மின் நூல்

Thursday, November 20, 2008

ஆத்மாவைத் தேடி....19

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

19. உத்தமன் கோயில் கொண்டான்

காலை உணவை முடித்துக் கொண்டு அத்தனை பிரதிநிதிகளும் அவைக்கு வரத்தொடங்கி விட்டனர்.

அந்த நீண்ட ஹாலின் வெளியே மனோகர்ஜியும், பெரியவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்களும் நின்று கொண்டு அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தனர். ஆற்றும் உரைகளின் குறிப்பெடுப்பவர்கள், ஒலி-ஒளிப்பதிவாளர்களென்று எல்லோரும் உற்சாகத்தோடு தம் பணியைத் தொடங்கக் காத்திருந்தனர்.

சரியாக பத்து மணிக்கு சகோதரி நிவேதிதா மேடையேறி விட்டார். மைக்கைப் பேசுவதற்கு வாகாக சரிப்படுத்திக்கொண்டு அவர் துவங்குகையில் அரங்கே நிறைந்திருந்தது.

"சகோதர, சகோதரிகளே!" என்று அவர் தொடங்கும் பொழுது, அந்த அழைப்பு அர்த்தமுள்ள உச்சாடனமாக அந்த ஹால் முழுதும் பரவி அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி காணப்பட்டது. அருட்பிரகாசர் விவேகானந்தர், சிகாகோ மாநாட்டில் ஆற்றிய உரையில் ஆரம்ப வரியல்லவா இது என்கிற புளகாங்கிதம் அனைவரிடத்தும் ஏற்பட்டது. அதுவும் பேசத்துவங்குபவர் பெயர் நிவேதிதா என்றிருந்ததும் அவர் அழைத்த அந்த அழைப்பு, பொருள் பொதிந்ததாக இருந்தது.

"'உயிர்களின் ஜனனத்திலிருந்து'.. என்கிற தலைப்பில், இந்திய தத்துவ இயலின் மணிமகுடமாம் உபநிஷத்துகளிலிருந்து கருத்துக்களைத் தொகுத்துச் சொல்லும்படி ஒருங்கிணைப்பாளர் பெரியவர் கிருஷ்ணமூர்த்தி என்னைக் கேட்டுக் கொண்டபொழுது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. உயிரியலைப் பாடமாக எடுத்து கல்லூரியில் படிக்கும் நேரத்தே எனக்கு உபநிஷத்துக்களின் மேல் ஒரு தனிப்பட்ட பிரேமை உண்டு.." நிவேதிதாவின் பேச்சு, பெண்மைக்கே உரிய குழைவுடன்ஆற்றோட்டமாக இருந்தது.

ஒரு நிமிஷம் நிறுத்தித் தொடர்ந்தார் அவர்: "இறைவன், தவத்தின் மேன்மையை அனைவருக்கும் உணர்த்த நினைத்துத் தானே தவமிருந்து இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான் என்று நேற்று கூறினார்கள். இந்தப் படைப்புக்கு, பஞ்சபூதங்கள் என்று நாம் அழைக்கின்ற வெளி, காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய இந்த ஐந்து சக்திகளும் அடிப்படையாக அமைந்தன என்பதையும் தெரிந்து கொண்டோம். உயிர்களைப் படைத்து அவற்றிற்கு
இந்த ஆரம்பப் படைப்புச் செல்வங்களை வாரி வழங்கிடச் செய்ய வேண்டுமென்பதே இறைவனின் ஆசை... மனிதர்கள் தமது குடும்ப வாழ்க்கையை நடத்த முதலில் குடியிருக்க ஒரு வீட்டைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டு அப்புறம் சொந்த பந்தத்தோடு குடிபுகுகிறோம், இல்லையா? அதே மாதிரி, தான் பிற்பாடு படைக்கப்போகும் உயிரினங்களின் நலன் கருதி, அவற்றின் மகிழ்ச்சி கருதி, முன்னாலேயே பிரபஞ்சத்தைப் படைத்து விடுகிறான், இறைவன். உயிரினங்களையும் படைத்து, முன்னால் ஆக்கப்பட்ட பிரபஞ்சப் பொருட்கள் அனைத்தும் இவருக்கே--இவருக்கே--என்று பட்டயம் எழுதிக் கொடுத்து விட்டான்! ஆகவே படைத்தவனின் அல்டிமேட் எய்ம், உயிரினங்களின் படைப்பே! இவற்றிக்காகத் தான்-- உயிர் சுமந்து உலவும் அத்தனையின் தேவைக்கும், சந்தோஷத்திற்காகவும் தான்-- முன்னால் படைத்த அத்தனையும்.. எவ்வளவு முன்னேற்பாடு பாருங்கள்! இந்தப் பேரருளை கருணை என்றல்லாமல் வேறு என்ன பெயரிட்டு அழைப்பது நீங்களே கூறுங்கள்!..


