மின் நூல்

Saturday, December 7, 2019

மனம் உயிர் உடல்

23.   நினைமின் மனனே;   நினைமின் மனனே...


னசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது.  இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.  பெரும்பாலும் நல்லவர்களாக இருப்பார்கள்.  காரணம் மன உணர்வுகளிலிருந்து விலகியிருந்து அவர்களுக்கு எந்தக் காரியத்தையும் செய்யத் தெரியாது என்பதினால் தான்.  நல்லவர்களின் மனம் நல்ல செய்கைகளின் பொழுது இயல்பாகவே மலர்ந்து இருக்கும்.  எந்த தீய செயல்களின் நினைப்பும் அதை சுருங்கச் செய்து விடும்.  அனிச்சை மலர் போல அவ்வளவு மென்மையானது அவர்கள் மனம்.

whole heartedly  -- என்ற ஆங்கில வார்த்தையை அறிவீர்கள்.  இதயம் தான் மனம் என்று பரவலாக அறியப்பட்ட காலத்தில் உருவான சொல் இது.  முழு மனதுடன் என்று தமிழில் அர்த்தம் கொள்வது கூட அவ்வளவு சரியில்லை.. அதையும் தாண்டிய  பூரணத்துவம் கொண்டது அந்த வார்த்தை. 

மனம் சம்பந்தப்படாத, அல்லது மன உணர்வுகளை விலக்கி வைத்து  விட்டுச் செய்யும் எந்தக் காரியமும் அரைக்கிணறு தாண்டிய சமாச்சாரமாய்த் தான் முடியும்.  மனசின் ஒத்துழைப்பு இருந்தால் தான் எதையும் நிறைவாகவேச் செய்ய முடியும்.  செய்யும் செயலை மனம் அங்கீகரித்து விட்டால் அந்த செயலுக்கு புது சக்தி கிடைக்கும்.    மனசின் ஒத்துழைப்போடு செய்யும் எந்த செயலுக்கும் இரண்டு பெருமைகள் உண்டு.  1. செயலின் வெற்றி.  2. நாமடையும்  திருப்தி.   செய்த காரியத்தில் தோல்வியே ஆயினும் மனசின் ஒத்துழைப்பு இருக்கும் பொழுது சோர்ந்து போய் விடாமல் அடுத்த கட்ட நகர்விற்கு அதுவாகவே  இழுத்துச் செல்லும்.

சென்ற பகுதி  கேள்விகளை லேசாக நினைவு கொள்ளுங்கள்.   நேரடி பதில்கள் இல்லையென்றாலும்  பட்டும் படாமலும் உங்களுக்குப்  புரியும்.  நேரடி பதில்கள் இருக்க வேண்டாமே என்பதற்குத்  தான் இந்த ஏற்பாடு.

அன்றாடம் நம்மைச் சூழும் செயல்பாடுகளில் தம்மை இணைத்துக் கொள்ளும்  சக்தி கிடைப்பதற்காகத் தான் உணவைச் சாப்பிடுகிறோம்.  வேறு ஏதாவது நினைப்புடன் அல்லது  கவலையுடன் சாப்பிட்டால் உடம்பில் ஒட்டாது என்று பெரியோர் சொல்வர்.   சாப்பிடும் உணவு சக்தியாக உருக்கொள்ளாது என்பதற்காகத் தான் ஒட்டாது என்ற அந்த வார்த்தை வந்தது.  சொல்லப்போனால் அறிவியல் மிகவும் வளர்ச்சி கொண்டுள்ள இன்றைய நாட்களில் சாப்பிடும் பொருளில் என்ன சக்தி நிறைந்திருக்கிறது என்பதை மனதில் கொண்டு அந்த சக்தியை உடம்பில் கொள்வதாக நினைப்பில் கொண்டு சாப்பிடச் சொல்கிறார்கள். உதாரணமாக கேரட் (Carrot) என்று வைத்துக் கொள்ளுங்கள்.   கேரட்டை உண்பதற்கேற்ப  பக்குவப்படுத்தி உண்ணும் பொழுது  அந்த கேரட்டில் நிரம்பியுள்ள சக்தியை உட்கொள்வதாக மனதில் கற்பிதம் கொள்ள வேண்டும் என்று உணவியலில் துறைபோகியவர்கள் சொல்கிறார்கள்.   அப்பொழுது   தான் அந்த உணவில் அடங்கியிருக்கிற சக்தி துல்லியமாக  முழு அளவும் கிரகிக்கப் படுகிறதாம்.  சாப்பிடும் உணவில் இருக்கும்  உள் கூறுகள் பற்றி  அறிவு கொள்ளுதல் நம் உடல் வாகுக்கேற்ப கொள்வதைக் கொண்டு தள்ளுவதைத் தள்ளவும் துணையாக இருந்து உடல் நலம் பேணுகிறது.  நாமே மனமாகவும்,  மனமே நாமாகவும் பின்னிப் பிணையும் பொழுது  ஏற்படும் திருப்தி உடல் ஆரோக்கியத்திற்கு முழுமையான  பலனைத் தருகிறது.

