மின் நூல்

Friday, June 12, 2020

யாயும் ஞாயும் யாராகியரோ?

ரு நெருங்கிய நண்பரின் மகளின் திருமணத்திற்குப் போயிருந்தேன். நான் அவர்கள் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் நண்பரின் மகள் மிகப்பாசமாக என்னுடன் பழகுவாள். என் மகளின் வயதுதான் அவளுக்கும் இருக்கும்.

கல்யாண நிகழ்ச்சிகளெல்லாம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தன. திருமணத்திற்கு வந்திருந்த பெரும்பாலான நண்பர்களும், உறவினர்களும் சாப்பிட்டு விட்டுக் கலைந்து விட்டனர். இன்னும் சிறிது நேரத்தில் கல்யாணச் சத்திரத்தைக் காலி பண்ண வேண்டும்.

பெண் வீட்டார் தங்கியிருந்த அறையில், கல்யாணப்பெண் தன் பெற்றோரின் கைபிடித்துக் கண்கலங்குகிறாள். அவளுக்கு ஒரே ஒரு தங்கை. அவளின் இன்னொரு கை தன் தங்கையின் தலைவருடித் தடுமாறுகிறது. இத்தனை வருடங்கள் சீராட்டி, கொஞ்சிக் குலவி, தனக்குக் கல்யாணப் பேற்றை அளித்த பெற்றோரைப் பிரிந்து, வேறொரு வீட்டுக்குச் சென்று வாழ வேண்டுமே என்கிற தடுமாற்றம்..  பாசம் என்பது இறுக்கிக் கட்டிய கயிறு போன்றது. அதை லேசில் படாரென்று அறுத்துக் கொண்டு செல்ல இயலாது.. கட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தித்தான் விடுபட வேண்டும்.

பெண்களாய்ப் பிறந்தவர் சுமக்க வேண்டிய பாரத்தை நினைத்தால் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. பாட்டியாய்,தாயாய், தமக்கையாய், தங்கையாய், தாரமாய், மருமகளாய், மாமியாராய் பெண்களைத் தொட்டு, ஓ... எத்தனை உறவின் மேன்மைகள்....ஒளி பட்ட இடத்திலிருந்து பிரகாசிக்கும் வைரப் பளீரிடலகள்!...

பெண்களும் மிக லேசாய், இலகுவாய் இந்த பெரும் பாரத்தைப் புரட்டிப்போடும் லாகவம், ..   அந்த மிருதுவான கைகளுக்கும்,தோள்களுக்கும் இந்தப் பாரம் பஞ்சாக மாறிப்போகும் விநோதம் தான் படைப்பின் ரகசியம்!

அந்தக் கல்யாண தினத்தன்று என் நண்பர் தன் மகளை, மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருந்த அறைக்கு, மனைவி-மாமன் மக்களோடு அழைத்துச் சென்று அவர்களிடம் விட்டுவிட்டுப் போகும் பொழுது, கண்கலங்கித் தன் சம்பந்தியிடம், "ஸார்...அவளுக்கு ஒன்றும் தெரியாது...குழந்தை மனசு. அப்படியே வளர்ந்து விட்டாள்..நீங்கள் தான் தந்தையாய்..தாயாய்.." என்று தழுதழுத்த பொழுது, அருகிலிருந்த எனக்கு நெஞ்சம் கனத்து என்னவோ போலாகிவிட்டது.

அவரது சம்பந்தி,"அதெல்லாம் ஒன்றும் கவலைப்படாதீர்கள்..   என்றைக்கு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டாளோ, இனி அவள் எங்கள் மகள்..."என்று சொன்னதும், வழிவழியாய் வழக்கமாய்---

--- பெண்ணைப் பெற்றவர்களாலும், இன்னொரு வீட்டு மருமகளாய் பெண்ணை அனுப்பியவர்களாலும் தான் இவற்றையெல்லாம் உணர்வு பூர்வமாக உணரமுடியும் என்று தோன்றுகிறது...

போனவாரம் நண்பர் போன் போட்டு எனக்குச் சொன்னார்: "பிரமிளா வந்திருக்காடா...  உங்களையெல்லாம் பார்க்கணும்ங்கறா...நீயும், தங்கையும் (என் மனைவியும்) வந்திடுங்க..சாப்பாடு இங்கே தான்..என்ன, தெரிஞ்சதா?" என்று உத்திரவு போடுகிற மாதிரிச் சொன்னார்.

