மின் நூல்

Thursday, March 3, 2016

இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?..

பகுதி--2

சாதாரணமாக வயதானவர்கள் தான் போய்ச் சேரக் காத்திருக்கிறேன்' என்று
சொல்வார்கள்.  அதைப் பற்றி உங்கள் கருத்தென்ன என்று அந்தப் பெரியவர் கேட்டது யதார்த்ததிற்கு ஒத்துப்  போகிற ஒன்று தான்.

நானும் நினைத்துப் பார்க்கிறேன்.   இள வயசில் இப்படியெல்லாம் யோசித்ததே இல்லை.   ஒவ்வொரு வயசுக்கும் ஏற்பவான அனுபவிப்புகள் அந்தந்த வயதுகளில் நம்மை மூழ்கடித்து விடுகின்றன.

வந்ததிலிருந்து போவதற்கு இடையிலான இடமாக இங்கு தங்கியிருக்கும் காலத்தில்  ஏகப்பட்ட சமாசாரங்களின் சுழலில் சிக்கி மூச்சு முட்டத் தவிக்கிறோம்.

ஒரேயடியாக துன்பம், ஒரேயடியாக இன்பம் என்றில்லாமல்   இங்கு தங்கியிருக்கும் காலம் ரொம்பவும் சாகசமாகப் பின்னப்பட்டிருக்கிறது. அந்தப் பின்னல்களில் நாமே விரும்பி மாட்டிக் கொள்கிற மாதிரி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஈர்ப்பு  இருக்கிறது.

இந்த ஈர்ப்பு தான் இங்கைய தங்கலை சுவாரஸ்யமாக ஆக்குகிற விஷயம். இந்த சுவாரஸ்யங்களை தாமரை இலைத் தண்ணீர் மாதிரி பட்டும் படாமலும் அனுபவிப்பவர்கள் பாக்கியசாலிகள்.

இந்த ஈர்ப்பும் பெரிசாய்ப் போய் விட்டால் ஆபத்து.  ஒவ்வொரு ஈர்ப்பிலும் அதைத் தொடர்ந்து ஒரு துன்பம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.  அதனால் விஷம் கலந்த பால் போலான அந்தந்த ஈர்ப்பில் அதிகபட்ச ஈடுபாடு ஏற்பட்டு விடாமல் தடுத்துக் காப்பாற்ற அவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டிருக்கின்றன.  இதைச் சரியாகச் சொல்ல வேண்டுமானால் போய்ச் சேர்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட நம்மைத் தயார்படுத்துவதற்காக இவை அமைகின்றன.

அந்தத் தயார்படுத்துதல்களில் தலையான ஒன்று தான் இறை வழிபாடு.

மனித மனம் ஒன்றை விஞ்சி ஒன்று இருந்தால் அதை விரும்ப பழக்கப்படுத்தப்  பட்டுள்ளது.   இதுவும் சமத்காரமான ஒரு ஏற்பாடு தான். இந்த ஏற்பாடு இல்லையென்றால் ஒன்றை விட்டு இன்னொன்றுக்கு மனித மனம் நகராது.   அதனால் தான் எல்லையற்ற இன்பம் எதுவானாலும் அதைத் சுகிக்க மனிதன் அலைந்து  கொண்டிருக்கிறான்.

எல்லா சுகங்களையும் தாண்டிய எல்லையற்ற நித்ய சுகம் ஒன்றை மனிதனுக்கு அறிமுகப்படுத்தத் தான் இறை வழிபாடு வந்தது. நிலையான நித்யமான அமைதி  (eternal peace) கிடைக்க இறை வழிபாடு துணை செய்யும். இந்த நித்யமான அமைதியில் ஆழ்வது தான் இறைவழிப்பாட்டின் தலையாய அனுபவம். (ultimate goal)

நேரடியாக எல்லையற்றது இது என்று ஒன்றைச் சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.  ஒவ்வொரு சுகத்திலும் அதன் அனுபவிப்பில் அது தான் பரமாந்தமானது என்கிற மாதிரியான மயக்கமும் கலந்திருக்கிறது.

