மின் நூல்

Tuesday, December 16, 2008

ஆத்மாவைத் தேடி....26

ஆன்மீகத்தின் அடுத்த கட்டம் நோக்கி....

26. மரக்கிளைப் புறாக்கள்

கிருஷ்ணமூர்த்தி புரண்டு படுத்தார்.

ஒரே பக்கத்தில் படுத்திருந்ததினால் சீரான சுவாசம் தடுமாறியதோ என்னவோ தெரியவில்லை, இடது பக்கம் திரும்பி இடது பக்க புஜத்தை தலைக்கு அண்டை கொடுத்தமாதிரி படுத்தது செளகரியமாக இருந்தது.
இடையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு வெற்றிலை போட்டுக் கொள்ளலாமா என்று லேசாக மனசில் அரும்பிய நினைப்பு, அயர்ந்த தூக்க சுவாரஸ்யத்தில் அடிபட்டுப் போயிற்று. வலது கை, தலையணைக்கு பக்கத்தில் ஞாபகமாக படுக்கும் பொழுதே வைத்து விட்டுப் படுத்த வெற்றிலைப் பெட்டியைத் தொடமட்டும் செய்து விலகிக் கொண்டது. ஆழ்ந்ததூக்கம் அதல பாதாளத்திற்கு இழுத்துக் கொண்டு போகிற மாதிரியான உணர்வில் உடல் தளர்ந்து போயிற்று.


தஞ்சாவூர் ராணி வாய்க்கால் தெரு. மகாராஜாக்கள் காலத்தில் ராஜாங்க உபயோகத்தில் இந்தப் பகுதியே இருந்தன என்று சொல்லிக் கொண்டார்கள். அந்த தெருவையே அடைத்துக் கொண்டிருந்த அரண்மனை மாதிரியான வீட்டை தனித் தனியாக நான்கு போர்ஷன்களாகப் பிரித்துத் தடுத்திருந்திருந்தார்கள். வீட்டிற்குள் நுழையவே தூக்கிக் கட்டியிருந்த பத்து, பன்னிரண்டு படிக்கட்டுகளில் ஏறித்தான் வாசல் பக்கக் கதவை அடையவேண்டும்.


எப்பொழுது வந்தோம் என்று தெரியவில்லை; ஏன் இங்கு வந்தோம் என்றும் நினைவில்லை. ஆனால் ரயிலில் வந்தது, புகைக்கக்கிய ரயில் வண்டியின் இன்ஜின் தோற்றம், வெள்ளை உடுப்பு நபர் பச்சைக் கொடியை சுருட்டி கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, சிவப்புக் கொடியை பிளாட்பாரத்தில் நின்று கொண்டு வீசிவீசி ஆட்டியதும் ரயில் நின்றது, மூட்டை முடிச்சுகளை போர்ட்டர் தூக்கிக் கொண்டு அண்ணாவோடு ஸ்டேஷன் வாசலுக்கு வந்து மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டது நினைவில் ஓடுகிறது. மன்னி பக்கத்தில் ஒண்டி உட்கார்ந்த பொழுது, வண்டிக்காரன் உட்காரும் இடத்திற்கு மேலேயும், வண்டி பின்பக்கமும் வண்டிக்கூடு வளைஞ்சு இருந்தது கூட தீர்க்கமா நினைவுலே தட்டுப்படறது.


பெரிய மாக்கல்சட்டி. கழுத்து வரைக்கும் வெள்ளைவெளேரென்று தயிர் சாதம். குவிச்சு வைச்சிண்டிருக்கற கையிலே மன்னிதான் சாதத்தை உருட்டிப் போடறா. இடைஇடையே வறுத்த மோர்மிளகாயை வேறு நசுக்கி நசுக்கி வைக்கறா.

"மாலு! வத்தக் குழம்பு கூட இருக்கு. போடட்டுமா?"

மாமா பெண் மாலினி "போடுக்கா.." என்கிறாள்.

கரண்டி எடுத்து குழம்பை அவளுக்கு ஊத்திட்டு, "கிருஷ்ணா! உனக்குடா?"

"சரி. மன்னி"ன்னு கையிலே போட்ட சாதத்தைக் குவிச்சிக்கிறேன். கல்சட்டி தயிர்சாதம் தேவாமிர்தமா இருக்கு. வத்தக் குழம்பு புளிப்பு சேர்ந்த தித்திக்கற காம்பினேஷன்.

"இன்னிக்கு வாழைப்பூ கறி இல்லையா?.. அதான் வாழைப்பூ மடல் கூட இருக்கு. அதிலே போட்டு சாப்பிடறேளா?"

சாதம் வாயில். பதில் சொல்ல முடியாமல் ரெண்டு பேரும் தலையை ஆட்றோம். இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்னு மன்னி சட்டி சாதத்தையும் எங்களுக்குப்போட்டு காலிபண்டிட்டா.

