மின் நூல்

Wednesday, November 13, 2019

மனம் உயிர் உடல்

18.   வாழ்க்கை என்னும்  வேதம்


சொந்த  வாழ்க்கையில் தனக்கென்று  வாய்த்திருக்கும் சில குணநலன்களைப் பலரால் கைவிட முடியாமல் சிரமப்படுவதுண்டு.  பொய்யாகவேனும் தனது சொந்த குணத்திற்கு  மாறான செயல்களைச் செய்வதற்கான நிர்பந்தங்கள் பலருக்கும் ஏற்படுவது உண்டு.  'என்ன செய்யறது  சார்?..  நாம்  நெனைக்கிற மாதிரியே எல்லா விஷயங்களிலும் நடந்துக்க முடியறதா, என்ன?  அப்படி இப்படி அட்ஜெஸ்ட் பண்ணிக்கத் தான் வேண்டியிருக்கு' என்பது இன்றைய தேதியில் நம் எல்லோருக்குமான சிக்கல்.

இது தான் ஒரு மாதிரியான இரட்டை வாழ்க்கை.

இந்த வயதில் நம்மிடம் குடிகொண்டிருக்கும் இந்த குணங்கள் நம் பிறப்போடையே கூடச் சேர்ந்து வந்ததல்ல.   'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே..  பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே'  என்று தமிழ் திரைப்படப் பாடல் ஒன்று  நினைவுக்கு வருகிறது.    'அன்னை வளர்ப்பதிலே' என்ற வார்த்தைகளை மட்டும் எடுத்து விட்டு,  'அவரவர் பெறும் அனுபவங்களிலே' என்று மாற்றிக் கொண்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.  குழந்தையாய் பிறக்கும் பொழுது  எந்த எண்ணப்பதிவும் இல்லாத அதன் மூளைப் பகுதியில் அந்தக் குழந்தை வளர்கையிலேயே தான் கொஞ்சம் கொஞ்சமாக இதற்காக இது என்று ஒவ்வொரு சிந்தனையும் படிப்படியாக மனசில் படிகிறது.

குழந்தைக்கு மூளையில் முதலில்  படியும் எண்ணப் பதிவு பிரசவ அறையின் சீதோஷ்ண நிலையை உள்வாங்கிக் கொள்கிற வீரிடல் தான்.
அடுத்து பசி..  குழந்தையின் ஆரோக்கிய உடல் வளர்ச்சிக்காக  அந்த உணர்வு ஏற்படும் பொழுது கேட்டுப் பெற இறைவன் ஆற்றலையும் தந்திருக்கிறான்.   'வீல் வீல்' என்ற குழந்தையின் வீரிடல்,  சிணுங்கல் போன்றவை தான் உணரும் எந்த அசெளகரித்தையும்  நெருக்கமானவர்களுக்குத் தெரியப்படுத்த  இறைவன் அதற்கு  அளித்திருக்கும் ஆற்றல்.   தாய்ப்பால் கிடைக்கையிலே அந்தப் பசி உணர்வு மறைந்து போவதால்  பாலின் தேவையும் அதன் ருசியும் அதற்கான விருப்பமும் குழந்தையின் மூளையில் படிந்து போகிறது.  அதோடு தன் தேவையைத் தீர்த்து வைத்த தாயின் அருகாமையும்,  அவளின் முகத் தோற்றமும், அவளின் சீராட்டலும்,  அன்பும், சிரிப்பும் என்று நிறையச் சொல்லலாம்.  தாயின் உடல் சூடு கூட தீட்சண்யமாக குழந்தையின் எண்ணத்தில் (மூளையில்) பதிகிறது.  தன் தாயை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி குழந்தை அறிந்து  கொள்ளும் ஆற்றல் ஏற்படுவதும் இதனால் தான்.   யார் தன்னை நெருங்கி முகம் காட்டி சிரித்துக் கொஞ்சினாலும் குழந்தையும்  பதிலுக்குச் சிரிப்பதும் பழக்கமாகிறது.

சில பேதைகள் கிச்சு கிச்சு மூட்டி குழந்தையை  சிரிக்க வைக்க முயல்வர்.  அந்தப் பிஞ்சுப் பிராயத்தில் அந்தக் கூச்சத்தின்  பதிவு குழந்தையின்  மூளைப்பகுதியில் பதிவதெல்லாம் தேவையில்லாத  சமாச்சாரங்கள்.   ஆண் குழந்தைகளுக்கு இதெல்லாம் கூடவே கூடாத விஷயங்கள்;  அந்த கூச்ச உணர்வு  பிற்காலத்தும்  தொடர்ந்து வரும் என்பதினால்.

