மின் நூல்

Friday, December 5, 2008

ஆத்மாவைத் தேடி....22

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


22. மனமும் புத்தியும்

பிரதிநிதிகள் அறுபத்து நான்கு பேரையும், எட்டுபேர் கொண்ட குழுவாக, எட்டுக் குழுக்களாகப் பிரித்திருந்தது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைப்பு. அந்தந்த தலைப்பிலான பேச்சுக்களை அந்த தலைப்பு சார்ந்த குழு தங்களுக்குள் அலசி ஆராய்ந்து 'பேப்பர்'களை சமர்ப்பித்திருந்தார்கள். அந்தத் தலைப்புகளில் தான், பேசிக்கொண்டிருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு, சகோதரி நிவேதிதாவின் குழு சார்ந்த சகோதரி பூங்குழலி பேசத்தொடங்கினார்.

அவர் குரல் தீர்க்கமாக, வார்த்தைக்கு வார்த்தை ஸ்பஷ்டமாக வெளிப்பட்டது. இதற்கு மேல் என்ன என்று உன்னிப்பாக அவையோர் கேட்கத் தயாராயினர்.


"அகவயப் பார்வையின் அவசியம் தெரியாத நேரத்து, சகஜமான வெளிப் புலனுணர்வுகளும் அவை அளிக்கும் இன்பமே முக்கியமானதாகத் தெரியும். அதுவே இறுதி எல்லையாக உணர்வதால், அதற்குத் தாண்டி எதுவும் இருக்க முடியாதென்று கூடத் தோன்றும்.


"செயல்படுதலால், அனுபவமும், அந்த அனுபவத்தின் பலனைத் துய்ப்பதால் அதுபற்றிய அறிவாகிய புத்தியும் ஏற்படலாம். அனுபவங்களும், அவற்றைத் துய்ப்பதற்கான திறமைகளும் அல்லாது வாய்ப்புகளும் எல்லோருக்கும் வாய்த்து விடப்போவதில்லை. காக்பிட்டில் உட்கார்ந்து விமானத்தைச் செலுத்தும் விமான ஓட்டியின் சாகச அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது தான். நாம் வியப்புடன் அவர் சொல்வதைக் கேட்பது அவருக்கு சாதாரணமாக ஆன அனுபவமாய் இருக்கலாம். இப்படியான ஒரு அனுபவம், ஒரே காரியத்தைத் தொடர்ந்து செய்வதான பழக்கத்தின் அடிப்படையில் ஏற்பட்டது. எழுபதாயிரம் அடி உயரத்தில் விமானம் ஓட்டிய விமானி, வீட்டுக்கு வந்ததும் மனைவி சமையலை ரசித்து, "எப்படி இவ்வளவு சுவையாக இந்த கருணைக்கிழங்கு மசியலைப் பண்ணினே?" என்று வியக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அற்புதம். எல்லாவற்றையும் ரசிக்கும் மனோபாவமும் எல்லோருக்கும் இருந்து விடப்போவதில்லை.


"கொடைக்கானலில் குறிஞ்சிப்பூ பூக்கையில், எங்கிருந்தோவெல்லாம் வந்து அதைப்பார்த்து மகிழ்வோர் உண்டு. வெளியூர் வாசிகளைப் பார்த்து, "எதற்குக் கூட்டங்கூட்டமாக இங்கு இப்படி வருகிறார்கள்?" என்று உள்ளூர்வாசி மலைக்கலாம். வள்ளல் பாரியின் பரம்பு மலை வளப்பம், அந்த பரம்புமலையில் வாழ்வோருக்குத் தெரியாது என்று ஒரு வாசகம் உண்டு.


"பொதுவாக மனத்தின் இயல்பு 'சட்'டென்று ஒரு விஷயம் பிடித்துப் போதல்; பிடித்துப் போவதை பரவசப்பட்டு ரசித்தல். வண்ண வண்ண பொம்மைகளைப் பார்த்து குழந்தை கைகொட்டிச் சிரிக்குமே, அதுபோல! கல்மிஷமில்லாத இந்த குணத்திற்கு ஈரேழு உலகங்களும் சமனாகாது.


"ஆனால், புத்தி என்பது வேறு! அது பெற்ற அறிவுக்கு அடிமையான ஒன்று. தீக்குள் விரலை வைத்தால், சுடுமே தவிர, 'நந்தலாலா, உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதய்யா' என்னும் பாரதியைப் பார்த்து பிதற்றுவதாகப் பரிகசிக்கும்!


