மின் நூல்

Saturday, May 18, 2019

வசந்த கால நினைவலைகள்

                                                                       26


நான் கிருஷ்ணகிரியிலிருந்து திரும்பி விட்டதைக் கேள்விப்பட்டு அய்யங்கார்  அடுத்த நாளே ஜாப் டைப்பிங் அலுவலகத்திற்கு வரச் சொல்லி விட்டார்.  சுகவனமும் ஏதோ  வேலை என்று நான்கு நாட்கள் வரவில்லையாம்.  பாவம் தன் மகன் வெங்கடாச்சாரியை வைத்துக் கொண்டு சமாளித்திருக்கிறார்.  ஆக இரண்டு மாத இடைவெளி விட்டு பழைய  இடத்திலேயே வேலை துவங்கி விட்டது.

சேலம் இரண்டாவது அக்ரஹார சந்திப்பில்  மேட்டுத்தெருவும்  தேரடி வீதியும் சந்திக்கும் இடத்திற்கு  வலது புறத்தில்  நடுநிலைப் பள்ளி ஒன்று  இருந்தது.   அந்தப் பள்ளி வளாகத்தில் இரண்டு  மாதங்களுக்கு ஒரு முறையாவது ஏதாவது இலக்கிய  நிகழ்ச்சிகள் நடக்கும்.  சேலம் இலக்கிய ஆர்வலர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகள் அவை.  அவர்களோடு எனக்குத் தொடர்பும் இருந்தது.   அவர்களில் முக்கியமானவர் அர்த்தநாரி  என்று  பெயர் கொண்டவர்.  அய்யங்கார் அலுவலகத்திலிருந்து மதியம் சாப்பட்டிற்காக வீடு வரும்  தருணத்தில்  வழியில் அர்த்தநாரி  என்னை மடக்கி விட்டார்.

"இலக்கியக் கூட்டம் ஏற்பாடு பண்ணியிருக்கு இல்லையா?.. தவறாம வந்திடு.."  என்றார்.

"எப்போ சார்?"

"சரியாப் போச்சு..  போன வாரத்திற்கு முந்தின வாரம் ஞாயிற்றுக் கிழமை நாம் கூட்டம் போட்டிருந்தோமே!  நீ வரவே இல்லையா?" என்றார்.

"நான் தான் கிருஷ்ணகிரி போயிருந்தேனே! எங்கே வர்றது?" என்றேன்.

"ஆமாம்லே.." என்று தன் தவறை உணர்ந்து  சிரித்தார்.  இந்த ஞாயிற்றுக் கிழமைக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை தமிழ் எழுத்தாளர்கள் சில பேர் கலந்துக்கற கூட்டம் ஒண்ணை ஏற்பாடு பண்ணியிருக்கோம்.  திருச்சி எழுத்தாளர் ரெண்டு பேர்.   ஏ.எஸ். ராகவன் சாரும்,  திருலோக சீதாராம் சாரும் கலந்துக்கறாங்க..  குமுதம் புனிதன்,  ஜ.ரா. சுந்தரேசன் எல்லாரையும் அழைத்திருக்கிறோம்.  பிரமாதமா இருக்கப் போறது.  மறக்காம வந்திடு.." என்றார்.

"புனிதன்,  ஜ.ரா.சு. சரி.. ரா.கி. ரங்கராஜனை விட்டுட்டீங்களா?"

"விடுவோமாடா?.. கேட்டிருக்கோம்.  குமுதம் டீமையே நாம குத்தகைக்கு  எடுக்க முடியுமா?.. பாக்கலாம்.. யார் வரா, யார் வரலைன்னு  ஒரு வாரம் ஆனா கிளியர் பிக்சர் கிடைக்கும்.." என்றார்.

