மின் நூல்

Monday, November 17, 2008

ஆத்மாவைத் தேடி....18

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


18. மனசில் எழுந்தக் குரல்

தாழ்ந்திருந்த, சிவப்புக் கம்பளம் விரித்திருந்த படிகளேறி மேடையேறினார் கிருஷ்ணமூர்த்தி.

ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியைக் கண்டதும் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். இந்த சில நாட்களில் தன் பண்பாலும், நெருங்கி பழகும் சுபாவத்தாலும், எல்லோருடைய தேவைகளையும் உடனுக்குடன் கவனித்து அவரவர்களுக்குத் தேவையானதை செய்த நேசத்தாலும் அனைவரின அன்புக்கும், பிரியத்திற்கும் உரியவராகியிருந்தார் அந்தப் பெரியவர்.

மைக் பிடித்து, "சகோதர, சகோதரிகளே!" என்று கணீரென்று ஆரம்பித்தார் கிருஷ்ணமூர்த்தி. இத்தனை வயதில் கொஞ்சம் கூட அலுப்புக் காட்டாமல் உற்சாகமாக இருந்தார் அவர். "உங்கள் எல்லோருக்கும் என் அன்பான வணக்கம். நாமெல்லோரும் பாக்கியம் செய்தவர்கள்.. பேராசிரியர் சாம்பசிவம் சொன்னாரே, 'மெஞ்ஞானமும் விஞ்ஞானமும்கலக்கும் இடம் இதுதான்' என்று... அவர் அதைச் சொல்லும் போது, நான் பரவசப்பட்டுப் போனேன். கோயில் கோயிலாகவும், கிராமம் கிராமமாகவும் சென்று புராணசொற்பொழிவுகள் ஆற்றிக் கொண்டிருந்தேன். தீர்க்கமாகச் சொல்லப் போனால், அதுதான் என் தொழில் என்றாலும், அப்படிப் புராணச் சொற்பொழிவு ஆற்றுவது எனது மனதுக்கு மிகவும் பிடித்துப் போனதால், எனது செயலில் நேர்த்தி கூடி, போகப்போக 'இறைவனின் புகழ்பாடும் இப்படிப்பட்ட பணியைச் செய்யத்தான் ஜென்மம் எடுத்தோம்' என்று நினைக்கத் தலைப்பட்டேன். அந்த நினைப்பு மேலோங்க மேலோங்க, என்னுள் ஒரு தீனக்குரல் எழுந்து சதாசர்வ காலமும் என்னை உருக்கத்தொடங்கியது. 'அந்தப் பிறைசூடிய பெம்மான் உறையும் அந்த வெண்பனிமலைக்குப் போவோம், வா!' என்பதே பல்வேறு விதங்களில் எனக்கு நானே உணர்ந்த அந்தக் குரலின் சராம்ச செய்தி.

"ஆரம்பத்தில் ஒரு நினைப்பாக இருந்த இந்த எண்ணம், நாளாக நாளாக வலுப்பெற்று ஒருநாள், "வடக்கே போகிறேன்.." என்று வீட்டில் சொல்லி விட்டு ரயிலேறி விட்டேன். இந்த தில்லி பட்டணம் வரை தான் என் பிரயாணம் சித்தித்தது. இந்த மாநகரின் மண்ணில் என் காலடி பட்டதும், அவன் சித்தம் வேறாகிப் போனது போலும்! பெரியவர், புரவலர், மனோகர்ஜியை நான் சந்தித்தது, அவர் என்னைத் தேடிக் காத்திருந்தது, இந்த சதஸ்.. அதற்கான பணிகள்---எல்லாமே தெய்வ சங்கல்பங்கள்!


"எதற்கு சொல்ல வந்தேனென்றால், ஆன்மீகம் என்பது பரந்து விரிந்து விழுது பரப்பிச் செழித்த ஆலமரம் என்று இங்கு வந்து இந்த சபையில் உட்கார்ந்ததும் தான் எனக்குப்புரிந்தது. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி யோகி குமாரஸ்வாமி அவர்களும், பேராசிரியர் சாம்பசிவம் அவர்களும் அழகழகாகச் சொன்னார்கள். அவர்களுக்கு இந்த அவையினர் சார்பாக மிக்க நன்றி.


