மின் நூல்

Monday, November 3, 2008

ஆத்மாவைத் தேடி....14

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


14. இயற்கையாய் பரிணமித்த இறைவன்

ரிஷிகள் தாங்களே அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மைகளாக இந்த உபநிஷத்துக்கள் இருந்தாலும், எந்த ரிஷிபெருமானும், எந்த இடத்தும், எனது கருத்து இது என்று சொல்லவில்லை. "எங்களுக்கு இது பற்றி சொல்லியவர்கள், இப்படிச் சொன்னார்கள்" என்று மிகுந்த அடக்கத்துடன் சொல்கிறார்கள்.

வேதங்கள் கூட ரிக்,யஜூர்,சாம, அதர்வண என்று நான்காக வியாச பெருமானால் தொகுக்கப்பட்டு, மூன்றாகப் பிரிக்கப்பட்டவைதாம். தேவர்களிடம் பிரார்த்திக்கும் 'சம்ஹிதை', யாக விவரங்களை விவரிக்கும் 'பிராம்மணம்', உபநிஷதங்களாம் உண்மையான உண்மைகளை உள்ளடக்கியிருக்கும் 'ஆரண்யகம்' என்று மூன்று பிரிவுகள். உப நிஷத்துக்களில், பதினாங்கை முக்கியமாகக் குறிப்பிடுகிறார்கள். அவற்றில், ஐதரேய, கெளசீதகி இரண்டும் ரிக் வேதத்திலும், ஈச,கட, தைத்திரீய, பிருஹதாரண்யக, சுவேதஸ்வதர, மைத்ராயணீ, மஹாநாராயண-இவை ஏழும் யஜூர் வேதத்திலும், கேன, சாந்தோக்கிய ஆகிய இரண்டும் சாம வேதத்திலும், ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய ஆகிய மூன்றும் அதர்வண வேதத்திலும் அமைந்துள்ளன.

பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து அதர்வண வேதத்து முண்டக உபநிஷத்தில் நிறைய சொல்லபட்டிருக்கிறது.

இறைவன் பிரபஞ்சத்தைப் படைத்தான். சரி. எப்படிப் படைத்தான் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அவன் பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு முந்தைய நிலை எப்படிஇருந்தது? பிரபஞ்சத்தைப் படைக்கையில் பரம்பொருளின் மனநிலை எவ்வாறு இருந்தது?-- நமது எல்லா சந்தேகங்களுக்கான விளக்கங்களைக் கோர்வையாகச்சொல்லி, அறியாமை இருளை அகற்றுகிறது, முண்டக உபநிஷதம்.

ஓர் ஆச்சரியம் என்னவென்றால், இறைவன் கூட தவம் செய்து தான் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தாராம்! அது ஞானமயமான தவம். எந்த நோக்கமும் அற்ற, இயல்பானதவம். தவத்தின் மேன்மையையும், பெரும் பெருமைகளையும் சொல்ல, அந்தப் பெருமானே தவம் மேற்கொண்டான் போலும்!

தானே தவமியற்றி, அந்த தவத்தின் பயனாகத் தானே வேறொன்றாக வெளிப்பட்டது தான் இந்த தவத்தின் விசேஷம். எந்த பற்றுமின்றி ஞானமயமாக மேற்கொண்ட தவத்தின் பயனாய் விளைந்தது இந்த பிரபஞ்சம்.

சூன்யத்திலிருந்து எதுவும் தோன்றாதாகையால், தோற்றுவிக்க ஒரு சக்தி செயல்பட்டிருக்க வேண்டும். செயல்பட்ட அந்த சக்தியே எல்லாவற்றிலும் நிறைந்திருக்க வேண்டும். தோன்றாநிலையிலிருந்து இறைவன் இயற்கையாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கோலம் இது! வெளிப்பட்டாலும் ஒவ்வொரு துகளிலும், ஒவ்வொருதொடர்ச்சியான பரிணாம வளர்சியிலும் அந்த சக்தியின் கூறு உள்ளீடாக நிரவி, நீக்கமற நிறைந்திருக்கும் விஞ்ஞான பேருண்மை இது.


