மின் நூல்

Wednesday, June 3, 2020

உயிரில் கலந்து உணர்வில் ஒன்றி....

மேட்டுப்பாளையத்திலேயே லேசான சிலுசிலுப்பு ஆரம்பித்து விட்டது, மனசுக்குள் உற்சாகத்தை உலுப்பி விட்ட மாதிரி இருந்தது.

"உமா.. இரண்டு எலுமிச்சம்பழம் வாங்கிக்கட்டுமா?" என்றான் உமாபதி. பஸ் நிலையத்தின் வெளிப்பக்க மூலையில் ஒரு கிராமத்து பாட்டி கோணியில் குவித்து வைத்திருந்த மஞ்சமஞ்சேரென்ற பழங்களைப் பார்த்த்தும் தான் அவனுக்கு இந்த நினைப்பு வந்தது.

"எதுக்கு?" என்று கேட்கிறமாதிரி உமா வில்லாக புருவங்களை வளைத்தாள்.

"மேட்டுப்பாளையம் தாண்டியவுடனேயே ஆரம்பித்து விடும். வழிபூரா வளைந்து வளைந்து ஹேர்-பின் பெண்ட்ஸ்" என்றவன், அவளுக்கு மிக நெருக்கத்தில் வந்து "அதுக்கும் எலுமிச்சைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறாயா?" என்றான்.

"உவ்வே தானே?" என்று அவள் முகத்தை இயல்பாக சுளித்துக் காட்டிய பொழுது, அவளை அப்படியே அள்ளி எடுத்து பஸ் நிலையம் என்றும் பாராமல் ஒரு சுற்று சுற்றலாம் போலிருந்த்து உமாபதிக்கு. அறிவுக் கொழுந்து தான். ஒரு விஷயத்தை சுட்டி பேசினதுமே, எப்படிப் பாயிண்ட்டைப் பிடிக்கிறாள் என்று அவனுக்கு ஆச்சரியம். இப்படிப்பட்ட ஒரு மனைவி கிடைத்ததில் பெருமை.

"அதெல்லாம் எனக்கு வராது.. கொடைக்கானலில் இருந்திருக்கேன் இல்லையா, இந்த சுத்தல் எல்லாம் எனக்குப் பழக்கப்பட்டது தான்" என்றாள்.

"எதுக்கும் வாங்கிக்கறேன். எனக்கு சும்மாக்காச்சும் கையிலேயாவது வச்சுக்கணும்" என்ற உமாபதி பாட்டி கேட்ட காசைக் கொடுத்து இரண்டுக்கு நாலாகவே வாங்கிக் கொண்டான்.

"உமா.. வாங்க.. பஸ்ஸை எடுக்கப் போறான் போலிருக்கு.." என்று ஒரு சினிமா போஸ்டரைப் பார்த்து தயங்கி நின்றவனை அவசரப்படுத்தினான் அவள்.

"அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் எடுத்திடமாட்டான். இன்னும் டிக்கெட்டே சேரலே.. எடுக்கற மாதிரி, ஒரு 'பாவ்லா'; அவ்வளவு தான். உமா, நீ என்ன செய்றே?.." என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவன், அவளைப் பார்த்து சிரித்தான்.

"என்ன, உமா?.." என்று அவள் திகைக்க, "எஸ்.. இதான்.. இதான்.." என்று சொல்லி மீண்டும் சிரித்தான்.

எதற்குச் சிரிக்கிறான் என்று தெரியாமல் அவள் விழித்தாள். "எதற்கு உமா இந்த சிரிப்பு?" என்றவள் கைபிடித்து அழுத்தினான். "என்னப் பொருத்தம், இந்தப் பொருத்தம்'னு ஒரு சினிமா பாட்டு இருக்குலே, அது போல இருக்கு, நம்ம பொருத்தம்", என்று மீண்டும் சிரித்த பொழுது அவளுக்குப் புரிந்து விட்டது.

"நீயும் என்னை 'உமா'ன்னு கூப்பிட, நானும் உன்னை 'உமா'ன்னு கூப்பிட பாக்கறவங்க, என்னாடா இது சரியான பைத்தியங்களா இருக்குன்னு நெனைக்கப் போறாங்க.."

"அதுக்கு என்ன செய்யறது?.. அத்தனைப் பொருத்தங்களோட, இப்படிப் பெயர் பொருத்தமும் அமைஞ்சிடுச்சி... இவங்களுக்காக பெயரையா மாத்திக்க முடியும்?"

