மின் நூல்

Thursday, June 25, 2020

இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும்....

றக்கமுடியாtத   திருநெல்வேலி நினைவுககள் இந்த வயதிலும் இ்ப்பொழுதெல்லாம் அடிக்கடி  நினைவுக்கு  வந்து  சந்தோஷ அலைகளை என்னுள் புரளச் செய்கின்றன.

திண்டுக்கல் செயிண்ட்  மேரீஸ் பள்ளியில்  ஆறாவது ஏழாவது  வகுப்புகளை முடித்துக்  கொண்டு எட்டாவதுக்கு    திருநெல்வேலிக்கு  வந்து விட்டேன்.   திருநெல்வேலியில் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரிப் பள்ளியில் படிப்பு.   மஹாகவியும்  புதுமைப்பித்தனும் பயின்ற பெருமை வாய்ந்த பள்ளி இது.

அது 1957-ம் ஆண்டு.  திருநெல்வேலி வண்ணாரப் பேட்டையில் வாடகை வீடு.   வண்ணாரப்பேட்டை   தாமிரபரணி படித்துறையில்  இறங்கி ஆற்றைக் கடந்து  அக்கறையிலிருந்த மாந்தோப்பில் நுழைந்து ஏறி இறங்கி ரோடுக்கு வந்தால் ஜங்ஷன் அந்த வயது குஷியில் கொஞ்ச தூரம் தான்.    திருநெல்வேலி    ஜங்ஷன் பகுதியில் தான் ம.தி.தா. இந்துக் கல்லூரி சார்ந்த ஹைஸ்கூல் இருந்தது.   உயர்நிலைப் பள்ளிப் படிப்பு என்பது அப்பொழுதெல்லாம் பதினோரு வகுப்பு வரை.  ஆறாவது வகுப்பிலிருந்து பாரம் (FORM)  என்று சொல்வார்கள்.    ஆறாவது பாரம் தான் எஸ்.எஸ்.எல்.ஸி.



ஆற்றைக் கடக்கும் பொழுதே சுலோச்சனா முதலியார் பாலம் கண்ணுக்குத் தட்டுப்படும்.  பாலத்தில் நடப்பது சுற்றுவழி என்று ஆற்றைக் கடந்தே தினம் பள்ளி செல்வோம்.  அந்த வயதில் நண்பர்களுடன் முட்டி அளவு நீரில் ஆற்றை அளைந்து கொண்டு செல்வது அற்புதமாக இருக்கும்.   தினந்தோறும் காலைக் குளியல் தாமிரபரணி ஆற்றில் தான். எங்களது நண்பர்களின் கூட்டம் பெரிய ஜமா. சுமார் 15 பேர்கள் தேறும்.

தாமிரபரணி ஆற்றை நினைவில் நினைத்து நினைத்து எழுத எழுத இனிக்கிறது.   புதுமைப் பித்தன் வாழ்ந்த வண்ணாரப் பேட்டை சாலைத்தெரு,  இன்று புதுமைப்பித்தன் வீதியாகியிருக்கிறது.  வண்ணாரப்பேட்டை எங்கள்
பகுதியிலிருந்து கிளையாகப் பிரிந்து செல்லும் நீண்ட தெரு வழியே நடந்தால், ஐந்து நிமிட நடை தூரத்தில் படித்துறை வந்து விடும். படித்துறையில் பிள்ளையார்.    காலையில் ஆற்றுக்கு வந்துக் குளித்துவிட்டுச் சென்றிருக்கும் பெண்கள் கூட்டம் வழிபட்டிருக்கும் சங்குப்பூக்கள் திருமேனியில் செருகப்பட்டிருக்கும் பிள்ளையாரை உற்றுப் பார்த்தால் சிரித்துக் கொண்டிருப்பது போலத் தோற்றமளிப்பார். நாங்களும் பிள்ளையாரை ஒரு சுற்று சுற்றித் தோப்புக்கரணம்   போட்டுவிட்டு படித்துறைப் படிகளில் இறங்கி தாயின் மடி நோக்கி ஓடும் குழந்தைகள் போல, மணல்வெளி தாண்டி ஆறு நோக்கி ஓடுவோம்.

