மின் நூல்

Saturday, February 22, 2020

வசந்த கால நினைவலைகள்

                                                             45

டிரங்க் கால் டிக்கெட்டுகளைப் பற்றி கொஞ்சம் விவரமாகச் சொல்ல வேண்டும்.

வெள்ளை, சிவப்பு, பச்சை என்ற நிறங்களில் இருக்கும் இவைகள்  ஒரு A4 அளவு காகிதத்தை நான்காக மடித்தால் அதன் ஒரு பகுதி எந்த அளவுக்கு இருக்குமோ அந்த  அளவிற்கு இருக்கும்.     மூன்று வித கலர்  டிக்கெட்டுகளுக்கும்  வரிசை எண் உண்டு.   வெள்ளை நிற  outward ticket-ல் நாள் (Date)  எந்த  தொலைபேசி எண்ணிலிருந்து எந்த ஊர் தொலைபேசி எண்ணுக்குப் பேச வேண்டும்,  கால் புக்கிங் நேரம்,  ஆர்டனரி - அர்ஜண்ட் போன்ற டிரங்க் காலின்  முன்னுரிமை (Priority) தகுதிகள்,  பிபி காலா நம்பர் காலா,  பிபி கால் என்றால் பிபியின் பெயர்  போன்ற விவரங்கள் குறிக்கப் பட்டிருக்கும்,

ஒரு டிரங்க் கால் அந்த நாட்களில் எப்படி பதிவு
செய்யப்பட்டது  என்பதைப் பார்க்கலாம்.   தொலைபேசி வைத்திருப்போர்  டிரங்க் கால் பேச அதற்கான எண்ணை தன் தொலைபேசி டயலில் சுழற்றியதும்,  தொலைபேசி இணைப்பகத்தில் டிரங்க் போர்டில்  ஒரு சிறிய பல்ப் எரியும்.  உடனே தொலைபேசி இயக்குனர் அந்த பல்ப் சார்ந்த கீயை  கீழ்ப்பகுதி நோக்கி அழுத்தியதும் டயல் செய்தவருடன்  தொடர்பு ஏற்பட்டு,  "டிரங்க் புக்கிங்"  என்று சொல்வார்.  டயல் செய்தவர் தன் தொலைபேசி எண், பேச வேண்டிய  ஊர் - பேச வேண்டியவரின் தொலைபேசி எண், குறிப்பிட்ட நபருடன் பேச வேண்டும் என்றால் அவர் பெயர்,  என்ன வித முன்னுரிமை கொண்ட கால் என்று விவரங்களைச் சொன்னால் ஆப்ரேட்டர் அவற்றைக் குறித்துக் கொண்டு,  Thank you, Sir.  I will call back  என்று சொல்லி கீயை மேல் நோக்கி தூக்கிய பிறகு அடுத்து  லயினில் வந்திருப்பவருக்கான கீயை கீழ்ப் பக்கம் அழுத்தி, "குட் மார்னிங்.. டிரங்க் புக்கிங்.." என்று அடுத்த பதிவை குறிக்க ஆரம்பிப்பார்.

 டிரங்க் காலை புக் செய்யும் போதே வெள்ளை டிக்கெட்டில் தொலைபேசி இயக்குனர் இந்த விவரங்களைக் கேட்டு அதிக பட்சம் ஒரு நிமிட நேரத்தில் குறித்துக் கொள்வார்.  அடுத்து அடுத்து என்று டிரங்க் கால் பதிவுகளை பதிவது நீண்ட வரிசையாக நடந்து கொண்டே இருக்கும். 

தொலைபேசியில் பேசுவதற்கென்றே   தனிப்பட்ட சில உச்சரிப்புகள் உண்டு.    சொல்லப்போனால்  எண்களும்   ஆங்கில Alphabet எழுத்துக்களின் உச்சரிப்பும்   அன்றாட தொலைபேசியகப் பணி நேரத்தில் மிக முக்கியமான  பங்கு வகிக்கும்.   எண்களை இரண்டு இரண்டு எண்களாக பிரித்து உச்சரிப்பது செளகரியமாக இருக்கும்.   2469852   என்ற தொலைபேசி  எண்ணை  --   டூ ஃபோர் - சிக்ஸ் நைன் - எயிட் ஃபை - டூ --  என்றே உச்சரிக்க வேண்டும்.  2466455  என்ற எண்ணை  -- டூ ஃபோர்  டபுள் சிக்ஸ்  ஃபோர் ஃபைவ்  வைவ்  என்று உச்சரிக்க வேண்டும்.  (டபுள் சிக்ஸ் என்பதை டூ சிக்ஸ் -- இரண்டு ஆறுகள்-  என்ற அர்த்தத்தில் சொன்னால் அது 26 என்று புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதினால் இந்த ஏற்பாடு)

