மின் நூல்

Friday, December 12, 2008

ஆத்மாவைத் தேடி...24

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


24. நானும் நானும்


கோதரி பூங்குழலி நளினமான தனது குரலில் தொடர்ந்து பேசலானார்.

"அனைத்து உயிர்களின் உள்ளேயும் இறைவன் இருக்கின்றான் என்கிற எண்ணமே மேலான செய்கைகளுக்கு நம்மை வழிநடத்திச் செல்லும்.
நம்மிடம் இருப்பது போலவே, அடுத்தவர் உள்ளத்திலேயும் அதே இறைவன் உறைந்திருக்கிறான் என்கிற நினைப்பு, 'தான்', 'தனது மேதமை' என்கிற மமதையை மண் போட்டு மூடச்செய்யும்.

"அவ்வளவு தூரம் போவானேன்?.. பரிசோதனையாக, தனது சின்னஞ்சிறிய குடும்பத்திற்குள்ளேயே, குடும்ப உறுப்பினர்களே ஒருவொருக்கொருவர் மதித்தல், விட்டுக் கொடுத்தல், உதவியாய் இருத்தல் போன்ற நாளும் விதவிதமான நல்ல செயல்களை புழக்கத்துக் கொண்டு வரத் தொடங்கினால், அந்த உயர்ந்த எண்ணங்கள் ஏற்படுத்தும் மாறுதலை நிதர்சனமாக உணரலாம். ஒவ்வொருவருக்கும் தொற்றிக்கொள்ளும் நல்ல சிந்தனை, அதன் நடைமுறைப்படுத்தல் ஏற்படுத்தும் மாற்றம் ஆச்சரியப்படத் தக்கது. அதை உண்ர்ந்தவரே அறிவர். சின்னஞ்சிறிய நமது குடும்பத்தில், அதை அனுபவப்படுத்தும் பொழுது, சின்னஞ்சிறிய நமது சொந்த 'லாப்'பில் பரிசோதனை செய்து பார்த்தத் திருப்தியும் நமக்கு ஏற்படும்.

"அடுத்த கேள்வி. நம் எல்லோரின் உள்ளத்திலும் இறைவன் இருக்கையில், ஏன் சில நேரங்களில் நமது குறைந்தபட்சக் கோரிக்கைகள் கூட நிறைவேறாமல் போவதன் காரணமென்ன?..

"முண்டக உபநிஷதத்தில் அழகான காட்சி ஒன்று வருகிறது. சுவாமி விவேகானந்தர் சொல்லிச் சொல்லிப் பரவசப்பட்ட காட்சி அது.

"பெரிய மரம் ஒன்று. அதில் இரண்டு பறவைகள் உட்கார்ந்திருக்கின்றன.
அச்சு அசலாக இரண்டு பறவைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. ஒன்று கீழ்க்கிளையில் என்றால், மற்றொன்று சற்று மேலே இருக்கும் மரக்கிளையில் அமர்ந்திருக்கிறது.

"இந்த நேரத்தில், கீழ்க்கிளையில் அமர்ந்திருக்கும் அந்த அழகுப்பறவை தன் அலகில் பழம் ஒன்றைக் கொத்திக்கொண்டு சுவைக்க முற்படுகிறது. இதோ, அதைக்கொத்திசுவைக்கவும் தொடங்கி விட்டது.

"மேல் கிளையில் வீற்றிருக்கும் பறவை கண்கொட்டாமல் பழத்தைத் தின்று சுவைக்கும் கீழ்க்கிளைப் பறவையை தேமேனென்று பார்த்துக் கொண்டிருக்கிறது.

"--கண்ணுக்குத் தெரிவது இந்தக் காட்சி. இந்தக் காட்சியின் விளக்கமாய் சொல்லப்படும் தத்துவ வெளிப்பாடு அழகு மிக்கது.

"மரம் மனித சரீரத்திற்கு உவமை. கீழ்க்கிளையில் பழத்தை ருசிக்கும் பறவை ஜீவன். பழம் தின்னும் பறவையைப் பார்த்துக் கொண்டிருக்கும் மேல்கிளைப் பறவை ஆத்மா. அனுபவிக்கும் இன்ப-துன்பங்களே பழம்.

"இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இன்ப துன்பத்தை அனுபவிப்பது ஜீவனே தவிர, ஆத்மா இல்லை. இதனால் தான் ஒரு இன்பம் என்றால் பாதாதிகேசம் மகிழ்ச்சி அலை பரவுகிறது. ஒரு துன்பம் எனில், உள்ளத்திலிருந்து ஆரம்பித்து உடல் வரை சோர்ந்து போகிறது.

