மின் நூல்

Wednesday, November 27, 2019

மனம் உயிர் உடல்

21.  உள் மனதின் ஆற்றல்


னம் என்று தனியாக ஏதுமில்லை.  நம் மூளையில் இருக்கும் ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட நியூரான்களின் இணைப்பைத் தான் மனம் என்று சொல்கிறோம்  என்பது  இந்தத் தொடரின் பால பாடம் தான்.

இருந்தாலும் அந்த நியூரான்கள் செயல்படும் விதம் நாம் கொள்ளும் எண்ணங்களினால் தீர்மானிக்கப் படுகிறது  என்பது  இன்னொரு உண்மை.

அதாவது  கேளிக்கை விடுதிகளுக்கு போவதா, இல்லை நூல்  நிலையத்திற்கு போவதா என்பதை தீர்மானிக்கும் உறுதி நமக்கு வந்து விட்டால் நம் எண்ணத்திற்கேற்ப நியூரான்களின் செயல்பாட்டை அமைத்துக் கொள்ளலாம்  என்ற வசதி நம்மிடமிருந்து   தான் உருவாகிறது என்பது பலருக்குத்  தெரியாத  அதிசயம்.

இதுவே அளப்பரிய  சக்தி கொண்ட உள் மனதை நல்ல பழக்க வழக்கங்களில் சிறைப்படுத்தும் வித்தை.  உள் மனம் நல்லது  கெட்டது அறியாத  பேதை. அதுவே அதை நல்வழிப்படுத்துவதும் நமக்கு சுலபமாகும்.  பிடித்து  வைத்த பிள்ளையார் மாதிரி  நாம் உருக்கொடுப்பதற்கேற்ப உருவாகும் இயல்பு பெற்றது அது.                                                   

இதையே 'உன் எண்ணம் எதுவோ அதுவாகவே நீ ஆகிறாய்' என்று ஆன்றோர் சொல்வர்.   பயம்,  சந்தேகம்,  போகம்,  பொறாமை போன்ற உணர்வுகள்  வெளி மனத்தை எளிதில் பற்றும்  இயல்பு கொண்டவை.  பற்றியவை பற்றிய ஆளைப் பற்றும்  வரம் கொண்டவை.               

உள்மனம் அளவற்ற சக்தி வாய்ந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஆராய்ந்து செயல்படத் தெரியாத ஒரு சக்திமான் என்பதும் நினைவிலிருக்கட்டும்.  அதை வழி நடத்தும் பெரும் பொறுப்பு  வெளி மனத்தால் மட்டுமே முடியும் என்பது அடிப்படை உண்மை.

யோசிப்பது வெளிமனத்தின் தொடர்ந்த நடவடிக்கை.   நீங்கள் எதை ஆழமாக யோசிக்கிறீர்களோ  அந்த யோசிப்பின் அடிபடையில் விரும்புகிறீர்களோ அந்த விருப்பம் உள்  மனத்திற்கு படமாக அனுப்பப்பட்டு உள் மனத்தின் ஆற்றலில் அற்புதமாக நிறைவேற்றப் படுகிறது.  வெளி மனத்தில் முகிழ்க்கும் ஆசைகளை அற்புதமாக நிறைவேற்றித்  தருவதற்கு கிடைத்த மந்திரச்சாவி உள் மனம் என்பது மட்டும் நினைவில் இருக்கட்டும்.

ஒரு  நாலாந்தர திரைப்படத்தைப் பார்த்து விட்டு அந்தத் திரைப்பட கதாநாயகனைப்  போலவே நாலாந்தரமாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களின் வெளிமனத்தில் வலுப்பட்டால் அதற்கான சந்தர்ப்பங்கள் உங்களின் உபயோகத்திற்காக வாசல் கதவைத் தட்டும்.  பழம் நழுவி பாலில் விழுந்தது என்று அப்பாவியாக நினைத்துக்  கொள்வீர்கள்.  பாலை ஏற்பாடு  பண்னியதும், பழத்தை நழுவ வைத்து அதில் விழ வைத்ததும் அப்படியான காரியத்திற்கான உங்கள் வெளிமனத்தில் படிந்த சிந்தனை தான் என்பது உங்களுக்கேத்  தெரியாது.  ஈ நெருப்பை வலம் வரும் பொழுது அந்த சூடு இதமாகத் தான் இருக்கும். அந்த சுகத்திற்கு ஏங்கி திருப்பி திருப்பி நெருப்பை வலம் பொழுது ஏதாவது ஒரு சுற்றலில் அந்த ஈ நெருப்பில் விழாமல் போகாது.
                                                                                                                   
கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும்  ஐம்புலன்களின் ஈர்ப்புகளினால் வெளி மனம் உருவாகிறது.  அல்லது அந்த ஈர்ப்புகளின் தாக்கத்தில்  வெளிமனம் தன்னை உருவாக்கிக் கொள்கிறது.  அந்த ஈர்ப்புகளை செயல்படுத்த சக்தி மிக்க உள் மனத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறது.   அந்த உபயோகம் லாகிரி வஸ்துகளின்  ஈர்ப்பு போல  வெளி மனத்தை பற்றிக் கொண்டு உள் மனத்தின் ஆற்றல் மிகுந்த சக்தியால்  நிறைவேற்றப்பட்டு அதுவே  வெளி மனத்திற்கு அனுபவமாகிறது.

அதனால் எதையும் அனுபவிப்பது வெளி மனமே.  நாம் சந்தோஷிப்பதாக நினைப்பது வெளி  மனத்தின் சந்தோஷத்தையே.   அதனால்  நான் என்ற நம் நினைப்பை மிகச் சரியாகப் பிரதிநிதித்துவப் படுத்துவது நமது  வெளிமனமே.

அதனால் ஒருவன் நல்லவனாவதும் தீயவனாவதும் வெளிமனத்தின் ஆளுகையிலேயே என்பதே புரிதலாகிறது.  அன்னை, தந்தை, ஆசிரியர், நம் வாசிப்பு  தேர்வுகள், பார்ப்பவை, பழகுபவை, எதிர்கொள்பவை எல்லாம் வெளிமனத்தில் தடம் போட்டு அந்தத் தடங்களே நாமாகிறோம்.

இதனால் என்ன  தெரிகிறது?..

வெளி மனதை அழுக்குப்படாமல் வைத்துக் கொள்ள வேண்டும்  என்று தெரிகிறது.  நல்ல சிந்தனை,  நல்ல ஒழுக்கம்,  பரோபகாரம்,  இரக்கம்,  ஏமாற்றாமை, எளியோருக்கு  இரங்குதல்   போன்ற நற்பண்புகள்  மட்டுமில்லை  புகழ், வெற்றி, உடல் ஆரோக்கியம்,  அமைதியான  ஆர்பாட்டமில்லாத வாழ்க்கை,  சமூக உறவுகளைப் பேணிக்காத்தல் போன்ற  நற் சிந்தனைகளையும் மனத்தில் பதித்துக் கொண்டு அவற்றை அடை காத்தால் வெளிமனம் அவற்றை தன்னில் பதித்துக் கொண்டு  உள்மனத்தின் சக்தி வெளிப்பாடாக  நாம் நினைப்பதெல்லாம் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பிக்கும்.

சில செயல்களுக்கு உடனடியான தீர்வுகள் நமக்குக் கிடைக்காமல் இருக்கலாம்.  நாமே அது பற்றி  சலித்துப் போயிருக்கிற நேரங்களில் 'இப்படி செய்து பார்த்தால் என்ன?' என்ற அறிவுறுத்தல் நமக்குள்ளேயே கிடைக்கும்.   அப்படி செய்து பார்க்கும் பொழுது   ஊறப் போட்டிருந்த விஷயத்திற்கு உடனடியான தீர்வும் கிடைத்து  நாம் மகிழ்ச்சியில் ஆழலாம்.  உள்ளிட்ட எதையும் நாமே மறந்து போனாலும் நம் உள் மனம் மறப்பதில்லை.  ஊறப் போட்டு அலசி ஆராய்ந்து  அதற்கு  என்ன செய்ய வேண்டும் என்பதனை நமக்குத் தெரிவிக்கிறது.

