மின் நூல்

Monday, August 26, 2019

மனம் உயிர் உடல்

                                                                             2



ம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்வது போலவான தொடர் என்று இந்தத் தொடரின் ஆரம்பம் குறித்துச் சொல்லி மேலும்  தொடர்வதற்கு விருப்பம் தெரிவிக்கிறார் வெங்கட் நாகராஜ்.

வல்லி சிம்ஹனோ இந்தத் தொடர் தீவிரத்தை நன்கு புரிந்தவராய் இருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் ஆதார சுருதி மனம் தான் என்று அடிக்கோடிட்டுச் சொல்கிறார்.  மனம் ஆசைப்படுகிறது;  வாய்  பேசுகிறது;  உடல் அதை  நிறைவேற்றுகிறது.  ஆசைப்பட்ட பொருள் அழிந்தோலோ மனதிற்குத் தான் மிகுந்த கலக்கமாகிப் போய் கண்களில் கண்ணீர் ததும்புகிறது.  மனத்திற்கு ஓய்வே கிடையாது போலிருக்கிறது;  உயிர் அடங்கினால் தான் மனமும் அடங்குமோ, வேறு  ஒரு உயிரில் ஒடுங்குமோ என்று  கவித்துவமாய்  வியந்து மனம் மிகப் பெரிய சமுத்திரம் என்று அதன் எல்லையற்ற பரப்பையும் ஆழத்தையும் கண்டு பிரமிக்கிறார்.

மனம், உயிர் என்பதெல்லாம் தெளிவில்லாத விஷயங்கள்.  அதனால் தான் அதைப் பற்றியெல்லாம் நம் இஷ்டப்படி வளைத்து எதுவும் சொல்ல முடிகிறது என்பது ஜிஎம்பீ சாரின் தீர்மானமான முடிவு.    ஜிஎம்பீ சாருக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட் இது என்று எனக்குத் தெரியும்.  அதனால் அந்த தெளிவில்லாத விஷயங்களில் ஒரு தெளிவேற்பட இந்தத் தொடரில் முயற்சிப்போம் என்று தோன்றுகிறது. 

மனம் நம் நண்பன்;  அதே நேரத்தில் அதுவே நம் எதிரியும் கூட  என்று இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் பாலம் போடுகிறார் ஸ்ரீராம்.  மனம் என்பது தான் உயிரா, ஆத்மாவா என்று ஏகப்பட்ட சந்தேகங்கள் அவருக்கு.  சென்ற பிறவி நினைவுகளையும் இந்தப் பிறவிக்கு சுமந்து கொண்டு வந்து சேர்ப்பது  மனம் தானோ என்று கொக்கியும் போடுகிறார்.    'சென்ற பிறவிகள் நினைவு என்றெல்லாம் படிக்கிறோம் என்றால்'...  என்று மிக ஜாக்கிரதையாக வார்த்தைகளைப்  போடுகிறார்.  ஆக 'போன பிறவி என்பது' படிக்கிற அளவில் தான் இருக்கிறது என்பது ஒரு முக்கியமான விஷயம்.   வாசிக்கிற எதுவும் விஞ்ஞான பூர்வமாக  தெளிவாக இருக்கிறது  என்கிற அடிப்படையில் இந்தத் தொடரை அமைக்க நான் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதால் இப்போதைக்கு சென்ற பிறவி, அடுத்த பிறவி என்ற விஷயங்களை வாசித்துத் தெரிந்து கொண்ட அளவில் கடந்து விடலாம்.  சென்ற பிறவி பற்றி தெரிந்து கொண்ட அளவில் எனக்கு அனுபவமுண்டு என்று யாராவது சொன்னால் அது பற்றி பார்த்துக் கொள்ளலாம்.  அது வரைக்கும் அதை டச் பண்ண வேண்டாம். சரியா?

