மின் நூல்

Thursday, November 6, 2008

ஆத்மாவைத் தேடி....15

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

15. அண்டவெளியில் அதிசயம்

புவியியல் பேராசிரியர் சாம்பசிவம் தனது உரையை ஆரம்பிக்கும் பொழுது மதியம் மணி இரண்டுக்கு மேலாகிவிட்டது. நிறுத்தி நிதானித்துப் பேசும் அவர் பேச்சை மிக உன்னிப்பாக எல்லோரும் செவிமடுத்தனர்.

காலை யோகி குமாரஸ்வாமியின் உரை பிரபஞ்சத் தோற்றம் குறித்து உபநிஷத்துக்கள் என்ன சொல்கின்றன என்பதாய் இருந்ததினால், இப்பொழுது அந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி புவியியல் விஞ்ஞான உண்மைகளாய் இவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்கும் ஆவல் எல்லோருக்கும் இருந்தது.

பேராசிரியர் சாம்பசிவம் நிதானமாகத் தன் உரையை ஆரம்பித்தார்.
"நமக்குத் தெரிந்த சூரியனின் குடும்பத்தில் பூமியைச் சேர்த்து ஒன்பது கோள்கள். பல கோள்களுக்குத் துணைக்கோள்கள் உண்டு. கவிஞர் பாடிய வெள்ளை நிலாதான் பூமிக்குத் துணைக்கோள்; இயற்கையான துணைக்கோள். செவ்வாய்க்கு இரண்டு என்றால், வியாழனுக்குப் பதினாறு துணைக்கோள்கள்! இதுவரை கண்டுபிடிக்காத எத்தனையோ துணைக்கோள்கள் சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் அபிப்ராயப்படுகிறார்கள்.

"சூரியன், சந்திரன், மற்றும் வானவெளியிலும் மினுக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள்-- நமது புலனுக்குத் தெரியும் இவை சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி மட்டுமே அண்டவெளியல்ல. மிகவும் சகிதிவாய்ந்த தொலை நோக்கியால் விண்வெளியைப் பார்த்தால், ஆச்சரியப்பட்டுப் போவோம். பிரகாசமிக்க ஒளிவெள்ள கோலாகலம் தான்! அந்த பால்வெளி வீதியில் ஒளிவெள்ளத்தைப் பீச்சியடிக்கும் பல கோடி விண்மீன்களின் சாகசம் தான் அந்த வெளிச்சத் திருவிழா!

"பால்வெளியைப் பற்றி இதுவரை நமக்குத் தெரிந்தவைகளை விட, தெரியாதவை அதிகம். பன்மடங்கு பெருக்கம் கொண்ட கோடிக்கணக்கான பால்வெளிகளின்தொகுப்பே அகண்டவெளி. கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்கள்; கோடிக்கணக்கான விண்மீன்கள்! அந்தக் கோடியில் நமக்குத் தெரிந்த ஒரு விண்மீன்,சூரியன்! அவ்வளவுதான்!

"கற்பனைக்கும் விஞ்சிய அகண்டப் பெருவெளி இந்த அண்டவெளி. இன்னும் அறிய வேண்டிய இயற்கையின் சூட்சுமங்கள், அனந்த கோடி! ஒன்றுக்கு ஒன்றான ஈர்ப்பு விசையால் தான் அண்டத்திலுள்ள அனைத்தும் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பதை அறிவோம். இந்த ஈர்ப்பு விசை இற்றுப் போனதால், அண்டவெளியிலிருந்து காணாமல் போன அல்லது வெவ்வேறான திசைகளில் இடம் மாறிப்போனவை எத்தனையோ!

"ஆக ஒன்றுடன் ஒன்றான இந்த ஈர்ப்பு விசைதான் கோள்கள், விண்மீன்கள்
என்ற அத்தனையின் ஆக்கத்தையும், அழிவையும் தீர்மானிக்கின்றன். இதைத்
தவிர அண்டவெளியைப் பற்றிய ஒரு முக்கியமான சமாச்சாரம் சொல்ல
வேண்டும்" என்ற பேராசிரியர் சாம்பசிவம் தொண்டையைச் செருமிக் கொண்டார்.

