மின் நூல்

Friday, October 21, 2011

பார்வை (பகுதி-3)

                                          அத்தியாயம்--3

ங்கரி என் தம்பி பெண். என் தம்பி விஸ்வநாதனின் ஒரே பெண். விஸ்வநாதன் பேர் சங்கீத உலகிலே மிகப் பிரபலம். 'பிடில் மேதை' ங்கற பட்டம் அவன் பேரோடு சேந்த ஒண்ணு. வெளியுலகிலே அவன் பேரை மட்டும் தனியாக் குறிப்பிட்டு யாரும் சொன்னதா நெனைவில்லை. பட்டத்தோடு சேத்துத் தான் அவன் பேர் யாராலேயும் உச்சரிக்கப்படும்.. அந்த அளவுக்கு பிராபல்யம்.

அவனுக்கு அவன் பிடில் பெத்த குழந்தை மாதிரி. ஆசையா, அன்பா, இறைவன் தனக்குக் கொடுத்த சீதனமா அந்தப் பிடிலை நெனைச்சான். அதை மடிலே சாச்சிண்டிட்டான்னா, அவன் சொல்கிறபடி அது கேக்கும். சிரிக்கறது, அழறது, சிணுங்கறது, சீற்றது, பேசறது, கொஞ்சறது எல்லாமே செய்யும். பெற்ற குழந்தை சங்கரி கூட அந்த பிடிலுக்கு அப்புறம் தான். அதனிடத்தில் அப்படி ஒரு நேசம். இந்த உலகுக்கு அவனை அது தான் அடையாளம் காட்டினதாலே இருக்கலாம்.

எல்லாரும் ஒரே குடும்பமாக திருவையாற்றில் இருந்தோம். எங்க சின்ன வயசிலேயே தந்தை காலமாயிட்டதாலே தாயால் வளர்க்கப்பட்ட குழந்தைகளா இருந்தோம். ரொம்ப கஷ்ட ஜீவனம். வயசு வந்ததும் பள்ளிப் படிப்போடு முடிச்சிண்டு வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை. ஏதோ கிடைச்ச வேலைக்குப் போய் தாயாரை உட்காரவைச்சு சாப்பாடு போடணும்ன்னு மனசார நெனைச்சது வீண் போகலே. ஒரு பெரிய மோட்டார் கம்பெனிலே வேலை கிடைச்சது. மோட்டார்களுக்கு பாடி பில்டிங் செய்கிற கம்பெனி அது. வேலை கிடைச்ச அடுத்த வருஷமே, சுசிலாவைக் கைப்பிடிச்சேன். வீட்டுக்கு வந்த மருமகள், என் தாயாரை தன் தாயார் போல் பார்த்துக் கொண்டாள். சிறு வயசிலேயே கணவனை இழந்த, பெத்த பிள்ளைகளோட எதிர்கால மகிழ்ச்சிக்காக கடுமையா உழைச்ச அம்மாக்கு சுசீலாவோட பரிவும் பாசமும் கடைசி காலத்திலே ரொம்ப நிம்மதியைத் தந்தது..

அந்த நிம்மதி ரொம்ப நாள் நீடிக்கக் கொடுத்து வைக்கலே. ரெண்டே வருஷத்லே போய்ச் சேர்ந்தாள். தம்பிக்கு படிப்பு ஏறலேன்னாலும் சங்கீதத்திலே ரொம்ப ஈடுபாடு இருந்தது. நாங்க குடியிருந்த பகுதிலே ஒரு வயலின் வித்வான் இருந்தார். கட்டை பிரம்மச்சாரி. அவருக்கு வயலின் தான் வாழ்க்கையே. அவருக்கு சமைச்சுப் போட்றது, துணி துவைச்சு உலர்த்தி மடிச்சு வைக்கறது வரை என் தம்பி தான்.. கிட்டத்தட்ட அந்தக்கால குருகுல வாசம் மாதிரி தம்பி அவரோட தான் எப்பவும் இருப்பான். சில சமயங்களில் சாப்பாட்டுக்குக் கூட வீட்டிற்கு வரமாட்டான். அவரோடையே இருந்து அவர்கிட்டேயே வயலின் கத்திண்டு அசுர சாதகம் செஞ்சு பிரமாதமா வயலின் வாசிக்கக் கத்துகிட்டான்..

அவரோடையே அவன் இருந்தாதாலே என் தம்பி வீட்டிற்கு வர்றதே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைஞ்சு போச்சு.. போகப்போக நாட்கணக்கில் வீட்டுக்கு வராம ஆனது.. "என்னடா எங்கே போயிருந்தே; நாலைஞ்சு நாளாக் காணோமே" ன்னா, "வயலின் மாமாவோட கச்சேரிக்கு தஞ்சாவூருக்குப் போயிருந்தேன்; கும்மோணத்துக்குப் போயிருந்தேன்"ன்னு ஏதாவது ஊர்களின் பெயரைச் சொல்வான்.