சாப்பாட்டுக் கடை முடிந்ததும், ரேழி பெருக்கி பெரிய பெரிய பாய் விரிக்கிறாள் மாலினி. தட்டி தலையணை கூட போட்டாச்சு.

"கிருஷ்ணா.. உனக்கு என்ன கதை வேணும்?.. ஈசாப்பா.. தெனாலிராமனா?"

"தெனாலிராமன் தான் நேத்திக்கு பாதிலேயே நிறுத்திட்டியே.. பாக்கி சொல்லலையே, மாலு?"- என்று நினைவு படுத்திக் கொண்டு தலைசாய்த்துத் திரும்பறேன்.

அடுக்களை வேலையெல்லாம் முடிச்சிண்டு மன்னியும் வந்திட்டா. "ஏண்டா..கிருஷ்ணா! மாலு விட்டதிலேந்து, நா முடிக்கலையா?.. மறந்திட்டையா?"

"இன்னிக்கு நீதான் எங்களுக்குக் கதை சொல்லப் போறியாம்.. என்ன, சரியா?"

"வந்து...வந்து.."ன்னு இழுத்து "எனக்குச் சொல்லத் தெரியாதே" ங்கறேன்.

"சரிடா.. நான் சொல்றேன்" என்று மாலு பெரிய மனுஷி மாதிரி சொல்றா. "சிபி சக்கரவர்த்தி கதை சொல்லட்டுமா?"

"ஊம்.."

பாய் விரிச்ச இடத்துக்கு நேராவே, முறுக்குக்கம்பி போட்ட பெரிய பெரிய ஜன்னல்... ஜன்னல் வழியா நிலா தெரியறது. முழுசா பெரிசா பளிச்சின்னு தெரிஞ்சிட்டு பக்கத்து சந்து மரத்துக்குப் பின்னாடி மறைஞ்சிடுத்து.
மரத்திலே புறா மாதிரி ஒரு பறவை உட்கார்ந்திருக்கு. ஒண்ணு இல்லே, ரெண்டு. கீழே ஒண்ணு; மேலே ஒண்ணு.

திடீர்னு பேராசிரியர் பூங்குழலி குரல் கணீர்னு கேக்கறது. "மேலே இருக்கற பறவை தான் ஆத்மா.. கீழே இருக்கறது..."

"ஜீவன்.."ன்னு சொல்லப் போறத்தே சட்டுனு விழிப்பு வந்திடுத்து.

கிருஷ்ணமூர்த்தி இப்பொழுது நன்கு விழித்துக் கொண்டு விட்டார்... திறந்து வைச்சிருந்த ஜன்னல் வழியா படுத்துக்கொண்டே பார்த்தார். நிலா தெரியலே. கண்டது, கனவா?..

'அப்பாடி..ராணி வாய்க்கால் தெருன்னா, அப்போ ஆறு-ஏழு வயசு இருக்குமா?....யோசிச்சார். அப்போ நடந்தது, படம் பிடிச்ச மாதிரி இப்போ நினைவுத் திரைலே ஓடறது.

அண்ணாவும் இல்லே, மன்னியும் இல்லே, இப்போ.. மாலு பெங்களூர்லே இருக்கா, பேரன் பேத்தியோட. புருஷன் எச்.ஏ.எல்.லேந்து ரிடையர்டு.

எப்பவோ பெங்களூர் போயிருக்கறச்சே, "மாலு..எவ்வளவு வருஷமாச்சு.. எனக்கு ஈசாப் கதை சொல்றையா?"ன்னு கிருஷ்ணமூர்த்தி கேட்டார்.


"ஊருக்கெல்லாம் கதை சொல்றேயேடா.. அற்புதமா சொல்றேன்னு மத்தவா சொல்லி அதைக் கேக்கறச்சே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு, தெரியுமா?" அதை பிரமிப்போடச் சொல்றத்தே அவள் முகம் பூரா பூரிப்பு.

"என்ன இருந்தாலும் ஒன்னை மாதிரி சொல்ல முடியுமா?.. 'அப்புறம் என்ன நடந்தது தெரியுமா'__ன்னு அடிக்கடி நீட்டி முழக்கி, எவ்வளவு சுவாரஸ்யமா சொல்லுவே?"


"இன்னுமாடா அதெல்லாம் ஞாபகம் வைச்சிண்டிருக்கே?.."


"அதெல்லாம் மறக்கமுடியுமா, மாலு?.. அப்படியே காட்சி காட்சியா நெஞ்சிலே கல்வெட்டா பதிஞ்சு போயிடுத்து.... அந்த வீடு, அந்த பெரீய்ய ஜன்னல்.. ஜன்னலுக்குவெளியே பெரிய மரம்.. மரத்லே.."

