மின் நூல்

Friday, December 11, 2009

ஆத்மாவைத்தேடி....20 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின அடுத்த கட்டத்தை நோக்கி....

20. பார்த்த காட்சி

தமயந்தியின் குரலில் ஒரு பதட்டம் இருந்தது. "ஆமாப்பா.. உங்களையெல்லாம் இங்கே பார்த்தோம்ங்கறது நிஜம். முதல்லே பாத்தது நான் தான். பாத்தவுடனேயே ஆச்சரியப்பட்டு சந்தோஷத்தோட கிரிஜா கிட்டே காட்டினேன்."

"கிரிஜாவா?"

"ஆமாம்'பா! நம்ம கிருஷ்ணா மாமா பொண் கிரிஜாதான். இந்த டூர் ப்ரோக்ராம் பிக்ஸ் ஆனவுடனேயே கிரிஜாவையும் அவ ஊர்லேந்து நேரா இங்கே வரச்சொல்லிட்டோம். அவளுக்கும் இப்போ வெக்கேஷன் பிரீயட்னாலே குடும்பத்தோட வந்திருக்கா..."

"அப்படியா, ரொம்ப சந்தோஷம். பின்னாடி அவா கிட்டே பேசறேன். நீ சொல்லு."

"இந்தப் பகுதி நார்த் கரோலினா ஸ்டேட்லே இருக்குப்பா; எங்க இடத்திலே இருந்து நாலுமணி நேர டிரைவ் டைம். நாங்க இங்க வந்து இன்னியோட நாலு நாள் ஆகப்போறது.ஆன்லைன்லே ஒரு வாரத்திற்கு தங்க கேபின் புக் பண்ணியிருந்தோம். கேபின்னா, தனி வீடு மாதிரி. ஒரு வீட்டுக்குள்ளே இருக்கற ஓவன், கேஸ், பிரிட்ஜ், ஃப்யர் ப்ளேஸ்னு அத்தனை வசதியும் இங்கே இருக்கு. கல்யாணம் முடிஞ்சு கட்டுசாதக் கூடை கொடுத்து அனுப்பற மாதிரி வந்து இறங்கியவுடன் அவசர சமையல்னா தேவையான குறைந்தபட்ச சமையல் சாமாங்கள் கூட இருக்கு. வந்து இறங்கினவுடனேயே பக்கத்து வால்மார்ட்டுக்குப் போய், தேவையான தெல்லாம் வாங்கிண்டு வந்திட்டோம். சமையல், சாப்பாடு எல்லாம் இங்கே தான்..

"ஓ ஃபைன்."

"காலம்பற பத்து மணிக்குள்ளே சாப்பாட்டுக் கடையை முடிச்சிண்டு கிளம்பிடுவோம். நேத்திக்கு ஸ்மோக்கி மவுண்ட்டன் போயிட்டு வந்தோம்; இன்னிககு ப்ளூ ரிட்ஜ் பார்க்வேன்னு பக்கத்லே இருக்கற மலைப்பகுதிக்குப் போறதா இருக்கோம்.. எங்க கேபினுக்குப் பின்பக்கத்திலே பெரிய தடுப்பு; நம்ம ஊர் பால்கனி மாதிரி. அங்கேயிருந்து பாத்தா, சுத்து வட்டாரம் பூரா பாக்கலாம். காலம்பற வேளைலே, பள்ளத்தாககு பகுதி மொத்தமும் வெள்ளை வெளேர்ன்னு பனி மூடிண்டு இருக்கற மாதிரி மேகக்கூட்டம் கத்தை கத்தையா படிஞ்சிருக்கும். அதைப் பாக்கறது கண்கொள்ளாக் காட்சி.

"ம்...."