அதே மாதிரி தொலைபேசி இலாகாவில் பொனடிக் கோட் அடிப்படையில் எழுத்துக்களை உச்சரிப்பார்கள்.   பெயர்களை சரியாகப் புரிந்து  கொள்ள  இந்த  முறை  உபயோகமாக இருக்கும்.   RAJINI   என்ற பெயரை   R for Raja, A for Army, J for Japan, I for India, N for Navy,  I for India  என்று உச்சரித்தால் எதிர் தரப்பில் அந்த பெயரை எழுதிக்கொள்ளும் பொழுது தவறிலில்லாமல் இருக்கும்.   PP பெயரை எதிர்முனை  ஆப்ரேட்டருக்குத் தெரியப்படுத்தும் பொழுது இந்த உச்சரிப்பு வெகுவாக உதவும்.                                                                                           
                                                                                       
மூன்று கலர் டிக்கெட்டுகளில்  வெள்ளை தான் கரன்ஸியைப் போல மதிப்பு வாய்ந்தது. ஸ்ரீராம்  சென்ற பதிவு பின்னூட்டத்தில் கேட்டிருந்த 'இந்த டிக்கெட்டுகளுக்குக்கெல்லாம் தணிக்கை உண்டா?' என்ற கேள்வி முக்கியமானது.    டெலிபோன் ரெவின்யூ அக்கவுண்ட்ஸ்  (TRA) தொலைபேசி இலாகாவுக்கான  வருமான - செலவு கணக்குகளை கண்காணிக்கிற பிரிவு.

அச்சடிக்கப்பட்ட எல்லா நிற டிக்கெட்டுகளும்  அந்தந்த எக்ஸ்சேஞ்சுக்களான இண்டெண்ட் படி  தபால் இலாகா வழியாக கோணிப்பைகளில் வந்து சேரும். கோணிகள் பிரிக்கப்பட்டு கட்டு கட்டாக டிக்கெட்டுகள் மர பீரோக்களில் அடுக்கப்படும்.  வெள்ளை நிற டிக்கெட்டுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அந்த ஊரில் பதிவாகும் டிரங்க் கால்களுக்கான பண வசூல் சம்பந்தப்பட்டது ஆகையால் அதற்குரிய முக்கியத்துவம் உண்டு.

A to Z  வரிசையில் ஆயிரம் எண்ணிக்கைக்குள்  ஒவ்வொரு டிக்கெட்டிலும்  எண் இடப்பட்டிருக்கும்.  (A001, A010, A100, A999 என்கிற மாதிரி)  வெள்ளை டிக்கெட்டில் இந்த எண்களின் அச்சுப்பதிவு சரியாக இருக்கிறதா,  இல்லை இடையில் ஏதாவது எண் அச்சடிக்கப்படாமல் விடுபட்டிருக்கிறதா என்பதை சரி பார்க்க  அவ்வப்போது  சீனியர் ஆப்பரேட்டர்கள் அந்தப் பணியில் இருப்பார்கள்.   நூறு டிக்கெட்டுகள்  கொண்ட ஒரு புக்கில்  ஏதாவது  எண்ணுள்ள டிக்கெட் இல்லாமல் இருந்தால்  அந்த எண்ணை அந்த டிக்கெட் புக்கின் பின் புறம் குறித்து கையெழுத்திட்டு வைப்பார்கள்.  (Ticket No. A001 to A 100 checked o.k. and found A079 missing)  இந்த மாதிரி அந்த குறிப்பு இருக்கும்.

