளும் உறுதிகளில் வழுவாமல் இருப்பதற்காக நமக்கு நாமே  விதித்துக் கொள்ளும் ஒரு கட்டுப்பாடு.   உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக  நீங்களே நம்பும் உங்கள் கடவுள் துணையாக இருந்து  வழி நடத்துவான் என்ற நம்பிக்கை ஆழ உங்கள் மனசில் படிய வேண்டும் என்பது அடிப்படையான உணர்வாக இந்தத் தியானத்தை மேற்கொள்பவர்களுக்கு இருக்க வேண்டும்.

ஆத்திரம்,  பொறாமை போன்ற உணர்வுகளில்  நீங்கள் சிக்கிக் கொள்ளும் பொழுது மூளையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அதி வேகத்தில் இரத்தம் பாய்கிறது.  அதை மாதிரி சாந்தமாக இருக்கும் பொழுது,  சந்தோஷமாக இருக்கும் பொழுது -- என்ற நேரங்களில் நம் மூளையில் ஏற்படும்  ஆரோக்கியமான மாற்றங்களையும்  நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

இது தான் நம் எண்ணப்படி உடல் உள் உறுப்புகளின்  ஆரோக்கியத்தை அமைத்துக் கொள்வது.   இந்த தியானத்தின் மூலம் அதை எப்படி செயல்படுத்தலாம் என்று பார்ப்போம்.

(வளரும்)

12 comments:

G.M Balasubramaniam said...

எந்த ஒரு கருத்தும் அனுபவ அடிப்படையில் இருந்தால் நீடித்து இருக்கும்

கோமதி அரசு said...

தியானத்தின் மூலம் நம் மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்பதை தெரிந்து கொள்ள வருகிறேன்.
அருமையான பதிவு.

Bhanumathy Venkateswaran said...

தியானம் செய்வதன் மூலம் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நெகடிவ் உணர்ச்சிகள் வராமல் தடுக்க முடியுமா என்று அறிய ஆவலாக இருக்கிறேன். 

ஸ்ரீராம். said...

உண்மையைச் சொன்னால் அடிக்க வருவானேன்?  அதுவும் அனைவரும் அறிந்த எளிய உண்மை.   ஆனால் சமயங்களில் அது பணம் படைத்தவர்களிடம் பம்மி விடுகிறது.

ஸ்ரீராம். said...

தியானத்தின் காரணமாய் மனம் ஒருநிலைப்பட்டு அதனால் அமைதியாகச் சிந்திக்கும் பலம் பெருகும் என்று நினைக்கிறேன்.  தொடர்கிறேன்.

ஜீவி said...

@ GMB

ஆமாம். அனுபவ அடிப்படையில் இருந்தால் தான் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் என்பது மட்டுமல்ல, அவற்றை எடுத்துரைக்கவே ஒரு தகுதி கிடைத்திருப்பதாக மனம் உணரும். நன்றி, ஐயா.

ஜீவி said...

@ கோமதி அரசு

தொடர்ந்து வாசித்து வருவதில் மகிழ்ச்சி.

ஜீவி said...

@ Bhanumathy Venkateswran

தொடர்ந்து வாசித்து வாருங்கள். உந்துதல் கிடைக்கும்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஒதுக்கி வைத்து விட்ட உண்மைகளுக்கு பலமும் பெருமையும் கிடைக்கட்டும். அதற்காகத் தான் இவ்வளவு பிரயத்தனங்களும்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

நிச்சயமாக.

வே.நடனசபாபதி said...

மனதை ஒருமுகப்படுத்தி நல்ல விஷயங்களை நினைத்தாலே நல்ல எண்ணங்கள் உருவாகும் என நினைக்கிறேன். அது பற்றி தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.

நம் எண்ணப்படி உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை அமைத்துக் கொள்வது என்பதை அறிய தொடர்கிறேன்.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

நல்ல விஷயங்களை நினைத்தாலே நல்ல எண்ணங்கள் உருவாகும் என்பது வெகு சுலபமான வழி. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை.

ஒரு நல்ல எண்ணத்திற்கு எதிர்மறையாக இருக்கும் தீய எண்ணத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டு அது ஒதுக்கப்பட வேண்டும். உதாரணமாக நமக்கு நாமே உண்மையாக இருப்பதற்கு உண்மைக்கு எதிரான பொய்மையின் மீது வெறுப்பு ஏற்பட்டு அது நம்மில் படியாமல் ஒதுக்கித் தள்ள வேண்டும்.

இந்த மாதிரி.. பதிவில் வரிசைக்கிரமமாக அதை எப்படிக் கைக்கொள்வது என்பது பற்றிச் சொல்கிறேன்.

தொடர்ந்து வாசித்து வருவதில் மகிழ்ச்சி, ஐயா.

Related Posts with Thumbnails