மின் நூல்

Monday, December 22, 2008

ஆத்மாவைத் தேடி....28

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


28. காதலியை கானகத்தே கைவிட்டு...


கிருஷ்ணமூர்த்தி, நிமிர்த்தி மல்லாக்க வைத்திருந்த தொலைபேசி ரிஸீவரைத் தொட்டுத் தூக்கும் பொழுது லேசாக வழுக்கியது. நழுவி கீழே விழுந்து விடாமல் அதை இறுகப் பற்றி, "ஹலோ--" என்றார்.


மறுபக்கம், "ஏன்னா! நான் தான்!" என்றாள், ராதை.

"அப்படியா?.. எல்லாரும் அங்கே செளக்கியம் தானே?" என்று படபடத்தார் கிருஷ்ணமூர்த்தி.

"எல்லாரும் செளக்கியம் தான். நீங்க நன்னா இருக்கேளா? அந்தப் பக்கமெல்லாம் ரொம்ப குளிர்னு டி.வி.லே சொன்னாளே?.. உடம்பைப் பாத்துக்கோங்கோ."

"பேஷா. எனக்கொண்ணும் குறைச்சல் இல்லை. இங்கே கிடைச்சிருக்கற மனுஷாள்லாம் ரொம்பத் தங்கமானவா. எல்லாரும் வித்வான்கள். நெறைய படிச்சவா. பெரிய பெரிய விஷயமெலாம், எனக்கு இத்தனை நாளும் தெரியாததெல்லாம் அலசறா. கேட்கக் கேட்க ரொம்பவும் பிரமிப்பா இருக்கு."


"அப்படியான்னா?.. நீங்க கொடுத்து வைச்சவா. சத்விஷயம் பேசறவாளோட சிநேகம் கிடைச்சிருக்கு. உடம்பைப் பார்த்துங்கோங்கோ. எல்லாத்தையும் பாத்து,கேட்டு, ரசிச்சிட்டு வாங்கோ.."

இப்பொழுது தான் கிருஷ்ணமூர்த்திக்கு நிதானம் திரும்பித்து.."ஆமாம், எதுக்குக் கூப்பிட்டே?"

"பாத்தேளா?.. மெனக்கெட்டு போன் பண்ணிட்டு எதுக்குன்னு சொல்ல மறந்திட்டேன், பாருங்கோ!.. உங்க குரல் கேட்டதும் மனசு தொஞ்சு போயிடுத்து.. எப்படியிருக்கேளோ, என்னவோ ஏதோன்னு படபடப்பிலே எல்லாத்தையும் மறந்திட்டேன்."

"எதுக்குக் கூப்பிட்டேனு ஞாபகம் வந்திடுத்தில்லையோ?.. சொல்லு, ராதை!" என்று பரிவுடன் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி.

"எனக்கு இப்போ இருக்கற சந்தோஷத்லே கையும் ஓடலே; காலும் ஓடலேன்னா. நீங்க ரெண்டாந்தடவை தாத்தாவாகப் போறேள்.. சுபா உண்டாயிருக்கான்னா."

"ஓ..தேங்க் காட். ரொம்ப ரொம்ப சந்தோஷம், ராதை!"

"நேத்திக்கு வயத்தைப் புறட்டறதுன்னு கொல்லைக்கும், ரேழிக்கும் அலைஞ்சிண்டிருந்தாளா, என்னவோ ஏதோன்னு டாக்டர்கிட்டே கூட்டிண்டு போனோம். லேடிடாக்டர் 'கன்பர்ம்' பண்ணிட்டா.. ரெண்டு மாசமும் ரெண்டு வாரமும் ஆறதாம்."

"சுபாவை ஜாக்கிரதையாப் பாத்துக்கோ, ராதை! பாவம், அவ குழந்தை. இது வேணும், அது வேணும்னு அவளுக்குக் கேக்கத் தெரியாது. நீதான் வாய்க்கு ருசியா பண்ணிக் கொடுக்கணும். அர்ஜூன் என்ன, ஆபீஸ் போயிருக்கானா?.. அவன் கிட்டே நான் சொன்னேன்னு சொல்லு. ' அனிமிக்' ஆயிடாமே, அவளுக்கு வேணுங்கற டானிக்கெல்லாம் வாங்கிக் கொடுக்கச் சொல்லு. அரை லிட்டர் பால் அதிகம் வாங்கிக்கோ.. குங்குமப்பூ போட்டு தினம் காய்ச்சிக்கொடு. படுக்கப் போகறச்சே சாப்பிடட்டும். என்ன, கேக்கறதா?"