இப்படி வரிசை எண்கள் சரிபார்க்கப்பட்ட வெள்ளை டிக்கெட்டுகளின் புக் தான் டிரங்க் கால் பதிவுக்குப் போகும் என்பது அடிப்படை விஷயம்.  ஒரு நாளில் மொத்த வெள்ளை டிக்கெட்டுகளில்  பதிவான கால்களின் (Booked Trunk callas) எண்ணிக்கை, பேசப்பட்ட கால்கள், பேசப்பட்ட நேர அளவீடுகள் (Duration), PP  இல்லாமல் கேன்சல் ஆனவை, வேறு  ஏதாவது காரணங்களால் கேன்சலானவை, வெளிநாடு டிரங்க கால் என்று வகைப்படி தனித்தனியாகப் பிரித்து அதற்கேற்பவான  பட்டியல் இட்டு  பண்டில் கட்டி ஒவ்வொரு நாளும் தலைமையக TRA Unit-க்கு அனுப்பப்படும்.  ஒவ்வொரு தொலைபேசி சந்தாதாரருக்கும்  மாத டெலிபோன்  கட்டண பில் அனுப்பும் பொழுது அவர்கள் டிரங்க் கால்கள் பேசியதற்கான கட்டணமும் அந்த பில்லில் ஒரு  இனமாகச் சேர்க்கப்படும். 

சென்ற காலத்தில் வசதி படைத்தவர்கள் தான் வீட்டில் தொலைபேசியை வைத்திருந்து அனுபவித்தார்கள்.   இந்த மாதிரி தொலைபேசியை சொந்தமாகக் கொண்டவர்கள் தான்  டிரங்க் கால்களை உபயோகத்தில் கொள்ள முடியும் என்ற ஒரு நிலை  இருக்கக் கூடாது அல்லவா?  தொலைபேசி வசதி இல்லாத ஏழைகளுக்கும் அவசர ஆபத்திற்கு  உபயோகப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்  தபால் அலுவலங்களில்  தந்தி கொடுக்கிற மாதிரி  டிரங்க் காலும் பேச முடியும் என்ற  வசதி இருந்தது.  இந்த தபால் ஆபிஸ் தொலைபேசி அமைப்பிற்கு  PCO  (Public call Office)  என்று இருந்தது.    P & T Department  என்ற பெயரில் இந்த தேசத்தில் மிகுந்த செல்வாக்குடன்  தபால், தந்தி, தொலைபேசி என்று எல்லா வசதிகளும் ஒரு  சேர  மத்திய அரசின் ஒரே இலாகாவாக இருந்து தேசத்தின் சகல பகுதி மக்களுக்கும் பணியாற்றி  வந்த பிர்மாண்டமான தேச சொந்து இந்த  இலாகா.

அப்படி இருந்த காலத்தில் தபால் அலுவலகங்களில்  இருந்த  PCO தொலைபேசியை  அங்குள்ள அலுவலர் உதவியுடன் உபயோகித்து டிரங்க் கால்களை பேசும் வசதி இருந்தது.  டிரங்க் கால் பேச வருவோரிடம் டிரங்க் புக்கிங் தகவல்களைக் குறித்துக் கொண்டு, தொலைபேசி இணைப்பகத்தோடு தொடர்பு கொண்டு அந்த விவரங்களை அளித்து  டிரங்க் இணைப்பு கொடுக்கும் நேரத்தில் கால் புக் செய்தவரைக் கூப்பிட்டு  அருகாமையில் இருக்கும் ஒரு மரக்கூண்டிற்குள் போகச் சொல்லி பேச வைப்பார்.  இந்த வகையில் பேசியவர்களிடமிருந்து  பெற்ற தொகை தபால் இலாகா மூலமாக தொலைபேசி இலாகாவிற்கு வந்து சேரும்.

தொலைபேசி வசதி இல்லாத எளிய மக்களுக்கும் PCO மூலமாக தங்களுக்கு டிரங்க் கால் வந்திருக்கிறது என்று  தகவல் கிடைத்து அவர்கள் தபால் நிலையம் சென்று போன் பேசும் வசதியும் இருந்தது.   வெளியூர், உள்ளூர் என்று இரண்டு பக்கமும் PCO-க்களாகவே கூட இருக்கும்.  ஒரு  உதாரணம் பார்ப்போம். 

கடலூரில் இருக்கும் ஒருவர்  விழுப்புரத்திலிருக்கும் ஒருவருடன் தொலைபேசியில் அவசரமாகப் பேச வேண்டும்.  இரண்டு பக்கமும் வீட்டில் தொலைபேசி வசதி கிடையாது.  என்ன செய்வார்?...  கடலூரில்  தபால் அலுவலகம் சென்று  அங்கு தந்திப் பிரிவில் இருக்கும் PCO கவுண்ட்டரில் விழுப்புரத்தில் இந்த முகவரியில் இருக்கும் இன்னாருடன் பேச வேண்டும் என்று குறிப்பாக எழுதிக் கொடுப்பார்.   பேசுவதற்கு முன் அட்வான்ஸாக PCO ஊழியர் குறிப்பிடும் தொகையையும் கொடுத்துக் காத்திருப்பார்.