"வெறும் புராணக்கதைகளை அறிந்ததோடு நின்றுவிடாமல், யதார்த உலகில் கால் பதிக்கிற உண்மைகளாய், நான் இதுவரை அறிந்திராத பல செய்திகளை அறிந்துகொண்ட்டேன். இனி நான் 'புராண கதா காலேட் சேபங்களை'ச் சொல்லும் பொழுது, நான் அறிந்த இந்தப் புதிய தகவல்களையும் சேர்த்து என் கதை சொல்லும் பணி அமையும் என்று இந்த அவையில் தெரிவித்துக் கொள்கிறேன். இது இறைவன் இட்ட கட்டளை.


"பயத்தின் அடிப்படையில் எதுவுமே இருக்கக்கூடாது; கடவுள் பக்தி கூட.
பயம் விட்டதென்றால், பக்தி போய்விடும். பிரமிப்பு கூடத்தான்; அது குழந்தைத்தனம். அதை விடக் கூட ஆன இன்னொரு பிரமிப்பில் இது போய்விடும்... எதையும் மனசாரப் புரிந்து கொண்டோமென்றால், 'இது அவசியம் இந்த வாழ்க்கைக்கு'ன்னு தோன்றினதென்றால், அது நிலையா இருக்கும். சுகமா அழுந்தப் படுத்திண்டு தூங்கறதை விட்டுட்டு, இது என்ன விடிஞ்சாப் போதும், மூக்கைப் பிடிச்சிண்டு உட்கார்ற வேலைன்னு, பிராணாயாமத்தைப் பழகிக்கறச்சே ஆரம்பத்லே எரிச்சலா வரும்.. 'இது ஒரு மூச்சுப்பயிற்சி; உயிருக்கு கொடுக்கற டானிக்; உடல் ஆரோக்யமா அங்கேயும் இங்கேயும் அலையறத்துக்குத் தேவை; செஞ்சா மூஞ்சிலே தேஜஸ் பொங்கும்'ன்னு புரிஞ்சிண்டா அலுப்புத் தட்டாது. ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு ரெண்டு தடவையாச் செய்யச் சொல்லும்.

"கடவுளுடோட அன்பும் அருளும் நம்ம நெஞ்சிலே பதியறது தான் முக்கியம்.
அவனிடமிருந்து பெற்ற அந்த அன்பை எல்லாரிடமும் திருப்பிச் செலுத்தறது தான் முக்கியம். கொடுக்கறது எதுவும் ரெண்டு மடங்கா திருப்பி நமக்கே வருங்கறதுங்கறதும் இன்னொரு உண்மை. இப்படி கொடுத்தும் வாங்கியும் அடையற இன்பத்தை அனுபவிச்சவங்களுக்கு நன்னா தெரியும். நாளா வட்டத்தில் அதுதான் வாழ்க்கைங்கறதும் புரியும்.

"எங்கோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிடுத்து. 'உயிர்களின் ஜனனத்திலிருந்து' என்கிற இரண்டாவது தொடரில், உபநிஷதுகள் சொல்லும் செய்திகளை சொல்லி சகோதரி நிவேதிதா அவர்கள் நாளை உரை ஆற்ற இருக்கிறார்கள்.
உங்களைப் போல நானும் அவர் சொல்லவிருக்கும் செய்திகளைக் கேட்க மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன். எல்லோருக்கும் மிக்க நன்றி.."என்று தனது உரையை பெரியவர் கிருஷ்ணமூர்த்தி முடித்துக் கொண்டார்.

மனோகர்ஜி எல்லோருக்கும் நன்றி கூற அனைவரின் முகத்திலும்
அசாத்திய மகிழ்ச்சி தெரிந்தது.

(தேடல் தொடரும்)

9 comments:

Kavinaya said...

//எதையும் மனசாரப் புரிந்து கொண்டோமென்றால், 'இது அவசியம் இந்த வாழ்க்கைக்கு'ன்னு தோன்றினதென்றால், அது நிலையா இருக்கும்.//

மிகவும் உண்மை.

//"கடவுளுடோட அன்பும் அருளும் நம்ம நெஞ்சிலே பதியறது தான் முக்கியம்.
அவனிடமிருந்து பெற்ற அந்த அன்பை எல்லாரிடமும் திருப்பிச் செலுத்தறது தான் முக்கியம்.//

அருமையாகச் சொன்னீர்கள் ஐயா. நினைவில் பதித்துக் கொள்ள வேண்டிய செய்தி. மிக்க நன்றி.

jeevagv said...

