மின் நூல்

Tuesday, October 15, 2019

மனம் உயிர் உடல்

13. வெட்ட   வெளி  என்னும்  தெய்வம்!


சிவவாக்கியரைப் பற்றித் தெரியாதோருக்குச் சொல்ல வேண்டும். இவர் பதினெண் சித்தர்களில் ஒருவர். கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று அனுமானிக்கிறார்கள்.  இவரது பாடல்கள் பல சிந்தனையைத்  தூண்டுவன.  சாம்பிளுக்கு ஒன்று:

"கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா             
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே                 
கோயிலும் மனத்துளே  குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை  இல்லையே.."

பலருக்கு  நன்றாகத்  தெரிந்த  'நட்டக் கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம்  சாத்தியே'  கவிதையும் சிவ வாக்கியரது தான்.

சென்ற காலத்தில் தங்களைத் தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்று அழைத்துக் கொண்டு மேலோட்டமான இறைமறுப்பு பேசியவர்களும் 'தங்கள்  ஆள்' என்ற நினைப்புக்கு இடம் கொடுக்கும்  கவிதைகள்.   சிவவாக்கியர் என்ற அவர் பெயர் தான் அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்து,  விட்டு விட்டார்கள் போலிருக்கு..

சிவ வாக்கியர் பரம இறை பக்தர்.  கண்ணதாசன் சொன்ன மாதிரி 'மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடுவது போல தன்னைத் தோண்டி ஞானம் கண்டவர்' அவர்.

'வெட்ட வெளியதன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே!' என்று  வெகு
சாதாரண வார்த்தைகளில் அசாதரண விஷயத்தைக் கோடி காட்டியவர் சிவவாக்கியர்.

வானவெளியைத் தான் வெட்ட வெளி என்கிறார் சிவவாக்கியர்.  பிரபஞ்சம் பூராவும் நீக்கமற நிறைந்திருக்கும் காந்த  சக்தி  தெய்வத்திற்கு நிகர் என்று பிற்காலத்தில் தான்  தெரியவந்தது.  வான் காந்த  சக்தி தெய்வமாவது  எப்படி என்பது ஒரு அறிவார்ந்த கேள்வி.

இயற்கை சக்தியை நம் உடலுக்கு வெளியே, உடலுக்குள்ளே என்று இரண்டு கூறுகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.  நம் வசதிக்காகத் தான் இந்தப் பிரித்தலே தவிர வெளியே--உள்ளே இருப்பன  இரண்டும் வெவ்வேறானவை அல்ல.
இரண்டும் ஒன்றே.  வெளியே பேரண்டமாக இருக்கும் சக்திப் பிரவாகம் உடலுக்குள்ளே நம் குட்டியூண்டு உடல் தாங்கும் அளவுக்கு அணு போலவாய் புதைந்து கிடக்கிறது.

நம்முள் உறைந்திருக்கும் சக்தியும் வெளி வெளியில் பரந்து கிடக்கும் விண் சக்தியும் நம்மால் அறிய முடியாத அளவில் ஒன்றிற்கொன்று தொடர்பு (connectivity) கொண்டிருக்கின்றன.  சொல்லப்போனால் வெளி பேரண்ட சக்தியை துளித் துளியாய் எடுத்துக்  கொண்டு உள்சக்தி சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கிறது.

வாழும் காலம் பூராவும் இந்த தொடர்பு அறுந்து  போய் விடாமல் இருப்பதால் தான் நம்மால் சுவாசிக்க முடிகிறது;  சுவாசமே பிராண சக்தியாய் உள்ளில் உயிர்  வேதியல் மாற்றங்கள் கொள்கிறது.

உண்ட உணவை ஜீரணிக்க முடிகிறது; முயங்கவும் இயங்கவும் முடிகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்த தொடர்பு இருப்பதால் தான் உயிர் வாழ முடிகிறது.  உடலின்  உயிர்ப்பு இந்தத் தொடர்பில் தான் உயிர் கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தில் வாழும் அத்தனை உயிரினங்களும் தன்னுள் கொண்டிருக்கும் காந்தசக்தியும் வெட்டவெளி விண் காந்தசக்தியும் இயக்க ரீதியாகக்  கொள்ளும் தொடர்பில்  தான்  உயிர் இனங்களின் இயக்க ஆற்றலே பதுங்கிக் கிடக்கிறது என்பது இன்றைய விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிற உண்மை.

