மின் நூல்

Saturday, December 21, 2019

மனம் உயிர் உடல்

24.    அருள் பாதை

யோகம் என்றால் சாதனை.   இறைவனுடான மன  நெருக்கம் எல்லாம் பக்தி யோகத்தில் அடக்கம்.

மகாபாரதப் போரில்  ஒரு நெருக்கடியான கட்டத்தில் அர்ஜூனனுக்கு பகவான் கிருஷ்ணர்  உபதேசித்ததாகச் சொல்லப்படும் 700 சுலோகங்கள் கொண்ட புனிதத் தொகுப்பு  ஸ்ரீமத் பகவத் கீதை.

வாழ்வாங்கு வாழும் வாழ்க்கைக்குத் தேவையான உபதேசங்கள்  கர்ம யோகம்,  பக்தி யோகம்,  ராஜ யோகம், ஞான யோகம் என்று நான்காகப் பகுக்கப்பட்டிருக்கின்றன. 

ஒரு செயலைச் செய்வது தான் கர்மம்.  நமது எந்த
செயல்பாட்டையும் எந்த நோக்கத்திற்காக செய்கிறோமோ அதன் அடிப்படையில்  தான் அந்தச் செயலுக்கான பலன் நமக்குக் கிடைக்குமாம்.    இறைவனைத் துதிப்பதிலும் கூட அதற்கான நோக்கமும்,  அந்த செயல்பாட்டிற்குரிய நேர்த்தியும் உள்ளடங்கி இருக்கிறது.

இறைவனைத் துதித்தலிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். தனக்கான   இகவுலக சுகங்களை வேண்டி இறைவனைத் துதிப்பது காம்ய பக்தியாம்.  காம்யம் என்றால் பலன் கருதி என்று பொருள் கொள்ளலாம்.  காம்ய பக்தி எதிர்பார்ப்புகளைச் சுமந்து கொண்டிருக்கும்.

இதற்கு எதிர் நிஷ்காம்ய பக்தி.   எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் இறைவனிடத்து பக்தி செலுத்துதல்.  கிட்டத்தட்ட கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காமலிருப்பது.

இஷ்ட தெய்வத்தின் பெயர், உருவம் எல்லாவற்றையும் மனத்தில் நிறுத்தி தியானிப்பதற்கு   சகுண  உபாசனை என்று பெயர்.

இதற்கு எதிர் நிர்குண உபாசனை.   உருவமற்ற இறைவனை மனத்தில் துதித்து தியானிப்பது இந்த உபாசனையின் சிறப்பு.

வேதாந்த ஞானத்தால் பிரம்மத்தை சிக்கெனப் பற்றுவதான பாவனையில் சந்தோஷிப்பது  ஞான யோக பக்தி. 

இவ்வளவு தான்.                                     

எந்த பக்தி  நிலையில் ஆரம்பித்தாலும் சரி,  அது ஞான யோகத்தில் முடிவது தான் இந்த தியானத்தின் இலட்சியம்.  ஒவ்வொரு படி நிலையிலும் அடுத்த படி நிலைக்கு செலுத்துகிற உணர்வை  இந்த தியானத்தை மேற்கொள்வோர் உணர்வார்கள்.

வாசித்துத் தெரிந்து  கொள்வதாலோ  பிறர் சொல்லித் தெரிவதாலோ ஏற்படுவதில்லை இறை பக்தி என்பது.   தனக்குத் தானே உணர்வது அது.  அத்தகையதான உணர்தல் உங்களுக்கு சித்தித்து விட்டதெனில் இறைவனுடனான நெருக்கத்தை விட்டு விலகவே முடியாது.  இந்த தியானத்தை கைக்கொள்வதின் நோக்கமும் அதுவே.

 பற்றற்றான்  பற்றினைப் பற்றுவதற்கு கொஞ்சம்  கொஞ்சமாக அவனுக்கே சொந்தமான  அருங்குணங்களை நம்மில் பதித்துக் கொள்ள முயற்சிப்பதே இந்த தியானத்தின் இலக்கு.   அந்த இலக்கை அடைவது தான் பிரம்ம பிரயத்தானமான முயற்சி.

வாழ்க்கை என்கிற வழுக்கலான பாதையில் எடுத்த முயற்சியில் தளர்ச்சி அடைவதற்கு  சோதனைகளும் வழியெங்கும் காத்திருக்கும் தான்.  இருந்தாலும் குறிக்கோளில் கொஞ்சமே முன்னேறினாலும்  அடையும் மனச்சாந்தி அற்புத அனுபவமாக இருக்கும்.   கூடவே வசதிகளும் வாய்ப்புகளும் சுகபோகங்களும் கூடி வரும் சறுக்குப் பாதையில் சறுக்காமல் மீண்டு வருவதே  பெறும் பாடாக இருக்கும்.  இறுதி வெற்றி வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்து யாண்டும்   இடும்பை இல்லாத நிலையை அடைவது தான்.  அந்த சிந்தனையே துணையாயிருந்து வழி நடத்தும் பெரும் பேறைப் பெற்றவர்கள் பாக்யசாலிகள்.. 

காம்ய பக்தி,  நிஷ்காம்ய பக்தியாய் நம்மில் மாற்றம் கொள்வது  தான் முதல் படி.    அநிதித்யத்திலிருந்து நித்தியத்திற்கான வழிப்பாதையின் ஆரம்பப்படி அது.