இத்தனையும் அல்லாமல், ஜடப்பொருளாக படைக்கப்பட்ட உடம்பை இயக்க உயிராகவும் இறைவனே உள்ளே புகுந்தான்.. இறைவனே நமது இயக்கமாக இருக்க வேறென்ன வேண்டும், சொல்மனமே' என்றுதான் மகிழ்ச்சி பொங்கக் கூவத் தோன்றுகிறது..


"ஸ ஏதமேவ ஸீமானம் விதார்யைதயா த்வாரா ப்ராபத்யத
ஸைஷா வித்ருதிர்நாம த்வாஸ்ததேதன்னாந்தனம்
தஸ்ய த்ரய ஆவஸ்தா: த்ரய: ஸ்வப்னா:
அயமாவஸதோ sயமாவஸதோ sயமாவஸத இதி"

--என்று ஐதரேய உபநிஷதத்தில் ஒரு ஸ்லோகம்.. ரிக் வேதத்தைச் சேர்ந்த ஆரண்யகம் இது. இதை அருளியவர் மஹீதாச ஐதரேயர் என்கிற முனிவராகையால், அவர் பெயரிலேயே இந்த உபநிஷதும் அழைக்கப்படுகிறது..
'பிரம்ம ரந்திரம்' என்பது தலையின் உச்சிப்பிரதேசத்திலுள்ள ஒரு சிறு துவாரம். இந்த இடத்தைப் பிளந்து கொண்டு இறைவன் உடலினுள் நுழைகிறான்.. ஜடமாகிய உடலில், உணர்வலைகள் ஸ்தாபிதமாகித் தூண்டலுருவதை, இறைவன் நுழைவதாகக் கொள்ள வேண்டும்.

பதினோரு வாசல் கொண்ட உடலின் ஒரு வாசல் பிரம்ம ரந்திரம். உடலினில் அமைந்திருக்கும் நூற்றியொரு நாடிகளில் ஒன்று இந்த வழியாகச் செல்கிறது. இந்த வாசல் வழியே உயிர் பிரிந்தால், மீண்டும் பிறப்பில்லை என்கிறது கட உபநிஷதம். சிறந்த யோகியருக்கு இந்த வாசல் வழிதான் உயிர் பிரியும் என்பர். வந்த வழியே போகும் வழியாக இருந்தால், பிறப்பிலா நிலை. இதையெல்லாம் பற்றி 'மரணத்திற்குப் பின்' பகுதியில் உரையாற்ற இருப்பவர்கள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.


ஆக, இறைவன் குடிகொண்டிருக்கும் கோயிலே, இந்த உடல் என்கிற உணர்வு பெற்றால், இந்த உடலின் மேல் அளபரிய அன்பு பிறக்கும். நற்குணமென்னும் குன்றின் மீதேறி இதைப் பேணிக்காக்க ஆசை பிறக்கும்.


அவன் அருளினால் தீமை ஒழித்து, நல்ல செயல்களைச் செய்து பிறவிப் பெருங்கடலை நீந்த, உய்யக் கிடைத்த ஒப்பற்ற ஓடம் இந்த உடல்.
வெறும் சட்டையல்ல; விலைமதிப்பற்ற செல்வம்.

"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடம்பினுக்குள்ளே கோயில் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று

உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே."

-- என்று திருமூலர், தனது திருமந்திரத்தில் அற்புதமாக தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

யாக்கை நிலையானது இல்லை தான்; ஒப்புக்கொள்கிறேன். ஆனால், வாராது வந்த மாமணி போல, இந்த உடல் கிடைத்தது, 'இனி பிறவா நிலை வேண்டும்' என்கிற வேண்டலுக்குக் கிடைத்த ஓர் அரிய சாதனம் இல்லையா?..