அதே மாதிரி  குழந்தை வளர வளர  பேய்-கீய் என்று இல்லாத விஷயங்களைச் சொல்லி   பயமுறுத்துதல்,  ஏதோ கண்ணைக் குத்தத் தான் இறைவன் இருப்பது போல  'உம்மாச்சி கண்ணைக் குத்தும்'  அச்சுறுத்தல்கள், ஆத்திரங்கள்,  ஏமாற்றுதல்கள்,  வாக்கு வாதங்கள், வன்மம் - பழிக்குப் பழி பாடம் போதித்தல்  ('அவன் உன்னை அடிச்சான்னா,  உன் கை என்ன பூப்பறிக்கப் போச்சா?'  போன்ற வழிகாட்டல்கள்) போன்றவைகளைத் தவிர்க்க வேண்டும். 

குழந்தைப் பருவத்தோடு போய் விடுவதில்லை இதெல்லாம்.   எந்த வயதிலும் பீடிக்கும் சில வேண்டாத உணர்வுகள் அதற்கேற்பவான பாடம் பெறும் வரை வாழ்க்கை பூராவும் தொடரும்  ஜென்ம விதிகள்  இவை.

'மனித வாழ்வே கிடைத்தற்கரிய வரம் என்கிறார்கள்.  அப்படியாகக் கிடைத்த  அந்த அரிய ஒரு வாழ்க்கையிலும்  மனசுக்குப் பிடித்த மாதிரியான காரியங்களைச் செய்யலேனா அது எப்படி?' --  குப்பண்ணா நேற்றைக்குத் தான் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டார்.

குப்பண்ணா என் நண்பர்.   பக்கத்துத் தெரு டீக்கடையில் நாங்கள் சந்திப்பது வழக்கம்.     டீயோ, கடையோ எங்களுக்கு முக்கியமல்ல.  காலை செய்தித் தாளை மேய்ந்தவுடன் மனசில் பட்ட எண்ணங்களை  பரிமாறிக் கொள்ள ஒரு இடமும்,  நமக்கேத்த நட்பும் வேண்டும் என்ற  விருப்பத்தில் விளைந்த எங்களுக்கான பழக்கம் இது..

"ஏன் அப்படிச் சொல்றீங்க, குப்பண்ணா?"  என்று கொக்கி போட்டேன்.

குப்பண்ணா பணி ஓய்வு  பெற்ற ஆசிரியர்.  கணிதம், உயர் நிலை வகுப்புகளில் அவர் போதித்த பாடம்.  குப்பண்ணாவின் நண்பர் ராமலிங்கம் எனக்கும் நண்பர் தான்.  பரம ஏழை.  ராமலிங்கத்தின் பெண் இந்த வருடம் பள்ளி இறுதித் தேர்வு எழுதுகிறாள்.  தினமும்  மாலை  இரண்டு மணி நேரம் அந்தப் பெண் குப்பண்ணா வீட்டிற்கு வந்து குப்பண்னாவிடம் கணிதப் பாடம் கற்கிறாள்.  டியூஷன் மாதிரி தான்.   அருமை நண்பர்  ராமலிங்கத்தின் ஏழ்மை நிலை   கருதி அவர் பெண்ணுக்கு இலவசமாகவே   சொல்லித் தருகிறார்.  இந்த இலவச ஏற்பாடு குப்பண்ணாவின் மனைவிக்குப் பிடிக்கவில்லை.  பணத்திற்குச் சொல்லித் தந்தால் வீட்டுச் செலவு எதற்காகவாவது ஈடுகட்டுமே என்பது அவர் மனைவி கட்சி.

இந்த விஷயத்தை விவரமாகக் குப்பண்ணா என்னிடம் சொன்னார்.   "அந்தப் பெண் பாடம் படித்துப் போன கொஞ்ச நேரத்திற்கெல்ல்லாம் எதையாவது சாக்கிட்டு என் மனைவி என்னுடன் சண்டை போடுகிறாள்.  மற்றவர்கள் மாதிரி வாழத் தெரியாத இளிச்சவாயனாம் நான்.  தினமும் இதே ரோதனையா போச்சுப்பா.." என்று வருந்தினார்.

குடும்பம் என்று வந்து விட்டால் எந்த விஷயத்திலும் தனிக் கருத்து கொண்டிருக்க முடியவில்லை என்பது இன்னொரு இடைஞ்சல்.  அதற்காக சன்னியாசம் வாங்கிக் கொண்டா போக முடியும்?..  கணவன்-- மனைவி கூடிப் பேசி கருத்து ஒருமித்து வாழ்வது  என்பது குதிரைக் கொம்பாகத் தான் பலருக்கு இருக்கிறது. 

