மின் நூல்

Wednesday, August 28, 2019

மனம் உயிர் உடல்

அத்தியாயம்—4     தத்தரிகிட  தத்தரிகிட  தித்தோம்!


யற்கை ரொம்பவும் ரகசியம் பொதிந்தது. மனிதன் உயிர்ப்பெடுத்த ஆரம்ப  காலத்திலிருந்து ஒவ்வொன்றையும் தனது தேவைகளுக்காக தேடித்தேடி தான் அறிந்து கொண்டிந்திருக்கிறான்.  பிரபஞ்சம் எங்கணும் கடை விரித்திருப்பதை தவிர இன்னும் இன்னும் தேடித் தெரிந்து கொண்டால் எனக்கொன்றும் ஆட்சேபஷை இல்லை என்கிற ஹோதாவில் தான் இயற்கையும் தன் அரிய செல்வங்களை  பொத்தி வைத்திருப்பதாகத் தெரிகிறது!  

'சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா, மிளகா, கிளியே' என்ற சுக்கு சும்மா கிடைத்த காலத்தில் வாழ்ந்த பாரதிதாசனார் கேள்வி நினைவுக்கு வருகிறது.  தேடித் தெரிந்து கொண்டால் தான் அதன் அருமை மனசில் படியும் என்கிற எண்ணத்திலோ என்னவோ இந்த ரகசிய பொதித்தல் போலிருக்கிறது. நெருப்பைப் பற்றித் தெரிந்து கொண்ட ஆரம்ப காலத்திலிருந்தே தெரிந்து கொண்டதெல்லாம் வாழ்வதற்கான போராட்டமாக மனிதனுக்கு அமைந்து போயிற்று. பொழுது போக்கிற்காக என்று இல்லாமல் அவன் உயிர் வாழ்வதற்கான தேவைகளின் அடிப்படையில் தான் ஒவ்வொரு அறிதலும் இருந்திருக்கிறது..  

தேவைகளின் அடிப்படையில் அறிந்து கொள்ளல்,  அறிந்து கொள்வதின் அடிப்படையில் தேவைகளின் தொடர் நீட்சி, அதற்கான தொடர் தேடல்கள் என்று இயற்கையின்  ரகசியம் அறிதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  இந்த பிரபஞ்சம் உள்ளவரை இந்தத் தொடரல் இருந்து கொண்டே தானிருக்கும் என்கிற அளவில் இயற்கையில் பொதிந்துள்ள சக்தியும் அதன் பொத்தி வைப்பு ரகசியமும் மனித யத்தனத்தை மீறியதாக இருக்கிறது.. இயற்கைக்கும் மனிதனுக்குமான இந்த கண்ணாமூச்சி விளையாட்டும் மனித குலத்தின் மீதான இயற்கையின் ரட்சிப்புமே மனிதனுக்கும் இயற்கைக்குமான என்றும் நிலைபெற்றிருக்கும் பந்தமாகத் தெரிகிறது.

இயற்கையின் மாளாத புதிர் அவனை மிரட்டியிருக்கிறது;  வற்றாத தன் செல்வங்களை வாரி வழங்கி சந்தோஷப்படுத்தியிருக்கிறது. இரகசியங்களின் புதையலாய் பிரமிப்பேற்படுத்தி அவனைத் திகைக்க வைத்திருக்கிறது. ஆதரவாய் இருந்து ஆசிர்வதித்திருக்கிறது. தான் உயிர் வாழ்தலே, இயற்கையின் உயிர்ப்பின்  ஒடுங்கலில் தான் என்று மனிதனுக்குப் புரிந்ததும் கைதூக்கி வணஙகித் தொழும் மரியாதைக்குரியதாக அந்த இயற்கை அவன் மனசில் சிம்மாசனமிட்டது.

