மின் நூல்

Saturday, December 20, 2008

ஆத்மாவைத் தேடி....27

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


27. புறாக்களின் நினைவு.

தான் தான் கீழ்க்கிளைப் பறவையோ என்று கிருஷ்ணமூர்த்திக்கு பொறி தட்டிய மாதிரி ஒரு நினைப்பு வந்து விட்டுப் போனதும், அந்த மசமசத்த இருட்டில் இன்னும் தீட்சண்யமாக மரக்கிளை பக்கம் தன் பார்வையைச் செலுத்திப் பார்த்தார்.


லேசாகக் காற்று வீசி தடவி விட்டுப்போன சுகத்தில் இலைகள் ஒயிலாக சிலிர்த்து நிமிர்ந்து மீண்டும் ஒரு தடவலுக்குக் காத்துப் படுத்தன. எந்தப் பறவையையும் இப்போது காணோம்! மரமே வெறிச்சோடிக் கிடந்தது.

'கொஞ்ச நேரதிற்கு முன்னாடி தானே பார்த்தோம்? அதற்குள் எங்கே போய்விட்டன?.. ம்... ஒருகால், பிரமையோ?.. கனவில் கண்டதை நினைவில் பொருத்திப் பார்க்க மனம் ஆசைப்பட்டதில் நேர்ந்த சலனமோ?..
'இல்லை, கீழ்க்கிளை பறவை மாதிரி தன்னைப் பாவித்துக் கொண்டு, மேல்கிளைப் பறவையை நான் பார்க்க நினைத்தது தவறோ?.. அதனால் தான் தரிசனம் கொடுக்காமல் மாயமாய் மறைந்து போயிற்றோ?.. 'தவறாய் இருந்தால், மன்னிக்க வேண்டும், இறைவா' என்று கிருஷ்ணமூர்த்தி மானசீகமாய் மனத்தில் துதித்துக் கொண்டார். அப்படியே யோசனையில் எவ்வளவு நேரம் நின்றார் என்று அவருக்கேத் தெரியாது..


'பொலபொல'வென்று விடியத் தொடங்கி விட்டது. ' இப்பொழுது ஆரம்பித்தால் தான் செளகரியமாக இருக்கும். சூரியநமஸ்காரத்திற்கு தயார் ஆவதற்கு சரியாய இருக்கும். இங்கு வந்ததிலிருந்து மூச்சுப் பயிற்சி வேறு காலை லிஸ்டில் சேர்ந்திருக்கிறது' என்று நினைத்துக் கொண்டே கொடியில் தொங்கிய டவலை எடுத்துக் கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.

அன்றைக்கு ஐந்தே முக்காலுக்கு சூரிய உதயம். ஐந்தரைக்கே எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு தயாராகி விட்டார் கிருஷ்ணமூர்த்தி.

சூரிய நமஸ்காரமும், அதைத் தொடர்ந்து மூச்சுப் பயிற்சியும் முடித்து எழுந்த பொழுது ஒருவித திருப்தி மனசில் வந்து குவிந்தது அவருக்கு நன்றாகவேத் தெரிந்தது. ஆனால், வழக்கம் போல இல்லாமல் ஏதோ ஒன்றைச் சுற்றிச் சுற்றியே நினைவு சுழல்வதாக ஒரு பிரமை இருந்ததைத் தவிர்க்க முடிய வில்லை அவரால்.