ஆனந்த விகடன் வெள்ளி விழா போட்டியில் பரிசு பெற்ற நாவலாய் ஏ.எஸ். ராகவனின்  'மனிதன்',  ஆனந்த விகடனில் வெளிவந்து அவர் ஊர் உலகத்திற்கெல்லாம்  தெரிந்திருந்த நேரம். இராகவன்   இப்போ பெங்களூர் பதிவரா இருக்கற திருமதி ஷைலஜாவின் (மைதிலி) தகப்பனார்.   ஷைலஜா அப்போ பிறந்திருக்கவே மாட்டார்  என்று நினைக்கிறேன்.  பிரபல எழுத்தாளரா இருக்கற இந்திரா செளந்திரராஜனும் இந்தக் குடும்பத்துக்கு உறவ முறை
தான்..   கவிஞர் திருலோக சீதாராமைப் பற்றி சொல்லவே வேண்டாம்.  அவர் ஒரு பன்முக ஆளுமை.   திருச்சியில் சிவாஜி பத்திரிகையை தவம் போல நடத்தினவர். பாரதியாரின் கவிதைகளை பட்டி தொட்டியெல்லாம் பரப்புவதை வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்.  பாரதியாரின் குடும்பத்தின் மீது பாசம் கொண்டிருந்தவர்.   சுஜாதாவின் முதல் கதை  பிரசுரமானதே 'சிவாஜி'யில் தான்.  இவர்களை எல்லாம் நேரில் பார்க்கப் போகிறோம் என்ற தலைகால் புரியாத சந்தோஷம் அப்பவே என்னைத் தொற்றிக் கொண்டது.

அந்த் நாளும் வந்தது..  ஏ.எஸ்.ஆருக்கும்,  திருலோகத்திற்கும் என்னை அர்த்தனாரி அறிமுகப் படுத்தி வைத்தார்.   திருலோக சீதாராம் என் கையைப் பற்றினார்.   அப்படிப்பட்ட புனிதரின் கை ஸ்பரிசம் பட்டு எனக்குச்  சிலிர்த்தது.   பாரதியாரின் குடும்பத்தை அவர் ஆதரித்ததெல்லாம் பிற்காலத்தில் கேள்விப் பட்டது.  அதையெல்லாம் இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அப்படிப்பட்ட பெரியவர்களின் அருகாமை கிடைக்கப் பெற்றதற்கு என்ன பாக்கியம் செய்திருப்போம் என்று  நெகிழ்ச்சியாக இருக்கிறது.                                 

ஏ.எஸ். ராகவன் நல்ல உயரம்.  படித்த இளைஞர் தோற்றம்.  ரிம்லெஸ் மூக்குக் கண்ணாடி தரித்திருந்தார் என்று நினைவு.  சுருள் சுருளான  படிந்து வாரிய தலைமுடி.   வெற்றிலை--சீவல்  பிரியர்  என்று முக விலாசம் சொல்லிற்று.   கடைசியில் ஏ.எஸ்.ராகவன் அந்தக் கூட்டத்தின் ஹீரோவாகப் போகிறார் என்று அப்போது தெரியாதிருந்தது. 

நடுநிலைப் பள்ளி வெளி வாசலில்  ஒரு பெரிய மேஜை,  மேஜை விரிப்பு, அதன் மேல் மைக்,  பத்து பேர் அமர்கிற மாதிரி நீண்ட  பென்ஞ் என்ற அலங்கரிப்பில் கூட்டம் மிளிர்ந்தது.   எல்லாம் அர்த்தநாரியின் தலைமையில் அமைந்த  குழுவின் ஏற்பாடு தான்.   பாரதியாரின்  'பொழுது புலர்ந்தது, யாம் செய்த தவத்தால்; புன்மை யிருட்கணம் போயின யாவும்'   என்னும் பாரத மாதா திருப் பள்ளியெழுச்சி பாடலின் சேர்ந்திசையாய்  கூட்டம் துவங்கியது.  ஆரம்பத்தில்  சுணக்கமாய் இருந்த அன்பர்களின் வருகை,  தெருவில் நின்றிருந்தவர்களும் ஒலிப்பெருக்கி ஒலி கேட்டு உள்ளே வர தலைப்பட்டனர்.   கலைக் குழுவின் உறுப்பினர்  ஒருவர் தன் வரவேற்பு உரையில் அனைவரையும்  எழுச்சியான உரையில் வரவேற்றார்.    ஏ.எஸ். ராகவன்  மனிதன் நாவல் தொடரை விகடனில் எழுதிய அனுபவங்களை விவரித்தார்.   எழுதும் உலகில் புதுசாக நுழைவோருக்கு ஆலோசனைகள் சொன்னார்.  அடுத்து தி. சீதாராம் உரை நெகிழ்ச்சியாக இருந்தது.  பாரதியை பல்வேறு கோணங்களில் அவர் பார்த்த பார்வை நிறைய விவரக் குறிப்புகளோடு  பலருக்கு சகஜமாகத்  தெரியாத புதுச் செய்திகளை உள்ளடக்கிக் கொண்டு இருந்தது.  பாரதியின்  பாஞ்சாலி சபதம் பற்றிய அன்றைய அவரது உரை அற்புதம்.  வீராவேசத்தோடு உணர்வு பூர்வமாக இருந்தது.   அந்த கூட்டத்திற்கு  வந்திருந்த இன்னும் சில எழுத்தாளர்களும் பேசினர்.   யார் யார் என்று  இப்பொழுது நினைவில்லை.    சேலம் அடுத்த ஜலகண்டாபுரம் தான்  ஜாராசுவின் சொந்த ஊர்.  அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.  ஆனால் அவர் கலந்து கொள்ள முடியாது போயிற்று என்று  யாரோ சொன்னார்கள்.

