மின் நூல்

Saturday, November 30, 2019

மனம் உயிர் உடல்

22.  அலசலுக்காக  ஆறு  கேள்விகள்


கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததால் கொடி அசைந்ததா'

-- என்ற கண்ணதாசனின் பழம் பாடல் நினைவுக்கு வருகிறது.  அதே மாதிரியான ஒன்று தான் இதுவும்..

எண்ணம் வந்ததும் செயல் பிறந்ததா
செயல் பிறக்கத்தான் எண்ணம் வந்ததா

-- என்று இனம் பிரித்துப் பார்க்க முடியாதவைகள் எண்ணமும், செயலும்.  எண்ணம் இல்லாமல் செயல் இல்லை  என்பது அறிவியல்  உண்மை.

வெளிமனம்  எது பற்றியும் ஒரு எண்ணத்தை நம்மிடம் படர விட்டுத் தான் அந்தச் செயலைச் செய்யத் தூண்டுகிறது.  மழை வருவதற்கு முன் மேகம் கன்னங்கரேல் என்று கருப்பது போலவான போக்கு  இது.  வெளிமனம் தான் நாம் என்றாலும் எண்ணம் தான் வெளிமனத்திற்கும் நாம் செயல்படுவதற்கும் ஒரு  தொடர்புச் சாதனமாக இருக்கிறது.

படுக்கையில் படுத்திருப்பவர்  எழுந்திருக்க வேண்டும் என்றால் கூட எழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணத் தூண்டுதல் வேண்டும். அந்தத் தூண்டுதல் எப்படி ஏற்பட்டது என்பது உங்கள் யோசனைக்கு.  அந்தத் தூண்டுதல் இல்லை என்றால் 'எழுந்திருந்தால் போச்சு' என்ற அலட்சியம் வந்து விடும்.  தூண்டுதலுக்கு அடுத்து எழுந்தவுடன் செய்ய வேண்டிய காரியங்கள்..  பல் விளக்குவதற்காக டூத் பேஸ்ட் இருக்குமிடம் போய், ப்ரஷில் பேஸ்ட்டைப் பிதுக்கி...  இதெல்லாம் தினம் தினம் செய்து இயந்திர கதியில் நடக்கும் பழக்கப்பட்ட மூளையில் பதிந்த  அனிச்சை செயல்கள்...  ப்ரஷ் பற்களில் இயங்கிக் கொண்டிருக்க  அன்றைக்குச் செய்ய வேண்டிய காரியங்களில் கூட நினைப்பு ஊர் சுற்றிக் கொண்டிருக்கலாம்.  நினைவு அப்படி எங்கேயோ பதிந்து  இருக்கையில் பல் தேய்த்து, வாய் கொப்பளித்து,  துண்டால் முகம் துடைத்து இதெல்லாம் எந்த உந்துதலும் இல்லாமல் நடந்து விடுவது தான் ஆச்சரியம்...  எப்படி நம் மூளை சில விஷயங்களை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது,  பாருங்கள்..    சாதம், குழம்பு, ரசம், மோர் தான்...  என்றைக்கும் மோர், ரசம், குழம்பு இல்லை.. ஏன்?.. இந்த வரிசைக்கிரமம்  பழக்கத்தால் மனசில் பதிந்து போன ஒன்று..  ஒரு நாளைக்கு இந்த வரிசைக் கிரமத்தை மாற்றி மோர், ரசம், குழம்பு என்று சாப்பிட்டுப் பார்த்தால் நமக்கே அது வேடிக்கையாக இருக்கும்.

சில விஷயங்கள்  நமக்குப் பிடித்திருப்பதால் திரும்பத் திரும்பச் செய்யப் போய் அதுவே பழக்கமாகிப் போகிறது.   இறை வழிபாடு போன்றவை நமக்கு நல்லது செய்யும் என்ற எண்ணத்தில் நம் மனசில் பதிந்து போகின்றன. பழக்கமான விஷயங்களைத் திரும்பத் திரும்ப செய்யும் பொழுது  அதில் மனம் ஆழ்ந்து ஈடுபடாமல் ஒரு இயந்திர கதி ஏற்படுவதை நீங்களே உணரலாம் --  பல் விளக்கல் உதாரணம் போல.

எதைச் செய்யும் பொழுதும் மனம் அதில் பதிந்தால் தான் செய்யும் விஷயத்தோடு செய்பவருக்கு  ஒட்டிய உறவு  ஏற்படும்.  அந்த ஒட்டிய உறவு தான்  மனத்தையும் செய்யும்   செயலையும் ஒன்றாகக் கட்டி வினை புரிவது.  நீங்கள்  எந்தக் காரியம் நடக்க   வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அந்தக் காரியத்தோடு வெளி மனதின் வழிகாட்டல், உள்  மனதின் ஆற்றல்-- இவை  பிணைத்தால் தான் ஒரு ஒழுங்கு முறை லயத்தோடு அந்தக் காரியம் நடப்பதற்கான சாத்திய கூறுகள் உங்கள் மனசிலேயே பதியும்.  இல்லையென்றால் எந்தச் செயல்பாடும் விழலுக்கு இறைத்த நீர் தான்.