அந்த ஏழுமணிக்கெல்லாம் காலைக் குளியலுக்காக நண்பர்கள் படித்துறையில் கூடி விடுவோம்.  அந்தக் காலைப் பொழுதில்  கணுக்கால் நீரில் படும் பொழுதே உற்சாகம் உள்ளத்தில் கொப்பளிக்கும்.   இடுப்பும், மார்புப்பகுதியும் நீரில் அழுந்தி, இருகைகளையும் நீட்டி நீரைத் துளாவுகையில் பரம சுகமாக இருக்கும். ஜிலுஜிலுப்பு என்பது அறவே இல்லாத அந்த வெதுவெதுப்பு எப்படித்தான் தாமிரபரணிக்கு வாய்த்தது என்பது அந்த வயதில் எங்களுக்குப் புரியாத அதிசயம்.

ஆற்றின் வடகிழக்குப் பக்கம் இக்கரையிலிருந்து முக்கால்வாசி தூரத்தில் ஒரு பெரிய யானையே நீரில் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிற மாதிரி, யானைப்பாறை என்று அழைக்கப் படும் மிகப்பெரிய பாறை ஒன்று உண்டு. யானையின் முதுகு மட்டுமே வெளித் தெரிகிற மாதிரி முண்டும் முடிச்சுமாக நீரில் அமிழ்ந்திருக்கும் அந்த பெரிய பாறையின் மேல் பகுதி மட்டும் கண்ணுக்குத் தெரியும்.

பாறையைச் சுற்றி சுழல் போல் ஆற்றுநீர் சுழித்துக் கொண்டோடும். . அந்தச் சுழலின் போக்குக்கு எதிராக நீந்தி யார் முதலில் யானைப் பாறையின் முகட்டுக்கு ஏறுகிறார்கள் என்பது தினம் தினம் எங்களுக்குள் போட்டி.


எந்த முயற்சியும் வேண்டாம். அந்தச்சுழல் பக்கம் லேசாக உடலைக் கொடுத்தால் போதும். பாறையைச் சுற்றி அது இழுத்துக் கொண்டு போகும் வேகத்தில், நீரில் அழுந்திய பாறையின் துருத்திக் கொண்டிருக்கும் ஏதாவது முனை பற்றி, பாறையின் பக்கவாட்டு பள்ளத்தில் கால் புதைத்து எழும்பி பாறை பற்றி ஏறி விடலாம். சில நேரங்களில் பாறையின் முதுகு கையில் படாமல் வழுக்குவதும் உண்டு. அந்த நேரங்களிலெல்லாம், ஆற்றின் சுழலின் போக்குக்குப் போய், இன்னொரு சுற்று சுற்றி வேறு பகுதியில் ஏற வேண்டும். சில நேரங்களில் பச்சை நிறம் படிந்த நீரின் அடி ஆழத்திற்குப் போய் விடுவதுண்டு.   ஆழத்திற்குப் போனால் மறக்காமல் ஆற்றின் அடி ஆழ மணலை உள்ளங்கையில் வாரி எடுத்து வெளியே வருவோம். நீரின் மேற்பரப்புக்கு வந்து மணலை வீசி வெற்றி வீரரகள் போல விளையாடுவதுண்டு.  இளம் வயதின் திகட்டாத கொண்டாட்டங்கள்.

ஒருதடவை இப்படித்தான் யானைப் பாறையின் பிடி கைக்கு சிக்காமல் வழுக்கி ஆற்றின் அடி ஆழத்திற்குப் போனவன், சுழலின் போக்குக்கே இழுத்துக்கொண்டு போய், தட்டுத்தடுமாறி எப்படியோ இன்னொரு பக்கம் பாறை பிடித்து மேலேறி விட்டேன். கால் வெடவெடவென்று நடுங்குகிறது. இப்படிப்பட்ட அனுபவம், இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. மறுபடியும் நீரில் குதித்துத்தான் கரைக்கு மீளவேண்டும். என்னைத் திடப்படுத்திக்கொண்டு தைரியத்துடன் நீரில் குதித்து சுழல் தாண்டி மீண்டேன்.