அடுத்து மைக்கைப் பிடித்த விழாக்குழு உறுப்பினர் ஒருவர் யோசனை ஒன்று சொன்னார்.  'மேடைப் பேச்சு  மாதிரி பேசிக் கலையாமல்  அந்த இடத்தில் கூடியிருந்தவர்களும் பங்கேற்கிற மாதிரி வினா-விடை நிகழ்ச்சியை வைத்துக் கொண்டால் அது எங்களைப் போன்றவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்' என்று  அவர் சொன்னது பலத்த கைதட்டலோடு வரவேற்கப்பட்டது.

முதல் கேள்வியே பத்திரிகைகளுக்கு எழுதுவது பற்றி.   'நானும் நிறையக் கதைகளை எழுதி அனுப்பி  விட்டேன். ஒன்று கூட பிரசுரமானதில்லை. சலித்துப் போய் விட்டது..   பிரசுரமாவதற்கு ஏதாவது ரகசிய  ஆலோசனை இருந்தால் சொல்லுங்களேன்..' என்று யாரோ  கேட்ட முதல் கேள்வியே களை கட்டி விட்டது.

"எழுதி எழுதி அடித்து திருத்தி எழுதி திருப்பித் திருப்பி முயற்சி செய்யுங்கள். வெற்றி கிட்டும். முயற்சி திருவினையாக்கும்.  வாழ்த்துக்கள்' என்றார்
ஏ/எஸ்.ஆர்...

"எல்லாம் செஞ்சு பார்த்துட்டேன், சார்.. ஒண்ணும் வேலைக்காகவில்லை.." என்று அவர் சொன்னதும் கூட்டமே கலகலத்தது.

'பிரபலமான எழுத்தாளர்களைப் பார்த்து அவர் மாதிரி எழுத வேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள்.. உங்களுக்குன்னு  ஒரு  way of writing இருக்கட்டும்" என்றார் அந்த எழுத்தாளர்களில் ஒருவர்.

எனக்கென்னவோ அவர் சொன்னது உடன்பாடில்லாமல் இருந்தது.  எனது பயிற்சிக் களமே அவர்கள் தானே என்று நினைத்துக் கொண்டது இப்பொழுதும் நினைவிலிருக்கிறது..

"ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்துப்  பிரதியை அனுப்பினால் தான் திரும்பி வருமா?.. ஒட்டலேனா கூட பாவம் அனுப்பிச்சிருக்கானேன்னு பெரிய பத்திரிகைகள் கூட  திருப்பி அனுப்ப மாட்டாங்களா?'ங்கறது ஒருத்தரோட கேள்வி.

"ஸ்டாம்ப் ஒட்டலேனா திருப்பி அனுப்ப மாட்டோம்ன்னு சொல்லியிருந்தாங்கன்னா நிச்சயம் ஸ்டாம்ப் ஒட்டுங்கள்.." என்று பதில்

"நான் இதுவரைக்கும் ஸ்டாம்ப் ஒட்டினதே இல்லை.. அனுப்பும் போதே பிரசுரம் ஆகாது இதுன்னு அவநம்பிக்கை நமக்கே இருந்துச்சுன்னா எப்படின்னு நினைப்பேன்.." என்றார் ஒருவர்.

