மின் நூல்

Sunday, March 1, 2020

வசந்த கால நினைவலைகள்

                                                                46

ரயில் நிலையம் மாதிரி ஒரு நாளின் இருபத்து நாங்கு மணி நேரமும் இயங்கும்  அலுவலகம் தொலைபேசி இணைப்பகம்.   இரயில் நிலையம் போலவே பகல் பன்னிரண்டு மணிக்கு மேலான ஒரு மணியை பதிமூன்று மணி  (1300 Hrs.) என்றே தொலைபேசி இணைப்பகத்திலும் குறிப்பார்கள்.  இரவு பதினோரு மணி  2300 Hrs.  இரவு  12 மணி  0000 Hrs.  தொலைபேசி இணைப்பகத்தைப் பொறுத்த மட்டில் ஒரு நாள் துவங்குவது அந்த 0000 Hrs.-ல் தான்.   இரவு பணிக்கு வருவோருக்கு அப்பொழுது தான் பணி நேரம் ஆரம்பிக்கும்.

 இரவு பணிக்கு வந்ததும்,  Log Book  பேரேட்டில்  அன்றைய தேதியைக் குறிப்பிட்டு அடிக்கோடிட்டு,  கீழே ---

Outward Ticket No.
Inward Ticket No.
Transit Ticket No.          --  என்று அன்றைய நாளுக்கு துவக்க டிக்கெட் எண்களைக் குறிப்பார்கள்.   அதற்குக் கீழே  நேரடியாக தொடர்பு இருக்கும் ஊர்களின் லைன்களை  (direct lines) மறுபகுதியில் பணியில் இருப்போரைக் கூப்பிட்டு டெஸ்ட் செய்து அது பற்றிய ரிப்போர்ட்டைக் குறிப்பார்கள்.

இது எப்படி என்று  சொல்கிறேன்.   காஞ்சீபுரம் -- அரக்கோணம்  நேரடியாக தொடர்பு இருக்கும்  ஊர் என்று  வைத்துக் கொள்ளுங்கள்.  காஞ்சீபுரத்தில் இரவுப் பணி இயக்குனர்  அரக்கோணம்  சர்க்யூட்டில் (அரக்கோணம் என்று  குறிப்பிட்டிருக்கும்  துளையில் -- அதை  ஜாக் என்று சொல்வார்கள்) -- டிரங்க் போர்டில் இருக்கும் காலிங் கார்டை எடுத்து நுழைத்து  ரிங்  கொடுப்பார்.
ரிங் கொடுப்பது  என்றால் தகடு போல இருக்கும் கீயை  முன்னுக்குத் தள்ளுவார்.   உடனே அரக்கோணம் தொலைபேசி நிலையத்தில் காஞ்சீபுரம் என்று  குறித்திருக்கும் ஜாக்கில் பல்ப் எரியும்.   அரக்கோணம் ஆப்ரேட்டர் அந்தத்  துளையில்  ஆன்சரிங் கார்டை நுழைத்து கீயை முன்னுக்குத் தள்ளி  "எஸ்.. அரக்கோணம்.." என்பார்.

"என்ன, சண்முகம்?..  நீதான் இந்த வாரம் நைட்  டூயூட்டியா?"

"இல்லே.. காலைலே ஒரு  வேலை இருக்கு..  அதுக்காக  எக்ஸ்சேஞ்ச் ஆஃப் டுயூட்டி பண்ணிகிட்டேன்"

"அப்படியா?.. ஓக்கே.. ஓக்கே.."

முகத்தைப்  பார்க்க வேண்டும் என்று இல்லை.   எல்லாம் குரலை பழக்கத்தில் கொண்டு எட்டூருக்கு உறவு  கொள்ளலாம்.  ப்ளாக்கர் உலகத்தில் எழுத்து என்றால் தொலைபேசி நிலையங்களில்   குரல்..

குரல்.. குரல்...  அது தான் தொலைபேசி நிலையத்தில் மறுபக்கம் பேசுவோரைத் தெரிந்து கொள்ள கண்ணாடி.  இந்த குரல் பழக்கத்தில் ஏகப்பட்ட காதல்கள் பூத்து, மலர்ந்து திருமணத்தில் முடிந்திருக்கின்றன.   குரல் அறிமுகத்தில் முகிழ்த்து நேரில் சந்திக்கையில்  வாடி வதங்கிப் போன காதல் கதைகளும் நிறைய உண்டு.

கிடைத்த கேப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் டியூட்டி பற்றிச் சொல்லி விடுகிறேன்.

