மின் நூல்

Tuesday, December 8, 2009

ஆத்மாவைத் தேடி....19 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

19. பச்சையும் பழுப்பும்

ழுந்திருந்து நகர்ந்த கிருஷ்ணமூர்த்தி வாசல் கதவுக்கு போவதற்குள்ளேயே 'டொக், டொக்' கென்று கதவு தட்டும் சத்தம் கேட்டது.

கதவு திறந்த கிருஷ்ணமூர்த்தி, வெளியே ராம்பிரபு நிற்பதைப் பார்த்ததும், முகம் மலர,"வா, ராம்பிரபு! உள்ளே வாயேன்" என்று நகர்ந்து ராம்பிரபு உள்ளே வருவதற்கு வழிவிடுகிற மாதிரி நின்றார்.

"பக்கத்து அறைக்கதவு பூட்டியிருந்ததும், இங்கே இருப்பாரோன்னு கதவு தட்டினேன் ... சிவராமன் சார் இருக்காரா, சார்?"

"இருக்காரே, என்ன விஷயம்?"

"அவருக்கு போன் கால் வந்திருக்கு சார்.. தமயந்தின்னு சொன்னாங்க.."

"ஓ--" என்று மாலு அதற்குள் கதவு பக்கம் வந்து விட்டாள். "வாங்க, ராம்பிரபு! தமயந்தி என் பொண்ணு தான்."

"அப்படியாம்மா.. வெளி ஹால் போனுக்கு கால் வந்திருக்கு; லைன்லே தான் இருக்காங்க.." என்று ராம்பிரபு சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே சிவராமனும் வெளிவந்து மாலுவைத் தொடர்ந்தார்.

படியிறங்கி ஹாலுக்கு வந்த பொழுது தொலைபேசி ரிஸீவர் மல்லாக்க வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

ரிஸீவரை எடுத்து "ஹலோ--" என்றாள் மாலு. "நான் மாலு.."

"அம்மா.. தமயந்தி பேசறேன்."

"ஹாய்.. எப்படியிருக்கே, தமா?"

"நான் நன்னா இருக்கேன், அம்மா.. அப்பா எப்படியிருக்கார்?"

"ந்ன்னா இருக்கார்... என்ன விஷயம்?, இந்த ராத்திரிலே போன் பண்ணினே?"

"ராத்திரியா!.. ஓ, சாரி.. எங்களுக்கு காலம்பற இல்லையா?.. ரொம்ப நேரம் ஆயிடுத்தோ?.. இன்னும் படுத்திருக்க மாட்டேள்னு நெனைச்சேன்."

"இன்னும் படுக்கலே.. பேசிண்டு இருந்தோம்.."

"ஓ.. கிருஷ்ணா மாமா எப்படியிருக்கார்?"

"ரொம்ப சந்தோஷமா இருக்கார். அவர் மட்டுமில்லே.. வி ஆல் ஆர் வெரிமச் ஹேப்பி.. இங்கே வந்ததே எங்க லைப்லே ஒரு,.. தமிழ்லே ஒரு வார்த்தை சொல்லுவோமே, எஸ்.. ஒரு திருப்புமுனை மாதிரி இருக்கு."

"யூ மீன் turning point?.. ஓ.. லவ்லி.. இத்தனை வயசுக்கு அப்புறமும் ஒரு திருப்புமுனையா?" என்று சொல்லிவிட்டு, 'ஹஹஹஹ்ஹா.." என்று தமயந்தி சிரித்தாள்.

"ஆமாம், தமா! வாழ்க்கைங்கறதே உச்சத்துக்கும், கீழேயும் இறங்கி ஏறிண்டிருக்கற மலைப் பாதைன்னு ஆயிட்ட் பிறகு, திருப்புமுனைக்கு கேக்கவா வேணும்?'

" வேதாந்தமா, அம்மா?"

"வேதாந்தம், சித்தாந்தம்.. என்னவேணா வசதிக்கேத்த மாதிரி ஏதோ பேரிட்டிக்கலாம், தமா! மனசை மலர்த்தி வைச்சிண்டா எல்லாமே ஆனந்தமா இருக்கறது தான் அதிசயம்.."

"ஹை.. எங்க்ம்மான்னா எங்கம்மா தான்.. "

"எதுக்கு?"

"இப்படியெல்லாம் பேசறதுக்கு; கேக்கறவங்களையும் ஆகர்ஷிக்கறத்துக்கு."

"தாங்க்யூ.. ஏதாவது அவசர விஷயமா, தமா?"

"பாத்தியா.. உன்னோட பேசற ஜோர்ல, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பதறி கவலைப் பட்டதே மறந்து போச்சுமா.."

"கவலையா?.. என்னடி சொல்றே?"

" ஒண்ணுமில்லேம்மா.. ஜஸ்ட் பேசணும்னு தோணித்து.. போன் போட்டேன்.. கொஞ்சம் அப்பாகிட்டே தாயேன்.."

"இந்தாங்க.. உங்க பொண்ணு பேசறா.." என்று ரிஸிவரை சிவராமனிடம் தந்தாள் மாலு.

"அப்பா.. எப்படிப்பா இருக்கீங்க?.. தமா பேசறேன்."

"நன்னா இருக்கேம்மா.. இங்கே வந்தது மனசுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்திருக்கு.. வேறென்ன வேணும்?.. நீ எப்படியிருக்கே? மாப்பிள்ளை, குழந்தைகள் எல்லோரும் செளக்கியம் தானேம்மா?"