"ஸ்டாம்ப் ஒட்டாட்டா கூட திருப்பி  அனுப்பறாங்களா?" என்று  கேட்டார் ஏ.எஸ்.ஆர்..

"ஆனந்த விகடன் மட்டும் ஸ்டாம்ப் ஒட்டாட்டாலும் திருப்பி அனுப்புவாங்க..
அந்த அனுபவம் எனக்குண்டு" என்றார் ஒருவர்.

"நீங்க எப்படி ஸார்?.. ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புவீங்களா, இல்லையா?" என்று நேரடியாகவே ஏ.எஸ்.ஆரைக் கேட்டார் ஒருவர்.

"ஸ்டாம்ப் ஒட்டறதில்லே.." என்று  சிரித்துக் கொண்டே சொன்னார் ஏ.எஸ்.ஆர்.

இந்த சமயத்தில்  குமுதம் புனிதன் வந்திருக்கறதாக ஒரு தகவல் பரவியது.

'யார் புனிதன்ங்கற பெயர்லே குமுதத்திலே எழுதறது, அவர் எப்படி இருப்பார்' என்று  நேரில் பார்த்து தெரிந்து கொள்கிற ஆர்வம் கூட்டத்தினரிடையே பரவியது.

நடுத்தர உயரமாய்  வேட்டி, ஸ்லாக் சட்டை என்று ஒருவர் மேடைப் பக்கம் வந்தார்.

அவரைப் பார்த்து "நீங்கள் தான் புனிதனா?" என்று ஏ.எஸ்.ஆர். கேட்டது கூட்டத்தினருக்கு மைக்கில் கேட்டது.

அவரோ, "எதற்குக் கேட்கிறீர்கள்?" என்றார்.

"நான் புனிதனைப் பார்த்திருக்கிறேன்.. நீங்கள் இல்லை புனிதன்..." என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் இராகவன்.

"அப்படியா?.. நான் புனிதன் தான்.."

"அதற்கு என்ன அத்தாட்சி?" என்று லேசில் ஒப்புக்கொள்ளாதவாறு உரக்கச் சொன்னார் இராகவன்.  "இது ஆள் மாறாட்ட விஷயம்.." என்று கர்ஜித்தார்.

"இப்படிப் பட்ட கூட்டத்தில் நான் இருக்கவே விரும்பவில்லை.." என்று  என்று சொல்லிக் கொண்டே அவர் திரும்பி வெளிவாசல் நோக்கி நடக்கத் தொடங்கினார்.

எனக்கு அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது..  நான் தான் அந்த எழுத்தாளன் என்று சொல்லிக் கொண்டு -- அதுவும் தமிழ்நாட்டில் -- ஒருவருக்கு என்ன லாபம் இருந்து விட முடியும் என்று எனக்கு அந்த வயசிலேயே தோன்றிற்று. ..  மொத்தத்தில் வந்தவரின் தோற்றம், எளிமை, சாதுவான முகம் எல்லாம்  மனசைப் பிசைந்தன.

சொல்லி வைத்தாற் போல  திருலோக சீதாராமைப் பார்த்தேன்.  அவரும் uneasy-யாக ஏன் இந்த இராசாபாசம் என்று  நினைக்கிற தோற்றத்தில் இருந்தார்.

இராகவன் அவரை விடுவதாயில்லை.. இவரும் எழுந்திருந்து அவரைத் தொடர்ந்து வெளிப்பக்கம் வர,  மொத்தக் கூட்டமும் சலசலத்து வெளியே வர
அர்த்தநாரியோ சங்கடத்தில் நெளிய..  வந்தவர் வெளிப்பக்கம் இருந்த கூட்டத்தோடு கலந்து எங்கேயோ போய் விட்டார்.

"நிச்சயம் இந்த ஆள் புனிதன் இல்லை... புனிதனை எனக்கு நன்றாகத் தெரியும்.." என்று இராகவன் மட்டும் விடாப்பிடியாக சொல்லிக் கொண்டிருந்தார்.