அந்த அருட்பாதையில் தொடர்ந்து பயணிக்கத் தொடங்குவோம். 


(வளரும்)







10 comments:

ஸ்ரீராம். said...

இந்தக்காலத்தில் நிஷ்காம்ய பக்தி எவரிடமேனும் இருக்குமா, தெரியவில்லை.  நான் எப்போது குறிப்பாக எந்த வேண்டுதல்களுடனும் கோயில் செல்வதில்லை.  வேண்டுவதில்லை.   ஆனால் மிகச்சில சமயங்களில் இதிலிருந்து விடுபடமாட்டோமா என்கிற ஏக்கம், எண்ணம் வந்து விடும்.

ஸ்ரீராம். said...

நிர்குண உபாசனை சாத்தியமாகுமா தெரியவில்லை எனக்கு!

ஸ்ரீராம். said...

// இதிலிருந்து விடுபடமாட்டோமா என்கிற ஏக்கம், எண்ணம் வந்து விடும்.//

இதிலிருந்து  என்று நான் சொல்வது அப்போது ஏற்பட்டிருக்கும் ஏதாவது பிச்னைகளிலிருந்து....

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

//இந்தக்காலத்தில் நிஷ்காம்ய பக்தி எவரிடமேனும் இருக்குமா, தெரியவில்லை. //

ஹஹ்ஹஹா..

கோமதி அரசு said...

தியானத்தின் நோக்கம் சொன்னது அருமை.

நடப்பது எல்லாம் நன்மைக்கே! எது நடந்தாலும் அது இறைவன் அருள் என்று தான் போக வேண்டி இருக்கிறது.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//இதிலிருந்து விடுபடமாட்டோமா என்கிற ஏக்கம், எண்ணம் வந்து விடும்.

இதிலிருந்து என்று நான் சொல்வது அப்போது ஏற்பட்டிருக்கும் ஏதாவது பிச்னைகளிலிருந்து....//

இந்தக் கவலையே வேண்டாம். ஏனென்றால் நிகழ்வுகள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. பூவுலகில் சாசுவதமாக என்று எதுவுமே இல்லை.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

நிச்சயம் சாத்தியமாகும்.

கடற்கரைக்குச் செல்லும் போது கரைக்கு வந்து திரும்பும் அலை ஓசையை செவி மடுத்தபடியே முடிவில்லாத கண்ணுக்குத் தெரிகிற சமுத்திர எல்லையை-- வானமும் கடலும் ஒன்றரக் கலக்கிற மாதிரியான தோற்றத்தைப்-- பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்கும் நேரங்களில் --

இரவு நேரங்களில் மொட்டை மாடிக்குச் சென்று அக்கடா என்று உட்கார்ந்து நீல வானில் அள்ளித் தெளித்தவாறு இரைந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் பார்த்தவாறு மெல்ல நகரும் மேகக் கூட்டங்களில் மனம் லயிக்கும் நேரங்களில் எல்லாம் ----

நிர்குண உபாசனையாய் இறைவன் இருப்பை உணர சிலரால் முடியும்.

ஜீவி said...

@ கோமதி அரசு

//நடப்பது எல்லாம் நன்மைக்கே! எது நடந்தாலும்.. //

ஒருவரின் ஆழ்ந்த எண்ணங்களுக்கு (இறைவன் அருளால்) நடப்பதை அவர் நினைப்புப்படி நகர்த்திச் செல்ல முடியும்.

அதற்கான பயிற்சி தான் இந்த தியான முயற்சியே.

தொடர்ந்து வாருங்கள்.

வே.நடனசபாபதி said...


//வாசித்துத் தெரிந்து கொள்வதாலோ பிறர் சொல்லித் தெரிவதாலோ ஏற்படுவதில்லை இறை பக்தி என்பது. தனக்குத் தானே உணர்வது அது.//

எனது கேள்விக்கான விடையைத் தந்துவிட்டீர்கள்.

அநேகமாக நம்மில் பலரும் நமக்கான இகவுலக சுகங்களை வேண்டி இறைவனைத் துதித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதை அம்ருப்பதற்கில்லை. ஆனால் எப்போது காம்ய பக்தி, நிஷ்காம்ய பக்தியாய் நம்மில் மாற்றம் கொள்ளும் என்பதுதான் எனது வினா. அவ்வாறு மாற்றம் கொள்ள கால அளவு உண்டா அல்லது நாமே அதை அடைய முயற்சிக்கவேண்டுமா?

ஜீவி said...

@ நடன சபாபதி

இகவுலக சுகங்கள் ஒன்றிலேயே நிலைத்திருக்காமல் ஒன்றைத் துய்த்தபின் அடுத்தது அடுத்தது என்று நகர்ந்து கொண்டே செல்லும் இயல்புடையன. இந்த நகர்வு ஒருவருக்கு சலிக்கிற பொழுது அல்லது அடுத்த கட்டத்திற்கு நகர்வை அவர் தனக்குத் தானே புறக்கணிக்கும் பொழுது காம்யம், நிஷ்காம்யமாக அவர் மனசில் மாற்றம் கொள்ளும்.

இந்த Process-யை விளக்கமாகச் சொல்ல வேண்டும். அதனால் பதிவில் சொல்கிறேன்.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, ஐயா.

Related Posts with Thumbnails