குறிப்பாக எட்டு விதமான  பணிக்காலங்கள் உண்டு.   இரவு  0000-0720,  0630--1350,  0800-1530,  0900-1630,  1000-1730,  1330-2050,  1520- 2300,  1640-0000 என்றவாறு.  மகளிர்க்கு மட்டும் பணிக்காலம் இரவு 2030 வரை தான் என்று வரையறுக்கப் பட்டிருந்தது.

இந்தப் பணிக்காலங்களை ஒரு இணைப்பகத்தில்  40 தொலைபேசி இயக்குனர்கள் இருந்தால் ரொட்டேஷனாகப்  பகுத்துப் போடுவார்கள்.  பகலில் 1000  மணிக்கு ஆரம்பிக்கும் டியூட்டி மட்டும்  சீனியர்களுக்கானது.   அதில் ஒருவர் டிக்கெட் ஒர்க் என்று அதற்கு முதல் நாள் பதிவான வெள்ளை டிக்கெட்டுகளைக் கணக்கெடுத்து  TRAO-க்கு அனுப்பும் வேலையில் இருப்பார். மொத்த பதிவான டிக்கெட்டுகளின் கணக்கும் டேலி ஆகி,  டிஸ்ப்ளே போர்டில் நேற்றைய கணக்கில்  எஃபக்ட்டிவ் கால்களின்  %-யைப் போடுவதற்குள் பெண்டு நிமிர்ந்து விடும்.

இருவர் அன்றைய தின டிரங்கால்கள் டிஸ்போஸல் ஆவதைக் கண்காணிப்பார்கள்.  தாமதத்திற்கு ஏதாவது காரணம் என்றால் மறுபகுதி சூபர்வைசருடன்  (அந்தக் காலத்தில் இந்தப் பதவிக்கு மானிட்டர் என்று பெயர்.  பள்ளிப்பருவ நினைவைக் கிளறுவதால் மானிட்டர் பிற்காலத்தில் சூபர்வைசர் ஆனார்!)  பேசி தீர்வு  காண்பார்கள்.

போர்டில் வேலைசெய்யும் இயக்குனர்கள்  டீ, காப்பிக்கு போக வேண்டும் என்றால் அவர்கள் செய்து கொண்டிருக்கும் பணியைத் தொடர்பவராக இன்னொருத்தர் இருப்பார்.  எல்லாருக்கும்  தலைமை வகிக்கும் சூபர்வைசர் இருவர்  காலை 0630 மணியிலிருந்து இரவு 2030 மணி வரையான பணிக்காலத்தை பகிர்ந்து கொள்வார்கள்.  இரவு 2030-க்கு  மேலே  இயக்குனர்களின் ராஜ்யம் தான். இந்த நேரத்தில் பணியில் இருப்பவர்களில் யார் சீனியரோ அவர் பொறுப்புகளை ஏற்பவராக இருப்பார்.   வித்தியாசமான எந்த நிகழ்வு நடந்தாலும் அது பற்றி நேரம் குறித்து  Log Book-க்கில் பதிய வேண்டும்.

இயக்குனர்களில் யாருக்காவது அவருக்கு குறிப்பிட்டிருந்த  பணிக்காலத்தில்  வேறு சொந்த வேலை இருந்தால்   வேறு ஒருவருடன் தன் பணிக்காலத்தை மாற்றிக் கொண்டு அவர் வேலை செய்கிற நேரத்தில் இவர் வேலை செய்யலாம்.  இவர் வேலை செய்ய வேண்டிய நேரத்திற்கு அவர் வந்து விடுவார்.  பணி நேரங்களை இப்படி ஒருவொருக்கொருவர் மாற்றிக் கொள்வதற்கு தான் Exchange of Duty என்று பெயர்.  அதற்காக ஒரு ரிஜிஸ்டர் இருக்கும்.  அதில்  இருவரும் மாற்றுப் பணி நேரங்களுக்கு வருவதற்கு சம்மதமாக கையெழுத்திட்டு சூபர்வைசரிடம் அனுமதி கையெழுத்து வாங்கிக் கொண்டால் இந்த சடங்கு முடிந்து விட்டது என்று அர்த்தம்.

வெள்ளிக்கிழமை மாலையே அடுத்து வரும் வாரத்தில் யார் யாருக்கு எந்தந்த நேரத்தில் பணிக்காலம் என்பதைக் குறிக்கும் டியூட்டி சார்ட் ரிலீசாகி விடும்.  அது ரிலீசாவதே கோலாகலக் கொண்டாட்டமாக இருக்கும்.

