பகுதி-- 10
---இந்த இடத்தில் தான் சிலப்பதிகாரக்
காப்பியத்தில் தற்கால நாவல் போக்கில் காணபடுவதே போன்ற ஒரு அழுத்தமான முடிச்சு
விழுகிறது. காவிரியை பார்த்து தன் காதல்
மனைவி கண்ணகி நினைப்பில் பாடிய கோவலன், சோழமன்னனை காவிரியின் கணவனாய்க் கொண்டு மாதவி பாடிய கானல்வரிப் பாட்டில்
இவளும் இன்னொருவனை நினைத்துப் பாடுகிறாளே’ என்று கொதிப்பு கொண்டான். ஆற்றாமை அவனை
அள்ளி விழுங்கியது.
கோவலன் இன்னொருத்தியை மனசில் நினைத்துப் பாடுகிற மாதிரி யாழிசைத்துப் பாடி முடித்ததும்
மாதவியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.
கோவலனின் அருகாமை கிடைக்கும் போதெல்லாம் மகிழ்ந்திருப்பதைப் போலவே
வெளிக்குக் காட்டினா;லும் உள்ளத்தின் உள்ளே ஊடல் கொண்டவளாய் கோவலனின் கையிலிருந்த
யாழை வாங்கினாள். வாங்கி அதை. மீட்டி, அவனுக்கு எந்தவிதத்திலும் கானல்வரி பாடல்
பாடுவதில் தானும் சளைத்தவள் அல்ல என்று காட்டும் வித்த்தில் பாடத் தொடங்கினாள்.
பாடலுக்கான உட்பொருளை கோவலனே
கொடுத்திருந்த்து அவளுக்குக் கொண்டாட்டமாகியது.. அதே பொருளில் அவள் இசைப்பதற்கும் அதுவே சுலபமும் ஆயிற்று.
மாதவிக்கும் வழக்கமான இளங்கோவின் கணக்குப்படி
மூன்று தான். கோவலன் பாடியதற்கு மாற்றுப்
பாடலாக மாதவி தன் முதல் பாடலிலேயே பூடகமாக உள் அர்த்தத்தைச் சொருகிப்
பாடுகிறாள்.
“காவிரிப் பெண்ணே! இருமருங்கிலும் வண்டுகள் ரீங்கரிக்க, பூவாடை
போர்த்தி கயல் போலவான விழிகள் அசைத்து நீ அசைந்து வரும் அழகு தான் என்னே! உன் கணவன் சோழ மன்னனின் வளையாத
செங்கோலின் வல்லமையே அசைந்தாடி வரும் உன் அழகுக்கு அழகு சேர்த்ததோ?”” என்று மாதவியின்
உதட்டிலிருந்து கசிந்த இசையும் பாடலும் ஓர் உருக்கொண்டு இசைப்பாடலாய் அந்த இடத்தை
நிறைத்தது.
மாதவி பாடிய இந்த கானல்வரிப் பாட்டின்
ஆரம்பம் கோவலனுக்குப் புரிந்தும் புரியாததும் மாதிரி இருந்தது.
‘கற்பையே அணிகலனாய்க் கொண்ட பெண்கள்,
பிற பெண்டிருடன் தம் கணவர் கூடினாலும் அவர்களை வெறுக்க மாட்டார்கள்; அப்படி
வெறுக்காமல் இருபதும் அத்தகைய பெண்டிரின் கற்பின் சிறப்பே!’ என்று கோவலன் பாடியதற்கு
சரியான பதிலடி கொடுக்க வேண்டுமென்பது மாதவியின் எண்ணம். அதைத் தனது இரண்டாவது
பாடலில் குழைத்துத் தருகிறாள்: ‘
ஆடவரின்
ஒழுக்கமே பெண்ணின் கற்பிற்கு அடித்தளம்’ என்ற அர்த்த்த்தில் சோழனின் செங்கோல்
வழுவாத சிறப்பே காவிரியின் ஒசிந்து வரும்
நடையழகுக்கு காரணமாயிற்று’ என்பதைத் தான் பாடிய
பாட்டினுள் ஊடாடிய கருத்தாகக்
கொண்டாள் மாதவி.
மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
மணிப்பூவாடை அது போர்த்துக்
கருங்கயல்கண் விழித்து ஒல்கி நடந்தாய்
வாழி, காவேரி!
கருங்கயல்கண் விழித்து ஒல்கி
நடந்தவெல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன்
வாழி காவேரி!
பூவார் சோலை மயில் ஆலப்புரிந்து
குயில்கள் இசை பாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி
காவேரி!