சட்டென்று கிருஷ்ணமூர்த்திக்கு கனவுலே மரத்லே பார்த்த பறவைகள் ஞாபகம் வந்தது. இங்கேயும், மஹாதேவ் நிவாஸ்லே ஜன்னலுக்கு வெளிலே கிளை பரப்பிக்கொண்டு ஒரு பெரிய மரம்.

கனவுலே பார்த்த மாதிரியே நெஜத்திலேயும்---

விடிவிளக்கோட குறைஞ்ச வெளிச்சம் மசமசவென்றிருந்தது.

மெத்தை படுக்கையிலிருந்து கீழிறங்கிய கிருஷ்ணமூர்த்தி மெதுவாக நடந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தார்.


என்ன ஆச்சரியம், அவர் கனவில் பார்த்த மாதிரியே இரண்டு புறாக்கள்.. ஒன்று மேல் கிளையில், மற்றொன்று கீழ்க் கிளையில்.
உடம்பு சிலிர்த்தது கிருஷ்ணமூர்த்திக்கு.

இவர் பார்த்துக் கொண்டே இருக்கையில், கீழ்க்கிளை பறவை, சட்டுன்னு பறந்து ரெண்டு கிளை மேலே தாண்டி கொஞ்சம் மேலே போய் அமர்ந்தது.
ஓ!.. பேராசிரியர் பூங்குழலி சொன்ன மாதிரி மேல் கிளை பறவையை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறதோ?..


'தான் தான் கீழ்க்கிளைப் பறவையோ'ன்னு கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு நிமிஷம் நெஞ்சில் நினைவொன்று வெட்டி விட்டுப் போயிற்று.


(தேடல் தொடரும்)

10 comments:

Kavinaya said...

ஆஹா, அருமை. கனவையும் நினைவையும் கோர்ப்பதில் வல்லவராய் இருக்கீங்க :) கல்சட்டி தயிர்சாதம் பழைய நினைவுகளைக் கிளறி விட்டது; பசியையும்தான் :) கீழ்க்கிளைப்பறவை எப்போ மேல போய்ச் சேருமோ?

பாச மலர் / Paasa Malar said...

கனவு + நனவு...அழகாய் இணைந்த இழை..அனாயாசமாய்ச் சொல்லியிருக்கும் அவசியமான விஷயங்கள்...பாராட்டுகள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"இவர் பார்த்துக் கொண்டே இருக்கையில், கீழ்க்கிளை பறவை, சட்டுன்னு பறந்து ரெண்டு கிளை மேலே தாண்டி கொஞ்சம் மேலே போய் அமர்ந்தது."
ஏதோ நம்பிக்கை தற்ற மாதிரி இருக்குன்னும் ஒருவேளை போகப்போக தெரியும்னு போன பதிவுல சொன்னது இதைத்தானோன்னு நினைக்கத்தோன்றுகிறது.... நன்றி ஜூவி வாசிப்பைத்தாண்டி மனதை செலுத்துகிறது பதிவுகள்.

ஜீவி said...

கவிநயா said...
//ஆஹா, அருமை. கனவையும் நினைவையும் கோர்ப்பதில் வல்லவராய் இருக்கீங்க :) கல்சட்டி தயிர்சாதம் பழைய நினைவுகளைக் கிளறி விட்டது; பசியையும்தான் :) கீழ்க்கிளைப்பறவை எப்போ மேல போய்ச் சேருமோ?//

வாருங்கள், கவிநயா!

இந்த நினைவுகள் எல்லாம்--இதிலே மொத்த நினைவுகளும் இல்லே-- வேணுங்கறது மட்டும் எங்கேயோ அடுக்கடுக்கா சேர்த்து வைச்சிருககு பார்த்தீங்களா?.. வேணுங்கற நேரத்திலே வேணுங்கறதை மட்டும் உருவி எடுத்து வசதிக்கேற்ப பொருத்திப் பார்த்துக்கற மாதிரி..
இதுலே பின்னாடி இது வேணுங்கறது எப்படித்தான் முன்னாடியே தெரியுமோ தெரியலை..

மிக்க நன்றி, கவிநயா!

ஜீவி said...

பாச மலர் said...
//கனவு + நனவு...அழகாய் இணைந்த இழை..அனாயாசமாய்ச் சொல்லியிருக்கும் அவசியமான விஷயங்கள்...பாராட்டுகள்.//

வாருங்கள், பாசமலர்!
எவ்வளவு நாளாச்சு?.. நீங்களும் இந்தத் தொடரை படித்து வருகிறீர்கள் என்பது சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

கனவும் ஒரு காலத்து நனவு தானே?
முந்தைய நனவு பற்றிய நினைவு என்று வேணா வைத்துக்கொள்ளலாம்.
கனவின் விசேஷம், கண்ணு மூக்கு
காது வைத்து, அதை சேர்க்கறதோட சேர்க்கிறது தான்!