மகளிர்கள்  ட்யூட்டி சார்ட் தொங்கும் இடத்தில் கூட்டமாக சேர்ந்து கொண்டு  மெல்லிய  குரலில் ஏகப்பட்ட கணக்குகளைப் போடுவார்கள்.   நோன்பு,  விசேஷங்கள், விருந்தினர் வருகை,  பண்டிகை என்று அவர்களுக்குத் தான் எவ்வளவு   சுமைகள் என்று பரிதாபமாகத் தான் இருக்கும்.  அடுத்த வார தங்கள் வேலைகளுக்கு ஏற்ப யாருடன்  தங்கள் பணி நேரத்தை மாற்றிக் கொண்டால் செளகரியமாக இருக்கும் என்பதில் குறியாக இருப்பார்கள்.

 "கனகராஜ் ஸார்!  நாளைக்கு எனக்கு  0610 ட்யூட்டி.  உங்க  1330-யை எனக்குத் தர முடியுமா?..  காலம்பற என் மாமியாரை கண் ஆசுபத்திரிக்கு கூட்டிகிட்டுப் போகணும்.."

"0610--ஆ!.."-- ஒரு வினாடி யோசித்து, கனகராஜ்,  "சரி, எழுதிக்கோங்க.." என்கிறார்.  அடுத்த நிமிஷத்தில் எக்ஸ்சேஞ்ச் ஆப் ட்யூட்டி ரிஜிஸ்தரில் எழுதப்பட்டு,  இருவரும் கையொப்பம் இட்டு, சூபர்வைசர்   அனுமதி கையெழுத்திட  ட்யூட்டி மாற்றல் முடிந்தாயிற்று..   அடுத்த நாள் கனகராஜ் காலை 0610-1330  பணிக்கு வந்து விடுவார்.

ஆண்களைப் பொருத்த மட்டில்  மாலை 1640 ட்யூட்டி, இரவுப் பணி இதெற்கெல்லாம் மவுசு ஜாஸ்தி.  தமிழ் நாட்டில்  திருச்சி, கோவை, சென்னை ஆகிய ஊர்களின் டிரங்க் எக்ஸ்சேஞ்சுகள்  முழுமையாக மகளிர் பணியாற்றும் இடங்களாக இருந்தன.   இரவு பணி அகால நேரத்தில் முடிந்து  பெரும்பாலும் காலையில் தான் வீட்டுக்குப் போவார்கள் என்பதினால்  இரவு  தங்கலுக்காக  கொசுவலையுடன் படுக்கை வசதி,  டைனிங் கால், ஏ.ஸி.-- என்று செளகரியங்கள்
எதிலும்  குறைவில்லாது  இருக்கும்.

இரவுப் பணி பார்த்தால் பகல் பூராவும் விடுமுறை மாதிரி தான்..  இந்த மாதிரியான செளகரியங்கள், தற்காலிக  விடுப்பு (casual leave) எடுக்க வேண்டிய அவசியத்தை கூடிய மட்டும் குறைத்து விடும்.  பத்திரிகைத்  துறையில் கால் பதிக்க எனக்கு இந்த மாதிரியான அனுகூலங்கள்  தாம் வரப்பிரசாதமாக இருந்தன என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்காமல் இருந்தால் அது பாவம்.

டிரங்க் போர்டில் பணியாற்றுவதும்  இறுக்கமில்லாமல்  ஏதோ பொழுது போக்கு போல இருக்கும்.  யார் அதிக டிரங்க் கால்களை டிஸ்போஸ் செய்கிறார்கள் என்று ஒருவருக்கொருவர் (குறிப்பாக மகளிருடன்) போட்டா போட்டி வேறே.  இந்த சந்தோஷத்தில் மாற்றி மாற்றி வெவ்வேறு ஊர்களுக்கான அழைப்புகளுக்கு இணைப்பு கொடுப்பது சிரமமில்லாமல் ஏதோ விளையாட்டு போல  ஒருபக்கம் நடந்து கொண்டே இருக்கும்.  'என்ன தவம் செய்தோம்,  இந்தப் பணி செய்ய!' என்ற நினைப்பு தான் மேலோங்கியிருக்கும்.  பணி நேரம் முடிந்தாலும், விடுமுறை நாள் என்றாலும் ஆண்கள் ரிக்ரேஷன் க்ளப்பில் தான் பழியாகக் கிடப்பார்கள்.  கேரம்,  செஸ்,  வார, மாத பத்திரிகைகள் என்று மனமகிழ் மன்றத்தில்   எந்நேரமும்  ஏக கொண்டாட்டமாக இருக்கும்.