இறை வழிபாட்டில் கூட நடப்பது இது தான்.   பிராகார சுற்றில் வலம் வரும் பொழுது  எதையாவது  உச்சாடனம் செய்தவாறு அசுர வேகத்தில் உங்களைக் கடக்கும் நபர்களை பார்த்த அனுபவம் உங்களுக்கும் இருக்கும்.   நின்று  நிதானித்து என்ற பேச்சுக்கே இடமில்லை.   ஏதோ தலைபோகிற காரியம் அடுத்து இருப்பது போல அவர்கள் செயல்பாட்டில் அவ்வளவு வேகம் இருக்கும்.  பிராகார சுற்று, கர்ப்பகிரத்தில் ஒரு கும்பிடு,  போகும் நேரத்தில் வீபூதி கிடைத்தால் சரி;  இல்லையென்றாலும் பரவாயில்லை.  வெளிவந்து நவகிரகங்கள் சந்நிதியில்  மூன்றே நிமிடத்தில் மூன்று சுற்று-- இதோ ரோடுக்கு வந்தாச்சு..  காத்திருக்கும் அடுத்த வேலைக்காக  கோயிலினுள் கொண்ட அதே வேகம்  தெரு சந்தடி நெரிசலிலும்..  சாவி கொடுத்த பொம்மை மாதிரியான தற்கால ரோபோக்கள் போலவானவர்கள் ..   இவர்கள் விஷயத்தில் உடல் இயக்கத்தின் பார்வையாளராக மனம்  பட்டுக்கொள்ளாமல் சகல விஷயங்களிலும் தனித்து விடப் பட்டிருக்கும்.

கோயில் என்பது  சந்நிதியில் இறைவனோடு நம் மனசை ஒன்றரக் கலக்கும்
இடம்.  இறைவன் முழுமை என்றால் அதன் துக்குனூண்டு கூறு  நாம்.  அந்தக் கூறு  தன் முழுமையை தரிசிக்கும் அனுபவம்
கொள்ளும் பொழுது தன் மனதை ஊடகமாகக் கொண்டு முழுமையோடு ஒன்றரக்  கலக்கத் தவிக்கிறது.   அந்த தவித்தலில் இறைவனால்   ஆட்கொள்ளுகிற மாதிரியான அனுபவத்தைப் பெறும் பொழுது  சொல்லொண்ணா சுகானுபவத்தைப் பெறுகிறது. தாய் மடி கிடைத்த குழந்தை போல.  அணுவினுக்கு  அணுவான இருப்பு,  தன் முழுமையுடன் கொள்ளும் ஈர்ப்பு இது.  சின்ன அகலில் அடங்கிய வெளிச்சம்,  பேரொளியில் ஐக்கியமாகிற அனுபவம் இது.  சொல்லி விளக்க முடியாத அனுபவம் ஒன்றினாலேயே அடையக் கூடிய பேறு இது.  கோயிலுக்குச் சென்றால்  அல்லது  செல்வோருக்கெல்லாம் இந்த ஐக்கிய அனுபவம் கிடைத்து விடும் என்றும் இல்லை.  அது கிடைப்பதற்காகத் தான்  கோயிலுக்குப் போவதே.

