மின் நூல்

Thursday, July 11, 2019

வசந்த கால நினைவலைகள்

                                    40

புதுவையில் வசித்த காலத்தில் மறக்க முடியாமல் மனதில் தடம் பதித்த நினைவுகள் பல.  அவற்றில் இது தலையாயது.

புதுவை பெருமாள் கோயில் தெருவில் நுழைந்தாலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் நினைவு வரும்.  அந்தத்  தெருவில் 95 இலக்கமுள்ள வீடு அவரது.

தன் சுயத்தை  மதிப்பவர் பிறரது சுயத்தையும் தவறாது மதிப்பர் என்பது ஜெயகாந்தன் அவர்களின் வாக்கு.  பிறர் சுயத்தை மதிக்காதவர்கள் சுயமரியாதைக்காரர்களாய் இருப்பதற்கு  அருகதை அற்றவர்கள் என்று இதற்கு அர்த்தம்.

பிறரை மதிக்கும் அந்த சிறந்த குணத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் புரட்சிக் கவிஞர்.  தன் மனத்திற்கு ஏற்புடையதை  ஏற்றுக் கொண்டாரேயானால் அந்தக் கொள்கையில் பிறழாது ஒழுகுபவர்.  அவர் பூண்டிருந்த புனைப்பெயர் கூட  பலரின் கண்களை உறுத்தியது. பாரதி எவ்வளவு தான் சமநீதி சமுதாயத்திற்காக கனவு கண்டாலும் அவரைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்துப்  பார்த்தது  நீதிக்கட்சி வழிவந்த திராவிட இயக்கம்.   'பார்ப்பான் ஒருவனுக்கு தாசனாக பெயரைக் கொண்டிருக்கிறீர்களே! நியாயமா?' என்று முகம் சுளித்தவர்கள், ஏகடி பேசியவர்கள் நாணுகிற அளவிற்கு அவர்களைச் சாடியிருக்கிறார் பாரதிதாசன்.  "யாரைச் சொல்கிறீர்கள் என்று தெரிந்து  பேசுங்கள்..    நீடு துயில்    நீக்க பாடி வந்த நிலா!   காடு கமழும் கற்பூரச் சொற்கோ!    கற்பனை ஊற்றாம் கதையின்  புதையல்!   திறம் பாட வந்த மறவன்!  அறம் பாட வந்த   அறிஞன்! நாட்டில் படறும் சாதிப்
படைக்கு மருந்து!  மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்! அயலார் நெருப்பிற்கணையா விளக்கவன்!  என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!  தமிழால்,  பாரதி தகுதி பெற்றதும்,  தமிழ் பாரதியால் தகுதி  பெற்றதும் எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்.." என்று அறியா மனிதருக்குப் பாடம் படிப்பது போல தன் பாவால் படம் பிடித்துக் காட்டுகிறார்.  'ஒரு சாராரின் எதிர்ப்பு  இன்று வரை நீங்கியதில்லை;  இதற்காக நான் அஞ்சியதும் இல்லை.   அஞ்சப்போவதும் இல்லை;  பாரதி  பற்றிப் பேச எனக்குத் தான் தெரியும்..  அவரைப் பற்றிப்  பேச என்னை விட தகுதி இந்த நாட்டில் எவனுக்கும் இல்லை.. "  என்று   அடித்துப் பேசுகிறார்..    நெருங்கிய வட்டாரத்தின் முகச்சுளிப்பிற்காக அனுபவ பூர்வமாக தான் ஏற்றுக்கொண்ட நியாயங்களை அவர் மாற்றிக்  கொண்டதில்லை.  அதில் அவருக்கு எஃகு போன்ற உறுதி  இருந்தது.