காமர் மாலை அருகசைய நடந்த எல்லாம் நின் கணவன்
நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி
காவேரி!
‘காவிரிப் பெண்ணே! பூக்கள் நிறைந்த சோலையில் மயில்கள் ஆட, குயில்களோ இசை இசைக்க, மலைகள் இடையே நீ ஒயிலாய் அசைந்து அசைந்து வந்தனை!
பகைவர்க்கு அச்சம் தரும் சோழமன்னனின் வேலின் சிறப்பே உன் அசைந்து வந்த
நளினத்திற்குக் காரணம் என்பதை நானறிவேன் காவிரி!’’ என்று மாதவி ஊடலில் விளைந்த
சிணுங்கலில் உள் அர்த்த்த்தைப் பாட்டில் பொதித்து வைத்துப் பாடுகிறாள்!
---இந்த இடத்தில் தான் சிலப்பதிகாரக்
காப்பியத்தில் தற்கால நாவல் போக்கில் காணபடுவதே போன்ற ஒரு அழுத்தமான முடிச்சு
விழுகிறது. காவிரியை பார்த்து தன் காதல்
மனைவி கண்ணகி நினைப்பில் பாடிய கோவலன், சோழமன்னனை காவிரியின் கணவனாய்க் கொண்டு மாதவி பாடிய கானல்வரிப் பாட்டில்
இவளும் இன்னொருவனை நினைத்துப் பாடுகிறாளே’ என்று கொதிப்பு கொண்டான். ஆற்றாமை அவனை
அள்ளி விழுங்கியது.
காவிரியில் கோவலன் கண்ணகியைக் கண்டான்
என்றால், மாதவியோ நேரடியாக சோழ மன்னனையே காவிரியின் கணவனாக்கிப் பாடுகிறாள்.
மனத்திற்குள் அவளே காவிரியானது போல கோவலன் அர்த்தம் கொள்ளும்படிப் பாடுகிறாள்.
உரைநடை போலவே இந்த இடத்தில்
இளங்கோவின் வரிகள் வந்து விழுகின்றன:
--- எனக்கேட்டு,
கானல்வரி யான் பாடத் தான் ஒன்றின் மேல்
மனம் வைத்து
மாயப்பொய் பல கூட்டு மாயத்தாள்
பாடினாள் என
யாழிசை மேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்த்தாகலின்
உவவுற்ற திங்கள் முகத்தாளைக் கவ்வுக்கை
ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதீங்குக் கழிந்ததாகலின்
எழுமென்று உடனெழாது-----
‘பொழுது போயிற்று; புறப்படலாம், எழுக!’
என்று மாதவியிடம் கூறிவிட்டு எழுகிறான் கோவலன். எழுநதவன் தன்னுடன் மாதவியும்
வருகிறாள் என்று நினைத்தே ஏவலாளருடன் அவ்விடம் நீங்குகிறான். ஆனால் அவனுடன் மாதவி செல்லவில்லை. கோவலன் போன பின்னர் தான் மாதவி தன் நிலை
அறிந்து திகைக்கிறாள். இருந்தும் தன்
உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவள்
தோழிகளின் ஆரவாரம் அடங்குமாறு கை கவித்து உள்ளுக்குள் புழுங்கும் நெஞ்சத்துடன்
காதலனுடன் செல்லாது தனியே தன் இல்லம் அடைந்தாள்.
‘மாயப்பொய் பல கூட்டு மாயத்தாள்’ என்ற
வரியில் தனது அத்தனை உளைச்சலையும் கோவலன் கொட்டுவது போல அழுத்தமாக அந்த ஒற்றை
வரியைப் போடுகிறார் இளங்கோ. ‘மாய்ப்பொய் பல கூட்டு மாயத்தாள்!’—ஆஹா....
என்னே அர்த்தம் பொதிந்த வரி! கோவலனின்
வெள்ளை உள்ளத்தில் கரும் புள்ளி விழுந்து விட்டதைத் துல்லியமாகத் தொட்டுக்
காட்டுகிறார் அடிகளார்!..“ஊழிற் பெருவலி யாவுள?’ என்னும்
பிற்காலத்து வள்ளுவர் சொன்னது நம் நினைவுக்கு வருகிறது.
‘பொழுது போயிற்று, புறப்படலாம், எழுக!’ என்று
மாதவியிடம் கோவலன் சொல்லும் பொழுதே அவளுடன் சேர்ந்து அவள் இல்லம் செல்லத்தான் அவன்
நினைத்திருக்கிறான் என்று புரிகிறது. ‘உடனெழாது...’ என்று ஒன்றை
வார்த்தையில் மாதவியின் அந்த நேர மன
நிலையை படம் பிடித்துக் காட்டுகிறார் இளங்கோ.