காற்று தெய்வம்; கடல் தெய்வம், ஞாயிறு தெய்வம்;  நட்சத்திரங்களும் தெய்வம்; நீக்கமற நிறைந்துள்ள நீள் விசும்பும் தெய்வம் என்னும் ஞானம் கிட்டியது.  மருண்டதுவும், மலைக்க வைத்ததுவும், மனதிற்கிசைந்ததுவும் பிர்மாண்ட சக்தியை உள்ளடக்கிக் கொண்டவை என்பதும் அறியலாயிற்று. .  அந்த சக்தியின் இயக்கம் இல்லையெனில் தான் இல்லை என்பது தெளிவான  பொழுது மருண்டதற்கும், மலைக்க வைத்ததற்கும், மனதிற்கிசைந்ததற்கும் மனதில் படிந்த உருவம் கொடுத்து மனிதன் தன் நலனுக்காக,, தன் சந்தோஷத்திற்காக, நீண்ட வாழ்விற்காக  நன்றி செலுத்தலுக்காக அந்த பிர்மாண்ட சக்தியை வணங்கத் தலைப்பட்டான்.  . 

ஞாயிறு, காற்று, கடல், ஆகாயம் எல்லாம் பாரதியின் உணர்வில் தைத்து தெய்வத் தோற்றம் கொண்டதெல்லாம் நமக்குத் தெரியும்.  காக்கைச் சிறகினிலே நந்தலாலாவைக் கண்டு களிதவரில்லையா, அவர்?..

காற்றென்று சக்தியைக் கூறுகின்றோம்
ஏற்றுகிற சக்தி; புடைக்கின்ற சக்தி; மோதுகின்ற சக்தி, சுழற்றுவது, ஊதுவது
சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று.
எல்லா தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம்
சக்தியின் கலைகளையே தெய்வங்க ளென்கிறோம்
காற்று சக்தி குமாரன்
அவனை வழிபடுகின்றோம்.

--- மஹாகவி

மனிதனிலிருந்து ஆழ்கடலின் பாசிப் பாக்டீரியா வரை அத்தனையும் இயற்கையின் கூறுகள் தாம். மலைகள் எப்படி ஆற்றுமணலாய் ஆனது என்பதற்கான நிகழ்ச்சிப் போக்கு நமக்குத் தெரியும். ஆதிகால உயிரணு தோற்றதிலிருந்து மனிதனின் வளர்ச்சிப்போக்கு கொண்ட வரலாறும் அது போலவே தான். மணல் தேய்வுக்கதை என்றால் மனிதனது வளர்ச்சிக்  கதை.  மனித குலத்தின் இதற்கு மேலான வளர்ச்சியும் இன்றைய வளர்ச்சிப் போக்கிலேயே புதைந்திருந்து இதற்கு மேம்பட்டதாய் அல்லது இன்னொன்றாய் வடிவு கொள்ளும் என்பதும் வளர்ச்சிப்போக்கின் விஞ்ஞானமாகும்.

இயற்கையின் இன்னொரு நீட்சியே மனிதனா, அல்லது இயற்கையின் வளர்ச்சிக் கூறுகளின் படிமானம் கொண்ட வடிவமே மனிதனா என்பது சுவாரஸ்யமான ஒரு கேள்வி.  இந்தக் கேள்விக்கான பதிலை சுலபப்படுத்த  மனிதனில் இயற்கையின் ஆளுகையை ஆராய வேண்டும்.

வெளிக்காற்றே மூச்சாய் செயல்படுகிறது, மூச்சுக்காற்று மனிதனின் உயிர்ப்புக்கு ஆதாரமானது என்பது ஏழாம் வகுப்பு சிறுவனுக்கும் அத்துப்படியான விஷயம்.  ஆகையால் வெளிப்படையான மேலோட்டமாக அல்லாது கொஞ்சம் உள்நோக்கி மனிதனைப் பார்ப்போம். மனித உடற்கூறு அமைப்புகளில் ஒவ்வொன்றின் செயல்பாட்டுக்கும் இணை இன்னொன்றில்லை என்பது அடிப்படை அம்சம்... இருந்தும் மேலிருந்து கீழாகவோ அன்றி கீழிருந்து மேலாகவோ எங்கேயிருந்தாவது ஆரம்பிக்க வேண்டுமல்லவா?  தலையிலிருந்து பாதம் வரை என்பது மரபாகையால் நாம் சிரசிலிருந்தே ஆரம்பிப்போம்.