"ஒண்ணு செய்யலாம். உன் பேரை ஒண்ணும் செய்ய முடியாது .. என் பேரை.. ஆங்.. என்னை நீ இனிமே, 'பதி'ன்னு கூப்பிடேன்"

"குட்.. பதியே.. பிராணநாதா.." என்று அடக்கமுடியாமல் சிரிப்பை அடக்கிக் கொண்டு உமா கூப்பிடச் சிரித்தான் உமாபதி.

இந்தப் புதுமணத் தம்பதிகளே இப்படித்தான். பெரிசா விஷயம்னு எதுவும் வேண்டாம். எதை ஒட்டியும் சிரிப்புத்தான்.  எதைப் பார்த்தாலும் புதுசு தான்.

போனவாரம் கல்யாணம். இப்போ ஹனிமூனுக்கு ஊட்டி. நேரே குன்னூர் போய் சிம்ஸ் பார்க்கில் ஒரு சுற்று சுற்றி சாயந்திரம் ஊட்டியில் பிரபல ஹோட்டல் ஒன்றில் அடைக்கலம் ஆகி, அதைத் தொடர்ந்து நாலு நாளைக்கு ஊட்டியில் தான்; ஒத்தகமந்துவில் தான்; உதகையில் தான்.

நிஜமாகவே பஸ்ஸை எடுத்து விட்டான். ஓடிவந்து ஏறிக் கொண்டவர்கள் முதலிலேயே குறித்து வைத்திருந்த ஜன்னலோர சீட்டில் அமர்ந்து கொண்டார்கள்.

உமாபதி சொன்னது சரிதான். மேட்டுப்பாளைய மலை அடிவார எல்லை தாண்டியவுடனேயே, சுற்றிச் சுற்றி மேலேறும் மலை வளைவுச் சுற்றுகள் ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு நீண்ட திருப்பத்துக்கும் சீட்டின் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் பயணிகள் 'சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடு' என்று அலைக்கழிக்கப் பட்டார்கள்.  
                                             
உமாபதியும், உமாவும் அமர்ந்திருந்தது இருவர் அமரும் இருக்கை ஆதலால் இந்த சாய்தல் அவர்களிடையே உள்ளார்ந்த ஒரு சந்தோஷத்தைத் தான் கொடுத்தது. அதுவும் புதுமணத் தம்பதிகளாதலால், போகப்போக சந்தோஷம் கிளர்ச்சியாக உருமாறியது. பதியின் பரந்த தோளில் மெதுவாகச் சாய்ந்து கொண்ட உமா, பயணசுகத்தை மனசார அனுபவிக்கத் தொடங்கினாள்.


கல்லார் வந்ததும் பஸ்ஸைச் சுற்றி பழங்கள் விற்போரின் கூப்பாடு கேட்டது.

"பழம் வாங்கிக்கலாமா, உமா?"

"உம்.."

இப்பொழுதும் வயசான ஒரு பாட்டியிடம் தான் ஜன்னல் வழியாகவே கைநீட்டி, வால் பேரிக்காய்களும், குட்டி ஆப்பிள்களும் வாங்கிக் கொண்டான். பாட்டி அவற்றைத் தனித்தனியே காகிதப் பைகளில் இட்டுத் தந்தது உமாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சுற்றுப்புறச் சூழலைக் காக்கும் உணர்வு இவ்வளவு தூரம் மலையேறி வந்ததில் மனசுக்குள்ளேயே சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.

வழிபூராவும் இயற்கை அன்னை மலர்ந்து சிரித்து தன் மடியை விரித்திருந்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் பசேல். பலா மரங்கள் சுமக்க மாட்டாத சுமையுடன் பழங்களைச் சுமந்து கொண்டு நிமிர்ந்து நின்றிருந்தன. குட்டிகள் மாரில் கவ்வியிருக்க மரத்திற்கு மரம் தாவிக்கொண்டிருந்த குரங்குக் கூட்டங்களைப் பார்த்துக்
கொண்டாட்டமாக இருந்தது உமாவுக்கு. பாதை மலைச்சரிவுகளுக்கிடையே சலசலத்த சுனைகளின் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

லேசான முணுமுணுப்புக்கள் மாதிரி ஏதேதோ அவர்கள் பேசிக்கொண்டு வருகையிலேயே, குன்னூர் வந்துவிட்டது. 'மலைகளின் ராணி வரவேற்கிறாள்' என்று இங்கேயே ஆரம்பித்து விட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்டு, பஸ் குன்னூருக்குள் நுழைந்தது.

