மின் நூல்

Saturday, January 25, 2020

மனம் உயிர் உடல்

29.   ஏகன்  அநேகன்  இறைவனடி வாழ்க!   

த்துவகுணம், இரஜோகுணம், தமோ குணம் என்று மூன்று குணங்களால் மூலப் பிரகிருதி முடையப்பட்டிருக்கிறது என்று பார்த்தோம்.

இந்த மூன்று குணங்கள் பற்றி ஒரு பருந்துப் பார்வை:                   

1.  சத்வம்  ஞான ஒளியையும் நன் மார்க்க விருப்பத்தையும் அளிக்கிறது.

2.  இரஜோவோ  --  பற்றுதல், அவா  குணங்களை அளித்து செயல்பாடுகளுக்குத் தூண்டுகிறது.

3.  தமோவோ  -- மயக்கம், சோம்பல், உறக்கம் இவற்றை அளிக்கிறது.

மனிதனுக்குள் இந்த மூன்று குணங்களும் அவ்வப்போது தலையெடுக்கும்.
இந்த  மூன்று குணங்களும் ஒன்றுக்கு ஒன்று முடிச்சுப் போட்டால் போல சம்பந்தப்பட்டது  கூட.  இந்த  மூன்று குணங்களும் இல்லாமல் எந்த செயல்பாடும் இல்லை.  எந்த  நேரத்தில் எந்தக் குணம் விஞ்சி இருக்கிறதோ அந்தக் குணம் பிரதானமாக அந்த நேரத்தில்  அவனுள் உயிர்ப்பு கொள்கிறது.

பிரபஞ்சத்தில் உயிர்ப்புள்ள அத்தனை பொருள்களிலும்  அவற்றிற்கு உரிய குணங்கள் அவற்றில் பொருந்தியிருக்கின்றன என்றால் ஆச்சரியப்படுவீர்கள்.

சைவ  சித்தாந்தமோ பதி - பசு - பாசம் பற்றிப் பேசுகிறது.

பதி -  இறைவன். 
பசு  --  உயிர்.                                                                         
பாசம் -  தளை

இயல்பாகவே ஆணவத்தால் கட்டப்பட்டுள்ள உயிரை  'பசு' என்பது சைவ சிந்தாந்த மெய்யிலல் வழக்கு.

பார்க்கப் போனால் பசு என்பது வடமொழிச் சொல்.  பச்+உ  பசு ஆயிற்று.  பச் என்றால் கட்டுவது.   உ -  செயப்படு பொருள்.   பாசத்தால் கட்டப்பட்டது என்று பொருள் கொள்ளலாம்.

உடலை அறிவற்ற ஜடம் என்னும் சைவ சிந்தாந்தம் உயிரை அறிவுப் பொருள் என்கிறது.   ஒரு வரையறைக்கு உட்பட்ட அறிவு இது.  அறிந்த செய்திகளில் மட்டிலுமே அறிவு கொண்டது இது.  தெரியாது இருந்து ஒவ்வொன்றையும் புதுத் தகவலாய் அறிய அறிய அறிவு கொள்ளும் அறிவுப் பொருள் இது என்று சிவஞான போதம் சொல்லும்.

எனவே தானே அறிந்தும்,  அறிவுற்றும் நிற்பதாகிய  பதி அல்ல பசு.  அறிவித்தாலும் அறிய மாட்டாத பாசமும் அன்று.  அறிவித்தால் அறியும் அறிவுடைய என்று நடுவான ஒரு இடைப்பட்ட பொருள் உயிர் என்பது என்பார் மெய்கண்டார்.

அறிவே வடிவாகிய முழுமுதற் கடவுள் 'சித்து'  எனக்கொண்டால் அறிவே இல்லாத  ஜடப்பொருட்களாகிய பாசங்கள், 'அசித்து' எனப்படும். 'சித்து'க்கும்
'அசித்து'க்கும் இடைப்பட்ட பசுவை, 'சித் சித்து' எனக் கொள்ளலாம்.

பதி என்னும் கடவுள் பொருள் ஒன்றே ஒன்றாகும்.  ஆயின்  உயிர்கள் அளவில் அடங்கா எண்ணிக்கை கொண்டவை.  அதனால்  இறையை  ஏகன் என்றும், உயிரை  அநேகன்  என்றும் சைவ சித்தாந்தம்  அழைக்கும்.

ஏகனையும்,  அநேகனையும்  ஒன்றாக்கி ---

'ஏகன்  அநேகன் இறைவன் அடி வாழ்க'   என்று சிவபுராணம் சொல்லும்.

 சிவபெருமான் கடவுள் தன்மையால் ஒன்றாகவும்,  அத்தனை உயிர்களிலும் உறைந்திருப்பதால்  அநேகனாயும் இருக்கிறான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஒரு பொருள் தன்னால் சாரப்பெற்ற தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு நிற்பதை சார்ந்ததன் வண்ணம் என்பார்கள்.

நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும்  மாந்தர்க்கு
இனத்தியல்ப  தாகும்  அறிவு

என்று பேராசானின் குறட்பா ஒன்றுண்டு.

