மின் நூல்

Wednesday, December 2, 2009

ஆத்மாவைத்தேடி....18 இரண்டாம் பாகம்

ஆன்மீகதின் அடுத்த கட்டத்தை நோக்கி....

18. தர்மம் தலை காக்கும்

சாயந்திர கோயில் தரிசனம் முடிந்து, சாப்பிட்டு அறைக்குத் திரும்பும் பொழுது ம்ணி எட்டுக்கு மேலாகிவிட்டது.

இன்று ஈஸ்வரன் கோயிலில் மாலுவின் பாட்டு அற்புதமாக இருந்தது.
பாபநாசம் சிவனின் "பராத் பரா பரமேஸ்வரா, பார்வதி பதே ஹரே பசுபதே.." கீர்த்தனையை வாசஸ்பதி ராகத்தில் மாலு பாடினாள்.. "புண்ணிய மூர்த்தி சுப்ரமணியன் தந்தையே.." என்று கடைசி வரியைப் பாடி, மீண்டும் பல்லவிக்குத் திரும்பும் பொழுதே, அதற்குள் பாட்டு முடிந்து விடுகிறதே என்கிற ஏமாற்றம் எல்லோர் முகங்களிலும் கவிந்து, இன்னும் பாடமாட்டார்களா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குள் மாலு அடுத்த பாட்டிற்கு தயாராகி, "நீ இரங்காயெனில் புகலேது அம்ப.." என்று அடாணா ராகத்தில் ஆரம்பித்த பொழுது எல்லோர் முகங்களிலும் பிரகாசம். "தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ, ஸகல உலகிற்கும் நீ தாயல்லவோ.." என்கிற வரிகள் வரும் பொழுது அந்தப் பிரகாசம் பரவசமாக மாறியது.

சங்கீதத்திற்கு எந்த மொழியும் விலக்கல்ல; தடுத்து நிறுத்த வேலியும் அல்ல. அத்தனை பேரும் மெய்மறந்து கேட்டனர். கோயில் கண்டாமணி தீபாராதனை காட்ட ஒலித்த் பொழுது தான் நினைவுலகுக்கு வந்தனர். மனோகர்ஜி கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொள்ளக்கூட ஸ்மரணையற்று நின்றார்.

"சிவராம்ஜி! எங்கெங்கோ இருந்த நீங்களெல்லாம் ஒண்ணாச்சேர்ந்து இங்கே ஒரு லட்சியத்திற்காகக் கூடியிருப்பது, தெய்வ சங்கல்பம்
என்று தான் நினைக்கிறேன். எங்க அப்பா காலத்லே இப்படி ஒரு சதஸ் நடத்தணும்னு ரொம்ப ஆசைப்பட்டார். அவரோட அந்த ஆசை உங்க எல்லாருடைய ஒத்துழைப்பினாலும் இப்போ நிறைவேற ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு தான் நினைக்கிறேன்" என்றார் மனோகர்ஜி.

தீபாராதனைத் தட்டு அருகில் வருகையில், இவ்வளவு நல்ல மனம் படைத்த மனோகர்ஜியின் நல்வாழ்வுக்காக வேண்டிக்கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார் சிவராமன்.

அதை இப்பொழுது நினைத்துக் கொண்டு, மனோகர்ஜி கோயிலில் தன்னிடம் சொன்னதைச் சொன்னார் சிவராமன்."எத்தனை பேருக்கு இப்படிச் சொல்ல மனம் பக்குவப்பட்டிருக்கும்னு நினைக்றே?" என்றார் சிவராமன்.

"நானும அதைத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன்" என்றாள் மாலு.

"அவர் அப்பாவைப் பத்தின நினைப்பு அவருக்கு அடிக்கடி வந்துடும். தந்தை ஆசைப்பட்டது அவர் காலத்லே முடியலே. மரணம் குறுக்கிட்டு அவர் பட்ட ஆசையைத் தட்டிப் பறிச்சிடுத்து. இப்போ தனயன், தந்தையின் ஆசையை நிறைவேற்றுகிறார்" என்றபடி கதவு திறந்தார் கிருஷ்ணமூர்த்தி.

