4
ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், கே.ஆர்.ரங்கராஜூ பொன்றவர்கள் ஆங்கில மர்ம நாவலக்ள் கதை மாந்தர்களுக்கு தமிழ் உடை உடுத்தி அழகு பார்த்தவர்கள் என்றால் இவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவராய்த் திகழ்ந்தார் வை.மு. கோதைநாயகி அம்மாள். வை.மு.கோ. என்று வாசிப்பு உலகத்தினரால் செல்லமாக அழைக்கப்பட்டவர்.
அந்தக்கால வழக்கப்படி பெண்ணாய்ப் பிறந்ததினால் கல்விச்சாலையை நெருங்க முடியாமல் ஆரம்பக்கல்வியே மறுக்கப்பட்ட நிலைக்கு உள்ளானார். குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த இவரை வளர்த்த சித்தப்பா இவருக்கு ஞான ஆசிரியராய் ஆனார். அவரிடம் தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி என்று கற்றார். ஐந்து வயதில் பால்ய விவாகம். கணவர் பார்த்தசாரதிக்கு ஒன்பதே வயது.
சிறுவயதிலேயே தன்னையொத்த சிறு குழந்தைகளுக்கு கோதை கதை சொல்லும் திறமை பெற்றிருந்தார். கணவரின், மாமியாரின் அன்பும் ஆதரவும் பெண்ணுக்கான சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்தது. பிற்காலத்தில் தமிழை வாசிக்கவும் எழுதவும் தெரியாத நிலையிலேயே இவ்ர் சொல்லவும் இவர் சொல்வதை எழுதவும் பட்டமாள் என்ற தோழி கிடைத்தார். அப்படி வை.மு.கோ. சொல்லி எழுதியது தான் இவரின் முதல் நாவலான 'இந்திர மோகனா'!. நாளாவட்டத்தில் பட்டமாளே இவருக்கு கல்வி போதித்த ஆசிரியையும் ஆனார்.
அன்னி பெசண்ட் அம்மையாரின் அறிமுகம், சமூக சேவகி அம்புஜம் அம்மாளின் தோழமை, தீரர் சத்யமூர்த்தியின் தீவிர மேடைப்பேச்சு , மஹாத்மாவின் தமிழக விஜயம் எல்லாம் சேர்ந்து இவரை சுதந்திரப் போராட்ட வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள இழுத்துச் சென்றது.
இந்த காலகட்டத்தில் தான் 'ஜகன்மோகினி' என்ற பத்திரிகையை தம் சொந்தப் பொறுப்பில் நடத்தவும் அதற்கு ஆசிரியையாகவும் ஆகிறார் வை.மு.கோ. . ஜெகன்மோகினியில் தன் இரண்டாவது நாவலான 'வைதேகி'யை எழுதினார்., பின் 'சண்பகவிஜயம்', ''ராதாமணி,' பத்ம சுந்தரன்', 'கெளரி முகுந்தன்'' என்கிற நாவல்களை 1926-27 காலகட்டத்தில் எழுதினார். 'நாவல் அரசி' என்ற பட்டம் வை.மு.கோ.விற்கு தன்னாலே தேடிவந்தது. பிரமிக்காதீர்கள், இவர் எழுதிய மொத்த நாவல்களின் எண்ணிக்கை 115 என்று இலக்கிய ஆய்வாளர்கள் கணக்கு சொல்கின்றனர். இன்றைக்கும் இந்த எண்ணிக்கையை யாரும் எட்டவில்லை என்று நினைக்கிறேன்.
வை.மு.கோ. தன் நாவல்களுக்கு எடுத்துக் கொண்ட எழுது பொருள் பெண் விடுதலை, மதுவிலக்கு, விதவைத் திருமணம், மத நல்லிணக்கம் என்று--- அத்தனை நாள் ஆங்கில நாவல்களை அடியொற்றி எழுதிய எழுத்துப் பாங்கு தமிழில் இவரால் மாறுபடுகிறது. இவ்வாறாக தமிழ் நாவல்களில், நாவலுக்காக எழுதும் கருப் பொருளில் முதல் முதலாக மாற்றம் கண்ட பெண்மணி வை.மு.கோ. தான். இது தமிழ் நாவல் எழுத்துலகம் கண்ட மிகப் பெரும் வரலாற்று மாற்றம்.
வை.மு.கோ.வின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் தீரம் மிக்கது. காந்திஜியின் அறைகூவலை ஏற்று சென்னை திருவல்லிக்கேணியில் கள்ளுக்கடை மறியல், மற்றும் அன்றைய சைனா பஜாரில் தடையை மீறி ஊர்வலம் சென்றார் என்று ஆறு மாதம் சிறைதண்டனை+ அபராதம் என்று தண்டனை வழங்கப்பட்டு, அபராதம் செலுத்த மறுத்ததால் இன்னும் 4 மாதங்கள் சேர்த்துக் கிடைத்த தண்டனையையும் புன்முறுவலுடன் ஏற்று சிறை சென்றார் அன்னிய துணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் தண்டனை பெற்று வேலூர் சிறைவாசம். சிறை வாழ்க்கையையும் எழுதுவதற்குக் கிடைத்த வாய்பாகக் கொண்டு 'உத்தம சீலன்', 'சோதனையின் கொடுமை' என்று இரு நாவல்களைப் படைத்தார்.