யாரோ "வாங்க, சார்.." என்று அவரை சமாதானப்படுத்தி மேடைப் பக்கம் அழைத்து வந்தார்கள்.   அதற்கு மேல் கூட்டம் தனது நிகழ்ச்சி நிரலைத் தொடர்ந்தது.

'எனக்குத் தெரிந்த என் சக எழுத்தாளர்,  நான் தான் என்று வேறு எவரோ அவர் பெயரில் வந்தால் அதை நான் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?' என்பது தான் ஏ.எஸ்.ஆரின் அப்போதைய  நிலை.

இந்த சூழ்நிலையில் நானாயிருந்தால் என்ன செய்திருக்கலாம் என்று  அந்த சிறு வயதிலும் எண்ணம் ஓடியது.  அந்த ஆளைக் கூப்பிட்டு,  'இதோ பாருங்கள்,  நீங்கள் புனிதன் அல்ல.  இது இந்தக் கூட்டத்தில் எனக்கு மட்டும் தான் தெரியும்.  நான் மைக்கில் இதைச் சொன்னால் ராசாபாசமாகிவிடும்.  அதனால் காதும் காதும் வைத்த மாதிரி போய் விடுங்கள்..' என்று அழுத்தமாய் சொல்லியிருக்கலாமோ?..

அதற்கப்புறம் எனக்கென்னவோ எதிலும் மனசு பதியவே இல்லை..  ஜடம் மாதிரி கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன்.  அப்புறம் எழுந்து வெளியே வந்து விட்டேன்.

'சில்'லென்று தெரு பக்கம் வீசிய காற்று மனசுக்கும் உடலுக்கும் இதமாக இருந்தது.

(வளரும்)

பி.கு.:  அடுத்த வாரம் அர்த்தநாரியை தற்செயலாகப் பார்த்த பொழுது இந்த  நிகழ்வைக் குறிப்பிட்டு "இராகவன் சார் அன்னிக்கு சொன்னது சரி தான்னு ஆயிட்டதுடா.. குமுதத்திலிருந்து யாருமே வரலே.." என்றார்.

குமுதம் புனிதன் அவர்களின் இயற்பெயர்:  சண்முக சுந்தரம்
சுந்தர பாகவதரும் அவரே;  தேசபந்துவும் அவரே.   அற்புதமான எழுத்தாளர் அவர்.  எடிட்டர் எஸ்.ஏ.பி.க்கு அவரை மிகவும் பிடிக்கும் என்று ஜராசு எழுதியிருக்கிறார்.    ஜராசு,  சண்முக சுந்தரம் இருவருமே சேலத்துக்காரர்கள். ஜராசு ஜலகண்டாபுரம் என்றால் புனிதனுக்கு  தர்மபுரி.

ஒரு ஸ்டூலில் ஏறி பரணில் எதையோ தேடும் பொழுது தவறி விழுந்ததால் புனிதன் சாருக்கு மரணம் சம்பவித்ததாக வாசித்த நினைவு.

நான் ஸ்டூலில் ஏறி எட்டாத இடத்தில் எதையாவது தேடினால் இப்பொழுதும் புனிதன் சாரின் நினைவு வந்து விடும்.

20 comments:

G.M Balasubramaniam said...

/ திருச்சி எழுத்தாளர் ரெண்டு பேர். ஏ.எஸ். ராகவன் சாரும், திருலோக சீதாராம் சாரும் கலந்துக்கறாங்க.. குமுதம் புனிதன், ஜ.ரா. சுந்தரேசன் எல்லாரையும் அழைத்திருக்கிறோம். பிரமாதமா இருக்கப் போறது. மறக்காம வந்திடு.." என்றார்./ கரும்பு தின்னக் கூலியா

”தளிர் சுரேஷ்” said...

மலரும் நினைவுகள் அருமை! இளம்வயதில் இலக்கிய ஆளுமைகளுடன் பழக கிடைத்தமை பெரிய வரம்! அருமை! வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

புனிதன் எழுதிய கதைகள் வாசித்திருக்கிறேன். உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அற்புதமானவை. அப்போதெல்லாம் எழுத்தாளர்-வாசக உறவுகள் சற்று எளிதாக இருந்தது என்று நினைக்கிறேன்.

கோமதி அரசு said...

உங்கள் மலரும் நினைவுகளால் நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது.

வல்லிசிம்ஹன் said...

