மின் நூல்

Thursday, March 31, 2011

ஆத்மாவைத் தேடி .... 2 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

2. காலத்தின் கட்டாயம்

ஹாதேவ் நிவாஸ் வழக்கம் போலவே அன்றைக்கும் விடியலில் இருந்தே களைகட்டி இருந்தது. கோசாலைப் பகுதியில் தொழுவத்தில் கட்டியிருக்கும் பசுக்களுக்குத் தான் விடியலின் வாசனை முதன் முதலில் தெரியும் போலிருக்கு. கழுத்து மணி அதிர்வுடன் அவை ''மா.." என்று உரத்த குரலில் அழைப்பதற்குத் தான் காத்திருப்பது போல் அவற்றின் குரல் கேட்டதும் அந்த அதிகாலையில் ஆசிரமமே விழித்துக் கொண்டு விடும். உடனே ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதிக்கான இயக்கம் துவங்கி மொத்த ஆசிரமத்திலும் சங்கிலித் தொடர் போன்றதான உற்சாகம் ஒன்றை ஒன்று தழுவியதான தோற்றம் கொடுக்கும்..

ஒருத்தர் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்கிற தேவை இல்லாமல், அவரவருக்கு அவரவரின் தொடர்ச்சியான பணிகள் பழக்கப்பட்டுப் போயிருந்தன. இதை அடுத்து அது என்று ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்த பணிகள் நாள் பூராவும் காத்திருந்தன. நடக்கும் எல்லாப் பணிகளும் ஒன்றைத் தொட்டு ஒன்று என்று நடக்கவிருக்கும் மாபெரும் சதஸ்ஸின் வெற்றியுடன் முடிச்சுப் போட்டவையாக அதற்கான முன்னேற்பாடுகளுடன் அமைந்திருந்தது தான் ஆச்சரியம்.

இப்பொழுதெல்லாம் எட்டுமணி அளவில் சிவன் கோயிலில் அத்தனை பேரும் காலை தரிசனத்திற்குஒன்று கூடும் பொழுதே அன்றைய நிகழ்வுகளின் நீட்சியும் போக்கும் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. சதஸின் நெருக்கம் நெருங்க நெருங்க அவரவரைத் தொற்றிக் கொண்ட ஒரு இயல்பான எதிர்பார்ப்பு கலந்த வேகத்தினூடேயே, அலாதியான பெருமிதமும் முகத்தில் தவழ்ந்தது. இந்த சதஸ் காலத்தின் கட்டாயம் என்று அவர்கள் உணர்ந்திருந்ததும், அந்த கட்டாயத்தில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் அவர்களது பெருமிதத்திற்கு காரணம் ஆயிற்று.

யோசித்துப் பார்த்தால் அந்தந்த காலத்திற்கான அவ்வப்போதையான தேவைகள் தாம் கட்டாயங்களாக உணரப்படுகின்றன போலும். தேவைகள் தாம் தங்களுக்கான தீர்வுகளைக் காணத் துடிக்கின்றன. ஊரும் உலகும் வரட்சியில் தீய்ந்து போய் துடிக்கும் பொழுது உணவுக்கான தேவை அதை எப்பாடுபட்டாவது உற்பத்தி செய்வதின் கட்டாயமாக உருவெடுக்கிறது. உயிர் வாழ்வதற்கான அத்தனைத் தேவைகளுக்குமான தீர்வுகள் கிடைத்த பின்னும், மனித மதிப்பீடுகளுக்கான தேவைகள் பூர்த்தியாகவில்லை என்றால் அவைகளும் அதற்கான தீர்வுகளுக்கான கட்டாயங்களாக உருவெடுக்கும்! அறிவார்ந்த ஒரு சமுதாயத்தின் தேவைகள் காலத்திற்குக் காலம் வெவ்வேறு உருக்கொண்டு வேறு வேறு தீர்வுகளுக்காய் வடிவெடுத்துக் கொண்டிருக்கும்.. காலத்தின் வளர்ச்சிப் போக்கில் தன்னையும் வளப்படுத்திக் கொள்ளும் அறிவின் எதிர்பார்ப்பு அந்தந்த தீர்வுகளுக்கான கட்டாயங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

"மனித மதிப்பீடுகளில் மிக உயர்ந்த ஒன்று நன்றியறிதல்" என்று அன்றைய உரையைத் தொடர்ந்தார் தேவதேவன்.