லம்--ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி!
ஹம்- ஆகாசாத்மனே புஷ்பை பூஜயாமி!
யம்- வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி!
ரம்- அக்ன்யாத்மனே தீபம் தர்சயாமி!
வம்- அம்ருதாத்மனே அம்ருதம் மஹா-நைவேத்யம் நிவேதயாமி!
ஸம்-ஸ்ர்வாத்மனே ஸர்வோபசார-பூஜாம் ஸமர்ப்ப்யாமி
--ஸ்ரீ ருத்ரம்

'லம்' என்ற பிருதிவி பீஜத்தால், பிருதிவி வடிவான உமக்கு சந்தனம் சமர்ப்பிக்கிறேன்.
'ஹம்' என்ற ஆகாச பீஜத்தால், ஆகாய வடிவான உம்மை மலர்களால் பூஜிக்கிறேன்.
'யம்' என்ற வாயு பீஜத்தால், வாயுவடிவான உமக்கு தூபம் காட்டுகிறேன்.
'ரம்' என்ற அக்னி பீஜத்தால், அக்னிவடிவமான உமக்கு தீபம் காட்டுகிறேன்.
'வம்' என்ற அம்ருத பீஜத்தால், அம்ருதவடிவான உமக்கு அம்ருத மாஹா நைவேத்தியத்தை தெரிவிக்கிறேன்.
'ஸம்' என்ற ஸர்வாதம் பீஜத்தால், ஸர்வாத்மகரான உம்மை எல்லா உபசாரங்களாலும் பூஜிக்கிறேன்.

--என்று ஸ்ரீருத்ரத்தில் பூஜாமந்திரங்கள் ந்யாஸம் பகுதியில் வருகின்றன.

நீர், நிலம், ஆகாயம், தீ, காற்று-- என்ற ஐந்து பெரும் சக்திகளிலும் இறைசக்தி உறைந்திருப்பதை உணரத்தலைப்பட்ட பின், இயற்கை வழிபாடு துவங்கியது.

இறைவன் இயற்கையாய் இருந்து காப்பது புத்திக்குப் புரிந்ததும், இயற்கையோடு இயைந்த வாழ்வு கொள்வதை பாக்கியமாக எண்ணி மனம்பரவசப்பட்டது. இயற்கையே இறைவன், இறைவனே இயற்கை என்னும் ஞானம் பிறந்தது.

இயற்கையின் அற்புத அழகில் மயங்கி மனத்தைப் பறிகொடுத்த கவிஞர்கள் ஏராளம். வேர்ஸ்ட்வொர்த்திலிருந்து பாரதி வரை, அவருக்குப் பின் வந்தோரும் இயற்கையில் இறைவனை உள்ளார்ந்து உணர்ந்து பரவசப் பட்டிருக்கிறார்கள். 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா!" என்று மகிழ்ந்து கூத்தாடியிருக்கிறார்கள்.

பிரபஞ்சத் தோற்றத்திலிருந்து--இறைவனும் சிருஷ்டியைத் தோற்றுவிப்பதாகத் தன்னையே பிரபஞ்ச இயற்கையாய் சிருஷ்டித்துக் கொண்டதிலிருந்து, மனிதம் வரை- அந்த சிருஷ்டியின் நீட்சியை 'மனிதனின் ஜனனத்திலிருந்து' பகுதியைப் பற்றி சொல்ல இருப்பவர்கள் கூறக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு விஷயத்தை மிகுந்த தாழ்மையுடன் இந்த சபையில் விண்ணப்பிக்கக் கடமைப்பட்டுள்ளேன். மனிதகுலத்திற்குக் கிடைத்த மகத்தான அளப்பரிய செல்வமான உபநிஷத்துக்களின் வீரியத்தை இங்கொன்றும் அங்கொன்றுமாய் எடுத்துச் சொல்லிய குறிப்புகளாலும், காகிதத்தில் அச்சடித்த வெற்று உரைகளாலும் உணர்ந்து விட முடியாது. அவற்றின் சாரம், தவமிருந்து பெற்ற செல்வம். முனிவர்கள் மட்டும் அல்லர்; ஜனகர், அஜாதசத்ரு போன்ற மாமன்னர்களும் தவவலிமை கொண்டு ஞானத்தைத் தேடிப்பெற்ற செல்வம்.

வேத, உபநிஷத மந்திரங்களின் உண்மையான பொருள் என்பது மிகவும் அர்த்தம் நிரம்பியது. திரும்பத் திரும்ப அவற்றைப் படிப்பதின் மூலமும், அவற்றை அனுதின நடைமுறை வாழ்க்கை நடவடிக்கைகளில் கடைபிடிப்பதின் மூலமும், அவற்றில் தோய்ந்தும், திளைத்தும், ஆனந்தித்தும் அடையும்படியான அனுபவம் இது. அவரவர் சுய அனுபவத்தின் மூலமே இது சாத்தியமாகும். உடல் ஆரோக்கியமும், மனநிம்மதியும், வாழ்க்கையில் சந்துஷ்டியும் இதனால் சித்தியாகும். தூய வெள்ளை மனத்துடன்,தினம் தினம் நம்மை வழிநடத்திச் செல்லும் பரம்பொருளின் மாறாத அன்பில் மனம் செலுத்தி அடையக்கூடிய ஞானச்செல்வம் இது.

