மின் நூல்

Tuesday, August 6, 2019

அழகிய தமிழ் மொழி இது!

                                                                28


துரையில் நடந்த நிகழ்வுகள் பற்றிக் கேட்ட செங்குட்டுவனுக்கு மாடலன் விவரமாக தான் அறிந்த  செய்திகளைக்  கூறுவானான்:

"ஒரு பொற்கொல்லன் செய்த தவறு தம் குடிப்பிறப்பிற்கே பெரும் களங்கமாக அமைத்தது என்று  நாணிக் குறுகிய  பொற்கொல்லர்  ஈரைஞ்நூற்றுவர்  (2x500= 1000)  ஒரு பகற் பொழுதின் முடிவான மாலை துவங்கும் நேரத்தில் தம் தலைகளைத் தாமே கொய்து கொண்டு பத்தினி கடவுளுக்கு  உயிர்ப்பலி கொடுத்தனர்.  இச்செயல் மதுரை மூதூர் முழுவதும் அவர் தம் புகழாகப் பரவியது.   இந்த நேரத்தில் கொற்கையிலிருந்து ஆட்சி பரிபாலனம் செய்த வெற்றிவேற் செழியன்,  மன்னன் இல்லாது தவிக்கும் மதுரை மாநகர் மக்களைக் காத்து வழிநடத்துவது தனக்கான உரிமை என்று உறுதி பூண்டு
மதுரை வந்து முடிசூட்டிக் கொள்கிறான்.

"கொற்கையிலிருந்த வெற்றிவேல் செழியன்                           
பொற்றொழிற் கொல்லர்  ஈறைஞ்நூற்றுவர்
ஒரு முலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒரு பகல் எல்லை உயிர்ப்பலி யூட்டி..."

--- என்பது  தொடர்ச் செய்யுளாய் வரும் வஞ்சிக் காண்டத்து வரிகள்.

பொற்கொல்லர் பலி கொண்டது பற்றி  தனியாக சிலப்பதிகார உரைபெறு கட்டுரை ஒன்றும் உண்டு.  அது இது:

"அன்று தொட்டு பாண்டியனாடு  மழை வறங்
கூர்ந்து வறுமையெய்தி  வெப்பு நோயும் குருவும்
தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன்
நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக்
கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய
நாடு  மலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கியது.."   

அன்றையிலிருந்து பாண்டிய நாட்டில் மழை பெய்வது பொய்த்து  வெப்பத்தால் வரும் நோயும், குருவும் தொடர  கொற்கையிலிருந்த மன்னன் வெற்றி வேற் செழியன் கண்ணகி நங்கைக்கு  ஆயிரம் பொற்கொல்லரை பலி கொடுத்து சாந்தி செய்ய  மழை பொழிந்து நாட்டு மக்களை பீடித்த நோயும் அதனால் ஏற்பட்ட துன்பங்களும் நீங்கின..  என்று பொருள் கொள்ளலாம்.

பாடி வீட்டில்  பகல் பொழுது கழிந்து மாலை வந்தது.   அந்திச் செவ்வானத்திலே வெண்பிறை தோன்றியது.  பாடி வீட்டில் தங்கியிருந்த செங்குட்டுவன் யோசனையுடன் அந்தப் பிறையைக் கூர்ந்து நோக்க குறிப்பறிந்த காலக்கணிதன் "மன்ன! நீவிர் வஞ்சி மாநகர் நீங்கி வந்து  எண் நான்கு (8x4=32)  மாதங்கள் கழிந்திருக்கின்றன" என்கிறான்.   

32  மாதங்கள் என்றால்  இரண்டு வருடமும், எட்டு மாதங்களும்-- ஏறத்தாழ இரண்டே முக்கால் வருடம்!  அத்தனை காலம்  தலைநகர் வஞ்சி மா நகர் நீங்கி ஒரு அரசன் வட தேசத்திலேயே தங்கி இருந்திருப்பானா என்ற ஐயமும் ஏற்படுகிறது...

இதற்கான சிலப்பதிகார வரிகள்:

"அந்திச் செக்கர் வெண்பிறை தோன்றப்
பிறையேர் வண்ணம் பெருந்தகை நோக்க
இறையோன் செவ்வியிற் கணியெழுந் துரைப்போன்
எண் நான்கு  மதியம் வஞ்சி நீங்கியது
மண்ணாள் வேந்தே வாழ்கென் றேத்த....