எல்லா இன்பமும் இன்பமல்ல;  எந்த இன்பத்தின் முடிவிலும் ஒரு துன்பம் முடிச்சு போடப்பட்டு தான்  இருக்கிறது..  அதே மாதிரி எல்லாத் துன்பங்களின் முடிவிலும் இன்பத்திற்கான வாசல் திறக்கிறது. இரவு-- பகல் மாதிரி இன்ப துன்பங்கள் ஒன்றின் தொடர்ச்சியாய் இன்னொன்றும் நம் வாசல் கதவைத் தட்டிக் கொண்டு தான் இருக்கிறது. இக உலக இன்பங்கள் அத்தனையும் அதனைத் துய்க்கும் நம் உணர்வுக்கு சம்பந்தப்பட்டிருப்பதால் நம்மைச் சுற்றி நடப்பனவற்றை  இப்படியாக வகுத்துக் கொள்கிறோம்.

எல்லாவற்றையும் அனுபவித்துப்  பார்த்தவனுக்குத் தான்
எல்லையற்றதையும் தீர்மானிக்க முடியும்.  அதனால் தான் துன்பம் இணைந்த எல்லா இன்பங்களையும் அனுபவித்தவன் துன்பம் கலக்காத இறை இன்பத்தை உணரும் பொழுது அதைப் பற்றிக் கொள்கிறான்.

 'செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே, சிவபெருமானே, இம்மையே உன்னைச் சிக்'கெனப் பிடித்தேன், எங்கு  எழுந்தருளுவது இனியே' என்று மாணிக்க வாசகர் கண்களில் நீர் தளும்பி உருகிச் சொன்னது இதைத்தான்.

துன்பம் நெருங்காத இறை இன்பத்தையும் துன்பமாக்கிக் கொள்கிறவர்கள் உண்டு.  எல்லாவற்றையும் சிக்கலாக்கிக் கொள்கிறவர்கள் இவர்கள்.

இவ்வுலகில் எதை நுகர்வதற்கும் பயிற்சி  தேவை.  இறை இன்பத்தை சிந்தாமல் சிதறாமல் உணர்வதற்கும் பயிற்சி தேவை.  இன்னொருவர் அனுபவப்பட்டு நாம் பெறுவதல்ல இது.  சொந்த அனுபவத்தில் விளைவது.

அதனால் தான் போக வேண்டிய அந்த இடத்தை நித்ய அமைதிக்கான இடமாக்கி  இறைவனின் வாசஸ்தலமாக ஆக்கினார்கள்.

அந்த இடத்திற்கு சொர்க்கலோகம் என்று கற்பனையில் பெயர் சூட்டினார்கள்.போக வேண்டிய இடத்திற்குப் போனவரை இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறினார் என்றார்கள்.

சொல்கிறவர்களை வைத்து சில நேரங்கள் சொல்லப்படும்  விஷயமும் தீர்மானமாகும்.  ஒரு மாற்று  ரசனை குறைந்தவர்கள்  அவ்விடத்தில் எந்நேரமும் ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் என்றும் இன்ப லாகிரியில் அமிழ்த்த தூண்டில் போட்டிருக்கிறார்கள்.  போதாக்குறைக்கு ரம்பை, ஊர்வசி, திலோத்தமை என்று அழகுப் பதுமைகளை நடமாட நடனமாட விட்டிருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் அதற்கான காரணங்கள் உண்டு.

ஒரு ஆழ்ந்த வெளிப்பாடு என்னவென்றால் எல்லாவற்றிற்கும் இது  இதனால் என்று எடுத்துக்காட்டுகிற மாதிரியான காரண காரியங்களை இறை வழிப்பாடு சார்ந்த புராணங்களில் இழைத்துக் கொடுத்திருக்கிறார்கள்..  சொல்லப் போனால் காரண காரியமில்லாமல் எந்த நிகழ்வும் நிகழ்வதில்லை என்கிற தெளிந்த உண்மையைச் சொல்ல வந்தது தான் புராணக் கதைகளே. 

களை களைந்து பயிரைக் காப்பாற்றுவது போல இறை இன்பத்தை நுகர விலக்குவனவற்றை விலக்கி மனசில் போற்றித் துதிக்க போக வேண்டிய இடத்திற்கான பாதை மனசிலேயே போடப்படும்.

பாதை என்றால் அதில் முள்ளும் கல்லும் கிடக்கும் தான்;  அதுவும் நம் நோக்கம் நித்ய அமைதி என்றால் கேட்கவே வேண்டாம்.  பாதையில் விரவிக் கிடக்கும் முள்ளையும் கல்லையும் விலக்கிச் சீர்செய்வதே  அந்த  நீண்ட பயணத்திற்கான பயிற்சியாகிப் போகும்.