எத்தனை அருமையான நினைவலைகள்.
ஏ ஏஸ் ஆர் பார்க்க நினைத்த மனிதர். எனக்கு இது வரை
மனிதன் நாவல் கிடைக்கவில்லை.
ஷைலஜாவிடம் கூடக் கேட்டுப் பார்த்தேன்.
புனிதன் தான் சுந்தர பாகவதரா. அட.
ராகவன் சார் கோபம் நியாயமானதுதானே.

எவ்வளவு பெரியவர்களை எல்லாம் சந்தித்திருக்கிறீர்கள் ஜீவி சார்.
உங்கள் எழுத்தைப் படிக்கும் போது மனம் நெகிழ்கிறது.
அருமையான நினைவுகள். தெளிவான சமாசாரங்கள். மிக மிக நன்றி ஜீவி சார்.

Bhanumathy Venkateswaran said...

ஸ்வாரஸ்யமான அனுபவங்கள். பிரிக்க முடியாதது இலக்கிய கூட்டங்களும் சர்ச்சைகளும். ஆனால் எழுத்தாளரின் முகம் தெரியாது என்பதால் ஏமாற்ற முனைவதை ஏற்றுக்கொள்ளாதது சரிதான்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

கரும்பு தின்னக் கூலியா?..

ஏதாவது புது மொழியாகச் சொல்லியிருக்கக் கூடாதா?

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

என் காலம் அப்படி. நாம் தேர்ந்தெடுப்பதும் இருக்கிறது, இல்லையா?..

சேலம் சினிமா ரசிகர்களுக்கு பெயர் பெற்ற ஊர். நிறைய சினிமா கொட்டகைகள். நல்லவேளை அதில் அதிகமாக மாட்டிக் கொள்ளவில்லை.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நாலு பேரும் ஓர் இரவும் - என்று சுவாரஸ்யமான தொடர்கதை ஒன்று குமுதத்தில் எழுதி இருக்கிறார். வாசித்திருக்ககிறீர்களா?..

//அப்போதெல்லாம் எழுத்தாளர்-வாசக உறவுகள் சற்று எளிதாக இருந்தது என்று நினைக்கிறேன்.//

அப்படியென்றும் ஒரேடியாகச் சொல்லி விட முடியாது.. எதில் நம் ரசனை பதிகிறதோ, அதை அந்தந்த காலங்களில் கப்பென்று பற்றிக் கொள்கிறோம். அவ்வளவு தான்.

எதில் நம் மனசை பறி கொடுக்கிறோம் என்பதிலும் இருக்கிறது. என்னை விட பத்திரிகை அலுவலகங்களோடு தொடர்பு கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னளவுக்கு எழுத்தாளர்கள் பற்றி தகவல்களை சேகரித்து மனத்தில் நிறைத்துக் கொண்டு அதே பிரேமையுடன் அலைந்தவர்கள் இருக்கிறார்களா என்பது தான் கேள்வியாகிப் போகிறது.
பத்திரிகைகளில் நிறைய பிரசுரம் கண்ட எழுத்தாளர்களோடு அந்நாளைய பத்திரிகைகளைப் பற்றி ஏதாவது நீங்கள் பேசலாம் என்று நினைத்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். தமிழ் நாட்டில் ஒரு எழுத்தாளரின் எழுத்துக்களை இன்னொரு எழுத்தாளர் வாசிப்பதும், மனம் மகிழ்வதும் என்பதே அதிசயம். அதனால் தான் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது.

இப்பொழுது கூட எழுத்தாளர் வையவன் அடையாறு பகுதியில் ஒரு வாசகர் வட்டத்தை அமைத்துக் கொண்டு அடிக்கடி கூட்டங்கள் நடத்துகிறார்.

ஆனால் பத்திரிகைகள் சினிமா-- அரசியல் என்று மோகத்தீயில் வீழ்ந்து விட்டதால் கதை வாசிக்கும் அன்றைய வாசகர் வட்டம் இன்றில்லை என்பது மட்டும் நிச்சயம்.

அன்றைய பத்திரிகை தொடர் வாசித்தோருக்கு தொலைக்காட்சி சீரியல்களும் ஓரளவு மாற்றாக மாறியிருக்கின்றன.