ஒன்று மட்டும் நிச்சயம். கிடைத்தற்கரிய பேறு மனிதம். அந்த மனித வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ, அன்பை ஒருவொருக்கொருவர் பகிர்ந்து கொள்ள, நம் முன்னோர்கள் நமக்களித்த இந்த பழம்பெரு செல்வங்கள், கைவிளக்காக இருந்து ஒளிகாட்டி வழிநடத்திச் செல்லும் என்பது மட்டும் உண்மை.

இத்துடன் எனது குறிப்புகளுக்கான உரையை முடித்துக் கொண்டு, அடுத்த அமர்வில் உங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்.

சகோதர, சகோதரிகளே! உங்களுக்கு மிக்க நன்றி. நமஸ்காரம்" என்று யோகி குமாரஸ்வாமி பேசிமுடித்ததும், அத்தனை பிரதிநிதிகளும் எழுந்து நின்று அவருக்குத் தங்கள் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.


மதிய உணவிற்குப் பின், பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றிய தனது உரையைப் படிக்க பூவியல் பேராசிரியர் சாம்பசிவம் தயாராக இருந்தார்.

(தேடல் தொடரும்)

11 comments:

Kavinaya said...

பல புதிய செய்திகளை கற்றுக் கொண்டேன் ஐயா. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி எளிமையாக அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.

//கிடைத்தற்கரிய பேறு மனிதம். அந்த மனித வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ, அன்பை ஒருவொருக்கொருவர் பகிர்ந்து கொள்ள, நம் முன்னோர்கள் நமக்களித்த இந்த பழம்பெரு செல்வங்கள், கைவிளக்காக இருந்து ஒளிகாட்டி வழிநடத்திச் செல்லும் என்பது மட்டும் உண்மை.//

அருமையான முத்தாய்ப்பு. மிக்க நன்றி.

Expatguru said...

உபநிஷத்துக்களில் இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா? பிரமாதமான தகவல்களை கூறியுள்ளீர்கள். நன்றி.

ஜீவி said...

கவிநயா said...
//பல புதிய செய்திகளை கற்றுக் கொண்டேன் ஐயா. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி எளிமையாக அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.//

//அருமையான முத்தாய்ப்பு. மிக்க நன்றி.//

பொறுமையாகத் தொடர்ந்து படித்து பின்னூட்டமும் இடும் உங்களுக்கும் மிக்க நன்றி, கவிநயா!

அடுத்து பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி விஞ்ஞானபூர்வமான அலசல் தொடரவிருக்கிறது.. உபநிஷத்துக்கள் சொல்லும் உண்மைகளையும், விஞ்ஞான விளக்கங்களையும் ஓர்ந்து ஒப்புநோக்கி சந்தோஷியுங்கள்.

தொடர்ந்து வாருங்கள்.. மிக்க நன்றி, கவிநயா!

ஜீவி said...

Expatguru said...
//உபநிஷத்துக்களில் இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா? பிரமாதமான தகவல்களை கூறியுள்ளீர்கள். நன்றி.//

வாருங்கள், குரு!
இப்பொழுது கொடுத்தது ஒரு தகவல் அனுபவத்திற்காகத் தான். ஞாயிறைப் பற்றி, ஒளியைப் பற்றி என்று பல செய்திகளை, நீட்சி கருதி தவிர்த்து விட்டேன். கிட்டத்தட்ட 80 உபநிஷத்துக்களை ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். கிடைத்தால் படிக்கத் தவறாதீர்கள்.

தொடர்ந்து வெவ்வேறு தலைப்புகளில் சதஸ் பிரதிநிதிகள் உரையாற்ற இருக்கிறார்கள்.
வருகை தர மறக்காதீர்கள்.

மிக்க நன்றி, குரு!

கபீரன்பன் said...