புதிதாக இந்தத் தளத்திற்கு வந்து ஆர்வத்துடன் பின்னூட்டமும் போட்டிருக்கிற அன்பர் ராமனை வரவேற்கிறேன்.  தொடர்ந்து அவர் இந்தத் தொடரை வாசித்து தன் எண்ணங்களைச் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.     மனமும் இதயமும் ஒன்று என்பது  திரு. ராமன் அவர்களின் கருத்து.   இதய பூர்வமாக, மனப்பூர்வமாக என்று நாம் சொல்வதெல்லாம் ஒரே அர்த்தம் கொடுக்கும் வார்த்தைகளே என்கிறார்.   நினைவுகளின் அடிப்படையில் எண்ணம் என்பது ஏற்பட்டு அதுவே மனதின் இயக்கமாக இருக்கிறது என்று சொல்கிறார்.  மூளை தான் நினைவுகளின் இருப்பிடமாக இருக்கிறது என்கிறார்.  விருப்பு, வெறுப்பு போன்றவை நினைவுகளாகப் படிந்து அவையே எண்ணத்தின்  ஆக்கமாக இருக்கிறது என்பது அவரது கருத்து.

'வாழ்க, வளமுடன்'  என்று அனைவரையும் வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்ட கோமதி  அரசு,  வேதாத்திரி  மகரிஷி அவர்களின் பாடல் ஒன்றை  எடுத்தாளுகிறார்.   இந்தப் பாடலில்  மனம்,  அறிவு என்று நமக்குத் தெரிந்த இந்த இரண்டோடு  ஆதியென்று மூன்றாவதாக ஒன்றைக் குறிப்பிடுகிறார் மகரிஷி.   இந்த மூன்றும் ஒன்றே என்பது   மகரிஷி  அவர்களின்  கண்டுபிடிப்பு.   பிறவியின் நோக்கமே மனத்தின்  இந்த   ஆதிநிலையைக் கண்டறிந்து அதனைத் தனக்காக்கிக் கொள்வது தான் என்கிறார்.   அது என்ன ஆதி நிலை? அதை எப்படி நமத்தாக்கிக் கொள்வது எனபதனை இந்தப்  பதிவுக்கான பின்னூட்டத்தில்  கோமதி அரசு  அவர்களை விளக்கிச் சொல்ல கேட்டுக் கொள்கிறேன்.

அன்பர் நடன சபாபதி அவர்களோ  மனம் என்பதற்கு  ஒரு பொருள் விளக்கமே கொடுக்கிறார்.   எண்ணங்களின் வடிவமே மனம் என்பது நமது சபாபதி அவர்களின் கருத்து.  ராமன் அவர்கள் எண்ணங்களின் இயக்கம் தான் மனம் என்று  சொல்வதற்கும் சபாபதி அவர்களின் எண்ணங்களின் வடிவமே மனம் என்பதும்  ஒன்றே தானா இல்லை வேறுபாடு கொண்டவையா என்பதை அந்த அன்பர்கள் தெளிவு படுத்திச் சொல்ல வேண்டுகிறேன்.

மனம், உயிர், உடல்  இவை பற்றி  வாசக நண்பர்களோடு கலந்த ஒரு முயற்சியாய் இப்படி ஒரு தொடரை எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

சரி வர தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பொதுவாகவே எல்லோருக்கும் உண்டு.   இந்த மாதிரி  விஷயங்களில் பலருக்கு  வெவ்வேறான புரிதல்கள் இருப்பது இயல்பு.   அதான் இந்த மாதிரியான விஷயங்களை  எழுத எடுத்துக் கொள்வதற்கான காரணமும்.    இந்த  விஷயத்தை ஒவ்வொருவரும் எப்படி  deal  பண்ணுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள  விழைவதும் இன்னொரு பக்க ஆர்வம்.   அந்த ஆர்வத்தை வாசிப்பவர் ஏற்றுக் கொள்கிற மாதிரி பூர்த்தி  செய்தாலே  வெற்றியடைந்த மாதிரி  தான்.   ஆனால் தான்  சொல்ல வருவதை வாசிப்பவரும் ஆமோதிக்கிற மாதிரி  விளக்கிச் சொல்வதும் எழுதுவதும் தான்  அவரவர்களுக்கான வெற்றியும் சிறப்புமாக அமைகிறது.  அந்த  சிறப்புக்கான முயற்சியாக அடுத்து வரும் அத்தியாயங்களை தொகுத்து  நாம் விவாதிப்போம்.