ஸ்ரீராம். said...

நாலுபேரும் ஓர் இரவும் வாசித்திருக்கிறேன். எங்கள் வீட்டு பைண்டிங் கலெக்‌ஷனில் கூட எங்கோ இருக்கிறது.

ஜீவி said...

@ கோமதி அரசு

மகிழ்ச்சி. தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

ஸ்ரீரங்கம் சதர்ன் ரயில்வே எக்ஸ்டன்ஷன் பகுதியில் அப்பொழது ஏ.எஸ்.ஆர் வசித்து வந்தார். மனிதன் நாவலுக்கு கோபுலு தான் பாத்திரங்களை மனத்தில் பதித்து விடுகிற மாத்ரி சித்திரங்கள் வரைந்தார். நாயகனின் கோடுகள் போட்ட முழுக்கை சட்டை நினைவில் பதிந்திருக்கிறது.

ஏ.எஸ்.ஆரின் தம்பி மகன் இந்திரா செளந்தர ராஜன். மகன் ராஜரிஷி என்ற பெயரில் எழுதியவர். மைதிலி உங்களுக்குத் தெரியும்.

விகடன் வெள்ளி விழாப் போட்டியில் மனிதன் பரிசு பெற்ற நாவலாக இருந்தும், விகடன் ஆசிரியர் அந்தக் கதையில் சில மாற்றங்களை செய்ய விரும்பியிருக்கிறார். அதை ஏஎஸஆரிடம் சொல்லி விகடன் அலுவலகத்திலேயே சில நாட்கள் தங்கி எழுதித் தரச் சொல்லியிருக்கிறார். அதற்கேற்ப வசதிகளையும் செய்து தந்திருக்கிறார். வெற்றிலை சீவல் பிரியருக்கு கும்பகோணம் வெற்றிலை, ஏ.ஆர்.ஆர். சீவல் பாக்கெட்டுகள் எல்லாம் ரெடியாக இவருக்காக டேபிளில் காத்திருக்குமாம். ஏஎஸஆர் எழுதி வாசித்திருக்கிறேன்.

ராகவன் சார் கோபம் நியாயம் என்கிறீர்கள்?.. எனக்கென்னவோ நான் தான் புனிதன் என்று சொல்லிக் கொண்டு வந்தவரின் தோற்றம் பார்க்க பாவமாக இருந்தது. அப்படிச் சொல்ல அவருக்கு என்ன அவசியம் வந்தது என்பது புதிராக இருக்கிறது. எந்தக் காலத்திலும் எழுத்தாளர்களுக்கென்று தனிப்பட்ட ஒளிவட்டம் இருந்ததில்லை. இந்த நிகழ்வை வைத்துக் கொண்டு சிறுகதை ஒன்று எழுதலாமா என்று தோன்றும். பரிதாபத்தை பெரிது படுத்தி என்ன எழுவது என்று தோன்றிய யோசனையை புறந்தள்ளுவேன்.

உங்கள் ரசனைகள் தான் எனக்கு பலம். கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் கதையையும் கோபுலுவின் சித்திரங்களை ரசித்து நீங்கள் மகிழ்ந்ததை இன்னும் நான் மறக்கவில்லை. நன்றி, வல்லிம்மா.

ஜீவி said...

@ பானுமதி வெங்கடேஸ்வரன்

//ஆனால் எழுத்தாளரின் முகம் தெரியாது என்பதால் ஏமாற்ற முனைவதை ஏற்றுக்கொள்ளாதது சரிதான்.//

ஆனால் அப்படிப்பட்ட எண்ணம் அவருக்கு ஏன் ஏற்பட்டது என்று இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் குழப்பமாக இருக்கிறது..

புனிதனின் இயற்பெயரான சண்முக சுந்தரம் என்ற பெயரிலேயே மணிக்கொடி கால எழுத்தாளர் ஆர். சண்முக சுந்தரம் என்ற ஒருவர் இருந்தார். 'நாகம்மாள்' என்ற புகழ்பெற்ற நாவலின் ஆசிரியர். ஆனால் ஏ.எஸ்.ஆருக்கு அவரை நிச்சயம் தெரிந்திருக்கும். இந்தக் குழப்பம் வேறே. என்னவோ எனக்கு அன்றைக்கு மனசே சரியில்லை.