திருச்சியிலிருந்து வெளிவந்த  சிவாஜி பத்திரிகையின் ஆசிரியர்  திருலோக சீதாராம் பாரதியாரின் இறப்பிற்குப்  பிறகு பாரதியாரின் குடும்பத்திற்கு பெரும் ஆறுதலாக இருந்து  பல உதவிகள் செய்தவர்.  பாரதி, பாரதிதாசன் இந்த இரண்டு பெயர்களுக்கும் பாலமாக தன்னை அமைத்துக் கொண்டு இவர்கள் இருவரின் கவிதாலோகத்தில் சஞ்சரிப்பதில் தன் மனத்தைப் பறிகொடுத்தவர்  இந்த பிராமணர்.  சிவாஜி பத்திரிகைக்காக பாரதிதாசனின் கவிதைகளை வேண்டிப் பெற்று பிரசுரித்திருக்கிறார்.   புத்தக வெளியீட்டாராய்  இருந்திருக்கிறார்.  தனது பிசிறில்லாத  மெல்லிய குரலில் இவர்களின் கவிதைகளைப் பொது மேடையில் பாடிக் களித்திருக்கிறார்.  இத்தனை
நிலைகளிலும் தானும் ஒரு வரகவியாய்  பாடலியற்றும் பாங்கு பெற்றவன் என்பதையும் மறந்திருக்கிறார்..  தன்னைப் பின்னுக்குத் தள்ளி பிறரை முன்னிலைப் படுத்தும் அரிதான பெருமைக்குரிய பொற்குணத்திற்கு சொந்தக்காரர் திருலோக சீதாராம். 

பாரதியாரின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த  பாரதிதாசனுக்காகவே தனது சிவாஜி பத்திரிகை  மூலமாக நிதி திரட்டினார்.  இந்த மாதிரியான பாரதிதாசனின்  பாட்டுத் திறத்தில் பிரேமை  கொண்டவர்கள் திரட்டிய நிதியை பொற்கிழியாய் பாரதிதாசனுக்கு வழங்க ஒரு பொதுகூட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது..  அந்த நிதியைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் பாரதிதாசனாரின் குயில் பத்திரிகை.

நடிகர் திலகத்தை நாயகனாகக் கொண்டு தனது 'பாண்டியன்  பரிசை' திரைப்படமாக்க வேண்டும் என்கிற கனவு பாரதிதாசனுக்கு இருந்தது.  அதன் தொடர்பான நடவடிக்கைகளுக்காக என்றே புதுவை நீங்கி சென்னைக்கு குடிபெயர்ந்தார்.  இது 1961 ஆண்டு வாக்கில் என்று நினைவு.  நான் புதுவைக்குச் சென்றதே 1963-ம் ஆண்டு பிற்பகுதியில்..   புதுவை கடற்கரைச் சாலையில் அவரை ஒரே ஒரு முறை நேரில் பார்த்திருக்கிறேன்.


அவர் சென்னை சென்றதைத் தொடர்ந்து புதுவையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த அவரது 'குயில்' கவிதை ஏடும் சென்னையிலிருந்து வெளிவரத் துவங்கியது.  ஒரு பக்கம்
பாண்டியன் பரிசுக்கான  வேலைகள் நடந்து  கொண்டிருக்கையிலேயே தனது குருவின்  மீதான அன்பில்  பாரதியாரின் வாழ்க்கையையும் திரைப்படமாக்க வேண்டும் என்கிற முயற்சிகளிலும்  பாரதிதாசன்   ஈடுபாடு கொண்டிருந்தார்.

1964-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி.   அன்று    தொலைபேசி  நிலையத்தில்  மதியம் 1330-யிலிருந்து இரவு 2100 மணி வரை எனக்குப் பணிக்காலம்.  அந்த   நேரத்தில் தான் பாரதிதாசன் அவர்கள் சென்னை  பொது மருத்துவ மனையில் காலமாகிவிட்டார் என்று கலங்க வைக்கும் அந்தச் செய்தி தெரியவந்தது. அவர் புகழுடல் புதுவைக்கு கண்ணதாசனின் காரில் வருவதாகத் தகவல். இரவு ஒன்பது மணிக்கு அலுவலகப் பணி முடிந்ததும் நேரே பெருமாள் கோயில் தெருவிற்கு நானும் என் அருமை நண்பர் அ.க.பெருமாள் அவர்களும் மிகுந்த சோகத்துடன்  விரைந்தோம்.