மொத்தம் பன்னிரெண்டு குழுக்கள். ஒவ்வொரு குழுவிற்கும் எட்டு பேர். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு துறை சார்ந்தது. ஒவ்வொரு விவாதப் பகுதியிலும் பேசப்படுவவதை எல்லா துறை சார்ந்தவர்களும் குறித்துக் கொள்கிற மாதிரி, அங்கங்கே தங்கள் துறை சார்ந்த விளக்கமோ இல்லை குறுக்கீடுகளோ இருந்தால் அவ்வவ்போது பதிவு செய்கிற மாதிரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்தனைக் குழு சார்ந்திருப்போரும் சுற்றி அமர்ந்திருக்க நட்ட நடுவில் தேவதேவனின் குழுவினர் அமர்ந்திருநதனர். தனது குழுவின் நடுநாயகமாக அமர்ந்திருந்த தேவதேவன் சுற்றிலும் பார்த்து புன்முறுவலித்து விட்டு சொல்ல ஆரம்பித்தார். "மனித மனத்தின் ஆதியான அடிப்படையான குணம் இந்த நன்றியறிதல். தனக்கு நன்மை பயத்தவைகளின் பால் நன்றி செலுத்துதல். ஆதிமனிதன் மரவுரி தரித்து காடுகளில் திரிந்தலைந்த காலத்திலிருந்தே தனக்கு நன்மை செய்தவைக்கு நன்றி செலுத்தத் தவறியதில்லை. நிலத்தையும், நீரையும், நெருப்பையும், காற்றையும், பரந்த வான் வெளியையும் வணங்கத் தவறவில்லை அவன். வணங்குதல் இங்கே எங்கே வந்தது என்றால், நன்றி செலுத்துதலின் வெளிப்பாடு தான் வழிபடுதல். இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தவனுக்கு, அந்த இயற்கையே வழிபடும் தெய்வமாயிற்று. இது தான் ஆதிமனிதனின் அறிவார்ந்த செயலின் முதல் தொடக்கம்" என்றார் தேவதேவன்.

தேவதேவனின் பேச்சு அவையினரை மிகவும் கவர்ந்து விட்டது. அவர் பேச்சின் சுவாரஸ்யத்தில் ஏற்பட்ட அமைதியில் அவர் குரல் மட்டுமே தனித்த ஒரு ஒலியாய் வெகு நிதானத்துடன் ஒலித்தது.

"விட்ட இடத்திலிருந்து இப்பொழுது தொடர்வோம். பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒன்று சேர்ந்த ஆறு பேர் இறைவனின் படைப்பின் தாத்பரியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி, பிப்பலாத முனிவரை அணுகி குருகுலக் கல்வி தங்களுக்கு அனுகிரகிக்க வேண்டிக் கொண்டனர் என்று பார்த்தோம். பிராணன் பற்றி அச்வலர் மகன் கெளசல்யன் கேட்டு விளக்கம் பெற்றார். மனத்தின் செயல்பாடுகளுக்கேற்ப மனிதனின் உடலும் உள்ளமும் உருக்கொள்கின்றன என்று தெரிந்து கொண்டோம்.

"பிரச்ன உபநிஷத்தில், இறை அறிவைத் தேடிப் புறப்பட்ட ஆறு பேரில் ஒருவரான சூரியனின் பேரன் கார்க்கியன் என்பவர், மனிதனின் விழிப்பு, தூக்கம், கனவு நிலைகளைப் பற்றியெல்லாம் விளக்கம் கேட்டு முனிவரிடம் விக்ஞாபிக்கிறார். அப்பொழுது பிப்பலாத முனிவர் கூறுவதாக பிரச்ன உபநிஷதத்தில் பல விளக்கங்கள் வருகின்றன" என்று சொல்லி தேவதேவன் சொல்லி கொஞ்சம் பேச்சை நிறுத்தி சுற்றும் பார்த்த பொழுது,

"இறை அறிவைத் தேடிப் புறப்படுதல் என்றால் இறைவனால் படைக்கப் பட்டவைகளைப் பற்றி அறிவு கொள்ளுதல் என்று என்று அர்த்தம் கொள்ளலாமா, ஐயா?" என்று சித்திரசேனன் கேட்டார்.