அது எப்படி என்றால் இப்படி:

நமது உடல் அமைப்பில் தேங்கியிருக்கும் காந்த சக்தியும் பிரபஞ்ச வெட்ட வெளியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காந்த சக்தியும் ஒன்றுக்கொன்று பின்னிய தொடர்பு  கொண்டவை.  பிரபஞ்சக் காந்தப்  பேராற்றலோடு நமது மூளை வழி  நரம்பு மண்டலமே இணைக்கப்பட்டிருக்கிறது.  உயிரியக்கமே இந்த காந்த சக்தியின் பேராற்றலால்  தான் என்று வரும் பொழுது வெளி காந்தசக்தியின் தொடர்பு  நம்மில் துண்டிக்கப்படும் பொழுது என்ன நிகழும் என்று சொல்லாமலே விளங்கும்.

நம் உடலுக்கு அதுவே குலுங்குவது போல ஒரு உணர்வை ஏற்படுத்தினால் இந்த மின் காந்த சக்தியின் ஆற்றலை மிக மிக லேசாகப் புரிந்து கொள்ளலாம்.
நன்றாக சளி பிடித்திருக்கும் பொழுது சின்னதாக ஒரு நூல் திரியை மூக்கின் அடி ஆழம் வரை செலுத்தி பலமாகத் தும்மும் பொழுது ஏற்படும்  உடல் அதிர்வில்  உடல் காந்த மின்சக்தியில் ஏற்படும் லேசான  அதிரலையை உணரலாம்.

உள்ளில் உறைந்திருக்கும் சக்திக்கும், வெளியே வியாபித்திருக்கும் பிரமாண்ட சக்திக்கும் உள்ள தொடர்பு அறுந்து போய் விட்டால் அடுத்த நொடியே உடல் இயக்கம் ஸ்தம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் துவங்கும்.  வாழ்நாள் காலம் முழுதும் அந்தத் தொடர்பு அறுந்து  போய் விடாமல் சுவாசமாய் நம்முள் உயிர்ப்புடன் செயல்படுவதைப் புரிந்து  கொள்வது தான் இறை ஞானம்.

'எங்கே தெய்வம்?' என்ற கேள்வி,  கேள்வி கேட்க மட்டுமே தெரிந்து அதற்கான பதிலை தன் முயற்சியில் பெறத் தெரியாதவர்களுக்கு சுலபமானது.  தெய்வம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம்  பூஜைகளில், கோயில்களில் காணப்படும் உருவாக்கப்பட்ட தெய்வ உருக்கள் தாம்.  'முருகனுக்கு சளி பிடித்தால் எந்த மூக்கை எந்தக் கையால் சிந்துவான்?' என்று கேட்ட அன்றைய பகுத்தறிவாளர்களுக்கு தெய்வம் என்பது மனிதக்    கற்பனையில் உருவான அதன் தோற்றம், உருவோடு குறுகிப் போன ஒன்று.  இன்றும் பகுத்தறிவாளர்களாகத் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொள்ளும் இவர்கள் முருகனை மட்டும் தமிழ்க் கடவுளாக அங்கீகரித்துள்ளது தான் காலத்தின் தேவையாக இவர்களுக்குப் போயிற்று.

மனித மனம்  என்பது சுத்தப் பெருவெளியின் ஒரு நுண்ணிய கூறே ஆகும்.
பரிணாம வளர்ச்சியின் பெருமை மிகு செயல்பாடு இது.  இந்த  நுண்ணிய கூறை ஆதாரமாய்க்  கொண்டு அந்த அண்டப் பெருவெளியின் தோற்றத்தையும் அதன் இயக்க ஆற்றலையும்,  விரித்துப் பார்க்கும்  ஞானம் நம்முள் சித்திக்க வேண்டும்.   எதன் பின்னம் எதுவோ அதனைத்  துணையாகக் கொண்டே அதனுடைய மூலச்சக்தியை ஆராயும் பேறு இது.

சுருக்கமாகச் சொல்லப் போனால் மனம் என்பது குரங்கல்ல, சாமி!  சாட்சாத்  சுத்தப் பெருவெளித் தெய்வம் குடி கொண்டிருக்கும் கோயில் அது!


(வளரும்)

11 comments:

G.M Balasubramaniam said...

நான் சிவவாக்கியரை படித்ததில்லைஇப்பதிவைப்படித்தவுடன் இதற்கு பின்னூட்டமக கீழ்காணும் வரிகள் நானெப்பவோ எழுதியது சரியய் இருக்கும்போல் தோன்றியது /
ஊனென்றும் உயிரென்றும் ஆன்மா என்றும்,
ஆயிரம்தான் கூறினாலும், அதெல்லாம் ஒன்றின்
வியாபிப்பே என்று மெய்ஞானம் கூறுகிறது.