"இன்பமோ துன்பமோ எதுவரினும் அதற்கேற்ப ஒரு அனுபவம் உண்டு. அந்த அனுபவத்தின் அனுபவத்திற்கேற்ப மனமும் புத்தியும் அவ்வவ்போது மாறுதல்களுக்கு உள்ளாகின்றன. புத்தியின் வழிகாட்டுதலாகவோ, அல்லாது மனத்தின் வழிகாட்டலாகவோ அன்றி இரண்டும் சேர்ந்து முடிவெடுக்கும் வழிகாட்டுதலாகவோ, செயல்பாடுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்தச் செயல்பாடுகளின் திரட்சி தான் கனிந்து ஒரு முழுமைபெற்ற சிந்தனையாக உருவாகிறது.

"இந்த முழுமைதான் ஒரு மனிதனை இறைவனிடம் நெருங்கச் செய்கிறது. இதற்கு ஒரு வழிகாட்டு என்று இறைஞ்சுகிறது.

"நெருங்கினால், மேல் கிளையில் இருக்கும் பறவையும் தானும் வேறல்ல, அதன் பிரதிபிம்பமே தானென்று கீழ்க்கிளைப் பறவை உணரும்; உணர்ந்து ஒளிமயமான மேற்பறவையுடன் கலந்து விடும். கலப்பது என்பது ஒன்றில் ஒன்று மேவி ஒன்றாவது. நிழல் நிஜத்தில் ஐக்கியமாவது; ஒரே ஜோதியாவது.

"ஆரோக்கியமான இந்தச் சிந்தனையிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். இன்பமோ, துன்பமோ இது சாஸ்வதமானதல்ல என்று தெரிகிறது. அதாவது நீடித்த துன்பமுமில்லை; நீடித்த இன்பமுமில்லை. கண்கட்டு வித்தையான இந்த உலக இன்பத்தை அனுபவிக்கும் அந்த நீட்சியின் கடைக்கோடியிலேயே துன்பம் காத்திருப்பது போலவே, துன்பத்திற்கு அடுத்து இன்பமும்.

"அதனால் ஒன்று செய்யலாம். இன்பமோ, துன்பமோ எதுவரினும் அதை அனுபவிக்கும் நம் மனதை ஒரு தயார்நிலையில் வைத்துக் கொள்ளலாம். தேனை மாந்துகிறேன் பேர்வழி என்று தேனீ, தேனில் மூழ்கி இறக்கைகள் நனைந்து பறக்கத் தத்தளிக்கும் அந்த அவலநிலை மாதிரி இல்லாமல், இன்பமோ, இல்லை துன்பமோ அதை எதிர்கொள்ளும் பொழுது அதில் மூழ்கிவிடாமல் தடுத்தாற்கொண்டால் போதும். இப்படிச் செய்வது மனவளமைக்கு ஆரோக்கியமளித்து, உடல் வலிமையை பாதுகாத்துப் பேணும்; இன்ப-துன்ப நிலையாமையைப் புரிந்து கொண்டு அதைச் சட்டைசெய்யாமல் சமமாகப் பாவிக்கும் மனப்பான்மையை உருவாக்கும். அடுத்துச் செய்ய வேண்டியதை ஆலோசிக்கும் திண்மையை மனசுக்குக் கொடுக்கும்.


"இதைத்தான் ஆன்மீகத்தில், இன்பமோ-துன்பமோ எதுவரினும் அதை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளுதல் என்கிறார்கள். தாமரை இலைத் தண்ணீர் மாதிரிவரும் வாழ்க்கையை எதிர்கொள்ளுதல் என்கிறார்கள். கொண்டாடிக் கூத்தாடுதலும் இல்லை; கூனிக் குறுகி நைந்து போதலும் இல்லை என்கிற நிலை. எதற்கேற்பவும் ஆன மனவலிமையைக் கொடுப்பவனும் அவனே.


"ஒன்று நிச்சயம். நம்மில் இருக்கும் இறைவனின் கட்டுப்பாட்டிலேயே அனைத்தும் நடக்கின்றன. அவனில் அடக்கம் பெற்ற சிந்தனை, வாழ்க்கையை வாழ்வதற்கு மட்டுமல்ல, ஏனோதானோ என்றில்லாமல் வாழ்வாங்கு வாழவும் வழிவகுக்கிறது.