(தேடல் தொடரும்)

13 comments:

கபீரன்பன் said...

//கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்கள்; கோடிக்கணக்கான விண்மீன்கள்! அந்தக் கோடியில் நமக்குத் தெரிந்த ஒரு விண்மீன்,சூரியன்! அவ்வளவுதான் //

கல்லூரியில் படிக்கும் போது Big Bang theory பற்றிய கட்டுரை எழுத வேண்டியிருந்தது. ”யாரிதற்க்கெல்லாம் அதிகாரி” என்ற நாமக்கல்லாரின் கேள்விக்கு முழுபரிமாணமும் அப்போது புரிந்தது.

இப்போது காணும் சில நட்சத்திரங்கள் மறைந்து போயிருக்கும் எனவும் அவைகளின் ஒளி பூமியை வந்தடைவதில் ஆகும் காலதாமதமே அவைகள் இன்னும் இருப்பதாக ஒரு பிரமையை தோற்றுவிக்கிறதாம்

Several million light-years away.

One light-year is the distance traveled by light in one year at a speed of 3000 km per second !

ஒருவருடத்தில் 3000x 3600x24x365= 9500 கோடி கி.மீ. தலை சுற்றுது.

பிரம்மாண்டத்தில் நாம் அணுவை விட சிறியவர்கள் என்பதை மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி.

கபீரன்பன் said...

சிறு திருத்தம்

Speed of light 30000( முப்பது ஆயிரம் கி மீ / செகண்ட்). ஒரு Light year = 95000 கோடி என்று திருத்திக் கொள்ளவும். தவறுக்கு வருந்துகிறேன்.

jeevagv said...

//ஆக ஒன்றுடன் ஒன்றான இந்த ஈர்ப்பு விசைதான் கோள்கள்//
ஈர்ப்பு விசை, என்றவுடன், இறை அன்பும், அதன் விசையும் நினைவுக்கு வருவதை, தவிர்க்க இயலவில்லை!

திவாண்ணா said...

நேத்துதான் இந்த பதிவுகளுக்கான தொடுப்பை ஜீவாவோட பதிவில பாத்தேன். அப்டேட் ஆயாச்சு. நன்றி ஜீவா!
ஜீவி "உள்ளேந்து" எழுதறீங்க! மேல சொல்ல ஒண்ணுமில்லை. :-)

ஜீவி said...

கபீரன்பன் said...
//கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்கள்; கோடிக்கணக்கான விண்மீன்கள்! அந்தக் கோடியில் நமக்குத் தெரிந்த ஒரு விண்மீன்,சூரியன்! அவ்வளவுதான் //

//கல்லூரியில் படிக்கும் போது Big Bang theory பற்றிய கட்டுரை எழுத வேண்டியிருந்தது. ”யாரிதற்க்கெல்லாம் அதிகாரி” என்ற நாமக்கல்லாரின் கேள்விக்கு முழுபரிமாணமும் அப்போது புரிந்தது.//

அடடா! 'சூரியன் வருவது யாராலே..'
என்று தொடங்கும் அந்தப் பாடல் அற்புதமான பாடல் அல்லவா?
நினைவுபடுத்தியமைக்கு நன்றி. அந்த
அழகான பாடலை இந்தப் பதிவில் எங்காவது ஓர் இடத்தில் பதிந்துவிட வேண்டும்.

ஜீவி said...

கபீரன்பன் said...
//சிறு திருத்தம்

Speed of light 30000( முப்பது ஆயிரம் கி மீ / செகண்ட்). ஒரு Light year = 95000 கோடி என்று திருத்திக் கொள்ளவும்.//

கணக்கே போட்டு விட்டீர்களே?
பிர்மாண்டத்தை நினைத்து மலைக்கத்தான் தோன்றுகிறது.
அந்த மலைப்பைத் தொடர்ந்த நினைப்பு தான் அற்புதம்!
வருகைக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி, கபீரன்ப!