ஆக்கபூர்வமான நல்ல எண்ணங்களுக்கு மட்டுமில்லை,  வெளிமனம் தீய செயல்களுக்கான  உருவாக்கத்தை உள் மனத்திற்கு  அளிக்கும் பொழுது அவற்றின் நிறைவேற்றலுக்கான தீர்வுகளுக்கும்  உள் மனம் உழைத்து தீர்வுகளை அளிக்கிறது  தான்.  உள் மனத்திற்கு  நல்லவை-- தீயவை என்ற பாகுபாடெல்லாம்  தெரியாது.  அதன் வேலை வெளிமனத்தின்  வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பது ஒன்றே என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

வெளி மனதை எப்படி கறை படியாமல்  வைத்துக்  கொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை இந்த  தியானத்தின் அடுத்த கட்டமாக அடுத்துப் பார்ப்போம்.

(வளரும்)


10 comments:

ஸ்ரீராம். said...

அற்புதமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.  வெளிமனதின் ஆசைகளை நிறைவேற்றும், சூதுவாது அறியாத ஆனால் அதீத வலிமை கொண்டது உள்மனம். உள்மனத்துக்கு வருத்தம், சந்தோஷம் கிடையாது இல்லையா?

வெளிமனத்துக்கு மட்டுமே அவை.  எனவே இந்த உணர்வுகள் யாவுமே பிரமை, தற்காலிகம், நிரந்தரமில்லாதவை!

கோமதி அரசு said...

//'உன் எண்ணம் எதுவோ அதுவாகவே நீ ஆகிறாய்' என்று ஆன்றோர் சொல்வர். பயம், சந்தேகம், போகம், பொறாமை போன்ற உணர்வுகள் வெளி மனத்தை எளிதில் பற்றும் இயல்பு கொண்டவை. //

மிக அருமையாக சொல்லி வருகிறீர்கள்.

கோமதி அரசு said...

//நல்ல சிந்தனை, நல்ல ஒழுக்கம், பரோபகாரம், இரக்கம், ஏமாற்றாமை, எளியோருக்கு இரங்குதல் போன்ற நற்பண்புகள் மட்டுமில்லை புகழ், வெற்றி, உடல் ஆரோக்கியம், அமைதியான ஆர்பாட்டமில்லாத வாழ்க்கை, சமூக உறவுகளைப் பேணிக்காத்தல் போன்ற நற் சிந்தனைகளையும் மனத்தில் பதித்துக் கொண்டு அவற்றை அடை காத்தால் வெளிமனம் அவற்றை தன்னில் பதித்துக் கொண்டு உள்மனத்தின் சக்தி வெளிப்பாடாக நாம் நினைப்பதெல்லாம் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பிக்கும்.//

உண்மை.

வே.நடனசபாபதி said...

//உள் மனத்திற்கு நல்லவை-- தீயவை என்ற பாகுபாடெல்லாம் தெரியாது. அதன் வேலை வெளிமனத்தின் வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பது ஒன்றே என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.//

இந்த தகவல் இதுவரை அறியாத ஒன்று.

வெளி மனதை எப்படி கறை படியாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை அறிய காத்திருக்கிறேன்.

G.M Balasubramaniam said...

எண்ணங்களே மனமா மனமே எண்ணங்களா கன்ஃப்யூஷன்

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//உள்மனத்துக்கு வருத்தம், சந்தோஷம் கிடையாது இல்லையா?//

நல்ல கேள்வி. ஆர்வத்திற்கு நன்றி.

உள் மனத்திற்கு ஒரு விசேஷ ஆற்றல் உண்டு ஸ்ரீராம். ஒரு நேரத்து சந்தோஷத்தையும் வருத்தத்தையும் படம் பிடித்தாற் போல தன்னில் வைத்துக் கொண்டு நீங்கள் அதை பிற்காலத்து நினைத்துப் பார்க்கும் நேரத்தில் அப்படியே அந்தக் காட்சியைப் போட்டுக் காட்டும். இதைப் பற்றி பின்னால் விவரமாகச் சொல்கிறேன்.

