மின் நூல்

Monday, November 18, 2019

மனம் உயிர் உடல்

19.    குடும்ப தியானம்

சென்ற பகுதியில்  குப்பண்ணாவின் குடும்ப சூழ்நிலையையும், ராஜாராமனின்  குடும்ப நிலையையும் குறிப்பிட்டுச் சொல்லியமைக்குக் காரணம் ஒன்றுக்கொன்று எதிரான இருவேறு குடும்பச் சூழல்களை எடுத்துக்காட்டத் தான்.   ஒன்றில் புருஷன் செயலில் மனைவி அதிருப்தி கொள்கிறார் என்றால் இன்னொன்றில் கணவர் விஷயத்தில் அவரது மனைவி தலையிடுவதே இல்லை என்றிருக்கிறது.

இந்த இரண்டு நிலைகள் மட்டுமல்ல.   இந்த மாதிரி வகைக்கொன்றாக நிறைய நிலைகள்.  சில அதீத தீவிரம் கொண்டவை.  சில மட்டுப்படுத்த  முடிந்தவை.  பல சரிப்படுத்தவே முடியாத நிலைகள்.

 குடும்பம் என்றாலே எந்த ஒருவரின் செயல்பாடும் இன்னொருவரின் மனம் சம்பந்தப்பட்ட சந்துஷ்டிக்கோ, சீர்குலைவிற்கோ காரணமாக இருக்கிறது.  அதனால் மனதை ஒருநிலைப்படுத்தி  ஒரு  புரிந்துணர்வோடு  நம் ஆளுகைக்குக் கொண்டு வர தனி நபர் முயற்சி எடுப்பதைத் தாண்டி அவர்
குடும்பமே  கவுன்ஸிலிங் என்று சொல்வார்களே,  அந்த மாதிரி இந்த தியானத்தில் புரிதலோடு ஈடுபட்டால் தான்  அது அந்த குடும்ப உறுப்பினர்      அனைவரின் நலனுக்கும் பயனுடையதாக இருக்கும்.

'தியானம் என்று ஒருவர் உட்காருவது கடினம். உட்கார்ந்த உடனேயே, சமையலறையில் செய்யும் பொருட்களின் வாசனை, குழந்தை ஏதோ அம்மாவிடம் சண்டை போடுவது, பாத்திரங்கள் கீழே விழும் சப்தம்... இது மாதிரி ஏகப்பட்டது நடக்கும். அப்போ, இன்னைக்கு என்ன பண்ணிக்கிட்டிருப்பா, பருப்புசிலிக்கு இந்த வாசனை வராதே.. நேற்று மோர்க்குழம்புன்னுனா சொன்னா..இன்னைக்கு வெந்தயக் குழம்பு வாசனை வருதே... குளித்துவிட்டு ஹீட்டரை ஆஃப் பண்ணினாளா... என்றெல்லாம் எண்ணங்கள் அலைபாயும்.'

-- என்று இந்தத் தொடர் பதிவுக்கான பின்னூட்டமொன்றில் நெல்லைத் தமிழன் சொல்லியிருந்தார்.  எந்த தியானத்திற்கும் இந்த மாதிரி அலைபாய்கிற மனம்
தியானத்தில் ஆழாது தான்.  அந்தச் சுற்றுப்புற சூழ்நிலை நம்மை பாதிக்காத அளவுக்கு நாம் நம்மை பக்குவப்படுத்திக் கொள்வது தான் எந்த தியானத்தின் வெற்றியையும் தீர்மானிக்கும்.   சொல்லப் போனால் சுற்றுச்சூழலை மறக்க முயன்று வெற்றி காண்பது  தான் எந்த தியானத்தினதும் முதற் கட்ட பரிசோதனை.  அதில் வெற்றி காண்பதைப் பொறுத்து இருக்கிறது நீங்கள் அந்தக் கட்டத்திற்கு அடுத்து தியானத்தைத் தொடர்வதற்கான நகர்தல்.

நெல்லை சொன்ன மாதிரியான சாதாரண விஷயங்களே இந்த அளவுக்கு தியானத்திற்கு குறுக்கே வரும் என்றால்,   நிம்மதியற்ற அல்லது  யாரும் யாரின் மேலும் அக்கறை கொள்ளாத குடும்ப சூழ்நிலை தனி மனிதரை எவ்வளவு பாடுபடுத்தும்,  நினைத்துப் பாருங்கள்..