இந்தப்  பயணம் சுலபமானதல்ல.  இன்னொன்று.    பயணத்திற்கான பயிற்சி, வந்ததிற்கும் போகப்போவதற்கும் இடைப்பட்ட தங்கல் இடத்தில் தான்.

பயிற்சிக்கான அட்டவணைகள் நிறைய.  பயிற்சியில் ஈடுபட்டவர்கள், . ஈடுபட்டவர்களைப் பார்த்தவர்கள்,  பார்த்தவர்கள் சொல்லக் கேட்டவர்கள் என்று  ஏகப்பட்ட அட்டவணைகள் இதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. காலத்திற்கேற்ப அட்டவணையில் காணப்படும் பயிற்சி முறைகளும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன.

பயிற்சி முறைகள் கடுமையாக இருந்த  காலத்தில் வனங்களில் இக உலகு மறந்து இறை தியானத்தில் ஈடுபடுதல் போன்ற உடலை விரும்பி வருத்திக் கொள்ளும் பயிற்சிகள் இருந்தன.  ஜடாமுடி வளர்ந்து தொங்க, கரையான் புற்று சுறறி ஆளையே மறைத்தும் நோக்கத்தில் தீவிர ஈடுபாடு பற்றிக் கொண்டதினால் மெய்வருத்தம் பாராமல் கருமமே கண்ணாக இருந்த ரிஷிகள் வாழ்ந்த நாடு இது.  


(தொடரும்)


20 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பல விஷயங்களை, பலரும் பல கோணங்களில் யோசிக்க வைக்குமாறு எழுதப்பட்டுள்ள மிக அற்புதமான பதிவு இது.


>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//களை களைந்து பயிரைக் காப்பாற்றுவது போல இறை இன்பத்தை நுகர விலக்குவனவற்றை விலக்கி மனசில் போற்றித் துதிக்க போக வேண்டிய இடத்திற்கான பாதை மனசிலேயே போடப்படும்.

பாதை என்றால் அதில் முள்ளும் கல்லும் கிடக்கும் தான்; அதுவும் நம் நோக்கம் நித்ய அமைதி என்றால் கேட்கவே வேண்டாம். பாதையில் விரவிக் கிடக்கும் முள்ளையும் கல்லையும் விலக்கிச் சீர்செய்வதே அந்த நீண்ட பயணத்திற்கான பயிற்சியாகிப் போகும்.

இந்தப் பயணம் சுலபமானதல்ல. இன்னொன்று. பயணத்திற்கான பயிற்சி, வந்ததிற்கும் போகப்போவதற்கும் இடைப்பட்ட தங்கல் இடத்தில் தான்.

பயிற்சிக்கான அட்டவணைகள் நிறைய. பயிற்சியில் ஈடுபட்டவர்கள், . ஈடுபட்டவர்களைப் பார்த்தவர்கள், பார்த்தவர்கள் சொல்லக் கேட்டவர்கள் என்று ஏகப்பட்ட அட்டவணைகள் இதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. காலத்திற்கேற்ப அட்டவணையில் காணப்படும் பயிற்சி முறைகளும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. //

ஒவ்வொன்றையும் பற்றி நன்கு அலசி ஆராய்ந்து, வெகு அழகாகவும், புரியும்படியும் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.

தொடரட்டும் இதுபோன்ற நல்ல சிந்தனைகளைத் தூண்டும் கட்டுரைகள்.

Yaathoramani.blogspot.com said...

ஆழ்ந்த சிந்தனையில் விளைந்த
அற்புதமான பதிவு
அவசியமான பதிவும் கூட
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

V Mawley said...

மிகவும் அருமையாக , ஒவ்வொரு வரியும் பலமுறை வாசித்து , மனதில் அசைபோட்டு மேலே தொடர வேண்டிய எழுதுச்சிதிரம் ..
ஆர்வமுடன் தொடர்கிறேன் ..

மாலி

G.M Balasubramaniam said...