இறங்கியதும், "ஏதாவது சாப்பிட்டு விட்டு, மேற்கொண்டு போகலாமா?" என்று உமாவிடம் கேட்டான் உமாபதி.

"சிம்ஸ் பார்க்குக்கு எப்படிப் போகணும்?"

"இந்த இடம் கீழ்க்குன்னூர். பார்க் மேல்குன்னூரில் இருக்கிறது. இதோ இந்த மலைப்பாதை வழியே மேலேறிப் போக வேண்டும். மேலே போனால், காடு மாதிரி பிர்மாண்டமான பூங்கா. நாம் தனிவண்டிலே போகலாம். அதுக்கு முன்னாடி ஏதாவது லைட்டா ஹோட்டலில் சாப்பிட்டுப் போகலாம்."

"சரி.." என்று தலையசைத்தாள் உமா. ஒரு சின்ன சூட் கேசும், பழங்கள் ஸ்நாக்ஸ் அடங்கிய ஜோல்னாப் பையும். ஜோல்னாப் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு சூட்கேஸைத் தூக்கிக் கொண்டான் உமாபதி.

"நீங்களே ஏன் இரண்டையும் சுமப்பானேன்?" என்று அவனிடமிருந்து ஜோல்னாப் பையை வாங்கிக் கொண்டு தன் தோளுக்கு மாற்றிக் கொண்டாள் உமா.

"கொஞ்ச தூரம் தான். அதோ இருக்கே, ரயில்வே ஸ்டேஷன்.. அதுக்கு முன்னாடியே ஒரு பெரிய ஹோட்டல் இருக்கு.." என்று நடந்தான் உமாபதி.

ஹோட்டல் அந்த மலைப்பகுதி சாயலில் கொஞ்சம் விஸ்தாரமாகவே இருந்தது. சிற்றுண்டி சாப்பிட்டார்கள். அதுவும் இரண்டு வகை வரவழைத்து, இதில் பாதி அதில் பாதி என்று இரண்டு வகைகளையும் இரண்டு பேரும் மாற்றிக் கொண்டு சுவைத்தார்கள். "கூல் டிரிங்க்ஸ் ஏதாவது சாப்பிடலாமா?" என்றாள் உமா.

"ஓ.." என்று அவள் சொன்னதிற்கு 'ஓ' போட்டுவிட்டு, வழங்குபவர் வந்ததும், ஒரே ஒரு கூல்டிரிங்கை வரவழைத்தான். வழங்குபவரும் புரிந்து கொண்டு பெரிய அளவு கண்ணாடிக் கோப்பையில் குளிர்பானத்தை நிரப்பி இரண்டு ஸ்ட்ரா போட்டு எடுத்து வந்தார்.

"என்னங்க, இது?.. யாராவது பார்த்தா என்னவாவது நெனைச்சுக்கப் போறாங்க.." என்று பதியிடம் கிசுகிசுத்தாள் உமா.

"கணவன்-மனைவி சேர்ந்து வந்தால், இங்கெல்லாம் இதான் வழக்கம். நான் என்ன இரண்டு ஸ்ட்ராவா கேட்டேன்?.. அந்த சிப்பந்தியே புரிந்துகொண்டு இரண்டு கொண்டுவரவில்லை?" என்று ஒரு ஸ்ட்ராவில் உதடைப் பொருத்தினான் உமாபதி. "இன்னொண்னு உனக்கு.." என்று இன்னொரு ஸ்ட்ராவை அவள் பக்கம் திருப்பி வைத்தான்.

இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்தபடியே லேசான நாணத்துடன் இன்னொரு ஸ்ட்ராவைக் கவ்வினாள் உமா. முகம் நெருங்கிய நெருக்கத்தில் அவளைப் பார்க்க இரக்கமாக இருந்தது உமாபதிக்கு. 'நல்ல புத்திசாலியான பெண்; வாழ்க்கை பூராவும் கூட வரப்போகிறவள். கொஞ்சம் பூஞ்சைதான்; நிறைய வாங்கிக் கொடுத்துத் தேற்ற வேண்டும்' என்று எண்ணிக் கொண்டான். 'பாவம், எவ்வளவு பரிவுடன் இருக்கிறார்.. என்மேல் தான் எவ்வளவு ஆசை. பார்த்துப் பார்த்து எல்லாம் பண்ணிப்போட்டு நிம்மதியாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்று நினைத்துக் கொண்டாள் உமா.