இந்த வரிகளில்,  எண்  நான்கு மதியம்  என்று வரும் இடத்தில் 'மதியம்' என்ற வார்த்தைக்கு  மாதம்  என்றே  பேராசிரியர்கள்,  முனைவர்கள் எல்லாம் பொருள் கூறுகின்றனர்..   நம் வாசக அன்பர்கள்  என்ன நினைக்கிறார்கள் என்பதை பதிய வேண்டுகிறேன்.

இந்த இடத்தில் செங்குட்டுவனின் ஒரு உலா காட்சி வருகிறது.   கொடிகள் கட்டிய  தேர்கள் வரிசை கட்டி நிற்கும் வீதியில்  மெதுவாக  நடை பயில்கிறான்   மாமன்னன்.   சிறிதும் பெரிதுமான மலை வரிசை போன்று தோற்றம் கொடுக்கும் இல்லங்களைத் தாண்டி ஓவியர் கைவண்ணம் பதிந்த ஓவிய விதனத்தின் கீழ்  அமைந்திருந்த  செம்பொன்னாலான ஒரு இருக்கையில் கோமகன் ஒரு கால் நீட்டி ஒரு கால் மடக்கி அமர்கிறான்.

ஒரு நீண்ட யோசனைக்குப் பின் "மாடலனை அழைத்து வருக.." என்று  சற்றுத் தள்ளி நின்றிருந்த   வீரர்க்கு ஆணையிடுகிறான்.

மாடலன் வந்ததும்  சோழ நாட்டின் அப்பொழுதிய நிலை என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலில்,  "இளவரசர் ஒன்பது மன்னரும் இறந்ததன் பின்னர் சோழ நாட்டு  கொற்றமும் வளமும் தீதின்றி உளவோ?" என்று வினா தொடுக்கிறான்.

செங்குட்டுவனின் மைத்துனன்  கிள்ளிவளவன் என்ற சோழ மன்னன்.  இவனை மற்ற வளவர்களோடு வித்தியாசம் காட்ட வேண்டி பெருங்கிள்ளி என்றும் பெருநற்கிள்ளி என்றும் சோழ வரலாற்றில் பதியப் பட்டிருக்கிறான்.  இந்தக் கிள்ளி வளவனுக்கு  தாயத்தார்  நாட்டில் கலகமுண்டாக்கி  இவன் ஆட்சிக்கு அவலமுண்டாக்க பல்வேறு சூழ்ச்சிகள் செய்கின்றனர்.  தனது மைத்துனன் ஆகையால் அவன் நிலை பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் "சோழ நாடும் கொற்றமும் எப்படியிருக்கிறது மாடலன்?" என்று மாடலனிடம் கேட்கிறான் செங்குட்டுவன்.

"மன்னா!  சோழ வேந்தர் பழம் பெருமை பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?..      ** குறு குறுவென்று நடை பயிலும் இயல்புடைய   புறாவின் நெடுந்துயர் தீரவும் அந்தப் புறாவைத் துறத்தி வந்த பருந்தின் பசித் துன்பம் நீங்கவும்  தன் உடல்   அரிந்து தன் தசையை  தானே தராசுத் தட்டில்   இட்டவனின் வழிவழி வந்த அறச் செல்வோர் அரசாளும் நாட்டிற்கு தீது நேரிடுமோ?..  மாமழை பொய்த்திடினும் காவிரி தன் நீர் வளப்பத்தால் காத்திடும் சோழ வள நாட்டின் மன்னனுக்கு எந்த தீதும் இல்லை மன்னவா!.." என்று நற்சொல்லில் கிள்ளி வளவின் நலன் பற்றி மாடலன் சொல்கிறான்.

அது கேட்ட செங்குட்டுவன் மனம் மகிழ்ந்து,  "மாடல் மறையோனே!  இதைக் கொள்வாயாக!.." என்று  தன் எடைக்கு எடையாகிய ஐம்பது  துலாம் பொற்கட்டியை அளித்தான்.

பின்பு தன் நண்பர்  ஆரிய  மன்னர்  ஐயிரு பதின்மரை (5X2X10=100)  நூற்றுவர் கன்னரை அன்புடன் உபசரித்து, அவர் தம் நாட்டிற்கு மகிழ்வொடு செல்லவும் வழி வகை செய்தான்.