அதற்கு முன் உங்கள் யோசனைகளைக் கிளர்த்த ஒரு கவிதை:

ஒரு துளி தான்.
அதன் பரிணாமம்?
கபாலம், கைகள்
பார்க்கக் கண்கள்
நடக்கக் கால்கள்
சுலபமாக நீட்டி மடக்க
பசை சுரக்கும் மூட்டுகள்
உள்ளே சிறகடிக்கும்
உயிர்ப்புறா!
மூக்கு, காதுகள்
நாக்கு நரம்புகள்
இதயம், தண்டுவடம்
இரைப்பை, நுரையீரல்
கல்லீரல், மண்ணீரல்
சிறுகுடல், பெருங்குடல்
உள்ளே போக வாய்; போனது
வெளியே வரவும் வழி
இரத்த சுத்திகரிப்பு
எட்டு எலும்பு மணிக்கட்டிற்கு
ஏழு குதிகாலுக்கு
உள்ளங்கைக்கு ஐந்து
உள்ளங்காலுக்கும் அதுவே!
பங்கீட்டில் யாருக்கும்
பேதமில்லை
கணக்கில் பிசகில்லை
ம்?..
எப்படி இந்த  சித்து வேலை
சாத்தியமாயிற்று?..

                   --யாரோ

கவிதையை யாத்தது யார் என்பது முக்கியமல்ல; கவிதையின் அடிநாதமான 'எப்படி சாத்தியமாயிற்று' என்பது  பற்றி உங்கள் சிந்தனை வலை பின்னட்டும்.

மனதைப் பற்றிய தெளிவிற்காக மனிதப் பிறப்பின் தலையிலிருந்து அடுத்த பகுதியில் தொடர்வோம்.


(வளரும்)11 comments:

வெங்கட் நாகராஜ் said...

எப்படி சாத்தியமாயிற்று? சிந்தனையைத் தூண்டும் கேள்வி.....

மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

ஸ்ரீராம். said...

தன்னைமீறிய சக்திகளைமனிதன் ஆரம்பகாலங்களில் தெய்வமாக வழிபட தலைப்பட்டான்.

விஞ்ஞானம் ஒவ்வொன்றாக எது எது என்ன என்ன என்று சொல்லி வரும்போது புரிந்துகொண்டாலும் ஆதி காரணங்களை மட்டும் மறுக்கக்கூடாது விவாதிக்கக் கூடாது என்று கொள்கை வகுத்துக் கொண்டான்.

ஸ்ரீராம். said...

இந்தப் பங்கீடுகளால் உருவானதும் சரியாயிற்றா, சரியாய் ஏற்கெனவே இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டதா? அதாவது விதிகளால் ஆனதா உலகம், அல்லது ஆனதும் விதிகள் உருவானதா?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கவிதையைக் கண்டதும் பட்டினத்தார் பாடல்கள் நினைவிற்கு வந்தன.

G.M Balasubramaniam said...

தொடரட்டும் உங்கள் ஆய்வு இதே போன்றசெய்திகளை நீங்கள் உங்கள்பாணியில் விவரிப்படு ரசிக்கிறேன்

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜன்

தொடர்ந்து வருவதற்கு நன்றி, வெங்கட்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

//ஆதி காரணங்களை மட்டும் மறுக்கக்கூடாது விவாதிக்கக் கூடாது என்று கொள்கை வகுத்துக் கொண்டான்.//

அப்படியா நினைக்கிறீர்கள்?..