கொஞ்ச நேரம் கழித்து ஏதோ அவளிடம் சொல்ல உமாபதி தலைநிமிர்ந்த பொழுது, வைத்த குளிர்பானம் கொஞ்சம் கூடக் குறையாமல் அப்படியே இருந்தது. "என்ன நீ குடிக்கவில்லை?" என்று அவளைப் பார்த்துத் திகைத்தான் உமாபதி. "வெட்கமா இருந்தா தனியா இன்னொண்னு வரவழிச்சுடலாமா?"

"வேண்டாம்.. வேண்டாம்" என்று அவசரமாக மறுத்தவள், "அட! நீங்களும் குடிக்கவில்லையா?" என்று அவனைப் பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரித்தாள்.

இரண்டு பேருக்கும் இப்போது புரிந்தது. 'பாவம், இவன் குடிக்கட்டும்' என்று ஸ்ட்ராவில் அவள் உறிஞ்சாமல் இருக்க, அரும்பு கட்டியிருந்த அவள் நெற்றி வியர்வை பார்த்து 'பாவம், குளிரக் குளிர இவள் குடிக்கட்டும்' என்று அவன் ஸ்ட்ராவோடு உதடு மட்டும் உரச சும்மா இருக்க, கடைசியில் இரண்டு பேருமே உறிஞ்சாமல் கண்ணாடிக் கோப்பையில் குளிர்பானம் குறையாமல் வைத்தது வைத்தபடி இருக்க,... சிரிக்கத்தான் வேண்டும்!...

பார்த்துப் பார்த்து பரிதாபிக்கும் இந்த புருஷன் பெண்டாட்டி தம்பதிப் பிரியம், ஒருவரின் மேல் ஒருவர் வைத்திருக்கும் கரிசனை, அன்பு, ஆசை இன்னும் என்னன்னவோவெல்லாம், இன்று பார்ப்பது கூட காலங்காலமாய் தொடர்ந்துவரும் சங்கிலித் தொடரின் இன்றையக் கண்ணிதான்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மெத்த விஷயங்கள் தெரிந்தவர் என்று பீற்றிக்கொள்ளும் மனிதர்களை விட்டுத்தள்ளுங்கள்...

இந்தப் பரிவையும், பாசத்தையும் படம் பிடித்துக் காட்டும் சங்ககால இந்தக் காட்சிதான் நம்மை பரிதவிக்கச் செய்கிறது.

சின்ன குட்டைதான் அது. குட்டை என்று கூடச் சொல்ல முடியாது. ஏதோ கொஞ்சமே நனைந்த பிரதேசம். அந்தச் சின்னத் தேங்கலில் சிறிதளவே நிறைந்திருக்கும் நீர். அதுவும் லேசாகக் கலங்கியிருக்கிறது.

வெளிவெப்பத்தின் தாக்கம் நாவை வரளச் செய்கிறது. மருண்டு மருண்டு வந்த மான் ஜோடி ஒன்று, இந்தக் குட்டை நீரைப் பார்த்தும், இன்னும் நா வரள சேர்ந்து ஓடிவருகின்றன. வந்த இரண்டும் நீர் நனையும் இடத்தில் கால் பதித்துத் தலை குனிகின்றன.

"சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் -- கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.

--ஐந்திணை ஐம்பது (பாலைத்திணை)

அவை இரண்டும் ஆணும் பெண்ணுமான கலைமானும், பிணைமானும். நடந்தது இது தான். நா வறட்டும் தாகத்தில் தண்ணீர் கண்ட சடுதியில், ஓடிவந்து இரண்டும் தண்ணிரில் வாய் வைத்தன. வைத்ததும் தான், ஆண்மானுக்கு அந்த உணர்வு வந்தது. 'அடடா! இருக்கும் நீரே குறைச்சலாயிற்றே; இத்துனூண்டு இதை நான் அருந்தி விட்டால், தன் துணையான பிணைமானுக்கு நாவறட்சி தீர அருந்துவதற்கு போதிய அளவு நீர் கிடைக்காமல் போய்விடுமே என்று பதறி அருந்தாது நின்றதாம். அடுத்தாற்போல் அதற்கு வந்த நினைப்பு தான் அற்புதம்.
தான் அருந்தாமல் இருந்தால் தன் துணையும் அருந்தாமல் போய்விடும் என்று தண்ணீரில் வாய் மட்டும் வைத்துக் கொண்டு அருந்தாமல் அருந்துகிற மாதிரி பாவனை செய்ததாம். ஆண்-பெண் அன்பை இதைவிட மேலாகப் படம்பிடித்துச் சொல்லமுடியுமோ என்று வியக்கிறோம்.