அந்த ஊழியர் கடலூர் தொலைபேசி நிலைய டிரங்க் புக்கிங்கில்  விழுப்புரத்திற்கான PCO காலாக  முகவரியுடன் பதிவு செய்வார்.  இந்தத் தகவல் விழுப்புரம் தொலைபேசி   நிலையத்துடன் தொடர்பு கொண்டு   பகிர்ந்து கொள்ளப்படும்.  விழுப்புரம்   தபால் நிலையத்தின் PCO பிரிவுக்கு தொலைபேசியில்  இந்தத்  தகவல் பதியப்பட அங்கிருந்து தந்திப்  பிரிவு   ஊழியரை முகவரிக்கு அனுப்பி பேச வேண்டியவர் வந்து சேர்ந்ததும் அவர் வந்து சேர்ந்த தகவல் விழுப்புரம்   எக்ஸ்சேஞ்சுக்கு தெரிவிக்கப்பட்டு, கடலூர் எக்ஸ்சேஞ்சுக்கும் அந்த தகவல் போய்ச் சேர்ந்து, கடலூர் PCO விலிருக்கும் நபருக்கும் விழுப்புரம் PCO-வில் காத்திருப்போருக்கும்  தொலபேசித்  தொடர்பு ஏற்படுத்தப்படும்.   இரண்டு பகுதியிலும் பேசி முடித்ததும்,  கடலூர் ஆப்ரேட்டர்  PCO அலுவலரிடம்  பேசிய   நேரத்தைச் சொல்லி, அதற்காக வசூலித்த  கட்டண ரசீது எண் பெற்று தன் வெள்ளை நிற டிக்கெட்டில் அந்த விவரங்களைக் குறித்துக் கொள்வார். 

அருமை நண்பர் வெங்கட் அவர்கள் சென்ற பதிவு பின்னூட்டத்தில் ஒரு அவசர நேரத்தில் தான் நெய்வேலி தபால் ஆபிஸூக்கு சென்று டிரங்க் கால் பேசியது பற்றி பகிர்ந்து கொண்டதும், தொலைபேசியில் பேசுவதற்காக நீண்ட பெஞ்சில் உட்கார்ந்து காத்திருந்தவர்களின் நினைவு வருகிறது  என்று வல்லிம்மா தன் சென்ற காலத்து  நினைவுகளை நினைவு கொண்டதும்  தபால் அலுவலகம் சார்ந்த இந்த  PCO-க்களைத் தான்.

நான் புதுவை தொலைபேசி இணைப்பகத்தில் பணியாற்றிய  பொழுது  புதுவை பஜார் PCO -விலிருந்து  எம்ஜிஆருடன்  பேச வேண்டி யாரோ  டிரங்க் கால் பதிவு செய்திருந்தது இப்பொழுது நினைவுக்கு  வருகிறது.  அது பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

(வளரும்)


24 comments:

நெல்லைத்தமிழன் said...

எந்த நிலையிலிருந்து இப்போ எவ்வளவு முன்னேறி இருக்கிறது.. வளர்ச்சி ஆச்சர்யம்தான்.

நானெல்லாம் தொலைபேசி உபயோகித்தது 89ல்தான்.

பெங்களூருக்கு எஸ்டிடி நிமிடத்துக்கு 7 ரூபாய்தான் என்றதும் சும்மா என் அண்ணனைக் கூப்பிட்டுப் பேசினேன்.

அதே சமயம், திருட்டு காலில் துபாயிலிருந்து இந்தியாவுக்கு நேரம் கெட்ட நேரத்தில் அரைமணி பேசியதும் (93) நினைவுக்கு வருகிறது

வலை ஓலை said...

தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது வசந்த கால நினைவலைகள் – 45 பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். உங்களைப் பற்றியும் உங்கள் வலைத்தளம் பற்றியும் ஒரு பதிவை நீங்களே விரிவாக எழுதி எமது valaioalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

சிகரம் பாரதி said...

இவ்வாறான நினைவுகளை வாசிக்கும்போது இந்த நவீன காலத்துக்கு பதில் நாம் அந்த காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அருமையான பகிர்வு. அடுத்தது என்ன என்று அறிய ஆவலாய் இருக்கிறது.

ஸ்ரீராம். said...

