மின் நூல்

Sunday, April 24, 2011

ஆத்மாவைத் தேடி …. 7 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


7. கனவுன்னா அவ்வளவு .....


"சரிப்பா... சரிப்பா.. " என்று சொல்லி விட்டு செல்லை ஆஃப் செய்தான் மணிவண்ணன். "அம்மா! கொஞ்ச தூரத்லே ஸ்டார்பக் ஸ்டோர் வர்றதாம். அங்கே காரை பார்க் பண்ணச் சொன்னார், அப்பா" என்றான்.

"ஓ! காப்பி ஞாபகம் வந்துடுத்தா, அவருக்கு! அவங்கள்லாம் எங்கே இருக்காங்களாம்?"

"ஒரு மைல் பின்னாடி வர்றதா சொன்னார்ம்மா..."

"ஓ.கே. ஓ.கே.." என்று தமயந்தி சம்மதம் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே 54-வது எக்ஸிட்டில் ஸ்டார்பக் இருப்பதைத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகையைப் பார்த்து விட்டாள் தமயந்தி.. அடுத்த அரை நொடியில் 54-ம் வந்துவிட எக்ஸிட் பாதையில் வண்டியைச் செலுத்தினாள்.

"மணி கூட நாலாயிடுத்தே.. காப்பி நேரம் தான்.." என்று கிரிஜா சொல்கையிலேயே ரிஷியிடமிருந்து சிணுகல் சப்தம் கேட்டது. "நல்லவேளை... சரியான நேரத்லே குழந்தையும் முழிச்சிண்டான்.." என்று பார்க்கிங்கில் இடம் தேடினாள் தமயந்தி.

அதற்குள் பின்னாலேயே பிரகாஷ் ஓட்டிக் கொண்டு வந்த வண்டி வந்துவிட்டது.

"ரிஷிக்குத் தூக்கம்லாம் போயாச்சா?.... உள்ளே போகலாமா, கிரிஜா?"

"போகலாம்க்கா.. அதோ அவா கூட காரைப் பார்க் பண்ணிட்டு இறங்கிட்டா போலருக்கு."

காரைப் பார்க் பண்ணிவிட்டு இறங்கிய தமயந்தி, காரைச் சுற்றிக் கொண்டு பின்னால் வந்து கதவு திறந்து ரிஷியைக் கொஞ்சினாள். இன்னொரு பக்கம் இறங்கிய கிரிஜா, வலப்பக்கம் வந்து ரிஷியின் ஸீட் பெல்ட்டை அவிழ்க்கையில் உதவினாள். பெல்ட் விலகியதும் ரிஷிக்குக் கொண்டாட்டம்! பகபகவென்று சிரித்த குழந்தையைத் தூக்கிக் கொண்டாள் தமா. அதற்குள் மணிவண்ணன் ஓடிப்போய் அவன் அப்பாவுடன் சேர்ந்து கொண்டான்.

தமா கிரிஜாவுடன் நெருக்கத்தில் வந்ததும், "என்ன, காப்பி ஞாபகமே இல்லையா?.. நீயே கூப்பிடுவேன்னு பொறுத்துப் பார்த்தேன். கூப்பிடற வழியைக் காணோம்.. அதான் ஜிபிஎஸ்ஸைக் கேட்டு அது சொல்லி உன்னைக் கூப்பிட்டுச் சொன்னேன்" என்றான் குமார்.

கலகலவென்று சிரித்தாள் தமயந்தி ."பயங்கர பேச்சுச் சுவாரஸ்யத்திலே இருந்தோமா, ஸ்டார்பக்கும் கண்ணிலேயே படலையா, மறந்தே போச்சு.."

"பயங்கர பேச்சு சுவாரஸ்யமா.. என்ன மணியை வச்சிண்டு ஆவி கீவின்னு பேசிண்டு வந்தீங்களா?.." என்று கிரிஜாவைப் பார்த்து அப்பாவியாய் கேட்டான் பிரகாஷ்.

"ஓ.." என்று மீண்டும் சிரித்தாள் தமா. "நீங்க வேறே.. நானே பயங்கர பயந்தாங்கொள்ளிங்க.. இந்த பேய்-கீய் சமாச்சாரமெல்லாம் பகல்லே பேசினாலும் ராத்திரி கனவா வந்திடும்.."