"இப்படிப்பட்ட பிள்ளை ஒரு தந்தைக்கு கிடைக்கறது அபூர்வம் அல்லவா?'

"நிச்சயமா, மாலு! உலக ஷேமத்துக்காக அந்த ஆசைகள் இருந்தால் இன்னும் விசேஷம்."

"வாஸ்தவம் தான்," என்று கிருஷ்ணமூர்த்தி சொன்ன பொழுது அவர் குரலில் சிவராமன் சொன்னதை மனசாரப் புரிந்து கொண்ட திருப்தி இருந்தது. "மஹாதேவ்ஜியின் குடும்பத்தைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும்" என்று அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்ட பொழுது, சுவாரஸ்யத்துடன் அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானாள் மாலு.

"அடிப்படையில் பரம்பரையாக இவர்கள் குடும்பம் வியாபாரத்தில் ஈடுபட்ட குடும்பம். மனோகர்ஜியின் தாத்தா மஹாதேவ்ஜி ஒருவிவசாயி. கடுமையான உழைப்பாளி. நிலத்தில் அவ்வப்போது சாகுபடி செய்வதில் சொந்த உபயோகத்திற்கு போக மிதமிஞ்சி இருப்பதை வண்டி கட்டி எடுத்துப் போய் வாரச்சந்தைகளில் விற்பாராம். யாருக்கு எந்த கஷ்டம் என்றாலும் ஓடிப் போய் உதவி செய்திருக்கிறார். சுற்று வட்டார மக்கள் அவரை வெகுப் பிரியமாக நேசித்திருக்கிறார்கள்.

"ஒரு நாள் அவர் நிலத்தில் கிணறு தோண்டுவதற்காக வெடிவைத்துப் பாறைகளைப் பிளக்கும் பொழுது பாறையோடு பாறையாக மழுமழுவென்று வேறொரு வஸ்துவும் பறந்து வந்தது. பதறிப் போய் பக்கத்தில் சென்று பார்க்கும் பொழுது அந்த வேறொரு வஸ்து, கல் விக்கிரகமாகப் புலப்பட்டது. அந்த சிவலிங்க் விக்கிரகம் தான், இந்த மஹாதேவ நிவாஸில் இருக்கும் சிவன் கோயில் மூலஸ்தான விக்கிரகம். மகாதேவ்ஜி காலத்திலேயே சிறு கோயில் மாதிரி எழுப்பி அதை ஸ்தாபிதம் பண்ணியிருக்கிறார்கள். அந்த சிறு கோயில் தான் தனித்தனி சந்நிதிகள், சுற்று மண்டபம் என்று இப்பொழுது பெரிய கோயிலாக எழும்பியிருக் கிறது. மஹாதேவ்ஜி காலத்திற்குப் பிறகு கோயிலைச் சுற்றிய பெருநில பாகத்தையே மாளிகையாக்கி, தாத்தாவின் நினைவாக அவர் பெயரையே மாளிகைக்கு சூட்டிவிட்டார் பேரன்!