எல்லா ஊர்களின் பெயர்களையும்  இரயில்வே துறை போலவே  ஆங்கில எழுத்துக்களில் சுருக்கமாக குறிப்பது  தான் தொலைபேசித் துறையில் வழக்கம்.   சென்னை என்றால் MS, கோயம்புத்தூர்  CBT,  திருச்சி TR,  சேலம்  SLM,  கல்கத்தா  CA,  புதுடெல்லி  ND, அந்நாளைய பம்பாய்  BY, வத்தலகுண்டு என்றால்  BTL,  மதுரை என்றால்  MA  ராமேஸ்வரம் என்றால்  RMS  --  என்பதாய்  சுருக்கமாக இருக்கும்.

சேலத்திலிருந்து கல்கத்தாவிற்கு  டிரங்க் கால் என்றால் சேலம் ஆபரேட்டர்  சென்னை பூக்கடை எக்ஸ்சேஞ்சில் பணியிலிருக்கும் ஆபரேட்டருக்கு அழைப்பை பதிவு செய்தவுடன் அவர் கல்கத்தா   தொலைபேசி எண்ணை சென்னையிலிருந்தே டிரங்க் போர்டில் டயல் செய்தவுடன் கல்கத்தா வீட்டில் தொலைபேசி ரீங்கரிக்கும்.   உங்களுக்கு சேலத்திலிருந்து  டிரங்க் கால் என்று தெரிவித்து சேலம் ஆபரேட்டருடன்  நேரடியாகத் தொடர்பு கொடுத்து விடுவார்.    சேலத்தில் கால் புக் பண்ணியவருடன்  கல்கத்தா நபரை இணைப்பில் இருத்தி  எவ்வளவு நேரம் பேசினார்கள்  என்று தன் வெள்ளை டிக்கெட்டில் குறிப்பதெல்லாம் சேலம் ஆபரேட்டரின் வேலை.  இந்த மாதிரி கல்கத்தா எண்ணை சென்னையிலிருந்தே டிரங்க் போர்டில் டயல் செய்வதற்கு  SLOD  (Single link Operator dialing)  என்று பெயர்.    SLOD-க்கு பிறகு MLOD  (Multi Link Opeator  dialing) அடுத்த கட்ட வளர்ச்சியாய் வந்தது.  சேலம் ஆப்ரேட்டர்  கோவை ஆப்ரேட்டர் துணையில்லாமலேயே  திருப்பூர் தொலைபேசி எண்ணை டயல் செய்வது இதற்கு உதாரணம்.

சென்ற பகுதியில் குறிப்பிட்டிருந்த  புதுவை கடைத்தெரு  PCO-விலிருந்து எம்ஜிஆர் அவர்களுடன் பேச வேண்டி பதிவு செய்திருந்த டிரங்க் கால் SLOD circuit-ல்  டயல் செய்தது தான்.  அதாவது சென்னை தொலைபேசி நிலைய ஆப்ரேட்டர் துணையில்லாமல் நேரடியாக புதுவை டிரங்க் போர்டிலிருந்து    எம்.ஜி.ஆரின் தொலைபேசி எண்ணை டயல் செய்தது.

புதுவை கடைத்தெரு தந்தி ஆபிஸில்  ஆனந்தன் என்ற அற்புதமான டெலகிராப்பிஸ்ட்  இருந்தார்.  56 வருடங்களுக்குப்  பின்னும்  இன்றும் அந்த அன்பரின் பெயர் நினைவுக்கு வருகிற அளவிற்கு நட்புக்கும் சுறுசுறுப்புக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர்.    எம்ஜிஆரின் தொலைபேசி எண்ணை டயல் செய்வதற்கு முன் கடைத்தெரு 110 PCO-வை ரிங் செய்து எம்ஜிஆருக்கு கால் புக் பண்ணின நபர் இருக்கிறாரா என்று கேட்டேன்.  "ஜீவி ஸார்.. இதோ அவரை பூத்துக்கு  ரெடியா அனுப்பிச்சிட்டேன்...  நீங்க கனெக்ஷன் கொடுக்கலாம்.." என்று  கிரீன் சிக்னல் கொடுத்தார் ஆனந்தன்.   அதன்படியே  அவர்  110 PCO  ஃபோனை எடுத்ததும்  நிச்சயம் பண்ணிக் கொண்டு, எம்ஜிஆரின்  தொலைபேசி எண்ணை டயல் செய்தேன்..  மறுமுனையில் "வணக்கம்.. தோட்டம்.." என்று மென்மையான குரலில் எம்ஜிஆர்..   "வணக்கங்க.. உங்களுக்கு  புதுச்சேரியிலிருந்து ஒரு PCO கால். கொடுக்கலாமா?.." என்று கேட்டேன்.