'காரணம் கனவா?.. அது கனவுதான்னு அடிச்சுச் சொல்லக்கூட முடியலயே.. அண்ணா-மன்னி நினைவில் வந்தது, இராணி வாய்க்கால் தெரு, மாலுவுடன் பேசினது இதெல்லாம் வேணா கனவா இருக்கலாம்.. ஆனா, கண்ணுக்குத் தெரிய அந்த ரெண்டு புறாக்களைப் பார்த்தது?.. 'படபட'வென்று சிறகடித்து கீழ்க்கிளை புறா கண்ணுக்கு முன்னாடி மேல்கிளை தாண்டியதே.. அதுகூடக் கனவா?.. இல்லை. நிச்சயம் இல்லை. புறாக்கள் கனவில் வந்தது போலவே, நினைவிலும் காட்சியாய் வந்ததும் உண்மைதான்'


'இந்தப் புறாக்கள் வந்தது ஏதாவது சகுனக்குறியாக இருக்குமோ' என்ற யோசனை அவருக்கு திடீரென்று வந்தது. ஒவ்வொருவரும் அவரவருக்கு தெரிந்த வழியிலேயே யோசிப்பார்கள். கிருஷ்ணமூர்த்திக்கென்றால், 'புராணக்கதைகளில் புறா வந்த நிகழ்ச்சிகளையெல்லாம் யோசித்துப் பார்க்கலாமா?' என்று தோன்றியது. அப்படிப்பட்ட நினைப்பு வந்தவுடனேயே, சடாரென்று சிபி சக்கரவர்த்தி கதை அவர் நினைவுக்கு வந்தது. 'கனவில் மாலு கேட்டாளே, "கிருஷ்ணா, சிபி சக்கரவர்த்தி கதை சொல்லட்டுமா"ன்னு. கழுகிடமிருந்து புறாவை மீட்க, அந்த புறாவின் எடைக்கு எடை தன் தொடைச்சதையையே அரிந்து தரத் தயாராகியும், புறாவின் எடை கூட இருக்கக் கண்டு தானே தராசுத் தட்டில் ஏறி நின்ற தியாகியின் கதையல்லவோ, அது?.. அந்தக் கதையிலும் புறா வருகிறதே?.. அந்த நினைவுதான் பூங்குழலி சொன்ன மரக்கிளை புறாவுக்கு மாறிப்போனதோ?.... ஓஹ்! நிஜத்திலும், கனவிலும் எத்தனைப் புறாக்கள்?.. ' புறாக்களுக்கும் தனக்கும் ஏதோ ஒரு தொடர்பிருப்பதாகவே அவருக்குப் பட்டது.

கிரெளஞ்சப் பட்சிகளைப் பார்த்த பொழுது நேற்று கூட மனோகர்ஜி கைகொட்டி எவ்வளவு சந்தோஷப்பட்டார்?... "கிருஷ்ணாஜி! இதுக்கு முன்னடி கூட ரெண்டு மூணு தடவை இந்த பக்ஷிகளோட தரிசனம் கிடைச்சிருக்கு.. ஏதாவது நல்லபடியா, நல்ல காரியமா நான் செஞ்சு முடிச்சாத்தான் அவங்க தரிசனம் கிடைக்கும்.. உண்மைலே என்னோட பாட்டனார் மனோகர்ஜி தான் கடவுள் தூதரா பாட்டியாரோட பட்சிகள் உருவிலே வந்து என்னை இன்னும் நிறைய நல்லது செய்ய ஆசிர்வதிப்பதாகவே நான் நினைக்கிறேன்.. நீங்க என்ன நினைக்கிறீங்க,ஜீ!" என்று ஒருதடவை அவரிடம் கேட்டது, இப்பொழுது கிருஷ்ணமூர்த்தியின் நினைவுக்கு வந்தது.


"அந்த மாதிரி இந்தப் புறாக்கள் கனவிலும் நனவிலும் வந்து-- ஓ, புறாக்களின் கால்களில் சீட்டு கட்டி சேதி அனுப்புவாங்களாமே, அந்தக்காலத்தில்?.. இவங்க, இந்தப் புறாக்கள் எனக்குச் சொல்லும் சேதி என்ன கடவுளே!" என்று சுவரில் மாட்டியிருந்த பெரிய மஹாதேவரின் படம் நெருங்கி உணர்ச்சி வசப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி. கணகள் மூடி தியானித்தார்.