"ஓம் ஆப்யாயந்து மமாங்கானி வாக்ப்ராணச் சக்ஷூ: ச்ரோத்ரம் அதோ பலமிந்த்ரியாணி ச ஸர்வாணி: ஸர்வம் ப்ரஹ்மெளபநிஷதம் மாஹம் பிரஹ்ம் நிராகுயாம் மா மா ப்ரஹ்ம நிராகரோத் அனிராகரணமஸ்து அனிராகரணம் கேsஸ்து: ததாத்மனி நிரதே ய உபநிஷத்ஸூ தர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து. ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி !!

-- என்பது கேன உபநிஷதத்தின் சாந்தி மந்திரங்களில் ஒன்று.

"என்னுடைய் அங்கங்களும், வாக்கும், பிராணனும் பலம்பெற்றுத் திகழட்டும்!கண், காது மற்றும் எல்லா இந்திரியங்களும் நன்கு இயங்கும்படி ஆற்றல் பெற்றிருக்கட்டும்!அனைத்தும் உபநிஷதங்கள் கூறுகின்ற பிரம்மமே!பிரம்மம் என்னை விட்டு விலகலாகாது!நானும் பிரம்மத்தை விட்டு விலகலாகாது!இந்த விடாத உறவுநிலை என்றும் நிலைபெறட்டும்!--என்று மேன்மேலும் பிரார்த்திக்கிறேன்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி !!"

பேராசிரியர் சகோதரி பூங்குழலி காகிதக் கத்தையின் அடுத்த பக்கத்தைப் புரட்டும் பொழுது சபையே இறைவனின் அருகாமையை உணர்ந்த உணர்வில் கட்டுண்டு கிடந்தது.


(தேடல் தொடரும்)




14 comments:

jeevagv said...

//வாழ்க்கையை வாழ்வதற்கு மட்டுமல்ல, ஏனோதானோ என்றில்லாமல் வாழ்வாங்கு வாழவும் வழிவகுக்கிறது. //
அருமையாகச் சொன்னீர்கள்!

திவாண்ணா said...

//அடுத்த கேள்வி. நம் எல்லோரின் உள்ளத்திலும் இறைவன் இருக்கையில், ஏன் சில நேரங்களில் நமது குறைந்தபட்சக் கோரிக்கைகள் கூட நிறைவேறாமல் போவதன் காரணமென்ன?..//

இதுக்கு சரியான பதில் சொன்னதா தோணலை.

பக்க அமைப்பில கொஞ்சம் கவனம் செலுத்தினா நல்லது. நாம டாக்குமென்ட்ல எழுதி பாக்கிறதும் இங்கே பாக்கிறதும் வேற வேற. குறிப்பா பத்தி முறிவுகள். கூடுதலா ஒரு வெத்து வரி தேவை.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"முண்டக உபநிஷதத்தில் அழகான காட்சி ஒன்று வருகிறது. சுவாமி விவேகானந்தர் சொல்லிச் சொல்லிப் பரவசப்பட்ட காட்சி அது."
எங்களையும் பரவசமூட்டிய காட்சியது... நன்றி ஜீவி

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
//வாழ்க்கையை வாழ்வதற்கு மட்டுமல்ல, ஏனோதானோ என்றில்லாமல் வாழ்வாங்கு வாழவும் வழிவகுக்கிறது. //
அருமையாகச் சொன்னீர்கள்!

நீங்கள் சொல்லும் அருமை, அனுபவத்தில் வந்த அருமையாகத் தெரிகிறது.
மிக்க நன்றி, ஜீவா!

Anonymous said...

Hello Sir,
//... நம் எல்லோரின் உள்ளத்திலும் இறைவன் இருக்கையில், ஏன் சில நேரங்களில் நமது குறைந்தபட்சக் கோரிக்கைகள் கூட நிறைவேறாமல் ...//
I think your point is not explaining God, but explaining the importance of body, and not quitting it until the purpose is achieved.
I think the point is well made,
Thanks,
Vetri.
(Sorry for typing in english)

ஜீவி said...

திவா said...
//அடுத்த கேள்வி. நம் எல்லோரின் உள்ளத்திலும் இறைவன் இருக்கையில், ஏன் சில நேரங்களில் நமது குறைந்தபட்சக் கோரிக்கைகள் கூட நிறைவேறாமல் போவதன் காரணமென்ன?..//

//இதுக்கு சரியான பதில் சொன்னதா தோணலை.

பக்க அமைப்பில கொஞ்சம் கவனம் செலுத்தினா நல்லது. நாம டாக்குமென்ட்ல எழுதி பாக்கிறதும் இங்கே பாக்கிறதும் வேற வேற. குறிப்பா பத்தி முறிவுகள். கூடுதலா ஒரு வெத்து வரி தேவை.//


வாருங்கள், திவா சார்!
நீங்கள் சொல்ல வந்தது புரிகிறது.
பேராசிரியை பூங்குழலி ரொம்பவும் அனுபவப்பட்டவர். மனசில் உருவாகும் எண்ணத்தை எழுத்தின் மூலமாக வெளிப்படுத்துவது அவருக்கு சுவாசிக்கிற மாதிரி.