வை.மு.கோ, தேச நலனுக்காகப் பயன்பட்ட நல்ல மேடைப் பேச்சாளர், கர்நாடக சங்கீதத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்று ஏகப்பட்ட பெருமைகளுக்குச் சொந்தக் காரர். பெண் எழுத்தாளர்களில் சாதனைகள் படைத்த முதல் பெண்மணி. பாரத தேசத்தின் நலன்கள் சார்ந்த கொள்கைகளை தம் எழுத்துக்கு கருப்பொருளாக அவர் எடுத்துக் கொண்டது என்றென்றும் நினைவு கொள்ள வேண்டிய சாதனை.
தமிழ் நாவலுலகில் 1879-ல் பிரசுரமான மயூரம் வேதநாயகம் பிள்ளையின் 'பிரதாப முதலியார் சரித்திரம்', 1896-ல் வெளிவந்த ராஜம் அய்யரின் 'கமலாம்பாள் சரித்திரம்' போன்ற நாவல்கள், வை.மு.கோ.வின் நாவல்களுக்கு முற்பட்ட காலத்தினது ஆயினும் அவை தனி மனித கோணல்மாணல்களை அச்சுப்பிச்சுத் தனமாக வர்ணித்தவை. இந்த நிலைகளிலிருந்து மாறுப்பட்டுப் போனதும் வை.மு.கோ.வுக்கு வாய்த்த தனிச் சிறப்புகளாகின்றன.
1898-ல் பிரசுரமான மாதவய்யாவின் 'பத்மாவதியின் சரித்திரம்' இதற்கு முந்தைய காலகட்டதின் நாவல் தலைப்புகளைப் பிரதி எடுத்திருப்பது மேலோட்டமான பார்வைக்கே புலப்படுவது.. ஒரு நாவல் என்றால் குறிப்பிட்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வது தான் என்று முடிவு எடுக்கிற மாதிரியும் உள்ளடக்கத்தின் தேர்வு நிகழ்ந்திருக்கிறது. அதே நேரத்தில் பத்மாவதி என்னும் தனிப்பட்ட ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் நேர்ந்துவிட்ட சோக வரலாற்றின் விவரிப்பாக குறுக்கம் கொண்டதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து நெடுங்காலம் கழித்து 1946-ல் பிரசுரமான க.நா.சுப்பிரமணியம் அவர்களின் 'பொய்த்தேவு' தான் தேறுகிறது. தமிழ் நாவலுலகின் இலக்கிய ஆய்வாளர்களால் விசேஷப்படுத்தும் நாவல் இது.
இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாக திகழும் பொழுது அதன் பெருமை வருங்காலத்திற்கு வழிகாட்டியாகிறது. இலக்கியம் வாழ்வின் மதிப்பிடல்களைத் தீர்மானிக்கும் சக்தி பெறும் பொழுது அதற்கான உண்மையான உயிர்ப்பினைக் கொண்ட சாதனையாகிறது. அந்த சாதனைகளும் சமூக அவலங்களைக் களைந்த நேர்த்திகளுக்குச் சொந்த மாகும் பொழுது இயல்பாகவே அவை நம் நேசிப்பை விட்டுத் தப்ப முடிவதில்லை. இதுவே இலக்கியங்களுக்கான அடிக்கோடிட்டு அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டிய அளவுகோல்களுமாகும்.
(தொடரும்)
படம்
4 comments:
இலக்கியம் என்பது காலத்தைக் காட்டும் கண்ணாடிதான். அப்போதைய சமூகத்தைப் பற்றி, அதன் பழக்கவழக்கங்கள் பற்றி அறிந்துகொள்ள முடியும். ஏன்...அந்த அந்த 'பத்துவருட' விகடன், குமுதம் பத்திரிகைகளே காலத்தைக் காட்டும் கண்ணாடியாக ஆகின்றனவே (சமீபத்தைய காலம்தான் கந்தர்கோளமாக இருப்பதை இந்தப் பத்திரிகைகள் உணர்த்தும்)
சிறப்பு. பல அரிய தகவல்களை அறிந்தேன்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஆய்வுப்பணிகள் காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
@ நெல்லைத் தமிழன்
நீங்கள் சொல்வது சரி தான். வாரப்பத்திரிகைகளும் உட்பட எல்லாமே அந்தந்த கால கொனஷ்டைகளைக் கண் முன் கொண்டு வரும் கண்ணாடிகள் தான்.
பேச்சு மொழியில் கூட இந்த கண்ணாடி வெளிப்பாடு விட்டு வைக்கவில்லை. நிகழ்கால (அ) சிறப்புகள் ள் - ல், ழ்-ல், ச-ஸ, உச்சரிப்பு பேதங்கள். தொலைக்காட்சி உரையாடல்கள், செய்தி வாசிப்புகள் என்று சகல ஊடகங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த உச்சரிப்பு அலங்கோலங்களை யாருமே பொருட்டாக மதிக்காத அளவுக்கு பிழைபட உச்சரிப்பே அது தான் சரியான உச்சரிப்பு போல பழக்கமாகியிருப்பது தான் காலத்தின் அலங்கோலம்.
@ Dr. B. Jambulingam, A.R. (Retd) Tamil University
தாங்கள் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்றால் அந்த சேதியே எங்களுக்கு வெல்லக்கட்டி. அந்தப் பணி நிறைவுற்றதும், அதனால் பயனுறப் போவதும் நாங்களே.
முடிந்த பொழுதெல்லாம் வாருங்கள். நன்றி, ஐயா.
Post a Comment