ஒருதடவை இப்படித்தான். நாகை பக்கம் எங்கோ கோயில் உற்சவ விழாவிற்காக வாசிக்கப் போயிருந்த பொழுது ரயிலிருந்து இறங்கறச்சே வயலின் மாமா தடுமாறி கீழே விழுந்துட்டார். நல்லவேளை, பிளாட்பாரத்தில் விழுந்தார். அதனால ஃப்ராக்ச்சரோடு போனது.. அந்த எலும்பு முறிவு கையிலே ஏற்பட்டது தான் அவர் மனசைப் பாதிச்சிடுத்து. படுத்த படுக்கையாக அவஸ்தைப் பட்டவர், பிடிலை எடுத்து வாசிக்க முடியலேயேங்கற சோகத்திலேயே விபத்து நடந்து சரியா மூணே மாசத்திலே நினைவு தப்பி மரித்துப் போனார்.

அவர் காரியமெல்லாம் முடிஞ்சதுக்கு அடுத்த நாள் விஸ்வநாதன் வீட்டுக்கு வந்தான். ஏதோ பித்துப் பிடிச்சவன் மாதிரி காணப்பட்டான். பெயருக்காக சாப்பாடு தட்டுக்கு முன்னாடி உக்கார்ந்து எழுந்துட்டான். கொஞ்ச நாள் ஆனா மனசு சரியாகப் போயிடும்னு நெனைச்சோம்.. ஆனா அடுத்த நாள் வெளிலே போனவன் இருட்டியும் வீட்டிக்குத் திரும்பலே.. எங்கே போனான் என்னவானான்னு தெரியலே. யாரோ தியாகையர் சமாதி பக்கத்லே பாத்ததாச் சொன்னார்கள். அவனுக்கு இதமாகச் சொல்லி அழைச்சு வரலாம்னு போய்ப்பார்த்தோம். அங்கேயும் அவன் இல்லைன்னு தெரிந்ததும் ஏமாற்றத்தில் இடிந்து போய் விட்டோம். காவிரி படித்துறை, ஐயாரப்பர் கோயில் பிரகாரங்கள், தேரோடும் வீதிகள்ன்னு சுசீலாவும் நானும் தேடாத இடம் பாக்கியில்லை. விஸ்வநாதன் எங்கேயும் தட்டுப்படலே. சோர்ந்து போய் வீடு திரும்ப அந்தி சாய்ந்துவிட்டது.

என் கனவிலே வந்து அம்மா கண்ணீர் விட்டார்கள். இப்படி உயிரோடு ஒருத்தனைத் தொலைச்சிட்டு நிற்கறையேன்னு அவர்கள் இடித்துரைச்ச போதுதான் கனவென்றும் தெரியாம 'ஓ'ன்னு அலறிட்டேன். 'என்னங்க.. என்னங்க' ன்னு சுசீலா உலுக்கின போதுதான் கனவென்று கண் கலங்கினேன். ஆனால் சுசீலாக்கும் எனக்கும் இந்த ஆயுசில் எப்படியாவது தம்பியைக் கண்டு பிடிச்சிடுவோம் அல்லது விஸ்வநாதன் வீட்டிற்குத் திரும்பி வருவான்ங்கற நம்பிக்கை இருந்தது.

அடிக்கடி விஸ்வநாதனின் நினைவு வந்து என்னை வாட்டியது. அவன் நினைவு வந்தா சுத்தியிருக்கற உலகம் மறந்துடும். இனம் புரிகிற வேதனையிலே மனசு கிடந்து அல்லாடும். அவன் திரும்பி வந்துட்டா எந்தக் கவலையும் அவனுக்கு இல்லாம ராஜா போல வைச்சுக் காப்பாத்தணும்னு மனசுக்குள் சூளுரைத்துக் கொள்வேன்.

ஒரு நாள் மோட்டார் பாக்டரி லேத்தில் நடந்தது தான் அநியாயம். அசெம்பிளி செக்ஷ்னுக்கு அடுத்தாப்லே வெல்டிங் செக்ஷன். அங்கே தான் எனக்கு அன்னிக்கு ட்யூட்டி. அஞ்சடி உயரத்துக்கு கட்டி முடிக்கப்படாத மோட்டார் கூடு தூக்கி நிறுத்தப் பட்டிருக்கு. அதற்கு அடிபாகத்தில் எட்டுக்கு இரண்டாக பத்து இரும்புச் சட்டங்களைப் பொருத்த வேண்டும். வெல்டிங் செட்டுடன் மோட்டார் மரக் கூடுக்கு கீழே நுழைஞ்சிட்டேன். இரண்டு தகடுச் சட்டங்களைப் பொருத்தி முடிச்சிட்டேன். மூணாவது சட்டத்தை எடுத்து சரிபார்த்து வெல்டிங் மிஷினை உயிர்ப்பித்து முகத்திற்கு பக்கவாட்லே நிமிர்த்தி சட்டத்தை நோக்கித் தூக்கறச்சே...