கருத்து ஒருமித்து என்ற பேச்சுக்கே இடமில்லாமல்  'உன்பாடு உனக்கு; என் பாடு எனக்கு' என்ற போக்கு  ராஜாராம் போக்கு.   எங்கள் வீட்டுக்கு நாலு வீடுகள் தள்ளி இருப்பவன் இன்னொரு நண்பன் ராஜாராம்.   இந்த டீக்கடை அரட்டையில் அவனும் கலந்து கொள்கிறவன் தான்..  ஏனோ நேற்றைக்கு வரவில்லை.

எங்களுக்கு ராஜாராம் விஷயங்களை டீல் பண்ணுகிற பாணியே ஒரு விதத்தில் புதுமையாக இருக்கும்.  பொதுவா, 'ஹாயா'ன்ன வாழ்க்கை..

சாமி நம்பிக்கை லவலேசமும் இல்லாத மனுஷன்.   பைஜாமா--ஜிப்பா, பரட்டைத் தலை,  எப்பவும் இரண்டு மாச தாடி மழிக்காமல்.  புதுயுகக் கவிஞன்.  'மனிதரைப் பாடுவோம்' என்ற கவிதைக் குழாமில் குறிப்படத் தகுந்த ஆசாமி. தேசிய மயமாக்கப் பட்ட வங்கி ஒன்றில்  வேலை.  ஐந்திலக்க ஊதியம்.   ஓரளவு ராஜராம் எப்படிப்பட்டவன் என்று கோடி காட்ட இது போதும்.

"எந்த வயசிலேந்து உனக்கு இந்த சாமி நம்பிக்கை போச்சு?" என்று ஒரு நாள் அவனைக் கேட்டேன்.

"நெனைவு தெரிஞ்ச பருவத்திலேந்தேன்னு வைச்சுக்கோயேன்.." என்றான்.  "எங்கப்பாவுக்கு அந்த வாசனையே கிடையாது;  எங்கம்மா அவருக்கு மேலே; அந்த ஜீன் எப்படியிருக்குமோ அப்படியிருக்கேன்.." என்று  சொல்லிச் சிரித்தான்.

"அப்போ உன் வாரிசும் அப்படித்தான்  உருவாவான் என்று சொல்லு..."   ராஜாராமனுக்கு  பன்னிரண்டு வயசில் ஒரே ஒரு பையன்.

"அதான் இல்லை.." என்று சிரித்தான்.  "அவன் என் மனைவியைக் கொண்டிருக்கிறான்..  இந்த வயசிலேயே விஷ்ணு சகஸ்ரநாமம் அது இது என்று தூள் கிளப்புகிறான்..  அம்மாவுக்கேத்த பிள்ளை.  ஆன்மிக விஷயங்களில் அவள் தான் இவன் குரு.  சில சமயங்களில் இந்த ரெண்டு  பேர் கிட்டயேயும் நான் மாட்டிக்கிட்ட பொழுது நீங்க பாக்கணுமே.." என்று கலகலத்தான்.

நாங்களும்  சிரித்தோம்.

இப்படியும் சிலர் வாழ்க்கை அமைந்து தான் இருக்கிறது.  கணவன் - மனைவி - பையன்கள் என்று ஒருவர் சுதந்திரத்தில் இன்னொருத்தர்  தலையிடாமல்  (மதிக்கிறது என்று சொல்கிறார்கள்)  அவரவர் அவரவர் போக்கில் வாழ்வது.

(வளரும்)


10 comments:

ஸ்ரீராம். said...

மூளைப்பகுதியில் எண்ணப்பதிவுகள் படர ஆரம்பிக்கும்போது அது எந்த சுவாரஸ்யத்தை அடிப்படையில் சேமிக்கப்படுகின்றன?  பழைய ஜென்மத்தின் தொடர்பால், ஜீன்களின் ஆதிக்கத்தால்...?  அதை வைத்துதான் அவர் குணங்களில் ஒரு சார்புநிலை உருவாகும் அல்லவா?

ஸ்ரீராம். said...

ஒரு குடும்பத்தில் எல்லோருக்கும் ஒரே எண்ணம் இருக்க முடியாது.  தினசரி வாழ்க்கையில் பொதுவான கருத்துகளில்இருக்கும் கருத்தொற்றுமை முக்கியமான நேரத்தில் முக்கியமான விஷயத்தில் முரண்டுபிடிக்கும்!

G.M Balasubramaniam said...

நம் குணாதிசயங்கள் பெரும்பாலும் மூன்று -ஐந்து வயதுக்குள்ளாகவே நிச்சயிக்கப்படுவதாக மனநிலை ஆராய்ச்சியாளர்கள் கூறு கின்றனர் -

ஜீவி said...