"எல்லாரும் செள்க்கியம்பா.. இப்போ எல்லாரும் வெயின்ஸ்வில்ங்கற இடத்துக்கு வந்திருக்கோம்பா.. இங்கே இப்போ ஃபால்ஸ் ஸீஸன் இல்லையா?.. செடி, கொடி, மரம் அத்தனையோட இலைகளும் பழுப்பாய்ப் போய் உதிர்ற இலையுதிர் காலம். அமெரிக்காலே இதை அனுபவிக்க வெளியே கிளம்பியாச்சு.. கூட்டம் கூட்டமா எத்தனை பேர், வரிசையா ரோடு கொள்ளாம எத்தனை கார் தெரியுமா?"

"சிலசமயங்கள்லே உங்க ரசனையே எனக்கு புரியலேம்மா.. பூத்துக் குலுங்க்றதை ரசிக்கறதை புரிஞ்சிக்க முடியறது.. இலைகள் உதிர்ந்து மொட்டையா எல்லாம் போகப்போறதை ரசிக்கிறதா?.."

"அப்படியில்லேப்பா.. பச்சைப் பசேல்னு இருந்த அத்தனையும் பழுப்பைப் பூசிண்டு ஒரே பழுப்புக் காடா மாறி நிக்கறது, எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?.. எல்லாம் வண்ண மாற்றம் தானே அப்பா?"

"இல்லே.. மனசுக்கு என்னவோ பச்சைனா அது அதன் செழுமையை, இளமையைக் குறிக்கறதாகவும், பழுப்புனா உதிர்ந்து போயிடற வயோதிகத்தைக் குறிக்கறதாகவும்.. மனுஷாளுக்கு கறுப்பு தாடி, வெள்ளையாயிடற மாதிரி.."

"......................."

"அதுசரி.. எப்போவுமே பச்சையா இருக்க முடியாது தான்; பழுப்பாறது இயல்புதான். நீ ஏத்துண்டாலும், ஏத்துக்கலையானாலும் அது காலத்தின் கட்டாயம். ஆனா, அதை ரசிக்கறது எப்படின்னு தான் தெரியலே."

"ஒருவிதத்தில் முதுமையின் அழகைக் கண்ணாறக் கண்டு களிக்கறதுன்னு வைச்சுக்கோயேன். அதை அலட்சியப்படுத்தாம, அது வாழ்ந்த வாழ்க்கைக்கு வணக்கம் சொல்றதுன்னு வைச்சுக்கோயேன்.. அப்படியே வரப்போற பச்சைக்கும் வாழ்த்துக்கூறல்.. 'ப்ழையன கழிந்து.. ' ஓ, ஸாரிப்பா.. நீ சொல்ற மாதிரி அடைந்த எதையும் இழக்க கஷ்டமாத்தான் இருக்கு."

"நான் அதுக்குச் சொல்லலே.. கண்ணதாசன் சொன்ன மாதிரியும் எடுத்துக்கணும் இல்லையா? 'வ்ந்தவரெல்லாம் தங்கி விட்டால்..?"

"வேறே பேசலாமே?.. நான் பயந்த மாதிரியே பேச்சுப் போறது.. ஓக்கே. லீவ் இட்.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.. நாங்கெல்லாம் இங்கே உங்களைப் பாத்தோமே?.. நீ, அம்மா, கிருஷ்ணா மாமா, அப்புறம் ரொம்ப வயசான இன்னொருத்தர்--- நீங்க இப்போ டெல்லிலேந்து பேசறேள்; ஆனா, அரைமணி நேரத்துக்கு முன்னாடி, உங்க அத்தனை பேரையும் இங்கே நாங்க பாத்தோம்.. அச்சு அசாலா நீங்க எல்லாருமே தான்!.. ஆச்சரியமா இல்லை? நான் இப்போ உங்களைக் கூப்பிட்டதே, நீங்க டெல்லிலே தான் இருக்கேளான்னு நிச்சயப்படுத்திக் கொள்ளத்தான்."

"தமா.. நீ என்ன சொல்றே?" என்று சிவராமன் திகைத்தார்.


(தேடல் தொடரும்)

2 comments:

Kavinaya said...

//சிவராமன் திகைத்தார்.//

நானும்தான்!

இப்படியெல்லாம் சஸ்பென்ஸ் வச்சா தினம் எழுதணும் நீங்க! :)

இலையுதிர்காலத்தில் பல நிறங்களை பார்ப்பது ஒரு விதத்தில் அழகுதான். அந்த சமயத்தில் மரங்களெல்லாம் இன்னும் இலை கொள்ளாமல்தான் இருக்கும். பூத்துக் குலுங்கும் வண்ணத் தோட்டங்களை பார்ப்பது போல். அதனால் சோகம் தெரியாது. உதிர ஆரம்பித்த பின்... ஹ்ம்.. அது வேறு மாதிரி :(

இன்றைக்கு காலையில்தான் இந்த வண்ண மாற்றம் / உதிர்ந்த இலைகள் பற்றி ஏதோ சிந்தனை ஓடியது. அதுவே உங்கள் பதிவிலும்!

ஜீவி said...

கவிநயா said...

//இன்றைக்கு காலையில்தான் இந்த வண்ண மாற்றம் / உதிர்ந்த இலைகள் பற்றி ஏதோ சிந்தனை ஓடியது. அதுவே உங்கள் பதிவிலும்!//

தொடரும் இந்த்த் தொடரும் இதே மாதிரியான தொடர்புச் சிந்தனைகளில் தான் தொடர்கிறது.
இப்போதைக்கு எதுவும் புரிபடவில்லை. எழுத எழுத எப்படி இட்டுச் செல்கிறது என்று பார்க்கலாம்.
தொடர்ந்த வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி, கவிநயா!

Related Posts with Thumbnails