வெறும் வேண்டல், வேஸ்ட்.. மனிதப்பிறவி கிடைத்தற்கரிய பேறு. ஏதாவது நல்லதைச் செய்து புண்ணியம் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், இப்பிறவியில் தானே அது முடியும்?.. கிடைத்திருக்கிற வாழ்க்கை, புண்ணியம் சேர்த்துக் கொள்ள ஒரு சான்ஸ். கிடைத்த வாய்ப்பை நழுவ விடுவாரும் உண்டோ?.. நழுவ விடின், என்னாகும் என்று தெரிந்த பின்னும்?..

பேலன்ஸ் ஷீட் போட்டுப் பார்த்தால், பளிச்சென்று தெரியும். வாழ்க்கைப் பேரேட்டில், கிரெடிட் எவ்வளவு, அதில் டெபிட் எவ்வளவு, இன்னும் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பது புரியும்.

பரோபகாரம், உதவி, ஒத்தாசை, வறியோர்க்கு ஈதல், முதியோர்க்கு ஆதரவு என்று கிரெடிட் பண்ண எத்தனையோ காரியம் இருக்கு... வாழ்க்கை என்னும் இந்த பரமபத விளையாட்டில் அவைகளே நாம் போடும் தாயங்கள்.

ஆமாம், நன்றாகத் தெரிகிறது.. பொன்னுலகு போக வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது."

உணர்வு கொப்பளிக்க உரையாற்றிய சகோதரி நிவேதிதா, கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலும் பேசத் தயாரானார்.


(தேடல் தொடரும்)
12 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

"அவன் அருளினால் தீமை ஒழித்து, நல்ல செயல்களைச் செய்து பிறவிப் பெருங்கடலை நீந்த, உய்யக் கிடைத்த ஒப்பற்ற ஓடம் இந்த உடல்.
வெறும் சட்டையல்ல; விலைமதிப்பற்ற செல்வம்."
மேலோட்டமாகப்பார்த்தால் "இந்த உடல் வெறும் சட்டை" "யாக்கை நிலையாது" போன்ற கருத்துக்களுக்கு முரண்படுவதாகத்தோன்றினாலும் இந்த வரிகளின் அடிநாதத்தின் த்வனி உணர்ந்தவர்க்கு இதன் உள்ளர்த்தம் தரும் ஆனந்தம் அளவிடமுடியாதது. காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்கு

Expatguru said...

உடலுக்கு 11 வாசல்களா? 9 வாசல்கள் என்றல்லவா நினைத்து கொண்டிருந்தேன். மனித பிறவிக்கு பிறகு வரும் பிறவிகளிலும் மனிதனாகவே பிறப்போமா? உபநிஷத்துக்களில் இதை பற்றி ஏதாவது உள்ளதா?

//ஆகவே படைத்தவனின் அல்டிமேட் எய்ம், உயிரினங்களின் படைப்பே!//

அப்படி படைப்பதற்கு ஏதாவது காரணம் உபநிதத்துக்களில் கூறப்பட்டுள்ளதா?

ஜீவி said...

கிருத்திகா said.
//மேலோட்டமாகப்பார்த்தால் "இந்த உடல் வெறும் சட்டை" "யாக்கை நிலையாது" போன்ற கருத்துக்களுக்கு முரண்படுவதாகத்தோன்றினாலும் இந்த வரிகளின் அடிநாதத்தின் த்வனி உணர்ந்தவர்க்கு இதன் உள்ளர்த்தம் தரும் ஆனந்தம் அளவிடமுடியாதது. காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்கு//

புரிதலுக்கு மிக்க மகிழ்ச்சி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, கிருத்திகா!

ஜீவி said...