"சரியாப் போச்சு போ! குமார்தான் கனவுலக மன்னனாய் இருப்பார்னு பார்த்தால், அவருக்கு சரிசமனா நீங்களும் கனவுலக மன்னியாய் இருப்பீர்கள் போலிருக்கே!"

"நானாவது அப்போப்போ கனவு காண்பேன்; அவரைக் கேளுங்கள், 'தூங்கறதே கனவு காணத்தான்' என்பார் பாருங்கள்!"

பிரகாஷ் சிரித்த சிரிப்பில் கிரிஜாவும் இப்பொழுது கலந்து கொண்டாள்.

"கனவு காண்றத்துக்கெல்லாம் கொடுத்து வைச்சிருக்கணும்.. என்னைக் கேட்டால், கனவு காணாத தூக்கமும் ஒரு தூக்கமான்னு கேட்பேன்" என்றான் குமார்.

"அவர் சொல்றதும் சரிதாங்க.. வழிபூரா விதவிதமா தான் கண்ட எத்தனை கனவுகளைப் பத்திச் சொன்னார்ங்கறீங்க.. அவர் சொல்லச் சொல்ல, இன்னிக்கு ராத்திரியானும் படுத்தவுடன் ஒரு கனவைக் காணணும்னு எனக்கே பொறாமையாப் போச்சு!.." என்றான் பிரகாஷ்.

"அது எப்படீங்க?.. கனவு காண்றதெல்லாம் நம்ம கைய்லயா இருக்கு?" என்ற தமாவுக்கு,

"இருங்க.. குமாரைக் கேட்டுச் சொல்றேன்.." என்று பிரகாஷ் குமார் பக்கம் திரும்ப, அதற்குள் தள்ளும் கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு குமார் உள்ளே போக அவனைத் தொடர்ந்து காபி பாருக்குள் புன்னகைக்கும் முகத்துடன் எல்லோரும் நுழைந்தனர்.

பாரின் உள்ளே நுழைந்ததும் ரிஷியை வாங்கிக்கொண்டாள் கிரிஜா. கண்ணாடி தடுப்புக்குப் பக்கத்தில் வெளிப்பக்கம் போகிற வருகிறவர்களைப் பார்த்துக் கொண்டே உட்காருகிற மாதிரி வளைந்து வளைந்து நிறைய இருக்கைகள் இருந்தன. ரிஷிக்குக் கூட குழந்தைகள் உட்காருகிற மாதிரியான உயர்ந்த இருக்கை ஒன்று முன்சட்டம் போட்டபடி இருந்தது. அதில் ரிஷியை அமர்த்தி முன்னாடி விழுந்து விடாமலிருக்க சட்டமிட்டு, கையில் ஒரு லாலிபாப் கொடுத்ததும் குழந்தை சிரித்தபடியே விளையாட ஆரம்பித்து விட்டான்!

"நீங்க இங்க இருங்க.. நாங்க ரெண்டு பேரும் போய் காப்பி வாங்கி வந்திடறோம்" என்று எழுந்தான் குமார். "ஏங்க.. அப்படியே கொறிக்கறத்துக்கும் ஏதாவது ..." என்றாள் தமயந்தி. பிரகாஷ், குமார் கூடப்போனான். அம்மாவிடம் பர்மிஷன் வாங்கிக் கொண்டு அவர்களைத் தொடர்தான் மணிவண்ணன்.

"அதோ, அங்கே பார்!" என்று கண்ணாடிக்கு வெளியே விரல் நீட்டிக் காட்டினாள், தமயந்தி.

"எங்கேடீ.." என்று அவள் காட்டிய திசையில் பார்த்தாள் கிரிஜா.. "யார்? அந்தக் கறுப்பு நிறக் காருக்குப் பின்னாடியா?" என்றாள் கிரிஜா.

"ஆமா. கார் டிக்கியைத் திறந்திண்டு நிக்கறானில்லையா, அந்த ஆளுக்கு பக்கத்திலே ரெண்டு பேர்.."

"ஆமாம், அவாளுக்கென்ன?.. நம்ம தேசத்துக்காரங்கன்னு மூஞ்சிலே, நடை உடை பாவனை எல்லாத்திலேயும் எழுதி ஒட்டிருக்கு.. வேறே என்ன?"

"வேறே என்னமானும் தெரியறதா?.. இன்னும் சொல்லப்பாரு.."