ஆண்களுக்கு நீடித்த ஊடல் என்று
எப்பொழுதுமே கிடையாது. சும்மாக்காச்சும்
புருபுருவென்று வரும் கோபம் அது. இன்னொரு
சுகமான ஆசையும் அந்த ஊடலோடையே ஒட்டிக் கொண்டிருக்கும். 'இந்த ஊடலின் முடிவு கூடல்
அல்லவா?’ என்று ஒரு கற்கண்டு ஆசை! ஊடல் என்பது
ஊடலுக்காகவே என்றும் அதுவும் கூடலுக்கு வழிநடத்திச் செல்லும் துணையே என்ற கற்பனை
கொடுக்கும் தணியாத தனிச்சுகம் அது! அதனால் ஆடவருக்கு ஆசையுடன் கூடியதான சாதாரண பொய்க்கோபம் தான், அவர்களின் ஊடல் என்று ‘பெரிய பெயர் கொள்கிறது..
ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல.
அழுத்தத்தில் வடிகட்டிய அழுத்தமானவர்கள் அவரகள் பொய்க்கோபத்திற்கும் நிஜக்
கோபத்திற்கும் அதிக இடைவெளி இல்லாதவர்கள். வித்தியாசம் தெரியாதவர்க்ள்.
பொய்க் கோபம் நிஜக் கோபமாவது அவர்களில் சர்வ சாதாரண நிகழ்வு. 'போகிற வரை போகட்டும், கடைசியில் அவன் மண்டியிடும்
வரை போகட்டுமே' என்று நினைக்கிற அகங்காரம் அது.
போதாக்குறைக்கு காதலரைத் துன்புறுத்திக்
காதல் கொள்வதும் ஊடலில் ஒரு கலை என்று எண்ணம் கொண்டவர்கள் பெண்கள். அவர்களுக்கு ஆண்களை எந்த நேரத்தும் தன் பிடியில் வைத்துக்
கொள்ளும் வசியக் கலை அது.. . ஆறாம் வேதத்தின் ஆரம்ப அத்தியாயமே
அவர்களுக்கு அது தான்!..
இந்த ஆண்—பெண் மனநிலைகளை மிகச் சரியாக
இந்த இடத்தில் உபயோகப்படுத்திக் கொள்கிறார் இளங்கோ. இன்றைய நாவலுக்கான கூறுகளை அன்றே அவரது
காப்பியத்தில் எவ்வலவு அழகாகப் பதித்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
தீவலம் வந்து மாமுது பார்ப்பான் முன்னிலையில்
தாலி கட்டிய திருமணத்தில் கோவலனுக்கு வாய்த்தவள் கண்ணகி. ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் மதிப்பு வாய்ந்த மாலையை
வாங்கியதற்கு ஈடாக வணிகர் வீதியில் அவனுக்குக் கிடைத்தவள் மாதவி.
ஆடவன் ஒருவன். ஆனால் அவனுக்கு வாய்த்த காதல் துணைகளோ இருவர். திருமண
பந்தத்தால் உறவானவள் ஒருத்தி... கொடுத்த
பொற்கழஞ்சுகளுக்கு ஈடாகப் பெறப்பட்டவள் இன்னொருத்தி.. அந்த இருவரும் வெவ்வேறு
நிலைகளில் அவனுக்கு உரிமையாகிறார்கள். இருவரிடம் தன் மனம் ஏங்கும் அன்பைப் பெறத் துடிக்கும் ஆடவனாக கோவலன் இடையே மாட்டிக் கொள்கிறான்.
விளையாட்டின் ஆட்டக்காரர்கள்
கண்ணகியும் மாதவியும். ஆட்ட சுகத்திற்காக அவர்கள் கையில் கிடைத்த பந்தாகிறான் கோவலன். பந்து, ஆட்டக்காரர் இருவர் கையிலும்
மாறி மாறிப் போவது இயல்புதான். ஆக மாதவி
விசிறி எறிந்த பந்து கண்ணகி கைக்குப் போகிறது.
ஊடலின் முடிவு கூடல் தான். இருந்தாலும் தப்பாட்டம் ஆடுகிறவர்களுக்கு
அப்படியே தான் முடிவு சாசுவதமாக இருக்கும் என்பதும் இல்லை.
(தொடரும்..)
.
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.
. .