"செய்யறேன்னா.. அர்ஜூன் அப்பறமா உங்ககிட்டே பேசுவான்.. நேத்திக்கு ராத்திரி யு.எஸ்.லேந்து கிரிஜா பேசினா. அவளுக்கும் சந்தோஷ சமாச்சாரம் சொல்லிட்டேன்.. அவாளுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். குழந்தை ரிஷி அங்கே நன்னா விளையாடிண்டு இருக்கானாம். நாளைக்கு பக்கத்தாத்து கம்ப்யூட்டர்லே வரேன்னு சொல்லியிருக்கா.. நாளைக்கு பேசிட்டு, குழந்தையை காமராலே பாத்துட்டு வர்ரேன். நீங்க எந்தக் கவலையையும் மனசிலே வச்சிக்க வேணாம். எல்லாம் நான் பாத்துக்கறேன்... அப்புறம், உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ்..."

"அப்படியா.. நீ கூட சஸ்பென்ஸெல்லாம் போட்டுப் பேச ஆரம்பிச்சிட்டேயே.. என்ன சொல்லு.." என்று சிரித்தார் கிருஷ்ணமூர்த்தி.

"நம்ம மாலு அக்கா பெங்களூர்லேந்து வந்திருக்கான்னா.."

"அடேடே.. மாலுவா.. வெரிகுட்! ரொம்ப ரொம்ப சந்தோஷம்.. ராதை.. போனை அவகிட்டே குடு."

".............................."

"ஹலோ, மாலுவா?.. மாலுவா பேசறது?"

"கிருஷ்ணா.. நாந்தாண்டா.." என்று குரலில் உரிமை குழைந்தது.

பெரியவர் கிருஷ்ணமூர்த்திக்கு கண் கலங்கி விட்டது. "மாலு.. நன்னா இருக்கையா?.. மாப்பிள்ளை, குழந்தைங்க எல்லாம் நன்னா இருக்காளா?"

"எல்லாம் பேஷா இருக்கா.. நீ என்ன சொல்லிக்காம, கொள்ளாம இப்படி செஞ்சிட்டே?.. தேசாந்திரமா கிளம்பிட்டே?.. நாங்கள்லாம் குத்துக்கல்லாட்டமா இருக்கறச்சே,கட்டின வேஷ்டியோட கிளம்பறத்துக்கு உனக்கு மனசு எப்படிடா வந்தது?"

"இல்லை, மாலு! இதோ பார்.. நானும் ஒவ்வொரு கடமையா முடிச்சிட்டேன்.. அன்பைப் பரிமாறிக்கறத்துக்கு அவாவாளுக்கு ஒரு குடும்பம் அமைஞ்சாச்சு.. சுபாக்கும்இப்போ கடவுள் அருள்பாலிச்சிட்டார். மெதுமெதுவா ஒரு வட்டம் பூர்த்தியாறப் போறது.. அதையும் கண்ணாலே பார்த்துட்டேனா.."


"எப்படிடா உனக்கு இப்படி விட்டேத்தியா பேச மனசு வந்தது?.. நீ அப்படிப் பேசறவன் கூட இல்லையேடா.. அதானே எனக்கு அதிசயமா இருக்கு.. உனக்கு என்னகுறை வைச்சோம், சொல்லு. ராதை நம்பாத்து குழந்தைடா. அந்தக் குழந்தை கழுத்திலே குடும்ப பாரத்தைக் கட்டிட்டு, நீ பாட்டுக்க கிளம்புவேனா.... 'காதலியைக் கானகத்தே கைவிட்டு'... நீ என்ன நள மகராஜாவா?.. ஆயிரம் புராணக்கதை சொல்றேன்னு பெருமைப்பட்டேனே?.. அத்தனையும் வீணா?..." என்று ஆற்றாமையில் அழுது தீர்த்தாள் மாலு.


"மாலு.. அழாதே.. கண்ணைத் தொடைச்சுக்கோ.. பாசம் உன் கண்ணைக் கட்டறது.. நான் சொல்றதைப் புரிஞ்சிக்கோ."


"சொல்லு.. புரிஞ்சிக்கறேன்.. நான் பொண்ணாப் பொறந்த பாவத்தைப் புரிஞ்சிக்கறேன். சொல்லு."


"இதோ பார்--- நான் எங்கேயும் கண்காணாத எடத்துக்குப் போயிடலே. பரமேஸ்வரர்--பார்வதியைப் பார்கலாம்னு இமயமலைக்குக் கிளம்பினேன்."