இரு பதிவர்களுக்கு ஒரே கேள்வியை நீங்கள் வைத்தது போல் ஒரு கனமான கேள்விக்கு அழைக்கப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர் நானும் ஒருவன் . இருவரது அணுகலும் வேறு வேறு கோணத்தில் பெரும்பாலோனோர் பாதையில் நீர் . வழக்கம் போல் என் கண்ணோட்டமே வேறு என் சிந்தனைத் தளமே வித்தியாசமாய் இருக்க உங்களது ஜனரஞ்சகமானது வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

//அந்தந்த ஈர்ப்பில் அதிகபட்ச ஈடுபாடு ஏற்பட்டு விடாமல் தடுத்துக் காப்பாற்ற அவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதைச் சரியாகச் சொல்ல வேண்டுமானால் போய்ச் சேர்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட நம்மைத் தயார்படுத்துவதற்காக இவை அமைகின்றன.//

இந்தச் சிந்தனை எல்லோருக்கும் அமையாது. அந்த எல்லையற்ற நித்திய சுகம் / அமைதி எது என்பதும் எல்லோருக்கும் பிடிபட்டு விடுவதில்லை. இரவு பகல், இன்பம் துன்பம் இறப்பு பிறப்பு எல்லாம் மலை, சரிவு போல ஒன்றையொன்று தொடர்ந்தே வருகிறது.

ஜி எம் பி ஸார் பதிவைப் பார்த்துதான் நீங்கள் எழுதுகிறீர்கள் என்று முதலில் நினைத்தேன். ஜி எம் பி சார் பின்னூட்டம் பார்த்தபின்தான் தெரிகிறது. கேள்வி கேட்ட அந்தப் பெரியவர் யார் என்பதில் இரு யூகங்கள்!

ஜீவி said...

@ வை.கோ.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சார்!

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

@ வை.கோ. (2)

ஆழ்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சார்.

ஜீவி said...

@ Ramani. S.

வாசிப்பில் விளையும் உணர்வைப் பங்கிட்டுக் கொண்டமைக்கு நன்றி ரமணி சார்!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//இந்தச் சிந்தனை எல்லோருக்கும் அமையாது.//

அமைவதற்கு முயற்சிப்பது தான் இந்தத் தொடரின் நோக்கம்.

//கேள்வி கேட்ட அந்தப் பெரியவர் யார் என்பதில் இரு யூகங்கள்!//

கேள்வி கேட்ட அந்தப் பெரியவரும் தொடர்ந்து வாசித்துப் பின்னூட்டமிட்டு வருகிறார் ஸ்ரீராம்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

//நீங்கள் வைத்தது போல் ஒரு கனமான கேள்விக்கு அழைக்கப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர் நானும் ஒருவன்//

வார்த்தை வரிகளின் குழப்பம் ஸ்ரீராமையும் குழப்பி விட்டது போலும்.

// உங்களது ஜனரஞ்சகமானது//

இல்லை ஐயா! உங்களது தான் ஜன ரசிப்பில் ரஞ்சகமானது.. இதனை உங்களது அந்தப் பதிவுக்கு வந்திருக்கும் பின்னூட்ட கணக்கே சொல்கிறது, பாருங்கள்.

உங்களுக்கு என்னையும் சேர்த்து 16 பேர்கள்.

எனக்கோ உங்களையும் சேர்த்து 5 பேர்கள் தாம். இதுவா 'ஜன'ரஞ்சகமானது?.. :))


ஜீவி said...

@ V. Mawley

தன்யனானேன்.

தொடர்வதற்கு நன்றி, ஐயா!

அடுத்த பகுதியைப் பிரசுரித்து விட்டேன். தங்கள் தகவலுக்காக.

G.M Balasubramaniam said...

ஜனரஞ்சகமானது என்று நான் சொல்ல நினைத்தது வாசிப்போரின் அடிப்படையில் அல்ல. என் எழுத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்படும் வாய்ப்புகள் அதிகம் உங்களது தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் முறையில் விஸ்தாரமாக இருக்கிறது என்னும் அர்த்தத்தில்தான்

ஜீவி said...

@ ஜீஎம்பீ

ஜனரஞ்சகமானது என்று நீங்கள் சொல்லியிருந்ததைப் புரிந்து கொண்டேன், ஜீஎம்பீ ஐயா!
தவறாகப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நீங்களும் எழுதுவதில்லை. நான் சும்மா அந்த 'ஜனரஞ்சக' வார்த்தையை கி.வா.ஜ. மாதிரி இருவேறு பொருள்களில் விளையாடிப் பார்த்தேன். அவ்வளவு தான்.