வெளியே, "விஸ்வநாதா! எங்கெல்லாம் உன்னைத் தேட்றது?.. எங்கேடா போயிட்டே?" என்ற குரல் யானைப் பிளிறல் போன்ற அலறலுடன் எனக்குக் கேட்டது.


(இன்னும் வரும்)












14 comments:

கோமதி அரசு said...

"விஸ்வநாதா! எங்கெல்லாம் உன்னைத் தேட்றது?.. எங்கேடா போயிட்டே?" என்ற குரல் யானைப் பிளிறல் போன்ற அலறலுடன் எனக்குக் கேட்டது.//

விஸ்வநாதன் வந்து விட்டாரா?
அம்மாவந்து கனவில் கேட்டவுடன்
வந்து விட்டார்.

இனி அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்ளவேண்டும்.
இனி இசை மழை உண்டா?
படிக்க ஆவல்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வேலை கிடைச்ச அடுத்த வருஷமே, சுசிலாவைக் கைப்பிடிச்சேன். வீட்டுக்கு வந்த மருமகள், என் தாயாரை தன் தாயார் போல் பார்த்துக் கொண்டாள். சிறு வயசிலேயே கணவனை இழந்த, பெத்த பிள்ளைகளோட எதிர்கால மகிழ்ச்சிக்காக கடுமையா உழைச்ச அம்மாக்கு சுசீலாவோட பரிவும் பாசமும் கடைசி காலத்திலே ரொம்ப நிம்மதியைத் தந்தது..//

இந்த இடம் படிக்கும் போது ஏதோவொரு சொல்லமுடியாத மகிழ்வு ஏற்பட்டது. தொடருங்கள்.

சிவகுமாரன் said...

ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறதோ? பார்வை.... பறிபோன நிகழ்வோ? மனம் துணுக்குறுகிறது

ஸ்ரீராம். said...

ஆபீஸ் ல விஸ்வநாதனைத் தேடற குரல் நிஜமா பிரமையா தெரியவில்லை. ஆனால் எப்படியும் கிடைத்ததுதான் ஆகணும். வந்து ஏதோ கோவிலிலோ அல்லது எங்கேயோ வாசிக்க ஆரம்பிச்சு புகழ் பெற்ற வித்வான் ஆகணுமே...கல்யாணமாகணும் , சங்கரி பொறக்கணும்...பார்ப்போம். தொடர்கிறேன்.

G.M Balasubramaniam said...

இசையால் பந்தங்களும் உறவுகளும் பலப் படும் என்று எண்ணத் தோன்றுகிறது. நினைவுகளிலும் நிகழ்வுகளிலும் மாறி மாறி கதை நகர்கிறது.ஆங்காங்கே எதிர்பார்ப்புகளைத் தூண்டிச்செல்லும் விதம் மிகவும் நேர்த்தி. தொடருகிறேன்.

ஸ்ரீராம். said...

இனிய தீப ஒளித் திருநாள் நல் வாழ்த்துகள்.

ஜீவி said...

@ கோமதி அரசு

தொடர் வருகைக்கு நன்றி, கோமதிம்மா.

விஸ்வநாதன் வந்திட்டாரா?.. அடுத்த பகுதியில் சொல்லிடறேன்.

ஜீவி said...

@ வை. கோபாலகிருஷ்ணன்

தங்கள் நெகிழ்வுக்கு நன்றி. தொடர்ந்து வர வேணும்.

ஜீவி said...

@ சிவகுமாரன்

அதே!

ஒன்றிய வாசிப்புக்கு நன்றி, சிவகுமாரன்!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அந்தக் குரல் பிரமையல்ல; நிஜமே.

ஆமாம், ஸ்ரீராம்! ஆக வேண்டியவை நிறைய இருக்கின்றன. நடந்தவை களோ வரிசைக் கிரமமாகத் தெரிந்திருந்தால் இந்தக் குதுகுதுப்பு இருந்திருக்காது. பின் நடந்தவை களின் தெரிதலின் அடிப்படையில் அதற்கு முன் நடந்தவைகளைத் தேடிப் போவோம்.

தொடர் வருகைக்கும், பின்னூட்டப் பதிவுக்கும் மிக்க நன்றி.

ஜீவி said...

@ G.M. Balasubramanian

தங்கள் எண்ணங்களைப் பதிந்தமைக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி, ஐயா!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், 'எங்கள்' வலைப்பூ தோழர்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஸ்ரீராம்!

தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி, ஸ்ரீராம்!

Geetha Sambasivam said...

உண்மையிலேயே எதிர்பாராத் திருப்பம் தான். ஆவலைத் தூண்டுகிறது. சீக்கிரம் பார்வை வரணும்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

அதுக்குத் தான் எல்லாரும் முயற்சிக்கிறாங்க.. பார்க்கலாம்.

Related Posts with Thumbnails