சின்ன மரத்தூண்கள் பொருத்திய அகல வாசல் கொண்டு உள்ளடங்கிய வீடு. உள்பக்க பெரிய ஹாலில் வீறுகொண்ட கவிஞரின் பூத உடல்  கிடத்தப் பட்டிருந்தது.   கருப்பு-சிவப்பு சின்னகட்டங்கள் போட்ட பட்டுப் போர்வை போர்த்தியிருந்தார்கள். புரட்சிக் கவிஞருக்கே தனித்த ஒரு அடையாளமாக அமைந்திருந்த சின்ன அடர்த்தியான மீசைக்கிடையே புன்முறுவலுடனான
அவர் முகம் மனசைப் பிசைந்தது.   சிம்ஹம் போன்ற துடிப்பு கொண்ட அடலேறு ரோஜாப்பூ மாலைகள் சூட்டப்பெற்று அமைதியாக அப்படி இருந்தது அவரது இயல்புக்கு மாறான ஒரு செயலாய் மனசைக் குடைந்தது.  ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஓரிரு குத்து விளக்குகள். தலைமாட்டிற்கு பின்புறச் சுவரின் உயரத்தில் புரட்சிக் கவிஞர் ஏட்டில் பேனா பிடித்து எழுதுகிற தோற்றத்தில் ஓரளவு பெரிய  புகைப்படம்.

அந்த இரவு நேரத்தில் நீண்ட அந்த ஹாலில் எங்களைச் சேர்த்து எட்டு அல்லது ஒன்பது பேர் இருந்திருப்போம்.   இருவர் கைத்தாங்கலாக அழைத்து வர தடியூன்றிய  ஒரு பெரியவர் உள்பக்கம் வந்ததும்  "வாங்கய்யா, வாங்க...  வாத்தியார் ஐயா வந்திட்டாரான்னு கேப்பீங்களே!  இதோ இருக்காரய்யா.." என்று பெருங்குரல்அழுகை கொண்டு பெண்கள் பக்கமிருந்து துக்கம் பொங்கியது.

மனம்  கனத்துப் போனது.  நானும் நண்பர் பெருமாளும் புரட்சிக் கவிஞரின் காலடிப் பக்கம் அமர்ந்து கொண்டோம்.  'துன்பம்  நேர்கையில் யாழெடுத்து நீ...' என்கிற கவிஞரின் பாடல் எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி நெஞ்சுக்கூட்டை நிரப்புகிற வரிகளாய் எனக்குள் பீறிட்டது.   ஏதேதோ நினைவுகளில் மனம் துவண்டு தத்தளித்தது.  கண் நீரை கட்டுப்படுத்த முடியாமல் கவிஞருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு மெதுவாக எழுந்திருந்து வெளி வந்தோம்.

காலணிகளை மாட்டிக் கொண்டு கிளம்புகையில் வெளிச்சுவர் பக்கம் நிமிர்ந்து பார்த்தேன்.   பித்தளைத் தகட்டினால் வேய்ந்த பெயர்ப் பலகை கண்ணில் பட்டது.  அந்தப் பெயர்ப் பலகையில்  பாரதிதாசன்  என்று ஆங்கிலத்தில் எழுதப் பெற்று  IN  -- OUT   குமிழ்கள் தென்பட்டன.   புரட்சிக்கவிஞர் அவர்கள் சென்னையில் இருந்ததினால் போலும்,  பித்தளைக் குமிழின் 'IN' மறைக்கப்பட்டு  OUT- தெரிவதாய் இருந்தது. அதைப் பார்த்ததும் மனம் வேதனையில் துவண்டு, சடாரென்று  மனசில் முகிழ்த்த எண்ணமாய், பெயர்ப்பலகையின் குமிழை நகர்த்தி 'OUT'-ஐ  மறைத்து ' IN'  தெரிகிற மாதிரி மாற்றி வைத்தேன்.    ஆம்!  சாகா வரம் பெற்ற கவிஞர் அவர்களின்  'அழகின் சிரிப்பு'ம், 'குடும்ப விளக்கு'ம், 'குறிஞ்சித் திட்டு'ம், 'பாண்டியன் பரிசு'ம்  இன்ன பிற படைப்புகளும் நம்மிடையே இருக்கையில் என்றென்றும் அவர் நம்மிடையே இருந்து கொண்டு தான் இருக்கிறார்'  என்று நினைப்பு நெஞ்சில் அலையாய் புரண்டது.

அந்த வார குமுதம் இதழில் இந்த என் நினைவுகளை  பதிவும் செய்திருந்தேன்.

அடுத்த நாள் புரட்சிக் கவிஞருக்கு அஞ்சலி செலுத்த பெருங்கடல் பொங்கி வந்தால் போல் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் புதுவை  திணறியது. திரைப்படத் துறை சார்ந்தவர்கள் நிறைய வந்திருந்தார்கள்.