தாடி வேடம் பூண்டு தப்பிப் பிழைக்க நினைத்தோடி சிறைப்பட்ட ஆரிய வம்ச அரச குமாரர்கள்,  அழகிய கொங்கை--பருத்த தோள்கள்--தளர் நடை--துடி இடை கொண்ட ஆரிய பேடிகள்,  அருந்தமிழ் ஆற்றல் அறியாது கொக்கரித்த கனக விசயர்--  இவர்கள் கூட்டத்தை  கஞ்சக முதல்வர் ஆயிரவரிடம் ஒப்படைத்து  சோழ, பாண்டிய வேந்தரகளுக்கு இவர்களைக் காட்டிக் கொணர்க.. " என்று கட்டளையிட்டான்.                       

இரவு  நெருங்கியது.   வற்றா கங்கை நதியின் பரந்து பாயும் நீர் பரப்பைச் சுற்றிலுமுள்ள  வயல்  வெளிகளில் மண்டி  மலர்ந்திருந்த பச்சை இலை தாமரைகள் கவர்ந்திழுத்த வண்டினத்தின் யாழ் மீட்டல் ரீங்காரத்தில் பாடி வீட்டில் நல்ல உறக்கம் கொண்டான்  செங்குட்டுவன்.  விரிந்த கதிர் பரப்பி
இள ஞாயிறு எழுந்தது.   பையப்பைய மேலோங்கி   கீழ்த்திசை மலை உச்சி மீது    ஆரோகணித்தது.   குடதிசையாளும் கொற்ற வேந்தன்,  வடதிசை சென்று ஆரிய மன்னரைப் புறங்கொண்டு தும்பைப்பூ பொருந்திய வாகை மாலை  சூடி  தென் திசை நோக்கி தலைநகர் வஞ்சிக்குத்  திரும்பலானான்.


===================================================================
**  'கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத்
      தன் அகம் புக்க குறுநடைப் புறவின்
      தபுதி அஞ்சிச்  சீரை புக்க
      வரையா ஈகை உரவோன்......' 

-- என்று சோழன்  சிபி சக்கரவர்த்தியின் வரலாற்றை
புலவர் தாமப்பல் கண்ணனார்  புறநானூறு - 43 -ம் பாடலில் பதிகிறார்.

(வளரும்)

11 comments:

ஸ்ரீராம். said...

மதியம் என்பதை ஒரு நாள் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தமிழறிஞர்களை மீறியா நாம் சொல்லி விடப்போகிறோம்?!!

ஸ்ரீராம். said...

ஒரு கால் நீட்டி, ஒரு கால் மடக்கி... ஒருகால் செம்பொன்னாலான இருக்கை என்றால் பெஞ்ச் போல நீண்டிருக்குமோ... !

ஸ்ரீராம். said...

//மாமழை பொய்த்திடினும் காவிரி தன் நீர் வளப்பத்தால்//

ஹூ......ம்... (பெருமூச்சு)

ஸ்ரீராம். said...

ஐயிரு பதின்மர்... எண் நான்கு மாதங்கள்.... ஈரைஞ்நூற்றுவர்...

புதிராய்த்தான் கணக்கு சொல்வார்களோ... விடையாய்ச் சொல்ல மாட்டார்களோ!

Thulasidharan V Thillaiakathu said...

எண் நான்கு மதியம் என்று வரும் இடத்தில் 'மதியம்' என்ற வார்த்தைக்கு //

நான் அறிந்த வகையில் மதியம் என்பது நிலவைக் குறிக்கிறது.

மாசில் வீணையும் மாலைமதியமும்..என்ற பாடலை நான் ராகத்துடன் பாடக் கற்ற போது..இதில் மாலை மதியமும் - மாலை நேரத்தில் தோன்றும் நிலவு என்றுதான் அறிந்தேன். மதி என்றால் நிலவு என்ற பொருளில்.

மதியம் என்றால் மாதம் என்பது இப்போதுதான் அறிகிறேன் நீங்கள் சொல்லியிருக்கும் பொருளில் இருந்து.