"இன்னிக்குக் காலைலே எழுந்தவுடனே பள்ளத்தாக்கிலே மேகமூட்டத்தைப் பார்க்க ஆசையோட அந்த பின்பக்க ஸிடஅவுட்டுக்கு ஓடினேன். அப்போத்தான் பக்கத்து மலைச் சரிவு பாதைலே உங்களைப் பார்த்தேன். முதல்லே புடவை கட்டிண்டு அம்மா எடுப்பா தெரிஞ்சா; அம்மாக்கு கொஞ்சம் பின்னாடி நீ, உனக்கு பின்னாடி அந்தப் பெரியவர், அவருக்குப் பக்கத்திலே கிருஷ்ணா மாமான்னு---நான் உங்களையெல்லாம் பார்த்ததும், சந்தோஷத்திலே கத்திட்டேன். என்னவோ ஏதோன்னு ஓடிவந்த கிரிஜா கிட்டே காட்டி, பாக்கச் சொன்னேன். அவளுக்கு சரியாத் தெரியலே; பைனாக்குலரை எடுத்து வந்து பார்த்தா... 'ஆமாண்டி.. ஆச்சரியமா இருக்கு'ன்னு அவ சொல்லிண்டிருக்கறத்தேயே, முகடு மாதிரி நீட்டிண்டிருந்த ஒரு பக்கத்தைச் சுத்திண்டு நீங்க திரும்பி வர்ற மாதிரி தெரிந்சது.. திரும்பி வரட்டும், நன்னாப் பாக்கலாம்னு பார்த்திண்டே இருந்தோம். ஆனா திரும்பி வர்றச்சே, கிருஷ்ணா மாமா மட்டும் தான் வந்திண்டிருந்தார். மாமா பின்னாடி நீங்க வருவேள்னு பத்து நிமிஷத்துக்கு மேலே பாத்திண்டே இருந்தோம். கடைசி வரை வரவே இல்லே...

""நீங்க திரும்பி வராததைப் பாத்து எனக்கு கலவரமாப் போயிடுத்து. அடக்க முடியாம அழுகை அழுகையா வர்றது.. 'சீ! பைத்தியம், அழாதே! நீ வேறே யாரையாவது பாத்திட்டு உங்கப்பா--அம்மான்னு நைனைச்சிருப்பே'ன்னு என்னைத் தேத்தினார் இவர். 'இதோ இப்பவே டெல்லிக்கு போன் போட்டு பேசினாப் போச்சு'ன்னு இவர் சொன்னதினாலே, உங்களைக் கால் பண்ணினேன்; ஸாரிப்பா.." என்று மூச்சுவாங்க் அத்தனையையும் குழந்தை பாடம் ஒப்புவிக்கற மாதிரி சொல்லிக் கொண்டே வந்த தமயநதி முடிக்கும் பொழுது கேவினாள்.

"இதோ பார், தமா! எதுக்கு அழறே?.. நாங்க எல்லாரும் இங்கே செள்க்கியமா இருக்கறோம்.. எங்களுக்கு ஒண்ணும் ஆகலே.. ஓக்கே.. நீ ஃபோனை கிரிஜா கிட்டே கொடு.." என்று சிவராமன் மகளை ஆசுவாசப்படுத்தினார்.

கொஞ்ச நேரம் கழிச்சு, "மாமா.." என்று குரல் கேட்டது.

"கிரிஜா எப்படிம்மா இருக்கே?.. குழந்தை ரிஷி விளையாடிண்டிருக்கானா?"

"நாங்களெல்லாம் ந்னனா இருக்கோம், மாமா! நான் கூட பைனாக்குலர்லே பாக்கறச்சே நீங்கள்ளாம் அப்படியே தெரிஞ்சேள், மாமா! அப்பா கூட நீலக்கலர்லே சட்டை போட்டிருந்தார்" என்று கிரிஜா சொல்லிக் கொண்டிருக்கையில், அந்த ஹாலின் கோடியில் நீண்ட பெஞ்சில் அமரந்து மாலுவுடனும் ராம்பிரபுவுடனும் பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்த பொழுது அவர் நீலக்கலர் சட்டை அணிந்திருந்தது சிவராமனை துணுக்குறச்செய்தது.

இருந்தாலும் தன்னை சரி பண்ணிக்கொண்டு, "நீயும் அதையேச் சொல்லி உங்கப்பாவைக் கலவரப்படுத்த வேண்டாம்.. என்ன, தெரிஞ்சதா? இதோ, உங்க அப்பா கிட்டே போனைக் கொடுக்கறேன்" என்று சொல்லிவிட்டுத் திரும்பி, "கிருஷ்ணா..." என்று கூப்பிட்டார் சிவராமன்.