அடுத்து,  செய்கிற காரியத்தை எதற்காகச் செய்கிறோம் என்ற கேள்விக்கு தீர்க்கமான பதில் உங்களுக்குள்ளேயே கிடைத்தால் தான்  செய்கிற காரியத்தில் ஆழ்ந்து உங்கள் கவனம் பதியும். நம்பிக்கை பிறக்கும். எதிர்பார்ப்பு எகிறும்.   உங்கள் எண்ணமும் ஒத்துழைத்து  அந்தக் காரியத்தை பிசிறின்றித் தெளிவாக செய்ய உதவும். இல்லையென்றால் மனம் ஒட்டாத  ஏனோ தானோ தான். 

உங்கள் உதவிக்காக கீழே சில கேள்விகள். அதற்கான உங்களுக்கான பதிலை நீங்களே நிச்சயப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.  வெளிப்பட பதிலை பொதுவெளியில் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை.  பதில் உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும்.  அந்த பதில்கள் உங்கள் சுய பரிசோதனைக்கு உதவும்.

1.  A. எதற்காக உணவு உட்கொள்கிறோம்?..  என்  (அவரவர்) உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு எந்தந்த சேர்க்கைகள் என் உணவில் இருக்க வேண்டும் என்று தீர்மானமாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். 

    B.  பசிக்கு கிடைத்ததை சாப்பிடும் ரகம் நான்.

2.  A.  ஏன் கோயிலுக்குப் போகிறேன்? அல்லது ஏன் போவதில்லை?
 B.  இறை நம்பிக்கை  எனக்கு உண்டு..  அல்லது இல்லை. 
C.  இறை நம்பிக்கை இருந்தும் அதிகமாக கோயிலுக்கு  போவதில்லை.

3. A. எனக்கென்று தனிக் கருத்து ஏதும்  எதிலும் இல்லை. ( கணவன் அல்லது மனைவி ) சொன்னால் சரி தான்.  நண்பர்கள்   சொன்னாலும் சரிதான்.   
B.  என்றாலும்   எங்கள் இரண்டு பேருக்கும் ஒத்து வந்தால் தான்   அந்த கருத்துக்கு மதிப்பு அளித்து அதன்படி செயல்படுவோம்.

4. A. ஆழ்ந்து யோசித்து செயல்படும் பழக்கம் உண்டு. 
B.  வெகுஜன செயல்பாடு மாதிரி பொதுவாக எல்லோரும் என்ன செய்கிறார்களோ அதைப் பார்த்து நானும் அந்த மாதிரியே செய்து விடுவதுண்டு.

5.A.  காலையில்  நேரம் ஒதுக்கி தவறாமல் நடைபயிற்சி உண்டு.  கூடிய மட்டும் இந்தப் பழக்கத்தை தவறாமல் கடைபிடிக்கிறேன். 
 B.  நடை பயிற்சியா?  அதை மறந்தே ரொம்ப நாளாச்சு..

6. A.  நான் விசேஷமானவன் என்ற எண்ணம் எனக்குண்டு.  அந்த விசேஷத்திற்கு ஏற்பவான நடைமுறைகள் என்னிடம் உண்டு. 
B.  அப்படியெல்லாம் எதுவுமில்லை.. ரொம்பவும் சாதாரணமாக ஆசாமி சார் நான்.  ஹிஹிஹி...  ஏன் அப்படி இருக்கிறேன் என்றும் எனக்குத் தெரியும்.

இதற்கெல்லாம் பதிலைத் தேர்ந்து  உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்.  பின்னூட்டங்களில் கூட சொல்ல  வேண்டாம்.  அடுத்த பகுதியில் இந்த ஆறு விஷயங்களையும் அலசும் பொழுது உங்களுக்கு அந்த அலசலில் வெளிப்படும்   தகவல்கள்   உதவுமா  இல்லை உதவாதா என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.  உங்கள் மனம் வழிநடத்துகிற வழியில் அதற்கேற்ற மாதிரி  செயல்படுங்கள்.

வாழ்த்துக்கள்..


(வளரும்)


11 comments:

ஸ்ரீராம். said...

மனதுக்குள் ஒரே நேரத்தில் பல Tab களைத் திறந்து வேலை செய்கிறோம்.    நம்மை அறியாமலேயே அந்தந்த tab களில் வேலைகளும் கச்சிதமாக நடைபெறுகிறது!

ஸ்ரீராம். said...