எனது வலது கை ஆயுள் ரேகையில் வெட்டிச்செல்லும் தீவுக்குறி ஒன்றுண்டு. பின்னாளில் என் கைபார்த்த ரேகை ஜோதிடர் ஒருவர், 'உங்களுக்கு பதிமூன்று-பதினாங்கு வயதில் கண்டம் ஒன்று வந்திருக்குமே' என்றார். நானும் இதுதான் அந்த கண்டம் போலும் என்று நினைத்துக் கொள்வதுண்டு.

இப்படிப்பட்ட இளமை நினைவுகளையொத்த இன்னொன்றைப் படிக்கும் பொழுதோ, கேட்கும் பொழுதோ, அந்த செய்தி தரும் இன்ப அனுபவத்தில் நமது முழு மனசும் ஒன்றித்திளைத்து வார்த்தைகளில் வடிக்க இயலா மகிழ்ச்சியளிக்கிறது.

மாறிச் செல்லும் கால வேகத்தில் கூட இளமைக்கால சில விளையாட்டுகள் எக்காலத்தும் மாறுதலற்ற நிலையானவை போலும்! இளையோர் ஆற்றில் குளிக்கையில், ஆற்றின் அடிச்சென்று கைநிறைய மணல் அள்ளி, தான் ஆற்றின் அடிஆழம் வரைச் சென்றதற்கு சான்று போல அந்த மணலை மற்றையோருக்குக் காட்டி மகிழ்வது சங்ககாலத்தில் கூட இருந்த ஒரு விளையாட்டு தான் என்று 'தொடித்தலை
விழுத்தண்டினாரி'ன் புறப்பாடலின் மூலம் நமக்குத் தெரிய வந்து வியப்பு மேலிடுகிறது...

தொடரும் இருமலுக்கிடையே, தமது இளமை நினைவுகளை எவ்வளவு அழகாக அந்த புலவர் பெருந்தகை நினைவு கூர்ந்திருக்கிறார் பாருங்கள்:


இனி நினைந்து இரக்கம் ஆகின்று; திணி மணல்
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ,
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து,
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
மறை எனல் அறியா மாயம் இல் ஆய்மொடு
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து,
நீர் நணிப் படி கோடு ஏறி, சீர்மிக,
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டு உண்டு கொல்லோ--
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இரும் இடை மிடைந்த சில் சொற்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?


(புறநானூறு--243)

இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வருத்தம் மேலிடுகிறது
மணல் பிடித்துச் செய்த உருவிற்கு
கொய்த பூவைச் சூட்டியும்
பொய்கையில் இளம் பெண்களின் கைகோர்த்துக் களித்ததுவும்
அவர் தழுவும் பொழுது தழுவியும்
அசைந்தாடுகையில் அசைந்தாடியும்
ஒளிவு மறைவற்ற வஞ்சனையறியா
நண்பர் குழாமொடு விளையாடி மகிழ்ந்ததுவும்
மருத மரத்தின் உயர்ந்த கிளைகள் உயரம் தாழ்ந்து
நீரோடு படிந்தவிடத்து அக்கிளை பற்றி ஏறி
உச்சிக் கிளை அடைந்து
கீழே நிற்போர் வியக்க, அவர் மீது நீர் திவலை விழ
'தொடும்..' என நீரில் குதித்து, மூழ்கி
ஆழ் அடிச் சென்று அடிமணல் அள்ளிக் காட்டியும்
--- இப்படியான கள்ளமிலா
இளமைக்காலம் கழிந்து சென்றதுவே!
ஊன்று கோலை ஊன்றி, நடுக்கத்துடன்
இருமலுக்கிடையே சில சொற்கள் மொழியும்
முதியவனான எமக்கே
இனி எப்போது கழிந்த அக்காலம் வாய்க்கும்?...