"ஆமாம். அப்படித் தான் கொள்ள வேண்டும் என்று தெரிகிறது" என்றார் தேவதேவன். "அந்தக்கால குருகுலக் கல்வியின் அமைப்பும் அப்படியாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது ஏன், எதனால் என்று தெரியாதவாறு மர்மமாக இருக்கும் விஷயங்களுக்கான காரணங்களை குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் என்றும் அர்த்தம் கொள்ளலாம். ஒரு குருவைத் தேடிக் கண்டு அவரது அன்றாடப் பணிகளுக்கான பணிவிடைகள் செய்து அவரிடம் கல்வி கற்பதற்கான மனநிலையையும் அதற்கான ஆற்றலையும் தேர்ச்சியையும் பெற்றார்கள். அறிவார்ந்த விஷயங்களை தேடியவர்கள் மட்டுமில்லை, அரசர்க்கும் குருகுலக் கல்வி முறை அவசியமான ஒன்றாக இருந்தது தெரிகிறது. நீதிபரிபாலனம் செய்து மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையைக் கொடுக்க வேண்டிய அரசனுக்கு வாழ்க்கையின் சகல விஷயங்களைப் பற்றிய அறிவும் தேவையான ஒன்றாக இருந்திருக்கிறது. அதனால் அரசிளம்குமரர்களும் குருகுலத்திற்கு அனுப்பப்பட்டு கல்வி பெற்றார்கள்" என்று சொன்ன தேவதேவன் தொடர்ந்தார்.

"பெருகின்ற கல்வியும் அதற்கான பாடத்திட்டங்களும் கூட எவ்வளவு அழகாக இருக்கிறது, பாருங்கள்! இந்தக் கல்வியைத் தெரியப்படுத்துகிற உபநிஷத்துக்களும் எல்லாவிதங்களிலும் பார்க்கப் போனால் பாடப்புத்தகங்கள் போலத்தான் இருக்கின்றன. எதுபற்றியும் எந்த ஞானமும் இல்லாமல், ஞானம் என்கிற ஒன்றே நிகழ்வாக எங்கும் இல்லாது உலகமே உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பாரதத்தில் உடல், மனம், பிராணன், மூச்சு இதெல்லாம் பற்றி யோசித்திருக்கிறார்கள் என்பது தான் இந்த தேசத்திற்கான சிறப்பு...

"பிப்பலாத முனிவரிடம் கார்க்கியன் கேட்ட கேள்விகளைப் பாருங்கள். 'ஐயா, மனிதன் துயில்கையில் தூக்கத்தின் தாக்கத்தில் எவை துயில்கின்றன? எவை விழித்திருக்கின்றன? கனவு காண்கிறவர் யார்? ' என்று கேட்கிறான். தூக்கத்தில் ஆட்பட்டாலும், கனவு வருகையில் ஏதேதோ உணர்வுகளில் சிக்கிக் கொள்வதால் அயர்ந்த தூக்கத்திலும் ஏதோ அல்லது எதுவோ விழித்திருப்பதாக கார்க்கியனு க்குப் படுகிறது. அதனால் தான் தூக்கத்தில் விழித்திருப்பது யார் என்கிற கேள்வி அவன் உள்ளத்தில் எழுகிறது.