மதியம் என்று நாம் நடைமுறையில் பொருள் கொள்வது மத்தியான நேரத்தை. ஆனால் அதுவே வடமொழியில் இருந்து வந்த சொல் என்றும் மத்தியானம் என்பதுதான் மதியம் என்றாகி இருப்பதாக யாரோ சொல்லிக் கேட்டேன்.

பாடல்களும் பொருளும் தகவல்களும் சிறப்பான விளக்கம்.


கீதா

ஜீவி said...

@ ஸ்ரீராம்

சுஜாதாவின் தீவிர வாசகராய் இருந்தால் போதும்; நம்மூர் தமிழறிஞர்களை ஓரம் கட்டி மிகச் சிறப்பாகத் தமிழைக் கையாளலாம். :)





ஜீவி said...

@ ஸ்ரீராம்

அரசன் அமரும் அரியணையை நினைத்துப் பாருங்கள். கூடவே நடிகர் திலகத்தையும்.
கர்ணன் போன்ற அவரது படங்களையும்.

அமர்ந்த வாக்கிலேயே வலக்கால் லேசாக மடக்கி, இடக்காலை லேசாக நீட்டி -- இப்போ கற்பனையில் அந்தக் காட்சி வந்து விட்டதா?.. அவ்வளவு தான்!

இந்த வரிகளை எழுதும் பொழுது அவர் தான் என் நினைவில் வந்தார்! அப்படியே எழுதி விட்டேன்!..


ஜீவி said...

@ ஸ்ரீராம் (4)

ஈரா றாண்டு அகவையாள்! பன்னிரண்டு வயசு அவளுக்கு. . மண்மேடையில் இளங்கோ கண்ணகியை அப்படித் தான் அறிமுகப்படுத் துகிறார்!..

கோவலனை?.. ஈரெட்டாண்டு அகவையான்! பதினாறு வயசுக் காளை!

மதியம் விஷயத்திற்கு வருவோம்:

அந்தி செக்கர் வெண்பிறை தோன்ற
பிறையேர் வண்ணம் பெருந்தகை நோக்க
இறையோன் செவ்வியிற் கணியெழுந் துரைப்போன்
எண் நாங்கு மதியம் வஞ்சி நீங்கியது
மண்ணாள் வேந்தே வாழ்கென் றேத்த....

எதுகை எண் நான்கு என்பதால்
மண்ணாள் வேந்தே..

ஜீவி said...

@ தி. கீதா

//மதியம் என்றால் மாதம் என்பது இப்போதுதான் அறிகிறேன் நீங்கள் சொல்லியிருக்கும் பொருளில் இருந்து. //

விஷயமே அது தான்!

வே.நடனசபாபதி said...

// நான்கு மதியம் என்று வரும் இடத்தில் 'மதியம்' என்ற வார்த்தைக்கு மாதம் என்றே பேராசிரியர்கள், முனைவர்கள் எல்லாம் பொருள் கூறுகின்றனர்.. நம் வாசக அன்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பதிய வேண்டுகிறேன்.//

மதியம் என்பதற்கு நிலவு, முழு நிலவு, நிறைமதி,முழுமதி , மாதம் மற்றும் மதிப்பு என்றும் பொருள். இங்கே தங்கிய நாட்களைக் குறிப்பதால் அது மாதத்தையே குறிக்கிறது.

// மாமழை பொய்த்திடினும் காவிரி தன் நீர் வளப்பத்தால் காத்திடும் சோழ வள நாட்டின் மன்னனுக்கு எந்த தீதும் இல்லை மன்னவா!//

கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. அந்த நாட்கள் இனி கற்பனையில் தான் வருமோ?

சிலப்பதிகார பாடல்களை அதற்கான பொருளுடன் தந்து இரசிக்க வைத்தமைக்கு நன்றி!

ஜீவி said...

@ வே. நடன சபாபதி


//மதியம் என்பதற்கு நிலவு, முழு நிலவு, நிறைமதி,முழுமதி , மாதம் மற்றும் மதிப்பு என்றும் பொருள். //

மதியம் என்பதற்கு மாதம் என்று பொருள். சரி. ஏதாவது செய்யுள் எடுத்துக்காட்டுகளின் மூலம் இதை நிறுவ முயன்றேன். சரியான எடுத்துக் காட்டு கிடைக்கவில்லை. அதான் பிரச்னையே.

தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவதில் மிக்க மகிழ்ச்சி சார்.

Related Posts with Thumbnails