அது என்ன ஐந்திணை? குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகைப்பட்ட நிலப்பரப்புகளுக்கு ஏற்பனவாக ஐந்து வகையான திணைகளாகப் பிரித்துச் சொல்வது தமிழர் மரபு. வெவ்வேறு நிலைகளில் வெளிப்படும் மனப்பாங்குகளை அததற்கான திணைகளில் ஏற்றிச் சொல்வது பழந்தமிழர் சிறப்பு.

அது என்ன ஐம்பது கணக்கு?.. ஒவ்வொரு திணைக்கும் பத்துப் பாடல்கள் என ஐந்து திணைக்கும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால், ஐந்திணை ஐம்பது.

இந்த ஐந்திணை ஐம்பது   பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்  ஒன்று. சங்கம் மருவிய காலத்தது. காதலரின்   ஒழுக்கம் பற்றிக் கூறும் அகப் பொருள் கீழ்க்கணக்கு நூல்.    இதை இயற்றியவர் மாறன்  பொறையனார் என்னும் புலவர் பெருமகனார்.

28 comments:

மாதேவி said...

'சுனைவாய்......' அற்புதமான விளக்கம்.

Yaathoramani.blogspot.com said...

புதுமொந்தையில் பழந்தேனைப் பகிர்ந்தவிதம் அருமை..

G.M Balasubramaniam said...

கதையாய் தொடங்கி பதினெண் கீழ் கணக்குநூலில் அனுபூதிபெற்றது சிறப்பு

ஸ்ரீராம். said...

கதையின் கிறக்கம் ஐந்திணையில் இல்லை போங்கள்!

ஸ்ரீராம். said...

ஆனாலும் கம்பி இணைவது போல சேர்த்திருப்பது சிறப்பு.

கோமதி அரசு said...

ஒருவருக்கு ஒருவர் அன்பில், பரிவில் சளைத்தவர்கள் இல்லை என்பதாய் அழகாய் சொன்னது கதை.

கதை நன்றாக இருக்கிறது. இலக்கிய நயத்தோடு நிறைவு பெற்றது சிறப்பு.

வல்லிசிம்ஹன் said...

ஐந்திணைப் பாடல்கள் இந்த இரண்டு மனங்களைப்
பதிந்து, இணைத்துவிட்ட பக்குவம் அற்புதம்.
அப்படியே நேரில் ஒரு புதுமணத் தம்பதிகளை நேரில்
சந்தித்த அனுபவம்.

இந்த இணைப்பைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ
படபடப்புடன் படிக்கத் தொடங்கினேன்.

ஆனந்தமாகப் படித்து முடித்தேன் .மனம் நிறை நன்றி
ஜீவீ சார்.

நெல்லைத்தமிழன் said...

கலைமான் பிணைமான் காதலை, மெதுவாக இக்காலத்துக்குக் கொண்டுவந்து உமாபதி உமாவுக்குப் பொருத்தியது ரசிக்கும்படி இருந்தது.

சங்ககாலத்தில் எப்படியெல்லாம் யோசித்து கலாரசனையோடு பாடல் புனைந்திருக்கின்றனர்.

இரண்டு உவமைகளுக்கும் அடிப்படை ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதல்தான்.

இக்காலத்தில் அவர்கள் இன்னொன்றை (குளிர்பானம்) வரவழைத்துக்கொள்ளலாம். அங்கு இருந்தது நாணம் கலந்த இனக்கவர்ச்சிதான். ஆழ்ந்த அன்பு இல்லை. ஆனால் மானோ, இருக்கும் குறைந்த அளவு குடிநீரை இருவரும் மற்றவர் அருந்தி தாகம் தீர்த்துக்கொள்ளட்டும் என நினைக்கிறது. ஐந்தறிவில் பொருந்தியிருக்கும் இந்தக் காதல்தான் என்னைக் கவர்கிறது. இத்தகைய காதல் கணவன் மனைவிக்கு இடையே இருக்குமானால், அதிலும் திருமணமாகி ஐந்து வருடங்கள் கழித்தும் இருக்குமானால் அது எத்தகைய சிறப்பு.

ஆரம்பகட்ட உரையாடல்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றது.

நெல்லைத்தமிழன் said...

எனக்கு மானின்மீது இருந்த பிரமிப்பு உமா கதையில் இல்லை. கிரக்கம் என்று சொல்வது நம்மை தொடர்புபடுத்திப் பார்ப்பதால் இருக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

அற்புதமாக இருந்தது. உமாபதி-உமா, கலைமான் - பிணைமான் இரண்டையும் ஒன்று சேர வைத்தது சிறப்பு.