"புத்தி எச்சரிக்கை உணர்வு கொண்டது. "ஏய்! குதிச்சிண்டு ரொம்ப தூரம் போகாதே! திரும்பற அலை இழுத்திண்டு போயிடும்"ன்னு எச்சரிக்கும் குணம் கொண்டது. எச்சரிக்கைகள் எப்பொழுதும் 'எக்டஸி' நிலை அடையாமல் தடுக்கும். அறிவைத் தாண்டி எதையும் செய்யத் துணியாது; துணியும் நேரத்தும், யோசிப்பு வேலிபோட்டுத் தடுக்கும். பல எதிர்கால சாதனைகளை மொட்டாய் இருக்கும் பொழுதே பொசுக்கி விடும். அதற்காக யோசிப்பு கூடாதென்றும் இல்லை; எடுத்தெற்கெல்லாம் யோசிப்பு, எதிர்மறைச் சிந்தனைகளைக் கூட்டும். அதுவும் யோசிப்பு என்பது பெற்ற அறிவிற்கேற்பத்தான் இருக்கும் என்பதால், எத்தனையோ தேவையான விஷயங்கள், கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நழுவவும் வாய்ப்பிருக்கிறது.


இந்த இடங்களில் எல்லாம் புத்தி என்பதை பிறரால் தெரியப்படுத்தப் பட்ட, அல்லது படித்துத் தெரிந்து கொண்ட அறிவு என்கிற அர்த்தத்திலேயே உபயோகப்படுத்தி இருக்கிறோம். ஆனால் அறிவு வேறு ஞானம் என்பது வேறு. புத்தகங்களிலும், கல்விச் சாலைகளிலும் படித்தவை அறிவு என்று கொள்ளலாமா என்றால் கொள்ளலாம்; ஆனால், அதுவே முழுமை பெற்ற அறிவாகாது. அது இன்னொருவரால் தெரிவிக்கப்பட்ட, புகட்டப்பட்ட, நாம் புரிந்து கொண்டதற்கேற்பதான அறிவு. பெற்ற அறிவைக் கொண்டு வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி புதிதாக கண்ட அனுபவத்தின் பேரில் ஏதாவது புதுசாகத் தெரிந்தால், அதை ஞானம் எனலாம். புற்றுநோய்க்கு தான் பெற்ற அறிவால் க்யூரி அம்மையார் ரேடியம் சிகித்சை கண்டறிந்து உலகுக்கு அளித்த கொடை, ஞானம்; அந்தக் கண்டுபிடிப்பு சமுதாயத்திற்கு பயன்படுவது இன்னும் விசேஷம். இது பற்றி நாம் படித்துத் தெரிந்து கொண்டது அறிவு. அறிவு என்பது கற்பிக்கப் பட்ட ஒன்று; பெற்ற அந்த அறிவை மூலதனமாக வைத்து முயற்சி செய்த சுய வெளிப்பாடு இல்லை; பலருக்கும் தெரிந்த ஒன்று. அதனால் தான், இந்த மாதிரி படித்துப் பெற்ற அறிவிற்கெல்லாம் நிறைய பேர் அலட்டிக் கொள்வதில்லை.


"இது இன்னதென்று கண்டு கொள்ளல், தெரிந்து கொள்ளல், போன்ற 'பார்க்கின்ற' சமாச்சாரங்களே புறக்கண்களால் ஆகக்கூடிய காரியங்கள். ரசித்தல், அனுபவித்தல்,மகிழ்தல் போன்றவை மனம் சம்பந்தப்பட்டவை.
"'பார்த்து ரசித்தான்'... என்கிற சொல்லில், 'பார்த்தல்' கண்களுக்குச் சொந்தமாயும், 'ரசித்தல்' மனதுக்குச் சொந்தமாயும் இருக்கிறது.


"புற உலகில் கண்ணால் பார்க்கும், காதால் கேட்கும், புலன்களால் தொட்டு உணரும் எல்லாவற்றிற்கும் தான் புத்தி சம்பந்தப்பட்டிருக்கிறது. அதாவது புத்தியின் ஆளுகைக்கு உட்படுத்தி அவற்றை அலசலாம். மனம் சம்பந்தப்பட்டிருக்கும் உணர்வுகள் புத்தியின் ஆளுகைக்கு அப்பாற்பட்டவை. புத்தி குறுக்கே புகுந்து தடுத்தாலும் அதை அப்பால் தள்ளி அன்பு பாராட்டும் உணர்வுகள் அவை. 'ஆமாம், அவன் அப்படித்தான் ---அதுக்காக விட்டுக் கொடுத்திட முடியுமா?' என்கிற பரிவே மனசில்கொப்பளித்து ஆதரவு தந்து அணைத்துக் கொள்ளும்.