//2466455  என்ற எண்ணை  -- டூ ஃபோர்  டபுள் சிக்ஸ்  ஃபோர் ஃபைவ்  வைவ்  என்று உச்சரிக்க வேண்டும்.//

அதை ஏன் டபுள் ஃபைவ் என்று சொல்லாமல் ஃபைவ் வைவ் என்று சொல்லவேண்டும்?

ஸ்ரீராம். said...

//தொலைபேசி இணைப்பகத்தோடு தொடர்ப்பு கொண்டு //

திருத்த வேண்டிய பகுதி 

ஸ்ரீராம். said...

ட்ரங்க்கால் வசதி படிப்பதற்கு சற்றே சிக்கலாகத்தோன்றினாலும், பணியில் பழகியோருக்கு ரொடீனாக சரியாக இருந்திருக்கும்.  ஆனால் தணிக்கைக்கு எவ்வளவு எவ்வளவு காகிதங்கள் சேர்த்து வைக்க வேண்டும்?    நோட்டுப் புத்தகங்கள் ரிஜிஸ்டர் போன்றவை பாதுகாப்பதே சிரமம்!

ஸ்ரீராம். said...

திரிசூலம் படத்தில் சிவாஜி ட்ரங்க்கால் புக் செய்து ஒரு பாட்டே பாடுவார்.  அவர் கே ஆர் விஜயாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஞாபகமாக ஒரு குரல்கொடுப்பார்....   "extend the call please...." 

ஸ்ரீராம். said...

இதில் பிற்காலத்தில் இரவு ஒன்பது மணிக்குமேல் எஸ் டி டி கால்களுக்கு அரை விலையும், இரவு பதினோரு மணி முதல் காலை நாலோ ஆறு மணி வரையோ கால் விலையும் நிர்ணயிக்கப்பட்டு சலுகைகள் இருந்தன.

அப்போதெல்லாம் சென்னையிலிருந்து மதுரையில் இருந்த எங்கள் அப்பா அம்மாவுடன் பேச நாங்கள் அந்த நேரத்துக்கு PCO  வில் காதிருப்போம்.  நமக்கு முன்னே அங்கு லைன் கட்டி இருப்பார்கள்!  

ஜீவி said...

Vallimma, your comment was deleted accidentally when I tried to open it on my mobile.
Sorry. I request you pass on your comment again please..

கோமதி அரசு said...

//டிரங்க் காலை புக் செய்யும் போதே வெள்ளை டிக்கெட்டில் தொலைபேசி இயக்குனர் இந்த விவரங்களைக் கேட்டு அதிக பட்சம் ஒரு நிமிட நேரத்தில் குறித்துக் கொள்வார். அடுத்து அடுத்து என்று டிரங்க் கால் பதிவுகளை பதிவது நீண்ட வரிசையாக நடந்து கொண்டே இருக்கும்.//

விவரங்கள் தெரிந்து கொண்டேன்.
மலரும் நினைவுகள் அருமை.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான தகவல்கள்.

எத்தனை விஷயங்கள் ஒரு ட்ரங்க் காலில்... அப்படியான நிலையிலிருந்து இன்றைக்கு தொலைதொடர்பு பெற்றிருக்கும் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ஒன்றும் பிரமாதமா எழுதவில்லை சார். இதே பழைய முறைகளை சிலாகித்து எழுதி இருந்தேன். உங்கள் எழுத்து மீண்டும் தபால் அலுவலகத்துக்குள் என்னை இழுத்துச் சென்றது. அதுவும் அந்த டிக்கட் வண்ணங்கள் அந்த நேர்ததி. உங்கள் எல்லோரின் உழைப்பு. மிகவும் போற்றத் தக்க வரலாற்றுப் பதிவு. நன்றி மா.

வே.நடனசபாபதி said...

தானியங்கி இணைப்பகம் இல்லாதபோது நாம் தொடர்பு கொள்ள நினைக்கும் எண் எவ்வாறு கிடைக்கிறது என்பதையும், அந்த தொலைபேசி இணைப்புக்கான விவரங்கள் எவ்வாறு துல்லியமாக குறிக்கப்பட்டு சந்தாதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது என்பதை அனைவருக்கும் புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள். ஒரு தொலைபேசி எண் பெறும்போது இவ்வளவு வேலைகள் நடைபெறுகின்றன என அறியும்போது வியப்பு மேலிடுகிறது.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//நானெல்லாம் தொலைபேசி உபயோகித்தது 89ல்தான்.//

நான் இங்கு விவரித்திருப்பது 1964 காலத்திய நிலை நெல்லை.

ஜீவி said...