வெளிமனத்தின் விகசிப்புகள் அத்தனையும் அந்த அந்த நேரத்திற்கு நமது அனுபவங்களாகி விடுவதால் வெளி மனத்திற்கும் என்று குத்தகைக்கு எடுத்தாற் போன்ற சந்தோஷம், வருத்தம் என்று ஏதுமில்லை.

வருத்தம், சந்தோஷம் எல்லாமே தற்காலிகமானவை, நிரந்தரமில்லாதவை என்பது நாம் அறிந்தது தானே?

ஆனால் அந்தந்த நேரத்து உணர்வுகள் மட்டும் பிரமையில்லை. நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றவரை மரியாதையுடன் அழைத்து அதிக செலவில்லாமல் எம்.பி.பி.எஸ். சீட் கொடுப்பது பிரதட்சய உண்மை இல்லையா? தன்னைப் பெற்றவர்களுகளை பல இலட்ச ரூபாய்களுக்கு கடன் படாமல் மருத்துவ சீட் பெறுவது என்றால் வசதியற்ற ஒரு சிறுவனுக்கோ சிறுமிக்கோ அது எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்?.. நம் கற்பனையில் கூட இப்படியான ஒரு காட்சியை தரிசிப்பதில் நமக்கே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது?..

ஜீவி said...

@ கோமதி அரசு 1 & 2

அந்தந்தப் பகுதிகளை வாசித்து வரும் பொழுது உங்களுக்கு ஐயம் என்று ஏதாவது ஏற்பட்டால் அதனைத் தவறாது குறிப்பிட வேண்டுகிறேன். நீங்கள் வேண்டும் விளக்கம் பற்றி எனக்குத் தெரியாத போது, அது பற்றி நூல்களில் தேடி நானும் அது பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். அதனால் இந்தத் தொடர் சிறப்பாக அமைய கேள்விகள் முக்கியம்.

இந்தத் தொடரில் எடுத்தாளும் விஷயங்கள் அத்தனையும் பல நூல்களில் வாசித்த என் வாசிப்பு அனுபவம் தான். விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள், உடற்கூறு அறிஞர்களின் பேட்டிகள், அரிய கட்டுரைகள் இவற்றை வாசித்து வெளிப்படுத்தும் ஒரு வேலை மட்டும் எனதாகிறது. பண்டைய முனிவர்கள் நமக்களித்த உபநிஷத்துக்களின் சாரம் அரிய பொக்கிஷம்.
அவர்களுக்கும் நம் நன்றி. மனம், உயிர், உடல் பற்றிப் பேசும் பொழுது உபநிஷத்துக்களை ஒதுக்கி விட முடியாது. அந்த முனிவர்களின் தவ வலிமையில் பெற்ற அறிவின் தொடர்ச்சியே இன்றைய அறிவியல் கண்டுப்பிடிப்புகள் என்பதை என் வாசிப்பின் அனுபவத்தில் உணர்கிறேன்.
அதனால் கேள்விகள் உங்களிடம் பிறக்கட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


ஜீவி said...

@ வே. நடனசபாபதி

//வெளி மனதை எப்படி கறை படியாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை அறிய காத்திருக்கிறேன்.//

உங்களுக்கே தெரிந்தது தான்.

இருந்தாலும் அடுத்துச் சொல்கிறேன், ஐயா.

ஜீவி said...

@ Ranesh, DGI

I am much happy in seeing your response. Thanks Sir.

ஜீவி said...

@ GMB

இந்தத் தொடரை வாசித்து வருவதற்கு நன்றி.

ஒரு ஆய்வின் மூலமாக வெளிப்படும் விஷயங்களை விளக்க ஒரே ஒரு வரியில் கேள்வி அமையக் கூடாது.

உங்கள் குழப்பம் பற்றி நாலைந்து வரிகளாவது எழுதுங்கள். அதன் மூலம் எந்த இடத்தில் உங்கள் ஐயம் என்று எனக்குப் புரியும். அதற்குப் பிறகு விளக்கிச் சொல்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களிடமிருந்து விரிவான கேள்வியை எதிர்பார்க்கிறேன். நன்றி, ஐயா.

Related Posts with Thumbnails