நானும் மனைவியைக் கூட்டிக்கொண்டு நண்பர் வீட்டிற்குச் சென்றேன். ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டபடியால், பிரமிளாவைப் பார்க்க வேண்டும், நல்ல சேதி சுமந்து வந்திருக்கும் அவளுடன் பேசவேண்டுமென்று எங்களுக்கும் மிகுந்த ஆசை.

வாசலில் நாங்கள் செருப்பைக் கழட்டிப் போடும் போதே ஓடி வந்து எங்களை அன்புடன் உள்ளே அழைத்துச் சென்றாள் பிரமிளா...கொஞ்சம் சதை போட்டிருந்தாள்; முகத்தில் களையும், கலகலப்பேச்சும்----

சாப்பிடும் போது, தன் அம்மாவிடம் அவள் சொன்னதை அப்படியே இங்கு எழுதியிருக்கிறேன்.. "அம்மா!...எங்க வீட்லே வழக்கமா இட்லிதான் காலை டிபனுக்கு.. தொட்டுக்க சட்னியும், ஏதாவது பொடியும் செஞ்சிடுவேன்.. இவருக்கு தோசைன்னா, அப்பா--அம்மாக்கு இட்லினா, இஷ்டம்! அதனால், முதல் நாள் மாவை----"

-- இங்குதான் பெண் என்பவள் ஜொலிப்பதாக எனக்குப் பட்டது. 'இதுதான் வாழ்க்கை நியதி..இதுதான் சாஸ்வதம்' என்று தன் கணவனின் தாய் தந்தையரை,'அப்பா--அம்மா' என்று அழைக்கிற மாதிரி, எவ்வளவு இயல்பாக உறவுகள் மாறிவிட்டன, பார்த்தீர்களா?..


வியப்புடன், புருவமுயர்த்தி தொடுக்கும் இந்தப் பெண்ணின் அழகு வரிகளைப் பாருங்கள்!

"யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே."

(குறுந்தொகை:40)

யாய்  என்றால்  என் தாய் என்று அர்த்தம்.   ஞாய் என்றால் உன் தாய்.   எந்தை என்றால்  என் தந்தை,  நுந்தை என்றால் உன் தந்தை என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை.

எவ்வளவு  எளிய வார்த்தைகளில்   கணவன் - மனைவி உறவின் தாத்பரியத்தின் சரித்திரமே சொல்லப்படுகிறது பாருங்கள்:


என் தாயும்  உன்  தாயும்  ஒருவருக்கொருவர் யாரென முன்பே தெரியாதவர்கள்.   அதே மாதிரி தான் என் தந்தையும் உன் தந்தையும்  தங்களுக்குள் இந்த உறவுக்கு முன் அறிமுகமற்றவர்கள்.  அவ்வளவு  தூரம் போவானேன்?.   நாம் இருவருமே  ஒருவருக்கொருவர் முன்னமேயே அறியாதவர்கள்.   ஆனால்  நம் இருவர் நெஞ்சங்கள்?..   ஒன்றை ஒன்று அறிந்து கொண்ட வாக்கில்  பின்னிப் பிணைந்து போனதுவே   என்று  பெண் மருகுகிறாள்.  அந்தப் பின்னிப் பிணைதலுக்கு   செம்புலப்பெயல் நீர் போல  என்று ஒரு உதாரணத்தை புலவர்  கையாண்ட  நேர்த்தி  தமிழ் இலக்கியத்தில்  மறக்கவொண்ணா உதாரணமாய் பதிந்து போயிற்று.

சோவென்று மழை  தாரை தாரையாய் பெய்து  செம்மண் நிலம் பூராவும் விரவிப்  பெருகுகிறது.   நிறம் இல்லா நீர் செம்மண்ணில் ஒன்றரக் கலந்ததும்  மண்ணின் செம்மை நிறத்தை தான் உள்வாங்கி பூசிக் கொள்கிறது.  நீரின் நெகிழ்வுத் தன்மை நிலத்தில்  ஊடுறுவி  நிலமே  நெகிழ்ந்து போகிறது.   இதில் எது நீர், எது  நிலம் என்று பிரித்துப்  பார்க்கவியலாத பிணைப்பு இது.   இந்தப் பிணைப்பை தலைவன்--தலைவி  நெஞ்சப் பிணைப்புக்கு  உதாரணமாக்குகிறார்  புலவர்.