அந்தர்யாமி என்ற நிலையில் இறைவனே நம் மனசாட்சியாகி நல்லதை உணர்த்தி நமக்கு வழிகாட்டுகிறான் என்று  இறை அனுபவ நிலைகளைப் பற்றிச் சொல்வோர் சொல்வதுண்டு.  வினைப்பயனும், அமையும் சூழ்நிலைகளும் ஜீவனை பற்றி அலைக்கழிக்கும் பொழுது  மனசாட்சியாய் இருக்கும் இறைவனின் வழிகாட்டல் கிடைக்கும் என்கிறார்கள்.

'நினைமின் மனனே நினைமின் மனனே;  சிவபெருமானை செம்பொன் அம்பலவனை; நினைமின் மனனே  நினைமின் மனனே -- என்பார்
பட்டினத்தார்..  இறைவனின் ஈர்ப்பு மகிழ்ச்சி நம்மைப் பற்றி கொண்டு மனசில் படரும் பேறு கிடைத்து விட்டால்  கோயில் என்றில்லை, எங்கிருந்தாலும் 
இறைவனை நம் மனசுக்குள் கொண்டு வந்து விடலாம்.    'மட்டுப்படாத
மயக்கமெலாந் தீரஎன்னை வெட்டவெளி வீட்டில் அண்ணல் மேவுவனோ பைங்கிளியே' என்பார் தாயுமானவர் சுவாமிகள்.   பரந்த வெட்டவெளியே தெய்வமாக இருக்கும் பொழுது  மனசில் இறைவனை வைத்து வழிபடுவதற்கு ஏதுவாகத் தான்  சிவனென்றும் விஷ்ணுவென்றும் பல்வேறு நாமங்களில் இறைக்கு ஒரு உரு கொடுக்க முனைப்பு உருவாயிற்று. 

இன்னொன்று.  மனப்படமாகத் தான் உள்மனதில் பதிய வேண்டிய நிலைக்கு இறைவனுக்கு உருவம் கொடுத்தது ஏதுவாகப் போகிறது.

இறை அனுபவம் வாய்த்தவர்கள் பாக்கியசாலிகள்.   நல்லனவற்றிற்கு வழி நடத்த  இறைவன் என்ற ஒரு சக்தி இவர்களுக்கு துணையாக இருக்கிறது.
இறை மறுப்பாளர்களோ  தம்முள் நல்லன   விளைவதற்காக  வேறு வழிகள் பார்க்க   வேண்டியது தான்.   நமக்கு வேண்டியது  நமக்கு நல்லவை விளைய வேண்டும். அவ்வளவு  தான். 

அதற்கு என்ன வழி என்று அடுத்துப் பார்ப்போம்.

(வளரும்)


12 comments:

வெங்கட் நாகராஜ் said...

பல பகுதிகளை படிக்காமல் விட்டிருக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருவதில் உள்ள சிக்கல் - பழைய பதிவுகளையும் படிக்க வேண்டும். விரைவில் படிக்க வேண்டும்.

தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

ஸ்ரீராம். said...

மனதில் எதுவும் தோன்றவில்லை. பொதுவாகச் சொல்லப்போனால் மனமொப்பாமல் ஏதாவது வேலைகளை செய்ய முடியுமா?   அப்படி என்ன நாம் செய்திருக்கிறோம் என்று யோசித்துப் பார்க்கிறேன்.  ஒன்றும் நினைவுக்கு வரவில்லை.

Bhanumathy Venkateswaran said...