"கொடுங்களேன்.." என்று அவர் சொன்னதும் "எம்ஜிஆர் லயனில்  இருக்கிறார். பேசுங்கள்.." என்று  சொல்லி விட்டு  கீயை க்ளோஸ் பண்ணி விட்டு ஸ்டாப்  வாட்சை
ஓடவிட்டேன்...  என்ன பேசினார்களோ, தெரியவில்லை..  பேச்சு  மூன்று நிமிடங்களை நெருங்கும் பொழுது,  மூடிய கீயைத் திறந்து,  "த்ரீ மினிட்ஸ் நியர்லி ஓவர்.." என்று நான் சொல்கையில் எம்ஜிஆரின் குரல் கேட்டது..  "ஐயா.. நீங்க காசு செலவு பண்ணிக் கொண்டு இங்கு வந்து என்னைப்  பார்ப்பது முக்கியமில்லை..  அதற்குப் பதில்
உங்கள் தாயாருக்கு  வேண்டியதை வாங்கிக் கொடுத்து  அவரை  பத்திரமாகக் கவனித்துக் கொண்டால் அதுவே எனக்கு மகிழ்ச்சி.. ஃபோனை வைச்சிடறேன், சரியா?.." என்று எம்ஜிஆர் சொல்லிக் கொண்டிருந்தது  எனக்குக் கேட்டது.

-- எம்ஜிஆரின் தாய்ப்பாசம்  இது தான்.  எல்லாத் தாய்மார்களிடமும் அவருக்கு ஆரம்ப காலங்களிலேயே நிறைய பரிவு இருந்தது என்பதற்காக இந்த நிகழ்வை இங்கு எழுத நேரிட்டது.

(வளரும்)


22 comments:

G.M Balasubramaniam said...

இப்போதைய கைபேசிகளூக்கு முன் ட்ரங் காலகளுக்காக பழிகிடந்தது நினைவுக்கு வருகிறத் சிலந்சேரங்களில் கனெக்‌ஷன் கிடைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்

Yaathoramani.blogspot.com said...

அருமை..நான் தேனியில் அனைத்து ஊழியர் சம்மேளனப் பொறுப்பில் இருந்த காலத்தில் தொலைதொடர்புத் துறை ஊழியர்கள் பலர் எனக்கு நெருங்கிய நண்பர்களாய் இருந்தார்கள்.அதன் காரணமாக நீங்கள் குறிப்பிட்ட அனைத்துச் சமாச்சாரங்களும் கொஞ்சம் பரிச்சியம் என்பதால் பதிவு படிக்க மிகுந்த சுவாரஸ்யமாய் இருந்தது..வாழ்த்துகளுடன்..

வெங்கட் நாகராஜ் said...

தொலைபேசி இணைப்புகளில் இருந்த கஷ்டங்கள் பற்றி விவரமாக நீங்கள் எழுதுவதால் தெரிந்து கொள்கிறோம். இப்போது நினைத்தால் எங்கேயும், யாரிடமும் பேசிவிடமுடிகிறது!

தொடரட்டும் உங்கள் நினைவலைகள்.

ஸ்ரீராம். said...

பணிநடைமுறைகள் சிக்கலாக இருக்கின்றன.  டிரெய்னிங் கொடுத்தே பணியில் சேர்த்திருப்பார்கள்.

ஸ்ரீராம். said...

// இரவு 2030-க்கு  மேலே  இயக்குனர்களின் ராஜ்யம் தான்.//  என்றால் என்ன?!!  இரவுப்பணியில் தூங்க நேரம் கிடைக்குமா?  அந்நேரத்தில் கால் வந்தால் என்ன செய்வார்கள்?

ஸ்ரீராம். said...

எம் ஜி ஆர் அனுபவம் சுவாரஸ்யம்.  அப்போது எம்ஜி ஆரின் குரல் தொண்டை ஆபரேஷனுக்குப்பின்னா?  முன்னா?

வே.நடனசபாபதி said...

நினத்தபோது வெளியூருக்கு தொலைபேசியில் பேச, தொலைபேசி இணைப்பகத்தை தொடர்பு கொண்டு பேசியபோதெல்லாம், ஒரு இணைப்பைத் தர இவ்வளவு வேலைகள் உள்ளன என்றும், அதற்காக ஊழியர்கள் இரவு பகல் பாராது உழைக்கிறார்கள் என்பது தெரியாமல் போயிற்று,

இன்றைய தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் எவ்வாறு சிரத்தையோடு துல்லியமாக பணிபுரிந்திருக்கிறீர்கள் என்பதை அறியும்போது வியப்பாக இருக்கிறது. உங்களுக்கும் உங்களோடு நேரம், காலம் பார்க்காது பணிபுரிந்த மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுகள்!

தொடர்கிறேன்.

ஜீவி said...