'இந்தச் செம்புலப்பெயல் நீர் போல' உவமையை சிலாகித்து, அதற்கு வெவ்வேறான விளக்கங்கள் கூறி எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள்! அதனால், மற்ற வரிகள் கிளர்த்தும் தொடர்பான சிந்தனைகளில் மனம் போய்விட்டது..

இந்த அற்புதமான பாடலை எழுதிய புலவரின் பெயர் கூட அறிய முடியாமல் போய்விட்டபடியால், அவர் பெயரையே "செம்புலப்பெயனீரார்" என்று வழங்கும் படி ஆயிற்று!

எட்டுத்தொகை நூல்களில்  அடங்கிய ஒரு தொகை நூல் குறுந்தொகை.    எட்டு வரிகளுக்குள் அடங்கிய  391 பாடல்கள் குறுந்தொகையில் நமக்குக் கிடைத்திருக்கின்றன.  205 புலவர்களின்  பாடல் தொகுப்பு இது.  காதல் வாழ்வின் அகப்பொருள் இன்பத்தை  அள்ளித் தெளிக்கும் பாடல்கள் அத்தனையும்.   தமிழர் தம்   பண்டைய பெருமிதங்களில்  ஒன்றாய்  இன்றும் நம்மைக்  கிளர்ச்சியடையச் செய்யும்  மயக்க வரிகளை உள்ளடக்கிய அற்புதம்  குறுந்தொகையில்  நிகழ்ந்திருப்பதை அனுபவபூர்வமாக உணரலாம்.

29 comments:

இராய செல்லப்பா said...

தன் புகுந்த வீட்டையே சொந்த வீடாய் மாற்றிக்கொள்ளும் இளம்பெண்ணின் மன உணர்வுகளில் விளையும் மாயவித்தையில்தான் இந்த உலகமே உருவாகி மலர்கின்றது. அது இயற்கை அவளுக்குச் சொல்லாமல் சொல்லித்தரும் பாடம்.

(2) எத்தனை முறை படித்தாலும் சுவை குன்றாத சங்கப்பாடல். அதனால்தானே குமுதம்-கொன்றை கூட சங்கப்பாடல்களில் சிறுகதைப் போட்டி நடத்தியது!

நெல்லைத் தமிழன் said...

பள்ளியில் படித்தது நினைவுக்கு வருகிறது.

எப்போதும் போல நிகழ்வையும் சங்க காலப் பாடலையும் பொருத்தமா இணைச்சிருக்கீங்க. எனக்கு மனதில் தோன்றுவதை பிறகு எழுதுகிறேன். காரணம் இருக்கு.

ஸ்ரீராம். said...

ஆம்.   எங்கள் வீடு என்பது அங்கு மாறிப்போகிறது!  அதே சமயம் புகுந்த வீட்டில் பேசும்போதும் எங்கள் வீட்டுப்பெருமை வரும்.  அங்கு அர்த்தம் இந்த எங்கள் வீடு!

ஸ்ரீராம். said...

அது சரி, யாயும் ஞாயும் கவிதையை ஒட்டி கவிஞர் மீரா எழுதிய கவிதையையும் சொல்லி இருப்பீர்கள் என்று நினைத்துப் படித்தேன்.  நல்லவேளை எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்து விட்டீர்கள்!!!!

உனக்கும் எனக்கும்ஒரே ஊர்
வாசுதேவநல்லூர்...நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட...உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்த ஊர்க்காரர்கள்
மைத்துனன்மார்கள்எனவே
செம்புலப் பெயல்நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே.

கோமதி அரசு said...

//"அம்மா!...எங்க வீட்லே வழக்கமா இட்லிதான் காலை டிபனுக்கு.. தொட்டுக்க சட்னியும், ஏதாவது பொடியும் செஞ்சிடுவேன்.. இவருக்கு தோசைன்னா, அப்பா--அம்மாக்கு இட்லினா, இஷ்டம்! அதனால், முதல் நாள் மாவை----"//

தன் புகுந்த வீட்டை தன் வீடாக்கி, கணவரின் அம்மா, அப்பா அவள் அப்பா, அம்மாவாகி
உள்ளம் மகிழ்ந்து சொன்ன வார்த்தைகள் மகிழ்ச்சி தருகிறது.நல்லமுறையில் அந்த பெண் நடத்த படுகிறார் என்பதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டாம்.