இப்பாடலை இயற்றியவரின் பெயர் தெரியவில்லை.. ஆனால் அவர் தன்னைத் தானே வர்ணித்த கோலேந்திய அவரின் தோற்றம்,    இலக்கிய ஏடுகளில் அழியாது அவரை நினைவு படுத்தும் சொல்லாக---  'தொடித்தலை விழுத்தண்டினார்' என்று---அவரின் பெயராகவே ஆகிவிட்டது!

'சென்ற காலம் மீளாது இனி' என்பது சித்தர்களின் வாக்கு.  ஆனால் சென்ற காலம் நெஞ்சில் பதித்த தடங்களின் வடுக்கள் நிலையாக நினைவில் பதிந்தவை; குறைந்த பட்சம் எப்பொழுதாவது அமைதி வேண்டிடும் போதோ, அல்லது அமைதியாக இருக்கும் பொழுதோ அவற்றை நினைவுச் சுருள்களில் ஓட்டிப் பார்த்து மகிழும் பொழுது அடையும் இன்பமே அலாதி தான்!

அப்படி அடிக்கடி மகிழ்ச்சியில் ஆழ்வது இந்தக்காலத்துக்கே வாய்த்த 'டென்ஷனை'க் குறைக்கும் அருமருந்து என்பது மட்டும்  உறுதி.

32 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

என்னுடைய பள்ளிக்கால, கல்லூரிக்கால நினைவுகளைத் தூண்டிவிட்ட பதிவு. என்றும் நெஞ்சை விட்டகலா நினைவுகள். பகிர்ந்த விதம் அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

தாமிரபரணி ஆறு பற்றி மிக அழகான நினைவுகள். எனக்கும் என் இளமைக்கால நினைவுகள் பல வந்துவிட்டன.

நீங்கள் தாமிரபரணி என்றதுமே நீங்கள் கண்டிப்பாக யானைப்பாறை பற்றிச் சொல்லியிருக்கிறீர்களா என்று பார்த்தால் அப்படியே அந்த வரிகள் சுழலில் சிக்கி மீண்ட சம்பவம் அங்கு நீங்கள் விளையாடிய இதே வரிகளை ஏற்கனவே நீங்கள் பதிவில் சொல்லியிருந்த நினைவு. எனவே நன்றாக நினைவு இருந்தது.

அந்த நினைவுச் சுழலைச் சொல்லி கூடவே சங்க இலக்கிய புறநானூற்றுப் பாடலையும் சொல்லியதை ரசித்தேன்.

கீதா

Chellappa Yagyaswamy said...

Great remembrance of the bygone age! In this context, the Sangam poem quoted by you doesn't at all sound ancient. It appears to me purely contemporary. Raya Chellappa.
( From my mobile, I'm not able to link tamil font in the comment box. Sorry!)

G.M Balasubramaniam said...

மன்னிக்கவு ம் அந்தக்காலத்தில் ஐண்டாவது ஃபார்ம் எஸ் எஸ் எல் சி எனபது சரியல்ல நான்1954 ல் பள்ளி இறுதி பரீட்சை எழுதினேன் ஆறாவது ஃபார்ம் இறுதிதான் எஸேஸ் எல் சி . நினைவுகளெனக்கும் உண்டு மறதியும் உண்டு அதன் விளைவே நான் எழுதிவரும் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் நாடகப்போட்டி படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்

ஸ்ரீராம். said...

குறிப்பிட்ட வயதுக்குமேல் நினைவுகளே துணை.  அந்த நினைவுகளிலேயே காலம் சென்றுவிடும்.  வயதானவர்களுடன் பேசுவதற்கும் ஆள் இருக்காது.  அப்போது இந்த இளமை நினைவுகள்தான் எழுந்து அடக்க வைக்கும்.   அதுசரி, எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இந்தப் பாடல்களை?

ஸ்ரீராம். said...

சுலோச்சனா முதலியார் பாலம் ஏற்பட்ட காரணம் குறித்து சமீபத்தில் படித்து விட்டு அந்தப் பக்கத்தை புகைப்படம் எடுத்து வைத்திருந்தேன்.  தேடிப்பார்த்தேன்.  காணோம்!