"சிரிக்கத்தான் வேணும். பரமேஸ்வரரைப் பாக்கறது அவ்வளவு ஈஸியா?.. நானும் இமயமலைக்குக் கிளம்பினேனா, அவரைப் பாத்துடலாமா?"

"நல்ல ஞானமான கேள்வி, மாலு, நீ கேட்டது.. யூ ஆர் கரெக்ட்!.. சரியாச் சொன்னே.."

பின்னே, திரும்பிட வேண்டியது தானே?.. அங்கே எங்கே உக்காந்திருக்கே?.." மாலுவின் குரலில் சீற்றம் இருந்தது.

(தேடல் தொடரும்)14 comments:

பாச மலர் / Paasa Malar said...

நிகழ்வுகளை நேரில் அப்படியே கொண்டுவரும் இயல்பான நடை..மாலுவின் சீற்றம் நியாயமாகத்தான் படுகின்றது..

Kavinaya said...

//காதலியை கானகத்தே கைவிட்டு...//

ஹ்ம்.. சொல்லுங்கள் ஐயா. நானும் புரிந்து கொள்ளும் ஆவலுடன்...

jeevagv said...

நெகிழ வைக்கும் உரையாடல்களால் பின்னப்பட்டு, நெஞ்சைத் தொடுகிறது.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாழ்க்கை பூரணமாய் புரியவைக்க தனிமையை விட அன்பான உறவுகளே பெரிதும் உதவுவார்கள் என்பதை உணர்த்தும் அற்புதமான பகுதி இது. வாழ்த்துக்கள் ஜீவி...

Expatguru said...

ஆத்ம சாந்திக்காக மனிதன் கடவுளை தேடி செல்வது என்பது ஒன்று. அதே சமயம் இந்த உலகத்து பந்தங்களை அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாது என்ற நிலையை அழகாக கூறியுள்ளீர்கள்.

இயல்பான நடையில் கதையை அருமையாக எடுத்து கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

கபீரன்பன் said...

கிருஷ்ணமூர்த்தியோடவே இருக்கேன் :)

Shakthiprabha (Prabha Sridhar) said...

itho anaithu athyaayamum padithu vittu, naanum ungaL kathaiyai aduthu ethir nokkum vaasagiyaay nuzhanthu vitten.

niveditha muthal krishnamoorthi, sambhasivam enna prabajam anaithumE nam kudumbam endra ennam thondrumpadi seigirathu ungaL nadai.

nokkum idam engum neekamara niranthirukkum paripoorananandham.

Krishnamoorthi kaanagathE ponathu SARI THAAN enbathu en ennam.

anaal raadhaiyaiyum azhaithu sendrirukkalaam :(

vaazhkaith thuNai enbathu illaram thuravaram, aanma vichaaram ellaa vatrilum pin thodarvathu thaanE :)

arumai jeevi. :clap:


kaathirrukkirom. adutha athyaayathirkku

ஜீவி said...

பாச மலர் said...
//நிகழ்வுகளை நேரில் அப்படியே கொண்டுவரும் இயல்பான நடை..மாலுவின் சீற்றம் நியாயமாகத்தான் படுகின்றது..//

அப்படியா, பாசமலர்!

அந்த சீற்றம் மாலுவின் பார்வையின் விளைவு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயம்..

கதையினூடான உங்கள் ஒன்றுதலுக்கு மிக்க நன்றி, பாசமலர்!

ஜீவி said...

கவிநயா said...
//காதலியை கானகத்தே கைவிட்டு...//

//ஹ்ம்.. சொல்லுங்கள் ஐயா. நானும் புரிந்து கொள்ளும் ஆவலுடன்...//

தொடர்ந்த வருகைக்கு நன்றி, கவிநயா!

ஒருவாரமாக கணினி பக்கம் வரமுடியாமல் போய்விட்டது.
அதனால் தான் தாமதமான தொடர்ச்சி.

அடுத்த பகுதியும் பிரசுரமாகிவிட்டது.
வாருகை தாருங்கள்.

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
//நெகிழ வைக்கும் உரையாடல்களால் பின்னப்பட்டு, நெஞ்சைத் தொடுகிறது.//

வாருங்கள், ஜீவா!