சங்க காலப் பாடலுக்கு பொருத்தமான நிகழவு.

ஸ்ரீராம். said...

அதென்ன...   ஒன்றன்பின் ஒன்றாய் இரண்டு பின்னூட்டங்கள் போட்டால் ஒன்று மட்டும் வந்திருக்கிறது.  இன்னொன்று?

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா.... குறுந்தொகை பாடல் - அதுவும் கேட்டு ரசித்த பாடல் இன்றைக்கு. அதற்குத் தகுந்த கதையும். ரொம்பவே நன்றாக இருக்கிறது.

தொடரட்டும் இலக்கிய ரசம்.

ஸ்ரீராம். said...

இந்தப் பதிவைப் படித்ததும் சகோதரி தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய சிவப்பு பட்டுக் கயிறு நூல் எனக்கு நினைவுக்கு வருகிறது.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//இந்தப் பதிவைப் படித்ததும் சகோதரி தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய சிவப்பு பட்டுக் கயிறு நூல் எனக்கு நினைவுக்கு வருகிறது.//

வாசித்த நினைவில்லை ஸ்ரீராம். வாசிக்கிறேன்.

//"அம்மா!...எங்க வீட்லே வழக்கமா இட்லிதான் காலை டிபனுக்கு.. தொட்டுக்க சட்னியும், ஏதாவது பொடியும் செஞ்சிடுவேன்.. இவருக்கு தோசைன்னா, அப்பா--அம்மாக்கு இட்லினா, இஷ்டம்! அதனால், முதல் நாள் மாவை----" //

பதிவுக்காக இந்த வரிகளை எழுதினேனே தவிர---

எந்த தாய்--தந்தையருக்கும் தன் சொந்த மகள் தங்களுக்கு முன்னாடியே இன்னொருவரை
அம்மா - அப்பா என்று சொல்வது உணர்வதற்கு நெருடலாகத் தான் இருக்கும் என்பதை
உணர்கிறேன். மகள்களும் அப்படி பட்டவர்த்தனமாக தன் பெற்றோர் முன் அப்படிச் சொல்ல மாட்டார்கள். அதுவும் அப்பா அம்மா இடத்தில் வேறொருவரை வைத்து நினைத்துப் பார்ப்பதே சங்கடம் தான்.

புகுந்த வீட்டில் எந்தந்த நேரத்தில் பட்டும் படாமலும் அந்த அம்மா--அப்பாவை ஜாலக்காக உபயோகப்படுத்த வேண்டும் என்பதையும் நன்கு அறிந்தவர்கள் அவர்கள். தொட்டுக்க ஊறுகாயைப் போல அது. மனசுக்கும் வாக்குக்கும் ஒட்டாமல் வெளிப்படுவது தான் அதுவும். வாழ நேர்ந்த வாழ்க்கைக்கு எல்லா நாஸுக்குகளும் தேவையாகத் தான் இருக்கின்றன. அது தான் வாழ்க்கை என்றும் துணிந்து சொல்லலாம்.

Thulasidharan V Thillaiakathu said...

அழகான கதை போன்று தொடங்கி குறுந்தொகைப்பாடலுடன் இணைத்து சேர்ந்து அருமை.

ஸ்ரீராம் சொல்லியிருக்கும் மீரா அவர்களின் கவிதையும் ரசித்தேன்

கீதா

G.M Balasubramaniam said...

உங்களுக்குப் பிடித்த கவிதை என்று தெரியும் ஸ்ரீராமின் கவிதையையும் சேர்த்து நீங்கள் எழுதியதுபடித்த நினைவு

மாதேவி said...

அம்மா,அப்பா புகுந்த வீடே தன் வீடாகி போற்றுவோம்.
இங்கு நம் பகுதியில் ஆண்களுக்கு இந்த நிலை :)

ஜீவி said...