பிற்காலத்தில் 'கடைசி வரை யாரோ?' என்று பாடல் எழுதிய கவியரசர் கடைசி வரை நடந்தே வந்தார்.    ஹவாய் செப்பல் என்று  சொல்வார்களே, அந்த மாதிரி யான அவர் அணிந்திருந்த காலணியின் வார் வழியில் அறுந்து விட்டது.  உடனே கவியரசர்  ஓரமாய் போய் தனது இரண்டு  காலணிகளையும் கழற்றிப் போட்டு விட்டு வெறுங்காலுடன் நடக்க ஆரம்பித்தார்.   யாரோ சற்று தூரத்தில் முன்னால் சென்று   கொண்டிருந்த காரில் ஏறிக் கொள்ள   வற்புறுத்தியும் கேட்காமல் நடந்தே வந்தார்.   இவ்வளவுக்கும் பாரதிதாசனின் புகழ் உடலைச் சுமந்து கொண்டு புதுவைக்கு  வந்தது கண்ணதாசன் ஏற்பாடு  செய்திருந்த வேன்  தான்!

நமது தமிழ் பத்திரிகைகளுக்கு என்று சில கொனஷ்டையான குணங்கள் உண்டு.   அந்த நேரத்தில் கண்ணதாசன் திராவிட கட்சிகளோடு மாறுபட்ட கருத்துக்கள் கொண்டு தமிழ் தேசிய கட்சியோடு  இணைந்திருந்தார்.  அதனால்  அடுத்த நாள் செய்திதாட்களில்  பாரதிதாசன்  காலமான செய்தித் தொகுப்பில்  பாரதிதாசன் காலமானதால் கண்ணதாசனுக்கு இரு செருப்புகள் இழப்பு' என்ற தலைப்பிட்டு  ஒரு துண்டுச் செய்தி வெளிவந்தது.

சென்னை தலைமை அரசு மருத்துவமனையில் தான் பாரதிதாசன் காலமானார்.  அவர் உடலை புதுவைக்கு எடுத்துச் செல்ல  வாகனம் தேவைப் பட்ட பொழுது  சிலர் தயங்கினர்.  இந்தச்  செய்தி கண்ணதாசனுக்குத் தெரிந்து   உடனே அதற்கான ஏற்பாடுகள் செய்த அவரின் அருங்குணம் தெரியாது தன்  சொந்த  காழ்ப்புணர்வை   கேலியாய் கிண்டலாய்  செய்தியாக  அந்தப் பத்திரிகை வெளியிட்டுத் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டது.


(வளரும்)

27 comments:

ஸ்ரீராம். said...

எதிர்ப்பாளர்களுக்கு பாரதிதாசன் சொன்ன வரிகள் ரசிக்க வைத்தன.

ஸ்ரீராம். said...

தன் சுயத்தை மதிப்பவன் பிறர் சுயத்தையும் மதிப்பான் - இந்த வரிகளின் உண்மைத்தன்மையை என் அனுபவத்தை வைத்து எடைபோட முயல்கிறேன்!​

ஸ்ரீராம். said...

பாண்டியன் பரிசு திரைப்படமாக்கும்முயற்சி எந்த மட்டில் இருந்தது? சிவாஜி கவிஞரின் இறுதி அஞ்சலிக்கு வரவில்லையா? கண்ணதாசன் பற்றிய செய்திகள் நெகிழ்ச்சி ஊட்டின. பாரதிதாசன் IN - OUT செய்தியும் நெகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

மனம் உருக வைத்த பதிவு. எவ்வளவு உயர்ந்த மனிதர்களை அறிந்திருக்கிறீர்கள் நீங்கள்.
கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே.
இரண்டு பெருந்தகைகள். கண்ணதாசன்,பாரதிதாசன்.
இப்பொழுதும் படிக்கையில் நெஞ்சம் கசிகிறது.
நீங்கள் செய்தது போல அவர் எப்பொழுதுமே தமிழ் மக்களின் மனதில் வாழ்கிறார்.
மிக மிக நன்றி.

நெல்லைத்தமிழன் said...

கோமதி அரசு said...

நெகிழ வைத்த பதிவு.
பாரதிதாசன் , கண்ணதாசன்,திருலோக சீதாராம் அவர்களின் நல்ல குணங்களை அறிந்து கொள்ள பதிவு உதவியது.

மாதேவி said...