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
//ஆக ஒன்றுடன் ஒன்றான இந்த ஈர்ப்பு விசைதான் கோள்கள்//
ஈர்ப்பு விசை, என்றவுடன், இறை அன்பும், அதன் விசையும் நினைவுக்கு வருவதை, தவிர்க்க இயலவில்லை!

எல்லாவற்றிலும் பரம்பொருளையும், அந்தப் பரம்பொருளின் அன்பையும் காணுதல் அன்பைப் புரிந்து கொண்டோர் சிறப்பு.
வருகைக்கும் மிக்க நன்றி,ஜீவா!

ஜீவி said...

திவா said...
//நேத்துதான் இந்த பதிவுகளுக்கான தொடுப்பை ஜீவாவோட பதிவில பாத்தேன். அப்டேட் ஆயாச்சு. நன்றி ஜீவா!
ஜீவி "உள்ளேந்து" எழுதறீங்க! மேல சொல்ல ஒண்ணுமில்லை. :-)//

ஓ! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தொடர்ந்து தேடுவோம், வாருங்கள்!

Kavinaya said...

கற்பனைக்கெட்டாத அவனிடமிருந்தும் தோன்றிய பிரபஞ்சமும் அப்படித்தானே இருக்கும். ஜீவா சொன்ன விஷயம் மிகவும் பிடித்தது. இறைவனிடம் நமக்குள்ள ஈர்ப்பு இற்று விடாமல் அவனேதான் காக்க வேண்டும்.

பேராசிரியர் சாம்பசிவம் சொல்லப் போகும் முக்கியமான செய்தியை எதிர்பார்த்து...

ஜீவி said...

கவிநயா said...
//கற்பனைக்கெட்டாத அவனிடமிருந்தும் தோன்றிய பிரபஞ்சமும் அப்படித்தானே இருக்கும். ஜீவா சொன்ன விஷயம் மிகவும் பிடித்தது. இறைவனிடம் நமக்குள்ள ஈர்ப்பு இற்று விடாமல் அவனேதான் காக்க வேண்டும்.

பேராசிரியர் சாம்பசிவம் சொல்லப் போகும் முக்கியமான செய்தியை எதிர்பார்த்து...//

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள், கவிநயா!
'அன்பே சிவ'மாகிப் போனவன், அன்பு கொண்டோரின் ஈர்ப்பை இற்று விடுதல் எங்ஙனம்?.. அவன் அருளால் அவன் தாள் வணங்குவோம்..

ஜீவி said...

கவிநயா said..

//பேராசிரியர் சாம்பசிவம் சொல்லப் போகும் முக்கியமான செய்தியை எதிர்பார்த்து...//

இதுவரை என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை..
தெரிந்ததும், தெரிவிக்கிறேன்.
ஆர்வத்திற்கு நன்றி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"ஆக ஒன்றுடன் ஒன்றான இந்த ஈர்ப்பு விசைதான் கோள்கள், விண்மீன்கள்
என்ற அத்தனையின் ஆக்கத்தையும், அழிவையும் தீர்மானிக்கின்றன். "
வாழ்வாதரமான அன்பைப்போல அல்லவா

ஜீவி said...

கிருத்திகா said...
//"ஆக ஒன்றுடன் ஒன்றான இந்த ஈர்ப்பு விசைதான் கோள்கள், விண்மீன்கள்
என்ற அத்தனையின் ஆக்கத்தையும், அழிவையும் தீர்மானிக்கின்றன். "
வாழ்வாதரமான அன்பைப்போல அல்லவா//

சரியாகச் சொன்னீர்கள். வாழ்விலும், தாழ்விலும் என்று இரண்டு நிலைகளிலும்.

Related Posts with Thumbnails