//சில விஷயங்கள்  நமக்குப் பிடித்திருப்பதால் திரும்பத் திரும்பச் செய்யப் போய் அதுவே பழக்கமாகிப் போகிறது.//

இறைவழிபாடு சரி, அதேபோல கிளம்பும் முன் ஒருமுறை ரெஸ்ட் ரூம் சென்று வருவது, கண்ணாடி பார்த்துக் கிளம்புவது, வெளியிலிருந்து உள்ளே வந்ததும் கைகால் சுத்தம் செய்வது, இயந்திர கதியில் உடைமாற்றம்....!!  திட்டமிடாமல் இதெல்லாம் இயந்திரகதியில் தானே நடக்கும் செயல்கள்!

ஸ்ரீராம். said...

பதில்களை மனதுள் பொதிந்து வைத்துக் கொள்கிறேன்.  தொடர்கிறேன்.

வே.நடனசபாபதி said...

//சில விஷயங்கள் நமக்குப் பிடித்திருப்பதால் திரும்பத் திரும்பச் செய்யப் போய் அதுவே பழக்கமாகிப் போகிறது. //

இதையே Practice becomes habit என்பார்கள். இந்த பழக்கங்களே பின்னர் அனிச்சை செயல்களாக மாறிவிடுகின்றன என்பது சரிதானே.

நீங்கள் தந்த கேள்விகளுக்கான பதில்களை மனதில் இருத்தி வைத்திருக்கிறேன். நீங்கள் அலசப்போவதில் வெளிப்படும் தகவல்கள் எனக்கு உதவுமா இல்லை உதவாதா என்பதை அறிந்துகொள்ள காத்திருக்கிறேன்.

ஜீவி said...


@ ஸ்ரீராம்

//மனதுக்குள் ஒரே நேரத்தில் பல Tab களைத் திறந்து வேலை செய்கிறோம். //

செய்கிறோமா?.. தேவைகளுக்கு ஏற்ப பல tab-கள் தானே திறந்து கொள்கின்றனவா என்று யோசித்து பாருங்கள்..

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

இயந்திரகதி இறை வழிபாடுகள் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (3)

//பதில்களை மனதுள் பொதிந்து வைத்துக் கொள்கிறேன். //

நன்றி. கேள்விகள் - உங்களுக்கான பதில்களுக்கான தாக்கத்தை பொதுவான கோணத்தில் மற்ற இடங்களில் கூட உபயோகித்துக் கொள்ளலாம் என்ற வாய்ப்பும் உண்டு.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

இயற்கையான அனிச்சை செயல்கள், நம் பழக்கத்தில் வரும் அனிச்சை செயல்கள் இவற்றில் நுண்ணிய வேறுபாடு உண்டு. இல்லையா, சார்?..

யாராவது கையை நம் முகம் நோக்கி அசக்கினால் கூட சட்டென்று மூடிக் கொள்ளும் விழி இமைகள், படுவேகமாக எதிரில் வரும் வாகனத்தின் உராய்தலில் தப்ப பின்னுக்கு நகரும் அதிரடி நடவடிக்கை, படபடவென்று மழை உடலைத் தொட்ட ஜோரில் கைக்குடையை விரிக்கும் வேகம் -- இவை போன்றவை இயற்கையாகவே நம்மில் படிந்த அனிச்சை செயல்கள்.

நாமாக தினம் தினம் ஒரு காரியத்தை இயந்திரத்தனமாய் செய்து செய்து அதுவே பழக்கமாகி மனத்தின் ஆளுகை இல்லாமலேயே செயல்படுதல் இன்னொரு மாதிரியான அனிச்சை செயல்கள்.

மனத்தின் இச்சையில்லாமல் நிகழ்பவை அனிச்சையாம். நாம் மனம் சம்பந்தப்படாமல் என்று கொள்வோம்.

உதவாவிட்டாலும் மனம் படியாமல் செய்யும் காரியங்களில் இருக்கும் வியர்த்தம் புரியும் சார்.

நெல்லைத்தமிழன் said...

ரொம்பவும் அர்த்தமுள்ள பதிவு இது.

//இதெல்லாம் எந்த உந்துதலும் இல்லாமல் நடந்து விடுவது தான் ஆச்சரியம்...// - இது மாதிரி அனிச்சையாக ஸ்லோகம் சொல்வது, கோவிலுக்குப் போவது என்பதெல்லாம் நடந்துவிடுவதால்தான் நாம் அந்தக் கர்மாக்களுக்குரிய பயனை அடைய முடிவதில்லை. மனம் ஒன்றிப்போகாமல் எது செய்தாலும் அதனால் பயன் பெற முடியாது.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//மனம் ஒன்றிப்போகாமல் எது செய்தாலும் அதனால் பயன் பெற முடியாது.//

இது தான் Center Point நெல்லை. அரச மரத்தை மூன்று தடவை சுற்றி வந்த கதை தான். தொடர்ந்து வாருங்கள்.

Bhanumathy Venkateswaran said...

சுவாரஸ்யமாக செல்கிறது, தொடர்கிறேன். 

Related Posts with Thumbnails