@ ஜிஎம்பி

இப்பொழுது கைபேசிக்கு முன் எஸ்.டி.டி. கால்கள் ஸிஸ்டம் தானே இருந்தது?.. அதில் வெளியூருக்கு நீங்களாகவே டயல் செய்து கொள்ளும் வசதி தானே எந்த சிரமமும் இல்லாமல் இருந்தது?.. எதற்கு பழி கிடந்தீர்கள் என்று தெரியவில்லை.

இன்றைய கைபேசி காலத்தில் கூட நினைத்தவுடன் சில சமயங்களில் தொடர்புகள் பூர்த்தியாவதில்லை. நாம் கூப்பிடுகிறவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்,
தொடர்பு கொள்ள விரும்பவில்லை, வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் தெரியப்படுத்துவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், அல்லவா?

அந்தக் காலத்திலாவது உங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்த அப்பாவி அரசு ஊழியர்கள் இருந்தார்கள். இன்று கைபேசி யுகத்தில் அதுவுமில்லை. மிஷினிடம் கோபப்பட்டால் உங்கள் டென்ஷன் தான் எகிறும்.

அடுத்த பகுதியில் ஒரு டிரங்க் கால் எப்படி பேசி முடிக்கப்படுகிறது என்பதை விவரமாகச் சொல்கிறேன். அப்புறம் இந்த பழி கிடந்த துயரம் இல்லாமல் போய்விடும்.

அடுத்த பகுதியை தவற விடாமல் படித்து விடுங்கள், ஜிஎம்பீ சார்.


ஜீவி said...

@ Yaathoraman

வணக்கம், நண்பரே! தங்கள் முதல் வருகைக்கு நன்றி.

'அனைத்து ஊழியர் சம்மேளனம்' பற்றி நீங்கள் குறிப்பிட்டதில் மிகவும் மகிழ்ச்சி. எனது தொழிற்சங்க தொடர்புகளும் பரந்து விரிந்தது. அதனால் நீங்கள் சொல்ல வந்தது புரிகிறது. தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன். உங்கள் மனசில் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வேண்டுகிறேன். நன்றி.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

தொடர்ந்து வாசித்து வருவதற்கும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நன்றி, வெங்கட்.



ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

ஆமாம், ஸ்ரீராம். இரண்டு மாதம் பயிற்சி வகுப்புகள் இருந்தன தான். தபாலாபிசிலிருந்து தொலைபேசிக்கு வந்த பொழுது கோவையில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றதை என் முன் பகுதிகளில் குறிப்பிடிருக்கிறேன்.

ஆனால் பயிற்சி வகுப்புகளின் போது எல்லாம் கேட்டுக் கொள்கிற விஷயமாகவும், கேள்வி- பதில் ரூபத்திலும் இருக்கும். நடைமுறை வேலையில் நாமே ஈடுபட்டு யதார்த்த அனுபங்கள் ஏற்படும் பொழுது எல்லாம் சிரமமில்லாமல் பழகிப் போய் விடும்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

ஹாஹா.. இயக்குனர் ராஜ்யம்! பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா போலத் தான்!
ஒரு சுதந்தர உணர்வைச் சொல்ல வந்தேன்.

பகல் நேரத்தில் சூபர்வைசர்கள், சீனியர்கள் என்று டிரங்க் போர்டைச் சுற்றி வளைய வந்து கொண்டிருப்பார்கள். அந்த கட்டுப்பாட்டு உணர்வுகள் இரவு எட்டரை மணிக்கு மேல் இல்லாது இருக்கும் சுதந்திர உணர்வு அது.

'நமக்கு நாமே' மாதிரி ஒத்த வயது கொண்டோர்கள், தங்களுக்கு தாங்களே பொறுப்புகளைச் சுமந்து தங்கள் வழிகளில் விஷயங்களை கையாண்டு தீர்வு காணும், சுய அனுபவங்கள் பெறும் காலம் அது! தன்னந்தனியாக இரவுப் பணி பார்க்கும் நேரங்களில் இந்த 'ராஜ்ய' அனுபவங்கள் தாம் கைகொடுக்கும்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

//இரவுப்பணியில் தூங்க நேரம் கிடைக்குமா? அந்நேரத்தில் கால் வந்தால் என்ன செய்வார்கள்?//

சென்னை, கோவை மாதிரியான பெரிய ஊர்களில் பத்துக்கும் மேற்பட்டோர் இரவுப் பணியில் இருப்பார்கள். டிராங்கால் டிராஃபிக்கும் இருந்து கொண்டே இருக்கும். அதனால் வேலை நேரமே சரியாக இருக்கும்.