சேர்ந்த நிலத்தின்  இயல்பாய் அந்த நீர் வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையுடையதாய்  ஆவது போல மக்களின் அறிவும் தாங்கள் சேர்ந்திருக்கும் இனத்தின் தன்மையடையதாகும் என்பார் வள்ளுவனார்.

உமாபதி  சிவாச்சாரியார் அருளிய திருவருட்பயன் நூலில்

இருளில் இருளாகி எல்லிடத்தில் எல்லாம்
பொருள்கள் இலதோ புவி  --  என்றொரு குறட்பா   உண்டு.

இருள் உள்ள பொழுது  இருளாகவும்,  ஒளி வந்த பொழுது ஒளியேயாகியும்
சார்ந்ததின் வண்ணம் ஆகிற பொருட்களை இவ்வுலகம் உடையதாய் உளதே என்பார் உமாபதி  சிவாச்சாரியார்.

உயிர் சிவத்தைச் சார்கிற பொழுது சிவத்தின் தன்மையைப் பெற்று  சிவமாகவே ஆகும் என்பதைச் சொல்ல வந்த பாடல் இது.

நம் தியானத்தின் மூலமாகப் பெற வேண்டிய பெருஞ்செல்வம் இது தான்.

அதைப் பெறும் பேற்றைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.


(வளரும்)



6 comments:

ஸ்ரீராம். said...

பொருத்தமான திருக்குறள், திருவருட்பயன் ஆகியவற்றைத் தொகுத்து அளித்திருப்பது சிறப்பு.  தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

//உயிர் சிவத்தைச் சார்கிற பொழுது சிவத்தின் தன்மையைப் பெற்று சிவமாகவே ஆகும் என்பதைச் சொல்ல வந்த பாடல் இது.

நம் தியானத்தின் மூலமாகப் பெற வேண்டிய பெருஞ்செல்வம் இது தான்.//

அருமையாக சொன்னீர்கள்.
குறளும் பாடலும் பகிர்வு அருமை.

தியானத்தின் மூலம் இந்த பெருஞ்செல்வம் கிடைத்துவிட்டால் வேறு என்ன வேண்டும் இந்த உலகில்!

வே.நடனசபாபதி said...

திருமூலர் திருமந்திரத்தில் பதி,பசு,பாசம் பற்றி சொல்லும்போது

“விண்ணினைச் சென்று அணுள வியன் மேகங்கள்
கண்ணினைச் சென்று அணுகாப் பல காட்சிகள்
எண்ணினைச் சென்று அணுகாமல் எனப்படும்
அண்ணலைச் சென்று அணுகாப் பசுபாசமே”

என்கிறார். இதில் அவர் சொல்லும் ‘எண்ணம் நினைவுக்கு அப்பாலுள்ள இறைவன் அடையமாட்டாது’ என்பதற்கான விளக்கத்தை தர வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

தாங்கள் தொடர்வதற்கு நன்றி. இந்தத் தொடரை நான் தொடர்வதில் தான் பெருத்த தாமதம் ஏற்படுகிறது. வருந்துகிறேன். வருகைக்கு நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு

ஆமாம், வேறு என்ன வேண்டும் என்று நீங்கள் சொல்லியிருப்பது சரி தான். வேண்டாதவைகளை வேண்டுகிற மன உணர்வுகளைத் தான் பின்னுக்குத் தள்ளி வேண்டுபவைகளை வேண்டுகிற மனத்தைப் பெற முடிவதில்லை. அதற்கு அதீத முயற்சி தேவைப்படுகிறது. உலக இயக்கத்தின் அடிப்படை ஆதாரத்தை மீறி நம்மால் ஓரளவு தான் செயல்பட முடியும் என்று சில வேதாந்த கருத்துக்களும் நம்மை எச்சரிக்கின்றன.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

தாமதமான தங்கள் பின்னூட்டத்திற்கு மறுமொழி அளிப்பதற்கு வருந்துகிறேன்.

மேகங்கள் வானப்பிரதேசத்திலேயே ஒட்டிக் கொண்டு இருக்க முடியாது.
காணும் காட்சிகள் கண்ணிலேயே நிலைத்திருக்க முடியாது. அது போலவே இவ்வுலகப் பிடிப்பில் பின்னிப் பிணையுண்டு கிடக்கும் பாச (தளை) கொண்டோருக்கு இறைவன் எட்டாக்கனியாய் இருப்பான் என்ற அர்த்ததில் திருமூலர் பெருமான் கருத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

எங்கோ இருக்கும் இறைவனை அடைதல் என்ற கருத்தைத் தவிர்த்து
நம்மில் உறைந்திருக்கும் இறை சக்தியை நாம் உணர்தல் என்ற நிலை (இரண்டல்ல; ஒன்றே என்ற அத்வைத கோட்பாடு) இறை சக்தியுடனான நம் உறவை மிக தீட்சண்யமாகப் புலப்படுத்துகிறது என்பது என் எண்ணம்.

Related Posts with Thumbnails