//மனசின் ஒத்துழைப்போடு செய்யும் எந்த செயலுக்கும் இரண்டு பெருமைகள் உண்டு.  1. செயலின் வெற்றி.  2. நாமடையும்  திருப்தி.   செய்த காரியத்தில் தோல்வியே ஆயினும் மனசின் ஒத்துழைப்பு இருக்கும் பொழுது சோர்ந்து போய் விடாமல் அடுத்த கட்ட நகர்விற்கு அதுவாகவே  இழுத்துச் செல்லும்.//   
ரொம்ப சரி. வெற்றி கிடைக்காவிட்டாலும், நமக்கு கிடைக்கும் திருப்தி நிஷ்காம்யமாக செயலாற்ற உதவும். சரியா?

வே.நடனசபாபதி said...

எனக்கு ஏற்பட்ட ஐயங்களுக்கு தங்களின் விளக்கத்தை அறிய விரும்புகிறேன்.

1.Whole heartedly என்பதை உளமாற என்று சொல்லலாமா?

2. ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வணங்காமல், பொதுவாக இயற்கையை வணங்குவோருக்கு இறை அனுபவம் கிடைக்குமா?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

முழுமையாக இறை அனுபவம் கிடைக்கவில்லை என்றாலும், அவ்வப்போது சில நேரங்களில் கோயிலுக்குச் செல்லும்போது என்னையும் மறந்து, என்னையறியா ஒருவிதமான மகிழ்ச்சியில் திளைக்கிறேன். அது இறைமீது உள்ள ஈடுபாடா அல்லது இறைவனைப் பற்றிய நம் நினைப்பால் வருவதா என்று தெரியவில்லை. இருப்பினும் அத்தகைய, மனம் மீதான ஏற்படுகின்ற தாக்கங்கள் நிம்மதியைத் தருகிறது.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

நேரம் கிடைக்கும் பொழுது வாசித்துப் பாருங்கள், வெங்கட். உள் வாங்கிக் கொள்ள நிதானமான வாசிப்பு அவசியம். அதனால் அவசரமில்லை. தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

சில நிர்பந்தந்தகளினால் மனமொப்பாமல் காரியங்களைச் செய்கிற நெருக்கடி பலருக்கு நேருவதுண்டு. அப்படியான அனுபவங்கள் நேராததில் மகிழ்ச்சியே.

இன்னொன்று. ஏற்றுக் கொள்வது, நிராகரிப்பது என்ற இரு வேறு நேர் - எதிர் நிலைகளில் செயல்படுகின்ற ஆற்றலில் மனதைப் பழக்கப்படுத்திக் கொள்வது என்ற ஒரு நிலையும் இருக்கிறது. இது தான் எதையும் தீர்மானிக்கிற சக்தியாய் நம்மில் உருவாகி நம்மையே உருவாக்கும்.

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

நான் சொல்ல வந்தது வேறே. வெற்றி கிடைக்காத பொழுது வெற்றி கிடைத்தது போலவான திருப்தி மனசுக்குக் கிடைத்து விடுவதில்லை. அந்தத் திருப்தியை அடைய வேண்டி மேலும் சம்பந்தப்பட்டவரை தளர்ந்து விடாமல் ஊக்குவிக்கிறது. இந்த ஊக்குவித்தல் இல்லையென்றால் 'கிடைத்ததே போதும்' என்ற அரைகுறை திருப்தியோடு மனம் ஓய்ந்து விடும். திருப்தியின் சுவடே இல்லை, ஊக்குவித்தலும் இல்லை என்றால் 'சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்' கதை தான்.

'நிஷ்காம்யம்' ரொம்ப பேருக்கு செளகரியமான ஒரு வார்த்தை. பரம ஆத்திகரான தாம் 'கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை' என்று ஏதோ ஒரு திரைப்படத்திற்கு பாட்டெழுதியதை நினைவு கூர்ந்து கவிஞர் வாலி எழுதியதைப் படித்த நினைவு வருகிறது.


ஜீவி said...

@ வே. நடனசபாபதி

//1.Whole heartedly என்பதை உளமாற என்று சொல்லலாமா? //

தாராளமாகச் சொல்லலாம். மனப்பூர்வமான, முழு மனத்துடன் -- போன்ற அர்த்தம் தான் அந்த வார்த்தைக்கு.

