இவையெல்லாம், உயிரில்லாத செல்வங்களென்றால், உயிருள்ள ஒரு செல்வமும் உண்டு. அதுதான் குழந்தைச் செல்வம். இந்தச் செல்வம் மற்ற செல்வங்களிலிருந்து மாறுப்பட்டது. பெற்றிருப்பவருக்கு மட்டுமில்லை, பெற்றிருப்பவரின் சுற்றத்தினருக்கும், பெருமையையும், மனமகிழ்ச்சியையும், உறவுச்சங்கிலி உணர்வையும் கொடுப்பது.இந்தச் செல்வம் மட்டும், யாருடைய முயற்சியின் அடிப்படையிலும் கிடைப்பதல்ல; வேண்டினால் கிடைப்பதும், வேண்டாமையால் கிடைக்காமல் போவதுமில்லை. அதனால் தான் குழந்தைச்செல்வத்தை மட்டும் பாக்கியம் என்கிறோம். இயல்பாக ஏழை,பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் கிடைப்பதினால் தான், குழந்தை பாக்கியத்தை கடவுளின் கொடை என்று சொல்கிறார்கள்.
இந்த வரம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதிலிருந்து தொடங்கி பரவ ஆரம்பிக்கும் மகிழ்ச்சி, அதைத்தொடர்ந்து தன் சுகம், தன் நலன் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு பிறக்கப்போகும் அந்த சிசுவுக்காக ஏங்கும் அந்த போக்குகள், ஒருவழியாக தாய்க்கு பிரசவம் நல்லபடி நடந்து குழந்தை இந்த பூமிப்பந்தின் பிரஜை ஆனதும் ஏற்படுகின்ற சிலிர்ப்பு, அந்த சிசுவின் அணைப்பில் ஏற்படுகின்ற சுகானுபவ ஆனந்தம், தங்கள் ரத்தத்தின் உயிர்த்துடிப்பான அந்த பூபாரத்தைக் கையில் தூக்கிச் சுமக்கையில் ஏற்படுகின்ற பரவசம், பொக்கை வாய் திறந்து அந்தக் குழந்தை சிரிக்கையில் ஏற்படும் பரமானந்தம், காரணமில்லாமலேயே வீல்வீலென்று அழுகையில் உணரும் பரிதவிப்பு --- எல்லாமே சொற்களில் சிறைபடுத்திச் சொல்லமுடியாத, ஒவ்வொருவரும் உணர்ந்து அனுபவித்து உணர வேண்டிய வாழ்க்கையின் வரங்கள்...
இந்தக் காலத்தில் தான் இப்படி என்றில்லை. எந்தக் காலத்திலும், இந்த சீராட்டும், பாராட்டும் இப்படித்தான். வாராது வந்த அந்த மாமணியை கட்டி அணைத்து, ஊரார் கண் பட்டுவிடப் போகிறதே என்று கன்னத்தில் கண்மைப் பொட்டிட்டு,அதன் பொக்கைவாய்ச் சிரிப்பில் உலக இன்பங்கள் அனைத்தும் காலடியில் வீழ்ந்து கிடப்பதாக உவகை கொண்டு மகிழ்வோர் தான் எல்லோரும். மனித இனத்தில் மட்டுந்தான் என்றில்லை, ரத்தவாடை நுகரும் மிருகங்களிலிருந்து, சின்னஞ்சிறிய குருவிகள் வரை--தனது குட்டிகள்,குஞ்சுகள் என்றால் அந்த அன்பும், அளப்பரிய கரிசனமும் எங்கிருந்துதான் வரும் என்றுத் தெரியவில்லை. தனக்கில்லாவிட்டாலும், தன்னிலிருந்து விடுபட்ட அந்த தனி உயிருக்கு, தன்னையே தந்துவிடும் அந்த பாசத்திற்கு ஈடுஇணை இவ்வுலகில் எதுவுமே இல்லை எனலாம். இந்தச் சீராட்டல், மண் குடிசையாயிருந்தாலும் சரி, மன்னனின் மாளிகையாய் இருந்தாலும் சரி, ஆசையும் அன்பும், ய்பாசமும் போட்டி போட்டுக் கொண்டு இடம் பார்த்துப் பேதப்படாமல் எல்லா இடங்களிலும் ஒன்றாகத் தான் இருக்கும்.
இதோ, கடைச்சங்கக் காலத்து மன்னன் பாண்டியன் அறிவுடைநம்பி என்ன சொல்கிறான், பாருங்கள்:
"படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே."