குப்பண்ணாவின் பரோபகாரமும் அவரின் அந்த உயர்ந்த நிலையும் அவர் மனைவியால் எள்ளி நகையாடப்படுகிறது..  இளிச்சவாயன் என்று பட்டம் சூட்டப்படுகிறார்.  இந்த மாதிரியான  குடும்பச் சூழ்நிலைகள்    அமைதியான  தியான முறைக்கு நிச்சயம் ஒத்து வராது.    ராஜராமனின் நாத்திகப் போக்கும் அவர் மனைவியின் ஆத்திகமும் ஒரே குடும்பத்தில் இரு வேறு துருவ சிந்தனைப் போக்கிற்கான முரண்பாடுகள்.

இப்படியான போக்குகளைக் கூட்டிக் கழித்து ஒருநிலைப்படுத்த குடும்ப உறுப்பினர் அத்தனை பேரும் இந்த தியானத்தில் தங்களை ஆட்படுத்திக் கொள்வதே சரியாக தீர்வாக அமையும்.

இதே நிலை தான் ஒட்டு மொத்த  சமூக சிந்தனைப் போக்கின் ஒன்றிணைப்பும்.   சோவியத் யூனியன்  சோஷலிச சிந்தனைகளுடனான சமூக அமைப்பை தன் தேசத்தில் கட்டமைக்க முயற்சிகள் மேற்கொண்ட பொழுது  அந்த அணியில் மற்ற நாடுகளைக் கொண்டு வரவும் மிகுந்த பிரயத்தனங்களை மேற்கொண்டன.  அதில் வெகுவாக பயனும் பலனும் பெற்ற நாடுகளில் நம் பாரதமும் ஒன்று.   இது எதற்காக என்றால் உலக அரங்கில் எந்த தனித்த போக்கும் வளமும், வலிமையும் பெறாது  என்ற நிதர்சன நோக்கிலேயே  தங்கள் அணியில் மற்ற   நாடுகளையும் திரளச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டன.

அடுத்து மொழி.  இறைவனை மனக்கண்ணில் கொண்டு  வந்து பூஜிக்க வேண்டியிருக்கும்.   இறை சக்தியோடு மனசார ஒன்றரக் கலக்க வேண்டியிருக்கும்.  இசையோடு  பாடல் பாடி வணங்க வேண்டியிருக்கும்.    மனசார என்று வந்தாலே அவரவர்க்கு   அவரவர் தாய்  மொழி தான் துணை  நிற்கும் என்பது எழுதப்படாத  விதி. 

தானே  தன் போக்கில் மனம் நினைக்கும்  வாறெல்லாம் தன் மொழியில்  பேசிக் களிப்பது இறைவனுக்கும் தியானிப்பவருக்குமான நெருக்கத்தை அதிகரிக்கும்.  இடைவெளியைக் குறைக்கும்.  எந்தக் கட்டுப்பாடும் இன்றி  இஷ்டம் போல எது வேணாலும் பேசிக்  களிக்கலாம்.  பாடலாம்.  ஆடலாம்.  ஆனந்தக் கூத்தாடலாம்.

இறை பக்தி இல்லாதோரும் உடல் ஆரோக்கியம் போன்ற ஏதாவது குறிக்கோளை முன் வைத்து   இந்த தியானத்தின் ஆரம்பப் படிக்கட்டில் மனசார  கால் வைத்தால் போதும்.  ஆரம்ப  முயற்சி  அடுத்த நிலைக்கு காந்தம் போல இழுத்துக் கொண்டு போகும்.   மனம், தீப  ஜோதியை ஏந்திய  மாதிரி எந்த  தயக்கத்தையும் தொய்வையும்  துடைத்தெறிந்து  நடக்கும் நிகழ்வுகளில் வெளிச்சத்தை ஏற்றும். 

(வளரும்)


9 comments:

ஸ்ரீராம். said...