"அநேகமா வடக்கத்திக்காரங்களா இருக்கும்.. அந்தம்மா புடவை கட்டிண்டிருக்கற பாங்கைப் பாத்து சொல்றேன்.."

"ஓ.கே.. இன்னும் ஏதாவது?.."

"நான் இத்தனை சொல்லிட்டேனே?.. நீ ஒண்ணு சொல்லேன்."

"நான் உன்னைக் கேட்டா, நீ என்னைக் கேக்கறியா?'

"பின்னே?.. கேக்கறது எவ்வளவு ஈஸி!.. மூளையைக் கசக்கிண்டு நீயும் தான் ஒண்ணு ரெண்டு சொல்லேன்.."

"ம்.... நா ஒண்ணு நெனைச்சிண்டு கேக்கறேன். அதை நீயும் சொல்றேயான்னு பாக்கறத்துக்குத் தான் உன்னைக் கேட்டா.."

'ப்பூ' என்று உதடைப் பிதுக்கினாள் கிரிஜா. "அந்தாள் அந்த இளம் பெண்ணோட புருஷன் மாதிரி தெரியறது.." என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டாள்.

"எஸ்.. அதுக்கு மேலே என்னலாம் தெரியறது?" என்று ஆவலோடு தமயந்தி கிரிஜாவைப் பார்த்தாள்.

"தெரியலையேடி..."

"ச்சை.. இது கூடத் தெரியலையா?.. அந்த இளம் பெண்ணோட அம்மா மாதிரி அவ பக்கத்திலே நிக்கற அந்த பெரியம்மா தெரியலையா?.. அவங்க ரெண்டு பேரும் அம்மா--பொண்ணுன்னு அச்சடிச்ச மாதிரி அவங்க முகத்திலே எழுதி ஒட்டியிருக்கு, பாரு! ஜெராக்ஸ் எடுத்த மாதிரி அப்படி ஒரு நகல்" என்று படபடத்தாள் தமயந்தி.

"அதுக்கென்ன?.. எனக்கும் தான் தெரிஞ்சது.."

"தெரிஞ்சதுன்னா, சொல்லித் தொலைக்க வேண்டியது தானே?.."

"வாரே..வா... அதை நீ உன் வாயாலே சொல்லணும்லே.. அதுக்குத் தானே இப்படி இழுத்தடிச்சேன்..."

"சரியான இதுடி நீ!"

"இப்போ தெரிஞ்சதா?.. நீ அதையே தான் நெனைச்சிண்டிருக்கேன்னு.."

"எதை?.."

"அந்த சுகுணா மாதிரியே நாம் இருக்கோம்னா, அந்த சுகுணா யார்னு தானே அப்போலேந்து நெனைச்சிண்டிருக்கே?"

"கரெக்ட்.. நீ தான் சொல்லேன்.. அந்த சுகுணா யாராடி இருக்கும்?.."

"யாரா?.. மாதுரியோட அம்மா தானேடி சுகுணா.."

"அப்படித்தான் மாதுரி சொன்னா.. ஆனா அவங்க சொல்றதைப் பாத்தா, அவங்க அம்மா மாதிரி அவங்க இல்லேன்னு தெரியறதே?.."

"அதுமட்டுமில்லே.. அவங்க உங்கம்மா மாதிரி இருக்காங்க. அது தான் விஷயம்.."

"தேர் தி பாயிண்ட் இஸ்.. அவங்க அம்மா மாதிரி நான்.. எங்கம்மா மாதிரி அவங்க.. ஆக..." காற்றில் விரல்கள் அசைத்துக் கோலம் போட்டாள் தமயந்தி.

"என்ன ஆக?.."

"இன்னிக்கு ராத்திரி எங்கம்மாவோட பேசிடறேன்.. இல்லேன்னா எனக்குத் தலையே வெடிச்சிடும்.."

"நாஷ்வெல் போய் பேசிடலாண்டி.." என்று கிரிஜா சொன்ன பொழுது, பிரகாஷ்-குமார் டிரேயில் அலுங்காமல் சுடச்சுட காபி அட்டைக் குவளைகளைச் சுமந்து வர, மணிவண்ணன் ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகளுடன் வந்தான்.