அன்பு எப்பொழுதுமே இழத்தலில் பெருமை கொள்ளும் தன்மை கொண்டது. நெருக்கமானவர்களிடம் கொண்டுள்ள அக்கரையில் சில சமயங்களில் ஆக்கிரமிப்பு போலவும் தோற்றமளிக்கும். அப்படிப்பட்ட ஒரு தருணம் இது!

ஒன்றிய உங்கள் உணர்வுகளுக்கு மிக்க நன்றி.

ஜீவி said...

கிருத்திகா said...
//வாழ்க்கை பூரணமாய் புரியவைக்க தனிமையை விட அன்பான உறவுகளே பெரிதும் உதவுவார்கள் என்பதை உணர்த்தும் அற்புதமான பகுதி இது. வாழ்த்துக்கள் ஜீவி...//

ஓ.. அன்பான உறவுகளிடம், முட்டி மோதிக்கொள்ள, மனசிலுள்ளதைக் கொட்டித் தீர்க்க, அழுது புலம்ப எல்லாமும் முடியும். பல உணர்வுகள் அருகிப் போகிற இன்றைய சூழ்நிலையில் அவற்றை மீட்டெடுக்க வேண்டிய கடப்பாடிலும் இருக்கின்றோம். குழந்தைகளுக்கு உறவுகளைப் புரியவைத்து அவர்களை வளர்த்து ஆளாக்குவதே இப்போதைக்கு நம்மால் செய்ய முடிந்தது போலும்!

உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி,கிருத்திகா!

ஜீவி said...

Expatguru said...
//ஆத்ம சாந்திக்காக மனிதன் கடவுளை தேடி செல்வது என்பது ஒன்று. அதே சமயம் இந்த உலகத்து பந்தங்களை அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாது என்ற நிலையை அழகாக கூறியுள்ளீர்கள்.

இயல்பான நடையில் கதையை அருமையாக எடுத்து கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.//

ஏற்பட்ட பந்தங்கள், இடர்பாடுகள், சிக்கல்கள், சிக்கல்களில் ஏற்படும் தீர்வுகள், ரசனை நாட்டங்கள், அதற்கேற்பவான அனுபவங்கள்...
என்று எல்லாமும் கலந்த இந்த
வாழ்க்கை சமுத்திரத்தில் தூக்கிப் போடப்பட்டு மிதக்கிறோம்; திகைக்கிறோம்.. சேதாரம் இல்லாமல் மீண்டு வருவது நம்மிடம் தானே இருக்கிறது.. அந்த மீளுதலுக்குத் தான் அத்தனை இதிகாசங்கள், இலக்கியங்கள், இதோபதேசங்கள் எல்லாம்!

பிறவிப் பெருங்கடல் நிந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்"

என்பது தெய்வப்புலவர் வாக்கன்றோ?..

நீந்துவோம்; நீந்திக் கடப்போம்..

தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி, குரு!

ஜீவி said...

Shakthiprabha said...
//itho anaithu athyaayamum padithu vittu, naanum ungaL kathaiyai aduthu ethir nokkum vaasagiyaay nuzhanthu vitten.

niveditha muthal krishnamoorthi, sambhasivam enna prabajam anaithumE nam kudumbam endra ennam thondrumpadi seigirathu ungaL nadai.

nokkum idam engum neekamara niranthirukkum paripoorananandham.

Krishnamoorthi kaanagathE ponathu SARI THAAN enbathu en ennam.

anaal raadhaiyaiyum azhaithu sendrirukkalaam :(

vaazhkaith thuNai enbathu illaram thuravaram, aanma vichaaram ellaa vatrilum pin thodarvathu thaanE :)

arumai jeevi. :clap:


kaathirrukkirom. adutha athyaayathirkku //

எவ்வளவு அழகாக தீர்க்கமாக ரசித்திருக்கிறீர்கள்!

தொடரும் கதைக்கு பின்னூட்டமாக ஒரு முன்னோட்டமோ என்று திகைத்தேன்..

தொடர்ந்து படித்து, விமர்சித்து,
கைதட்டிப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி, சக்திபிரபா!

தொடர்ந்து வாருங்கள்..

ஜீவி said...

கபீரன்பன் said...

//கிருஷ்ணமூர்த்தியோடவே இருக்கேன் :)//

ஒரே வரியில் ஓராயிரம் உணர்வுகளைச் சொல்லமுடியுமா?..

முடியும் என்று காட்டி விட்டீர்கள்..

நெஞ்சம் ஒன்றிய தங்கள் உணர்வுகளுக்கு நன்றி, கபீரன்ப!

Related Posts with Thumbnails