//'இறைவனின் புகழ்பாடும் இப்படிப்பட்ட பணியைச் செய்யத்தான் ஜென்மம் எடுத்தோம்'//
திருச்செயல் அருட்செயலாகவும் இருப்பதில் வியப்பில்லை!

கபீரன்பன் said...

//...பயம் விட்டதென்றால், பக்தி போய்விடும். //

ரொம்ப சரி. மனிதனுக்கு கஷ்டம் வரும் போது பயம் வருகிறது. பயத்தில் பற்றிக்கொள்ள கடவுள் பெயரை தேடுகிறோம். அதை பக்தி என்றும் நினைத்துக் கொள்கிறோம்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"கடவுளுடோட அன்பும் அருளும் நம்ம நெஞ்சிலே பதியறது தான் முக்கியம்.
அவனிடமிருந்து பெற்ற அந்த அன்பை எல்லாரிடமும் திருப்பிச் செலுத்தறது தான் முக்கியம். கொடுக்கறது எதுவும் ரெண்டு மடங்கா திருப்பி நமக்கே வருங்கறதுங்கறதும் இன்னொரு உண்மை. இப்படி கொடுத்தும் வாங்கியும் அடையற இன்பத்தை அனுபவிச்சவங்களுக்கு நன்னா தெரியும். நாளா வட்டத்தில் அதுதான் வாழ்க்கைங்கறதும் புரியும்." சத்தியமான வார்த்தைகள்.
சகோதரி நிவேதிதாவிற்காக எல்லோரையும் போல் நானும் வெயிட்டிங்

ஜீவி said...

வாருங்கள், கவிநயா!

மிக்க சந்தோஷம்.

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
//'இறைவனின் புகழ்பாடும் இப்படிப்பட்ட பணியைச் செய்யத்தான் ஜென்மம் எடுத்தோம்'//
திருச்செயல் அருட்செயலாகவும் இருப்பதில் வியப்பில்லை!

திருச்செயல்--அருட்செயல் எல்லாவற்றையும் குறித்து சகோதரி நிவேதிதா உரையாற்ற போவதாகச் சொல்லியிருக்கிறார்.
ஆகவே, அடுத்த பகுதிக்கு தவறாது ஆஜராகி விடவும்.
நறுக்குத் தெரித்தாற் போன்ற கருத்துக்கு நன்றி.

ஜீவி said...

கபீரன்பன் said...
//...பயம் விட்டதென்றால், பக்தி போய்விடும். //

//ரொம்ப சரி. மனிதனுக்கு கஷ்டம் வரும் போது பயம் வருகிறது. பயத்தில் பற்றிக்கொள்ள கடவுள் பெயரை தேடுகிறோம். அதை பக்தி என்றும் நினைத்துக் கொள்கிறோம்.//

ஆஹா.. அருமையாக சொல்லி விட்டீர்கள்.. ஆக, இடுக்கண் வருங்கால் பற்றிக் கொள்ள எதாவது மனதுக்குத் தேவைப்படுகிறது.
பற்றிக் கொள்வதை பக்தி என்று சொல்வது பழக்கமாகவும் ஆகிவிட்டது இல்லையா?..

அழகாக, சுருக்கமாகச் சொன்ன கருத்துக்கு மிக்க நன்றி, கபிரன்ப!

ஜீவி said...

//சகோதரி நிவேதிதாவிற்காக எல்லோரையும் போல் நானும் வெயிட்டிங்//

காத்திருப்பதில் சுகமுண்டு என்றாலும் அவர் உங்களைக் காக்க வைக்கப் போவதில்லை..

அவர் உரையின் ஒரு பகுதியைப் படித்து விட்டேன். அது
உங்கள் மனதை மிகவும் கவரும் என்பதிலும் சந்தேகமில்லை,
சமீபத்தைய ரயில் பயணங்களைப்
போல்!

ஜீவி said...

கிருத்திகா said...
//சகோதரி நிவேதிதாவிற்காக எல்லோரையும் போல் நானும் வெயிட்டிங்//


வாருங்கள், கிருத்திகா!
காத்திருப்பதில் சுகமுண்டு என்றாலும் அவர் உங்களைக் காக்க வைக்கப் போவதில்லை..

அவர் உரையின் ஒரு பகுதியைப் படித்து விட்டேன். அது
உங்கள் மனதை மிகவும் கவரும் என்பதிலும் சந்தேகமில்லை,
சமீபத்தைய ரயில் பயணங்களைப்
போல்!

Related Posts with Thumbnails