@ சிகரம் பாரதி

இந்த நவீன காலத்துக்கு பதில் நாம் அந்த காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.-- அட! தங்களது சரியான Observation. நானும் அப்படித் தான் நினைக்கிறேன். என் உணர்வும் அதுவே தான்.

வளர்ச்சி என்ற பெயரில் இப்படியான நிறைய பொற்காலங்களை நாம் இழந்து கொண்டே வருகிறோம். அதற்கான காரணங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

நம்பர் ப்ளீஸ் காலத்தில் மூன்று இலக்க தொலைபேசி எண் தான். ஒரு உதாரணத்திற்காக 7 டிஜிட் எண்ணைக் கையாண்டேன். இரண்டு இரண்டாக பிரிக்கும் பொழுது எப்படியும் ஒரு எண் மிஞ்சி விடுகிறது. 2466455 எண்னில் ஃபோர் ஃபைவ் -- ஃபைவ் என்று கடைசி ஃபைவ்வை தனியாக உச்சரிக்கிறோம்.

இதுவே இன்றைய எட்டு இலக்க எண் என்றால் நீங்கள் சொல்கிற மாதிரி உச்சரிக்கலாம். இதெல்லாம் வழிமுறைகள் தாமே தவிர, நாளாவட்டத்தில் எப்படி வேண்டுமானாலும் உச்சரிக்கும் பழக்கம் வந்து விட்டது.


ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

// திருத்த வேண்டிய பகுதி //

திருத்தி விட்டேன். நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (3)

//தணிக்கைக்கு எவ்வளவு எவ்வளவு காகிதங்கள் சேர்த்து வைக்க வேண்டும்? நோட்டுப் புத்தகங்கள் ரிஜிஸ்டர் போன்றவை பாதுகாப்பதே சிரமம்! //

தொலைபேசி நிலையத்தைப் பொறுத்த மட்டில் அன்று அன்று பணி தான். ஒரு நாள் வேலை என்பது அன்றே முடிந்து விடும். அடுத்த நாள் என்ன வேலை செய்யப் போகிறோம் என்பது முதல் நாள் தெரியாத அதிர்ஷ்டசாலிகள் நாங்கள். அதாவது பெண்டிங் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

பேசிய, பேசாத டிரங்க் கால்களைப் பற்றிய பகுப்பாய்வு மட்டுமே முதல் நாள் டிக்கெட் எல்லாம் அடுத்த நாள் கணக்கெடுப்பு. இதுவும் TRAO-க்கு அடுத்த நாளே ரிஜிஸ்டர்டு போஸ்ட்டில் அனுப்பப்பட்டு விடும். ஆடிட் எல்லாம் Telephone Revenue Accounts Office-க்குத் தான்.

எக்ஸ்சேஞ்சில் என்னன்ன ரிஜிஸ்டர்களைக் கையாளுவோம் என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (4)

திரிசூலம் படத்தில் --- ஆ! அந்தப் படத்தைப் பார்ந்த நாளில் படத்தின் இயக்குனருக்கு மனசிலேயே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது, ஸ்ரீராம்!.. அருமையான யதார்த்தமான பாடல் காட்சி அது!..

ஜீவி said...

@ ஸ்ரீராம் (5)

எஸ்.. புக் பண்ணி பேசும் கால்களுக்கும் இரவு 7 மணிக்கு மேல் காலை 6 மணி வரை அரை விலை கட்டணம் எல்லாம் இருந்த காலம் அது. நல்ல நினைவாற்றல் உங்களுக்கு.

ஜீவி said...

@ கோமதி அரசு

வாசித்ததற்கு நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்.

//உங்கள் எழுத்து மீண்டும் தபால் அலுவலகத்துக்குள் என்னை இழுத்துச் சென்றது. //

ஆஹா! தன்யனானேன்.

//உங்கள் எல்லோரின் உழைப்பு. மிகவும் போற்றத் தக்க வரலாற்றுப் பதிவு..//

தொலைபேசி நிலைய அன்றாடப் பணிகளே ஒரு கூட்டு முயற்சியில் நடைபெற்றன. அந்த நாட்களில் செயலூக்கமும், ஒற்றுமையான செயல்பாடுகளுமே தனி தான். நன்றி, வல்லிம்மா.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

இன்னும் நிறைய இருக்கின்றன, ஐயா. தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அருமை. முதன்முதல் தொலைபேசியில் நான் பேசியது இப்போது நினைவிற்கு வந்தது.

Related Posts with Thumbnails