நெல்லைத்தமிழன் சொன்ன அலை பாயல்கள் இல்லாதிருக்கதான் அந்தக் காலத்தில் வனங்களை நாடினார்கள் போல, தவம் செய்ய...    ஆனாலும் அங்கும் வன மிருகங்களின் பயமுறுத்தல்கள், அன்றாட உணவுத் தேவைகள் இருந்திருக்கும் என்றும் சிந்தனை ஓடுகிறது.

ஸ்ரீராம். said...

பாலகுமாரன் ஒருகட்டத்தில் தியானங்கள் பற்றி எழுதியிருந்தார் என்று ஞாபகம்.   குண்டலினியை எழுப்புவது பற்றி எல்லாம் சொல்லியிருப்பார்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

புராணங்களின் அறிவு வழித் தெரிதலாய், சில வரங்கள் வேண்டி ரிஷிகளில் பலர் தியானம் செய்ததாகத் தெரிகிறது. லோக நன்மைக்காகவும் தவமியற்றியிருக்கிறார்கள். காயத்ரி மந்திரம், மிருத்யுஞ்சய மந்திரம் போன்ற உலக நலனுக்காக அவர்கள் அருளிய மந்திரங்கள் பலவற்றை வரிசையாகச் சொல்லலாம்.

அவர்கள் செய்த தியானங்கள் மிகக் கடுமையானவைகளாக தெரிய வருகிறது. தியான நிலையில் அமர்ந்திருக்கும் உடல் மீது கரையான் புற்று மேவிப் படர்ந்தாலும் அது பற்றி உணர்வில்லாத அளவுக்கு ஆழ்நிலைத் தியானம் அவர்களுக்கு. அவையெல்லாம் பிரமிப்படையும் செய்திகளாய் தான் இன்றைய காலத்திற்கு.

ரிஷி என்று எழுதினாலே இந்துத்வா ஆளாக இருக்குமோ என்ற மேம்போக்கான பார்வை கொண்ட தமிழகக் களம் இப்போது.

தியானங்கள் என்பவை சகட்டு மேனிக்கு ஒரே மாதிரியானவை அல்ல. ஞான மார்க்கம், யோக மார்க்கம், பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம் என்று அவற்றில் பிரிவுகள் உண்டு.

அவையெல்லாம் பெரிய விஷயங்கள். இங்கு நான் குறிப்பிட விரும்புவது மிக மிக எளிமையான மனத்தை மேம்படுத்தும் சில பயிற்சிகளைப் பற்றியே. நாம் எல்லோருமே நம் செளகரியப்படி செய்யலாம் என்ற அளவுக்கு எளிமையானவை.

அதே நேரத்து கோயிலுக்குப் போனோமா, சுவாமிக்கு ஒரு அர்ச்சனை செய்து வந்தோமா அல்லது தரிசித்து வந்தோமா அத்துடன் வேலை முடிந்தது, அடுத்த காரியத்தைப் பார்க்கலாம் என்போருக்கு இதெல்லாம் வேண்டாத, தேவையற்ற சமாச்சாரங்களாக இருக்கலாம்.

தொடர்ந்து வாசித்து வருவதோடு நினைப்பதைப் பகிர்ந்து கொள்வதற்கும் நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

அது எப்படியோ தெரியவில்லை குண்டலினி யோகம், யோகங்களில் ஒரு நட்சத்திர அந்தஸ்த்து பெற்றது மாதிரி பரவலாகப் பேசப்படுகிறது.

"எங்கேப்பா இந்தப் பக்கம்?"

"யோகா வகுப்பு பயிற்சிக்காக வந்தேன். அடுத்த தெருவில் தான் யோகா மாஸ்டர் லிங்கேஸ்வரன் இருக்கார். தெரியாது?"

-- இந்த அளவில் இன்றைய நாட்களில் யோகா என்பது விரல் நுனி விஷயமாய் வந்து விட்டது. ஒருவர் தப்பாமல் குண்டலினி பயிற்சி இங்கு உண்டு என்று சொல்வதும் வழக்கமாக இருக்கிறது.

பாலகுமாரன்?... அவர் உணர்வு பூர்வமான எழுத்தாற்றலில் என்னைக் கவர்ந்தவர். தியானங்கள் பற்றி அவர் எழுதியவற்றை வாசித்ததில்லை, ஸ்ரீராம்.