"அதற்கு முனிவர் சொல்கிறார்: 'கார்க்கியா! மாலையில் சூரியன் மறையும் பொழுது எல்லா ஒளிக்கதிர்களும் அதன் ஒளித்திரளில் எப்படி ஒடுங்குகின்றனவோ, காலையில் சூரியன் உதிக்கும் பொழுது எல்லா ஒளிக்கதிர்களும் எப்படி மீண்டும் ஒளிர்கின்றனவோ அதேமாதிரி மனிதன் தூங்குகையில் அவன் புலன்கள் அனைத்தும் அவன் மனத்தில் ஒடுங்குகின்றன' என்கிறார். அதாவது தூங்குகையில் புலன்கள் அத்தனையும் அவரவர் மனத்தில் ஒடுங்கி அவையும் துயில் கொள்கின்றன என்கிறார். அடுத்து,

"ப்ரணாக்னய ஏவைதஸ்மின் புரே ஜாக்ரதி /கார்ஹபத்யோ ஹ வா ஏஷோsபானோ வ்யானோ sன்வாஹார்யபசனோ யத்கார்ஹ- பத்யாத் ப்ரணீயதே ப்ரணயனாத் ஆஹவனீய: ப்ராண: "

"அவன் தூங்குகையில், பிராண அக்னிகள் மட்டுமே விழித்திருக்கின்றன. அபானனே, கார்ஹபத்யம்; வியானனே அன்வாஹார்யபசனம்; எது கார்ஹபத்யத்திலிருந்து உருவாக்கப்பட்டது?.. பிராணன் தான் உருவாக்கப் பட்டதால், அதுவே ஆஹவனீயம் என்கிறார் பிப்பலாத முனிவர்.

"புறவுலக நடவடிக்கைகளில் ஈடுபடுவதான புலன்கள் அயர்ந்து தூங்குகையில் பிராணன் மட்டும் இழையோடிக் கொண்டிருக்கிறது. பிராண சக்திதான் உயிர் உடலில் தங்கி இருப்பதின் அர்த்தம் ஆதலால் உடல், மன இயக்கத்திற்கு ஆதாரமான அது மட்டும் விழித்திருக்கிறது என்கிறார். துயில்கையில் மனத்தில் புலனுணர்வுகள் ஒடுங்குவதும், விழிக்கின்ற நேரத்து ஒடுக்கத்திலிருந்து மீள்வதும் பிராண சக்தியால் தான் என்பதால் அந்தப் பணிக்காக பிராண அக்னி விழித்திருக்கிறது என்கிறார்".

தொல்லியல் மேம்பாட்டுத் துறை சேர்ந்த அசோகன் எழுந்திருந்து," மேற்கொண்டு தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. கார்ஹபத்யம், அன்வாஹார்யபசம், ஆகவனீயம் என்கிற மூன்று வார்த்தைகளைச் சொன்னீர்களே! அவை பற்றியும் சொல்லிவிடுங்கள்" என்றார்.

"அதற்கு முன்னால் தூக்கம் பற்றி கார்கியன் கேட்டதற்கு பிப்பலாத முனிவர் சொன்னதை தொகுத்துப் பார்த்து விடுவோம். அப்படி முழுதையும் ஒன்றாக நினைவு கொண்டால் இனித் தொடர்வதைத் தொடர்வதற்கு செளகரியமாக இருக்கும்.." என்று தேவதேவன் அவையைச் சுற்றிப் பார்த்தார்.


(தேடல் தொடரும்)


4 comments:

கோமதி அரசு said...

// "மனித மனத்தின் ஆதியான அடிப்படையான குணம் இந்த நன்றியறிதல். தனக்கு நன்மை பயத்தவைகளின் பால் நன்றி செலுத்துதல். ஆதிமனிதன் மரவுரி தரித்து காடுகளில் திரிந்தலைந்த காலத்திலிருந்தே தனக்கு நன்மை செய்தவைக்கு நன்றி செலுத்தத் தவறியதில்லை. நிலத்தையும், நீரையும், நெருப்பையும், காற்றையும், பரந்த வான் வெளியையும் வணங்கத் தவறவில்லை அவன். வணங்குதல் இங்கே எங்கே வந்தது என்றால், நன்றி செலுத்துதலின் வெளிப்பாடு தான் வழிபடுதல். இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தவனுக்கு, அந்த இயற்கையே வழிபடும் தெய்வமாயிற்று.//

ஆம் சார், இந்த
அடிபடை குணத்தை மறந்ததால் தான் மனிதன் அடிக்கடி இயற்கை சீற்றத்திற்கு ஆளாகிறான்.