(வளரும்)

16 comments:

கோமதி அரசு said...

//இந்த மூன்றும் ஒன்றே என்பது மகரிஷி அவர்களின் கண்டுபிடிப்பு. பிறவியின் நோக்கமே மனத்தின் இந்த ஆதிநிலையைக் கண்டறிந்து அதனைத் தனக்காக்கிக் கொள்வது தான் என்கிறார். அது என்ன ஆதி நிலை?//


உடலுக்கும், உயிருக்கும் இடையே, உயிருக்கும் மனதுக்கும் இடையே, மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் இடையே, ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையே, தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே , மனிதனுக்கும் விரிந்த பேரியக்க மண்டலத்திற்கும் இடையே, மனிதனுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடையே மனித மனத்தின் மூலமே வெளிப்படுகின்றன.

இத்தகைய கோடிக்கண்கான நிகழச்சிகள் அனைத்தும் மனித மனத்தால் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் எனும் உணர்வுகளால் ஏற்றுக் கொள்ளப் பெற்று கருவழியாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மறை பொருள் சுரங்கம் தான் மனித மனம்.

மனித மனத்தின் தொடக்கம், எல்லாம் வல்ல , காலம் கடந்த, எல்லையற்ற மெய்ப்பொருளேயாகும். அதன் இயக்கங்கள் பேரியக்க மண்டல உணர்வுகள் அனைத்தும் ஆகும். அதன் முடிவோ உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுடைய மனமேயாகும்.

மறைபொருளாகிய மூலத்தை(ஆதி) சகுணப்பிரம்மம், நிர்க்குணப்பிரம்மம், பலவகைக் கடவுள், பரம்பொருள், மெய்ப்பொருள் என்றெல்லாம் சொல்லக்கூடிய மூலப்பொருள்.


raman said...

"என்னைப் பொறுத்தவரை" அல்லது "என் கருத்து என்னவென்றால்..." என்று சொல்லத் தொடங்கினால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஏனென்றால் "நான் அப்படி நினைக்கிறேன்".

அவ்வாறன்றி - மேற்கோள் அல்லது 'கருத்து'க்களை விட்டு நாம் நிதரிசனமாகக் காணும் உண்மை இருப்பினை விருப்பு வெறுப்புக்களைப் புறம் தள்ளிஉற்றுக் கவனிப்பது தெளிவினைத் தருமா என்பதே கேள்வி.

இராய செல்லப்பா said...

மனத்தைப் பற்றி என்னதான் சொல்லப் போகிறீர்களோ என்று ஆவலோடு காத்திருக்கிறது என் மனம்!

இராய செல்லப்பா நியூஜெர்சி

ஸ்ரீராம். said...

பின்னூட்டத்துக்கான பதில்களையே விவாதமாக்கி, தனிப்பதிவாக்கி இருப்பது(ம்) சிறப்பு(தான்).

raman said...

மனம் உடல் உயிர் நமக்கு மிக அணுக்கமாக உள்ளவை. இது குறித்து அறிய நெடுங்காலம் ஆகுமா, ஆகலாமா ? இவை குறித்து சங்கரர் என்ன சொன்னார், வேத வியாசர் என்ன எழுதி இருக்கிறார் என்று படிப்பதனால் என்ன ஆகும் ? நம் மனம் உடல் பற்றி நாம் அறியவில்லையா, அறிய இயலாதா அல்லது அறிய மறுக்கிறோமா ? இதில் external assistance எந்த அளவுக்கு இன்றியமையாதது ?

raman said...

உடல் வேட்கை, மன விகாரம் இவை நம் 'கண்களுக்கு' தெரியவில்லையா அல்லது 'காண' அஞ்சுகிறோமா ?

ஜீவி said...