தொடரட்டு இலக்கிய ரசம். இரசித்தேன் ஐயா.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

உங்கள் பின்னூட்டதை மிகவும் ரசித்தேன், நெல்லை. ஆழ்ந்து விஷயத்தைக் கிளரி இருக்கிறீர்கள். இந்த மாதிரி பின்னூட்டங்கள் வருவது தான் பின்னூட்டங்களுக்கான மகிமையே. எழுத்து என்பது எழுதியவைகளுக்கு தொடர்ச்சியாக என்பதைத் தாண்டிய அது தொடர்பான எழுதாத விஷயங்களையும் கிளறிப் பார்ப்பதாக இருக்க வேண்டும். அது தான் சிறப்பு.

இரண்டு விஷயங்கள்:

1.// இக்காலத்தில் அவர்கள் இன்னொன்றை (குளிர்பானம்) வரவழைத்துக்கொள்ளலாம். அங்கு இருந்தது நாணம் கலந்த இனக்கவர்ச்சிதான். ஆழ்ந்த அன்பு இல்லை.. //

கரெக்ட். திருமணம் ஆகி ஒரு வாரத்தில் அன்பை, அதுவும் ஆழ்ந்த அன்பையெல்லாம் யார் எதிர்பார்த்தார்களாம்?. ஆண்-பெண் இரகசியத்தை பொதித்துக் கொண்ட இரு உடல்கள் விளைவிக்கும் ஸ்பரிச சுகம் தான் முக்கியமாகிப் போகும். ஆனால் இந்த சுகத்தின் அடித்தளத்தில் தான் நீங்கள் சொல்கின்ற அந்த அன்பு என்கிற கட்டிடம் எழும்பும்.

2. //இத்தகைய காதல் கணவன் மனைவிக்கு இடையே இருக்குமானால், அதிலும் திருமணமாகி ஐந்து வருடங்கள் கழித்தும் இருக்குமானால் அது எத்தகைய சிறப்பு. //

கட்டிட எழுப்புதலை ஆரம்பித்து வைக்கும் அடித்தள இறுகலையும், அதன் மேல் எழுப்பப்படும் கட்டிடத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதினால் விளையும்
அனர்த்தம் இது நெல்லை.

ஐந்து வருடங்கள் என்ன?.. காலாதிகாலத்திற்கும் 'அந்த' அஸ்திவாரம் தான் கட்டிடத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும். அஸ்திவாரம் ஆட்டம் காணுவதால் எழுகின்ற பிரச்னைகள் தான் 'இருக்குமானல்' என்னும் உங்கள் எதிர்பார்ப்பை இல்லாமல் செய்கிறது. ஆன்மீகம், பக்தி என்று இந்த அடிஆழ வேர் கிளைகொள்ளாத விஷயமே இல்லை என்று சொல்லலாம்.

உங்களை அதிகம் கவர்ந்தவர் யார் என்றால் சிக்மண்ட் பிராய்ட் தான் என் தேர்வாக இருக்கும். அவரது Dynamic Psychology, Theory of Transference போன்ற கருத்துருக்கள்
என் பல கதைகளுக்கு ஆதாரசுருதியாக இருந்திருக்கிறது..

எ.பி.யின் கே.வா.போ.கதைகள் பகுதியில் அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். அங்கு இதெல்லாம் பற்றி நிறைய பேசலாம். கூடப் பேசுவதற்கும் ஆட்கள் வேண்டும்.

இப்போதைக்கு இது. சரியா?..

ஜீவி said...

@, நெல்லைத் தமிழன் (2)

ஐந்தறிவு, ஆறறிவு என்றெல்லாம் வித்தியாசம் கொண்டு பிரித்துப் பார்ப்பதில் எதுவும் இல்லை.

அதில் அன்பு இருக்கிறது. இதில் உடல் கிளர்ச்சி தான் இருக்கிறது என்றெல்லாம் இல்லை.

ஐந்தறிவு அன்புக்கும் இந்த அஸ்திவாரத்திலிருந்து கிளர்ந்தது தான். அந்த அஸ்திவாரம்
குழந்தை குட்டிகள் வரை பேரன்பாய் வேரூறின்றி வளர்கிறது.

ஆறறிவு மாமனிதர் மாறன் பொறையனார் தான் கலைமான், பிணைமான் அன்புக்கு
இதை ஏற்றிச் சொல்கிறார். அன்பு மயமானவர்களால் தான் அன்பை பலபடப் போற்றி
சொல்லவும் முடியும்.

தங்கள் மனம் தோய்ந்த சிந்தனைகளுக்கு நன்றி, நெல்லை.