"கிருஷ்ணமூர்த்தி!--தனியாச் சொல்வானேன்?.. அதான் ஒவ்வொண்ணா நடக்க நடக்கத் தெரிஞ்சிண்டு வர்றேயே?" என்று நினைப்பிலேயே குரல் கிடைத்த மாதிரி இருந்தது அவருக்கு.

'அதுவும் சரி. உயிர் கொடுத்து, அது தங்க உடலும் கொடுத்து, நல்லது செய்ய சந்தர்ப்பங்களும் கொடுத்து, புண்ணியம் சேர்த்திண்டு எங்கிட்டே வா!' என்கிறானே, அதுபோதாதா?' என்று அவர் நியாயமாக நினைத்துக் கொண்டிருக்கையில், "சார்! வரலாமா?" என்று வெளியே குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்த கிருஷ்ணமூர்த்தியின் முகம் மலர்ந்தது.

"ஓ.. வாப்பா ராம்பிரபு!"

"மார்னிங்..சார்.. உங்களுக்கு போன் கால் வந்திருக்கு.. அதைத்தான் சொல்ல வந்தேன்" என்றான் ராம்பிரபு.

"போனா?.. எனக்கா?.. யாருப்பா?"

"அரியலூர்லேந்து கால் சார். லைன்லே உங்க வீட்டு அம்மா இருக்காங்க.. ' அழைத்து வரேன்'ன்னு சொல்லிட்டு, ரிஸிவரை எடுத்து வைச்சிருக்கேன்.. பதட்டப்படாம வாங்க, சார்!" என்றான் அவன்.


என்னவோ ஏதொவென்று தொலைபேசி இருந்த ஹால் பக்கம் ராம்பிரபுவுடன் விரைந்தார் அவர்.

(தேடல் தொடரும்)

5 comments:

jeevagv said...

அருமையான சுவாரஸ்யத்துடன் போய்க்கொண்டு இருக்கிறது!
எல்லாருக்கும் பெரியவரானவருக்கும், தேடல் தேடல்தான் என்பதனையும் புரிய வைக்கிறது!

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
//அருமையான சுவாரஸ்யத்துடன் போய்க்கொண்டு இருக்கிறது!
எல்லாருக்கும் பெரியவரானவருக்கும், தேடல் தேடல்தான் என்பதனையும் புரிய வைக்கிறது!//

சுவாரஸ்யமாக இருப்பது குறித்து மகிழ்ச்சி. விண்டவர் கண்டிலர் என்கிற நிலை தான் எந்நேரத்தும்.
இருந்தும் தேடல் ஏனென்றால், ஏதாவது ஒரு நிலையில் தேக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்குத் தான்.

கருத்துப் பகிர்தலுக்கு நன்றி, ஜீவா!

கிருத்திகா ஸ்ரீதர் said...

ம்ம்ம் மனது எப்போதுமே இப்படித்தான் எல்லா நிகழ்வுகளுக்கும் காரண காரியங்களை தேடித்தேடியே நிம்மதிக்க ஆசைப்பட்டு நிம்மதியை தொலைத்துக்கொண்டிக்கிறது. ஆனாலும் சிலசமயம் முன்குறிப்பாக பின்னால் நடக்கபோவதை குறிப்புணர்த்தும் நிகழ்வாகவும் கனவுகள் வந்து போவதுண்டு...

பாச மலர் / Paasa Malar said...

ஆன்மீகத்திற்கும் எனக்கும் தூரம் கொஞ்சம் அதிகந்தான்..

ஆனாலும் இத்தொடரின் கருத்துகள் மனோதத்துவ ரீதியாகக் கவர்கின்றன..

வாழ்த்துகள் மீண்டும்..

கவிநயா said...

ரொம்ப அழகா எழுதறீங்க ஐயா. நம்முடைய நினைவுகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தும், அவ்வப்போது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குக் தாவியும், இன்னும் பலவிதமாகவும் கோர்த்துக் கொள்வதை இயல்பாக எழுத்தில் கொண்டு வந்து விடுகிறீர்கள்.

Related Posts with Thumbnails