ஜீவி said...

@ ஜிஎம்பீ

ஜீஎம்பீ சார் நீங்கள் நினைவுபடுத்தியது சரியே.

என் நினைவில் தான் பிசகு. அதற்கேற்ப மாற்றி விட்டேன். திருத்தியமைக்கு மிக்க நன்றி.

ஸ்ரீராம். said...

இரண்டு கமெண்ட்ஸ் போட்டால் ஏனோ ஒரு கமெண்ட்டை வெளியிட தாமதம் செய்கிறீர்கள்?  இரண்டும் சேர்ந்துதானே வந்திருக்கும்?

வெங்கட் நாகராஜ் said...

நினைவுகள்..... மறக்க முடியாத நினைவுகள்.

சில நாட்கள் அலுவல் சம்பந்தமாக வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்திருக்கிறேன் - 96-களில்! தாமிரபரணி - இன்றைக்கு தண்ணீர் இல்லாமல் இருப்பதைப் பார்க்க மனதில் வலி.

நினைவுகளைக் கொண்டு பாடலையும் அதற்கான விளக்கமும் கொடுத்தது நன்று. தொடரட்டும் அமுதெனும் தமிழிலக்கியம்.

நெல்லைத் தமிழன் said...

வண்ணாரப்பேட்டை, ஜங்க்‌ஷன், சுலோசனா முதலியார் பாலம் (அங்கு ஒரு முனையின் அருகில்தான் கலெக்டர் ஆபீஸ் உண்டு. ஒரு தடவை ஸ்டிரைக் என்று கூட்டமாகப் போய், தந்திக்காரர்கள் படமெடுக்க வந்தபோது பின்னால் சென்று ஒளிந்தது நினைவுக்கு வருகிறது), தாமிரவருணி ஆறு....... எங்கள் ஊர் அது.

என் அம்மாவின் அப்பா, இந்துக்கல்லூரி பள்ளியில்தான் ஆசிரியராக வேலை பார்த்தார் என்று நினைவு.

நெல்லைத் தமிழன் said...

//குறிப்பிட்ட வயதுக்குமேல் நினைவுகளே துணை. அந்த நினைவுகளிலேயே காலம் சென்றுவிடும். வயதானவர்களுடன் பேசுவதற்கும் ஆள் இருக்காது. அப்போது இந்த இளமை நினைவுகள்தான் எழுந்து அடக்க வைக்கும்// - இது உண்மை.

எதனால் இவ்வாறு நிகழ்கிறது? ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல், ஏன் எல்லோரும் அவர்களது இளவல்களிடமிருந்து அந்நியமாகிப்போகிறார்கள்? அந்த அனுபவம், சிந்தனை போன்றவை ஏன் அவர்களைக் கவருவதில்லை?

ஒரு வேளை சொன்ன செய்திகளையே திரும்பத் திரும்பச் சொல்வதனால் இருக்குமா? இல்லை அவர்களது உலகம் இளவல்கிடமிருந்து அந்நியப்பட்டுப் போகிறதா?

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார்,
வண்ணாரப்பேட்டை நினைவுகளுக்கு நன்றி.
நானும் தாத்தா பாட்டியுடன் 1955,56
வருடங்களில் அங்கே இருந்திருக்கிறேன். முதலியார் ஸ்டோர் என்னும் வரிசை வீடுகள்.
தாத்தா திருனெல்வேலி தபால் அலுவலகத்தில் தான்
ரிடயர் ஆனார்.
இப்போது சென்ற வருடம் சென்ற திரு நெல்வேலி நிறைய
மாற்றங்கள் கொண்ட பெரு நகரம் ஆகி இருந்தது.