@ Raman
முதலில் மனதைப் பற்றிய விஞ்ஞான பூர்வமான தகவல்களை அலசிப் பார்த்து விட்டு அடுத்து உயிர், உடல் - இவை ஒன்றுக்கொன்றான சார்புத் தன்மை என்று பார்த்து விட்டால் ஓரளவு இந்த மூன்றைப் பற்றியதான புரிதல் நிலைக்கு வரலாம் என்று நினைக்கிறேன்.

வே.நடனசபாபதி said...

மனம் என்பதற்கு நெஞ்சம் என்று பொருள் உண்டு. திருக்குறளில் உள்ள வாய்மை அதிகாரத்தில் 295 ஆவது குறளில்

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை

என்கிறார் திருவள்ளுவர். இங்கு மனம் என்பது உள்ளம் என்ற பொருளில் சொல்லப்படுகிறது. உள்ளம் என்பதே எண்ணம் ஆகும். எனவே எண்ணங்களின் தொகுப்பே மனம் (உள்ளம் )ஆகும்.

ஜீவி said...

@ கோமதி அரசு

//மறைபொருளாகிய மூலத்தை(ஆதி) சகுணப்பிரம்மம், நிர்க்குணப்பிரம்மம், பலவகைக் கடவுள், பரம்பொருள், மெய்ப்பொருள் என்றெல்லாம் சொல்லக்கூடிய மூலப்பொருள்.//

இதை எளிமைபடுத்தி மனம் என்பது இன்னது தான் என்று வரையறுக்கும் பொழுது மகரிஷியின் கூற்றாக ஆராயலாம்.

ஆய்ந்த பெரியவர்களின் கூற்றுகள் அதற்கான முக்கியத்துவம் கொண்டதெனினும், சுய அனுபவத்தில் இதெல்லாம் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பது முக்கியமாகிப் போகிறது.

நம் மனம் உடல் பற்றி நாம் அறியவில்லையா, அறிய இயலாதா அல்லது அறிய மறுக்கிறோமா ? இதில் external assistance எந்த அளவுக்கு இன்றியமையாதது ?'
என்று திரு. ராமன் சொல்லியிருக்கும் கருத்தை ஓர்ந்து பாருங்கள்.

தொடர்ந்து வந்து இந்த ஆய்வில் கலந்து கொள்ளுங்கள். நன்றி.

ஜீவி said...

@ நடன சபாபதி

மனம் என்பதனை பகுத்து ஆராயும் பொழுது,

பலர் பலவாறாக அது பற்றிக் கூறியிருந்தாலும் அதன் பெளதிகத் தன்மை அல்லது அதன் இருப்பு முக்கியமாகிப் போகிறது.

உடற்கூறு சாத்திரத்தில் இல்லாத ஒன்றைப் பற்றி நாம் பலபடப் பேசுகிறோமா என்ற கேள்வி எழுகிறது, இல்லையா?

அதனால் இன்னும் விரிவாக மனம் பற்றி ஆராய வேண்டுகிறேன், ஐயா.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஆழ்ந்த கருத்துக்கள் பின்னூட்டத்தில் தான் வெளிப்படுகின்றன. ஆனால் அவை பதிவை விட்டு ஒதுங்கிப் போய் விடுவதினால் இந்த மாதிரியான ஆய்வுகளில் கவனம் கொள்வதில்லை. அதனால் பின்னூட்டங்களையும் இழுத்துப் பதிவில் பேசலாம் என்று எண்ணினேன். இந்தப் பகுதியில் அந்த முயற்சி தேவையாக இருக்கவில்லை. எங்கெங்கு அரிய கருத்துக்கள் பின்னூட்டங்களில் வெளிப்படுகிறதோ அங்கெல்லாம் அவற்றை பதிவிலும் இழுத்து வந்து பேசலாம் என்றே தோன்றுகிறது.

தொடர்ந்து வாசித்து ஆய்வில் கலந்து கொள்ளுங்கள், ஸ்ரீராம்.

ஜீவி said...