Expatguru said...
//உடலுக்கு 11 வாசல்களா? 9 வாசல்கள் என்றல்லவா நினைத்து கொண்டிருந்தேன். மனித பிறவிக்கு பிறகு வரும் பிறவிகளிலும் மனிதனாகவே பிறப்போமா?
உபநிஷத்துக்களில் இதை பற்றி ஏதாவது உள்ளதா? //

//ஆகவே படைத்தவனின் அல்டிமேட் எய்ம், உயிரினங்களின் படைப்பே!//

//அப்படி படைப்பதற்கு ஏதாவது காரணம் உபநிதத்துக்களில் கூறப்பட்டுள்ளதா?//

11 வாசல்கள்? இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசித் துவாரங்கள், வாய், தொப்புள், குறி, குதம், உச்சந்தலை பிரம்ம ரந்திரம்-- ஆக பதினொன்று என்று படித்திருக்கிறேன்.

எல்லாப் பிறவிகளிலும் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்தது அமையும் என்று கற்றவர்கள் சொல்கிறார்கள்.

இறைவனின் அல்டிமேட் எய்ம் உயிரினங்களின் படைப்பே என்று உபநிஷத்துக்களில் கூறவில்லை..
உயிரினங்களில் இறைவனை அடைய வாய்ப்பு இருப்பதால், சிறப்பு கருதி அப்படிப்பட்ட எண்ணம் உண்டு.
உபநிஷதுகளில் 'சிம்பாலிக்'காக சொல்லியிருப்பவை நிறைய.
பரிமேலழகர் உரை கொண்டு திருக்குறளைப் புரிந்து கொள்கிற மாதிரி பல புத்தகங்களில் சொல்லியிருப்பவை படித்து பலவற்றை அனுமானிக்க வேண்டியிருக்கிறது.
வெறும் படிப்பறிவு தான்;
முக்கியமாக வேண்டிய பயிற்சி மேற்கொண்டு புரிந்து கொள்ள வேண்டிய அனுபவ அறிவு இல்லாததும் பெரிய குறை.
பண்டிதர்கள் தாம் இவற்றை எல்லாம் பற்றி விளக்க வேண்டும்.
இந்தத் தொடரில் மேற் கொண்டிருப்பது, மெஞ்ஞானத்திற்கும் விஞ்ஞானத்திற்குமான ஒப்புநோக்கும் ஒரு முயற்சியே!
வருகைக்கும் தங்கள் ஆர்வத்திற்கும்,
வினாக்களுக்கும் மிக்க நன்றி.

jeevagv said...

நீங்க அருமையா எழுதியிருக்க, அதைப் படிக்க வெண்பா தானா வருதுங்க!:

யாக்கை அதனை யாசித்து பெற்றதன்
நோக்கமும் யாதென நோக்கிட - நோக்கமும்
யாக்கையும் மீண்டும் பெறாப்பேறு ஒன்றையே
பெற்றிடத்தான் என்றே அறி.

பாவியேன் பட்டதைப் பாடித்தான் திண்டாடி
கோவிலெனப் பெற்றதைக் கொண்டாடி - மேவிட
உச்சம்; இனியில்லை சொச்சம் எனவேயாம்
அச்சம் அறுத்திடப் பார்.

Kavinaya said...

//பொன்னுலகு போக வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது//

நன்றாகச் சொன்னார் நிவேதிதா. (எனக்கு ரொம்பப் பிடித்த பெயர் :) "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்பது நினைவு வந்தது. அதனை வீணாக்காமல் இருக்க, எப்போதும் நினைவில் இருத்த வேண்டும். மிக்க நன்றி ஐயா.

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
//நீங்க அருமையா எழுதியிருக்க, அதைப் படிக்க வெண்பா தானா வருதுங்க!:

யாக்கை அதனை யாசித்து பெற்றதன்
நோக்கமும் யாதென நோக்கிட - நோக்கமும்
யாக்கையும் மீண்டும் பெறாப்பேறு ஒன்றையே
பெற்றிடத்தான் என்றே அறி.

பாவியேன் பட்டதைப் பாடித்தான் திண்டாடி
கோவிலெனப் பெற்றதைக் கொண்டாடி - மேவிட
உச்சம்; இனியில்லை சொச்சம் எனவேயாம்
அச்சம் அறுத்திடப் பார்.//

இரண்டு வெண்பாக்களுமே அட்டகாசம்!