இப்பொழுது நினைத்தாலும் அதெல்லாம் நடந்திருக்க வேண்டாம் என்று தான் தோன்றுகிறது.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

தேடி எடுத்து இன்னொரு தடவை வாசித்துப் பாருங்களேன். எங்கள் பிளாக்குக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவும்.. :}}

ஜீவி said...

ஸ்ரீராம், புவனா ஒரு கேள்விக்குறி -- புனிதனா, மகிரிஷியா?..

ஸ்ரீராம். said...

மகரிஷி.

Thulasidharan V Thillaiakathu said...

நான் இதற்கு அன்றே கமென்ட் போட்டிருந்தேனே வரலையோ?

புனிதன் பற்றி தெரிந்து கொண்டு நெட்டில் அவர் எழுதிய ஒரு கதையும் எடுத்து வைத்திருக்கிறேன் வாசிக்க. ஆசை முகம் மறந்து போச்சே...

தொடர்கிறேன் ஸ்வாரஸ்யமான தகவல்கள்

கீதா

ஜீவி said...

@ தி. கீதா

தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் பிரசுரிக்கிறேன். இல்லையென்றால் வரவில்லை என்றே கொள்ள வேண்டுகிறேன்.

நீங்கள் வரிசையாக தொடரை வாசித்து வருவதால், கமெண்ட்டை பார்த்தவுடனேயே பிரசுரித்து விடுவேன். பதிலளிக்கத் தான் தாமதமாகலாம். எப்படியிருந்தாலும் தேடிப் போய் பதிலளித்து விடுவேன்.

எனக்கென்று ஓர் இதயம்-- என்றொரு புனிதனின் குறுநாவல் உண்டு. அந்தக் குமுதக் கதை என் நினைவுக்கு வந்தது..

அது சரி, ஆசை முகம் மறந்து தான் போகுமா என்ன? -- என்று தன் தொடர் ஒன்றின் ஒரு அத்தியாய ஆரம்ப வரியாகக் கொண்டு ஆரம்பித்து அந்த அத்தியாயத்தோடு அந்த வரியை எஸ்.ஏ.பி. சம்பந்தப்படுத்தியிருப்பார். அவர் விளக்கம் பிரமாதமாக கதையோடு ஒட்டி வரும்.

விட்டு விடாமல் தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சகோதரி.

வே.நடனசபாபதி said...

திரு ராகவன் அவர்கள் செய்தது சரியே. புகழ் பெற்ற ஒரு எழுத்தாளர் பெயரில் அதுவும் அவரது சொந்த ஊரிலேயே அவர் பெயரை சொல்லிக்கொண்டு வாசகர்களை ஏமாற்றுபவருக்கும் , ஒரு புகழ் பெற்ற நுகர்பொருளின் பெயரில் தங்களது தரம்ற்ற பொருளை விற்பனை செய்யும் போலி நிறுவனத்திற்கும் வேறுபாடு ஏதும் இல்லை. அவரைக் கண்டித்தது சரியென்றே நினைக்கிறேன்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

தவறுகள் குற்றங்கள் அல்ல என்ற ஒரு கோணம் உண்டு.

கல்யாண விருந்தில் அழைப்பில்லாமல் கிழிசல் சட்டையுடன் சாப்பாட்டு பந்தியில் உட்கார்ந்திருந்த பெரியவரைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய உணர்வு எனக்கு.
அந்த நிலை ஏன் அந்தப் பெரியவருக்கு என்று மனம் வேதனைப்படும் இல்லையா?..

பத்திரிகைக்களுக்கு தொடர்ந்து கதைகள் எழுதி அனுப்பி உருப்படியில்லாத எழுத்துக்கள் எல்லாம் பிரசுரமாகும் பொழுது தனது கதைகள் ஏன் அலட்சியப்படுத்தப் படுகின்றன என்று நொந்து போன ஒருவர், அவ்வளவு வெளிக்குத் தெரியாத ஒரு எழுத்தாளர் நான் தான் என்று
மனநிலை பிறழ்ந்து இலக்கியக் கூட்டம் ஒன்றில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்..

அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?.. சொல்லுங்கள்.

Related Posts with Thumbnails