உங்கள் தாமிர பரணி நினைவுகள் அற்புதம்.
தண்ணீர் சுழலில் மாட்டிக் கொண்டு வெளியே வந்தது
மறக்க முடியாத அனுபவம்.
இதற்கு இணையாக இலக்கியப் பாடல்களை இணைப்பதும்
மிக அழகு.
முதுமை என்று சொல்லாவிட்டாலும்
பெரும்பாலும் நினைவுகள் துணைதான்.
அது மூளைக்குக் கொடுக்கும் சவால் கூட.
இன்றைய நிகழ்வுகள் நாளைய நினைவுகள்.

குறித்து வைத்துக் கொண்டால் புத்தகமே
பதிந்து விடலாம்.

மனம் நிறை நன்றி சார்.

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

@ Dr. B. Jambulingam

எனக்கு தாமிரபரணி என்றால் உங்களுக்கு காவிரி போலும். எல்லோருக்கும் இப்படியான நினைவுகள் மனசில் தேங்கியிருப்பது அதே போன்ற ஒன்றை படிக்கும் பொழுது நினைவுகளில் மீட்டப்படுவது இயல்பு தான் எனினும் அதற்கேற்ப மனம் அமைந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

'அடப்போயா.. சின்ன வயசில் காவிரியில் தான் தினமும் நீச்சல். அதுக்கென்ன இப்போ?' என்று எல்லாவற்றையும் ஒரு சலிப்புடன் அணுகி விலகிப் போகிறவர்களும் இருக்கிறார்கள் தான்.

ஜீவி said...

@ தி. கீதா

//நீங்கள் கண்டிப்பாக யானைப்பாறை பற்றிச் சொல்லியிருக்கிறீர்களா என்று பார்த்தால்//

அந்த சம்பவம் தான் காரணம் ஏற்கனவே எழுதியிருந்தது நினைவுக்கு வந்ததற்கு. சில செய்திகள் வாசித்தவுடன் ஏதோ ஒரு ஈர்ப்பினால் மனசில் படிந்து விடுகிறது. அப்படிப் படிந்து விட்டதென்றால் அதை எப்பொழுது வேண்டுமானாலும் மீட்டெடுப்பது சுலபம் தான்.
படிய வேண்டும். அதான் முக்கியம். அதுவும் சிலருக்கே வாசிப்பதை நினைவுக்குக் கொள்ள முடிகிறது. அந்த அதிர்ஷ்டக்காரர்களில் நீங்கள் ஒருவர் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். பல சமயங்களில் அதைக் கண்டிருக்கிறேன்.

வே.நடனசபாபதி said...

தங்களின் ‘வசந்தகால நினைவலைகள்’ தொடரில் 'தொடித்தலை விழுத்தண்டினார்' அவர்களின் இந்த கவிதையை, தாங்கள் தாமிரவருணி ஆற்றில் மூழ்கிக் களித்த நிகழ்வோடு இணைத்து 2019 ஏப்ரல் திங்களில் வெளியிட்டதை, திரும்பவும் படித்து இன்புற்றேன். நினைவுகள் சுகமானவை! அவைகளை எத்தனை முறை அசைபோட்டாலும் அலுக்காது. தொடருங்கள் நினைத்துப் பார்ப்பதை.

ஜீவி said...

@ Chellappa Yagyaswamuy

கரெக்ட். நீங்கள் சொல்வது சரியே. பழங்காலப் பழமைக்கும், தற்கால வாழ்விற்கும் பாலம் போட்ட கவிதை தான் அது. என்ன, தொபீர் என்று குதிக்க ஆறுகளில் தண்ணீர் இல்லையே தவிர ஆற்று வெள்ளம் கரை புரண்டு ஓடின், அந்த நாளே இளையோர்களின் விளையாட்டு இதுவாகத் தான் இருக்கும்.

தங்கள் வாசிப்பு களிப்பினை நானும் உணர்ந்தேன். நன்றி, ஸார்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

வயதானவர்களுடன் பேசுவதற்கு ஆள் இருக்காது என்பது மட்டும் எனக்கு உடன்பாடில்லை.

பேசும் பொருளை வயதானவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டால், என்றென்றும் இளையோருக்கு சரிசமமாக பேசிக் களிக்கலாம் என்றே என் எண்ணம். இந்த கணினி உலகில் ஊரெல்லாம் உறவு தானே?..