தமிழறிஞர்களை முன்பே அறிந்திருக்கின்றோம். சம்பவங்களை அறியத்தந்தது நன்று.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

'பாரதி பற்றிப் பேச எனக்குத் தான் தெரியும்; அவரைப் பற்றிப் பேச என்னை விட தகுதி இந்த நாட்டில் எவனுக்குமில்லை!' என்று பாரதிதாசனார் அறுதியிட்டுச் சொன்ன வரிகள் பாரதிக்கு பின்னான காலத்தில் பாரதியின் சரித்திரத்தில் இடம் பிடித்த வரிகள்.

'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனத்தில் நிற்பவர் யார்?'

-- என்ற கேள்விக்கான விடை..

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

'தன் சுயத்தை மதிப்பவன் பிறர் சுயத்தையும் மதிப்பான் - இந்த வரிகளின் உண்மைத்தன்மையை என் அனுபவத்தை வைத்து எடைபோட முயல்கிறேன்!​'

-- அருமையான முயற்சி! வாழ்த்துக்கள், ஸ்ரீராம்!

அப்படியான அனுபவம் அரிய கண்டடைதலாக இருக்கும்! முடிந்தால் பகிர்ந்து கொள்ளத் தயங்காதீர்கள்!





ஜீவி said...

@ ஸ்ரீராம் (3)

1. பாண்டியன் பரிசு திரைப்படமாக்கும் முயற்சி புரட்சிக் கவிஞரின் இறப்பிற்குப் பிறகு அவர் கண்ட கனவாகவே போய்விட்டது.

2. வரவில்லை. ஆனால் அடுத்த நாள் தினத்தந்தியின் முதல் பக்கத்திலேயே பாரதிதாசனின் குமாரர் திரு. மன்னர் மன்னன் அவர்களை கட்டிப்பிடித்தபடி குலுங்கி அழும் நடிகர் திலகத்தின் பின்-அப் படத்தைப் பார்த்தேன்.

இறுதி ஊர்வலத்தின் போது புதுவையின் அன்றைய முதல்வர் குபேர் பாவேந்தர் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இறுதி ஊர்வலத்திற்கு பின்னான இரங்கல் கூட்டத்தில் ம.பொ.சி,, ஈ.வி.கே. சம்பத், கண்னாதாசன், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர், என்.வி. நடராஜன், வ.சுப்பையா, கா.மு.ஷெரிப், குத்தூசி குருசாமி ஆகியோர் பேசினர். அவ்வை டி.கே ஷண்முகம் கவிஞரின் 'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ...' பாடலைப் பாடினார்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

உங்கள் பகிர்வு நெகிழ்ச்சியுடன் இருந்தது. தொடர்ந்து ஆர்வத்துடன் இந்தத் தொடரை வாசித்து வருவதற்கு நன்றி, வல்லிம்மா.

ஜீவி said...

நெல்லைத் தமிழன்

பாரதிதாசன் பற்றிப் படித்தேன்.... இரண்டு நாட்கள் முன்பு அவரது 'துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ" பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அனுபவம் ரசனையாகச் செல்கிறது.

பாரதிதாசன் காலத்தில் திமுக, தி.க அவரை மிகவும் மோசமாக நடத்தினதாகப் படித்திருக்கிறேனே... இதையொட்டி அண்ணத்துரை, பாரதிதாசன் கடிதம் வாயிலாக அறிக்கை வாயிலாக சண்டைபோட்டார்கள் என்றும் படித்திருக்கிறேனே

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

நெல்லைத்தமிழன்! உங்கள் பின்னூட்டம் moderate ஆவதில் ஏதோ சிக்கல். என் மெயிலில் இருப்பது தளத்தில் பிரசுரமாகவில்லை என்பதினால் நானே அந்த பின்னூட்டத்தை copy & paste பண்ணியிருக்கிறேன்.

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

பாரதி எவ்வளவு தான் சமநீதி சமுதாயத்திற்காகக் கனவு கண்டாலும், அந்நாளைய திராவிடக் கழகத்தவர் அவரைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்துப் பார்த்தனர். அந்த அடாத போக்கை தன் இயல்பு வழக்கப்படி பாரதிதாசன் சாடியதை இந்தப் பகுதியில் பார்த்தோம்.