@ இராய. செல்லப்பா

ஒருவகையில் பார்த்தால் நீங்கள் சொல்கிற மாதிரியான மாயவித்தை தான் இது. தன் கணவர், அவரைப் பெற்ற அவர் தாய்-தந்தை என்பது ஒரே வீட்டிலான தொடர்ந்த பழகு முறைகளில் பழக்கம் கொண்டு அவர்கள் முதியவர்களாக இருப்பின் ஒரு இரக்கம் கசிந்து தன் பெற்றோர்களைப் போலத்தானே இவர்களும் என்ற அன்பாக மலர்கிறது. இது ஒரு
வகைத்தான Process. அவர்களும் மருமகளின் மீது வைக்கும் அன்பும், அரவணைப்பும்
இந்த Provcess-க்கு க்ரியா ஊக்கிகளாகின்றன. நேரில் ஒன்று, மறைமுகமாக ஒன்று என்று மாமியார்- மாமனாரும் இருப்பது தான் பாசப் பிணைப்புக்கு இடையூறாகின்றன.

ஆயிரம் இருப்பினும், சொத்து, சுகம், தன் குழந்தைகளின் எதிர்கால நலன் என்றெல்லாம் புரிதல்கள் இருப்பவர்களுக்கு கூடிய வரை புகுந்த வீட்டுப் பெரியோர்களின் அன்பும், ஆசியும் குறைவதில்லை.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//எனக்கு மனதில் தோன்றுவதை பிறகு எழுதுகிறேன். காரணம் இருக்கு.//

எஸ். அது தான் வேண்டும். மனசில் தோன்றுவதைப் பகிர்ந்து கொள்ள இந்த இடம் விட்டால் நமக்கு வேறு எந்த இடம் தான் இருக்கு? அத்தனையையும் பகிர்ந்து கொள்ளலாம். எழுதுங்கள், நெல்லை.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//எங்கள் வீடு என்பது அங்கு மாறிப்போகிறது! அதே சமயம் புகுந்த வீட்டில் பேசும்போதும் எங்கள் வீட்டுப்பெருமை வரும். அங்கு அர்த்தம் இந்த எங்கள் வீடு!//

பெண்களுக்கு பெருமை தான்! ஒண்ணுக்கு ரெண்டாய் இரண்டு 'எங்கள் வீடு'கள். :}}

வே.நடனசபாபதி said...

இந்த குறுந்தொகைப்பாடல் சொல்லும் கருத்து நமது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளோடு பொருந்திப்போவதை பார்த்து வியப்பதா அல்லது இந்த பொருத்தமான பாடலை தாங்கள் கண்டு வியந்த நிகழ்வோடு இணைத்து சுவாரஸ்யமாக தந்ததை பாராட்டுவதா எனத் தெரியவில்லை. அருமையான பதிவு.தொடரட்டும் தங்களின் பணி.

இந்த பாடலைப் படித்ததும்,கல்லூரி இறுதியாண்டில் நடந்த விடைபெறும் விழாவில் இந்த பாடலை நான் மேற்கோள் காட்டி பேசியது நினைவுக்கு வருகிறது.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

சொல்லப்போனால் உங்களுக்கு நினைவு வந்த 'அந்த' மீரா கவிதை என் நினைவுக்கு வரவில்லை.

ஒரு காலகட்டத்தில் 'இது தான் காதல்' என்று சிலர் பிரபலப்படுத்தி காதலுக்கு இலக்கணம் வகுத்த பாதிப்பில் இந்தக் கவிதையை அவர் வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

உங்கள் கருத்தின் அடிப்படையில் இந்த என் கருத்தை நான் நியாயப்படுத்திக் கொள்ளவும் முடியும் என்றும் நினைக்கிறேன்.

ஒரு தனிப்பதிவில் சொல்ல வேண்டிய அளவுக்கு மனசில் எண்ணங்கள் முட்டி மோதுகின்றன.

மனோ சாமிநாதன் said...

பெண்மையை கெளரவப்படுத்தி மகுடம் சூட்டியிருக்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி!

வல்லிசிம்ஹன் said...

எங்கள் காலத்துக்குப் பொருந்தும் கதை.
என் அம்மா என்று நான் நினைக்கும் அம்மா வேறாக இருந்தாலும்
மாமியாரையும் அம்மாவாகக் கருதினால் தான்
வாழ்வை மேலே தொடர முடியும்.

அருமையான மணவாழ்வை அன்பு பொங்க ஆரம்பித்திருக்கும் தம்பதியினர் என்றும்
கலந்திருக்க
மழை பெய்த செம்புலம் நல்ல எடுத்துக்காட்டு.