//.. அதுசரி, எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இந்தப் பாடல்களை? //

சங்க நூல்கள் அத்தனையையும் கைவசம் வைத்திருக்கிறேன், ஸ்ரீராம். நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் 1981-ம் வருடத்திய பதிப்புகள். நேர்த்திய பதிப்பு. இனி ஒவ்வொரு பாடலுக்கும் அந்த பாடல் சார்ந்த நூலின் அட்டைப் படம் பிரசுரிக்கிறேன். நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

ஏறத்தாழ 178 ஆண்டுகளாகின்றன இந்த பாலம் கட்டி. இந்தப் பாலத்தின் பெயராக நிற்கும் சுலோச்சனா முதலியாரை மறக்கவே முடியாத தமிழர் என்றே சொல்ல வேண்டும்.

விவரங்கள் கூகுள் தேடலில் காணக்கிடைக்கின்றன, ஸ்ரீராம்.

உணர்வு மிக்கவை. பார்த்துக் கொள்ளுங்கள்.





ஜீவி said...

2 ஸ்ரீராம் (3)

// இரண்டு கமெண்ட்ஸ் போட்டால் ஏனோ ஒரு கமெண்ட்டை வெளியிட தாமதம் செய்கிறீர்கள்? இரண்டும் சேர்ந்துதானே வந்திருக்கும்?//

மொபைலில் பார்க்கும் பொழுது உடனே மாடரேட் செய்து விடுவேன். இன்னொன்று அடுத்து பதுங்கியிருப்பது சில நேரங்களில் பார்வைக்குத் தப்பி விடுகிறது. ஆனால் எப்படியும் மடிக்கணினியை கையாளும் பொழுது கண்டுபிடித்து எல்லாவற்றையும் மாடரேட் செய்து விடுகிறேன். எனக்குத் தெரிந்த வகையில் எப்படியோ வேலை நடந்து கொண்டிருக்கிறது. அது வரைக்கும் நிம்மதி.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

ஆறும் நீரும் உடலும் உயிரும் போல.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, வெங்கட்..

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

நான் குறிப்பிடுகிற காலகட்டத்தில் அந்த இடத்தில் ஆட்சியாளர் அலுவலகம் இருந்திருக்கவில்லை.

//என் அம்மாவின் அப்பா, //

வாய் நிறைய தாத்தா என்று சொல்லக்கூடாதா?..

ஜீவி said...

@ நெல்லைத்தமிழன் (2)

இளவல்கள் தாம் தாத்தாக்களிடமிருந்து அந்நியப்பட்டு விட்டார்கள் போலிருக்கு.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

ஓ! 1955-56-ஆ?

நானும் அந்நாட்களில் அதே வண்ணாரப்பேட்டையில் வசித்து அதனாலாய அனுபவங்கள் தானே இதெல்லாம்?.. அப்போ அதே காலத்தில் நீங்களும் அங்கே இருந்திருக்கிறீர்களா? என்ன ஆச்சரியம்?.. ஆனால் எனக்கு அப்போது பதினாங்கு வயதிருக்கும்.

//முதுமை என்று சொல்லாவிட்டாலும்
பெரும்பாலும் நினைவுகள் துணைதான்.
அது மூளைக்குக் கொடுக்கும் சவால் கூட.
இன்றைய நிகழ்வுகள் நாளைய நினைவுகள். //

உண்மையான உண்மை. அதனால் தான் இப்படிப்பட்ட எழுத்துக்கள் எல்லாம் சாத்தியமாகிறது.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

//தங்களின் ‘வசந்தகால நினைவலைகள்’ தொடரில் 'தொடித்தலை விழுத்தண்டினார்' அவர்களின் இந்த கவிதையை, தாங்கள் தாமிரவருணி ஆற்றில் மூழ்கிக் களித்த நிகழ்வோடு இணைத்து 2019 ஏப்ரல் திங்களில் வெளியிட்டதை, திரும்பவும் படித்து இன்புற்றேன்.//

ஆமாம், ஐயா. ஆழ் மன நினைவுகள் எங்கு எதைப்பற்றி நினைத்துக் குறிப்பிட்டாலும்
வார்த்தை தவறாமல் அங்கங்கே அப்படி அப்படியே படிந்து விடுகின்றன. மிகச் சரியாக தேடி எடுத்து இங்கு அதைக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.