"அறிவாகிய புத்தி காரியவாதி; செஸ் விளையாட்டு போல கணக்குப் போட்டு, காய் நகர்த்தி காரியம் சாதித்துக் கொள்வது; கணக்குப் போட்டு எதிரியை வீழ்த்தும், வாழ்த்தும் சாணக்கியத்தனம் கொண்டது.

"மனத்திற்கு என்று சில கல்யாணகுணங்கள் உண்டு. தனக்குப் பிடித்து விட்டதென்றால், தனக்குப் பிடித்தவர் என்றால், லாப-நஷ்ட கணக்குப் பார்க்காது. தன்னிடம் இல்லை யென்றாலும், கடன் வாங்கியாவது இன்னொருவருக்குச் செய்து களிப்படையும். எத்தனைபட்டும் 'புத்தி' வராது, மீண்டும் மீண்டும் தன்னை இழத்தலில் சந்தோஷப்படும். பிறர் துன்பத்தைத் தன்மேல் இழுத்துப் போட்டுக் கொண்டு மருகும்.



--இது பற்றி இன்னும் நிறையச் சொல்ல வேண்டுமென்கிற ஆர்வத்துடன் காகிதங்களைப் புரட்டினார், பூங்குழலி.

(தேடல் தொடரும்)














6 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

கூடவே காத்திருக்கிறோம் நாங்கள். இந்த அலசல் மிகவும் எளிதாகவும் லோகயதமாகவும் வந்திருக்கிறது வாழ்த்துக்கள் ஜீவி

கபீரன்பன் said...

//மனம் சம்பந்தப்பட்டிருக்கும் உணர்வுகள் புத்தியின் ஆளுகைக்கு அப்பாற்பட்டவை //

ஒரு திரைப்படப் பாடல் ;

கண்போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா


முதலில் கால் போகிறதா அல்லது மனம் சொன்னதால் கால் போனதா ?

கவியின் வரிகளில் பழுது உள்ளதா?

இந்த கேள்வி பல வருடங்களாக குடைந்து கொண்டிருக்கிறது :-))

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ?


இந்த இரண்டு வரிகளில் புத்தி மனதை கட்டுபடுத்த வேண்டும் என்ற கருத்து புரிகிறது.

எது சொன்னாலும் மனது தான் மனிதனை ஆட்டிப்படைக்கிறது

jeevagv said...

தன்னிடம் இருக்கும் அருமை தனக்கே பெரும்பாலும் தெரிவதில்லை - என்பதற்கான உதாரணங்கள் அருமை. எந்த தன்னைப்பற்றிய அருமை, தனக்கு அகந்தை தராதோ, அதுவே உயரிய அருமை போலும்!
கல்யாண குணத்தைச் சொல்லி - இங்கு புத்தி சரிபட்டு வராது, என்று சொன்னதும் அருமை.

ஜீவி said...

கிருத்திகா said...
//கூடவே காத்திருக்கிறோம் நாங்கள். இந்த அலசல் மிகவும் எளிதாகவும் லோகயதமாகவும் வந்திருக்கிறது//

காத்திருப்புக்கு நன்றி.
அடுத்ததில் பார்க்கலாம்.

ஜீவி said...

கபீரன்பன் said...
//மனம் சம்பந்தப்பட்டிருக்கும் உணர்வுகள் புத்தியின் ஆளுகைக்கு அப்பாற்பட்டவை //

ஒரு திரைப்படப் பாடல் ;

கண்போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

முதலில் கால் போகிறதா அல்லது மனம் சொன்னதால் கால் போனதா ?

கவியின் வரிகளில் பழுது உள்ளதா?

இந்த கேள்வி பல வருடங்களாக குடைந்து கொண்டிருக்கிறது :-))

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ?


இந்த இரண்டு வரிகளில் புத்தி மனதை கட்டுபடுத்த வேண்டும் என்ற கருத்து புரிகிறது.