" மஹாதேவ்ஜியின் மகன் குருதேவ்ஜி. அவர் காலத்தில் தானிய வியாபாரம் செய்திருக்கிறார். அவரது ஹோல்சேல் வியாபாரம். புராதன டெல்லியின் செங்கோட்டைப் பகுதியில் அவரது தானியக்கிடங்கு இருந்திருக்கிறது. மனோகர்ஜிக்கு அவரது ஆறு வயதிலிருந்து தனது தந்தையைப் பற்றின ஞாபகம் இருக்கு. அவரைப் பற்றி நினைத்தாலே லாரிகள் நினைவுதான் முந்திக் கொண்டு அவருக்கு வருமாம். அப்படிக் கிடங்கின் முன்னால் லாரிகள் வரிசை கட்டி நின்றிருக்குமாம். தேசத்தின் பல பகுதிகளுக்கும் அவர் கிடங்கிலிருந்து ரயில் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் எல்லா வகையான தானியங்களையும் விநியோகித்திருக்கிறார். இலாபத்தில் பெரும்பகுதியை தர்ம காரியங்களுக்கு ஒதுக்கி வைத்து விடுவாராம். தர்ம் காரியம் என்றால், அவர் நோக்கில் பெரும்பாலும் தர்ம சத்திரங்கள் தான். ஹரித்வார், காசி, கயா என்று வடக்குப் பகுதிகள் என்று தான் இல்லை, ஹூப்ளி, புவனேஸ்வர், புனா, ஹாசன், உடுப்பி என்று தேசத்தின் பல பகுதிகளிலும் தர்ம சத்திரங்களைக் கட்டி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் திருத்தணியிலும், இராமேஸ்வரத்திலும் இவர் பெயரில் பெரிய சத்திரம் இருக்கிறது. இன்றைய தேதி வரை அத்தனையும் இலவசம் என்பது தான் விசேஷம்.இன்றும் மனோகர்ஜியின் புத்திரர்கள் தங்கள் வருமானத்திலிருந்து நிதி ஒதுக்கி இவற்றையெல்லாம் பராமரித்து வருகிறார்கள்.

"அடடா! கேட்க ரொம்ப ஆச்சரியமா இருக்கு!" என்று வியந்தாள் மாலு.

"மனோகர்ஜி காலத்தில் தானிய வியாபாரம் முழுசாக மொத்த வியாபாரம் என்று இல்லாமல், ரிடெயில் மார்க்கெட் பக்கமும் கொஞ்சம் திரும்பியிருக்கு. தானியங்களைச் சுத்தம் செய்து சிறு பைகளில் அடைத்து தேசம் பூராவும் சப்ளை செய்திருக்கிறார்கள். இவரது 'மான் மார்க்' கோதுமை பைகள் பிரசித்தமானதாம். மனோகர்ஜியின் மகன்கள் காலத்தில் இப்பொழுதும் வியாபாரம் தான் என்றாலும் அது வெவவேறு விதமாக டைவர்ஸிஃவைடு ஆகிவிட்டது. ஒருநாள் என்னைக் காரில் அழைத்துச் சென்று தன் பிள்ளைகளுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். அத்தனை பேரும் ரொம்ப நல்ல மாதிரி. தந்தை கிழித்த கோட்டைத் தாண்டாதவர்கள்."

"மனோகர்ஜியின் தந்தை குருதேவ்ஜிக்கு நண்பர் கிருஷ்ணமகராஜஜி. இருவரும் காசி சர்வ் கலா சாலையில் ஒன்றாகப் படித்தவர்கள். படிப்பிற்குப் பிறகு குருதேவ்ஜி வியாபாரத்திற்கு வர, கிருஷ்ண மகராஜ்ஜியோ யோகம் பயில இமயமலை நாடினார். வியாபாரம் பிடிக்காமல் மனோகர்ஜியின் தாத்தாவும் கிருஷ்ண மகராஜ்ஜியைத் தேடி இமயம் சென்றார். இந்தக் கதையை இன்னொரு நாள் சொல்கிறேன்."

"கிருஷ்ணா! கேட்க கேட்க பிரமிப்பா இருக்கு.. இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?" என்றார் சிவராமன்.