'இதுக்கு சரியான பதில் சொன்னதா தெரியலை'-- கதையாக பதில் தொடர்கிறது. சில செய்திகள், கட்டுரை மாதிரி. சில செய்திகள் கதை மாதிரி என்றால், இந்தத்
தொடர் சில செய்திகளை அலுப்புத் தட்டாமல் சொல்வதற்காக கதை
வேஷம் தரித்திருக்கிறது.

முழுக் கதையும் முடியும் பொழுது
சிந்திய வியர்வையின் வாசம் புரியும்.

வருகைக்கும் தங்கள் ஆர்வத்திற்கும்
மிக்க நன்றி, ஐயா!

ஜீவி said...

கிருத்திகா said...
//"முண்டக உபநிஷதத்தில் அழகான காட்சி ஒன்று வருகிறது. சுவாமி விவேகானந்தர் சொல்லிச் சொல்லிப் பரவசப்பட்ட காட்சி அது."
எங்களையும் பரவசமூட்டிய காட்சியது... நன்றி ஜீவி//

அப்படியா, கிருத்திகா!
உணர்வு பூர்வமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. எழுதுவதை திரைப்படம் போல மனசில் ஓட்டிப் பார்க்கத் தெரிந்தவர்கள், சந்தேகமில்லாமல் பாக்கியசாலிகள் தாம்!

படிப்பவர் அடைந்த பலன், அதைச் சொல்லித் தெரியும் பொழுது படைப்பவர்க்கும் மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.
வாழ்வன் பலன் நிதர்சனமாகத் தெரிகிறது.
மிக்க நன்றி.

ஜீவி said...

Anonymous said...
Hello Sir,
//... நம் எல்லோரின் உள்ளத்திலும் இறைவன் இருக்கையில், ஏன் சில நேரங்களில் நமது குறைந்தபட்சக் கோரிக்கைகள் கூட நிறைவேறாமல் ...//
I think your point is not explaining God, but explaining the importance of body, and not quitting it until the purpose is achieved.
I think the point is well made,
Thanks,
Vetri.

ஓ, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கதை நிகழ்ச்சிகளாக இதற்கான பதிலைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மிக்க நன்றி, ஐயா!

திவாண்ணா said...

கதையாக பதில் தொடர்கிறது.//

அப்ப சரி! :-)

ஜீவி said...

திவா said...
கதையாக பதில் தொடர்கிறது.//

அப்ப சரி! :-)//

அப்ப தொடர்ந்து படிக்கணும், சரியா?

Kavinaya said...

//சுவாமி விவேகானந்தர் சொல்லிச் சொல்லிப் பரவசப்பட்ட காட்சி அது.//

நானும் ரசித்தேன் ஐயா. எளிமையான சித்தரிப்பு.

//நம்மிடம் இருப்பது போலவே, அடுத்தவர் உள்ளத்திலேயும் அதே இறைவன் உறைந்திருக்கிறான் என்கிற நினைப்பு, 'தான்', 'தனது மேதமை' என்கிற மமதையை மண் போட்டு மூடச்செய்யும்.//

நன்றாகச் சொன்னீர்கள்.

ஜீவி said...

கவிநயா said...
//சுவாமி விவேகானந்தர் சொல்லிச் சொல்லிப் பரவசப்பட்ட காட்சி அது.//

நானும் ரசித்தேன் ஐயா. எளிமையான சித்தரிப்பு.

//நம்மிடம் இருப்பது போலவே, அடுத்தவர் உள்ளத்திலேயும் அதே இறைவன் உறைந்திருக்கிறான் என்கிற நினைப்பு, 'தான்', 'தனது மேதமை' என்கிற மமதையை மண் போட்டு மூடச்செய்யும்.//

நன்றாகச் சொன்னீர்கள்.


வாருங்கள், கவிநயா!
தொடர்ந்த வருகைக்கும், வாசித்து, வாசித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

எனக்குப் பிடித்த உபநிடதக் கதை ஐயா இது.

ஜீவி said...

குமரன் (Kumaran) said...
//எனக்குப் பிடித்த உபநிடதக் கதை ஐயா இது.//

ஆஹா! மிகவும் மகிழ்ச்சி குமரன்!

Related Posts with Thumbnails