//மகத்தான அளப்பரிய செல்வமான உபநிஷத்துக்களின் வீரியத்தை இங்கொன்றும் அங்கொன்றுமாய் எடுத்துச் சொல்லிய குறிப்புகளாலும், காகிதத்தில் அச்சடித்த வெற்று உரைகளாலும் உணர்ந்து விட முடியாது.//

//தூய வெள்ளை மனத்துடன்,தினம் தினம் நம்மை வழிநடத்திச் செல்லும் பரம்பொருளின் மாறாத அன்பில் மனம் செலுத்தி அடையக்கூடிய ஞானச்செல்வம் இது//

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார் யோகி குமாரஸ்வாமி. அடுத்து பேரா. சாம்பசிவம் உரைக்காகக் காத்திருக்கிறேன் .
நன்றி

ஜீவி said...

//மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார் யோகி குமாரஸ்வாமி. அடுத்து பேரா. சாம்பசிவம் உரைக்காகக் காத்திருக்கிறேன் .
நன்றி//

ஓ!.. தொடர்ந்து படிக்கிறீர்கள் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி, கபீரன்ப!
ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியின் (பெரியவரை மறந்திருக்க மாட்டீர்கள்)அழைப்புக்காக சாம்பசிவமும் காத்திருக்கிறார். அவர் அழைத்ததும் தன் உரையைத் தொடர்ந்து விடுவார்.
உங்களின் காத்திருத்தலுக்கு நன்றி பல.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"திரும்பத் திரும்ப அவற்றைப் படிப்பதின் மூலமும், அவற்றை அனுதின நடைமுறை வாழ்க்கை நடவடிக்கைகளில் கடைபிடிப்பதின் மூலமும், அவற்றில் தோய்ந்தும், திளைத்தும், ஆனந்தித்தும் அடையும்படியான அனுபவம் இது. அவரவர் சுய அனுபவத்தின் மூலமே இது சாத்தியமாகும்."
மிக அருமையான முத்தாய்ப்பு, நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். சொந்த அனுபவத்தில் ஒரு உபநிஷத்தின் மூல உரையை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்து அது கைகூடாமல் போனது, அது குறித்த குற்ற உணர்வும் ஆர்வமும் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் "திரும்பத்திரும்ப படித்து" என்பது எனக்காக உச்சரிக்கப்பட்ட வாசகமாகத்தோன்றுகிறது. நன்றி..

ஜீவி said...

//அனுபவத்தில் ஒரு உபநிஷத்தின் மூல உரையை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்து அது கைகூடாமல் போனது, அது குறித்த குற்ற உணர்வும் ஆர்வமும் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் "திரும்பத்திரும்ப படித்து" என்பது எனக்காக உச்சரிக்கப்பட்ட வாசகமாகத்தோன்றுகிறது. நன்றி..//

மனதில் உறுதி கொண்டால் முடியாதது எதுவும் உண்டா?..
முயற்சி திருவினையாக்க வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

உபநிடதங்கள் சொல்வதை மிக அழகாக யோகி அவர்கள் சொல்லிவிட்டார்கள். ஒவ்வொரு முறை ஏதேனும் ஒரு உபநிசத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கும் போதும் மனம் உள்ளே சென்றுவிடுகிறது. அறிவியலைப் படிக்கும் போது வெளியே சென்றுவிடுகிறது. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் இருக்கும் தொடர்பை அறிய இரண்டைப் படிக்கும் போதும் உள்ளேயும் வெளியேயும் பார்வை செல்ல வேண்டும் என்று இப்போது நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

உபநிடதங்கள் சொல்வதை மிக அழகாக யோகி அவர்கள் சொல்லிவிட்டார்கள். ஒவ்வொரு முறை ஏதேனும் ஒரு உபநிசத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கும் போதும் மனம் உள்ளே சென்றுவிடுகிறது. அறிவியலைப் படிக்கும் போது வெளியே சென்றுவிடுகிறது. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் இருக்கும் தொடர்பை அறிய இரண்டைப் படிக்கும் போதும் உள்ளேயும் வெளியேயும் பார்வை செல்ல வேண்டும் என்று இப்போது நினைக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

உபநிஷத் பற்றி எங்கே பிராமணன் சீரியலில் சோ அவர்கள் கூறுவது அதன் 99-ஆம் பகுதியில் வருகிறது. பார்க்க http://dondu.blogspot.com/2009/06/99-100.html
சம்பந்தப்பட்ட வீடியோவின் சுட்டி பகுதியின் தலைப்பிலேயே உள்ளது. ஃபைர் ஃபாக்சில் பார்த்தல் நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Related Posts with Thumbnails