அதற்கடுத்த சின்ன ஊர்களில் தொட்டு தொட்டு அரைமணி நேரத்திற்கு ஒருதடவையாவது கால்கள் வந்து கொண்டிருக்கும். அழைப்புகளைப் பதிவு செய்து கனெக்ஷன் கொடுத்து என்று முடிந்த பிறகு தான் நிம்மதி. தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தால்
தூக்க உணர்வே இல்லாது போய் விடும்.

இரவு நேரங்களில் சில அவசர கால்கள் வருவது சகஜம். லோக்கல் போர்டில் இருந்தால் பிரசவங்களுக்கு ஆம்புலன்ஸ் அழைத்தல், ஃபயர் சர்வீஸ், ஆஸ்பத்திரி கால்கள் என்று இருக்கும்.

பொதுக்கூட்டங்கள், பிரபலங்கள் வருகை இந்த மாதிரி சமயங்களில் கூட்டங்கள் முடிந்த பிறகு உள்ளூர் ப்ரஸ் ரிப்போர்ட்டர்கள் பத்திரிகை அலுவலங்களுக்கு அடுத்த நாள் செய்தித்தாள் செய்திக்காக தொடர்பு கொள்ளல் இருக்கும்.

பகல் நேரம் போல ஹைட் செட்டை மாட்டிக் கொண்டு டிரங்க் போர்ட் சுழலும் நாற்காலியில் தான் உட்கார்ந்திருக்க வேண்டும் என்ற அவசியம் வேண்டுமானால் இல்லாமல் இருக்கும்.

பெரிய பெரிய டேபிள்கள், வாகான மர நாற்காலிகள் இருக்கும். இரவு இரண்டு மணியிலிருந்து நான்கு வரை என்பது எப்படிப்பட்டவரையும் அயர வைக்கும் நேரம். அந்த நேரங்களில் லேசாக விழிகளை மூடிய படி நாற்காலிகளில் சாய்ந்தோ, மேஜையில் ஒருக்களித்தபடியோ கிடக்கும் பொழுது ஃபேன் வேகமாக சுழலும் சப்தமும், கடிகார 'டிக்டிக்' ஓசையும் தான் கேட்டுக் கொண்டிருக்கும்.

டிரங்க் போர்டில் பொருத்தியிருக்கும் நைட் அலாரம் உண்டு. லேசாக கண்கள் சுழற்றி அயர்ந்து விட்டாலே ஆபத்து தான் டிரங்க் சர்க்யூட்டில் வெளியூரிலிருந்து யாராவது கூப்பிட்டாலோ, லோக்கலில் எவராவது தன் வீட்டு தொலைபேசியிலிருந்து டிரங்க் புக்கிங்கிற்காக அழைத்தாலோ நைட் அலாரம் கர்ண கடூரமாக அலறி திடுக்கிட வைக்கும். அந்த நிசப்த சூழலில் உடனே ஓடிப்போய் அதை நிறுத்தினால் தான் நிம்மதிப்படும். நிறுத்தி விட்டு யார் கூப்பிட்டார்களோ அவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டும். அந்த அழைப்பை தொடர்பு கொடுத்து முடிக்கிற வரையில் தூக்க கலக்கமெல்லாம் போயே போச் தான்!

இந்த மாதிரி intermediate disturbance மூளைப் பகுதிக்கு மிகவும் ஆபத்தானது. அதனால் பெரும்பாலும் பகலில் தூக்கி இரவில் சமாளிது விடுவது வழக்கம். என்னை பொறுத்த மட்டில் இரவு ட்யூட்டிக்கு லைப்பரியிலிருந்து எடுத்து வரும் புத்தகங்கள் தான் துணை. காஞ்சீபுரத்தில் இரவு ட்யூட்டி பார்க்கும் காலங்களில் பாலகுமாரனின் நாவல்கள் தாம் துணையாக இருந்திருக்கின்றன.

இரவு நேர பஸ்களை இயக்குபவர்கள், இரயில் டிரைவர்கள், விமான டிகள் எல்லோருமே
நமது பரிவுக்குரியவர்கள். தூக்கம் என்பது இயற்கையின் ஆளுகை. என்னதான் பகலில் தூங்கினாலும் இரவு நேரத் தூக்கம் போல உடல் நலனுக்கு உகந்தது எதுவும் இல்லை.

ஜீவி said...

* ஹெட் செட்டை மாட்டிக் கொண்டு

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//அப்போது எம்ஜி ஆரின் குரல் தொண்டை ஆபரேஷனுக்குப்பின்னா? முன்னா? //

முன்னர் தான். இது 1964-வாக்கில் நடந்தது. 1965 பொழுது பவானிக்கு வந்து விட்டேன்.
எம்ஜிஆர் சுடப்பட்ட நாளன்று பவானி தொலைபேசி நிலைய அனுபங்களை ஏற்கனவே எழுதிவிட்டால் தங்களுக்கு இந்த ஐயம் ஏற்பட்டிருக்கலாம்.