ஜீவி said...

@ மாதேவி

அந்த அற்புதத்தைச் சொல்லத் தான் உமா- உமாபதி கதை.

சங்க இலக்கியம் எல்லாம் தமிழ் பட்டப்படிப்புக்கே மதிப்பெண்களுக்காக என்று ஆகிப் போன காலம் இது. அவை வாசிப்பு உலகில் உலா வருவதற்கான முயற்சிகளே இவை.

தொடர்ந்து வருவீர்களென்றால் இந்த மாதிரி கதைகள் நிறைய கேட்கலாம். கூட சங்க இலக்கிய அறிமுகங்கள். அவ்வளவு தான்.

ஜீவி said...

@ ரமணி

வாங்க, ரமணி ஸார். நலம் தானே?

இந்தப் பக்கம் வந்து நிரம்ப நாட்களாகி விட்டனவே! சங்க இலக்கிய்ம் தான் தங்களை அழைத்து வந்த்து போல.

தேனைக் கூட மொந்தையில் உற்றித் தான் அதன் அருமை பெருமைகளைச் சொல்ல வேண்டியிருக்கிறதே, ஐயா. தங்களுக்குத் தெரியாததா?

தாங்கள் வாசித்து விட்டீர்கள் என்று தெரிந்ததில் மகிழ்ச்சி. நன்றி.

ஜீவி said...

@ GMB

கதையில் கிடைக்கும் அனுபூதிக்கு மட்டும் என்ன, சார்?.. அது ஐந்திணை ஐம்பது பாடல் ஒன்றை விலாவாரியாக விளக்கிச் சொல்ல துணையாகப் போனது தான் உண்மை, ஐயா!

அனுபூதி என்ற வார்த்தையை உபயோகப்படுத்த மேற்கொண்ட முயற்சிக்கு நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

சரியான ரசனை, ஸ்ரீராம். இந்தக் கிரக்கம் இல்லாமல் பூவேது, புவியேது?..

ஆனால் நெல்லை மட்டும் தான் வாலிப நெல்லை காலத்தை வேண்டுமென்றே மறக்கடித்து விட்டது போல பேசுகிறார். இது வேறு, அது வேறு என்று பிரித்துப் பார்க்கிறார்.

இது உவ்வேவாம்! அது ஆஹா அற்புதமாம்!

இதுவே அதுவாகி, அதுக்கு இதுவே ஆதார சுருதி ஆகி...

நாம் மீதியை கே.வா.போ.க.-வில் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டேன்!

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

என்னடா செய்யலாம் என்று யோசித்ததில், ஒற்றை ஸ்ட்ரா போட்ட (இருவருக்கான) கூல் டிரிங்க் கிடைத்ததோ, தப்பித்தேனோ!

உணர்ந்ததைச் சொன்னதற்கு நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு

கோமதிம்மா, இந்தப் பகுதி சங்கப்பாடல்களை எளிமையாக வாசிப்போர் மத்தியில் அறிமுகப்படுத்துவதற்கான ஒரு முயற்சி.

ஒரு நிகழ்வை எடுத்துக் கொண்டு அதை ஒரு சங்கப்பாடலோடு பொருத்திச் சொல்வது.

அதனால் சொன்னது கதை அல்ல. ஒரு நிகழ்வு. சங்கப்பாடலுக்கு ஏற்ற மாதிரியாக ஒரு நிகழ்வு. நிகழ்வு மட்டும் என் கற்பனை. கதை போலச் சொன்ன கற்பனை.

அடுத்த பகுதிக்கு நீங்கள் வரும் பொழுது இது நன்றாகப் புரிந்து விடும். நன்றி.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

ஒரு புதுமணத் தம்பதிகளை நேரில் சந்தித்த அனுபவம் -- ஆஹா.. தன்யனானேன்.

இந்த இணைப்பைப் புரிந்து கொள்ளாமல் -- ஒன்றைச் சொல்வதில் தான் எவ்வளவு பக்குவம்?..

ஆனந்தம்.. ஆனந்தம்.. என்றும் நிறையட்டும் அது! நன்றி, வல்லிம்மா.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

வாங்க, வெங்கட்!

உமாபதி -- உமா
கலைமான் -- பிணைமான்

இணைத்துச் சொன்ன விதம் அருமை!

அடுத்த பகுதியில் பார்க்கலாம். சரியா?..



Thulasidharan V Thillaiakathu said...