(புறநானூறு--188)
ஆஹா, எப்படி அனுபவித்திருக்கிறான்!..எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருக்கிறான்! மன்னனாலும் சரி, பரம ஏழையாய் இருந்தாலும் சரி, ஒரே உணர்வு தான், போலும்!
தத்தித்தத்தி தளர் நடை நடந்து, தன் சின்னக்கை நீட்டி,அந்தச் சின்ன அன்ன பாத்திரம் தொட்டு, அதில் வைக்கப் பட்டிருக்கும் நெய்வார்த்த உணவில் தன் பிஞ்சு விரல்கள் புதைத்து,தொட்டு, விரல்களால் அளைந்து, ஓரிரு பருக்கைகள் எடுத்துக் கவ்வி வாயில் போட்டுக் கொண்டும், வாயிலிருந்து நழுவிய சில பருக்கைகளை தன் மேனி எங்கும் உதிர்த்துக்கொண்டும் அட்டகாசம் பண்ணி நம்மை மயக்கி களிப்பில் ஊஞ்சலாட்டும் இப்படிப்பட்ட குழந்தைகளைப் பெறாதவர், ஓ, வாழ்க்கையில் எந்தப் பயனையும் பெற்றதாக எனக்குத் தெரியவில்லை என்கிறான்!..
எவ்வளவு உணர்வுபூர்வமான வர்ணிப்பு பாருங்கள்.. எவ்வளவு கூரிய பார்வை அவனுக்கு!..
எனக்குத் தெரிந்து வேறு எந்தக் கவிஞனும்,சின்னஞ்சிறு குழந்தைகளின் சித்திர உலகையையும் அதனால் நமக்கு ஏற்படுகின்ற உவகையையும் இவ்வளவு அழகாக வர்ணித்ததில்லை! இவன் சரியான ரசிகனாய் இருக்கிறான்!
புலவர்கள் தன்னைப் புகழ்ந்து பாடும் புகழ்ப்பாட்டுகளால் மகிழ்வேற்பட்டு, ஆணவமும்-அகங்காரமும் பாதாதிகேசம் பரவி, அந்த அகமகிழ்ச்சியில் தன்னை வாழ்த்தி இறைஞ்சிய புலவர்களுக்கு, பண்டையத் தமிழ்மன்னர்கள் மனம்போன போக்கில் வாரி வழங்கினார்கள், என்கிற வசைச்சொல் இவனால் நீங்கியது... பாடும் புலவரின் பாடலை புரிந்து கொள்பவராயும், அதை வகைப்படுத்தி ரசிப்பவராயும் மட்டுமல்ல, தாங்களும் கவிபாடும் ஆற்றல் பெற்றவர்களாயும் இருந்திருக்கின்றனர் என்று அறிவுடைநம்பியின் அட்டகாசமானப் பாட்டால் அறிந்து கொள்கிறோம். உண்மையிலேயே இந்தப் பாண்டிய மன்னன் தன் பெயர்கேற்ப, தமிழ்ப்புலமையை தன்னகத்தேக் கொண்டுச் சிறந்திருந்தான் என்று தான் இந்தப் புறப்பாடலால் புரிகிறது
16 comments:
மன்னன் அறிவுடைநம்பி பெயருக்கு ஏற்றாற்போலவே சிறப்பான மதிநுட்பம் கொண்டவனாக இருந்திருக்கிறான். மிகச் சிறப்பான பாடல் - பகிர்ந்து கொண்டதற்கும், விளக்கம் சொன்னதற்கும் நன்றி.
பல உண்மைகளுக்கு நடுவே சில பொய்யும் அல்லதுமிகைப்படுத்தலும்தான் கவிதைக்கும் அதை விவரிப்பதற்கும் அழகு எனத் தோன்று கிறது
மிகச் சிறந்த பாடலை எடுத்தாண்டு விளக்கியிருக்கிறீர்கள்.
மக்கட் செல்வம் மிகச் சிறப்பானதுதான். அதில் நம் சுயநலம் அல்லவா கலந்திருக்கிறது. அரசனே ஆனாலும், அவனுக்கு வாரிசு இல்லையென்றால் பதவிச் சண்டை, தன் நிம்மதி இல்லாமல் போவது, அரசு வீழ்ந்துவிடுவது என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் உண்டு. மக்களுக்கும் திருமணம் என்பதன் பயன் மக்கட் செல்வம்.
மழலை சொல், செயல் எல்லாமே இன்பம் பயப்பதுதான்.