சங்கப்பாடலுக்கு இந்தக் காலத்துக் கவிதையை இணைத்த அழகு
வெகு அருமை.
இன்ப சாகரத்தில் மிதக்கும் தோணிபோல
சாரின் எழுத்து பயணிக்கிறது.
மிக மிக நன்றி சார்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துகள் எனது பக்கமும் வாருங்கள்

ஜீவி said...

@ கோமதி அரசு

//நல்லமுறையில் அந்த பெண் நடத்த படுகிறார் என்பதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டாம். //

உங்களது நுணுக்கமான Observation. பெண்களால் மட்டுமே 'இதுன்னா அது, அதுன்னா இது' என்று இவ்வளவு நுண்மையாகப் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

வாங்க, வெங்கட்..

குறுந்தொகைப் பாடல் செம்புலப்பெயராருக்கான பெருமை.

அதற்கான கதையை ரசித்தமைக்கு நன்றி, வெங்கட்.

ஜீவி said...

@ தி. கீதா

// ஸ்ரீராம் சொல்லியிருக்கும் மீரா அவர்களின் கவிதையும் ரசித்தேன்.. //

மீராவின் கவிதையில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. கலப்புத் திருமணங்களை மட்டுமே காதல் திருமணமாக ஏற்றுக்கொண்ட ஒரு காலத்திய அரசியல் நிலைப்பாடு அது.

அழகு, அந்தஸ்த்து என்று ஏகப்பட்ட இடையூறுகள். அத்தை மகளையும், அக்கா மகளையும் கூட தவங்கிடந்து காதலித்து திருமணம் புரிவோர் இருக்கிறார்கள். அதெல்லாமே மரியாதைக்குரிய காதல் திருமணங்கள் தாம்.



ஜீவி said...

@ ஜிஎம்பீ

ஸ்ரீராம் குறிப்பிட்ட கவிஞர் மீராவின் கவிதையில் எனக்கிருக்கும் மாறுபாட்டைச் சொல்லியிருக்கிறேன், பாருங்கள். இது பற்றி ஒரு பதிவு ஒன்று போடவேண்டும் என்று கூட எனக்குத் தோன்றுகிறது.

ஜீவி said...

@ மாதேவி

புகுந்த வீட்டில் நம் சம்பிரதாயங்களில் மருமகளுக்குக் கிடைக்கிற மரியாதை அந்த வீட்டுப் பெண்ணுக்குக் கூட கிடையாது. சாஸ்திர சம்பிரதாயங்களில் தன் கணவனுடன் எல்லாக் காரியங்களிலும் மருமகளே பிரதான பங்கு வகிக்கிறாள்.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

அட! கல்விச் சாலை வாசிப்பு முடிந்து நண்பர்களுடான விடைபெறும் விழா நிகழ்வுக்குக் கூட செம்புலப்பெயனாரின் கவிதை அட்டகாசமாகப் பொருந்துகிறதே!


உங்களுக்கு இந்தக் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது
ஆச்சரியம்.. தமிழின் மேல் இருக்கும் ஆர்வம் எப்படியெல்லாம் நம்மைச் செயல்பட வைக்கிறது, பாருங்கள்..

ஜீவி said...

@ மனோ சாமிநாதன்

வாங்க, சகோ! பார்த்து ரொம்ப நாளாச்சு. நலம் தானே?

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. எங்கள் பிளாக் பக்கம் வாருங்களேன். செவ்வாய்க்கிழமை கே.வா.போ. கதை பகுதியில் உங்கள் எழுத்தாற்றலை பார்க்க ஆசை.

ஜீவி said...

@ வ்ல்லிசிம்ஹன்

உங்கள் ரசனை கவிதை வரிகளாய் மலர்ந்திருக்கிறது. நன்றி, வல்லிம்மா.

சார் - மோர் எல்லாம் வேண்டாம். உங்கள் ஜீவி நான்.

ஜீவி said...

@ கவிஞர் த. ரூபன்

அந்த சிறப்பை கவிதை வரிகளாக்கியிருக்கலாமே, கவிஞரே!

வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கக் கூடாது. சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் கவிஞர்கள் கவிதை பொழிய வேண்டும்.

கவிஞர்கள் பேசுவது, சொல்வது எல்லாமே கவிதை ரூபத்திலேயே இருந்தால் எனக்கு மிகவும் பிடிக்கும், ரூபன்.

உங்கள் பதிவு பக்கம் வருகிறேன். நன்றி, ரூபன்.

Related Posts with Thumbnails