@ ஸ்ரீராம்

எண்ணப் பதிவுகளின் எண்ணிக்கை எக்கச் சக்கம். புளியைப் பார்த்தாலே இது புளிக்கும், சர்க்கரையைக் கண்டால் இனிக்கும் என்று நமக்குத் தெரிவதிலிருந்து எதை எடுத்தாலும் அது நமது அனுபவத்தின் அடிப்படையிலிருந்து உருவான எண்ணங்களின் வெளிப்பாடு தான். எண்ணப் பதிவுகள் என்பது ஒரு தகவல் சேமிப்புக் கிடங்கு. அதிலிருந்து வேண்டிய தகவல்கள் வேண்டிய நேரத்து உருவிக் கொள்ளப்படுகின்றன.
அவ்வளவு தான். இந்த சேமிப்புக்கு எந்த சுவாரஸ்ய அடிப்படையும் கிடையாது. நீங்கள் தெரிந்து கொண்டவைகள் என்ற அடிப்படையில் ஒரு தகவல் களஞ்சியம். அவ்வளவு தான்.

ராஜராஜன், பாண்டிய மன்னன் என்று ஒருவர் நினைத்துக் கொண்டால் அடுத்து ராஜராஜன் சோழ மன்னன் என்று அவருக்கு எப்பொழுது ஆதார பூர்வமாகத் தெரிய வருகிறதோ அப்பொழுது அவை திருத்தவும் படுகின்றன என்பது இன்னொரு ஆச்சரியம்.

எனக்கு சீட்டு விளையாடுவது தெரியாது. அதனால் என் எண்ணப் பதிவில் சீட்டு விளையாட்டு பற்றி தகவல்களைத் தேடினால் கிடைக்காது. இந்த மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று.

போன ஜென்மம் என்பதும், அடுத்த ஜென்மம் என்பதும் இதுவரை நிரூபிக்கப்படாத விஷயங்கள். நம்புவர்கள் நம்பலாம். அவ்வளவு தான்.

நீங்கள் சொல்லியிருக்கிற பழைய ஜென்மம், ஜீன் தொடர்பு இந்த இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று முரண்படுகிறது. இல்லையா?.. (சென்ற ஜென்ம அப்பா, இந்த ஜென்ம அப்பா இல்லை என்ற முறையில்)

குணங்கள் (கோபம், சபலம், தீராத ஆசை, பழிவாங்கும் குணம் போன்றவை) என்பது மாறாத ஒன்றல்ல. ஆயுசு பூராவும் இவன் இப்படித் தான் இருப்பான் என்று நிர்ணயிக்கப்பட்டதும் அல்ல. அவற்றை மாற்றி அமைப்பதற்கான முயற்சி தான் இந்த தியானம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

கரெக்ட். அதெற்கெல்லாம் எப்படி தீர்வு காணலாம் என்ற யோசிப்பிற்கான முயற்சியாகவும் இந்த தியானம் இருக்கும்.

தொடர்ந்து வாசித்து கருத்திட, என்னை உள்ளார்ந்து எழுத தூண்டுவிக்க வேண்டுகிறேன். நன்றி.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

மனவள ஆராச்சியாளர்களின் கூற்றுக்குப் போவானேன்?..

மூன்று, ஐந்து வயதுகளில் நிர்ணயிக்கப்பட்ட குண நலன்கள் தான் இப்பொழுதும் என்னில் குடிகொண்டிருக்கின்றன என்பதை உங்கள் சுய அனுபவத்தில் நீங்களே ஒப்புக் கொள்ள மாட்டீர்களே, ஐயா.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சார்.

நெல்லைத்தமிழன் said...

சீரியஸ் டாபிக்குகளுக்குள் செல்ல இன்னும் மனது ரெடியாகவில்லை. நிறைய வேலைகளில் இருப்பதால் லைட்டர் டாபிக்குகளை மட்டும் படிக்கிறேன்.

உங்கள் 2-3 இடுகைகள் பாக்கி. படித்துக் கருத்திடுகிறேன்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

சரி, நெல்லை.

வே.நடனசபாபதி said...

நம்முடைய பழக்க வழக்கங்கள் பிற்காலத்தில் சூழ்நிலை காரணமாக அமைந்துவிட்டாலும் சில பழக்கங்கள் மரபணு மூலம் சந்ததிகளுக்கு வருகிறது என நினைக்கிறேன். தங்களின் கருத்து என்ன?

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

'சில பழக்கங்கள் மரபணு மூலம் சந்ததிகளுக்கு வருகிறதா' என்கிற கருத்தை வரும் பகுதி ஒன்றில் அலசலாம், ஐயா. தங்கள் உபயோகமான ஆலோசனைக்கு நன்றி.

Related Posts with Thumbnails