கதை அருமையாகத் தொடர்ந்து முடிவு என்னவாக இருக்கும் என்று யோசித்து வருகையில் ஐந்திணி ஐம்பதோடு பிணைமான் கலைமானோடு இணைத்துச் சொல்லிய விதம் மிகவும் சிறப்பு.

துளசிதரன்

வே.நடனசபாபதி said...

சங்கப்பாடல்களை இதுபோன்றும் தற்கால நிழ்வுகளுடன் இணைத்ததுச் சொல்லி புரிய வைக்கலாம் என்ற உங்களின் உத்திக்கு பாராட்டுகள். ஒரு சிறுகதையைப்போல் ஆரம்பித்து சங்கப்பாடலுடன் இணைத்து முடித்துவிட்டீர்கள். மேற்கொண்டு அந்த இளஞ்ஜோடிகள் உதகை சென்று மகிழ்ந்ததை வேறொரு சங்கப்பாடலுடன் இணைத்து தர வேண்டுகிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அருமையான, போற்றத்தக்க வேண்டிய முயற்சி. பக்தி இலக்கியம் நிறைவு செய்தபின் சங்க இலக்கியம் படிக்க திட்டமிட்டிருந்த எனக்கு சங்க இலக்கியத்தை மிக விரைவில் வாசிக்க ஆரம்பிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்திய பதிவு.மனம் நிறைந்த வாழ்த்தும், நன்றியும்.

Bhanumathy Venkateswaran said...

இந்த செய்யுளை நான் ஏற்கனவே படித்திருகிறேன். ஆனால் உங்கள் கதை பிரமாதம். குன்னூர் மலைப் பாதை, இயற்கை காட்சி வர்ணனை, புதுமண தம்பதியினரின் அன்னியோன்யம் எல்லாம் நல் விருந்து. மேலும் கதைகளுக்காக காத்திருக்கிறேன்.

ஜீவி said...

@ துளசிதரன்

சங்கப்பாடல் ஒன்றை எடுத்துக் கொள்கிறேன். அந்தப் பாடல் தரும் உணர்வு, அர்த்தம், மொழியழகு எல்லாவற்றையும் பிரதிபலிக்கிற மாதிரி நிகழ்வு ஒன்றை கற்பனையில் கண்டு அதற்கு எழுத்து வடிவம் கொடுக்கிறேன். அவ்வளவு தான்.

இந்த மாதிரி எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன். பதினைந்து நாட்களுக்கு ஒன்றாவது வெளியிட உத்தேசம். நீங்கள் வாசித்ததில் சந்தோஷம். தொடர்ந்து வருகை தாருங்கள், துளசிதரன்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

தங்கள் வாசிப்புக்கும் வ்ருகைக்கும் நன்றி, ஐயா.

சங்கப்பாடல்களை எளியோருக்கும் புரியும் வண்ணம் எடுத்துச் சொல்வது காலத்தின் கட்டாயமாகத் தோன்றியது. அதனால் இந்த முயற்சி.

ஒவ்வொரு சங்கப் பாடலுக்கும் பொருந்துகிற மாதிரி வெவ்வேறு நிகழ்வுகளாக அமைந்தால்
புதுபுதுசாக நிகழ்வுகளின் பிடியில் வாசிப்போர் சிக்குவர் என்பது என் எண்ணம்.

இருந்தாலும் தாங்கள் சொன்னதைக் கருத்தில் கொண்டு எழுதப் பார்க்கிறேன். தங்கள்
ரசனைக்கு நன்றி, ஐயா.


ஜீவி said...

@ Dr. B. Jambulingam A.R. (Retd.)

தங்கள் உண்ர்விற்ம்கும், வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

தொடர்ந்து இந்தப் பணியில் ஈடுபட சக்தி கிடைத்திருக்கிறது. தாங்களும் தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன். நன்றி, ஐயா.

ஜீவி said...

@ பா.வெ.

எல்லா நேரத்தும் கதைகள் என்றிலில்லை, பா.வெ.

முதலில் சங்கப்பாடல். அதற்கேற்ப ஒரு கற்பனை. கற்பனை நிகழ்வில் வாசகரை ஆழ்த்தி அதன் அடி ஒற்றி சங்கப்பாடலில் ஈர்ப்பேற்படுத்துவதற்கான ஒரு எளிய முயற்சி.

பண்டிதர் வசம் பூட்டிக் கிடக்கும் தமிழ்ச் செல்வத்தை எளிய மக்களிடமும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அது தான் இஜ்த முயற்சிக்கான உத்வேகம்.

தொடர்ந்து வாசித்து தங்கள் ரசனையைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி, பா.வெ.

Related Posts with Thumbnails