பிறக்கும்போது இன்பம், வளரும்போது பேரின்பம்... மக்கட்ச்செல்வம் பெரும் செல்வம். முதுமையில் வெறுத்தொதுக்காமல் இருக்கும்வரை மக்கள்செல்வம் பெரும் செல்வம்.
// இந்தச் சீராட்டல், மண் குடிசையாயிருந்தாலும் சரி, மன்னனின் மாளிகையாய் இருந்தாலும் சரி, ஆசையும் அன்பும், பாசமும் போட்டி போட்டுக் கொண்டு இடம் பார்த்துப் பேதப்படாமல் எல்லா இடங்களிலும் ஒன்றாகத் தான் இருக்கும்.//
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் ஐயா! கடைச்சங்க காலத்து மன்னன் பாண்டியன் அறிவுடைநம்பி பாடிய புறநானூறு பாடலை தந்து சங்ககாலப் பாடலை சுவைக்க உதவியமைக்கு நன்றி!
இதையே தெய்வப்புலவர் திருவள்ளுவரும் தம்முடைய குழந்தையின் சிறு கைகளால் ஊட்டப்பட்ட உணவு இனிமையானது என்பதை
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
என்றும்
தம் குழந்தைகள் உடம்பைத் தீண்டுதல் உடம்புக்கு இன்பம். அவர்களின் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம். என்பதை
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
என்றும்
தம் குழந்தைகளின் மழலைச் சொல் கேளாதவரே குழலிசை இனிது, யாழிசை இனிது என்று சொல்லுவர் என்பதை
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
என்றும் ‘புதல்வரைப்பெறுதல்’ அதிகாரத்தில் தந்துள்ளது நினைவுக்கு வருகிறது.
இன்னும் பல பாடல்களைத் தந்து விளக்க வேண்டுகிறேன்.
ரசித்து, பகிர்ந்து விதம் அருமை.
மன்னன் அறிவுடை நம்பியின் புலமை மெய் சிலிர்க்க வைக்கின்றது. குழந்தை சாப்பிடும் அழகை அனுபவிக்காதவர் எத்தனை செல்வமிருந்தும் என்ன பயன். இருந்தாலும் அறிய கருத்துக்களை கேட்டு தெரிந்துகொள்ள உதவும் செவி செல்வமே எல்லா செல்வங்களுக்கும் தலை என்று அய்யன் சொன்னது..?
அழகான பாடல், அதை நீங்கள் அனுபவித்து, எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இந்தப் பாடலின் பாதிப்பில்தான் நேற்றைய கதையில் மெக்கானிக் அறிவுடை நம்பியாகி விட்டானோ?
@ பாவெ
ஹஹ்ஹா.. நீங்கள் ஒருவர் தான் அறிவுடை நம்பியை சங்கிலிப் பிணைப்பாய் இணைத்து அந்தக் கதையுடன் ஞாபகம் கொண்டிருக்கிறீர்கள். நன்றி.
உண்மையில் சொல்லப் போனால் அந்தக் கதையின் அறிவுடை நம்பிக்கு முன்னோட்டமாய் தான் இந்தப் புறநானூற்றுப் பாடலை நினைவு கொண்டு எழுதினேன் என்பது தான் உண்மை. அதற்கு முன்னாலான எங்கள் பிளாக் பின்னூட்டங்களில் கூட சங்கிலி என்ற வார்த்தையை பிரஸ்தாபித்துப் பின்னூட்டங்கள் போட்டிருக்கிறேன்.
இப்பொழுதெல்லாம் கே.வா.க. பகுதியில் அடுத்த செவ்வாயில் என் கதை இருக்கிறதென்றால் அந்தக் கதையின் தலைப்பு அல்லது ஏதாவது ஒரு வார்த்தையை முன் கூட்டியே எ.பி. வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கிறேன்.
@ Koil Pillai
ஆமாம், கோயில் சார். அந்தக் குழந்தை வர்ணிப்பு தான் என்னையும் மிகவும் கவர்ந்தது.
இட்டும், கவ்வியும், துழந்தும், நெய்யுடை அடிசலை மெய்பட விதிர்த்தும் எவ்வளவு நேர்த்தியான ஆப்ஸர்வேஷன் அது! தாங்களும் ரசித்தமைக்கு நன்றி.
@ Dr. Jamhbulingam
வாங்க, முனைவர் ஐயா. தாங்களும் எப்பொழுதோ ரசித்ததைத் தான் நானும் இப்பொழுது நினைவு கொண்டிருக்கிறேன். நன்றி.