@ இராய. செல்லப்பா

வாருங்கள், செல்லப்பா சார். வெறுமனே வாசித்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்பதனை அறிவேன். வெளிப்படுகிற நேரத்தில் வெளிப்பட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வழி நடத்துங்கள், ஐயா.

வல்லிசிம்ஹன் said...






ஜீவீ சார்,
மனம் பிறப்பு தோறும் நாம் என்கிற ஆத்மாவைத் தொடர்ந்து ஒட்டி வரும் நினைவு.
அனாதி காலமாகக் கற்றுக் கொண்ட, நினைவில் படிந்த விஷயங்களை
அவ்வப் போது நம் செயல்பாட்டில் காண்பித்துக் கொண்டே
இருக்கும்.
ஆன்மாவுக்கு அழிவில்லை என்பது நம் நம்பிக்கை. அந்த ஆன்மாவுடன் பிணைந்திருக்கும்
நினைவுகளே நம்மைச் செலுத்துகின்றன.
உயிர் பிரியும் போது இந்த உடலைச் சார்ந்திருந்த நினைவுகள் உயிர்ப்புடன்
இன்னோரு ஆன்மாவாகி இன்னோரு உடலைத்
தேர்ந்தெடுத்து அது பிறந்து மூன்று ஆண்டுகளுக்குக் கனவாக
இருக்கும்.
பிறகு இந்தப் பிறவியின் கர்மாக்கள் தொடரும்போது
அவை அந்த நினைவுகள் பின்னுக்குப் போய் விடும்
என்று படித்திருக்கிறேன்.

பல பிறவிமேதைகள் இன்னோரு மேதையின் மறு பிறவி என்பதை நம்புகிறேன்,.
பல நினைவுப் படிமங்களே நாம் செய்யும் வினைகளுக்கு ஆதாரம்
என்று நம்புகிறேன்.
மிக நன்றி ஜீவீ சார்.

நெல்லைத்தமிழன் said...

இந்த மாதிரித் தொடர்களில் அவர் சொன்னார், இதில் அப்படி எழுதியிருக்கிறது என்பதுபோல்தான் சொல்லமுடியுமே தவிர அனுபவங்களின் வாயிலாக அறுதியிட்டுச் சொல்லமுடியாது.

நம் முன் ஜென்ம(ங்களின்) வாடை இந்த ஜென்மத்திலும் தொடரும் என்றே நான் நினைக்கிறேன். நாம் இப்போதுள்ள கவலை, வேலை போன்றவற்றில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபடுவதால் நம் முன் ஜென்ம நினைவுகளை அறிய, உணர முடிவதில்லை.

7 வருடங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில், மனோ நிபுணரை வைத்துக்கொண்டு மனோவசியம் செய்து அவர்களை முன் ஜென்மம், அதற்கு முன் ஜென்மம் என்று மெதுவாக போகவிட்டு விஷயங்களை அவர்கள் வாயிலாகவே சொல்லச் சொன்னார்கள் (மனோவசியத்தில் இருக்கும்போது). அது ஒரு இண்டெரெஸ்டிங் தொடராக இருந்தது. பிரபலமானவர்களும் தங்கள் முற் பிறவிகளைப் பற்றிச் சொன்னார்கள். (உதாரணமா ஒரு நடிகை, இதற்கு முந்தைய ஜென்மத்தில் இழிதொழில் என்று அறியப்படும் தொழில் செய்துகொண்டிருந்தார் என்றும் அதற்கு முன் ஜென்மத்தில் பறவையாக இருந்தார் என்றும்-அப்படித்தான் நினைவு, இதுபோல பலர் அவர்களது முன் பிறவிகளைப் பற்றிச் சொல்லினர்).