டேபிளில் ட்ரேயை வைத்தபடியே, "எவ்வரிதிங்.. காட்ஸ் கிஃப்ட்... கனவுன்னா அவ்வளவு ஒண்டர்புல்லாக்கும்.. எப்படி கனவு வர்றதுன்னுங்கறதை இப்போ சொல்றேன்.." என்று பிரகாஷைப் பார்த்துச் சொன்னான் குமார்.


(தேடல் தொடரும்)

6 comments:

கோமதி அரசு said...

"இன்னிக்கு ராத்திரி எங்கம்மாவோட பேசிடறேன்.. இல்லேன்னா எனக்குத் தலையே வெடிச்சிடும்.//

இப்படித்தான் சிலவிஷயங்களை நமக்கு தெளிவுபடுத்தி கொள்ளவில்லையென்றால் மண்டைக்குள் அது குடைந்து கொண்டு இருக்கும்.

dondu(#11168674346665545885) said...

எனது ஊகத்தை இப்போதே சொல்லி வைக்கிறேன்.

1. இரு தாயார்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மகள்.

2. ஒவ்வொரு தாய்க்கும் அவர் மகளுக்கும் ஒரே ஜாடை.

3. குழந்தைகள் பிறந்த உடனேயே பிரசவ வார்டிலோ அல்லது வேறெங்கேயோ இண்டெர்சேஞ்ச் ஆகியுள்ளன.

4. ஆகவே ஒவ்வொரு மகளுக்கும் இன்னொருவருடைய மகள் தன் தாயின் ஜாடையில் இருப்பதாகப் படுகிறது.

ஏதோ வை.மு. கோதநாயகி அம்மாளின் கதையின் வாசனை என் விளக்கத்தில் உள்ளது போல் தோன்றினால், அது வேண்டுமென்றே என்னால் செய்யப்பட்டது. :))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜீவி said...

@ கோமதி அரசு

சில விஷயங்களில் சரியான தெளிவு கிடைத்து விட்டால் அதுபற்றி நாம் நினைத்திருப்பவை சரியா இல்லை தவறா என்பது தெரியும் என்பதால், அந்தத் தெளிவு விரைந்து கிடைக்க ஆவலாய் இருக்கிறது. இந்த ஆவல் நீட்டிக்க நீட்டிக்க அதைத் தெரிந்து கொள்ளும் அவசரம் அதிகரிக்கிறது.
அந்த சில விஷயங்களில் உணர்வு பூர்வமாக நாம் கொண்டிருக்கும் பிடிப்புகள் கூட இந்த அவசரத்தைக் கூட்டும்.

தங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ dondu

வாருங்கள், டோண்டு சார்!

'ஆத்மாவைத் தேடி..'யின் மூன்றாவது பாகம் தொடர்ந்ததுமே உங்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன். நீங்களே தெரிந்து கொண்டு விட்டீர்கள். நல்லது.

உங்களது ஊகத்தின் முதல் பாயிண்ட் கரெக்ட். மற்றபடி 2,3,4 அளவுக்கு கதையில் டிவிஸ்டுகளெல்லாம் கிடையாது. மெயின் சப்ஜக்ட்டோடு கதை இழைந்து வரவேண்டுமென்ப- தற்காக ரொம்ப எளிமையாக யோசித்திருக்கிறேன்.

அப்புறம், அல்லயன்ஸ், வை.மு.கோ எழுதியவற்றை மறுபிரசுரம் செய்திருக்கிறார்களே, பார்த்தீர்களா?.. உங்களைப் பொறுத்த மட்டில் அவை கூட 'சமீபத்தில்' தான்! வை.மு.கோ. என்றதும் நினைவு வந்ததால் சொன்னேன்.

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

Shakthiprabha (Prabha Sridhar) said...

நானும் என் பங்குக்கு என் யூகம் சொல்லட்டுமா?

தமாவின் அம்மாவும் மாதுரியின் அம்மாவும் அக்கா தங்கைகள் ? (அல்லது cousins) ஹிஹி

ஜீவி said...

@ Sakthiprabha

இப்போதைக்கு உங்கள் ஊகம் சரியே.

இதைக் கதையாய்ச் சொல்ல வேண்டியது தான் பாக்கி. அப்பொழுது பார்க்கலாம்.

வருகைக்கும் யோசிப்பிற்கும் நன்றி, ஷக்தி!

Related Posts with Thumbnails