@ வே. நடன சபாபதி
வாங்க, நண்பரே! வள்ளூவ பெருமானின் வ்ரிகளை முத்துக்களைப் போல இந்தப் பகுதியில் பதித்தமைக்கும் மிக்க நன்றி. தங்கள் நினைவாற்றல் என்னை அயர வைத்தது. நண்பரே!
@ ஸ்ரீராம்
நீங்களும் தான் பிரமாதமாக மக்கட்செல்வத்தை வர்ணித்திருக்கிறீர்கள்.
முதுமை விஷயத்தைப் பொறுத்த மட்டில் 'இந்த தந்தை தன் தாய் தந்தையருக்குச் செய்த ஊழ் வினைத் தான் தொடர்ந்து வந்து இவனையும் வாட்டும் என்று நான் நம்புகிறேன்.
இந்த ஊழ்வினையின் செல்வாக்கை இளங்கோ அடிகளாரும், வள்ளுவனாரும் மிக மிக அழுத்தமாகவே சொல்லிச் சென்றுள்ளனர்.
கால இயந்திரம் மாதிரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால் முந்தைய பிறவிகளில் நாம் என்னன்ன செய்தோம் அதற்கேற்றவாறு பரிசு அல்லது சாபம் எது அடுத்த பிறவியில் தொடர்கிறது என்று தெள்ளெனத் தெரிந்து கொள்ளலாம் போலிருக்கு.
@ நெல்லைத் தமிழன்
வாங்க, நெல்லை!
சங்க இலக்கியத்தில் இந்த மாதிரி முத்து பதித்தாற்போல சில பாடல்கள் இருக்கின்றன. அவற்றைத் தேர்ந்தெடுத்து இன்றைய தலைமுறைக்கு அளிக்க வேண்டும் என்ற பேராவல் என்னையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.
அரசனாக இருந்தால் என்ன, ஆண்டியாக இருந்தால் என்ன, நமது எல்லா நிகழ்வுகளின் ஈடுபாட்டின் பின்னணியில் ஏதோ ஒன்று பதுங்கி இருக்கத்தான் செய்கிறது. அதை அழகாக எடுத்துச் சொன்னமைக்கு நன்றி, நெல்லை.
@ ஜிஎம்பீ
மிகைபடுத்துதல், பொய்யெனப் படுவதையும் உண்மை போலச் சொல்லுதல், அதையும்
ரசிக்கிற பாவனையில் மேலும் சில மிகைப்படுத்தலையும், பொய்யான உணர்வுகளையும் கலந்து தருவது -- ஒருவிதத்தில் தாங்கள் உணர்ந்ததை உணர்ந்தபடியே தான் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
சொல்லப் போனால் கவிதை, கதை என்று எல்லா கற்பனை செயல்பாடுகளுக்கும் நீங்கள் சொல்லியிருப்பது தான் ஆணிவேராய் இருந்து அழகூட்டுகிறது.
உண்மையை நேரடியாக சொல்லி விட்டால் நாம் தாங்க மாட்டோம் போலிருக்கு. நேற்று
எ.பி. வாட்ஸாப் குழுமத்தில் சில உண்மைகளைப் பதியும் பொழுது இதை நான் உணர்ந்தேன். அதனால் தான் உண்மை கசக்கும் என்றும் சுடும் என்றும் ஆன்றோர்கள் வகுத்திருக்கிறார்கள் போலிருக்கு.
நீங்கள் நறுக்கு தெறித்தாற் போல இப்பொழுதெல்லாம் பின்னூட்டம் போடுவது சிறப்பாக இருக்கிறது என்ற உண்மையையும் உள்ளபடியே சொல்லிக் கொள்ள விழைகிறேன். நன்றி, ஐயா.
@ வெங்கட் நாகராஜ்
வாங்க, வெங்கட். அதனால் தான் அறிவுடை நம்பி என்று சிறப்பான பெயர் ஒன்றைப் பூண்டானோ அவன்?.. தமிழர் தம் பெருமை சொல்லிச் சொல்லி பெருமைபடத் தக்கது.
தினம் ஒரு பதிவு போட்டு விடுகிறீர்கள். உங்கள் வேகத்திற்கு பின் தொடர முடிவதில்லை.
முடிந்தபொழுதெல்லாம் தங்கள் தளம் பக்கம் வருகிறேன். சரியா?..
Post a Comment