தங்கள் மீள் வருகைக்கு நன்ரி. உங்கள் பதிவில் இந்த விஷயத்தை நீங்கள் முடித்து விட்டாலும், இந்தப் பகுதியில் வந்து உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். இப்பொழுது தான் அடித்தளம் போடப்பட்டிருக்கிறது

கொஞ்சம் கொஞ்சமாக பார்க்களாம். முக்கியமாக நீங்கள் அடிக்கடி நினைவு கொள்ளும் முந்தைய ஜென்மங்கள் பற்றி, வம்சாவளி நீட்சி பற்றி, இறந்தவர்கள் என்ன ஆகிறார்கள் என்பது பற்றி, உலகுக்கு வந்த--போன உயிர்கள் பற்றி பல நாட்டினவரும் கொண்டிருக்கும் அபிப்ராயங்கள் பற்றி, பிரமீடுகள் பற்றி, மாயன் உலகம் பற்றி, கட உபநிஷதம் பற்றி, கருட புராணம் பற்றி என்று இந்த தலைப்பு கைபிடித்து அழைத்துப் போகிற எல்லாவற்றைப் பற்றியும்.பார்த்து விடலாம்.

எழுதுவனவற்றை நம்பும்படி சொல்ல முயற்சிக்கிறேன். மிக்க நன்றி, ஐயா!

V Mawley said...

கொஞ்சம் கொஞ்சமாக பார்க்களாம். முக்கியமாக நீங்கள் அடிக்கடி நினைவு கொள்ளும் முந்தைய ஜென்மங்கள் பற்றி, வம்சாவளி நீட்சி பற்றி, இறந்தவர்கள் என்ன ஆகிறார்கள் என்பது பற்றி, உலகுக்கு வந்த--போன உயிர்கள் பற்றி பல நாட்டினவரும் கொண்டிருக்கும் அபிப்ராயங்கள் பற்றி, பிரமீடுகள் பற்றி, மாயன் உலகம் பற்றி, கட உபநிஷதம் பற்றி, கருட புராணம் பற்றி என்று இந்த தலைப்பு கைபிடித்து அழைத்துப் போகிற எல்லாவற்றைப் பற்றியும்.பார்த்து விடலாம்.

எழுதுவனவற்றை நம்பும்படி சொல்ல முயற்சிக்கிறேன்.

ஆஹா ! பெரிய விருந்தே தயாராகிக்கொண்டிருக்கு ...ஆர்வமுடன்
தொடர்கிறேன் ..

மாலி

ஜீவி said...

@ V. Mawley

தங்கள் ஆர்வத்திற்கு நன்றி, மாலிஜி.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய "ந.பி.யிலிருந்து எஸ்.ரா. வரை' என்ற என் புத்தகம் சம்பந்தமான சில பணிகளில் கவனம் செலுத்த நேரிட்டது. அதனால் லேசான தாமதம். இருந்தாலும் இந்தப் பகுதியை எழுதி முடிக்கிறேன்.

இந்தத் தொடரில் வாசிப்பவர்களின் விளக்கம் வேண்டியதான கேள்விகள் மேலும் மேலும் தொடரை செழுமைபடுத்தும். தங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் பகிர்ந்து கொள்ளவும் வேண்டுகிறேன். நிச்சயம் எழுதி முடிக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.

V Mawley said...

எங்கள் திருச்சி யில் BOOK FAIR நடந்து கொண்டிருக்கிறது ..மாதங்கி
"ந.பி.யிலிருந்து எஸ்.ரா. வரை' புத்தகத்தை வாங்கி வந்து , எனக்கு இன்று
பரிசளித்திருக்கிறாள் என்ற மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து
கொள்கிறேன் ...
மாலி

V Mawley said...


போகிற போக்கைப்ப்பார்தால் , இது உங்களுடைய அடுத்த புத்தகமாக அமையக்கூடும் ...பார்க்கலாம் ...
மாலி

கோமதி அரசு said...

காரண காரியமில்லாமல் எந்த நிகழ்வும் நிகழ்வதில்லை என்கிற தெளிந்த உண்மையைச் சொல்ல வந்தது தான் புராணக் கதைகளே. //

உண்மைதான். காரணம் இல்லாமல் காரியம் இல்லை.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணமாய் தான் படைக்கப்பட்டு இருக்கிறோம்.
எங்கள் உறவினர் ஒருவர் வாழ்க்கை துணையை விதிகாரி என்பார். அவருடைய விதிப்படி நடக்கத்தான் அந்த துணையை இறைவன் படைத்தார் என்பார். இன்னாருக்கு இன்னார் என்று தேவன் படைத்தார் என்கிறார்கள். ஒன்றுக்கு இறையாக ஒன்றை படைத்து இருக்கிறார். எல்லா உயிரினங்களுக்கும் படியளுக்கும் அந்த இறைவன்.

Related Posts with Thumbnails