அறிந்தவர்கள் என்று அறிந்தவர்கள் கூறும்
மெய்ஞான சூக்குமம் வசப்படும் முன் நானும்
மண்ணோடு மண்ணாய் மக்கிப் போவேன்.
அறிய முற்படுவோர் நிலையும் அதுதான்.
என்றோ எவனோ வரைந்து முடித்த வட்டத்தின்
தொடக்கப்புள்ளி தேடி ஏன் சோர்வுற வேண்டும்.?
அறியாமை இருளில் இருப்பதே சுகம்.

அண்ட வெளியே இருட்டின் வியாபிப்பு
அதில் ஒளி தருவதே ஞாயிறின் ஜொலிப்பு
அறியாமையும் அவலங்களுமாய் இருண்டிருக்கும்
வாழ்வியலில் நம்பிக்கையே ஞாயிறின் ஒளி.
ஹேஷ்யங்களும் கேள்விகளும் எனைத் துளைக்க
ஞாயிறின் விடியலுக்காகக் காத்திருக்கிறேன்./






ஜீவி said...

@ GMB

//என்றோ எவனோ வரைந்து முடித்த வட்டத்தின்
தொடக்கப்புள்ளி தேடி ஏன் சோர்வுற வேண்டும்.? //

இது தான் இடைஞ்சல்..




Thulasidharan V Thillaiakathu said...

நான் பல வருடங்களுக்கு முன் என் கல்லூரிக் காலத்தில் தத்துவம், ஆன்மீகம் பேசும் ஆசிரியை என்னை அழைத்து வைத்துக் கொண்டு நிறைய பேசுவார். இங்கு சொல்லியிருக்கும் கருத்துகள். சிவவாக்கியர் பற்றியும் அவர் சொன்னதைப் பற்றியும் தெரிந்து கொண்டதிலிருந்து இறை பற்றிய சிந்தனைகள் எனக்கு மாறத் தொடங்கியது. இங்கு சொல்லப்பட்டிருப்பது போல். எல்லாமே மனதுள் இருக்கு அதைப் புரிந்து கொள்வதுதான் தேடல் என்றும் கூட அந்த ஆசிரியை சொல்லியதுண்டு. பிரபஞ்ச சக்தி தான் சக்தி நம்முள் இருப்பதும் வெளியில் இருப்பதும் அதே சக்திதான். அந்த சக்திப் பேராற்றலைத்தான் நாம் சரிவர பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் சொல்லியது...

குண்டலினி சக்தி என்பதும் இதைச் சார்ந்ததோ?

ப்ரானிக் ஹீலிங்க், ரேய்க்கி என்பதெல்லாம் கூட இந்த பிரபஞ்ச சக்தியை-காஸ்மிக் பவரை நம்முள் சில பயிற்சிகள் மூலம் எடுத்துக் கொண்டு பலப்படுத்திக் கொண்டு உடலைத் தொடாமலேயே சக்தியைச் செலுத்துவது என்று கேட்டதுண்டு. என் உறவு வட்டத்தில் சிலர் இதைப் ப்ராக்ட்டீஸ் செய்கிறார்கள். 20 வருடங்களுக்கு முன்னரே இது பேசப்பட்டது.
ஆனால் இதற்கெல்லாம் முறையான நல்ல பயிற்சி தேவைப்படும் என்றே தோன்றுகிறது.

முந்தைய பதிவுகளையும் வாசித்து வருகிறேன் அண்ணா..

கீதா

ஜீவி said...

@ கீதா

அனுபவப் பின்னூட்டத்திற்கு நன்றி, சகோதரி!

நம்மில் படிந்திருக்கும் கசடுகளை நீக்கி உள்ளொளியை எப்படிப் பெருக்குவது என்பதற்கு மட்டும் எனக்குத் தெரிந்த ஆலோசனைகளைப் பரிந்துரைக்கிறேன்.

அதை எந்தளவுக்கு சுவாரஸ்யமாகச் சொல்ல வேண்டும் என்பதில் தான் முழு முயற்சி எடுத்து வருகிறேன்.

மற்றபடி எந்த சிரமமான யோகப் பயிற்சிகளும் இந்தத் தொடரில் கிடையாது. மனம், உயிர், உடல் பற்றி வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு என் அனுபவத்தில் தெரிந்தவைகளைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆவலே மிகுந்து இருக்கிறது.


G.M Balasubramaniam said...