முதலாவதில், 'இதற்கு தானா ஆசைப்பட்டோம்' என்கிற நிலை இல்லை.. இப்பிறவி பெற்றதுமே, முற்பிறவி நினைவுகள் மறந்து விடும் ஆகையால், இந்த மனிதப்பிறவி கொடுத்து, முற்பிறவியில் செய்த நல்லனவற்றை நினைவுறுத்தி, இப்பிறவியிலும் பெற்ற பேற்றைக் காப்பாற்று; நழுவ விட்டு விடாதே என்று நினைவுறுத்தியிருக்கிறான், இறைவன்!

இரண்டாவதில், அந்த ஊருக்கு செல்ல இந்த ஊரில் நல்லன செய்து மீண்டு, அந்த ஊருக்கு செல்ல வேண்டுமென்கிற நிலை.
இந்த ஊருக்கு வந்தாச்சு; அந்த ஊருக்குப் போகும் வழியும் தெரிஞ்சாச்சு; இனி என்ன தயக்கம்?
அச்சம் தவிர். இனி சொச்சம் இல்லை எனும் நம்பிக்கை கொள்.
இது தானே!

இரண்டு வெண்பாக்களும் இரண்டு
இரத்தினங்கள்!

ஆக, வெண்பாக்களும் எழுதியாச்சு;
வ்ள்ளுவர் சொன்ன வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையையும் புரிந்து கொண்டாச்சு, இல்லையா?

வாழ்த்துக்கள், ஜீவா!

ஜீவி said...

கவிநயா said...
//பொன்னுலகு போக வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது//

//நன்றாகச் சொன்னார் நிவேதிதா. (எனக்கு ரொம்பப் பிடித்த பெயர் :) "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்பது நினைவு வந்தது. அதனை வீணாக்காமல் இருக்க, எப்போதும் நினைவில் இருத்த வேண்டும்.//

நிவேதிதா! எவ்வளவு அழகான பெயர்!
இந்தப் பெயரில் ஒரு சரித்திரம் அல்லவோ, அடங்கிக் கிடக்கிறது!
சரித்திரம் தெரிந்த உங்களுக்குப் பிடிக்காமலா, போகும்?..

தொடர்ந்த வருகைக்கும், சொன்ன கருத்துக்கும், புரிந்தலுக்கும் மிக்க நன்றி, கவிநயா!

திவாண்ணா said...

not to publish
//என்று ஐயரேய உபநிஷதத்தில்//
ஐத்ரேய என்று திருத்திவிடுங்களேன். இத்தகைய பதிவுகள் வரும்காலத்திலும் மீண்டும் படிக்கப்பட வேண்டும். அதனால் திருத்துவது நல்லது.

ஜீவி said...

திவா said...
not to publish
//என்று ஐயரேய உபநிஷதத்தில்//
//ஐத்ரேய என்று திருத்திவிடுங்களேன். இத்தகைய பதிவுகள் வரும்காலத்திலும் மீண்டும் படிக்கப்பட வேண்டும். அதனால் திருத்துவது நல்லது.//


வாருங்கள், திவா!

தகுந்த திருத்தத்தைச் செய்து விட்டேன். திருத்தத்தைச் சுட்டிக் காட்டியமைக்கும், தங்களது ஆழ்ந்த அக்கரைக்கும் மிக்க நன்றி.
பிரசுரிப்பதில் தவறொன்றும் இல்லையே!

திவாண்ணா said...

//பிரசுரிப்பதில் தவறொன்றும் இல்லையே!//
அடிக்கடி சுட்டிக்காட்ட நேர்ந்தால் யோசிக்க வேண்டி இருக்கும். அதனால்தான்.

ஜீவி said...

திவா said...
//பிரசுரிப்பதில் தவறொன்றும் இல்லையே!//
அடிக்கடி சுட்டிக்காட்ட நேர்ந்தால் யோசிக்க வேண்டி இருக்கும். அதனால்தான்.

'நான்' என்று நாமே சூட்டிக்கொள்ளும் போர்வையை விலக்கி விட்டால், எல்லாமே கூட்டு முயற்சிகளாக தென்படும் அதிசயம்
புலப்படும். அப்பொழுது இந்த யோசிப்பெல்லாம் காணாமல் போய்விடும். செய்யும் காரியத்தின்
சிறப்பு தான் மேலோங்கியிருக்கும்.
இல்லையா?

Related Posts with Thumbnails