இயற்கையை நன்றியுடன் வழி பட்டால்
இயற்கை அள்ளி அள்ளி கொடுக்கும்.

பஞ்சபூதங்களை பாழ் படுத்தி வருகிறோம்.

பஞ்சபூத நவக்கிரக தவம் என்று எங்கள் குரு சொல்லி தந்து இருக்கிறார்.

//மெய்ப்பொருள் என்ற சுத்தவெளியே நமக்குள்ளாக கெட்டிபொருளான உடல், இரத்தஓட்டம், வெப்பஓட்டம், காற்று, உயிர் என்ற ஐந்து பெளதிகப் பிரிவுகளாக இயக்கிறது.

மெய்பொருள் என்ற பிரம்மமே பரிணாமத்தில் எல்லா உயிர்களாகவும் வந்துள்ளது எனபதை உணர்ந்து எந்தவொரு உயிருக்கும் துன்பம் செய்விக்காமலும், எங்கு எந்தவொரு உயிர் துன்பபட்டாலும் அந்த துன்பத்தைப் போக்குமளவிற்கு நம் செயல்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு வாழ்வில் கருணையோடு வாழ முயல்வோம்.//

நன்றி உள்ள மனிதர்களாய் வாழ்வோம்.

நான் ஆன்மீக பயணம் போய் இருந்தேன் .

ஆத்மாவைத் தேடி தொடரைப் படிக்க முடியவில்லை.

மனதுக்கு இதமாய் உள்ளது மூன்றாம் பாகம்.

ஸ்ரீராம். said...

//"அந்தந்த காலத்திற்கான அவ்வப்போதையான தேவைகள் தாம் கட்டாயங்களாக உணரப்படுகின்றன போலும். தேவைகள் தாம் தங்களுக்கான தீர்வுகளைக் காணத் துடிக்கின்றன..."//

தீர்வுகள் கட்டாயமாக காணவும் படுகின்றன!தேவைகள் அல்லது பிரச்னைகள்தான் மனித குளத்தின் முன்னேற்றத்திற்குக் காரணமாகவும் இருந்திருக்கும். அவ்வப்போதையான தேவைகள் தாம் கட்டாயங்களாக உணரப்படுகின்றன என்ற வரிகள் ஒரு பழைய ஜோக் நினைவுக்குக் கொண்டு வருகிறது. ஜோக் என்றும் சொல்ல முடியாது. சிமென்ட் கஷ்ட காலத்தில் சிமென்ட் கிடைக்காமல் கஷ்டப்படும், வீடு கட்டிக் கொண்டிருந்த ஒருவனுக்கு முன் தோன்றி 'என்ன வரம் வேண்டும் கேள்' என்ற கடவுளிடம் அவன் நூறு மூட்டை சிமென்ட் கேட்டானாம்.

ஜீவி said...

@ கோமதி அரசு

தங்கள் குருநாதருக்கு என் நமஸ்காரங்கள். இந்தப் பகுதி மனதுக்கு இதமாயிருந்தது என்று அறிந்து மகிழ்ச்சி கோமதிம்மா.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

வெளியேவே நின்று விட்டால் எப்படி ஸ்ரீராம்?.. அதைத் தாண்டிக் கொஞ்சம் உள்ளே வந்தால், சிந்தனையைக் கிளர்த்தும் நிறைய கேள்விகளை உங்களால் கேட்க முடியும்; உங்களுக்குள் கேட்டுக் கொள்ளவும் முடியும். உங்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருப்பதால் இதை எழுதத் தோன்றிற்று.

வாருங்கள். இந்த வாழ்க்கையை உயர்ந்த ஒரு உன்னத நிலைக்கு மாற்ற கற்றுக் கொடுக்கிற அந்த தெய்வத்திடமிருந்து நாம் எல்லோருமே சேர்ந்து நிறைய கற்போம்.

தொடர்ந்து வாருங்கள்..

Related Posts with Thumbnails