எது சொன்னாலும் மனது தான் மனிதனை ஆட்டிப்படைக்கிறது//

கபீரன்ப! அருமை! உங்கள் பகிர்தலுக்கு நன்றி. படைப்பாளியின் உணர்வுகள் அவருக்கே சொந்தமானவை; இருந்தாலும், நான் புரிந்து கொண்டதைச் சொல்கிறேன்.

கண்கள் பார்த்த காட்சி, மூளையில்
பதிய, புத்தி மயங்கியதால் அதன் வழி மூளையும் மயங்க அதன் ஆணைப்படி கால் போகிறது.
இதைத் தான் மனம் (புத்தி) இப்படி
அறிவிழந்து போகலாமா (மயங்கலாமா) என்று கேட்கிறார்.

மூன்றாவது வரியில் வரும் 'மனம்' நமக்குத் தெரிந்த மனம். தறிகெட்டுத் திரியும் மனத்தைக் கட்டுப்படுத்தி, கடிவாளம் போடாமல், மனிதன் - ஒரு சாதாரண மனிதன் - போகலாமா என்று கேட்கிறார்.

அடுத்த நாலாவது வரியில், அந்த
'மனிதன்' என்கிற வார்த்தையையே 'மகாத்மா'வாக உயர்த்திக் காட்டுகிறார்.
நாலாவது வரி பாடுகையில், திரையில் மகாத்மாவின் படம் காட்டப்படும் என்று நினைவு. இந்த 'மனிதன்'-- மகாத்மா--போன
பாதையை மறந்து போகலாமா என்கிறார்.

இரண்டாவது வரி 'மனம்'-புத்தி.
மூன்றாவது வரி 'மனம்'- மனமே.
மூன்றாவது வரி 'மனிதன்'- சாதாரண மனிதன்.
நான்காவது வரி'மனிதன்'மஹாத்மா.

ஆக, 'கண்' பார்த்து காட்சி தெரிந்ததால், 'கால்' போனதற்கும், 'மனம்' போனதற்கும் காரணம், மூளையே! அதன் ஆணையே!

மூளையைச் சொல்லியும் குற்றம் இல்லை! இதற்கு முன் குடித்துக் குடித்து, மயங்கி அனுபவப்பட்ட மூளை, சப்புக் கொட்டிக் கொண்டு, மீண்டும் அந்த அனுபவத்தைப் பெற ஆசைப்பட்டு, மனத்தின் மீது பழி போட்டு அதற்கு ஆயத்தமாகிறது.

இதே ஒரு குடிகாரனது அல்லாத மூளையாக இருந்திருந்திருந்தால்,
'கண்' பார்த்தும், 'கால்' போயிருக்காது; 'கால்' போன போக்கில் 'மனமும்' போயிருக்காது!
'ச்சீ' என்று விட்டு விலகியிருக்கும்.
அப்படிப்பட்ட உத்தம மனிதனாக இருக்கக்கூடாதா என்பதற்குத் தான்,
அந்த மூன்றாவது வரி: "மனம் போக்கிலே,மனிதன் போகலாமா?.."

கதைக்கேற்ற ஒரு காட்சியை- குடித்துக் கும்மாளமிடும் ஒரு காட்சியைச்-- சொல்லி பாடல் கேட்கிறார்கள்.
இசை அமைப்பாளர் போடும் மெட்டுக்குக்கேற்பவும் அந்தப் பாடல் இருக்க வேண்டும். இத்தனை வேலிகளையும் தாண்டி திரைப்படங்களில் இலக்கியம் படைத்தவர்களை நினைத்தால் பெருமிதமாகத் தான் இருக்கிறது.


மிகச் சுவையான ஒரு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, கபீரன்ப!

ஜீவி said...

//கல்யாண குணத்தைச் சொல்லி - இங்கு புத்தி சரிபட்டு வராது, என்று சொன்னதும் அருமை.//

'புத்தி'-'மனம்'--இவற்றின் சகஜமாகத் தெரியும் இயல்புகளைச் சொன்னதாக எடுத்துக் கொள்ளவும்.

இரண்டையும் சரிபடுத்தி சமரசப்படுத்துவதே நமது வேலை. எங்கேயாவது மாறுபட்டு எனது தொனி ஒலித்ததென்றால், இதற்கேற்ப திருத்திக் கொள்ளவும்.

எப்படி வெவ்வேறு திசைகளில் இழுத்து வம்படிக்கும் இவற்றை சரிபடுத்துவது என்று வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, ஜீவா!

Related Posts with Thumbnails