"எல்லாம் மனோகர்ஜி சொன்னது தான்.. அதுவும் லேசில் சொல்லலே; ஏதாவது கேட்டால் பலசமயங்களில் லேசா சிரிச்சிண்டு பேச்சை மாத்திடுவார். அத்தனையும் துருவித் துருவிக் கேட்டு தெரிஞ்சிண்டது.. செஞ்சதை செஞ்சவுடனே மறந்திடுவார்.. இதெல்லாம் செய்யறதுக்குத் தான் பிறவி எடுத்திடுக்கிற மாதிரி, ஒரு போக்கு. தான் தான் இதைச் செய்கிறோம்ங்க்கற நினைப்பு கூட இல்லாத, அப்படி ஒரு ஆத்மா!" என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லிக் கொண்டிருந்த பொழுது, அவர் அறை வெளிப்பக்கம் யாரோ நடமாடுகிற மாதிரி
சப்தம் கேட்டது.

"வெளியே ஏதோ சப்தம் கேட்டமாதிரி இல்லை?" என்று மாலு கேட்டாள்.

"இல்லை. உனக்கு பிரமையா இருக்கும்.." என்று சிவராமன் சொல்லிக் கொண்டே இருக்கையில், "எனக்கும் கேட்ட மாதிரி இருந்தது" என்று கிருஷ்ணமூர்த்தி எழுந்திருந்து கதவு பக்கம் நகர்ந்தார்.

(தேடல் தொடரும்)

6 comments:

கபீரன்பன் said...

தாங்கள் தர்ம சத்திரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது ஒரு முக்கியமான கேள்வியை மனதில் எழுப்பியது. கர்நாடகத்தில் மேற்குக் கரையோரம் கிட்டத்தட்ட அனைத்து கோவில்களிலும் மதிய உணவு பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. வடநாட்டிலும் ஹரித்வார் போன்ற இடங்களில் இது போன்ற ஏற்பாடு உண்டு. ஆனால் தமிழ்நாட்டு புண்யதலங்களில் பழனி, மதுரை ராமேஸ்வரம் போன்ற தலங்களில் அன்னதான ஏற்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே. தர்ம காரியங்களில் நம்மவர்கள் ஏன் பின் தங்கிவிட்டனர் ?

Kavinaya said...

//"தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ, ஸகல உலகிற்கும் நீ தாயல்லவோ.." //

இந்த பாடலை கேட்க முடியுமா, ஜீவி ஐயா?

//"வெளியே ஏதோ சப்தம் கேட்டமாதிரி இல்லை?"//

யாரு அங்கே? சீக்கிரம் சொல்லுங்க!

ஜீவி said...

@ கபீரன்பன்

தமிழகக் கோயில்களில் அன்னதானம் என்று கூகுளில் தேடினால் நிறைய தகவலகள் கிடைத்தன, கபீரன்ப!

ஜீவி said...

@ கவிநயா

வாருங்கள், கவிநயா!

தமிழிசைப் பாடல்கள் என்றாலே, உடனே நமககு கைகொடுப்பவர், 'என் வாசகம்' ஜீவா தான்!
(jeevagv.blogspot.com)

"நீ இரங்காயெனில் புகலேது, அம்ப!' எனனும் பாபநாசம் சிவனின் கீர்த்தனையை
அழகாகத் தந்திருக்கிறார். அதுவும்--

சங்கீத கலாநிதி எம்.எஸ். அவர்களின்
சுதா ரகுநாதன் அவர்களின் -- என்று
இருவரின் தேங்குரலிலும் இந்தப் பாடலைக் கேட்டு மகிழலாம்.

பி.கு.: திரு. ஜீவா அவர்களின் ஜூன் 30, 2008 பதிவு இது.

உங்களின் ஆர்வத்திற்கு நன்றி.
திரு. ஜீவா அவர்களுக்கும் நன்றி.

Kavinaya said...

இலேசாக நினைவிருந்தது - ஜீவா இட்ட பாடல் போல இருக்கிறதே என்று.

தேடித் தந்தமைக்கு நன்றிகள் பல ஜீவி ஐயா. ஜீவாவிற்கும் மீண்டும் நன்றி.

ஜீவி said...

@ கவிநயா,

//யாரு அங்கே? சீக்கிரம் சொல்லுங்க..//

சொல்லியாச்சு, கவிநயா!

Related Posts with Thumbnails