நீங்கள் குறிப்பிடுவது வேறு விஷயம். பொற்கிழி நிதி சம்பந்தப்பட்டது. அது அவர்கள் தனிப்பட்ட அறிக்கைப் போராட்டம். அதைப் பற்றி இங்கு பேசுவது பதிவுச் செய்திகளிலிருந்து விலகிப் போவதாக அமைந்து விடும்.

ஜீவி said...

@ கோமதி அரசு

நல்லது அல்லாதவைகளை நல்லவை போல பரப்பும் காலம் இது. நல்லதை நல்லனவையாகச் சொன்னால் கூட நம்பாத காலமும் இது தான். கூடியவரை
சுயநலம் சார்ந்த சில தவறுகளைப் பெரிதாக்காமல் ஒரு மனிதனின் முழுமையை ஆராய்வோம் என்ற எண்ணமும் ஏற்பட்டது இந்தத் தொடரை எழுதி வருகையில் தான்.
தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

ஜீவி said...

@ மாதேவி
அந்தத் தலைவர்கள் உருவானதும் சம்பவங்களால் தான்.
தொடர்ந்து வாசித்து வாருங்கள். நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

In - Out.... நெகிழ்ச்சி. மறக்க முடியாத ஒரு நிகழ்வு தான்.

பாரதிதாசன் பற்றிய நினைவுகள் மனதைத் தொட்டன. எத்தனை பெரிய கவிஞர். அவரையும் நம் அரசியல்வாதிகளும் பத்திரிகைகளும் சீண்டாமல் விடவில்லையே... :(

Bhanumathy Venkateswaran said...

பாரதிதாசனைப்பற்றி இதுவரை கேள்விப்படாத செய்திகள். கண்ணதாசன் மீது இருக்கும் மதிப்பு மேலும் உயர்கிறது.

ஜீவி said...

@ வெம்கட் நாகராஜ்

வெளிப்படையாகப் பேசுவது
அறமில்லாத செயல்களுக்கு சீறி எழுவது
கற்பனையில் உலா வருவது; அதில் தனக்காக ஒரு உலகத்தை சமைத்துக் கொள்வது

-- இதெல்லாம் கலைஞர்களின், கவிஞர்களின் கூடப் பிறந்தவை.

சாதகமாக இருக்கும் பொழுது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.

பாதமாக இருக்கும் பொழுது அதற்கு எதிர்மாறாக நடக்கும். அவ்வளவு தான்.

ஜீவி said...

@ பானுமதி வெங்கடேஸ்வரன்

கண்ணதாசன் பற்றி இன்னும் நிறைய சொல்வதாக இருக்கிறேன்.

தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மிகவும் நெகிழ வைத்த பதிவு. இவ்வாறான அனுபவங்கள் என்றும் மனதில் இருந்துகொண்டே இருக்கும்.

Thulasidharan V Thillaiakathu said...

பாரதிதாசனின் பெயரைக் கேள்வி கேட்டவர்களுக்கு அவர் அளித்த பதில் செம. மிகவும் ரசித்தேன். அதே போன்று நீங்கள் இன் அவுட் என்பதற்குச் சொல்லியிருந்தது நெகிழ்ச்சியும் உங்கள் வரிகளும் அருமை ரசித்தேன்.

கண்ணதாசன் வாவ் போட வைத்தார். என்ன எளிமை! பெருந்தன்மை!

இன்று காலை கூட துன்பம் நேர்கையில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

உங்கள் அனுபவங்கள் எல்லாமே ரொம்பவே சுவையாகவும் ஸ்வாரஸ்யமாகவும் இருக்கிறது.

கீதா

ஜீவி said...

@ Dr. B. Jambulingam Asst.Regtr. (Retd)

நீங்கள் சொல்வது சரி. என்றும் நினைவில் நிற்கிற உணர்வுகள். நூல் கண்டிலிருந்து நுனி நூல் பிடித்து இழுப்பது போல அது சம்பந்தமாக நினைத்தவுடனேயே ஒவ்வொரு நிகழ்வும் ஓடி வந்து நினைப்பிலிருந்து வெள்ளமென வெளிப்படுகின்றன.

ஜீவி said...