வங்கிப் பணியில் இருந்தாலும் தங்களின் மொழி ஈடுபாடு அதே துறையில் பணியாற்றுகிறவர்களை விட விஞ்சி இருப்பது எண்ணி எண்ணி இன்புறத் தக்கது.

தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவதில் எனக்கோ பேரின்பம். நன்றி, ஐயா.

நெல்லைத் தமிழன் said...

//தாத்தா என்று// - ஹா ஹா.... என் அப்பாவின் அப்பா, தன் மூத்த பையனுக்குத் திருமணம் நடத்திவைத்துவிட்டு இறந்துவிட்டார். என் அப்பா அப்போது எஸ்.எஸ்.எல்.சி படித்துக்கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். என் அம்மாவின் அப்பா, என் அம்மா முதல் கருவுற்றிருந்தபோதே மறைந்துவிட்டார். என் தாத்தாக்கள் இருவரையும் நான் பார்த்ததில்லை. பாட்டிகளைப் பார்த்திருக்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

//இளவல்கள் தாம் தாத்தாக்களிடமிருந்து அந்நியப்பட்டு விட்டார்கள் போலிருக்கு.// - பெரும்பாலும் தாத்தாக்களுடன் பேரன்/பேத்திகள் நெருக்கமாகத்தான் இருப்பார்கள் (அவங்க நல்ல புரியும் வயது வரும்வரை. அப்புறம் தங்கள் வேகச் சிந்தனையோட்டத்தால் தாத்தா அந்நியமாகத் தெரிவார்). பசங்க எப்போதும் பெரும்பாலும் அப்பாவிடமிருந்து அந்நியப்பட்டே இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

Kavinaya said...

//பாறையைச் சுற்றி அது இழுத்துக் கொண்டு போகும் வேகத்தில், நீரில் அழுந்திய பாறையின் துருத்திக் கொண்டிருக்கும் ஏதாவது முனை பற்றி, பாறையின் பக்கவாட்டு பள்ளத்தில் கால் புதைத்து எழும்பி பாறை பற்றி ஏறி விடலாம்.//

நீர்ச் சுழலைப் பற்றிப் பேசியது நினைவுச் சுழலைப் பற்றிப் பேசியது போலவே அமைந்தது.

Bhanumathy Venkateswaran said...

திருநெல்வேலி நினைவுகள் குறித்து ஏற்கனவே ஒரு முறை எழுதியிருக்கிறாரே என்று நினைத்தேன். அதை சங்கப் பாடலோடு இணைத்திருந்தவிதம் அருமை.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

கண்ணாரப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் என் தாத்தா என்று உரிமையுடன் மனதில் கொள்வது எப்படி விட்டுப் போகும்?..

அபுரி.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் (2)

இல்லை என்பதே என் அனுபவம்.

ஜீவி said...

@ பா.வெ.

மனசில் வடுவாக ஆழப்பதிந்த நினைவுகள் பல. எப்பொழுதும் மறக்கவே மறக்காது.
அது சம்பந்தப்பட்ட சமயங்களில் நீர்மூழ்கிக் கப்பல்கள் கடல் மட்டத்திற்கு வருவது போலவே 'என்னை இந்த இடத்தில் உபயோகப்படுத்திக் கொள்' என்று சொல்கிற மாதிரி வந்து விடுகின்றன.

இந்த சம்யத்தில் சங்கப்பாடலுக்கு. இன்னொரு சமயத்தில் என்னவோ.. :))

அடுத்த பகுதியும் திருநெல்வேலி தான். வாசித்து விடுங்கள்..

Related Posts with Thumbnails