ராமாவரம் தோட்ட வீட்டில் எம்ஜிஆர் இருந்தார் என்றால் பல நேரங்களில் அவரே தொலைபேசியை எடுத்திருக்கிறார். 'வணக்கம், தோட்டம்,," என்றே எப்பொழுதும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார். பிற்காலத்தில் தான் உதவியாளர்கள் தொலைபேசியைக் கையாளும் வழக்கமெல்லாம் வந்தது. 1970-க்கு பிறகு தான் தி. நகர் ஆற்காடு தெரு வீடு. அங்கு உதவியாளர்கள் தாம் தொலைபேசியை எடுப்பார்கள்.

ஜீவி said...

@ நடன சபாபதி

'இன்றைய தொழில் நுட்பம் இல்லாத காலத்தில்' என்று நீங்கள் சொல்லியிருப்பது தான் முக்கியமான விஷயம். வியாபார நோக்கத்தில் தொலைபேசி வெகுவாக உபயோகத்தில்
இருந்தது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் எளிய மக்களின் பயன் பாட்டுக்கு மிகவும் உதவியாக இருந்தது.. ஃயயர் சர்வீஸ், அரசு மருத்துவமனை அவசரப் பிரிவு எண்கள் போன்ற சில அவசர எண்கள் பழுது ஏதும் இல்லாது இருக்கிறதா என்று தினமும் சோதிக்கப்படும். அந்நாட்களில் எளிய மக்களின் ஆபத்து கால சேவைகளுக்கு தொலைபேசியே முக்கியமான தொடர்புச் சாதனமாக இருந்தது.

இந்த யுகம் வேறே மாதிரி. இதில் அதைப் பொருத்திப் பார்க்கும் பொழுதும் அந்நாளைய தொலைபேசி உபயோகங்களின் மேன்மை தெரியத்தான் செய்கிறது. தங்கள் பாராட்டிற்கு நன்றி, ஐயா.

துரை செல்வராஜூ said...

என்ன ஒரு சந்தோஷமான மலரும் நினைவுகள்!...

மனிதாபிமானம் மிக்க மேன்மையான நாட்கள்...

வல்லிசிம்ஹன் said...

ஜீவி சார்,
அருமையான அனுபவங்கள்.
பெண்கள் வேலை செய்யும் பாங்கைக் கண்டு
அதிசயமாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தது.

நான் டிரங்க் கால் பேசின நாட்களில் அன்பாகப்
பேசிய குரல்களைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். காலையில்
6 மணிவாக்கில் பேசினால் ஏதோ குறைவான கட்டணம் என்று
நினைவிருக்கிறது.

ரெக்ரியேஷன் க்ளப்பிற்கு வரும் பத்திரிக்கைகள்
எனக்குதான் முதலில் கிடைக்கும்.
உடனே படித்துவிட்டு ஓசைப்படாமல் அலுவலகத்தில் வைத்துவிடுவேன்.
மிக முக்கியமான வரலாற்றுத் தொடர்
உங்களுடைய இந்தப் பதிவு.
மனதுக்கு நெருக்கமான துறை. மிக மிக நன்றி சார்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இவைபோன்ற அனுபவங்கள் என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும். நீங்கள் பகிரும்போது எங்களுக்கு மேலும் மகிழ்ச்சி.

ஜீவி said...

@ துரை செல்வராஜு

ஆமாம், அருமையான நாட்கள் அவை. மத்திய அரசு வேலையில் பணியில் சேர்ந்தது,
இளம் பருவ நாட்கள் எல்லாம் சேர்ந்து கொண்டன.

தாங்கள் வாசித்து கருத்து சொன்னமைக்கு நன்றி.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

மகளிர் என்றுமே தொலைபேசி இலாகாவின் மதிப்புக்கும் அதன் சிறப்பான செயல் பாட்டிற்கும் தொழிற்சங்க பங்களிப்பிற்கும் பெரும் தொண்டாற்றியிருக்கிறார்கள்
இலாகாவும் அவர்களுக்கான சிறப்பு சலுகைகளில் பெரும் ஒத்துழைப்பை நல்கியிருக்கிறது.

தங்கள் வாசிப்பு பகிர்தலுக்கு நன்றி, வல்லிம்மா.

ஜீவி said...

@ Dr. B. Janbulingam

தங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி, ஐயா. பகிர்ந்தலில் விளையும் சந்தோஷமே தனி தான். அதைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Related Posts with Thumbnails