நிதர்சன உண்மைகளைக் கூறுவது இடைஞ்சல் அல்ல தெரியாததை தெரியவில்லை என்றுசொல்ல இருக்கும் துணிவு

ஜீவி said...

@ GMB (2)

//என்றோ எவனோ வரைந்து முடித்த வட்டத்தின்
தொடக்கப்புள்ளி தேடி ஏன் சோர்வுற வேண்டும்.?
அறியாமை இருளில் இருப்பதே சுகம்.//

ஏன் சோர்வுற வேண்டும்? -- என்று மனம் நினைக்க வைப்பதைத் தான் இடைஞ்சல் என்றேன்.

உங்களுக்குத் தெரியாததை அல்ல.



வே.நடனசபாபதி said...

// உள்ளில் உறைந்திருக்கும் சக்திக்கும், வெளியே வியாபித்திருக்கும் பிரமாண்ட சக்திக்கும் உள்ள தொடர்பு அறுந்து போய் விட்டால் அடுத்த நொடியே உடல் இயக்கம் ஸ்தம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் துவங்கும்.//

இந்த தொடர்பு அறுந்துபோவதற்கான காரணம் என்ன என்பதை விளக்குங்களேன்.

நெல்லைத்தமிழன் said...

சிவவாக்கியரைப் பற்றிப் படித்திருக்கிறேன். அவர் எழுதிய பல பாடல்கள், திருமழிசை ஆழ்வார் எழுதிய திருச்சந்தவிருத்தத்தில் மிகச் சிறிய மாற்றங்களோடு இருக்கும்.

சிவவாக்கியரின் பாடலைத் தவறாகப் பொருள் கொள்ளுபவர்கள்தாம் அதிகம்.

உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் பாடலான 'அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா' வின் பாடல் வரிகள் சிவவாக்கியர் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறதுன்னு நினைக்கிறேன்.

கடவுளை மட்டும் கும்பிடாதே... மனிதனை நினை.. உன் எண்ணத்தைத் தூய்மை செய் என்பதுதான் சிவவாக்கியரின் மனதில் உதித்த எண்ணமாக இருக்கும்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

நல்ல கேள்வி. ஒன்றை வாசித்ததின் பின் விளைவாக விளையும் பின்னூட்டம்.

மனித உடலே வேதிப்பொருட்களின் குண்டமாகத் திகழ்கிறது.

பெரும்பகுதி நீரும், ஆக்ஸிஜனும் என்பதைத் தாண்டி கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கந்தகம், குளோரின், சோடியம், மக்னீசியம் என்று பட்டியல் நீளுகிறது. இந்தத் தனிமங்களில் ஏற்படும் குறைபாடுகள் மனித உள்காந்த சக்தியில் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. அதற்கேற்பவான பிரபஞ்ச வெளி ஆற்றலைப் பெற முடியாத நிலை.

இந்தத் தொடரே வாசிப்பு என்பதைத் தாண்டி யோசிப்புக்காகத் தான்.
வாசிப்பவரின் யோசனைகளைக் கிளர வேண்டும் என்பதற்காகத் தான்.
உங்கள் கருத்தை இது பற்றி பதிய வேண்டுகிறேன். நன்றி, ஐயா.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

சிவவாக்கியர் பற்றி நீங்கள் அறிந்த கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி, நெல்லை.

பல விஷயங்களில் மேலோட்டமான பார்வையை விலக்கி உள்நோக்கிய அலசல் இந்தத் தொடரில் வரும் பகுதிகளில் வர இருக்கின்றன. அது பற்றிய உங்கள் மனம் எண்ணும் எண்ணங்களைப் பதிய வேண்டுகிறேன்.

வே.நடனசபாபதி said...

//இந்தத் தனிமங்களில் ஏற்படும் குறைபாடுகள் மனித உள்காந்த சக்தியில் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. அதற்கேற்பவான பிரபஞ்ச வெளி ஆற்றலைப் பெற முடியாத நிலை.//

உள்ளில் உறைந்திருக்கும் சக்திக்கும், வெளியே வியாபித்திருக்கும் பிரமாண்ட சக்திக்கும் உள்ள தொடர்பு அறுந்துபோவதன் காரணத்தை விளக்கியமைக்கு நன்றி! அறிவியல் வழியாக நோக்கும்போது தங்களின் விளக்கம் சரியே. எடுத்துக்காட்டாக மின் இணைப்பில் இடையே பழுது ஏற்படின் நமக்கு மின்சாரம் கிடைப்பது நின்று போய்விடுகிறது அல்லவா. அதுபோல் தான் இதுவும் என எடுத்துக்கொள்ளலாம்.

Related Posts with Thumbnails