நமக்கும் முன் ஜென்மம் பற்றிய நினைவு நிச்சயமாக நம் மூளையில் பதிந்திருக்கும். இதைப்பற்றி உண்மை நிகழ்வுகள் இருக்கின்றன. (அதாவது 4 வயதுப் பெண், நான் இந்த கிராமத்தைச் சேர்ந்தவள் என்று சொல்லி, அவளை அந்த கிராமத்துக்கு அழைத்துச் சென்றபோது, இந்த வீட்டில் இருந்தேன், இவர்தான் என் கணவர், என்று ஒவ்வொரு உறவினைப் பற்றியும் சொல்லி, அவர்களும் அது உண்மை என்று சொல்லி..இவையெல்லாம் பத்திரிகையில் வந்தது என்றும், அந்தப் பெண்ணை அவளது 40+ வயதில் தான் பேட்டிக்காக சந்தித்ததாக கடுகு சார் ஒரு முறை எழுதியிருந்தார்) நானும் புத்தகங்களில் இதுபோன்ற பல பதிவுகளைப் படித்திருக்கிறேன்.

மனம் என்பது மூளை சம்பந்தப்பட்டது. அதில்தான் தனக்குத் தேவையானவற்றை அது பதிவு செய்துவைக்கிறது. மனமும் உடலும் வேறு வேறு என்றாலும், ஒரு செயல் இரண்டையும் அதிர வைக்கிறது (அப்பா கொடுக்கும் அறை உடல் வலியையும் திட்டு மனத்தையும் பாதிப்பது). உயிர் என்பது வேறு.

பலர், உயிர் (ஆன்மா) என்பது கட்டைவிரலின் ஒரு பாதி அளவில், நடு மார்புக்கு அருகில் இருக்கிறது என்று எழுதுகிறார்கள் (தியானம் செய்வதில் தேர்ந்தவர்கள்). அந்த இடத்தில்தான் அவர்கள் இறையுணர்வு பெறும்போது அதிர்வு ஏற்பட்டு ப்ரகாசிக்கிறது என்கிறார்கள். (இதில் ஒரு புத்தகத்தில், நடு நெஞ்சுக்கு வலது புறம் ஒரு விரற்கடை பருமன் தூரத்தில் இருக்கிறது என்றும், சிலருக்கு அது இடது புறத்தில் இருக்கும்-என பகவான் ரமணர் விளக்கினார் எனவும் படித்தேன்). இந்த சப்ஜெக்ட், படித்து 'ஓஹோ அப்படியா' என்று மனதில் தோன்றுவது. அனுபவம் நஹி.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

வல்லிம்மா, நீங்கள் கொடுத்திருக்கிற குறிப்புகளைக் கவனத்தில் வைத்திருக்கிறேன்.
அவற்றை உபநிஷத்துக்களின் தொடர்புடன் ஓரளவு ஆய்ந்து பார்த்திருக்கிற அனுபவங்களும் உண்டு. வேதாந்த நம்பிக்கைகளும் விஞ்ஞான உண்மைகளும் கைகுலுக்குகிற ஒரு புள்ளியும் உண்டு. அதனால் வேதாந்த விஷயங்களை ஒரு பக்கம் தனியாக வைத்துக் கொண்டு விஞ்ஞானபூர்வமான உண்மைகளை முதலில் தொகுப்போம். பிறகு இரண்டுக்கும் ஒப்புமை பார்த்து கருத்துக்களை இணைப்பது சுலபமாக இருக்கும். சரியா?..

இப்போதைக்கு மனம் என்றால் என்ன என்பதனைத் தீர்மானிப்போம். அந்த விவாதங்களில் பங்கு கொள்ளுங்கள். நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

முதல் பகுதிக்கு வந்த கருத்துகளையே மனதில் கொண்டு விவாதம்... நல்ல உத்தி.

பதிவும் பதிவுக்கான கருத்துகளும் ஸ்வாரஸ்யம். எல்லையில்லாத சிந்தனைகளை உருவாக்கி மனதுக்குள்ளே விவாத மேடை அமைத்து சரியா தவறா என ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளே சிந்திப்பது உண்டு.

மனது பற்றிய உங்கள் சிந்தனைகளையும் உங்கள் பதிவுகளுக்கான பின்னூட்டங்களையும் படிக்க மேலும் தொடர்கிறேன்.

Related Posts with Thumbnails