Bhanumathy Venkateswaran said...

@ஸ்ரீராம்: எப்படி தியானம் செய்ய கற்றுக் கொடுக்க முடியாதோ, அப்படி குண்டலினியையும் எழுப்ப முடியாது. முறையான, ஜபம், தியானம், போன்றவை செய்யப்படும் பொழுது ஒரு கட்டத்தில் அதுவே எழும்பும். 

வே.நடனசபாபதி said...

தியானம் செய்யவேண்டும் என நினைப்பதே முதல் படி என நினைக்கிறேன். நம்மில் பலருக்கு மனதை ஒருமுகப்படுத்தும் முறை பிடிபட பல நாட்கள் ஆகலாம். அலைபாயும் மனதை அடக்கி கட்டுக்குள் கொண்டுவருவதுதான் தியானம் என நினைக்கிறேன். தயை செய்து விளக்கவும்.

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

தாங்கள் தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள் என்று தெரிந்து மகிழ்ச்சி.



ஜீவி said...

@ வே. நடன சபாபதி

உள்ளுக்குள் அலைபாயும் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி தீவிரமாக யோசிக்கும் பொழுது மற்ற உள்ளுக்குள் அலைபாயும் மனம் ஒரு கட்டுக்குள் இயல்பாகவே வந்து விடும்.

ஆனால் உள் நோக்கி சிந்திக்கும் நேரத்தில் வெளி விஷயங்களில் கவனம் சிதறுவது தான் வேண்டாத வேலை. இது ஏன் ஏற்படுகிறது என்றால் இந்த தியானப் பயிற்சியை விட வெளி விஷயங்களில் நம் ஆர்வமும் பிடிப்பும் அல்லது குழப்பமும் கூட இருப்பது தான். வெளி விஷயங்களில் நம் திருப்திக்கேற்ப கவனத்தைச் செலுத்தி விட்டு பின் உள்னோக்கிய இந்த தியானத்திற்கு வரலாம்.

சிலர் இரவில் படுக்கப் போகும் முன் வீட்டின் வெளிக் கதவு பூட்டப்பட்டு மேல் தாழ்ப்பாள் எல்லாம் போட்டு மூடப்பட்டிருக்கிறதா, கேஸ் சிலிண்டர் திறப்பான் மூடப்பட்டிருக்கிறதா, எல்லா அறைகளிலும் விளக்குகள் அணைக்கப் பட்டிருக்கிறதா என்றெல்லாம் பரிசோதித்து விட்டு படுக்கைக்குப் போவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இப்படியானவர்கள் தூக்கத்தில் நிம்மதி இருக்கும். அந்த மாதிரி வெளி விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி விட்டு அப்புறம் இந்த உள்நோக்கிய தியானத்தில் கவனம் செலுத்தினால் ஓரளவுக்கு வெளி விஷயங்களில் கவனச் சிதறல் ஏற்படாது.

சிலர் தூங்கப் போகும் போதே அதிகால 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்ற நினைப்போடையே தூங்கப் போவார்கள். இவர்கள் நடு இரவில் இரண்டு மூன்று தடவையாவது விழிப்பு வந்து 4 மணி ஆகிவிட்டதா என்று கடிகாரத்தைப் பார்ப்பார்கள். அது மாதிரி இந்த தியானத்தில் வெளி குறுக்கீடுகள் இல்லாது இருந்தால் உள்நோக்கி மனதைச் செலுத்துவது சுலபமாக இருக்கும்.

இந்த தியானத்திற்கு உட்கார்ந்து விட்டால் பழகி விடும். அவ்வளவு சுலபம் இது.


கோமதி அரசு said...

//மனம், தீப ஜோதியை ஏந்திய மாதிரி எந்த தயக்கத்தையும் தொய்வையும் துடைத்தெறிந்து நடக்கும் நிகழ்வுகளில் வெளிச்சத்தை ஏற்றும்.//

குடும்ப தியானம், மனஒருமைபாட்டுடன் தியானிக்கும் போது தயக்கம், தொய்வை போக்கும் தான். வெளிச்சம் எங்கும் பரவட்டும்.

Related Posts with Thumbnails