அந்தந்த வளர்ச்சி அந்தந்த காலகட்டத்தின் பெருமை என்று கொள்ளலே தகும். இன்றைய சந்திராயன் வளர்ச்சி அதற்கடுத்த காலகட்டத்தில் நிலவில் வாக்கிங் போவதாக இருக்கும்.

பழமையின் எச்சங்களின் தொடர்ச்சி தான் இன்றைய, நாளைய பூத்துக் குலுங்குதல் என்று கொள்ளலே தகும்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

இருப்பதின் ஓர்மையைத் தான் தெரிந்து கொண்டு வியக்கிறோம்.

விதிகளால் ஆனது உலகம் என்று கொள்வதை விட நம் செளகரியங்களுக்கு விதிகளை ஏற்படுத்தியிருக்கிறோம், புதுப்பித்திருக்கிறோம் என்று கருதுகிறேன்.

மஹாபாரத காலத்திலும் நேரத்தைக் கணக்கிட்டிருக்கிறார்கள், இல்லையா?.. சூரியன்-- சந்திரர் திசை கொண்டு. யாமம் என்பது கணக்கீடு அளவையாக இருந்தது என்றால்
இன்று மணி--நிமிடங்கள். காலண்டர்கள் இந்த யுகத்தின் அற்புத கண்டுபிடிப்பு.
வழக்கத்தில் இருந்த கால, நேர அளவைகளை வேறு விதத்த்தில் புதுப்பித்து புழக்கத்தில் இருக்கிறது என்றே கொள்ள வேண்டும். கி.மு. 45 ஜூலியஸ் சீசர் காலத்து ஜூலியன் காலண்டரே பல்வேறு மாற்றங்களைக் கொண்டு இன்றைய காலண்டராக பரிமாணம் கொண்டிருக்கிறது. மாதங்களுக்குப் பெயரிட்டிருப்பது கூட ரோம, இலத்தின் மொழிச் சொற்களின் திரிபுகளே.

மாற்றங்கள் அத்தனையும் ஆதியாக கொண்டிருந்த ஒன்றின் வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட
மாற்றங்கள் தாம் என்று கொள்ள வேண்டும்.

நேற்றைய--திலிருந்து கிளர்ந்து ஒன்று இன்றைய என்றாகி நாளைய ஒன்றை நோக்கி நகர்வதே சரித்திரத்தின் பக்கங்கள் ஆகியிருக்கின்றன.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam

அப்படியா, ஐயா?..

ஹி..ஹி.. அந்தக் கவிதையை எழுதியது நான் தான். :))

ஜீவி said...

@ GMB

நன்றி, ஐயா. நீங்கள் வாசித்து வருவது குறித்து மகிழ்ச்சி. தொடர்கிறேன்.

வே.நடனசபாபதி said...

சுக துக்கங்களை அறிய காரணமாயிருப்பது மனம் என்று மெய்யறிவியலின் ஒரு பிரிவான தர்க்க சாஸ்திரம் சொல்வதாக சொல்வார்கள். சிந்தனை உதிக்கும் மூளைக்கு பாதிப்பு ஏற்படும்போது மனம் பாதிப்பு அடைவதாகவும் எனவே மூளைக்கும் மனதிற்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தாங்கள் தலையிலிருந்து அடுத்த பதிவை தொடர்வதாக எழுதியிருப்பதால் இதற்கு விடை கிடைக்கும் என எண்ணுகிறேன்.

நீங்கள் குறிப்பிட்டிடிருந்த கவிதையைப் படித்த முனைவர் B ஜம்புலிங்கம் அவர்கள், பட்டினத்தார் பாடல்கள் நினைவிற்கு வந்ததாக குறிப்பிட்டது சரிதான் என நினைக்கிறேன் தங்களின் பதிலைப் பார்த்ததும். ஏனெனில் நீங்களும் ஒரு பட்டினத்தார்தான் சென்னையில் இருப்பதால்.!

Related Posts with Thumbnails