@ தி. கீதா

பாரதிதாசன் பாரதியிடம் கொண்டிருந்த குருபக்தி மிகவும் உயர்வானது. அதே போல பாரதி தாசன் பரம்பரையினர் பாரதிதாசனிடம் கொண்டுள்ள் அன்பும் மிக நேர்த்தியானது. பிற்காலத்தில் பாரதிதாசன் தான் தொடர்பிலிருந்த கட்சியின் அபிமானத்தை இழந்தாலும்
பாரதிதாசன் பரம்பரையினருக்கு தங்கள் குருவின் மேலிருந்த பக்திக்கு எந்தக் குறைவும் ஏற்பட்டதில்லை.

இந்த மாதிரி தமிழ் அன்பர்களையெல்லாம் இணைத்து வைத்த தொடர்புச் சங்கிலி தமிழ் தான். தமிழர்களிடம் கருத்து வேறுபாடுகள் எத்தனையோ உண்டு. ஆனால் தமிழ் என்றால் வேற்றுமைகளை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். தமிழ் மொழிக்கான வெற்றி தான் தமிழர்களுக்கான வெற்றி என்பது திர்மானமாகி விட்ட ஒன்று.

பாரதிதாசனின் துன்பம் நேர்கையில் பாடல் பலரைக் கவர்ந்திருப்பது தெரிகிறது. அந்தப் பாடலில் விரவியிருக்கும் சோக உணர்வும், இசையும் முக்கிய பங்களிப்பாகின்றன.

அந்த அளவுக்கு 'சங்கே முழங்கு' கூட இல்லை என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

வே.நடனசபாபதி said...


// சாகா வரம் பெற்ற கவிஞர் அவர்களின் 'அழகின் சிரிப்பு'ம், 'குடும்ப விளக்கு'ம், 'குறிஞ்சித் திட்டு'ம், 'பாண்டியன் பரிசு'ம் இன்ன பிற படைப்புகளும் நம்மிடையே இருக்கையில் என்றென்றும் அவர் நம்மிடையே இருந்து கொண்டு தான் இருக்கிறார்'//
‘தமிழுக்கும் அமிழ்தென்று பேர்’ என்ற பாடல் வரிகளைக் கேட்கும்போது அவரே நேரில் நின்று பாடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது, உண்மைதான் அவர் இன்றென்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். தமிழுலகம் மறக்கமுடியாத கவிஞர் பாரதிதாசன் அவர்கள்!

ஆனால் தேனாம்பேட்டையில் அவரது பெயரை கொண்டுள்ள கவிஞர் பாரதிதாசன் சாலையை சுருக்கி K.B.தாசன் சாலை என்று அழைப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. அந்த சாலையில் உள்ள நீதியரசர் பஷீர் அகமது சையது பெண்கள் கல்லூரியின் (Justice Basheer Ahmed Sayeed College for Women) (SIET College யின் புதிய பெயர்) முகவரியில் கூட K.B.தாசன் சாலை என்று எழுதியிருப்பது அவருக்கு செய்யும் அவமரியாதை என்றே நினைக்கிறேன். இது பற்றி எனது வலைப்பக்கத்தில்
என்ன பெயரில் அழைக்கலாம்? எப்படி அழைக்கலாம்? என்ற தலைப்பில் எழுதிய பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

மதிப்பிற்குரிய திருலோக சீத்தாராம் அவர்கள் பற்றி அறியாத தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

கண்ணதாசனை காழ்ப்புணர்ச்சியுடன் கிண்டலாக செய்தி வெளியிட்டிருந்ததைப்பற்றி அவர் கவலைபாட்டிருக்க மாட்டார். ஏனெனில்

‘போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்’
என்றவராயிற்றே அவர்.

தொடர்கிறேன்.

ஜீவி said...

@ நடன சபாபதி

நீங்கள் சொல்லித் தான் தெரியும். பாரதிதாசன் தெரு தேனாம்பேட்டையில் இருக்கிறதா?
ஓ! SIET கல்லூரி இருக்கும் அந்த நீண்ட தெருவா அது?..

'போற்றுவார் போற்றட்டும்...' வரிகள் அந்நாளைய தென்றல் ஏட்டில் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும். கண்ணதாசன் இதழ் புதுமாதிரி அமைப்பில் இருக்கும். 'கண்ணதாசன்' இதழின் தொடர்ச்சியாய் 'கடிதம்' நாளிதழ் அமைப்பில் வெளிவந்தது.
'கருப்பாயி என்றொரு ஜாதி' என்ற என் கதையை கண்ணதாசன் தன் இதழில் வெளியிட்டு எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தினார்.

தாங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி, சார்.

Related Posts with Thumbnails