கிருஷ்ணமூர்த்தி அருகில் வந்ததும், "கிரிஜா பேசறா, பாரு!" என்று கிருஷ்ணமூர்த்தியிடம் போனைக் கொடுத்தார்.

(தேடல் தொடரும்)

8 comments:

Kavinaya said...

அட, இது எப்படி சாத்தியம்?

ஆவலை அதிகரிக்கச் செய்துகிட்டே போறீங்க ஜீவி ஐயா :)

ப்ளூரிட்ஜ் பார்க்வேக்கு வந்திருக்கீங்க போலருக்கு :) எங்கூருக்கு பக்கம்தான்.

கபீரன்பன் said...

//பைனாக்குலரை எடுத்து வந்து பார்த்தா... 'ஆமாண்டி.. ஆச்சரியமா இருக்கு'ன்னு அவ... //

ஒருத்தர் கண்ணுக்கு தெரிஞ்சா, சரி ஏதோ எக்ஸ்ட்ராடினரி பர்ஸெப்ஷன் அப்படீன்னு நினைக்கலாம். பைனாகுலர்ல இன்னொருவருக்கும் தெரியுதுன்னா. சதஸ்ல இருக்கிற பெரியவங்கதான் விடை சொல்லணும்.

ஜீவி said...

கவிநயா said...
//அட, இது எப்படி சாத்தியம்?//

தொடர்ந்த பழக்கத்தினால் ஏற்படுகின்ற ஆழ்மனப்பதிவுகள் அழியாமல் மனத்தின் அடி ஆழத்தில் பதிந்து இருக்கும். அத்னால் தான் பழக்கப்பட்ட பல காரியங்கள் பெரும் முயற்சி இன்றியே அனிச்சையாக இயல்பாக நடக்கின்றன. ஆழ்ந்த சில பதிவுகளை நினைக்கும் பொழுது மீட்டும் எடுக்கலாம். ஒரே விஷயத்தை ஆழ்ந்த பிடிப்போட் தொடர்ச்சியா அதுபற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், நாம் நினைக்கற போக்கிலேயே வெளியுலகில் கண்ணுக்கு முன்னாடி அதுவே நடக்கிற மாதிரி ஒரு மாயத் தோற்றம் சில நேரங்களில் காட்டுவதும் உண்டு.. சிலருக்கு இதுவே கனவில்..

யோசிப்புகளின் தீவிரம், தொடர்ந்த யோசிப்பின் தொடர்ச்சியை நடைமுறை காரியங்களுக்காக நாம் துண்டித்தாலும், அந்த யோசிப்பின் தொடர்ச்சி மூளை செல்களில் அந்த யோசிப்புக்கான solvation நோக்கி இயங்கிக் கொண்டே இருக்கும். நாம் வேறு ஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்கிற பொழுது, திடீரென்று சுவிட்ச் போட்ட மாதிரி பழைய யோசிப்புக்கான் தீர்வு அல்லது விடை கிடைப்பது இதனால் தான்.இந்தத் தீர்வுகள் பெரும்பாலும் நாம் பெற்ற அனுபவங்களையும் அந்த விஷயத்தைப் பறறி நாம் கொண்டிருக்கும் அறிவையும் ஒட்டி இருக்குமானாலும், சில நேரங்களில் நமது திருப்திக்காக நாம் விரும்புகிற மாதிரியே அமைவது போலப் போக்குக் காட்டுவதும் உண்டு.. மனச்சுரங்கத்தில் வெட்டி எடுக்க எடுக்க பாளம்பாளமாக நிறைய தகவல்கள் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.

//ப்ளூரிட்ஜ் பார்க்வேக்கு வந்திருக்கீங்க போலருக்கு :) //

இயற்கை ஊஞ்சலாடும் அற்புதமான இடம்.
உங்க ஊரும் அப்படித்தான் போலிருக்கு..
அதனால் தான் கவிதை என்றால் கற்கண்டாக இருக்கிறது உங்களுக்கு.

வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க ந்ன்றி, கவிநயா!

ஜீவி said...

@ கபீரன்பன்..

// சதஸ்ல் இருக்கிற பெரியவங்கதான் விடை
சொல்லணும்.//

ஆமாம்..வேறே வழி தெரியலே; நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்களும் சொல்லி விட்டீர்கள்...

அந்தப் பெரியவர்களிடம் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிக்க நன்றி, கபீரன்ப!

கிருத்திகா ஸ்ரீதர் said...

பின்னால் இருந்து படித்துக்கொண்டு வந்தேன், இதற்கு பிந்தைய இரண்டு பதிவுகளைப்படிக்கும் போது புரியாத விழயங்கள் இந்தப்பதிவைப்படித்ததும் புரிந்தது. இதற்குத்தான் பிரியமுள்ளவாளை நினைச்ச நேரத்துல பார்க்கலாம்னு சொல்லுவாங்க போல... சுவராஸ்யமான சொல்லோட்டம்.. மிக ஆழமான எண்ண ஓட்டத்தை ஏற்படுத்தியது. நன்றி...

ஜீவி said...

@ கிருத்திகா

தொடர்களைப் பொருத்த மட்டில், அவ்வப்போது படித்து, அடுத்ததுக்காகக் காத்திருக்கும் சுகமே தனி தான்.

'இதுக்குத்தான் பிரியமுள்ளவங்களை
நினைச்ச நேரத்திலே பாக்கலாம்னு சொல்லுவாங்க போலிருக்கு' என்று ஏற்றிச் சொன்ன தகவல், புது எண்ண ஓட்டத்தைக் கிளப்பியது.

இதையே பாரதி எதிர்மறையாகக் கையாண்டிருப்பான். அப்படிக் கையாண்டுப் பார்க்கிற மாதிரி பார்த்து அப்படிப்பார்த்த அந்தப் பார்வையையும் ரசித்திருப்பான்!

"ஆசை முகம்மறந்து போச்சே--இதை
ஆரிடம் சொல் வேனடி தோழி?"

பாரதியாவது, கண்ணனை மறக்கிறதாவது?.. அடுத்த வரியிலேயே தன்னையே குற்றவாளியாக்கி ஒரு கேள்வி:

"நேச மறக்கவில்லை நெஞ்சம்-எனில்
நினைவு முகமறக்க லாமோ?"

அடுத்து,
கண்ணில் தோற்றம் தெரிந்தாலும், அதில் கண்ணனழகு முழுசும் தெரிலே'
ன்னு திருப்திபடாத மனசு!

'இப்படி இருக்கலாமா'ன்னு தன்னையே நொந்து கொண்டு, கடைசியில் முத்தாய்ப்பாக முடிக்கும் விதம் தான் அற்புதம்!

"கண்ணன் முகமறந்துபோனால்-இந்தக்
கண்க ளிருந்து பயனுண்டோ?
வண்ணப்படமுமில்லை கண்டாய்-இனி
வாழும் வழியென்னடி தோழி?.."

--மஹாகவி தன் எண்ண ஓட்டத்தை அப்படியே வடித்துத் தந்திருக்கும், கவிதை இது! இதை நினைவு கொள்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்கு மிக்க நன்றி, கிருத்திகா!

Shakthiprabha (Prabha Sridhar) said...

இன்னிக்கே விட்டதை எல்லாம் படித்துக்கொண்டிருக்கிறேன்...
hallucination? இதற்கு என்ன explanation தரப்போகிறீர்கள் என்று ஆவலாய் உள்ளாது.

ஜீவி said...

@ ஷக்தி பிரபா!

hallucination- இல்லை; பின்னால், நீங்கள் ஏற்றுக் கொள்கிற மாதிரி யதார்த்தமாக நெறிப்படுத்தியிருக்கிறேன். அதனால் இனி வரப்போகிற கதை அமைப்பிலும் முக்கிய திருப்பத்திற்கு வழி பண்ணியாயிற்று. அதையும் படித்து விடுங்கள். மறக்காமல் அதுபற்றியும் சொல்லிவிடுங்கள்.

Related Posts with Thumbnails