'heartedly' - என்று இதயத்தைக் குறிப்பிடும் வார்த்தை வந்ததால் சொன்னேன்.

//2. ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வணங்காமல், பொதுவாக இயற்கையை வணங்குவோருக்கு இறை அனுபவம் கிடைக்குமா? //

இயற்கை என்னும் சக்தியால் தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது என்பது அறிவியல் உண்மை. அந்த சக்தியை இறை சக்தியாக நாம் கொள்கிறோம். வணங்குதல், வழிபாடு -- இதெல்லாம் நன்றி நவிலல் போல்; இயற்கை சக்தி பொய்க்கும் பொழுது வழிபாடு செய்து துதித்தால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விளைந்தது இந்த பழக்கம்.

இயற்கையின் அளப்பரிய சக்தி தான் தெய்வம் என்று தெளிவுகொண்டோருக்கு நிச்சயம் இயற்கையை வணங்கும் போது இறை அனுபவம் கிடைக்கும்.

இயற்கை வழிபாட்டிலிருந்து உருவ வழிபாட்டிற்கு வந்தது தனது மூலமான இயற்கை வழிபாட்டிற்கு போகும் என்பது நியதியாக இருக்கலாம்.

சூரிய வழிபாடு, அக்னி வழிபாடு, வருண வழிபாடு, நவ கிரக வழிபாடு, மர வழிபாடு, மலை வழிபாடு, நீர் வழிபாடு போன்றவை இன்றும் இருக்கின்றன.

ஞாயிறு போற்றுதும், திங்களைப் போற்றுதும், மாமழை போற்றுதும் -- என்றெல்லாம் சிலப்பதிகாரம் போற்றித் துதிக்கிறது.

உங்கள் கேள்வியில் இருக்கும் 'இறை அனுபவம் கிடைக்குமா?' என்ற வரி முக்கியமானது. மனித மனம் விசித்திரமானது. எந்த விஷயமும் அனுபவம் ஆகி அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டதென்றால் போதும்;
மறக்கவொண்ணா செயலாய், மீண்டும் மீண்டும் அந்த அனுபவத்தில் ஆழ்ந்து சுகிக்கச் சொல்லும்.

தங்களது ஆழ்ந்த வாசிப்பு அனுபவத்திற்கு நன்றி, நண்பரே!

ஜீவி said...

@ Dr. B. Jambulingam, A.R. (Retd)

இறை மீது உள்ள ஈடுபாடு இறைவன் பற்றிய நினைப்பு எண்ண மேகங்களாய் சூழ்ந்து கோயிலுக்குச் செல்கையில் மகிழ்ச்சி மழையாய் பொழிகிறது -- என்று ஒரு உருவகம் கொடுக்கலாமா, ஐயா?..

நீங்கள் சொல்கிற நிம்மதி -- அதனால் ஆன துய்த்தல்.

வேறென்ன வேண்டும், சொல் மனமே! நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

Bhanumathy Venkateswaran said...

//வெற்றி கிடைக்காத பொழுது வெற்றி கிடைத்தது போலவான திருப்தி மனசுக்குக் கிடைத்து விடுவதில்லை.//  நானும் இப்படி புரிந்து கொள்ளவில்லை. ஒரு செயலை நம்மால் முடிந்த வரை சிறப்பாக செய்து விட்டோம் என்னும் த்ருப்தியைத்தான் குறிப்பிட்டேன். 

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran (2)

கரெக்ட். வெற்றி என்பது இப்படியோ அப்படியோ என்று அமையும் சமயங்களில் நம்மைப் பொறுத்த வரை ஒரு செயலை சிறப்பாகச் செய்து விட்டோம் என்னும் திருப்தியும் வெற்றி அடைந்ததற்கான திருப்தி தான்.
திருத்தத்தற்கு நன்றி, சகோ.

Related Posts with Thumbnails