கனவும் ஓர் ஆனந்த நிலைதான்.
அனுபவிப்பின் உச்சம் தான். ஆழ்ந்த தூக்கத்தை வசதியாய் உபயோகப்படுத்திக் கொண்டு, சுவாரஸ்யமான கனவுகள் உடம்பின் முழுக் கண்ட்ரோலைத் தன் கையில் எடுத்துக் கொண்டு விடும்.
ஒரு பக்கம் மனத்திரையில் கனவுக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கையிலே, உதடுகள் புன்முறுவல் பூத்து ரசிக்கும்..


எழுதியவன், எழுதியதின் வினையாக எதிர்பார்க்கும் சரியான பிரதிபலிப்பை, மிகச் சரியாகக் கோடிகாட்டியிருக்கிறீர்கள்.. உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி, பாசமலர்!

ஜீவி said...

கிருத்திகா said...
//"இவர் பார்த்துக் கொண்டே இருக்கையில், கீழ்க்கிளை பறவை, சட்டுன்னு பறந்து ரெண்டு கிளை மேலே தாண்டி கொஞ்சம் மேலே போய் அமர்ந்தது."
ஏதோ நம்பிக்கை தற்ற மாதிரி இருக்குன்னும் ஒருவேளை போகப்போக தெரியும்னு போன பதிவுல சொன்னது இதைத்தானோன்னு நினைக்கத்தோன்றுகிறது.... நன்றி ஜூவி வாசிப்பைத்தாண்டி மனதை செலுத்துகிறது பதிவுகள்.//

வாழ்க்கை என்பது வரம். செய்த பலனின் பரிசு. இந்தப் பரிசைக் கொடுத்து விட்டானே தவிர, பெற்றா பரிசைப் பேணிக் காக்க வேண்டும் என்பதும் அவனது விருப்பம். கொடுத்தவனின் எதிர்பார்ப்பும் எக்கச் சக்கம். அவன் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றபடி நடந்து கொண்டு, அவன் மகிழ இதற்கு மேலான இன்னொரு பரிசை அவனிடமிருந்து பெறுவதே
இறுதி இலட்சியம்.

பெரியவர் கிருஷ்ணமூர்த்தி வழி தெரியாமல் தவிக்கும் நேரத்தெல்லாம், அவர் மேல் கொண்ட அன்பால் அவன் வழிகாட்டுகிறான்.

பாதையும் நீளம்; பயணமும் பெரிது.
இல்லையா?.. இதில் அவசரம் ஏன்?..

உங்கள் வாசிப்பனுவத்திற்கு மிக்க நன்றி, கிருத்திகா!

Shakthiprabha (Prabha Sridhar) said...

Edho oru ulagathil nammai naamE purinthu koLLum muyarchiyil sanjaricha piragu, yadharthamum ulagum, aanma vichaaramum kalandhu, oru puriyaa nilai.

nammil palarukkum erpattirukkum.

romba unarvu poorvamaay ezhhithirukkireergaL

ஜீவி said...

Shakthiprabha said...
//Edho oru ulagathil nammai naamE purinthu koLLum muyarchiyil sanjaricha piragu, yadharthamum ulagum, aanma vichaaramum kalandhu, oru puriyaa nilai.

nammil palarukkum erpattirukkum.

romba unarvu poorvamaay ezhhithirukkireergaL//

புரியாவிட்டாலும், இருப்பைப் புரிந்து கொள்ளுதல், இயற்கையோடு சம்பந்தப்பட்டு உடல், மன ஆரோக்கியத்திற்கு இட்டுச் செல்கிறது.

உங்கள் உணர்வு பூர்வமான ரசனைக்கும் மிக்க நன்றி, சக்திபிரபா!

குமரன் (Kumaran) said...

நாடகக் காட்சியாக கனவுக்காட்சி விரிகின்றது ஐயா.

ஜீவி said...

குமரன் (Kumaran) said...
//நாடகக் காட்சியாக கனவுக்காட்சி விரிகின்றது ஐயா.//

அப்படியா, குமரன்?.. நீங்கள் கண்டு களித்தமைக்கு மிக்க நன்றி.. ஏற்கனவே இந்தக் காட்சியும் உங்களுக்குப் பிடித்த காட்சி இல்லையா?.. இன்னும் இந்த காட்சியின் நீட்சி முடியவில்லை.
சீன் சீனாகத் தொடர்க்கிறது..
உபநிஷத்து சிந்தனைகளோடு இதைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. பார்க்கலாம்..

தொடர்ந்த வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி, குமரன்!

Related Posts with Thumbnails